தொலைக் காட்சியில் மூழ்கியிருந்த நான் தற்செயலாய்த் திரும்பிய போது சுவர்க் கடிகாரம் இரவு மணி 10 என்று கட்டியம் கூறியது. “பத்து ஆகிவிட்டதா?’ சற்றே பதற்றமுடன் எழுந்த நான் தொலைக்காட்சியை அணைத்தேன். படுக்கை அறைக்குள் நுழைந்தேன். இரவு விளக்கின் வெளிர் நீல வெளிச்சத்தில்,
மனைவி கட்டிலில் அமர்ந்து காத்திருந்தாள்.
அருகில் சென்று நானும் அமர்ந்தேன். “என்ன… மறந்துட்டீங்களா?” என்றபடியே என்மேல் சாய்ந்தவள் என்னை இறுக அணைத்துக் கொண்டாள். நான் மெல்ல அவளைக் கட்டிலில் சரித்தேன். சேலையை விலக்கினேன். மேலாடையை அவசர அவசரமாகக் களைந்தேன்.
அதே வேகத்தில் கையை எட்டி நீட்டிக் கட்டிலின் அருகே இருந்த முக்காலியிலிருந்து அந்தத் தைல எண்ணெய்ப் புட்டியை எடுத்தேன்.
அதற்குள் மனைவி கவிழ்ந்து படுத்திருந்தாள். தைல புட்டியைத் திறந்து, கொஞ்சம் தைலத்தை மனைவியின் ஆடையற்ற முதுகுப் பகுதியில் ஊற்றினேன். இரு கைகளாலும் எண்ணெயைப் பரப்பி பின்னங் கழுத்து, தோள் பட்டைகள், முதுகு, இடுப்பு நெடுகிலும் சூடு பறக்கத் தேய்த்து விடத் தொடங்கினேன்.
மனைவிக்குக் கழுத்து எலும்புகள் இரண்டில் நல்ல தேய்மானம். அதனால் கடும் முதுகு வலி கைகளில் குடைச்சல். நாள்தோறும் மருந்து எண்ணெயைப் போட்டு நான் தேய்த்து விடுவதால் ஓரளவிற்கு அமைதியாகத் தூங்குகிறாள்.
இல்லாவிடில் வலியின் கொடுமையால் தூக்கமின்றி இரவெல்லாம் அரற்றிக் கொண்டே இருக்க நேரிடும்.
திடீரென முனகலான குரலில் மனைவி கேட்டாள் “என்னங்க, கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டுட்டீங்களா?”
இந்தத் திடீர்க் கேள்வி என்னைத் திடுக்கிடச் செய்தது. உடனே திரும்பிப் பார்த்தேன். நல்ல வேளையாகக் கதவு தாழ் போட்டுத்தான் இருந்தது. “தாழ்ப்பாள் போட்டுத்தாம்மா இருக்கு” மனைவிக்கு அறிவித்தேன்.
“பாட்டீ”ன்னு கத்திக்கிட்டுத் திடீர்னு உங்க பேத்தி உள்னே ஓடி வந்திடுவா! அதுதான் கேட்டேன்…” என்றாள் மனைவி.
அவள் பேத்தியைப் பற்றிக் குறிப்பிட்டதும் என் மனம் பின்னோக்கிச் சென்றது.
அப்போது இந்தப் படுக்கை அறை அப்பாவிற்கும் அம்மாவிற்கும் உரியதாய் இருந்தது. இப்போது மருமகளும் பேத்தியும் படுக்கும் அறைதான் எங்களுடையதாய் இருந்தது. பெரியவனுக்கு 4 வயது. சின்னவளுக்கு 2 1/2. நானும் மனைவியும் மூன்றாவது குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்திருந்தோமே தவிர, மூன்றாம் பாலாம் இன்பத்துப் பாலை வேண்டாம் என்று தள்ளும் நிலையில் இல்லை.
குறிப்பாய் மனைவிக்கு என் அரவணைப்பும் ஆசை முத்தங்களும் இன்னும் பிறவும் அதிகமாகவே தேவைப்பட்டன. ஆனால் நள்ளிரவில் விழித்துக் கொள்ளும் பிள்ளைககள் இடைஞ்சலாய் இருந்தார்கள்…
ஒரு நாள் பிள்ளைகளை விளையாட அனுப்பி விட்டு, மனைவி கேட்டாள் “என்னங்க! பிள்ளைகளை இனிமே அத்தை மாமா அறையிலே படுக்க வையுங்களேன்… இந்த வயசான காலத்திலே அவங்களுக்கு எதுக்குத் தனிப் படுக்கை அறை?”
அந்தத் தலையணை மந்திரம் சரியானது என்று எனக்கும் தோன்றவே, அப்பாவிடம் மெதுவாகப் பேச்சை எடுத்தேன். ஆனால் அப்பாவிற்கு இந்தச் செய்தியில் இவ்வளவு சினம் வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை!
அப்பா சீறினார் “என்னடா பேசற நீ!? பகல் முழுக்க உங்கக் குழந்தைங்களை நாங்கதானடா பாத்துக்கறோம்… இரவு நேரத்திலயாவது நாங்க தனியா, அமைதியா இருக்க வேணாமா? ஏண்டா கணவன் மனைவிக்கிடையிலே காமத்தைத் தவிர வேறு எதுக்குமே தனிமை தேவையில்லைன்னாடா நினைச்சுக்கிட்டு இருக்கே? கணவனும் மனைவியும் தனிமையிலே பகிர்ந்துகிறதுக்கு அன்பு, நட்பு, பழைய நினைவுகள், வலி, இன்பம், துன்பம்னு எவ்வளவோ இருக்குடா! வயசு ஏற ஏறத்தான் ஒருத்தருக்கொருத்தர் அன்பா ஆதரவா இருக்கணும். அதுக்கு அவங்களுக்குத் தனிமை கட்டாயம் வேணும்…
உங்க அம்மாவுக்கும் எனக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஓடிப்போயாச்சு. ஆனா அதுக்கும் முன்னாடியே அவளை எனக்கு 25 ஆண்டுகளா தெரியும். இதப்பத்தியெல்லாம் நீங்க யாரும் கேட்டதும் இல்லை. நாங்க சொன்னதும் இல்லை. உங்க அம்மா எனக்குத் தூரத்து உறவு. அத்தை மகள் முறை. வயலில் வேலை செஞ்சிகிட்டு இருந்த அவளோட அப்பாவும் அம்மாவும் மின்னல் தாக்கிக் கருகிப் போய்ட்டாங்க… யாருமில்லாத அனாதையா கதறித் துடிச்ச அந்தக் குழந்தையை அப்பா எங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தார்.
“இனிமே அத்தான்தான் உனக்கு எல்லாமேன்னு” சொல்லி அவ கையை என் கையிலே பிடிச்சுக் கொடுத்தார். அன்னைக்குத் தொடங்கிச்சு எங்க நட்பு, அன்பு, காதல் எல்லாமே… அன்னையிலேர்ந்து ஒருநாள்கூட அவளை நான் பிரிஞ்சது இல்லை!
இதோ பாருடா! உங்க அண்ணனைப் படிக்க வச்சு நல்ல வேலையிலே சேத்துவிட்டு அவனுக்குன்னு ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தாச்சு. உன் தங்கச்சியையும் நல்லா படிக்க வச்சு நல்ல மாப்பிள்ளைகிட்ட ஒப்படைச்சாச்சு. மீந்து இருந்தவன் நீ மட்டும்தான். உன்னையும் அண்ணனைவிடப் பெரிய படிப்பு படிக்க வச்சேன்… நல்ல வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கே… என் காலத்துக்கப்புறம் இந்த வீடு, தோட்டம் எல்லாமே உனக்குத்தான்!
அதுவரைக்கும் காத்திருக்க முடியலைன்னா தனிக் குடித்தனம் போ. நான் குறுக்கே நிக்கமாட்டேன். இல்லைன்னா இந்த வீட்டு மாடிமேலே ரெண்டு அறை கட்டிக்கோ… இல்லைன்னா தோட்டத்திலே தனியாவே ஒரு பெரிய வீடு கட்டிக்கோ… இப்படி உனக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு. எனக்கும் அம்மாவுக்கும் தேவைப்படற தனிமையிலே மட்டும் குறுக்கே வராதே!”
– அப்பா நீளமாய்ப் பேசி முடிக்க, நான் வாய் மூடி அமைதியாய்த் திரும்பி வந்தேன்.
என் மனைவி முகவாய்க் கட்டையைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.
பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பக் கூட்டிக் கொண்டு வரும் அத்தையை பாதி சமையலைக் கவனித்துக் கொள்ளும் அத்தையை என் மனைவியால் பிரிய முடியாது… பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்லி, விளையாட்டுக் காட்டி மகிழ்விக்கும் அப்பாவை மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி, தொலைபேசிக் கட்டணம், நியாய விலைக் கடை என்று எல்லாத் தலைவலிகளையும் சுமக்கும் அப்பாவை என்னால் பிரிய முடியாது… அது மட்டுமல்லாமல், என் மனைவியின் பேச்சைக் கேட்டு அவள் தம்பியின் தொழிலில் நிறைய முதலீடுகள் செய்திருந்தேன். எனவே கையில் வீடு கட்டுமளவிற்குப் பணம் அப்போது புழங்கவில்லை.
இந்த பலவீனங்களையெல்லாம் தெரிந்து கொண்டுதான், அப்பா குத்திக்காட்டிப் பேசியதாக என் மனைவிக்கு ஆத்திரம். அவளை அமைதிப் படுத்துவதற்குள் எனக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. பிள்ளைகளிடம் பொய் சொல்லிவிட்டு அவளை மட்டும் அழைத்துக் கொண்டு ஏற்காடு சென்று ஒரு வாரம் தங்கி இரண்டாம் தேனிலவு கொண்டாடிவிட்டு வந்த பிறகுதான் ஒருவாறு அமைதியடைந்தாள்.
வீடு திரும்பிய எங்களுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது! அப்பா தோட்டத்திலே ஒரு குடிசை போட்டிருந்தார். இμண்டு மரங்களுக்கிடையே பெரிய ஊஞ்சல் அமைத்திருந்தார்.
பிள்ளைகள் இருவரும், குடிசையும் ஊஞ்சலும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள். குடிசையில் நூலகம் அமைக்கப் போவதாகவும் நாய்க்குட்டி வளர்க்கப் போவதாகவும் தோட்டத்திலே தேன்கூடுகள் வைக்கப் போவதாகவும் அவர்கள் மகிழ்ச்சிச் கூச்சலிட்டார்கள்.
வழக்கமாய் விடுமுறை நாட்களில் வீட்டிற்குள் எங்கள் கால்களையே சுற்றிச் சுற்றி வந்தவர்கள், இப்போதெல்லாம் தாத்தா பாட்டியுடன் ஊஞ்சல், குடிசை எனத் தோட்டத்திலேயே கிடந்தார்கள். வீட்டில் நானும் மனைவியும் தனித்து விடப்பட்டோம்.
அப்பாவின் ஏற்பாடு புரிந்தது. பகலில் கிடைத்த தனிமையை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டோம். கொஞ்சம் கவனக் குறைவாகவும் நடந்து கொண்டோம்…விளைவாக மூன்றாவதாய் ஒரு செல்லக் குட்டியும் வந்து பிறந்தாள்!
மருத்துவமனைக்கு வந்து பேத்தியை எடுத்துக் கொஞ்சிய அப்பா என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார். இரண்டு இடைஞ்சல்களையே தாங்கமுடியாத நீங்கள் இப்போது மூன்றாவது இடைஞ்சலையும் பெற்றுக் கொண்டீர்களே என்று கூறி குறும்பாய் நகைத்தார்.
மனைவி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.
காலம் விரைந்தோடி விட்டது! அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை. அவர்கள் இடத்திற்கு நாங்கள் வந்து விட்டோம்…
வெளியே முன்னறையில் மகன் மடக்குக் கட்டிலை விரித்துப் போடும் ஓசை கேட்டது. அவன் முன்னறையில்தான் படுக்கிறான். மருமகளும் பேத்தியும் இரண்டாவது படுக்கை அறையில் படுக்கிறார்கள். இவனும் வீட்டைப் பெரிதாக்கவில்லை. மாறாக மகள் உறங்கியதும் மனைவியை முன்னறைக்குக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறான் நாங்கள் வெளியே வரமாட்டோம் என்ற துணிச்சலில்!
என் மனைவி என் மார்பில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தாள். அவள் முதுகை ஒரு கையால் வருடிய நான் இன்னொரு கையால் அவள் கூந்தலைக் கோதினேன்.
தாலாட்டுப் பாடிக் குழந்தையைத் தூங்க வைக்கும் தாய்மை உணர்வு என்னுள்ளும் மேலோங்க, மெல்லக் கண்களை மூடி நானும் துயில முயல்கிறேன்.