வம்ச விருத்தி!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 2,041 
 

திருமணமாகி மூன்று வருட தாம்பத்ய வாழ்க்கையில் மற்றவர்கள் கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு காயத்திரியும், குமரேசனும் ஒற்றுமையாக குடும்பம் நடத்தினார்கள். அன்பு ஒன்றைத்தவிர மற்ற எதைப்பற்றியும் அவர்கள் மனதில் எண்ணியதில்லை. வம்பு, வழக்கு என போகாமல் வரம்புக்கு உட்பட்டு வாழ்ந்தார்கள்.

குமரேசன் பிறந்து வளர்ந்தது கிராமம் என்பதால் அவன் படித்து முடித்து திருமணமாகி நகரத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆகிவிட, அப்பா இறந்த பின்னும் அம்மா தன்னுடன் தங்கியிருக்க வர மறுத்து விட்டது கொஞ்சம் வருத்தம் தான். அலுவலகத்தில் வேலைப்பளு காரணமாக கிராமத்திலிருக்கும் அம்மாவை‌ ஆறு மாதமாக போய் பார்க்க முடியவில்லை. இன்று வீட்டிற்கு அம்மா வந்திருந்தாள்.

அம்மாவின் வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகப்படுத்துவதற்கு பதிலாக அவர்களின் மூன்று வருட தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்குமளவுக்கு அம்மா பேசுவாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை.

“கண்ணாலமாயி பத்து மாசத்துல கொழந்தையப்பெத்து கையில கொடுத்துப்போட்டா உன்ற மாமம்பொண்ணு சாந்தி. உன்ற பொண்டாட்டீந்தா இருக்கறாளே…என்னத்தச்சொல்லறது? எப்படிச்சொல்லறது? மூணு வருசமா எப்படா முழுகாம இருக்கறான்னு சேதி வரும்னு காத்துக்கெடக்கறேன்….என்ன பிரயோசனம்…?” என சலித்துக்கொண்டு வேதனைப்பட்டாள் குமரேசனின் தாய் பழனாத்தாள்.

“இத பாருங்கம்மா …நீங்க பாட்டுக்கு காயத்திரி மனசு புண்படற மாதிரி ஏதாவது பேசி, அதனால அவ வேதனைப்பட்டு, எனக்கு நிம்மதியில்லாம பண்ணிப்போடுவீங்க போல தெரியுது. இதை என்னாலயே தாங்க முடியல. அவ கேட்டா என்ன ஆகறது…? அவ மளிகைக்கடைக்கு போனதால பரவாயில்லை” என தன் தாயின் வாயிற்கு பூட்டு போட்டான்.

இருப்பினும் தனது மனதில் உள்ளதைக்கொட்டாமல் விடுவதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தாள் பழனாத்தாள்.

மறுபடியும் பூட்டை உடைத்து வாய் திறந்தவள்

“நீ சும்மா இருடா குமரேசா…உனக்கு ஒன்னுந்தெரியாது. நீ வெள்ளச்சோளம்னு எனக்குத்தெரியும். நானும் உன்ற கண்ணாலத்துக்கு முன்னால வாய்பேசாம சும்மா இருந்துட்டேன். இல்லேன்னா அவளும், அவ ஆத்தாளும் எதுக்காலூட்டுக்கு குடி வந்தப்பவே ஜாக்கிரதையா இருந்திருப்பேன்”.

“…………”

“உன்ன சிரிச்சுப்பேசி வசமா வளைச்சுப்போட்டு காரியத்த முடிச்சுப்போட்டாளுக. நீ சம்பளம் வாங்க ஆரம்பிச்சதுக்கப்பறம் என்ற பேச்ச எங்க கேட்டே…?”

“………………”

“சாந்தி தான் மருமகளா வரோனுமுன்னு நானும் வேண்டாத சாமியில்லை… போகாத கோயில்லை… விதி ஆரை உட்டுது…? எல்லாம் போச்சு. நீ உன்ற மாமம்பொண்ணு சாந்திய கட்டியிருந்தா என்ற அண்ணனோட அத்தன சொத்தும் உனக்கே கெடைச்சிருக்கும். இப்ப அவள கட்டீட்டு எவனோ கண்டவனெல்லாம் திங்கறத பாத்து எனக்கு வகுறு வேகுது தெரியுமாடா உனக்கு..‌?” சொல்லி கண்ணீர் சிந்தினாள்.

“…………”

“சாந்தி கெட்டிக்காரி. இருக்கற சொத்தையெல்லாம் அப்பங்கிட்ட எழுதி வாங்கிப்போட்டு அதுக்கு பதிலா ஒரு பேரக்கொழந்தையப்பெத்து அப்பங்கையில கொடுத்துப்போட்டாளே….? ஊரே அவளப்பாத்து பொறாமப்படுது” என தன் மகனிடம் சொல்லி ஏக்கப்பெருமூச்சு விட்டாள் குமரேசனின் தாய் பழனாத்தாள்.

இது வரை பொறுமை காத்த குமரேசன் பேசினான்.

“இத பாருங்கம்மா சொத்துப்பத்துக்கு ஆசப்பட்டு செய்யறதுக்கு பேரு கல்யாணமில்லை. வியாபாரம். அந்த வியாபாரத்துல எனக்கு விருப்பமில்லை. விட்டுட்டேன். அதையேன் என்னப்பார்த்த போதெல்லாம் சொல்லிச்சொல்லி என் மனச காயப்படுத்தறீங்க…?” என கூறி பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பார்த்தான் குமரேசன்.

அந்த சமயம் கடைக்கு சென்றிருந்த காயத்திரி மளிகை சாமான்களுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“அப்பப்பா என்ன வெயில்…? அதோட பஸ்ல கூட்ட நெரிசல் வேற. உட்கார கூட எடமில்ல. இப்படியே நிலமை நீடிச்சா பஸ்ல இல்ல நிலத்துல கூட நிற்க இடமிருக்காது. நம்ம முன்னோர்கள் விளைவை பத்தி கொஞ்சம் யோசிச்சிருந்தா மக்கள் தொகை அதிகரிச்சு, விலை வாசி இப்படி ஏறியிருக்காது” என்றாள் காயத்திரி.

“நாங்க எதப்பத்தி பேசீட்டிருந்தோம்னு நெனைக்கிறே…?” காயத்திரியை பார்த்து கேட்டாள் மாமியார் பழனாத்தாள்.

“பத்து இருபதுன்னு உங்க காலத்துல பெத்துப்போட்டாங்களே … அதப்பத்தி தானே அத்தை…?” என்றாள்.

“அப்ப கொழந்த குட்டிய பெத்துக்க கூடாதுங்கறியா…?” என தாய் பேசிய போது ‘என்ன ஆகப்போகுதோ…?’ என நினைத்த குமரேசன், “அம்மா நீங்க சும்மா இருக்க மாட்டீங்களா…?” என அதட்டலாக கோபமுடன் சீறினான்.

காயத்திரியும் விவாதத்தை விடாமல் வாக்குவாதமாக பேசினாள்.

“நான் அப்படி சொல்லலீங்க. ஆணோ, பெண்ணோ ஒன்னு போதுன்னு சொல்லறேன்” என்றாள்.

“ஆறு குழந்தைகளுக்கப்புறம் வம்ச விருத்திக்கு ஒரு ஆம்பளப்புள்ள வேணும்னு நான் ஆசப்பட்டதுனாலதான் உனக்கு புருசன் கெடைச்சிருக்கான். அதை மறந்திடாதே…” என்றாள் பழனாத்தாள்.

“அதுக்காக உங்களை மாதிரி ஆசைக்காக ஆறு பெத்துக்க நாந்தயாரில்லை” என்றாள் காயத்திரி.

“ஒன்னம் ஒன்னு பெத்துக்கவே வக்கில்ல. ஆறு பெத்துக்க மாட்டாளாம். ஆறு….” என மாமியார் முனகியது காதில் விழ அதிர்ச்சியடைந்தாள் காயத்திரி.

விளையாட்டுத்தனமான பேச்சு வினையாகிவிட்டதை எண்ணி வேதனைப்பட்டாள். பேச்சை தொடர மனமில்லாமல் வாடிய முகத்துடன் சமையல் அறைக்குள் சென்றாள்.

“அம்மா, உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா…? என்ன வார்த்தை பேசறதுன்னு தெரியாம பேசறீங்க…? குழந்தை பெத்துக்கறதும், பெத்துக்காததும் அவ இஷ்டம். ஒரு பொண்ணுக்கு பொண்ணே எதிரிங்கிறதை இப்பத்தான் பார்க்கிறேன்” என்றான் கோபத்துடன் குமரேசன்.

“ஓ.‌.ஓ…கொழந்த பெத்துக்கறது கூட அவ இஷ்டந்தானா…? அப்ப உன்ற இஷ்டம் இல்லியா…? இப்ப புரியுது. அவ உன்ன எந்தளவுக்கு மந்தரம்போட்டு மயக்கி வச்சிருக்கான்னு. நீ என்ற பேச்சக்கேட்காம அவ பக்கம் பேசறியே…? ஒன்னி ஒரு நாளும் இந்த ஊட்டுப்பக்கம் வாசப்படிய நானும் முதிக்க மாட்டேன். என்ற ஊட்டுப்பக்கம் நீங்களும் வரவேண்டா” என தன் மகனிடம் கோபமாக கூறிவிட்டு விருட்டென எழுந்து வீதியில் இறங்கி நடந்தாள் பழனாத்தாள்.

குமரேசனுக்கு அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை‌. காயத்திரியும் உறங்கவில்லை. கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்தாள்.”காயத்திரிக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை” என மருத்துவர் சொன்ன போது கண்கலங்காமல், “நீயே எனக்கொரு குழந்தை, இனி எதுக்கு இன்னொரு குழந்தை…?”என்று ஆதரவாக பேசியவர் இன்று தன் தாயின் பேச்சால் கண்ணீர் வடிக்கிறாரே….? என நினைத்து கவலைப்பட்டதோடு தானும் கண்ணீர் சிந்தினாள்.

“என்னங்க..”

“ம்….”

“நான் ஒன்னு சொன்னா நீங்க கேட்பீங்களா…?”

“சொல்லு..”

“என் அம்மா சொன்னாங்க. என் சித்தி பொண்ணு ராணிய….”

“ராணிய…?”

“உங்களுக்கு…..”

“வாயை மூடு….” என்றுமே மனைவியைப்பார்த்து சொல்லாத வார்த்தையைச்சொன்னான்.

“உங்க அம்மாவோட வாயை மூட எனக்கு வேற வழி தெரியலைங்க…” விசும்பினாள்.

அவளுடைய அழுகையை தாங்கிக்கொள்ள முடியாமல் அணைத்து ஆசுவாசப்படுத்தினான் குமரேசன்.

“வம்சம் என்பது நான் மட்டும் இல்லை. நம்ம மனித வர்க்கமே நம்ம வம்சம் தான். அது என்ன இப்ப அழிஞ்சு போகிற நிலையிலையா இருக்கு…? அதனால நம்ம மனித வம்சத்துல பிறந்த ஏதாவது ஒரு குழந்தையை தத்து எடுப்போம்” என்றான்.

“அதுக்கு உங்க அம்மா ஒத்துக்கனமே…?” என்றாள்.

“சம்மதிக்காம எங்கே போயிடப்போறாங்க…?” என்று சொல்லி தேற்றினான்.

மறு நாள் கிராமத்திலிருந்து போன் வர குமரேசனும் காயத்திரியும் புறப்பட்டுச்சென்றனர்.

அங்கே நடந்த ஒரு விபத்தில் தனது மூத்த சகோதரியும், அவளது கணவனும் தங்களுடைய ஒரே ஐந்து வயது குழந்தையை அனாதையாக தவிக்க விட்டு விட்டு இறந்து விட, அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பழனாத்தாள் கலவலைக்கிடமான நிலைக்கு போனதால் கட்டிலில் படுக்க வைக்கப்பட்டிருந்தாள்.

மாமியார் அருகே காயத்திரி சென்று கண்ணீருடன் பேசியபோது, பக்கத்தில் நின்றிருந்த தன் மூத்த மகளின் குழந்தையின் கையைப்பிடித்து “நான் ஒனக்கு கொழந்த இல்லேன்னு கண்ட படி பேசிப்போட்டேன். இப்ப ஒனக்கு கொழந்தை இருக்கறான். அஞ்சு வயசுல..” என காயத்திரி கையில் குழந்தை கையை பிடித்து கொடுத்த போது பழனாத்தாளின் உயிர் உடலை விட்டு பிரிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *