வந்து போகும் வலி

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 2, 2021
பார்வையிட்டோர்: 3,147 
 
 

அவருக்குத் தெரியும் தான் இப்போதைக்கு இறந்துபோகப்போவதில்லை என்பது. எழுபது வயதானாலும் உடல் ரீதியாகவும் மனோரீதியாகவும் இன்னும் திடகாத்திரமாக இருப்பதாகத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் இந்த நெஞ்சுவலி அவ்வப்போது வந்து மிரட்டுகிறது. அது வருவதும் போவதும் அவருக்குப் பழக்கப்பட்டுத்தானிருந்தது. அதை அவர் ஒருபோதும் பெரிதுபடுத்துவதில்லை. ஆனால் இது அந்தமாதிரி வந்துபோகும் வலியல்ல! நடு நெஞ்சைப் பிடித்து இறுக்குகிறது. இடப்பக்கமாக தோள்மூட்டு, கை என உளைவெடுக்கிறது. கையை உதறி உதறிப் பார்த்தார். மறு கையால் நெஞ்சை அழுத்தித் தடவினார். வலி விட்டுப் போவதாகத் தெரியவில்லை.

பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் இன்னும் அவர் ஓய்ந்துபோகவில்லை. வீட்டில் சும்மா இருக்கமாட்டார். நாலு வாழைமரங்கள் மட்டும் வைக்கக்கூடிய நிலத்தில் நாற்பது விதமான செடிகளை நாட்டி அவற்றிற்கு நாள் முழுதும் பரிகாரம் செய்துகொண்டிருப்பார். மனைவி சத்தம் போடுவதையும் காதிற் கொள்ளமாட்டார்.

‘சும்மா அதையிதை வெட்டிக்கொண்டிருக்காமல்… விட்டிட்டு வாங்கோ..!’

அவர் வரமாட்டார்.

இப்போது ‘நெஞ்சு நோகிறது…!’ எனச் சொன்னாலும் மனைவியிடம் ஏச்சுப் பேச்சைத்தான் கேட்கவேண்டியிருக்கும்! ‘சொல்லச் சொல்லக் கேட்காமல் மாய்ஞ்சுகொண்டிருந்தீங்கள்… கேட்டாற்தானே..!’ என முதல் அடி விழும். மனைவி சொல்வதுபோல அந்த மாய்ச்சல்தான் நெஞ்சுவலிக்குக் காரணமோ?;

மனைவியைச் சலிப்பேற்படுத்துமளவிற்கு அவருக்கு நெஞ்சு நோ வருவதும் அவள் அது இது என ஏதாவது தைலங்களை நெஞ்சிற் போட்டு உரஞ்சுவதுமாகத்தான் பல காலங்கள் போயிருக்கின்றன.

‘டொக்டரிட்டைக் காட்டலாம் வாங்கோ..!’ என மனைவியின் ஆதங்கத்தைப் பல முறை கேட்டுக் கேட்டு ஒருமுறை அவர் வைத்தியசாலைக்குப் போவதற்கு இணங்கியிருந்தார். பதினைந்தோ இருபது வருடங்களுக்கு முன்னதாயிருக்கலாம். ஒரு தனியார் வைத்தியசாலைக்கு நெஞ்சு பற்றிய சோதனை முன்ஆய்வுக்காகப் போயிருந்தார்கள். இந்திய லேடி டொக்ரர்… அன்ஜியோகிராம் சோதனை செய்தார்.

‘இரத்த நாளமொன்று பத்து வீதமளவில் அடைபட்டிருக்கிறது… பயமில்லை! குளிசைகள் எடுத்தால் சரியாகிவிடும்… தேகப்பியாசம் செய்யவேண்டும், உணவு வகைகள் எடுப்பதில் ஒரு ஒழுங்கைப் பின்பற்றவேண்டும்…’ என்றெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டுத் கொடுத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் அவற்றை ஓரளவு கடைப்பிடித்தார். பிறகு யார் அதைக் கணக்கெடுத்தது? நாட்கள் ஆக ஆக, அந்த அளவுக்கு சாப்பாட்டிலெல்லாம் நுணுக்கம் பார்க்கமுடியுமா என்று அவருக்குத் தோன்றியது. குளிசைகளைத் தொடர்ந்து எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை காசு தேவைப்பட்டது. பல தடைவைகளில் அது இயலுமானதாக இருக்கவில்லை. ‘சரி போகட்டும்…! நன்றாகத்தானே இருக்கிறேன்…!’ என அதையெல்லாம் கைவிட்டார்.

இரண்டொரு வருடங்களில் மீண்டும் பிரச்சனை தொடங்கியது. நடக்கும்போது நெஞ்சு வலித்தது. சற்று ஏற்றமான பாதைகளில் நடக்கவே முடியாமல் வருத்தியது. மீண்டும் அதே டொக்டரிடம் போகவேண்டியதாயிற்று! டொக்டரிடமிருந்து நல்ல டோஸ் கிடைத்தது. குளிசைகளைத் தொடர்ந்து எடுக்காது இடைநிறுத்தியது தவறு என்று கூறினார். தன்னிச்சையாக முடிவெடுக்காது ஒரு டொக்டரிடம் ஆலோசனை பெற்றிருக்கலாம் என்பது அவரது அபிப்பிராயம். இதய சம்பந்தமமான எக்கோ ரெஸ்ட், ஈசீஜீ போன்ற சில உடனடி சோதனைகள் செய்து பார்த்தார்.

“அன்ஜியோகிராம் சோதனை செய்யவேண்டும்… இதய அடைப்பு ஏற்பட்டிருக்கக்கூடும்… அன்ஜியோ பிளாஸ்ற் அல்லது பை பாஸ் சத்திர சிகிச்சை செய்யவேண்டியும் வரலாம்…” என டொக்டர் விளக்கமளித்தார். டொக்டர்; கூறியது அவருக்குப் புரிந்தாலும், அவர் விளக்கமளிக்கிறாரா அல்லது பயமுறுத்துகிறாரா என்றுகூடத் தோன்றியது! ஏதோ வெட்டுக் கொத்து நடக்கப்போகிறது என்ற பயமும் நெஞ்சில் ஏற்பட்டது. ‘சிகிச்சைச் செலவுக்கான பணத்தை ஒழுங்கு செய்துகொண்டு இரண்டு கிழமையின் பின்னர் வாருங்கள்!’ என கூறி அனுப்பியிருந்தார்கள். அதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்ற தகவலையும் கூறினார்கள். ‘அதற்கு இவ்வளவு பணமா!’ என அப்போதே ஏக்கமாயிருந்தது.

இப்போதும் அந்தப் பயம்தான்.

அப்போது அண்ணை தம்பி என சிலரிடம் பணம் ஒழுங்கு செய்துகொண்டு சிகிச்சைக்காகப் போனார். ‘கடவுளே… கடவுளே..!’ என நாள்முழுதும் பிரார்த்தபடியே வார்ட்டில் தங்கியிருந்தார். மனம் பலவீனப்படும்போதுதான் கடவுளின் நினைப்பும் வருகிறது. அடுத்தநாள் சத்திரசிகிச்சை வார்ட்டிற்கு ஸ்ரெச்சரில் அவரைக் கிடத்தி உருட்டிக்கொண்டு போனபோது மனைவி கலங்கும் கண்களுடன் கையெடுத்துக் கும்பிட்டுக்கொண்டு நின்றாள். அது இன்னும் மனவேதனையை ஏற்படுத்தியது. ‘சத்திர சிகிச்சை செய்ய நேரிட்டால்… தனக்கு ஏதாவது ஏறுக்கு மாறாக நடந்திட்டால்…’ என மனம் குழப்பியது. தானில்லாத நிலையில் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு மனைவி என்ன க~;டப்படுவாளோ…! ‘கடவுளே அந்த நிலைமை வந்திடக்கூடாது!’

சிகிச்சையைத் தொடங்குமுன் “பணத்தை ஒழுங்கு செய்துவிட்டீர்களா..?” என டொக்டர் முதற் கேள்வி கேட்டார். அவர் தலையசைத்து பதிலளித்தார். இதே கேள்வியை ஏற்கனவே மனைவியிடமும் கேட்டிருந்ததை அவர் டொக்டரிடம் நினைவுபடுத்தினார். அப்படிக் கூறியபோது அவர் சினப்பட்டிருக்கக்கூடும்… “சரி… ரிலாக்ஸ்சாக இருங்கள்…!” என சற்று மனத்துணுக்குடன் டொக்டர் கூறினார். அன்ஜியோகிராம் சோதனையை தாதிமாரின் உதவியுடன் ஆரம்பித்தார். முன்னே அமைக்கப்பட்டிருந்த டிஜிற்ரல் ஸ்கிரீனில் செயலப்படுமுறைகளைப் பார்த்தவாறு அவர் அமைதியாகக் கிடந்தார்.

சற்று நேரம் கடந்து சோதனை முடிவுக்கு வந்தது. டொக்டர் ஒரு பெருமூச்சுடன், “Thanks God…!” என்றார். “It’s getting cleared! God helped you…! You saved a lot of money…!”

இதய அடைப்பு பெரிதாக இல்லை என்பது ஆறுதலைக் கொடுத்தது. கடவுளின் கிருபையை எண்ணி வியந்துபோனார். டொக்டரின் சிகிச்சையை நம்பித்தான் அவர் வைத்தியசாலைக்கு வந்தார். அந்த டொக்டரே ‘கடவுள்தான் உங்களுக்கு கருணை செய்திருக்கிறார்…’ என்று கூறுகிறார்! அதைவிட வேறு என்ன தேவை? இனி எல்லாம் சரியாகிவிடும் என்றுதான் தோன்றியது. அவ்வாறு பத்து வருடங்களுக்கு மேலாக நன்றாகத்தானிருந்தார்.

இப்போது அந்த நினைவுகள் நெஞ்சில் வந்தன.

இப்போது நிலைமை மோசமாகி வைத்தியசாலைக்குப் போக நேரிட்டால், வைத்திய செலவுகளுக்குப் பெரிய தொகை பணம் தேவைப்படுமே! அதற்கு என்ன செய்வது? ஏற்கனவே சுவாரிஸ் அபயவர்த்தனவிடம் பட்ட கடனுக்குப் பதில் சொல்லமுடியாமலுள்ளது. முன்னர் ஒரு அவசர தேவைக்காகக் கேட்டபோது, சுவாரிஸ் இன்னொருவரிடம் பணம் பெற்றுத் தந்திருந்தான். ஐந்து வீத வட்டி! இரண்டொரு வருடங்கள் மாதா மாதம் வட்டியைக் கட்டிக்கொண்டிருந்தார். பிறகு, வட்டியும் கட்டமுடியாமல் இன்னும் இரண்டொரு வருடங்கள் இழுபட்டது. வட்டி, முதலுடன் ஒன்றிணைந்து இன்னும் பெரிய தொகையாகக் கூடிக்கொண்டிருந்தது. சுவாரிஸ் அவ்வப்போது கோல் எடுத்துக் கேட்பான். காசு தந்தவர் தன்னை நெருக்கி கரைச்சல் படுத்துகிறார் என முறைப்படுவான். தனது கார் புத்தகத்தை ஈடு வைத்து பணம் தந்தவனுக்கு கொஞ்சக் காசு கொடுத்ததாகவும் ஒருமுறை கூறினான்.

‘மொனவாஹறி கறலா அற மினிஹாகே சல்லி டிக்கக் தென்ட பலன்ட மஹத்தயா..! (ஏதாவது ஒழுங்கு செய்து அவனது காசைக் கொடுப்பதற்கு வழி பாருங்க மஹத்தயா..!)’ என வினயமாகவும் கேட்டுக்கொள்வான். ஏதாவது ஒழுங்கு என்றால் என்ன ஒழங்கு செய்வது?;

“எப்படியாவது சீக்கிரம் தந்துடுவேன்… கொஞ்சம் ரைம் தாங்க சுவாரிஸ்;;..!” என்று மட்டும் எப்போதும் கேட்டுக்கொள்வார்.

ஒரே நிறுவனத்தில் அவருக்கு அடுத்த நிலையில் பல காலம் பணியாற்றியவன் சுவாரிஸ். வேலையிலிருந்து அவர் விலகிய பிறகு அவரது க~;ட நிலையையும் அறிந்தவன்தான். எனினும் தனக்கு உதவி செய்யப் போய் அவன் இன்னொருவனிடம் தொல்லைப்படுவது அவருக்குக் கவலையளித்தது. இன்று காலையும்; கோல் எடுத்திருந்தான். அதே கேள்வியும் அதே பதிலும்தான். பணத்தை மீளக் கொடுக்கும் வழி தெரியவில்லை. எங்கு போய் யாரிடம் கை நீட்டுவது? எந்த வேலையில் ஈடுபட்டிருந்தாலும் நாள்முழுதும் அந்த யோசனை மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒருவேளை அதுதான் நெஞ்சுவலிக்குக் காரணமோ?

நெஞ்சு வலிக்கிறது எனக் கூறி வீட்டில்; கலவரமேற்படுத்தாமல் வெளியே வந்து உலாவிக்கொண்டிருந்தார். சற்று நேரம் படுக்கையில் போய் சாய்ந்துகொள்ளலாமா என அயர்ச்சியாயிருந்தது.

‘இந்த நேரத்தில் என்ன படுக்கை..?’ என்று மனைவி குழப்பமடைவாள்;. ‘ஏதாவது செய்யுதா… நெஞ்சு நோகுதா..?’ எனக் குடைந்தெடுப்பாள்;. சற்று நேரமாக அங்குமிங்கும் மெல்ல நடந்தார்.

மெல்ல மெல்லப் பொழுது சாய்ந்து இருள் வந்து சூழ்ந்துகொண்டிருந்தது.

அது இன்னும்; மனப் பயத்தை அதிகரித்தது. நெஞ்சுப் படபடப்பா அல்லது மனப் பதற்றமா என்று புரியமுடியாத நிலைமைக்குட்பட்டுக்கொண்டிருந்தார். இன்றய இரவு என்ன செய்ய நினைத்திருக்கிறதோ..?
நடப்பதற்கும் இயலாமல் வந்து சாய்கதிரையில் அமர்ந்தார். பேரக்குழந்தைகள் இருவரும் முன்னே ஹோலில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அதில் மனதைச் செலுத்தி வலியை மறக்கலாமா என முயன்றார். முடியவில்லை. கதிரையில் அமர்ந்தவாறே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக அசைந்து பார்த்தார். வலி இன்னுமின்னும் கூடிக்கொண்டிருந்தது. எழுந்து நின்று பார்த்தார். ஹோலுக்குள்ளேயே மெல்ல நடந்து பார்த்தார். முதுகுப்பக்கம் உளைவெடுத்தது. சுவரில் முதுகை அழுத்திப் பார்த்தார். அறையினுட் சென்று படுக்கையில் குப்புறப் படுத்து தலையணையை நெஞ்சில் அழுத்தியவாறு புரண்டெழுந்தார். எந்த வித்தைகளும் பலனளிப்பதாயில்லை.

அப்பாவின் வித்தியாச நடவடிக்கைகளை முதலில் மகள்தான் அவதானித்தாள்.

“அப்பா… என்ன செய்யிது..?”

அவர் ஏதும் பேசாமல் அல்லது பேசமுடியாமல் அல்லது பேச விரும்பாதிருந்தார்.

“சொல்லுங்கோ… என்ன செய்யிது?”

“ஒன்றுமில்லையம்மா… நீங்கள் உங்கட அலுவலைப் பாருங்கோ..!”

“அம்ம்..மா..!” மகள் பெரிய குரலெடுத்து அழைத்தாள்.

அம்மா பக்கத்தில் குசினியிற்தான் இரவுச் சாப்பாடு செய்துகொண்டிருந்தாள்.

“இங்கதானே நிக்கிறன்… ஏன் இந்தக் கத்து கத்துறீங்கள்..?”

“அப்பாவுக்கு என்னவோ செய்யுது..!”

“என்ன நெஞ்சு நோகுதா..?” என்ற கேள்வியுடன் அம்மா பக்கத்தில் வந்தாள்.

அவர் பதிலேதும் பேசவில்லை. இல்லையென்பதா… உள்ளதென்பதா..? நெஞ்சுவலி அணையுடைக்கும் உச்சத்துக்கு ஏறிக்கொண்டிருந்தது. மகன், மருமகன் எல்லோரும் பதற்றத்துடன் அப்பாவைச் சூழ்ந்துகொண்டார்கள்.

“அப்பா வாங்கோ ஹொஸ்பிற்டலுக்குப் போவம்..!”

“தேவையில்ல சரியாகியிடும்… பார்ப்பம்..!” என அவர் மறுத்துக்கொண்டிருந்தார்.

கொரோனா நோய்த் தொற்று பரவல்கள் காரணமாக நாட்டில் தனிமைப்படுத்தல்கள் ஊரடங்கு என தொல்லைகள் ஒரு பக்கம். ஊரடங்கு நேரத்தில் வெளியே போவது பிள்ளைகளுக்குப் பாதுகாப்பாயிராது என்ற காரணமற்ற பயம் நெஞ்சில். வீதியில் இராணுவத்தினரையும் கண்காணிப்புக்குப் போடப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. யுத்தகாலங்களில் பல வருடங்கள் யாழ்ப்பாணத்திலிருந்தவர்… இராணுவ நடவடிக்கைகளின்போது பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு மனைவியுடன் அங்குமிங்குமென போக்கிடமில்லாது மரநிழல்களிலும் கோயில்தாவாரங்களிலும் அலைந்து திரிந்தவர். போய் ஒதுங்கும் இடங்களிலும் n~ல் அடிகள் தாறுமாறாக வந்து விழுந்து கலக்குக் கலக்கியிருக்கிறது. இராணுவம் என்றதுமே ஒரு விதமாகக் கிடி கலங்குகிறது. பத்து மணியும் கடந்துவிட்ட இந்த நேரத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய காரணத்துக்காக பிள்ளைகள் ஏதாவது வில்லங்கத்தில் மாட்டிக்கொள்ளவும் நேரிடலாம்.

அதையும் விட கொரோனா நோய்த்தொற்று வீரியமாக பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வைத்தியசாலையொன்றுக்குப் போவது எவ்வளவு தூரம் பிள்ளைகளுக்கோ தனக்கோ பாதுகாப்பானது என்ற குழப்பமும் மனதிலிருந்தது. வயதானவர்களைத்தான் தொற்று இலகுவில் பற்றிக்கொள்கிறதாம். போட்டும் தள்ளுகிறதாம்! நோயாளர்கள் யாரெவர் என்ன நோயுடன் வைத்தியசாலைக்கு வந்து போகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்? வலிந்து போய் வில்லங்கத்தில் மாட்டிக்கொள்வதா? வைத்தியசாலைக்குப் போகாது ஒருவாறு சமாளித்துவிடலாம் என்றுதான் நினைத்தார். ஆனால் முடியவில்லை.
கட்டிலை விட்டு சீமெந்துத் தரையில் குப்புறப் படுத்து நெஞ்சை அழுத்தினார். சீமெந்துக் குளிர் வலியைத் தாக்காட்டுமா என்று பார்த்தார். அதுவும் முடியாததாக எழுந்து உட்கார்ந்தார். வியர்த்துக் கொட்டியது. மனைவி வியர்வையைத் துடைத்துத் துடைத்துவிட்டாள். வியர்வை பெருகிக்கொண்டிருந்தது.

“கண்களும் அந்த மாதிரிச் சிவந்துபோயிருக்கு… வாங்க அப்பா போகலாம்!” என மகன் வற்புறுத்தினான். அவர் எழுந்து கண்ணாடியிற் பார்த்தார். கண்கள் இரத்தச் சிவப்பாகியிருந்ததைப் பார்த்து அவரும் பயந்துபோய்விட்டார். ‘வைத்தியசாலைக்குப் போகத்தான் வேண்டும்!’ என அவருக்கும் தோன்றியது.

மருமகன் விரைந்து சென்று தனது காரை ஸ்ரார்ட் எடுத்தார். மகனும் மகளும் கைத் தாங்கலாகக் கூட்டிச்சென்று அவரைக் காரில் ஏற்றினார்கள். மனைவியை பேரர்களுடன் வீட்டில் நிற்குமாறு பிள்ளைகள் கூறினார்கள். அவர் மனைவியைத் திரும்பிப் பார்த்தார்… கண்கலக்கத்துடன் பிரார்த்தித்துக்கொண்டு நின்ற பழைய நினைவை அவளது ஏக்கப் பார்வை கொண்டுவந்தது. போவதற்கு முன் பேரக் பிள்ளைகளை அறையினுட் சென்று பார்த்துவிட்டுப் போனார். பார்க்கவேண்டும்போலிருந்தது… ‘திரும்ப வருவேனோ என்னவோ!’ என்ற மனப்பயம்.

குழந்தைகள்; உறங்கிப்போயிருந்தார்கள். அதுகூட நல்லதுதான் என நினைத்துக்கொண்டார். அல்லது அவர்களைத் தாக்காட்ட முடியாமற்போயிருக்கும். நாலு வயதும் ஆறு வயதுமான பையன்கள். சில வேளைகளில் அவர் விளையாட்டாக அவர்களுக்குச் சொல்வதுண்டு… ‘நான் செத்துப்போனால் நீங்க ரெண்டுபேரும்தான் என்னைத் தூக்கி சிமெற்ட்றிக்குக் கொண்டுபோகவேணும்!’

‘அம்மப்பா… நீங்க செத்திடுவீங்களா?’

‘எல்லாரும் ஒருநாளைக்குச் சாகத்தானேவேணும்?’

‘நீங்க சாகவேணாம் அம்மப்பா… நீங்க எங்களோட இருங்க!’

‘இல்லடா… இந்த உலகம் எல்லாரையும் தாங்குமா? வயசு போனவங்க நாங்கள் செத்தாற்தானே பிள்ளைகள் நீங்க வளர்ரதுக்கு இந்த உலகத்தில இடமிருக்கும்!’

பிள்ளைகள் விடுத்து விடுத்துக் கேட்பார்கள். இறப்பதிலுள்ள தவிர்க்கமுடியாத இயல்புத் தன்மையைப் புரியவைத்து, அப்படியான இழப்புகளைத் தாங்கக்;கூடிய தயார் மனநிலையை அவர்களுக்கு ஏற்படுத்துவதற்காக என விளக்கங்களைக் கூறுவார்.

எனினும் அவர்களுக்கு அவர் செத்துப்போவது சம்மதமில்லை. ‘இல்ல அம்மப்பா… நீங்க நெடூக எங்களோட இருக்கவேணும்!’ அவர் அதை நினைத்து வேதனையுடனேயே காரில் ஏறினார்… ‘பிள்ளைகள் காலையில் எழுந்து தேடுவார்களோ?’

“அரசாங்க ஆஸ்பத்திரிக்குப் போங்கோ… பிறைவேற் ஹொஸ்பிட்டலுக்குப் போனால் நிறையச் செலவு வரும்…!” என பிள்ளைகளிடம் முனகலாகக் கூறினார். காரின் இருக்கையிலும் அமர்ந்திருக்கமுடியாது துவண்டுகொண்டிருந்தாலும், ‘வைத்திய செலவுகளுக்கு என்ன செய்வது…?’ என்ற யோசனையும் ஒரு பக்கம் மனதை அலைத்துக்கொண்டிருந்தது.

“சரி அப்பா… கவ்மேன்ட் ஹொஸ்பிடலுக்குத்தான் போறம்… பேசாமலிருங்க!” மகள் அவரை அமைதிப்படுத்தினாள்.

சோதனைச்சாவடியில் மறித்து நிறுத்தினார்கள். காரினுள் ரோர்ச்லைட் அடித்துப் பார்த்து விசாரித்தார்கள். அவசரத்தில் பிள்ளைகள் மாஸ்க் மாட்டியிருக்கவில்லை. அது அவர்களுக்குப் பிரச்சனையாயிருந்தது. பிரச்சனைதான்! மகன் அவர்களுக்கு நிலைமையைப் புரியவைப்பதற்குத் தடுமாறிக்கொண்டிருந்தான். மருமகன் காரினுள் ஹ_ட்லைட்டை ஒளிர்வித்தார். வாகனத்துக்குரிய பத்திரங்கள் லைசென்ஸ் ஆகியவற்றைக் கேட்டார்கள். ‘இன்னும் சுணக்கமாகிறதே…’ என அவர் சினமடைந்தார். தன் நெஞ்சை வருடிக்கொண்டே, “செஸ்ற் பெயினிங்… ஸ்பிறித்தாலட்ட யனவா!” என அவர்களிடம் கூறினார். அவர்கள் உடனே விலகி வழி விட்டார்கள்.

“ளுழசசல ளுசை… அடுத்த சோதனைச்சாவடிக்கு நாங்கள் தகவல் தெரிவிக்கிறோம்… நிறுத்தாமற் போகலாம்;!”

வைத்தியசாலையின் முன்னே வாகனத்தை நிறுத்தியதும் வீல்செயர் பக்கத்தில் வந்தது. மகள் ஏற்கனவே அவர்களுக்குத் தகவல் கொடுத்திருக்கவேண்டும். தனியார் வைத்தியசாலைதான். ‘இங்க க்விக்காக பார்பாங்க அப்பா… காசு அது இதென்று யோசிக்காமல் வாங்க!’ என மகள் அவரைச் சமாதானப்படுத்துவதுபோல கூறினாள்.

அவர் அதுபற்றி ஏதும் பேசவில்லை. உண்மையைச் சொல்வதானால் இப்போது வைத்தியச் செலவு, பணப்பிரச்சனை… என எதுவும் பேசும் மனநிலையில் அவர் இல்லை. நெஞ்சைப் பிழந்து வெடிக்கும்போல வலி வியாபித்துக்கொண்டிருந்தது.

அவரை வீல்செயரில்; அமர்த்த முயற்சித்தார்கள். எனினும் “இல்ல நான் நடந்து வருவன்!” என நாத் தடுமாறியபடி கூறினார். அவர்கள் அதைக் கேட்காதவர்கள்போல விரைந்து செயற்பட்டார்கள். பக்குவமாகக் கதிரையில் அமர்த்தி, முதற் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சைக் கட்டிலுக்கு அவரைத் தூக்கி மாற்றினார்கள். இரவுநேர வைத்தியரும் தாதிமார்களும் பரபரப்புடன் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாக ஓடி தேவையான முதற்சிகிச்சைகளைச் செய்யத் தொடங்கினார்கள். வாயைத் திறக்கச் சொல்லி மருந்தை ஸ்பிறே செய்தார்கள். ஒரு கையில் இன்ஜெக்சன் மூலம் மருந்து ஏற்றினார்கள். இன்னொரு கையிலும் ஊசியேற்றி சோதனைக்காக இரத்தம் எடுத்ததுபோலிருந்தது. சில குளிசைவகைகளை அவரது வாயிலிட்டு தண்ணீர் பருக்கி உட் செலுத்தினார்கள். எல்லாம் ஒரு மயக்க நிலைபோல தன்னுணர்வற்று பிறரின் கட்டுப்பாட்டுக்குள் தனது உடலியக்கங்கள் வந்துவிட்டதாக உணர்ந்தார். எதையாவது செய்து முடிக்கட்டும் என்ற மனநிலையுடன், “வலிக்குது… வலிக்குது!” என்று மட்டும் அவர்களுக்கு சைகை செய்துகொண்டிருந்தார்.

திரும்பத் திரும்ப வாய்க்குள் மருந்தை ஸ்பிறே செய்தார்கள். சுவாசிப்பது தானாகவே தடைப்பட, தன்னியல்பாகவே மூச்சு ஆள உள்ளிளுக்கப்பட்டு அவரது நெஞ்சு மூசி மூசி உயர்ந்து பதிந்தது. இதயம் அடிப்பது நெஞ்சில் மட்டுமின்றி கன்னங்கள் கை கால்கள் என உடலெங்கும் திடும் திடும் என அடிப்பதுபோலிருந்தது. தாதிமார்கள் விரைந்து ஒட்சிஜன் பொருத்தியை சுவாசத்திற்கு கொடுத்தார்கள். மூச்சு நிதானத்துக்கு வந்தது. “நெஞ்சு வலி இப்போது எப்படி?” என்று கேட்டார்கள். “பரவாயில்லை… குறைவடைகிறது!” என சைகையிலேயே கூறினார். அதனால் பரபரத்துக்கொண்டிருந்த அவர்களும் நிதானமடைந்ததை அவதானித்தார். அவர்கள் அவரை ஸ்டெச்சரில் படுக்கவைத்து உருட்டிக்கொண்டு போக, பிள்ளைகளும் கூட வந்தார்கள். தீவிர சிகிச்சைப்பிரிவு நுளைவில், பிள்ளைகளை வெளியே நிற்கச் சொல்லி உள்ளே கொண்டுபோனார்கள்.

அங்கு ஏற்கனவே ரெடியாகியிருந்த சிகிச்சைக் கட்டிலில் அவரைத் தூக்கிக் கிடத்தினார்கள். தலைமாட்டுப் பக்கமாக வைக்கப்பட்டிருந்த இலத்திரன் கருவியிலிருந்த வயர் போன்ற சமாச்சாரங்களை நெஞ்சிலும் கைகளிலும் பொருத்;தினார்கள். அது கீ…கீ..! என சத்தம் போட ஆரம்பித்தது. புறங்கையில் ஊசித்துழையிடப்பட்டு, கையுயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மருந்துப் போத்தலிலிருந்து சொட்டுச் சொட்டாக மருந்து உட் செலுத்தப்பட்டது.

அவருக்கு அந்த நேரத்தில் சினிமாப் படங்களில் பார்த்த காட்சிகள் நினைவில் வந்தன! பிள்ளைகள் வெளியே காத்து நிற்கக்கூடும். ஒரு டொக்ரரோ தாதியோ வெளியே வரும்வரை பதற்றத்துடன் பார்த்து நிற்பார்கள். அவர்களில் யாராவது வந்து, ‘அப்பாவுக்கு ஆபத்து ஒன்றுமில்லை… நல்லாயிருக்கிறார்!’ என்றோ அல்லது ‘இப்போது ஒன்றும் சொல்லமுடியாது… தகுந்த சிகிச்சைக்குட்படுத்துகிறோம்… சரியாகியிடும் பார்க்கலாம்!’ என்றோ கூறக்கூடும். பிள்ளைகள் அதை எப்படித் தாங்கிக்கொள்வார்களோ என்று கவலையாயிருந்தது. அதுபோன்ற நினைவுகளுடன் அவருக்கு அயர்ச்சியில் கண்கள் சொருகியது. உறக்கத்துக்கு குளிசைகள் ஏதாவது தந்;திருப்பார்கள்போலிருக்கிறது என நினைத்தார். அவ்வளவுதான்… தூங்கிப்போனார்.

தாதியொருவர் இடைதரம் வந்து, சோதனைக்காக என இரத்தம் எடுத்தார். சில குளிசைகளைப் பருக்கினார். அவ் வேளைகளில் கண்கள் விழிப்பதும் அந்தக் கணமே உறங்கிப்போவதுமாக பொழுது நகர்ந்தது. உறக்கம்… உறக்கம் என உடலும் மனதும் அசந்து தூக்கத்திலாழ்ந்துகொண்டிருந்தது. எனினும் இலத்திரன் கருவி ‘கீ… கீ…’ என விசிலடித்து அடிக்கடி துயிலெளுப்பிக்கொண்டிருந்தது.
விடியப்புற நேரமாக சற்று தூக்கக் கலக்கம் கலைந்ததும் கண்களை உயர்த்தி இலத்திரன் திரையைப் பார்த்தார். விசிற் சத்தத்துடன் மினுக் மினுக் என சிவப்பில் ஒளிர்விடும் அறிவுறுத்தல்! இதய அடிப்பையும் இரத்த அழுத்த ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்யும் கருவியாயிருக்கலாம் என்றுதான் தனது அறிவுக்குகந்த வரையில் ஊகித்தருந்தார். அல்லது இது வேறு ஏதாவதாயிருக்குமா? யாரிடம் கேட்பது? கேட்டாலும் விளக்கமளிப்பார்களா? ஏதாவது வில்லங்கமாயிருக்குமோ? இரத்த அழுத்தமோ இதயத் துடிப்போ குழப்பமடைகிறதா? ஒருவேளை அப்படியே இதயத்துடிப்பு நின்றுபோய்விடக்கூடுமோ? மனைவியோ பிள்ளைகளோ பக்கத்திலில்லாதபோது மூச்சு நின்று உயிர் போய்ச் சேர்ந்துவிடுமோ!

தாதிமார் அங்கு இங்கு என ஓடியபடி ஒவ்வொரு நோயாளிகளையும் பராமரித்துக்கொண்டுதானிருக்கிறார்கள். சில நோயாளிகள் பெரிய குரலெடுத்துக் கத்துகிறார்கள்! தாதிமார்கள் பக்கத்தில் போனதும் அவர்களை தூசணத்திலும் ஏசுகிறார்கள். ‘பாவம், தாதிமார்கள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கருணையுடன் பணிவிடை செய்துகொண்டிருக்கிறார்கள்.’ என மனதில் இரக்கப்பட்டார். ஒருவேளை அந்த நோயாளிகளின் நிலைமை தன்னைவிட மோசமாயிருக்குமோ? எல்லாம் ஓர் அனுமானம்தான். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் என்ன பிரச்சனை என்று பார்க்கவும் முடியவில்லை. திரையிட்டு மறைப்பு செய்து அவரவராக நோயாளிகளைத் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள்.

அடுத்த தடைவை தாதியொருவர் பக்கத்தில் வந்தபோது கேட்டார்… “மிஸ்… இது என்ன..? Why there’s a red blinging indication… is that mean anything wrong in my heart…? இதயத்தில்;; ஏதாவது பிரச்சனையா..?”

“எஹேம கிசிதெயக் நே! You are alright…பயவென்ன எப்பா…! (அப்படி ஏதுமில்லை பயப்படவேணாம்…!)”

விடியும் வேளையில் தாதியொருவர் வந்து அவரைத் துயிலெழுப்பினார். “டொக்டர் வரப்போகிறார்… எழுந்திருங்கள்!” கைச்சுறுக்காக அவரது போர்வையை விலக்கி ஈரத்துணியினால் அவரது முகம், கை கால்கள் என உடலனைத்தையும் சுத்தம் செய்தார்.

அவருக்கு இப்போது நெஞ்சுவலி குணமாகிவிட்டதுபோலிருந்தது. வழக்கமாக வந்துபோகும் நெஞ்சுவலிதான் சற்று அதிகமாகி பயமுறுத்திவிட்டது. அப்படியானால் காலையில் வீட்டுக்குத் திரும்பப் போய்விடலாமோ என்று தோன்றியது. பெரிய செலவுமாகாது!

தாதியிடமே அதுபற்றிக் கேட்டார்… “மிஸ்! தென் மட்ட ஹொந்தய்…! சுட்டக்வத் றிதென்ன நே…! (இப்போ எனக்கு நல்லம்…! கொஞ்சம்கூட வலி இல்ல…!) காலையில் வீட்டுக்குப் போய்விடலாமா?”
தாதி ஒரு புன்முறுவல் பூத்தார்… “அய் மெச்சற ஹதிசய வென்னே? டொக்டர் நோனா அவிலா பலலா கியய்! (ஏன் இவ்வளவு அவசரப்படுறீங்க? டொக்டர் அம்மா வந்து பார்த்துச் சொல்லுவாங்க!)” அதைக் கேட்டு அவர் தளர்ந்துபோனார்.

அதிகாலையிலேயே மனைவி மகனுடன் வந்திருந்தார். மனைவியை மட்டும் அவரைப் பார்க்க அனுமதித்திருந்தார்கள். இதய நிபுணத்துவ டொக்ரர் அம்மாவும் வந்திருந்தார். இரவிரவாக எடுத்திருந்த இரத்தசோதனைத் தரவுகள் மற்றும் அவதானிப்புக் குறிப்புகளையெல்லாம் பார்த்தார். இதய இயக்கம் பற்றிய எக்கோ சோதனை செய்தார்.

“லுழர யசந டரஉமல…!, இரவு உங்கட நல்ல நேரத்துக்கு வந்திருக்கிறீங்க! இல்லாவிட்டால் நிலைமை மோசமாகியிருக்கும்! இரத்தசோதனை அறிக்கைகளைப் பார்க்கும்போது மாரடைப்புக்கு உள்ளாகியிருக்கிறீங்கபோலுள்ளது. இப்போது ஆறு ஏழு மணித்தியாலங்கள் கடந்தபிறகு இன்னெருமுறை இரத்தசோதனை செய்யவேண்டும்… அதன் பின்னர்தான் உறுதிசெய்யலாம்..!”

மாரடைப்பு என்றதும் அவர் அதிர்ந்துபோனார். “டொக்ரர்! இது ஏதாதவது ஆபத்தான நிலைமையா?” எனக் கேட்டார்.

“நோ நோ… (இல்ல இல்ல…) தெம்பாக இருங்கள்! அன்ஜியோகிராம் சோதனையொன்று செய்து பார்க்கவேண்டிவரும்…” என டொக்ரர் இன்னொரு புதிர் போட்டுச் சென்றார்.

அவருக்குத் திரும்பவும் குழப்பமாயிருந்தது. ‘இதற்கெல்லாம் இன்னும் செலவாகுமே…!’ என யோசனையாயிருந்தது. மாரடைப்பு அது இது என டொக்ரர் கூறியதைக் கேட்டு மனைவியும் கலங்கிப்போயிருந்தார். அவரது கையை தனது கைக்குள் எடுத்து வைத்துக்கொண்டு சொல்வதறியாது நின்றார் மனைவி. தாதி வந்து மனைவியை இனி வெளியே போகுமாறு தயவுடன் கூறினார். மனைவி தன்கூட நின்றபோது சற்று ஆறுதலாகத்தானிருந்தது. மனைவி வெளியே போனதும் மனப் பயமும் சேர்ந்துகொண்டது. இது அவ்வப்போது வந்து போகும் நெஞ்சு வலி என்றுதான் எண்ணிக்கொண்டிருந்தார். டொக்டர் ‘மாரடைப்பு’ என்று கூறியதும் பயந்துபோனார். ஒருவேளை இறந்துபோய்விடுவேனோ?

எல்லோருக்கும் ஒருநாள் இறப்பு வரத்தான்போகிறது. அது இப்போதோ… எப்போதோ! அவருக்கு எப்போதும் மனதில் ஒரு நினைவு இருக்கிறது. வயதானபிறகுதான் இந்த நினைவுகள் வந்து போகிறது! இந்த உலகை விட்டுப் போகும்போது, தன் வாழ்க்கையில் யாருக்கும் எதுவித குறைவும் செய்யவில்லை என்ற மனத்திருப்தியோடு ‘பை… பை!’ என பிள்ளைகளிடம் கையசைத்து விடைபெற்றுச் செல்லவேண்டும்! அது எவ்வளவு தூரம் சாத்தியமாகும்?

தனது வாழ்க்கைக் காலம் அவரது மீள்நினைவுக்குட்பட்டுக்கொண்டிருந்தது. தன்னால் இயலுமானளவு எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்துவந்திருக்கிறார். வெளிநாட்டு நிறுவனமொன்றில் நீண்டகாலமாக வெவ்வேறு நாடுகளில் உயர்பதவியில் பணியாற்றியபோது, போக்கிடமின்றிருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்கு தொழில் வசதி செய்து வாழ வழி காட்டியிருக்கிறார். அவர்களெல்லாம் இப்போது குடும்ப சமேதராக நல்ல நிலைமையிலிருக்கிறார்கள். அது மனதை நிறைவு செய்கிறது.

வாழ்க்கைக் காலத்தில் பழக நேர்ந்த எவருடனும் அவர்களது மனம் கோணாமல் நடந்திருக்கிறார்.

மணமுடித்தபோது அவரது அம்மா கூறியது எப்போதும் அவரது ஞாபகத்திலிருந்திருக்கிறது. ‘பெண்பிள்ளை காரியம்… ஒரு பெண் அப்பா அம்மாவுடன் இருக்கும்போது சந்தோ~மாக இருந்திருப்பாள்… கல்யாணம் முடித்து வந்தபிறகு அந்த சந்தோ~த்தையெல்லாம் இழந்துவிட்டேனே என ஒருபோதும் அவள் கவலைப்படக்கூடாது. கட்டிய மனைவியை தன் மகள்போல மனச்சுதந்திரமாகவும் சந்தோ~மாகவும் வைத்திருப்பது உனது கடைமை!’ அது கடைமையல்ல… உயிர்த்தொடுசல் என உணர்ந்து அதற்கும் மேலான இணைவுடன்தான் வாழ்க்கை நடத்தியிருக்கிறார்.

தன் முயற்சிக்கும்; வசதிக்கும் இயலுமானவரை பிள்ளைகளை ஓரளவுக்கேனும் ஆளாக்கிவிட்டிருக்கிறார். பேரப்பிள்ளைகளுடன் குத்திமுறிந்து விளையாடி சந்தோ~ப்பட்டிருக்கிறார். இயற்கைக் கொடைகளையும் மரம் செடிகளையும் பாதுகாத்து வளர்த்திருக்கிறார். வேறு வேறு இடங்களுக்குக் குடி பெயர்ந்து வேறு வேறு வீடுகளில் வசிக்கநேர்ந்தாலும் குருவிகளுக்கும் இதர பறவைகளுக்கும் தானியங்களும் தண்ணீரும் மரக்கிழைகளில் தொங்கவைத்து அவை வந்து தண்ணீரில் முங்கிக் குளிப்பதையும் உணவுண்டு செல்வதையும் பார்த்து நிறைவடைந்திருக்கிறார்.

இப்போது என்ன… ஒரேயொரு கவலைதான் மனதை வாட்டுகிறது!

எல்லா அப்பாமார்களும் பிள்ளைகளுக்கென்று சொத்து பத்து சேர்த்து வைத்துவிட்டுப் போவார்கள். தான் கடன் சுமையைத்தான் அவர்களது தலையில் போட்டுவிட்டுப் போவார்போலிருக்கிறது! அவ்வப்போது வந்து போகும் நெஞ்சு வலியைப்போல இந்த கடன் சுமைகளும் அவற்றை எப்போது தீர்த்துவைக்க முடியும் என்ற மனக்கவலையும் வந்து போய்க்கொண்டுதானிருக்கிறது. இவையெல்லாம் ஒரேயடியாகப் போயே போய்ச்சேர்ந்துவிடாதா? இப்போது இந்த வைத்தியச்செலவுகள் வேறு வந்துவிட்டது.

பக்கத்தில் தாதியொருவர் சோதனைக்காக இரத்தம் எடுக்க வந்தபோது, “மிஸ்! அன்ஜியோகிராம் ரெஸ்ருக்கு எவ்வளவு சார்ஜ் பண்ணுவாங்க?” என அப்பாவித்தனமாகக் கேட்டார்.

“தன்னேநே…! அஹலா கியன்னங்! (தெரியல்ல…! கேட்டு சொல்கிறேன்!” எனக் கூறியபடி அவர் சென்றுவிட்டார். வருவார் வருவார் எனப் பார்த்துக்கொண்டிருந்தவாறே உறக்கத்திலாழ்ந்துபோனார்.

எழுந்தபோது இரத்தசோதனை ரிப்போர்ட் வந்திருந்தது. டொக்ரர் அம்மாவும் வந்திருந்தார். டொக்ரர் கூறியதை சாதாரண புரியக்கூடிய பாi~யில் சொல்வதானால், ‘இரவு மாரடைப்பிலிருந்து தொன்னூற்றொம்பதில் தப்பியிருக்கிறீங்க! அன்ஜியோகிராம் செய்து பார்ப்போம்… இரத்தக்குழாய் அடைப்பு இருந்தால் ஸ்ரென்ற் போடவேண்டியேற்படலாம்!’ என ஸ்ரென்ற் போடுவது பற்றிய விளக்கத்தையும் கூறிச் சென்றார்.

‘அன்ஜியோகிராம் சோதனை செய்து பார்த்து, இரத்தக்குழாய் அடைப்பு ஏதுமிருந்தால் அல்லது சுருங்கிப்போயிருந்தால் அடைப்பை அகற்றி சுருக்கத்தை விரிவுபடுத்தும் செய்முறைதான் இது. ஒரு பலூன் ஊதுவது போன்ற செய்முறையில் அவ்விடத்தில் ஊதி விரிவுபடுத்தப்பட்டு, இரத்தக்குழாய்; மீண்டும் சுருக்கமடையாமலிருப்பதற்காக ஒரு நுண்ணிய மெற்றல் நெற் பொருத்தப்படும். குறிப்பிட்ட காலத்தில் இது உடலமைப்புக்களுடன் இசைந்து சேர்ந்துவிடும்.’

டொக்ரர் மிக இலகுவாக இதையெல்லாம் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அருக்கு இன்னுமின்னும் மனக்குழப்பம் மேலிட்டுக்கொண்டிருந்தது. இத்தனூண்டு இதயத்துக்குள் இவர்கள் இந்த வேலைகளையெல்லாம் நுணுக்கமாகச் செய்து முடிப்பார்களா? சரியாகச் செய்து முடிப்பார்களா..! கரணம் தப்பினால் மரணம் என்ற கதைதான்! நுண்ணிய குழாயினூடு இழையைச் செலுத்தும்போது ஏதாவது உடைவு அல்லது பாதிப்பு ஏற்பட்டால்… தனது கதை அதோ கதி என முடியவேண்டியதுதான்! இதெல்லாம் தனது அதீத கற்பனைகளோ என்ற எண்ணமும்; தோன்றியது. எனினும் பயம் மனதைக் கௌவ்விக்கொண்டிருந்தது.

மதியம் இரண்டு மணிக்கான பொழுதில் சிகிச்சைக்கு நேரம் குறிக்கப்;பட்டிருந்தது. தாதிமார் வந்து அவர் தரித்திருந்த உடைகளை மாற்றி சத்திர சிகிச்சைக்கான இலகு உடைகளை அணிவித்தபோது வாழ்வின் நிஜத்துக்கும் முடிவுக்கும் இடைப்பட்ட ஒரு தருணத்திற்கு வந்திருக்கிறோம் என்று தோன்றியது. எதுவும் இப்போது தன் கையில் இல்லை! எல்லாவற்றையும் அவர்கள் கைகளுக்கு விட்டாயிற்று! நிபுணத்துவ டொக்டரின் ஆற்றலில் எல்லாம் சரியாக நடந்தேறலாம். ஆனால் எங்கேயும் எல்லா தருணங்களிலும் சறுக்கல்கள் உண்டு! எதுவும் நேரலாம்!

ஸ்டெச்சரில் உருட்டிக்கொண்டு போனபோது வெளிவாசலில் மனைவியும் பிள்ளைகளும் ஏக்கப் பார்வையுடன் நின்றார்கள். அவர்களது ஏக்கம் இப்படியே நிலைத்துப்போய்விடுமோ? அவரது கடைக்கண்களில் கண்ணீர் கசிந்து வந்தது. வாய் பேசமுடியாத தருணத்தில் உணர்வுகள் கண்ணீராக வெளிப்படுகிறது.

அன்ஜியோகிராம் சோதனை ஆரம்பமானது. நோய்வாய்ப்படுவதும் சிகிச்சை பெறுவதும் வாழ்க்கைக்காலத்தில் தவிர்க்கமுடியாத விடயங்கள்தான். சிகிச்சைக்கான செலவுகளும் தவிர்க்கமுடியாதவைதான். பிரச்சனை ஏதாவது பெரிதாகிவிடக்கூடாது என்ற பிரார்த்தனையே அவரது மனதை ஆக்கிரமித்திருந்தது. ‘You are lucky… God helped you…! You saved a lot of money…!’ என இருபது வருடங்களுக்கு முன் அந்த டொக்ரர் சொன்னதுபோல் இவரும் சொல்வாரா…?

“உங்களது பிரதான இரத்தநாளமொன்று முழுமையாக மடிந்துபோயிருக்கிறது… அதனால் இரத்த ஓட்டம் தொண்ணூறு வீதமளவில் தடைப்படுகிறது…” டொக்ரர் தனது சோதனை முடிவில் சொன்ன சேதியைக் கேட்டு அவர் அதிர்ந்துபோனார். அதிர்ந்துபோனது தனது நோய் நிலைமையை நினைத்தா அல்லது இதற்கான வைத்தியச் செலவுகளை நினைத்தா என்றும் புரியவில்லை.

“குறிப்பிட்ட இடத்தில் ஒரு ஸ்ரென்ற் உட்செலுத்தி இரத்தநாளத்தின் மடிப்பை சரிசெய்துவிடலாம்… அதுதான் உடனடியாகச் செய்யவேண்டிய சிகிச்சைமுறை…!”

‘அதற்குப் பெரிய தொகை செலவாகுமே…!’

இப்படி அவர் கேட்கவில்லை… மனதில் நினைத்துக்கொண்டார். “டொக்ரர்…! ஸ்ரென்ற் போடுவதை இன்னொரு தடைவை செய்யமுடியாதா…?”

“செய்யலாம்… ஆனால் உங்களுக்கு இன்னொருமுறை இதுபோன்ற சிகிச்சை சிரமங்களுக்கு உள்ளாகவேண்டியிருக்கும்… அதைவிட, சுணக்கம் செய்யாமல் சிகிச்சையை செய்வதுதான் நல்லது… வெளியே நிற்கும் பிள்ளைகளுக்கும் தகவல் அனுப்பியிருக்கிறேன்…”

அவர், “சரி டொக்ரர்…!” என்றார்.

ஸ்ரென்ற் உட்பொருத்தும் சிகிச்சை நிறைவுபெற்று மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் ஒரு முழுநாள் முழுதும் இருந்தபோதும், வைத்தியசாலை பில் கணக்கை எப்படி செலுத்துவது என்ற யோசனையே அவரது மனதில் ஓடிக்கொண்டிருந்தது. மூன்றாம் நாள் தனிப்பட்ட வார்ட்டிற்கு மாற்றப்பட்டபின், மனைவி பிள்ளைகள் பேரர்கள் எல்லோரும் பார்க்க வந்திருந்தார்கள்.

அறை வாசலில் நுளைந்ததும் சின்னவன் சற்று பிறேக் அடித்து நின்றான். தயக்கத்தில் அவனது முகம் வியப்படைவது தெரிந்தது. அவர் அவனை சைகை செய்து பக்கத்தில் அழைத்தார். மெல்ல மெல்ல பக்கத்தில் வந்தான்… “அம்மப்பா…!”

“என்ன சொல்லுடா…!”

“நீங்க செத்திட்டு திரும்ப எழும்பி வந்தீங்களா…?”

“ஏன்டா செல்லம்…! நான் நல்லாத்தானே இருக்கிறன்!”

மகள் சிரித்தபடி கூறினாள், “இவங்க ரெண்டுபேரும் பயந்துபோயிருந்தாங்க அப்பா…! வீட்டுக்கு சுகம் விசாரிக்க வந்தவங்களும் ரெலிபோனில பேசினவங்களும் அதையிதைச் சொல்லிக்கொண்டிருந்தாங்க… இது முதலாவது அற்ராக்கா செகண்ட் அற்ராக்கா என்றெல்லாம் கேட்டாங்க…! அம்மாவும் பயந்து அழுதாங்க… அது இவங்களையும் குழப்பிவிட்டிருக்கு…

“ராவு படுக்கும்போது இவன் கேட்கிறான்… ‘அம்மப்பா செத்திட்டாரா…? எங்களத்தானே சிமெட்றிக்குத் தூக்கியட்டுப் போகவேணும் என்று சொன்னவர்… எப்பிடித் தூக்கிறது? பாரமாயிருப்பாரே…” என்று!
அவர் அவனைத் தன் கைகளுக்குள் அணைத்துக்கொண்டார்.

“கூடிய கெதியில வீட்டுக்குப் போவதுதான் நல்லது… இப்பவே பில் எவ்வளவு வந்திருக்குமோ தெரியாது… என்னம்மா செய்யிறது?” என பிள்ளைகளிடம் கேட்டார்.

“ஏதாவது ஓழுங்கு செய்யலாம் அப்பா… நீங்க யோசிக்காமலிருங்க…!”

மறுநாள் காலையில் டொக்ரர் அம்மா வந்து அவதானிப்பு அறிக்கைகளைப் பார்த்தபிறகு வீட்டுக்குப் போகக்கூடியதாயிருக்கும் என, பிள்ளைகள் விசாரித்து வந்து கூறினார்கள்.

“பில் எவ்வளவு என்று பார்த்தீங்களா…?” என மீண்டும் ஈனமான குரலில் கேட்டார். “கேட்டனாங்க அப்பா… அவங்க கணக்குப் பார்த்துச் சொல்லுவாங்க!”

எவ்வளவு தொகை என்பது ஏற்கனவே பிள்ளைகள் அறிந்திருக்கக்கூடும்… தன்னிடம் கூற விரும்பவில்லையோ என நினைத்துக்கொண்டார். மகள் அடிக்கடி சித்தப்பா, சித்தி, மாமா என ஒவ்வொருவருடனும் பேசிக்கொண்டிருந்தாள். கண்களை மூடியபடி அவளது பேச்சுக்களை கிரகித்துக்கொண்டிருந்தார். அப்பாவுக்குக் கேட்டக்கூடாது என ரகசியக்குரலில்தான் பேசுகிறாள். எனினும் அவள் என்ன பேசுகிறாள் என்பதை அவரது மனம் அனுமானித்துக்கொண்டிருந்தது. வைத்தியச் செலவை செலுத்துவதற்காக பிள்ளை பிரகண்டப்படுவதை நினைத்து மூடிய கண்களுக்குள்ளும் கண்ணீர் பனித்தது. நெஞ்சுக்குள் அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார்.

சுகயீனமுற்ற வேளையிலிருந்து ஓப்ஃ செய்யப்பட்டிருந்த அவரது மொபைல் ஃபோனை மகள் ஓன் செய்து கொடுத்திருந்தாள். மாலை நேரமாக ரெலிபோஃன் றிங்கிட்டது. மகள்தான் கையிலெடுத்துப் பார்த்துவிட்டு பதற்றமடைந்தாள், “அப்பா… சுவாரிஸ் அங்கிள் கோல் பண்றார்!”

அவருக்கும் திடும் என நெஞ்சு ஒருமுறை அடித்தது. “ஆன்சர் பண்ணுங்க… ரெண்டு நாளில அப்பா பேசுவார் என்று சொல்லுங்கோ!”

மகள் பேசினாள்… “அங்கிள்… அப்பி தென் ஸ்பிறித்தாலே இன்னே… தாத்தி பஸ்ஸ கத்தாகறய்… (நாங்க இப்ப ஆஸ்பத்திரியில நிக்கிறம்… அப்பா பிறகு பேசுவார்…)”

“அய்யி மொனவத பிறஸ்னே துவ? (என்ன பிரச்சனை மகள்?)”

மகள் விபரம் கூறினாள். சுவாரிசின் பக்கம் போஃன் மௌனமாகியது.

‘சுவாரிஸ் தந்திருந்த காசு பற்றித்தான் கேட்கப்போகிறான்… இப்போது என்ன பதில் சொல்வது?’ என எண்ணி அவரது நெஞ்சிடிப்பு அதிகமாகியது.

மகள் பரிதாபமாக அவரது உறைந்துபோன முகத்தைப் பார்த்தாள்.

ஒரு கணப் பொழுதுதான்… சுவாரிஸ் அபயவர்த்தனாவின் குரல் மீண்டும் கேட்டது. “ஹொஸ்பிட்டல் வியதம்ட மொனவத கறன்னே? (ஹொஸ்பிட்டல் செலவுக்கு என்ன செய்றீங்க)?”

“சில ஒழுங்குகள் செய்தனாங்க அங்கிள்… இன்னும் கொஞ்சம் தேவைப்படுது!”

“எவ்வளவு?”

“ரெண்டு லட்சம் அளவில…”

“ஒயாகே எக்கவுன்ட் டீற்றெய்ல்ஸ் மெசேஜ் கறன்ன புத்தே… மங் சல்லி தான்னங்! (உங்கட எக்கவுன்ட் விபரம் மெசேஜ் பண்ணிவிடுங்க மகள்… நான் காசு போட்டுவிடுறன்!).

அதைக் கேட்டதும் அவருக்கு நெஞ்சு ஒருமுறை விம்மியது. ஆனால் அது சுகமா வலியா என்பது புரியவில்லை.

(ஞானம் இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமதனது – மார்ச் 2021)

விபரக்குறிப்பு இயற்பெயர்: சிவசாமி இராஜசிங்கம்புனைபெயர்: சுதாராஜ்கல்வி: பொறியியற் துறை, மொரட்டுவ பல்கலைக்கழகம், இலங்கை. தொடர்புகளுக்கு:முகவரி: சி.இராஜசிங்கம், (சுதாராஜ்)சீ கிறெஸ்ட் அபார்ட்மென்ட்,189/1, 6/1, மகாவித்தியாலய மாவத்த,கொழும்பு 13, இலங்கை. S.Rajasingham (Sutharaj)Seacrest Appartment,189/1, 6/1, Mahavithyalaya Mawatha,Colombo 13, Srilanka. தொலைபேசி: 0094 112380999 (இலங்கை)தற்போதைய தொலைபேசி தொடர்பு: 00218 913084524 (லிபியா) E mail: rajsiva50@gmail.comrajasinghamsivasamy@yahoo.com படைப்புகள்: (வெளிவந்த நூல்கள்) சிறுகதைத் தொகுப்பு பலாத்காரம் - தமிழ்ப்பணிமனை வெளியீடு -1977…மேலும் படிக்க...

1 thought on “வந்து போகும் வலி

  1. ஓரு குடும்பத் தலைவனை இழக்க விரும்பாத குடும்பம். வாழ்க்கைப் படகில் கவனிக்கப் படாமல் கைவிடப்பட்ட பெற்றோர் மிகவும் குறைவு. அவரவர் தகுதிக்கேற்ப வைத்தியம் செய்தே காப்பாற்றுகிறார்கள். இதன் பின்னணியில் இருப்பது பாசம்! பணத்தை விட பாசத்தை நேசிப்பவர்கள் மிகவும் அதிகம்! இக் கதை தத்ரூபமாக நமக்கு தெரிவிப்பது என்னவென்றால் அதுதான் அன்பின் வலிமை! நல்ல கதை! நல்ல நடை. யசன டர.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *