கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 7,696 
 
 

வெயிலில் சுற்றி அலுத்து வீடு திரும்பினான் விசுவம். அம்மாவை அடுப்படியில் பார்த்ததில் சந்தோஷம் கொண்டான். அடுப்பில், பாத்திரத்தில் அரிசி கொதித்துத் துளும்பிக் கொண்டி ருக்கும் காட்சியை நின்று பார்த்தபடி மெல்லக் கேட்டான்:

“அப்பா வந்துட்டாராம்மா?”

“இல்லைடா விசு, பத்தர் வீட்டுப் பொம்பிளைகிட்ட ஒரு படி அரிசி கடன் கேட்டேன். மகராசி கொடுத்தாள். நீ போன காரியம் என்ன ஆச்சு?”

விசுவம் எரிகிற அடுப்பை உற்றுப் பார்த்தான். கொதித்துத் துளும்பும் நீரையும், நுரையையும், பருக்கைகளையும் வெறித்தான்.

“ஜவுளிக்கடை சேட்கிட்டே ராமமூர்த்தி வேலை வாங்கித் தர்றதாச் சொன்னார்னு போனியே – வேலை விஷயம் என்ன ஆச்சு?”

“சேட்டுக்கு பிள° டூ படிச்ச பையன் ஜவுளிக்கடையில் உடம்பு வளைஞ்சு துணி கிழிப்பானா, வர்றவங்ககிட்டே மரியாதையா நடந்துக்குவானான்னு சந்தேகம் அம்மா. அதோட சேட்டு சொல்றாரம்மா, நம்மளை மாதிரி வடக்கத்தி ஆளா இருந்தாப் பணிவு இருக்கும் . திடீருனு வீட்டு மேலே போய் சோறு எடுத்திட்டு வாடாம்பேன். கார் துடைக்கச் சொல்லுவேன். அழுக்குத் துணியைத் தோய்க்கச் சொல்லுவேன். நம்ம பக்கத்து ஆளா இருந்தா நான் என்ன வேலை சொன்னாலும் இதோ மகராஜ்னு செய்துப்புடுவான்க. இந்த மாதிரிப் பையங்க கௌரவம் பாப்பாங்களே °வாமின்னு இழுக்கறாரும்மா. நான் எல்லா வேலையும் செய்றேனுங்கன்னுதாம்மா சொன்னேன்.. பார்க்கலாம். அப்புறம் ராமமூர்த்திகிட்ட சொல்லியனுப் பறேன்னு சொல்லிட்டாரும்மா!”

அம்மா மௌனமாக அமர்ந்து பெருமூச்சு விட்டாள்.

“விருத்தாசலத்துல லாரி மண் லோடு அடிக்கிறதா காலையில் எதிர்வீட்டு ராசு அண்ணன் வந்து சொல்லிட்டுப் போச்சு. ரெண்டு நாளைக்கு முந்தி வழக்கமா வர்ற குளிர் ஜுரம் வந்து ஒங்க அப்பா லாரி புரோக்கர் நாயுடு ஊட்டுல படுத்திருந்துட்டு நேத்திக்குக் கொஞ்சம் உடம்பு தேவலைன்னு மறுபடியும் லாரி ஓட்றாங் களாம். மாத்துக்கு வேற டிரைவர் வந்ததும், முதலாளிகிட்ட பணம் வாங்கிட்டு வந்துடறதாச் சொல்லியனுப்பிச்சிருக்கார். இந்த வயசுல, முடியாத உடம்போட, அவ்வளவு தொலை போய் உழைச்சு… உம்! நீங்கள்ளாம் எப்ப தலையெடுத்து உங்க அப்பாவை நிம்மதியா உட்கார வெச்சுச் சோறு போடப் போறீங்களோ…?”

அம்மா புலம்ப ஆரம்பித்தால் விசுவத்துக்கு எரிச்சலும், ஆத்திரமும் பொங்கிப் பெருகும்… தன்மீது, ஏழையாகப் பிறப்பித்த இறைவன் மீது, இந்த உலகின் மீது…

பேசாமல் சுவரில் சாய்ந்து நின்றான். வயிற்றுப் பசி கண்களை இருளச் செய்தது. உடம்பு ரொம்பவும் இலேசாகி விட்டாற் போல்…

அம்மா வயிற்றைச் சுமந்து கொல்லைப் பக்கம் போய் விறகு ஒடித்துக்கொண்டு வந்தாள். இதுதான் அவளுக்கு மாதம். திருமண வயதில் ஓர் அக்கா, அவளுக்குப் பிறகு இவன், இவனுக்குப் பிறகு ஒரு ஒரு பையனும் இரு தங்கைகளும். இப்போது ஆறாவதாக ஓர் உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறாள் அம்மா.

தாயைப் பார்க்கிறபோதெல்லாம் விசுவத்துக்கு அடிவயிற்றில் இனம் புரியாத சங்கடம் பெருகும். இப்பவே சோத்துக்குக் கஷ்டம். இன்னொன்றும் பிறந்துட்டா…? இந்த அம்மாவுக்கு மூளை கொஞ்சமும் கிடையாது.. என்கிற சலிப்பிலும் அம்மாவின் மீது அவனுக்குப் பரிதாபம் உண்டு. கால் வயிற்றுக் கஞ்சியானாலும் இருப்பதை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, தன் வயிற்றைப் பற்றிக் கவலைப்படாமல் மூலையில் சுருண்டு படுத்துக் கொண்டு, “ஓ, நான் சாப்பிட்டேனே!” என்று முகம் மலரச் சொல்வாள் அம்மா.

“தம்பி, பாப்பா எல்லாரும் எங்கேம்மா காணோம்?” என்று விசுவம் கேட்டான்.

“காலையில் பார்த்தது தாண்டா…”

விசுவம் எழுந்து வாசலுக்கு வந்தான். தெருவில் வெயில் உக்கிரமாக இருந்தது. ஒரு நாய் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு எங்கோ அவசரமாக ஓடிக் கொண்டிருந்ததை காரணமின்றிப் பார்த்து நின்றான். தெருக்கோடிக் கல்யாண சத்திரத்தின் ஒலிபெருக்கி சினிமாப் பாடல் ஒன்றைக் கதறிக் கொண்டிருந்தது.

தம்பியையும், தங்கைகளையும் அவர்கள் வழக்கமாக விளையாடும் மூன்றாவது வீட்டுத் திண்ணையில் தேடி அலுத்தான். எங்கே போயிருப்பார்கள்?

கல்யாண சத்திரத்தின் முன்னால் சிறு பையன்கள் மணலில் கூட்டமாக, வெயிலைப் பொருட்படுத்தாமல் விளையாடிக் கொண்டிருப்பது இவன் பார்வையில் பட்டது. அங்கே ஒருவேளை விளையாடப் போயிருப்பார்களோ?

தெருவில் மெல்ல நடந்து சென்றான் விசுவம்.

யார் யாரோ சிறுவர்கள் உச்சி வெயிலிலும் சுற்றிச் சுற்றி ஆட்டம் போட்டார்கள். சத்திரத்தை ஒட்டி நாலைந்து வீடுகளை அடைத்துப் போட்டிருந்த பந்தல், தோரணங்கள், வாழை மரங்கள்…

விசுவம் பந்தலுக்கு முன் நின்று, அங்கு விளையாடிய பையன்களில் தன் தம்பி தங்கைகள் தலை தெரிகிறதா என்று பார்த்தான். சற்றுத் தள்ளி, தெரு ஓரமாக கல்யாண சத்திர எச்சில் இலைக் குவியல்… சுற்றி நரிக் குறவர்களும் குறத்திகளும் இலைகள் ஒவ்வொன்றாக எடுத்து, அதில் மிச்சம் மீதி ஒட்டியிருந்ததை வழித்து தகர டப்பாவிலும், கீழே விரித்த அழுக்குப் பிடித்த துணியிலும் சேகரித்த காட்சியை வெறித்து நின்றான்.

ஒரு இலையில் யாரோ சாப்பிடாமல் விட்ட உருளைக் கிழங்கும் கத்தரிக்காய்த் துண்டமும் இவன் கண்ணில் பட்டன. கத்தரிக்காய் பருப்பு சாம்பாரும், உருளைக் கிழங்குக் கறியும் அம்மாவைச் செய்யச் சொல்லணும் என்று நினைத்துக் கொண்டான்.

விசுவத்தை நோக்கி ஒரு பையன் ஓடிவந்தான். அவனை விசுவம் அறிவான். எதிர்வீட்டு ராசு மாமாவின் மகன்.

“உங்க பாபுவும், நளினா-இந்துவும் கல்யாண வீட்டுக்குள்ளே இருக்காங்க. நாங்கள்ளாம் மொதல் பந்தியிலேயே சாப்பிட் டுட்டோம்!” விசுவத்தின் முன் நின்று சத்தம் போட்டுச் சொல்லிவிட்டுச் சிறுவன் ஓடினான்.

குபீரென்று மூளைக்கு இரத்தம் ஏறியது விசுவத்திற்கு. யாரும் தன்னைக் கேலியாகப் பார்க்கிறார்களோ என்ற பிரமையில் சுற்றுமுற்றும் பார்த்தான். கல்யாணம் நடைபெறுவது யாருக்கு என்றுகூடத் தெரியாத நிலையில், அழைப்பு இல்லாமல் உள்ளே நுழைந்ததோடு, பந்தியில் சம்பிரமமாகப் போய் உட்கார்ந்து சாப்பிடுவதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்? வெட்கம் இழந்து போய்விட்ட ஜன்மங்கள்! இது முதல் தடவையாக இருந்தால்கூட விசுவம் அவ்வளவாகக் கவலைப் பட்டிருக்க மாட்டான். பல தடவை, தன் தம்பியும் தங்கைகளும் இவ்வாறு கல்யாண வீடுகளில் நுழைந்து பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு வந்ததை அறிந்து, அவர்களின் முதுகுகளை வீங்க வைத்திருக்கிறான். தெருக்கோடியிலிருந்த அந்தக் கல்யாண சத்திரத்தில் அடிக்கடி கல்யாணம் நடக்கும். முகூர்த்த நாட்களிலெல்லாம் ஒலிபெருக்கி கத்திக் கொண்டிருப்பது வழக்கமான நிகழ்ச்சியாகும்.

விசுவத்தின் மனக்கண்ணில் ஒரு காட்சி. .. திருட்டுத் தனமாக இவன் தம்பி, தங்கைகள் கல்யாண வீட்டுக்குள் நுழைந்து பந்தியில் அமர்ந்திருக்கிறார்கள். யாரோ ஒருவர் வந்து, “யார் இந்தப் பசங்கள்? யார் இவங்களையெல்லாம் உள்ளே விட்டது?” என்று முதுகில் இரண்டு வைத்து மிரட்டுகிறார். தம்பி, தங்கைகளைத் தேடிக்கொண்டு விசுவம் கல்யாண வீட்டுக்கு வருகிறான். “உன் வீட்டுப் பிள்ளைகளா? நல்லாருக்கேப்பா நியாயம்? வாழைமரம் வாசல்ல கட்டியிருந்தா மட மடன்னு உள்ளே நுழைஞ்சுடுதே சனியன்கள்!” என்று இவனிடமே அவர் எரிந்து விழுந்தார். இவனுக்கு நெஞ்சில் பந்தாய் எதுவோ அடைத்துக் கொள்கிறது.

ஒலிபெருக்கி சிறிது ஓய்ந்து மறு பாடலை அலற ஆரம்பிக்கையில் நிதானப்படுத்திக் கொண்டான் விசுவம். பிரமை, பிரமை; அப்படியெல்லாம் எதுவும் நடந்துவிட வில்லை. வெறும் கற்பனை-அவ்வளவுதான்! ஆனால், என்றைக்காவது அப்படி நடக்காது என்று உறுதி கூற முடியுமா?

பந்தலுக்குள் யார் யாரோ பெரிய மனிதர்கள். பளீரென்று பிரகாசிக்கும் மடிப்புக் கலையாத ஆடைகள். ஆங்காங்கே நாற்காலிகளில் அமர்ந்து வெற்றிலை போட்டபடி பேசிக் கொண்டிருந்தார்கள் பெண்களும் குழந்தைகளும் விலையுயர்ந்த ஆடை அணிகலன்களுடன் இங்குமங்கும் நடமாடியதற்கு நடுவே விசுவம் அவர்களைக் கண்டு பிடித்துவிட்டான். அழுக்கு ஆடைகள், பரட்டைத் தலைகள். அடி வயிற்றில் பகீரென்று தீ கனன்று எரிய ஆரம்பித்தது.

“டேய் பாபு! வாடா… நளினியையும் இந்துவையும் அழைச்சுக்கிட்டு வா, அம்மா உங்களைக் காணோமுன்னு தேடறாங்க, வாங்க சீக்கிரம்!” என்றான் விசுவம்.

தயங்கி நின்றார்கள். இவனுக்கு ஆத்திரம் பொங்கிச் சீறியது. பெரிதும் சிரமப்பட்டு அடக்க முயன்றவண்ணம், குரலை “மென்மையாக மாற்றி, சீக்கிரம் அழைச்சுகிட்டு வாடா, பாபு!” என்றான்.

தனக்குக் கோபம் இல்லையென்று காட்ட, சிரித்தான்.

நம்பியோ, நம்பாமலோ அவர்கள் அவனைப் பின்தொடர்ந்து வந்தார்கள். தெருவைக் கடந்து வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கும் வரை விசுவம் பேசவில்லை. கதவைத் தாழ் போட்டுவிட்டு, எட்டு வயதுத் தம்பியைத் தர தரவென்று இழுத்துக்கொண்டு அம்மாவின் முன்னால் போனான். முதுகில் ஓங்கி ஓங்கி அறைந்தான். தம்பி அலறினான்.

விசுவம் இரைந்தான். “இன்னமே எச்சிச் சோத்துக்கு ஆலாய்ப் பறப்பியா? ஓடுவியா? ஊருக்குள் வாழைமரம் கட்டி ஒரு வீடு நிக்கப்படாதா? கல்யாண வீட்டுக்காரனாட்டம் உள்ளே போய்த் தின்னுட்டு வர்றியே – வெக்கமாயில்லே? நீ கெட்டுப் போறது போதாதுன்னு சின்னப் பிள்ளைகளையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கறியே; போவியா? இனிமே போவியா?”

“இல்லேண்ணா! இனிமே போவ மாட்டேண்ணா!” என்ற சிறுவன் வலி பொறுக்காமல் அழுதான்.

விசுவம் தன் சிறிய தங்கைகளையும் அடிக்கக் கையை ஓங்கினான். “இனிமே அங்கெல்லாம் போய் சாப்பிடக் கூடாது… என்ன?” என்று மிரட்டி, போகலை என்று தலையாட்ட வைத்தான்.

அம்மா சாதத்தை இறக்கிக்கொண்டே எல்லாவற்றையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு மெல்லச் சொன்னாள்:

“நேத்து ராத்திரியிலேர்ந்து எல்லாம் கொலைப் பட்டினி. காலையில் அப்பா பணம் கொண்டு வந்திடுவார்னு நினைச்சேன். வரலை. காலையிலேயும் சாப்பிட வீட்டில் ஒண்ணும் இல்லையா… கொழந்தைகள் கல்யாண வீட்டுக்குள்ளே அழைப்பு இல்லாமலே நுழைஞ்சிடுச்சி. நம்மால அது முடியலை. மான அவமானம் பாத்துகிட்டு நம்மை மாதிரி வயித்துல ஈரத் துணியைப் போட்டுகிட்டு மூலையில் குப்புறடிச்சுப் படுத்துக்க அதுக என்ன விவரம் தெரிஞ்சதுகளா… பாவம்! உம், உன் அக்காவையும் கூட்டிகிட்டு சாப்பிட வாடா விசு!”

இவன் அப்போதுதான் ஞாபகம் வந்தவன் போல் அறைக்கதவைத் தள்ளித் திறந்தான். பாயில் அவன் அக்கா ஜானகி குப்புறக் கிடந்த கோலத்தைக் கசிவுடன் பார்த்தான். “அக்கா!” என்று மெல்ல அழைத்தான்.

அவள் தலையை உயர்த்தினாள்.

“சமையல் ஆயிடுச்சி. எழுந்து வாக்கா! ரெண்டு வாய் சாப்பிட்டால் தெம்பு வந்துடும். எப்படியும் ரெண்டு மூணு நாளைக்குள் எனக்கு வேலை கிடைச்சுடும் அக்கா! நிச்சயம் வாங்கித் தர்றதாக ராமமூர்த்தி சொல்லியிருக்காரு. அவரு யார் யாருக்கோ உதவி செய்றார். அவர் துணை இருக்கிறபோது நமக்கு என்னக்கா கவலை? உம்.. ம்.. நீ எழுந்து வா!”

வட்டிலில் சோற்றைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டாள் அம்மா. விசுவம் கையை விட்டுப் பிசைந்து கொண்டே, “தொட்டுக்க ஒண்ணும் இல்லியாம்மா?” என்று கேட்டான்.

இரண்டு சின்ன வெங்காயத்தை அவனருகில் போட்ட அம்மா, தயக்கத்துடன் சிறு அலுமினியத் தட்டில் ஒரு பொருளை வைத்தாள்.

“பத்தர் வீட்டில் கொடுத்தாங்க. இதை வேணாத் தொட்டுக்கோடா!” விசுவம் திகைப்புடன் அம்மாவைப் பார்த்தான்.

“மைசூர்பாகு! அவுங்களுக்கு ஏதும்மா?”

“செய்தாங்களாம்…”

“ஏம்மா, மைசூர்பாகு நம்ம வீட்டுல செய்ய முடியுமா?”

“ஏண்டா முடியாது? இருக்கிற பண்டங்கள் இருந்தால் ஏன் செய்ய முடியாது?”

“மைசூர்பாகு செய்ய என்ன என்னம்மா வேணும்?”

“ஜீனி, கடலை மாவு, நெய் இருந்தாப் போதுமே!”

“மைசூர்பாகு பத்தர் வீட்டுல நல்லா செய்திருக்காங்கம்மா. வாயில் போட்டதும் கரையற மாதிரி, நெய் மணத்தோட ரொம்ப ருசியா இருக்கும்மா. ஆமா ஜானகிக்கு? உனக்கு?”

“எல்லாருக்கும் வெச்சிருக்கேண்டா. நீ திருப்தியாச் சாப்பிடு!”

“சாப்பிடறேம்மா. நம்ம வீட்டில் மைசூர்பாகு செய்யணும்மா. அதோட, உருளைக் கிழங்கு கறியும், கத்தரிக்காய் சாம்பாரும் அப்பா பணம் கொண்டு வந்ததும் ஒரு நாளைக்குச் செஞ்சு சாப்பிடணும்னு ஆசையா இருக்கும்மா!”

விசுவம் சாப்பிட்டு முடித்துக் கைகழுவி வாசலுக்கு வந்தான். சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே எங்காவது சென்று வரலாம் என்று நினைத்து சட்டையை எடுக்க உள்ளே வந்தபோது, அம்மா இவனுடைய அக்கா ஜானகியிடம் பேசியது தணிவான குரலில் என்றாலும் இவன் செவிகளிலும் °பஷ்டமாக விழுந்தது.

“இந்தப் பிள்ளைக கல்யாண வீட்டில் சாப்டுட்டு, இலையில் போட்ட மைசூர்பாகைச் சட்டைப் பையில் போட்டு எடுத்துகிட்டு வந்துடுச்சுக. என்ன பண்றது? நல்லாத் திங்க வேண்டிய வயசு. சோறு கூடப் போட நம்மால் முடியலை. நம்ம வீட்டுல சோறு இருந்தா அங்கே ஏன் நம்ம கொழந்தைக போவுது? மைசூர்பாகு கல்யாண வீட்டுலேர்ந்து இதுக கொண்டு வந்ததுன்னு தெரிஞ்சால் அதுக்குவேற விசுவம் சத்தம் போடுவான். இவனோட ஆத்திரம் எனக்கும் இருக்கு. இருந்து என்ன பிரயோசனம்?”

விசுவத்தின் தலை சுற்றியது. கண்கள் திடீரென்று குருடாகிப் போனது மாதிரி இருட்டு. வயிறு கட முடவென்று இரைச்சல் போட்டது.

தான் சாப்பிட்ட மைசூர்பாகு, கல்யாண வீட்டு இலையில் போட்டதை பைக்குள் ஒளித்து எடுத்து வரப்பட்ட பண்டம் என்ற நிதர்சனத்தில் குன்றிப் போனான். கல்யாணப் பந்தலுக்கு வெளியே எச்சில் இலைகளைச் சுற்றி உட்கார்ந்து, ஒவ்வொரு இலையாக எடுத்து, அதில் மிச்சம் மீதிப் பருக்கைகளை வழித்து அழுக்கு மண்டிய துணி விரிப்பில் சேகரிக்கும் நரிக்குறவர்களும் நரிக்குறத்திகளும் நினைவில் ஒருகணம் தோன்றினார்கள். வயிற்றைக் குமட்டி, நெஞ்சைக் கரித்துக் கொண்டு வரவே, தோட்டத்துப் பக்கம் ஓடினான்.

சாக்கடையருகில் போய் உட்கார்ந்தான்.

“என்னடா விசு? என்ன பண்றதுடா கண்ணே?” என்று பதறி, பரபரப்புடன் அம்மா வந்து, அவன் தலையை ஆடாமல் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டாள்.

சாப்பிட்டதையெல்லாம் வயிற்றிலிருந்து வாந்தியாக விசுவம் வெளியேற்றியபோது, “ஒரே பித்தம்…” என்று அம்மா சொன்னாள்.

(கண்ணதாசன் இலக்கிய மாத இதழ்)

Print Friendly, PDF & Email

1 thought on “வயிறு

  1. கதை சொல்லப்பட்டவிதம் சிறப்பு. ஏழ்மையின் வலியை என்ன சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்?. நான் ரொம்ப ரசித்தேன்.
    தி.தா.நாராயணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *