வப்பு நாய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 23, 2018
பார்வையிட்டோர்: 4,753 
 
 

நன்றியுள்ள, என்றும் நம்பிக்கையான நட்பிற்கு அடையாளம் நாய்? விசுவாசத்தின் மறுபெயராகப் பூலோகத்தில் அவதாரமாகிய வைரவரின் வாகனம். ஐந்தரை அறிவு படைத்தாலும் ஆறறிவை மிஞ்சிய அற்புதம். சுந்தரன் சிறுவனாக இருந்த போது குட்டி நாய் ஒன்று அவன் வீட்டில் வளர்ந்தது. அதனுடன் கலையில் எழுந்து விளையாடுவது அவனது அலாதியானது இன்பம். ஆட்டுப் பாலைக் கறந்து வைத்தால் அது குடிக்கும் விதமே தனி. உருசி கண்ட பூனையாகச் சுந்தரனுக்கு நாயைப் பார்க்கும் போதெல்லாம் கொள்ளைப் பிரியம் பொங்கி வரும். குழந்தைப் பிள்ளை போல் அள்ளி உச்சி முகர உள்ளம் துடிக்கும். பழைய ஞாபகங்கள் புதிய அனுபவம் தேடித் துடிக்கும்.

நந்தினிக்கு மிருகம் என்றாலே வயிற்றைப் பிரட்டும். நாய் என்றால் நாற்றம் என்பது அவள் அகராதியின் அடுத்த அர்த்தம். பூனையென்றால் ரோமத்தால் வீடு நாசம் என்பது அவளின் மறு பொருள். ஊரில் என்றாலும் பருவாய் இல்லை. செல்லப் பிராணிகளை வீட்டிற்குள் அடுக்கத் தேவையில்லை. இங்கு அடைத்துக் கட்டிய வீடு. காற்றுகூடக் களவாக உறவாட முடியாத இறுக்கம். இங்கே நாய்க்கும் எங்களுக்கும் சம உரிமை. சில வீடுகளில் பிள்ளைகளுக்கு இல்லாத சலுகை செல்ல நாய்களுக்குக் கிடைப்பது வழமை. சில தாய்மார்களின் அன்பு முகப்புத்தகத்தில் முகமில்லாத மனிதர்களுக்குக் கிடைக்கிறதாம் அல்லது நாய்க்குக் கிடைக்கிறதாம். சில வீடுகளில் தாம்பத்தியத்தைப் பார்க்கும் சுதந்திரம் அவற்றிற்கும் இருக்கிறதாம். அதுக்கு மேல் அவர்களின் உரிமை பற்றி உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. நீங்கள் வளர்ந்தவர்கள்… புரிந்து கொள்வீர்கள். கட்டிலில், சோபாவில், காருக்குள் சிலவேளை அவர்களுக்குத்தான் முதலிடம். நந்தினி வேண்டாம் என்றாள். சுந்தரன் வேண்டும் என்றான். நாய் வளர்ப்பு அவர்களுக்குள் நாய் இழுபாடாகியது.

சுந்தரனுடைய பச்சைநிற வசந்தமாளிகை. பேஸ்மன்ற் அவனுக்குச் சொந்தமானது. அவன் தனது இரகசிய அலுவலகத்தை அங்கே வைத்திருந்தான். நாய் இல்லாத குறைக்கு முகப்புத்தகத்தில் முகம் தெரியாத மனிதர்களை வம்புக்கு இழுப்பதில் பொழுது போக்குவான். நந்தினி இந்த சில்லெடுப்பிற்கு வருவதில்லை. பேஸ்மன் மேலே கோலும் சமையல் அறையும். நந்தினி சமைப்பாள். பின்பு தொலைக்காட்சி பார்ப்பாள். அவள் இராஜாங்கம் அந்தத் தளத்தில். அலுப்படித்தால் அதற்கு மேலே படுக்கை அறை இருக்கிறது. அங்கே ஏதாவது செய்வாள். படுப்பாள். இடைக்கிடை ஏதாவது சூடாகச் சுந்தரனுக்குக் கொண்டுவந்து கொடுப்பாள். தன்னோடு இல்லாது கீழே குடியிருப்பதையிட்டுச் சூடாகப் பார்த்துவிட்டுச் செல்வாள். ஏன் என்று கேட்பதில்லை. வாவென்று சொல்வதில்லை. அது அவர்களுக்குள் உள்ள எழுதப்படாத ஒப்பந்தம். ஒட்டியும் ஒட்டாத உறவின் நடனம்.

சுந்தரன் நீல நிற மேலங்கிக்குள் ஆமையாக. ஆமையின் தலையில் குளிரேறாது கறுத்தத் தொப்பி. தொழ தொழக்கும் சாம்பல் நிற பூமா ஜீன்ஸ். சுந்தரன் சுதந்திரமாக நடந்தான். நந்தினி காட்டிற்குள் சுற்றுலாப் போவதற்கு வரமாட்டாள். சுந்தரனுக்குக் காட்டிற்குள் சுற்றுலா போவதென்றால் குசி. சுதந்திரம். கற்பனைகள் தொகை மயிலாகக் கூத்தாடும் அவன் பயணம். சுத்தமான காற்று. இயற்கையின் ஓசை. அழகான அருவி. வானை முட்டும் ஊசியிலை மரங்கள் நிறைந்த காடு. மலை. நீண்டு செல்லும் ஏரி. கூடிச் செல்லும் மனிதர்கள். ஓடிச் செல்லும் மனிதர்கள். ஒண்டியாகச் செல்லும் மனிதர்கள். சைக்கிளில் காற்றைப் பிளந்து செல்லும் மனிதர்கள். விதம் விதமான நாய்களைப் பாக்கும் பாக்கியம். நாய்களும் குழந்தைகளும் விளையாடியபடி செல்லும் காட்சி. சுந்தரன் அந்த அற்புதத்தை அனுபவித்தான்.

நாய்களைக் கொண்டு செல்பவர்கள் அதன் எச்சத்தை அள்ளுவதற்கு ஒரு பொலித்தீன் பையும் எடுத்துச் செல்ல வேண்டும். காடுதானே என்று சிலர் கவனமெடுப்பதில்லை. நாய்க்கு மோப்பம் வேண்டும். சிலவேளை முகரக் கூடாததையும் முகர்ந்து பார்க்கும். அது போல் மோப்பம் கொடுக்கும். அடிக்கக்கூடாத இடம் எல்லாம் சுதந்திரமாக அடித்து வரும். எவ்வளவுதான் நல்ல சாப்பாடு கொடுத்தாலும் மலத்தை மணந்து பார்க்கும் அதன் குணம் மாறி விடுவதில்லை. அது மாத்திரம் சுந்தரனுக்குப் பிடிப்பதில்லை. நாய் ஏன் அப்படிச் செய்கிறது? மில்லியன் வருடங்களாக நிறமூகூர்த்தத்தில் பதியப்பட்ட தன்னிச்சையான செயலா?

சுந்தரன் நடந்தான். எங்கும் வெண்மை. வைரப்பொடிகளில் பட்டுத் தெறிக்கும் வெள்ளி ஊசிகளின் கூர்மை சூரியக் கதிர்களுக்கு. கண்களைச் சிலவேளை திறப்பதில் சங்கடம். இயற்கையைத் தழுவும் மனிதரின் ஆவல். நாய்களை உலாத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம். சனிக்கிழமைகளில் காட்டுக்குள் திருவிழாக் கோலம். பல நாய்கள் தங்கள் எசமானர்களோடு உலாத்திச் சென்றன. எத்தனை வகையான நாய்கள்? பூனைக்குட்டி அளவில் இருந்து மாட்டுக்கண்டு அளவு வரையும். நிறங்களும் தோற்றங்களும் இயற்கையின் பரிசோதனை எவ்வளவு பரந்துபட்டது என்கின்ற உண்மையை விளம்பும். இயற்கை அற்புதம். எல்லாவற்றிலும் வகை வகையாகப் படைத்த அற்புதம். மனிதனை இயற்கை விளங்கி அவனுக்கு இந்த வாழ்வு கொடுத்தது. மனிதன் இயற்கையை விளங்கவில்லை. தன் வாழ்வைக் கேள்விக்குறியாக்கிவிட்டான். இது சுந்தரனின் சுதந்திரமான விளக்கம். இயற்கை மீண்டு கொள்ளும் என்கின்றனர். மனிதன் மீள்வானா?

சுந்தரனுக்கு முன்பு இருவர் தங்களது செல்லப் பிள்ளைகளோடு போனார்கள். நாய்களின் சேட்டையால் அவர்கள் வேகம் குறைந்தது. அதில் ஒன்று சின்ன வெள்ளை நாய். மற்றையது கறுப்பு பெரிய நாய். கறுத்த நாய் சின்ன நாயை பார்த்துக் குரைத்தது. அதை வெருட்ட முயற்சித்தது. சின்ன நாய் பயப்படவில்லை. கடுகு சிறிது என்றாலும் காரம் பெரிது என்றது. அது கறுத்த நாயைப் பார்த்து உறுமியது. பின்பு திடீர் சமாதானம். இரண்டும் சேர்ந்து ஓடின. ஒன்றை ஒன்று கலைத்தன. கறுத்த நாய் அதிகாரமாய் சின்ன நாயை விட்டுக்கலைத்தது. சின்ன நாய்க்குக் கோபம் வந்துவிட்டது. சின்ன நாய் திரும்பி கறுத்த நாயைப் பார்த்து உறுமியது. கறுத்த நாய் அனுங்கிவிட்டுப் பின்வாங்கியது. ஓ வெளித்தோற்றங்கள் சிலவேளை மாயைதான்.

வழியில் குதிரையின் எச்சம் திட்டுத் திட்டாக. அதைக் கண்ட கறுத்த நாய் ஓடிப்போய் முகர்ந்து பார்த்தது. வெள்ளை நாய் அதைப் பார்க்காது முன்னே சென்றது. நந்தினி இந்த நாய் செய்ததைப் பார்த்திருந்தால் நாயைப் பற்றி கதைப்பதையே அனுமதிக்க மாட்டாள். அதன் பிறவிக்குணம் அப்படித்தான். அதைப் விளங்கிக் கொள்ள வேண்டியது நாங்கள்தான். சுந்தரனுக்கு அந்த வெள்ளை நாயை இப்போதே வீட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற ஆசை. அது பௌவ்வியில் வாய் வைக்கவில்லை என்பது மட்டும்தான் தெரியும். யாரையும் எதையும் பார்த்தவுடன் விளங்கிக் கொள்ள முடியாது. பதுங்கியிருக்கும் குணங்கள் வெளிவர நாளாகும். வெள்ளை நாயிடம் வேறு என்ன குணம் இருக்கும்? சுந்தரனுக்கு அதைப்பற்றிச் சிந்திக்கப் பொறுமை இல்லை.

வெள்ளை நாயின் சொந்தக்காரன் சுந்தரனைப் பார்த்து நட்பாகச் சிரித்தான். அவன் ஒரு சுதேசி. ஆறடி உயரம். பொன்னிறக் கேசம். வழக்கத்திற்கு மாறாக மீசை அவன் முகத்தில். நீல நிறத்தில் உடலோடு ஒட்டியிருக்கும் ஓடும்போது அணியும் ஆடை. தோலோடு ஒட்டிய நிர்வாண மறைப்பு. அவன் சுந்தரனை கனிவோடு பார்த்தான். உருவத்திற்கும் அவன் பார்வைக்கும் சம்பந்தம் இல்லை. சுந்தரனுக்கு அது போதுமாயிற்று. அவனோடு கதைக்கத் தொடங்கினான்.

‘நல்ல அழகான நாய்… இது என்ன வகை நாய்?’ என்றான் சுந்தரன். அவனுக்கு நந்தினியைப் பார்ப்பதைவிட நாயைப் பார்ப்பது இனித்தது. நந்தினி அறியாமல் மட்டும் அப்படி எண்ணுவது உண்டு.

இதுவா? இது ‘அமெரிக்கன் எஸ்கிமோ டொக்‘(யுஅநசiஉயn நுளமiஅழ னுழப). இதற்கு ஒரு சகோதரியும் அதன் குட்டியும் எங்களிடம் உள்ளன. அவளும் பால் வெள்ளை அழகாக இருப்பாள். அவள் இவளை விடக் கொஞ்சம் கட்டை. பின்புறத்தை ஆட்டி ஆட்டி அழகாக நடப்பாள். மிகவும் சாதுவாக இருப்பாள். அதிகம் குரைக்க மாட்டாள். பழக்கம் இல்லாவிட்டால் ஒதுங்கி இருப்பாள். எல்லா நேரங்களிலும் அப்படி இருக்கமாட்டாள். அவள் அதி புத்திசாலி என்பது என்கருத்து. ஆண்களைக் கண்டால் மாத்திரம் அவள் கட்டுப்பாட்டை இழந்து விடுவாள். பெண்ணென்று வெட்கப்படாமல் இச்சைக்குத் தயாராகிவிடுவாள். பக்கத்து வீட்டு அல்சேசனுடன் சேர்ந்த குட்டி பெற்றிருக்கிறாள். இப்போது அல்சேசனுடன் அவளுக்கு நட்பில்லை. எங்களுக்கு இவளே போதும். அவளையும் அவளது குட்டியையும் நாங்கள் விற்பதற்கு நினைத்து இருக்கிறோம். எல்லோரையும் கவனிப்பது எங்களுக்குச் சங்கடமாய் உள்ளது. அவளை என் நண்பி நாயிற்றுக் கிழமையில் உலாத்திற்குக் கூட்டிப் போவாள். வீட்டிற்கு வரும்போது பேசிக்கொண்டு வருவாள். இவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கவலைப்படுவாள்.’

என்று பெரியதொரு விளக்கம் கொடுத்தார் அவர்.

‘எனக்கு நாய் வளர்ப்பது என்றால் கொள்ளை ஆசை. எனக்கு நீங்கள் அந்த நாயையும் அவள் குட்டியையும் தருவீர்களா?’ என்று சுந்தரன் கேட்டான்.

அந்த மனிதர் சுந்தரனிடம் இருந்து இவ்வளவு விரைவாக அந்தக் கேள்வி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சற்றுத் திகைத்தார். பின்பு தன்னைச் சமாளித்துக்கொண்டு,

உங்களால் அவளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள முடிந்தால் நான் அவளையும் அவளது குட்டியையும் உங்களுக்குத் தருகிறேன். அது சரி உங்கள் அயல் வீட்டில் ஆண் நாய்கள் இருக்கின்றனவா?’ என்று கேட்டார்.

‘ஏன்?’ என்றான் சுந்தரன்.

‘இப்போதுதானே சொன்னேன். அவள் ஆண்களைக் கண்டால் தொந்தரவாகிவிடும். விவஸ்தை இல்லாது வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வருவாள். அல்லது அவர்களோடு ஓடிவிடுவாள்.’

‘அவளுக்கு நலமடிக்க முடியாதா?’ என்றான் சுந்தரன் அப்பாவியாக.

‘ஆண் நாய்களுக்குச் செய்யலாம். இரசாயன முறையில் செய்யலாம். அதைவிடப் பழைய முறைதான் மிகவும் பாதுகாப்பானது. இவற்றைச் சட்டப்படி செய்ய முடியாதாம். பெண் நாய்களுக்கு எப்படி என்று தெரியவில்லை. அது ஒரு பிரச்சனைதான். அதைப் பற்றி அறிய வேண்டும். அறிந்தால் சொல்கிறேன். அவளது குட்டிக்கு ஏதோ வருத்தமாக இருக்க வேண்டும். அவள் வயதை மீறிய தோற்றம்.’ என்றார் அவர்.

‘நீங்கள் கோர்மோன் கொடுப்பதில்லைத்தானே?’ என்றான் சுந்தரன்.

‘இல்லை. நாங்கள் அப்படி ஏதும் இயற்கைக்குப் புறம்பாகக் கொடுப்பதில்லை. கடையில் வாங்கும் சாப்பாட்டில் ஏதும் கலக்கிறார்களோ தெரியாது. அவள் குட்டிக்கு ஒழுங்காகப் பால் கொடுக்கவில்லை. நாங்கள் பெட்டிப் பால் கொடுத்துத்தான் வளர்த்தோம்.’

‘பருவாய் இல்லை. நான் அவளையும் குட்டியையும் வாங்க வேண்டும்.’

அந்த மனிதர் சுந்தரனைப் பார்த்து ஒருவிதமாகச் சிரித்தார். எதற்கு அவர் அப்படிச் சிரிக்கிறார் என்பது அவனுக்கு விளங்கவில்லை. தன் அவசரம் தன்னைக் காட்டிக் கொடுக்கிறது என்பது அவனுக்குப் விளங்கியது. என்றாலும் அவள் வேண்டும் என்கின்ற ஆசை அவன் மூளையைச் சிந்திக்கவிடாது ஆக்கிரமித்தது. நிதானம் பறிபோனது. அவதி புகுந்து கொண்டது.

‘அப்படியா? அதற்குக் கொஞ்சம் செலவாகும், பருவாய் இல்லையா?’ என்றார் அந்த மனிதர்.

‘இல்லை எவ்வளவு நான் உங்களுக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’ என்றான் சுந்தரன். பேரம் பேசுவதா இல்லையா என்கின்ற தடுமாற்றம் அவனிடம்.
உங்களைப் பார்த்துச் சந்தைவிலை சொல்ல மனம் வரவில்லை. நீங்கள் அவளுக்குப் பத்தாயிரம் குரோணர்களும், குட்டிக்கு ஐயாயிரம் குரோணர்களும் தந்தால் போதும். பின்பு நீங்கள் குட்டியை விற்றுக்கொள்ளலாம்.’

சுந்தரனுக்கு அது சராசரியைவிடக் குறைந்த விலை என்பது விளங்கியது. அவன் பேரம் பேசும் எண்ணத்தைக் கைவிட்டான்.

‘சரி நான் தருகிறேன். எப்போது அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு வரலாம்?’ என்று கேட்டான். சுந்தரனின் அவசரத்தை அவர் நன்கு இரசித்தார். அதற்கு இன்னும் ஒரு அழுத்தம் கொடுக்க,

‘என்ன அவசரம்? உங்களுக்கு இப்போதே அவள் மீது அன்பு வந்து விட்டது போல இருக்கிறது. அவள் அழகாக இருப்பதோடு தந்திரமான கள்ளி. அவளை அவதானமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.’ என்றார் அவர்.

‘நிச்சயமாகப் பார்த்துக் கொள்வேன்.’ என்றான் சுந்தரன்.

‘நல்லது.’

‘எப்போது வரவேண்டும்?’ சுந்தரன் மீண்டும் கட்டுப்படுத்த முடியாதவனாய் கேட்டான்.

‘நீங்கள் விடமாட்டீர்கள் போல் இருக்கிறது. வருகின்ற சனிக்கிழமை பத்துமணிக்கு திவைத்தா சென்ரரில் இருக்கும் றீமி கடைக்கு முன்பு வந்து நில்லுங்கள். நான் அங்கே அவளையும், குட்டியையும் அழைத்து வருகிறேன்.’ என்றார் அவர்.

‘நல்லது. உங்கள் தொலைப்பேசி எண்ணைத் தரமுடியுமா?’ என்றான் சுந்தரன்.

‘நீங்கள் உசாராகத்தான் இருக்கிறீர்கள்.’ என்று கூறியவர் தனது எண்ணைச் சுந்தரனுக்குக் கொடுத்தார். சுந்தரனும் தனது எண்ணை அவருக்குக் கொடுத்துவிட்டு அந்தச் சந்திப்பு நேரத்தைத் தனது அலைபேசியில் பதிந்தான். பின்பு,

‘அடுத்த சனிக்கிழமை பத்து மணிக்கு திவைத்தா சென்ரரில் சந்திப்போம்.’ என்றான். அதற்கு அந்த மனிதர்,

‘இவ்வளவு கதைத்துவிட்டோம் நாங்கள் எங்களை அறிமுகம் செய்யவில்லையே?’ என்றார்,

‘ஓ மன்னிக்கவும்… சுந்தரன்.’ கூறிய வண்ணம் சுந்தரன் தனது கையைக் கொடுத்தான். அவரும் அதை வலுவாகப் பற்றி,

‘தொம் கன்சன்.’ என்றார்.

அதன் பின்பு அந்த மனிதர் சிரித்துக் கொண்டு போய்விட்டார். சுந்தரனுக்கு இப்போது நந்தினியின் நினைவு வந்தது. ஒரு நாய்க்கே அவள் சம்மதிக்க மாட்டாள். இப்போது தாயையும் மகளையும் அழைத்துச் சென்றால் விவாகரத்து கேட்பாளோ தெரியாது என்கின்ற எண்ணம் வந்தது. எப்படி என்றாலும் இந்தப் பிரச்சனையை சந்தித்தாக வேண்டும். அவளையும் மகளையும் வீட்டிற்கு அழைத்து வந்து கொஞ்சினால் வாழ்வின் ஆனந்தத்தை அனுபவிக்கலாம். நந்தினி இதற்கு எப்படியும் சம்மதிக்க வேண்டும். இல்லாவிட்டால்? இல்லாவிட்டால் பிரச்சனைதான். நித்தம் சண்டையாகத்தான் இருக்கும். அதற்காக நான் அவளையும் மகளையும் இனிக் கைவிட முடியாது. அவளை அடுத்த சனிக்கிழமை அழைத்து வருவதில் மாற்றம் இல்லை. அதைப் பற்றி நந்தினியிடம் சொல்வதா? சொன்னால் வேண்டாம் என்பாள். வீட்டுக்குள் அடுக்கமாட்டாள். சும்மா இருக்கும் சங்கை இப்பொழுதே ஏன் ஊதிக் கெடுக்க வேண்டும்? சொல்ல வேண்டாம். வரும்போது அவள் சந்திக்கட்டும். சில வேளை அவளைப் பிடித்தால் நந்தினி பேசாமலும் இருப்பாள். ம்… அதீத நம்பிக்கைதான். நந்தினிக்காவது பிடிப்பதாவது. சரி எதற்கு இந்தக் கிழமை தேவையில்லாது இரணப்பட வேண்டும்? வேண்டாம். நந்தினிக்கு இப்போது தெரிய வேண்டாம். என்பதாக எண்ணிய சுந்தரன் வழக்கத்துக்கு மாறாக மிகையான சந்தோசத்தில் துள்ளிக் குதித்தான். உலாப் போனவர்கள் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

நந்தினிக்குத் தெரியவரும் போது எரிமலைகள் வெடிக்கும். சந்தோசம் போய் சாவீடாய் மாறும். மாறட்டும். எத்தனைத் துன்பம் வந்தாலும் அவளைக் கூட்டி வந்து அவளோடு கொஞ்சுவது போல் வேறெந்த இன்பமும் உலகத்தில் கிடையாது என எண்ணிய வண்ணம் மேற்கொண்டும் துள்ளாது அமைதியாக நடந்தான்.

***

அடுத்த சனிக்கிழமை சொல்லி வைத்தது போல் அவளையும் குட்டியையும் அந்த மனிதர் அழைத்து வந்தார். குறிப்பிட்ட வாசலில் தரிப்பிடம் கிடைக்காததால் மற்றைய வாசலில் காத்து நின்றார். சுந்தரன் பணத்தோடு சென்றான். அந்த மனிதர் கையில் விற்பதற்கான படிவம் ஒன்று தயாராக இருந்தது. அதில் கையெழுத்து வைத்துப் பணத்தைப் பெற்ற பின்பு அவர்களைச் சுந்தரனிடம் தந்துவிட்டு அவர் போய்விட்டார். அவர் போனதைப் பார்த்த போது இவளையும் குட்டியையும் தொலைத்தால் போதும் என்கின்ற நினைப்பில் இருந்திருப்பாரோ என்கின்ற எண்ணம் சுந்தரனுக்குத் திடீரென்று வந்தது. இவள் அழகு அசத்துகிறது. நளினம் மயக்குகிறது. கொஞ்சம் கட்டை. குட்டி நல்ல குண்டு. போகப் போகத்தான் எப்படியானவள் என்பது தெரியும். என்றாலும் சுந்தரனுக்கு அவள்மேல் கொள்ளை ஆசை வந்தது. அவளையும் குட்டியையும் அங்கே உள்ள மிருகங்களுக்கான உபகரணம், சாப்பாடு என்பன விற்கும் கடைக்கு அழைத்துச் சென்றான். அவளுக்குத் தேவையான பொருட்கள் வாங்கினான். அவன் எதிர்பார்க்காத அளவுக்கு அதுவும் ஒரு பெரிய துண்டாகிற்று. நந்தினி அறிந்தால் குளறுவாள். ஆசைப்பட்டாகிற்று. இனி இப்படியான செலவுகளை ஏற்கத்தானே வேண்டும் என்பதாகச் சுந்தரன் எண்ணினான். வெளியே வாய்விட்டுச் சொல்ல முடியாத செலவுகளாய் அதை வைத்துக்கொள்ள முடிவுசெய்தான். அவளுக்குக் கழுத்தில் ஒரு அழகான பட்டி வாங்கிக் கட்டிவிட்டான்.

குட்டியையும், அவளையும், பொருட்களையும் காரில் ஏற்றிக்கொண்டு அவன் வீட்டிற்கு வந்தான். நல்ல வேளையாக விட்டில் நந்தினி இல்லை. அவசர அவசரமா அவளையும் குட்டியையும் பெஸ்மன்ரிற்கு அழைத்தச் சென்று அங்கே தங்கவைத்தான். அவளது பொருட்களையும் அங்கே எடுத்து வந்து வைத்தான். கொஞ்ச நாட்களுக்கு அவளை அங்கே இரகசியமாகத் தங்கவைக்கலாம். குட்டி காட்டிக் கொடுத்துவிடும். அது குண்டாக இருப்பதோடு வள் வள் என்று எப்போதும் குரைக்கும். குட்டி குரைத்தால் நந்தினி வந்தவுடனேயே இந்த இரகசியத்தைக் கண்டுபிடித்துவிடுவாள். இனி எதுவும் செய்ய முடியாது. என்ன நடக்கிறது என்று இருந்து பார்ப்போமெனச் சுந்தரன் எண்ணினான்.

குட்டி விளையாட்டாக விட்டு விட்டுக் குரைத்தது. நந்தினி வந்த போது திடீர் அமைதி. சுந்தரன் தப்பித்தேன் என்று நினைத்தான். அது திடீரென தலைகீழாகியது.

சுந்தரன் நந்தினியோடு கதைத்த வண்ணம் நின்றான். குட்டி நாய் குரைக்காமல் படியேறி மேலே வந்தது. அதைக் கண்ட போது அவனுக்குத் தலை சுற்றியது. நந்தினி அவனைப் பார்த்த வண்ணம் நின்றதால் குட்டியை முதலில் காணவில்லை. சுந்தரனுக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. குட்டி வந்ததும் போதாது என்பதாக நந்தினியைப் பார்த்து நீ யார் புதிய ஆள் என்பதாக திடீரெனக் குரைத்தது. நந்தினி திடுக்கிட்டுத் திரும்பினாள். அத்தால் வில்லங்கம் விஸ்வரூபம் எடுத்தது.

‘ஆ…… என்ன இது. இங்க என்ன நடக்குது?’

என்று கேட்ட நந்தினி கோபமாகப் பேஸ்மன்றிற்குச் சென்றாள். சுந்தரன் அவள் பின்னாலே ஓடினான்.

‘நந்தினி விளங்கிக்கொள். ஆசைக்குக் கொஞ்ச நாள் வைச்சிருக்கிறன்.’

‘அதெல்லாம் சரிவராது. இப்பவே கொண்டு போய் எங்கையாவது விட்டிட்டு வாங்க.’ என்றாள்.

‘இப்ப எங்க கொண்டே விடுகிறது. நான் காசு குடுத்து ஒப்பந்தம் எழுதி வாங்கீட்டன். அவை கொஞ்ச நாளைக்கு இங்கதான் இருப்பினம்.’

‘என்ன… உது சரிவராது. அப்படி எண்டா நான் போறன்.’

‘நந்தினி கொஞ்சம் விளங்கிக்கொள்.’

‘என்ர விருப்பத்திற்கு மாறா நீங்கள் நடந்த பிறகு நான் இருப்பன் எண்டு எதிர்பாக்கிறியளா? நான் இப்ப வெளிக்கிடுகிறன் பாருங்கோ. நீங்கள் அவையக் கட்டிக்கொண்டு அழுங்கோ.’

‘தயவு செய்து… பிளீஸ் நந்தினி. கொஞ்ச நாளில நான் யாருக்கும் விக்கிறன்.’ சுந்தரன் சமாளிக்கக் கூறினானே தவிர அவனுக்கு விற்கும் நோக்கம் கிடையாது.

‘இது என்ன கோதாரி… ம்…’

இறுமிவிட்டு நந்தினி மேலே சென்றாள். அவள் வெளிக்கிட்டு எங்காவது போகாவிட்டாலும் இன்று வீட்டில் சாப்பாடு சமையல் ஒன்றும் இருக்காது என்பது சுந்தரனின் கணிப்பு. அவளின் அழகு அவனை மயக்கியது. குட்டி வேறு செல்லமாய் குரைப்பது கள்வெறி கொள்ள வைத்தது.

சுந்தரனின்மேல் இருந்த கோபம் நாளாக நாளாக நந்தினிக்குக் குறைந்தது.

நந்தினி விதியை மாற்ற முடியுமா என்கின்ற சலிப்பில் சுந்தரனின் ஆசைக்கு இடம் கொடுத்தாள். பெஸ்மன்றில் இருந்து அவள் சோபாவிற்கு வந்த போது நந்தினிக்குப் பற்றி எரிந்தது. எட்டி ஒரு உதைவிட வேண்டும் போல் கோபம் வந்தது. அப்படி உதைந்தால் தனக்கும் சுந்தரனுக்கும் இடையில் சண்டை உருவாகும் என்பதை விரும்பாதவளாய் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள். நல்ல வேளையாக நந்தினி அவளுக்குச் சமைக்க வேண்டியது இல்லை. சுந்தரன் அவளுக்கத் தேவையான உணவுகளைக் கடையிலேயே வாங்கி வந்துவிடுவான். முன்பு திறப்பதைவிட இப்போது அதிகம் ஜன்னலை நந்தினி திறந்துவிடுவாள். அவளுக்கு இரண்டின் மணமும் மூச்சை முட்டுவதான அவஸ்தையை அடிக்கடி உண்டாகும். சுந்தரன் இல்லாத நேரத்தில் அவள் கதவைத்திறந்து வெளியே கலைத்தும் விடுவாள். தாயும் குட்டியும் துள்ளிய வண்ணம் வெளியே போவார்கள். வெளியே அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நந்தினி கவனிப்பதில்லை.

***

அன்று சுந்தரன் வேலைக்குச் சென்றுவிட்டான். சமையலில் ஈடுபட்ட நந்தினி அவளையும் மகளையும் வெளியே கலைத்துவிட்டாள். பின்பு தனது சமையல் அலுவல்களைக் கவனித்தாள். சமையல் அறையில் வெக்கை அதிகமாக ஜன்னலை திறப்பதற்குச் சென்றாள். அப்போது வெளியே பார்த்தவளுக்கு துக்கிவாரிப் போட்டது. அவள் பக்கத்து வீட்டானோடு… நந்தினிக்குப் பற்றிக்கொண்டு வந்தது. கத்தி ஒன்றை எடுத்து அறுக்க வேண்டும் என்பதாகக் கோபம் வந்தது. அவள் சுந்தரன் வந்ததும் அதைக் கூறினாள். சுந்தரன் சோர்ந்து போய்விட்டான். தான் இல்லாத போது ஏன் அவளை வெளியே விட்டாய் என்று சத்தம் போட்டான்.

அதன் பின்பு நந்தினி அவளைத் தனியே வெளியே விடுவதில்லை. அதனால் வரும் விளைவுகளைச் சகிக்கும் பொறுமையும் அவளிடம் இருக்கவில்லை. பக்கத்து வீட்டான் அடிக்கும் கொட்டத்தைப் பார்த்த அதன் எசமான் அதற்கு நலமடித்துவிட்டான். அதன் பின்பு சில வேளைச் சுந்தரனுக்கு தெரியாமல் நந்தினி வெளியே கலைத்தால் அவளும் குட்டியும் எங்கோ அதிக தூரம் போய்விட்டு வருவார்கள். எங்கே போகிறார்கள் என்று நந்தினி அக்கறை கொள்வதில்லை. முதல் முறை மகளுக்கு முன்பாகத்தான் அவள் அந்த அசிங்கம் செய்தாள். அவள் பார்வையில் அது அசிங்கமாகாதென நந்தினி நினைத்தாள். வெறுத்தாள். இப்போது யாருடனும் தொடர்பு ஏற்பட்டால் அதைத்தான் செய்வாள். எப்படி அவளால் இப்படிச் செய்ய முடிகிறது என்பது நந்தினிக்குப் விளங்கவில்லை. அதுதான் நாய்க்குணமோ என்று அவள் எண்ணுவாள்.

இப்போது வெளியே விட்டால் அவள் அதிக நேரம் எங்கோ சென்று தங்குகிறாள். நந்தினிக்கு இவளின் நடத்தை மீது சந்தேகம். யாரோ ஒரு ஆணைப் பிடித்துவிட்டாள் என்கின்ற ஐமிச்சம். எதற்காகச் சுந்தரன் இதை இழுத்து வந்தான் என்பது எரிச்சல் தரும். தான் சொல்வதை அவன் கேட்பதில்லை என்கின்ற அந்தரம். அவளின் அழகில், செல்லக் குரைப்பில் மயங்கிப் போய்விட்டான். நந்தினி அவளைத் தொடுவதே இல்லை. சுந்தரன்தான் இருவரையும் நிர்வாணமாய் குளிக்கவார்த்துத் துடைத்து எடுப்பான். அவள் குளித்து துடைத்து வந்தால் அழகாக இருக்கும். குட்டி குளித்தாலும் அதன் ஊதிய உடம்பில் ஒருவித அழுக்குத் தொடர்ந்து இருப்பதாகவே தோன்றும். பாவம் குட்டி என்று நந்தினி சிலவேளைகளில் நினைப்பது உண்டு. இப்படி ஒரு தாய்க்கு அவள் குட்டியாகப் பிறந்துவிட்டாள் என்பதாக நினைத்துக்கொள்வாள்.

நந்தினிக்கு அவளைச் சற்றும் பிடிப்பதில்லை. நந்தினியைக் கண்டால் அனேகமாக பேஸ்மன்றுக்குள் அவள் அடைந்து கொள்வாள். அல்லது வெளியே கலைத்தால் சந்தோசமாய் ஒடி மறைவாள். சுந்தரன் வேலையால் வந்தால் அவனிடம் பாய்ந்து பாய்ந்து ஜாலம் காட்டுவாள். நந்தினிக்கு அப்படி ஜாலம் காட்டுவது சற்றும் பிடிப்பதில்லை. இவள் நம்பிக்கைக்கு உகந்தவள் இல்லை என்பதை நந்தினி அவனுக்குக் குறிப்பால் உணர்த்தப் பார்த்தாள். அவன் அதைப் விளங்கிக் கொள்ளவில்லை. நந்தினி அவளைப் பற்றிச் செல்வதை அவன் நம்புவதும் இல்லை. நந்தினி இப்போது அவனுக்குப் புத்திமதி சொல்வதை விட்டுவிட்டாள். நன்றாகப் பட்டுத்தெளியட்டும் என்று காத்திருந்தாள்.

அன்று ஒரு சனிக்கிழமை. சுந்தரனுக்கு அவளோடும் மகளோடும் வெளியே போகிற புழுகு. கடைக்குப் போய் பொருட்கள் வாங்கி வந்த பின்பு அவளையும் குட்டியையும் அழைத்துக்கொண்டு ஒரு மணிபோல சுந்தரன் உலாத்திற்குப் போனான். வழமையாக அவன் ஒருமணிக்கு இறங்கினால் மூன்றுமணிக்கு வீட்டிற்கு வந்துவிடுவான். அன்று நான்கு மணியாகியும் வீட்டிற்கு வரவில்லை. நந்தினிக்கு அப்போதே பதட்டமாகிவிட்டது. சரி எதற்கும் சற்று பொறுத்துப் பார்ப்போம் என்று காத்திருந்தாள். நேரம் ஐந்தாகிவிட்டது. சுந்தரனையும் காணவில்லை. அவளையும் காணவில்லை. நந்தினியால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவள் அலைபேசியில் சுந்தரனைத் தொடர்பு கொண்டாள். காட்டிற்குள் சிலவேளை அலைபேசி வேலை செய்யாது. சுதரன் தொடர்ந்தும் நடுக்காட்டிற்குள்தான் நிற்பானா என்பது விளங்கவில்லை. எதற்கும் அவன் எடுக்க வேண்டும் என்கின்ற பிரார்த்தனையோடு காத்திருந்தாள். அவன் பதிலளித்தான்.

‘ஏன் இன்னும் வரேல்லை?’ என்று நந்தினி கேட்டாள்.

‘நந்தினி நான் தெரியாமல் அவளைக் காட்டுக்க அவுட்டு விட்டன். அவள் அங்க வந்த ஒரு ஆணோட தனகினாள். அதுகின்ற சொந்தக்காரன் சைக்கிள்ள போனவன். அது ஓட இவளும் ஓடினாள். கொஞ்சத்தூரம் ஓடிப்போட்டுத் திரும்பி வருவாள் எண்டு நினைச்சன். அவள் வரேல்ல. நான் தேடியலைஞ்சு களைச்சுப் போனன். எனக்குத் தலை சுத்துற மாதிரி இருக்குது நந்தினி… நான் என்ன செய்யிறது?’

‘அது நாய்தானே. பேசாமல் விட்டிட்டு வாங்க. விருப்பம் எண்டா அது மோப்பம் பிடிச்சு தேடிவரும்.’

‘இல்ல நந்தினி அவள் இல்லாமல் என்னால வரமுடியாது. அவள் இல்லாத வீட்டை நினைச்சே பார்க்கேலாது.’

‘உங்களுக்கு என்ன பைத்தியமா? நாய்க்காகவும் யாரும் இப்பிடிக் கவலைப்படுவினமே? அது தன்ர குணத்தை காட்டீட்டுது பாத்தியளா?’

‘நான் அவளை நாய் மாதிரியா பாத்தன்?’

‘நீங்கள் தேவதையாப் பாத்து இருக்கலாம். அது நாய்தானே? நாய் போலத்தான் குணமிருக்கும். அதுதான் அகின்ர இயற்கை. அதை மாற்ற முடியுமா? நாயத் தேவதையாக்கேலாது. அதுகின்ர வாலையே நிமித்த முடியாது. அது அப்பிடித்தான் இருக்கும்.’

‘என்னால முடியல்ல நந்தினி.’

சுந்தரன் மறுகரையில் அழுவது நந்தினிக்குக் கேட்டது. அதைக்கேட்ட நந்தினிக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ‘இவருக்கு என்ன பைத்தியமா? ஒரு வப்பு நாய்க்காக எதற்கு இப்படிப் பரிதவிக்கிறார். என்ன பலவீனம் இது?’

‘இப்ப பேசமால் வீட்ட வாறியள். இல்லாட்டி அந்த வப்பு நாய் பெரிசெண்டா இனி இங்க என்னிட்ட வராதீங்க. விளங்குதா நான் சொல்லுறது.’ அவள் கண்டிப்பாகக் கூறினான்.

‘வப்பு நாய், என்ன? என்ன?’ சுந்தரன் அதிர்ந்தான். பின்பு மௌனமானான். ஏதோ சட்டென்று விளங்கியது. ஆணைக் கண்டவுடன் எசமானையே புறக்கணித்து ஓடிவிட்டாள். சுந்தரனுக்கு அவள் நன்றி உள்ள நாய் இல்லை என்பது இப்போது புரிந்தது. இனி நாய் பற்றி தான் எண்ணவே கூடாது என்று நினைத்தான்.

‘என்ன பேசாமல் நிக்கிறியள் வாறியளா?’

‘ஓ வறன்.’

‘வப்பு நாய்.’ அவன் வாய் தன்னிச்சையாகச் சொல்லியது.

– நவம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *