வந்துவிடு, டுப்புடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 16, 2024
பார்வையிட்டோர்: 388 
 
 

கலியோப் தேன்சிட்டு இருக்கிறது. திடீரென்று அதை என் வீட்டு தோட்டத்தில் காணலாம். எப்பொழுதும் இதன் வருகையை நான் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பேன். ஒரு நாள் வரும். அடுத்த நாளும் வரும். பின்பு பல நாட்களுக்கு காணாமல் போய்விடும். மறுபடியும் ஒருநாள் எதிர்பார்க்காத சமயம் வரும். முன்னுக்கும் பின்னுக்கும் பறந்தபடியேநீண்ட அலகுகளால் தேன் குடிக்கும். சிலநேரம் அப்படியே ஒரே இடத்தில் அந்தரத்தில் நிற்கும். அதன் இறக்கைகள் செக்கண்டுக்கு 80 வேகத்தில் அடிக்கும். ஒரு நாளுக்கு அது தன் உடல் பாரத்திலும் பார்க்க 4 மடங்கு உணவு உண்ணவேண்டும். அல்லாவிடில் இறந்துவிடும். வந்த காரியம் முடிந்ததும் பறந்து போகும். மறுபடியும் அது எப்பொழுது வரும் என்பதை சொல்லவே முடியாது.

மின்னஞ்சல் வந்தது. முன்பின் அறியாத ஒரு வாசகர். என்னுடைய சிறுகதைகள், கட்டுரைகள் நேர்காணல்கள் அனைத்தையும் தான் படித்திருப்பதாக எழுதியிருந்தார். பின்னர் பல நாட்களுக்கு ஒன்றுமே இல்லை. திடீரென்று மறுபடியும் ஒரு கடிதம். பின்னர் நீண்ட மௌனம். எப்பொழுது எழுதுவார், எப்பொழுது நிறுத்துவார் என்பதை ஊகிக்கவே முடியாது. கடிதத்தில் உள்ள பெயரைப் படித்தேன். டுப்புடு என்று எழுதியிருந்தது. ஒரு தமிழ் வாசகருக்கு இப்படி ஒரு பெயரா? அந்த மர்ம முடிச்சு அவர் டெலிபோனில் அழைத்தபோது அவிழ்ந்தது. அவர் தமிழ்நாட்டிலிருந்து கனடாவுக்கு படிக்க வந்த ஒரு மாணவர். அவருக்கு நல்ல தமிழ் பெயர் இருந்தது. அவருடைய தாயார் அவர் குழந்தையாக இருந்தபோது செல்லமாக ’டுப்புடு, டுப்புடு’ என்றே அழைப்பாரம். இவருக்கும் அது பிடித்தது. ஆகவே அந்தப் பெயரில் அவருடைய நண்பர்கள் அவரை அழைக்கத் தொடங்கினார்கள்.

அவர் என்னை நிறைய வாசித்திருந்தார். பல வருடங்களுக்கு முன்னர் நான் எழுதிய ஒரு சிறுகதையையோ கட்டுரையையோ அவரால் நினைவுகூரமுடிந்தது. சில வசனங்ககளை அப்படியே ஒப்பிக்கும் ஆற்றல்கூட அவருக்கு இருந்தது. நானே அவற்றை மறந்துவிட்டேன். என்னை சந்திக்கவேண்டும் என்று சொன்னார். பின்னர் அவர் பலமாதங்களாக என்னை தொடர்புகொள்ளவில்லை. நான் நினைத்தேன் அவர் படிப்பை முடித்துவிட்டு இந்தியா போய்விட்டார் என. உண்மையில் ஒரு வாசகர் எழுத்தாளரைச் சந்திப்பது நல்லது அல்ல. எழுத்தாளர் வாசகரை எப்படியோ கற்பனையில் வளர்த்து சித்திரமாக வைத்திருப்பார். அது சந்திக்கும்போது உடைந்து போகும். எழுத்தாளரைப் பற்றிய வாசகரின் கற்பனையும் அவர் எதிர்பார்த்தது போல இருக்காது. இருவருக்கும் அநேகமாக ஏமாற்றம்தான்.

இரண்டு வாரத்துக்கு முன்னர் அவர் திடீரென அழைத்து தான் ’தரமணி’ திரைப்படத்தை பார்த்துவிட்டதாகச் சொன்னார். எனக்கு அப்படி ஒரு திரைப்படம் வந்ததே தெரியாது. அந்த திரைப்படத்தின் ஆரம்பத்தில் எனக்கு நன்றி கூறப்பட்டதாகச் சொன்னார். எதற்காக என்று கேட்டேன். உங்கள் ’தொடக்கம்’ சிறுகதை கொடுத்த உந்துதலில் இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது என்று சொல்லிவிட்டு 20 வருடத்துக்கு முன்னர் நான் எழுதிய அந்தச் சிறுகதையின் சுருக்கத்தை எனக்குச் சொன்னார். ஆச்சரியப்பட்டுப் போனேன். அப்பொழுது இவர் என்னை சந்திக்கவேண்டும் என்று கேட்டதும் சம்மதம் தெரிவித்தேன்.

சந்திப்பதற்கு ஒரு நாளும் நேரமும் கொடுத்து அவரை அழைத்தேன். ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார். கதவைத் திறந்து அவரைப் பார்த்ததும் தடுமாறிவிட்டேன். 23, 24 வயது இருக்கும். சராசரி உயரம். தீர்க்கமான கண்கள். அரைத்தாடி. அவர் அணிந்திருந்தது சேர்ட்டுமல்ல; டீசேர்ட்டும் அல்ல. சிலப்பதிகாரத்தில் ’மெய்பை’ என்று ஒரு வார்த்தை வரும். அப்படி உடம்பை மறைக்கும் ஒரு சட்டை. கால்சட்டை கரை தேய்ந்து நூல் நூலாகத் தொங்கியது. கனடாக் குளிருக்கு ஒன்றுமே செய்யமுடியாத சப்பாத்தின் ஒருபக்க நாடா கட்டாமல் தரையில் அலைந்தது. என்னைத் திடுக்கிடவைத்தது அவருடைய சடாமுடி. ஊரிலே வீதிவீதியாகத் திரியும் சாமியார்கள்போல சடை வளர்த்து சுருட்டி சுருட்டி இரண்டு பக்கமும் புளியங்காய்கள் போல தொங்கவிட்டிருந்தார். என் அதிர்ச்சியை காட்டாமல் அவரை உள்ளே அழைத்தேன். காலையிலிருந்து அவருக்கு உணவு தயாரிப்பதில் மும்முரமாக இருந்த மனைவி அவரைக் கண்டதும் ஓர் அடி பின்னுக்கு நகர்ந்தார். பிறகு சமாளித்து ’வாருங்கள்’ என்றார்.

ஒரு வீட்டின் நடுக்கூடத்தில் ஒரு கிடங்கு இருந்தால் அந்த வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அந்தக் கிடங்கை தவிர்க்கப் பழகிவிடுவார்கள். நடுச்சாமத்தில் ஒருவரை எழுப்பிவிட்டால்கூட அந்தக் கிடங்கை தவிர்த்து அவரால் நடமாட முடியும். அப்படித்தான் இருந்தது. என் மனைவி மணிக்கு 2000 வார்த்தைகள் உண்டாக்குபவர். குழம்பு கொதிப்பதுபோல வார்த்தைகள் அவர் நெஞ்சுக்குள் துள்ளிக்கொண்டிருந்தன. அவற்றை பூட்டி வைப்பதில் பெரும் சக்தியை செலவழித்தார். என் மனைவியும் சரி, நானும் சரி அந்த இளைஞனுடன் எல்லா விசயமும் பேசினோம். ஆனால் சடாமுடியைப் பற்றி பேசுவதை தவிர்த்தோம். அதைப்பற்றிய கற்பனைதான் என் மண்டை முழுக்க நிறைந்திருந்தது. இந்த இளைஞர் சாமியாராகப் போகிறாரா? அல்லது சாமியார் வகையறாவில் இருந்து மாணவனாக மாற முயற்சிக்கிறாரா? எல்லாமே புதிராகத்தான் இருந்தது. நாங்கள் என்ன பேச விரும்பினோம் என்பதை அந்த இளைஞர்எப்படியோ ஊகித்துவிட்டார்.

அசௌகரியமான ஒரு தருணத்தில், பேச்சு சற்று ஓய்ந்தபோது தானாகவே சொன்னார். ‘இந்த முடியை நான் 14 வயதில் இருந்தே வளர்க்கிறேன்.’ முடி என்று வர்ணித்தது ஆச்சரியமாக இருந்தது. சின்னச்சின்ன பாம்புக்குட்டிகள் தொங்குவதுபோல முடி. கிரேக்க புராணத்தில் கடல் கடவுள் பொசைடொன் மெடூசாவை கற்பழித்துவிடுவார். (சரி, சரி, வன்புணர்வு) அதீனா தேவதை மெடூசாவின் குற்றத்துக்கு தண்டனையாக (கவனிக்கவும் அவள்தான் குற்றம் செய்தவள், பொசைடொன் அல்ல) அவள் முடியை குட்டிப் பாம்புகளாக மாற்றி விடுவாள். அந்தக் கதைதான் ஞாபகம் வந்தது. இவர் என்ன குற்றம் இழைத்தார்? என்றாலும் கேள்வி கேட்டேன்.

‘ எப்படி இந்த சடாமுடி ஆசை வந்தது?’

‘சிறுவயதில் இருந்தே சாமியார்களைப் பார்த்திருக்கிறேன். படங்களிலும் சினிமாவிலும் சடாமுடியை பார்க்கும்போது அதனால் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். காரணம் தெரியவில்லை. 14 வயது தொடங்கியபோது நான் முடி வளர்த்தால் என்ன என்று தோன்றியது. வளர்க்க ஆரம்பித்தேன். தலை முடிதான் ஆரம்பித்தது. தாடி வளர இன்னும் நாள் இருந்தது.’ என் மனைவி கேட்டார். ‘உங்கள் அம்மா ஒன்றுமே சொல்லவில்லையா?’ ‘அங்கேதான் பிரச்சினை ஆரம்பித்தது. அம்மாவுக்கு பிடிக்கவே இல்லை. எத்தனையோ முறை சொல்லிப் பார்த்தார். நான் மனதிலே நிச்சயித்துவிட்டேன். இந்த முடியை நான் தொடப்போவதில்லை. இது என்னுடைய முடி. இதை என் விருப்பத்துக்கு பராமரிக்க எனக்கு முழு உரிமை உண்டு. நான் இருக்கும்வரை இது தன் பாட்டுக்கு வளர்ந்துகொண்டே இருக்கும்.’

’ஆனால் எப்படி சடையாக உருவாக்கினீர்கள். சும்மா முடியை வளரவிட்டால் அது சடையாகிவிடுமா?’ ‘ நாட்டிலே நீங்கள் காணும் சாமியார்கள் அப்படித்தான் சடை வளர்க்கிறார்கள். முடி அதுவாகவே பின்னிச் சடையாகிவிடும். ஆனால் நான் செயற்கையாகத்தான் முயற்சி பண்ணி சடையைஉண்டாக்கினேன்.’

‘எப்படி?’

‘முடியை நீளமாக வாரக்கூடாது. சிக்கெடுக்கக்கூடாது. அவை தானாகவே திரளத்தொடங்கும். அப்போழுது நீங்கள் சடையை தனித்தனியாகப் பிரித்து உருட்டி உருட்டி பராமரிக்கவேண்டும். சிலர் சடையை ஸ்திரமாக்க மெழுகை உபயோகிப்பார்கள். ஒருமுறை சடை தனியாகப் பிரிந்து வளர ஆரம்பித்தால் அது அப்படியே தொடரும். வேறு ஒன்றும் செய்யத் தேவை இல்லை.

’நீங்கள் சடை வளர்ப்பது உங்கள் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னீர்கள். மற்றவர்களுக்குப் பிடித்ததா?’ ‘வீட்டில் மட்டுமல்ல,அந்தக் கிராமத்திலேயே ஒருவருக்கும் பிடிக்கவில்லை. வீட்டுக்கு தூது வந்து சொன்னவர்களும் உண்டு. என்னுடைய தங்கச்சி மட்டும் ஓர் எதிர்ப்பும் காட்டவில்லை. என்னில் அவள் வைத்திருந்த அன்பினால் இருக்கக்கூடும். என் சுதந்திரத்தில் குறுக்கிட அவள் விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

’உங்கள் கிராமத்தில்தானே படித்தீர்கள். உங்கள் கிராமம் எப்படி?’

‘என்னுடைய கிராமத்தைப் பற்றி சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். என்னுடைய 12 வயதுமட்டும் அங்கேதான் படித்தேன். அந்த வயதுக்கிடையில் நான் கிராமத்தில் ஐந்து கொலைகளைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே சாதிக்கொலைகள். மேல்சாதிப் பெண்ணை வேறு சாதிக்காரன் ஒருவன் காதலித்திருப்பான். சிறிது நாள் கழித்து அந்த பெண் இறந்துவிடுவாள். குடும்ப கௌரவத்தை காப்பதற்காக அந்தப் பெண்ணின் பெற்றோரே அவளைக் கொலைசெய்து புதைத்துவிடுவது நடந்திருக்கிறது.’

’போலீஸ்?’

அவர்களும் உடந்தைதான். இப்படியான கொலைகள் வெளியே தெரியவருவதே கிடையாது. என் வீட்டுச் சம்பவத்தை உதாரணம் சொல்லலாம். ஒருநாள் அதிகாலை நாங்கள் திடீரென்று வாடகைக் காரில் புறப்பட்டோம். எனக்கு அப்பொழுது 10 வயது இருக்கும். தங்கைக்கு 6 வயது. பள்ளிக்கூடத்தில் எனக்கு அன்று பரீட்சை இருந்தது. ஒருவருமே அதைப் பொருட்படுத்தவில்லை. எங்கோ தூரத்து கிராமத்துக்கு கார் போய்க்கொண்டிருந்தது. பாதி வழியில் நான் ’எங்கே போகிறோம்?’ எனக் கேட்டேன். அம்மா சொன்னார் ’உன் மாமா முறையான ஒருவர் சாவதற்கு தொடங்கிவிட்டர். அவர் இறப்பதற்கு முன்னர் அவரைப் பார்க்கவேண்டும்.’

சாரதி அப்பாவிடம் விலாசத்தைக் கேட்டான். அவரிடம் பாதி விலாசம்தான் இருந்தது. அவர்கள் வேறு வீடு மாறிவிட்டதால் வீதி பெயர்தான் அப்பாவுக்கு தெரியும், வீட்டுக்கு நம்பர் கிடயாது. ஒவ்வொரு வீடாக விசாரித்து விசாரித்து கடைசியில் வீட்டைக் கண்டுபிடித்தோம். அது வீடு அல்ல பாழடைந்துபோன ஒரு குடிசை. இயற்கை வீட்டுக்கு வெளியே நின்றால் நல்லாயிருக்கும். இங்கே இயற்கை வீட்டுக்குள்ளே புகுந்துவிட்டது. வீட்டு நடுவிலே ஒரு செடிகூட முளைத்து தன் பாட்டுக்கு நின்றது. நாங்கள் போய்ச் சேர்ந்தபோது நிறையக் கூட்டம் சேர்ந்துவிட்டது. மாமா இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். நான் எட்டிப் பார்த்தபோது மாலையோடு, தலைமாட்டில் குத்துவிளக்கு எரிய மாமா கம்பீரமாகக் கிடந்தார். நோய்வாய்ப்பட்டு மெலிந்து உடல் வாடியதாக ஒன்றும் தெரியவில்லை.

மாமாவின் மகளை வேறு சாதிக்காரன் காதலித்தான். அவனைக் கொன்றுவிட்டார்கள். பழிவாங்குவதற்காக மாமாவை அவர்கள் கொலை செய்தார்களாம். ஒருத்தரும் வருந்தியதாகத் தெரியவில்லை. போரில் நெஞ்சில் ஈட்டி பாய்ந்து இறந்துபோன ஒருவரை மெச்சுவதுபோல அவரை புகழ்ந்தார்கள். அன்று இரவு முழுக்க எப்படி பழிவாங்கலாம் என்று திட்டம் தீட்டுவதிலேயே கழிந்தது. அப்பொழுதுதான் முதல் முறையாக சாதி வெறி அந்தக் கிராமத்தை எவ்வளவு ஆட்டியது என்பது எனக்கு ஒருவாறு தெளிவாகியது.

ஒரு நாவல் வாசித்ததுபோல கதை இருக்கிறது. ஏதாவது புத்தகம் சமீபத்தில் படித்தீர்களா?

ஒரு செருப்பு வாங்குவதற்கு நாலு செருப்பு போட்டு சரிபார்ப்பது போல ஐந்து புத்தகத்தை தேர்வுசெய்தால் ஒன்றுதான் சரியாக அமைகிறது. நிறைய நேரம் நல்ல புத்தகத்தை தேடுவதில் போய்விடுகிறது.

அப்படி இல்லை. மோசமான புத்தகம் என்று ஒன்றுமே கிடையாது. ஏதாவது ஒரு நல்ல விசயம் இருக்கும். தேடித்தான் பார்க்கவேண்டும். சதாம் உசைன் தூக்குக்காக காத்திருந்தபோது படித்த கடைசி புத்தகம் ஹெமிங்வே எழுதிய ’கிழவனும் கடலும்’ நாவல். கதை ஒன்றும் பெரியதில்லை. கிழவன் இரண்டு மாதங்களாக கடலுக்கு மீன் பிடிக்கப் போயும் ஒன்றுமே கிடைக்கவில்லை. மற்ற மீனவர் கேலி பேசி கிழவனை ஏளனம் செய்கிறார்கள். இறுதியில் அவன் மூன்று நாட்கள் போராடி மிகப்பெரிய மீனைப் பிடித்து வருகிறான். கரை சேர்ந்தபோது சுறாக்கள் கடித்து மீனின் எலும்புக்கூடுதான் மிஞ்சுகிறது. கிழவனுக்கு வெற்றியா, தோல்வியா? வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் கலந்து கிடக்கிறது. அதுதான் அதற்கு நோபல் பரிசு கிடைத்தது.

ஆனால் ஹெமிங்வே தற்கொலை செய்துகொண்டாரே.

’என்னுடைய அம்மாவின் மரணச்சடங்குக்கு போவதை ஒரு நல்ல உவமையை தேடுவதற்காக நான் தள்ளிப்போடுவேன்’ என்று ஓர் எழுத்தாளர் சொன்னார். ஹெமிங்வே நல்ல எழுத்தை தேடிப்போனவர். அது கிடைக்காததால் தற்கொலை செய்தார். பல எழுத்தாளர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். அது கிடக்கட்டும். இப்பொழுது படிப்பு முடிந்துவிட்டதுதானே. திரும்பவும் உங்கள் கிராமத்துக்கு போக மாட்டீர்களா?

இப்பொழுது போவதாக இல்லை. என் பெற்றோர் என்னை கனடாவில் படிக்க அனுப்பியது காரணமாகத்தான். அவர்களுக்கு நான் வெளிநாட்டில் தங்கியிருப்பது வசதியாக இருக்கிறது. என்னுடைய தங்கச்சியை என்னுடைய கோணலான சிந்தனைகளால் நான் கெடுத்துவிடுவேன் என அஞ்சுகிறார்கள். அவளுக்கு பல சாதகங்களை ஆராய்ந்து மாப்பிள்ளை தேடுவது நடக்கிறது. எல்லோருக்கும் நான் சாதிக்கு எதிரானவன் என்று தெரியும். அத்துடன் சாத்திரம் பார்த்து பெற்றோர் கல்யாணம் செய்து வைப்பதையும் நான் எதிர்ப்பவன். ஆணும் பெண்னும் சந்தித்து காதலித்து திருமணம் நடக்கவேண்டும் என்பது என் விருப்பம். நான் தங்கையின் மனதை கெடுத்துவிடுவேன் என்று அவர்கள் அச்சப்படுகிறார்கள். தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமான பிறகுதான் நான் அங்கே போகமுடியும்.

உங்களை ஒரு Rastafariyan என்று சொல்லலாமா?

அப்படியும் சொல்லலாம். ஏனெனில் மார்க்கஸ் கார்வே சொன்னதை நான் நம்புகிறேன். உங்களுக்கு தெரியும் எத்தியோப்பியாதான் மனித இனத்தின் தொட்டில் என்று. மனிதன் எத்தியோப்பியாவிலிருந்து வெளியேறி உலகம் முழுவதும் பரவினான். கார்வே சொன்னார் ஒரு கறுப்பு அரசன் மக்களின் விடுதலைக்காக முடிசூடுவான் என்றார். அப்படியே நடந்தது. ஹைலி செலாசி அரசபீடத்தில் அமர்ந்தார். பைபிளில் சொல்லியிருக்கும் அரசன் சொலமனுக்கும், ஷீபா ராணிக்கு பிறந்த குழந்தை மனெலிக்கின் வழித்தோன்றல் செலாசி. 2000 வருடங்களாக இந்த அரச சங்கிலி அறாமல் தொடர்ந்தது. ஹைலி செலாசி 225 வது தலைமுறை அரசர்.

ஆனால் அவர் சிறையில் இறந்துவிட்டார் என்று படித்திருக்கிறேனே.

இல்லை இல்லை. அவர் இறக்கவில்லை. செய்திகள் அப்படித்தான் சொல்லும். அவற்றை நம்பக்கூடாது. உண்மையில் அவர் உயிருடன் இருந்து மக்களை வழிநடத்துகிறார்.

பழமையில் எப்படி ஊறமுடியும்? நாகரிகம் என்றால் சம்பவங்கள் முன்னோக்கி அல்லவா நகரவேண்டும்?

முன்னோக்கி என்பது உண்மைதான், ஆனால் அந்த சம்பவம் நடக்கும்போது அது தெரியாது. ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ’வால்காவிலிருந்து கங்கைவரை’ நூலைப் படித்திருப்பீர்கள். அதிலே நாலாயிரம் வருடங்களுக்கு முன்னர் நடந்திருக்கக் கூடிய ஒரு கற்பனை சம்பவம் வரும். ஒருத்தன் தன் குதிரையை கொடுத்து தாமிரக் கோடாலி ஒன்றை வாங்கிவருவான். அவனுடைய பாட்டன் புலம்புவான்; அவனைத் திட்டித்தீர்ப்பான். ஒரு குதிரை இருந்தால் அது பொதி சுமக்கும். அதன் மேல் வருடக் கணக்காக பயணம் செய்யலாம். போருக்கு பயன்படுத்தலாம். அது இறந்தால் ஒரு மாதத்துக்கு உணவாகும். உன் மூளை கெட்டுப்போச்சுது. இளைஞன் ஒன்றுமே பேசமாட்டான். அவனுக்கு தெரியும் ஒரு கோடாலி இருந்தால் நூறு குதிரைகள் சம்பாதிக்கலாம் என்று. நாகரிகத்தின வரலாறு அதுதானே.

ஆமாம், ஞாபகமிருக்கிறது. உங்கள் திருமணம் பற்றி ஏதாவது திட்டம் உள்ளதா?

அப்படி ஒன்றுமில்லை, ஆனால் சாதகப் பொருத்தம் பார்த்து நிச்சயமாக நடக்காது.

அம்மாவை பார்க்க நினைப்பதில்லையா? படிப்பு முடிந்துவிட்டதுதானே.

அது எப்படி? நான் முடி வெட்டவேண்டுமே?

முடி எங்கே போகப்போகிறது. வெட்டினால் மறுபடியும் வளரும்தானே.

வலசை போகும் பறவை எங்கேயாவது பாதியில் மனதை மாற்றி திரும்பியிருக்கிறதா? 14 வயதில் நான் எடுத்த முடிவு இது. வாழ்நாள் முழுக்க என் முடியை வளர்க்கத் தீர்மானித்திருக்கிறேன்.

அம்மா உங்களுடன் பேசுகிறாரா? எழுதுவது இல்லையா?

ஒவ்வொரு நாளும் அவரிடமிருந்து குறுஞ்செய்தி வரும். இதோ என்று செல்பேசியை திறந்து காட்டினார். ற, ர பிழையுடன் அன்று வந்த நாலு வரி செய்தி இப்படி முடிந்திருந்தது. ’வந்துவிடு டுப்புடு.’

இரண்டே இரண்டு வார்த்தைகள்தான். ஆனால் ஒரு தாயின் ஆழமான பிரிவுத் துயரை உணர்த்தப் போதுமாய் இருந்தன.

பேசிக்கொண்டே இருந்தபோது நேரம் கடந்துவிட்டது. காலையிலிருந்து மனைவி சமைத்த உணவை அவர் பரிமாற டுப்புடு நிமிடத்தில் சகலதையும் பிசைந்து உருமாற்றி சாப்பிட்டார். மனைவி கூட்டு எப்படியிருந்தது என்றார். அவர் திடுக்கிட்டுவிட்டார். கூட்டு எங்கேயோ புதைந்துபோய் கிடந்தது. ‘நாங்கள் இலக்கியம் பற்றி உரையாடவில்லை. உங்களிடம் முக்கியமான இலக்கிய விசயம் ஒன்று பேசவேண்டும், மாலை நிச்சயம் அழைக்கிறேன்’ என்றுவிட்டு புறப்பட்டார். அவருடைய தலையில் இரண்டுபக்கமும் சடைமுடி குட்டிகுட்டி பாம்புகள்போல தொங்கின. அவர் தலையை ஆட்டும்போது சூரிய ஒளியில் அவை மின்னின. ஒரு குருவி பறந்த பின்னர் மரக்கிளை சிறிது ஆடுமே அப்படி என் மனசு அசைந்தது. மாலை வந்தது. டுப்புடுவிடம் இருந்து அழைப்பு வரவில்லை. அடுத்த நாள் விடிந்தது. அழைப்பு இல்லை. பல நாட்கள் கழிந்துவிட்டன. சிலவேளை இன்று மாலை அழைப்பார். அல்லது ஒருமாதம் கழித்து அழைப்பார். கலியோப் குருவிபோல, டுப்புடு என்று பெயர் சூட்டப்பட்ட இந்த இளைஞர், இந்த வருடம் முடிவதற்கிடையில் என்னை அழைக்கலாம்; அழைக்காமலும் விடலாம்.

– காலம் 2019.06 (53)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *