வட்டிற்சோறு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2021
பார்வையிட்டோர்: 4,618 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பச்சை மண்’ சிரிக்கக் கண்டால், உள்ளம் கொள்ளை போய்விடுமல்லவா? அப்படித்தான் சுருளாண்டியும் மனம் பறிபோய் நின்றான். ஆனால், அவனை அவ்வாறு ஆக்கியது குழவியா? அல்ல! சம்பான் தளை’ எழுபத்தெட்டுக் குழி நிலத்தில் நடப்பட்டிருந்த நாற்றுக்கள் பசுமை ஏந்திச் சிரிப் பினைச் சிந்திக்கொண்டிருந்தன். அவன் சிந்தை இழந்து நின்றதில் வியப்பு ஏது? வினயந்தான் உண்டா ?

சுருளாண்டியின் அடிப்பாதங்களில் வளை நண்டு நெளிந்து தப்பிய பொறியுணர்வு ஊடுருவியது ; வாய்க்கால் நீர் உடலை நடுங்கச் செய்தது ; ஊதல் காற்று வேறு. நிலத்தின் உள் வாயிலிருந்து வெளியேறி நடந்து, வரப்புக் கரையில் வந்து நின்றான். பிடுங்கி எறியப்பட்டிருந்த களைகள் சில அவனது கால் விரல்களிலே சிக்கிக் கொண்டன ; விடுபட்டு நடையைத் தொடர்ந்தான்.

தோளில் ஏர்க்கலப்பை இருந்தது; புதுக்கோட்டைக் காளைகள் இரண்டும் கைப்பிடிப்பில் அணைந்தன. அவன் பெருமூச்செறிந்தான். புதிதாக வசப்படுத்தி யிருந்த கரம்பைத் துண்டு நிலத்தைச் சீர்செய்து தொளி’ உழுது முடித்த அயர்வின் நெட்டுயிர்ப்பு அது. ‘வானம் பார்த்த பூமி’ என்றாலும் ஒரு போகச் சாகுபடியாவது கிடைக்குமே.

“சுருளாண்டி ! நீ எப்ப வந்தே? ஆளே கண்ணுப் புறத்தாலே தட்டுப்படலையே?”

“வந்து ஒரு கிளமை ஓடிப்பிடுச்சு; வெள்ளாமை அலுவல் ஆளை நெட்டி வாங்கியிருச்சுது; எங்க சேக்காளி பச்சைமலை கடுதாசி அனுப்பியிருந்துச்சு ; ஜெயங்கொண் டத்திலிருந்து ஓடியாந்திட்டேன்!”

“அது சரி; வாய்ச் சேதியை மறந்திட்டு, என்னமோ பேசுறேனே?….. சுருளாண்டி , ஒனக்குச் சங்கதி காதுக்கு எட்டலையா? ஒன் மாமன் ஆவுடைத் தேவர் ரொம்ப செகல் தப்பிக் கெடக்குறாகளாமே?… போய் ஒரு கடுத்தம் காணப் புடாதாங் காட்டி ?… ஆபத்துச் சம்பத்துக்கு ஒண்ணு அரை ஒத்தாசை பண்ணுப்பா , சுருளி!”

குத்துக்கல்லென் நின்றான் சுருளாண்டி ; சாமியாட்டம்’ வந்தாற் போல முகம் அருள் வாங்கிப்போயிருந்தது. “பஞ்சாரம் அண்ணாச்சி, மத்தத் தாக்கல் எதுனாச்சும் இருந்தால் எங்காதிலே போடுங்க ; ஒங்க வயசுக்கு மரியாதை வச்சு ஒங்களோட காலுக்குச் செருப்பாச் செய்யிறேன். ஆனா, என் மாமன் பேச்சை ஒண்டியும் பெரிய மனசு செஞ்சு தூக்காதீக; நான் வாரேன் அடி சாயப்போவுது வூட்டிலே இது மாசம்!…………

அறந்தாங்கிச் சங்கு மார்க்கு நீலச் சவுக்காரம் போட்டுத் துவைத்துக் காயவைக்கப்பட்ட சவுக்கத்தை உதறித் தோளில் ‘உருமாலை போட்டபடி மாட்டுக் கொட்டடிக்குப் பக்கமாக வந்தான் சுருளாண்டி. அலமேலு உப்புப் போட்டுக் கலக்கிக் கொடுத்த ஒரு லோட்டா நீராகாரம்’ அவன் வயிற்றுக்கு இதமாயிருந்தது.

அலஞ்சிரான் காட்டுக் காளி கோயில் உச்சிகாலப் பூஜை மணி அனற் காற்றில் ஓசை கிளப்பியது.

“அலமேலு”

தாபம் அழைத்தது.

“இந்தாலே வந்துப்புட்டேனுங்க, மச்சான்!”

அன்பு பதிலிறுத்தது.

அகப்பையில் சொட்டிய குழம்புடன் அவள் வந்தாள். கனவுச் சுவையும் இனிய நினைவும் களை கட்டித் திரிந்தன.

“வாசனை கமகமண்ணு மணக்குதே?”

சுவை வினாப்போட்டது.

“கொண்டைப் பூவைச் சொல்றீகளா?… ஒங்களுக்கு நாள் முச்சூடும் நைத்தியந்தானாக்கும்!”

வெட்கம் வெட்டிப் பேசியது.

“பூவைச் சொல்லலே, புள்ளே ! கொழம்பைச் சொல்லு றேனாக்கும்!”

கனவு சிரித்தது.

“அதுவுங்களா மச்சான்?… கட்டுமாவடிக் கருவாட்டுக் கொளம்புங்க; வெள்ளைப் பூண்டுப் பல்லு இணுங்கிப்போட்டு சோக்கா ஆக்கியிருக்கேனுங்க. செயங் கொண்டத்தி லேயே வாய் ஓயாமச் சொல்லிக்கிட்டிருந்தீங்களே நீங்க? அதுக்குத்தான் நெனைப்போட ஆக்கி யிருக்கேனுங்கள் மச்சான்!”

“மசக்கைக் காரவுகளுக்கு இது உண்டனப் புடிக்கும்”

நாணம் நகை பூத்தது!

“எனக்குக் கை வேலைங்க காத்துக் கெடக்குது. ஓங்க அப்பாருக்கும் ஆத்தாளுக்கும் கருவாட்டுக் கொளம்பு ஒரு வேளைக்குக் கொண்டு போய்க் கொடுக்க வேணும். போன சந்தைக் கெடுவப்பவே சொன்னாங்க!”

“ஒவ்வொரு தடவையிலேயும் ஊருக்குப் புறப்படுறப்ப, மருமகப் பொண்ணுக்குத் துண்ணூரு’ பூசி, பத்து, இருபது பணமும் போட்டு அனுப்புற மாமனுக்கும் மாமியாருக்கும் இப்பிடி உபசாரமும் விருந்து வைபோகமும் நடந்துக்கிட்டி ருக்குது!… பலே. பலே!”

அலமேலு அழகு கூட்டி நகைத்தாள்.

“அலமேலு, தபாலாபீசு வரைக்கும் போயிட்டு ஓடி யாரேன். ஜெயங்கொண்டம் லாவாரத்துக்கு ஒரு அம்பது ரூபா அனுப்பிச்சிடணும்; தாக்கல் வந்திருக்குது!”


காத்தாயி அம்மன் சந்நிதியிலிருந்து மடங்கியது ஒற்றை யடிப் பாதை. அறுவடை முடிந்துவிட்டால், களத்துமேடு எழில் குலுங்கி நிற்பது இயற்கைதானே? திரும்பிய சுரு ளாண்டியின் பார்வை நேர் திசையில் அம்பு போலப் பாய்ந்த பொழுது, தீயை மிதித்தவன் மாதிரித் துடிதுடித்தான்; காலில் பட்ட சூடு மண்டை யோட்டில் வந்து தாக்கியது போன்று வேதனைப் பட்டான் ; பற்களை ‘நறநற வென்று கடித்துக்கொண்டான் ; ‘இப்பத்தான் வழியிலே என்னோட புத்தி சத்தியைப் பத்தி குறுணி பதக்கிண்ணு பேசினான் ஒருத்தன். அதுக்குள்ளாறவே என்னோட கண்ணிலே மண்ணைத் தூவிப்போடப் பார்த்திட்டாளே?…..ம்….. வரட்டும்!’ — வழி நடந்தான்!

கும்பகோணம் வட்டிலில் ‘மட்டை அரிசிச் சோறு படைத்திருந்தாள் அலமேலு. வெஞ்சனத் தட்டில் கரு வாட்டுக் குழம்பும் துணுக்குகளும் இருந்தன. ”திறமாச் சாப்பிடுங்க, மச்சான்……. பாவம், ஊருக்குப் பயணப் பட்டாத்தான், நாளைக்கு ஒரு ஊருக்கும், வேளைக்கு ஒரு தெருவுக்கும் வெங்கலப் பாத்திரங்களைத் தூக்கிச் சுமந் துக்கிணு அலைய வேண்டி யிருக்குமே …!” என்றாள் அவள்.

நெருஞ்சி முள் தைத்தது.

மனக்கண்ணில் விளையாட்டுக் காட்டிய இச் சம் பவத்தை மறந்தான். நின்றவன் நடந்தான். என் மனசுப்படி நடக்க வேண்டிய அலமேலுவா இப்படி நடக்கத் துணிஞ்சிருக்கா?……. நான் படிச்சுப் படிச்சுச்
சொல்லி யிருந்ததைக் கூட யில்லே அவ சட்டை பண்ணக் காணோம்’ – நடையில் ஆத்திரம் கனிந்தது. இலுப்பை மரத்தின் ஒண்டலில் ஒளிந்து கொண்டான் அவன் ; எட்டிப்பார்த்தான் ; பிறகு ஓட்டமாக ஓடினான்.

மறுகணம், “ஆ…!” என்னும் அலறல் கேட்டது. அலமேலுவின் கைப்பற்றுதலில் இருந்த ஒரு சட்டிச் சோறும் ஒரு கிண்ணக் கருவாட்டுக் குழம்பும் மண்ணில் சிதறின.

தன்னோட அறுபதுக்கு அறுபது தேள்வைக்கே சொந்த மாப்பிள்ளையை, கேட்பார் பேச்சைக் கேட்டுத் தள்ளி வச்ச உன் அப்பன் எனக்குப் பகையாளி ஆனதும், ஒனக்குந்தானே எதிரி ….? இப்பக் கை செத்துப்போச்சு தின்னா , அதுக்காக நான் சம்பாரிச்ச காசிலே நீ சோறு வடிச்சுக் கொளம்பு ஆக்கிக் காணாமக் கொண்டுபோய் உன் அப்பன் ஆத்தாளுக்குக் கொடுப்பியாக்கும்…? என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் குளம்பு கொண்டு போறதாச் சொன்னது எல்லாம் இந்த நாடகம் ஆடறத்துக்குத் தானா?”

ஒவ்வொரு வினாவிற்கும் ஒவ்வொரு அறை அலமேலு வின் கன்னத்தில் கொடுத்தான் சுருளாண்டி. அவன் அங்கிருந்து கிளம்பினான்; அப்போது, சோகமே வடிவமாக நின்ற அலமேலு பெற்றோர்களைக் காணத் தவறவில்லை!


பிணக்கு!

அலமேலுவும் சுருளாண்டியும் பேசுவது இல்லை. அன்றைக்கு இருபது நாழிகைப் பொழுதிலிருந்து இந்த மாற்றம் ! அவளுக்குக் காய்ச்சல் வந்துவிடும் போலிருந்தது. கோரைப் பாயில் சுருண்டு படுத்தாள் அவள். அடுத்த கிளமை பொங்கலுக்குள்ளாற நான் பெத்துப் பிளைச்சு புதுசு கட்டிக்கிடுவேனா , ஆத்தா , மவராசி!……’

கையெழுத்து மறையும் வேளை அண்டியது.

வெளிவாசலுக்கும் உள்ளுக்குமாக அலைந்துகொண் டிருந்தான் சுருளாண்டி. நம்பளே வலியப் பேசலாமா? பாவம், இன்னிக்கோ நாளைக்கோ புளி’ குடிக்கப்போறவ … நான் பேசறதாவது?… மாட்டேன் …. வசதியா இருந்தப்ப, மாப்பிள்ளை கண்ணுக்குத் தெரியலே; இப்ப வேணுங்கிற மகளோட அருமை கூட அந்த நாளையிலே அந்த ஆம் பளைக்குப் புரியலையே…….. எனக்கு வேண்டாதவங்க யார் பேச்சை யெல்லாமோ கேட்டுக் கேட்டு அம்பலக் கூத்து ஆடினாரே மனுசன்!… சொத்துப் பத்து, நிலம் நீச்சு அம்பிட்டும் சொப்பனமாட்டம் பூட்டுதே…….. என்னை விரோதம் பண்ணிக்கிடாம இருந்திருந்தா, ஐயாயிரம் ரூபா புரோநோட்டைக் காலாவதி’ போக விட்டிருப்பேனா? ஆயிரம் செலவானாலும் தாவா போட்டு ஒரு கை பார்த்திருக்க மாட்டேனா?’

தந்தையும் மகளும் சுருளியாண்டியின் நெஞ்சுரத்தில் பாதம் பதித்து விளையாடினர்.

‘ஹரிக்கேன் விளக்கை ஏற்றி வைத்தாள் அலமேலு.

“அலமேலு…….” என்று விளித்தான், உரிமை கொண்டவன்.

அவள் சமையற் கட்டுக்குப் போய்விட்டாள்; மேனி நடுங்கியது.

வந்த ஆத்திரத்தைப் பற்களிடைப் போட்டு நசுக்கிய வண்ணம், அங்கிருந்து அவன் வெளியேறப்போன தருணத்தில் அவனுடைய தாயும் தந்தையும் மருமகளைப் பார்த்துப்போக நுழைந்தார்கள்.

“வாயும் வயிறுமா இருக்கிறப்பவா அதைப்போட்டு இப்பிடி நொறுக்கோணும்?… நாலு காசு சம்பாரிச்சிப் பிட்டா மட்டும் போதுமா?… போய் அதைச் சமாதானப் படுத்து!” என்று ஆக்கினை பிறப்பித்தார் அவனுடைய தகப்பனார்.

ஆனால் கருமையின் சிரிப்பிலே உண்மையின் வெண்மை புலப்பட முடியாதல்லவா?

சினிமாக் கொட்டகையை நாடி நடந்தான் சுருளாண்டி. சாயாக் கடையை நெருங்கினான். அவன் பெயர் அடிபடு வதைக் கேட்டதும், ஒதுங்கி நின்றான். ‘ ரத்தம் செத்துப் போய்க் கையிலே மடியிலே காசு பணமும் வத்திப்பிடுச்சு தின்னா , அப்பாலே மாமனாவது மாப்பிள்ளையாவது?…… இந்தாத்தான் கைக்கு மெய்யா ஆவுடைத் தேவரையும் சுருளியாண்டியையும் கண்ணுக்கு முன்னாடி கண்டு கிட்டிருக்கோமே?…..”

சுருளாண்டிக்குத் தலை வலித்தது. ‘எனக்குச் செஞ்ச அநியாயத்துக்குப் பழிவாங்காம இருப்பேனா? யாரோ பைத்தியக்காரன் உளறுகிறான்’ என்று எண்ணித் தொடுத் தவனாக, ஆறணா ‘டிக்கெட் வாங்கிக் கொண்டு பெஞ்சு ஒன்றில் அமர்ந்தான்.


ஆந்தையின் கண்களை இருள் மூட முயன்றது. முடியுமா?

தாராடி கோயில், சர்க்கார் கிணறு, திநாளூர்ப் புனித பூமி, செல்வத்தேவன் ஊருணி, ஆகியவற்றைக் கடந்து. கடைசியாக மடத்துக் குளத்தின் உயரமான கரையில் ஏறிக் கொண்டிருந்தான் சுருளாண்டி. ”ஐயையோ!…. யாருமே ஒத்தாசைக்குக் கெடையாதா?… மாரியாத்தா ….. ஐயையோ!” என்ற கூப்பாடு கேட்டது. குரலுக்குத் திரை போடும் சக்தி இருளுக்கு ஏது? அழுதவளின் உருவம் சுருளியாண்டிக்குத் தெரியவில்லை. ஓடிவந்தான். நீர் முட்டிக் கிடந்த குளத்தில் யாரோ வெறியுடன் இறங்கிச் செல்வதை அவன் காதுக்கள் ஒலிப்பதிவு செய்து எடுத்துக் காட்டின. வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு சுருளாண்டி தண்ணீருக்குள் நீச்சலடித்தான். மூழ்க முனைந்த உருவம் விளங்கவில்லை; கைகளைப் பற்றிக் கரைக்கு இழுத்து வருவதற்குள், பகீரதப் பிரயத்தனமாகி விட்டது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது!


தெப்பமாக நனைந்த உடையுடன் இருளைக் கிழித்துக் கொண்டு ஓட்டமாக ஓடி வந்தான் சுருளாண்டி. சற்றுமுன் குளத்தில் விழுந்து உயிரைப் போக்கிக் கொள்ள எத்தனம் செய்த உருவத்தைக் காத்த போது, ‘எம்பேரிலே கோவப் பட்டு இது கணக்கிலே என்னோட பெண்சாதியும் செஞ்சி ருந்தா என்ன ஆகிறது?’ என்று தோன்றிய ஐயமே அவனை அப்படி ஓடத் தூண்டியது. வீட்டினுள் நுழைந்து பார்த்த போது, அரவம் இல்லை. அகல் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. நுழைவாசலில் பாதம் பதித்தான் அவன். “….ஸ்! அப்பா!… உங்க அந்திய காலத்திலே என் கையாலே உங்களுக்கு ஒரு பருக்கைச் சாதம் கூடக் கொடுக்கிறதுக்குப் புண்ணியம் செய்யலியே அப்பா? நான் பெத்துப் பிளைச்சு உங்க கண்ணிலே முளிப்பேன்னு எனக்குத் தோணலியே, அப்பா !….”

ஓர் அரைக்கணம் சுருளாண்டி சிலையானான். பிறகு, சிலையில் ‘மனித உணர்ச்சி’ ஊறியது; பகைமை கடந்த பாசம் பிறந்தது ; கண்களில் நீர் பிறந்தது.

“அலமேலு, என்னை மன்னிச்சுப்பிடு. இந்தாலே நொடியிலே போய் உங்க அப்பாரு காலிலே விளுந்து. அவுங்களைக் கையோடவே அழைச்சுக்கிட்டு ஓடியாறேன்!….” என்று விம்மினான் அவன்.

அலமேலுவின் விழிகள் திறக்கவில்லை; ஆனால் விழிநீர் வழி திறந்துகொண்டது. “அப்பா!…. அப்பா!” என்று புலம்பினாள் அவள்.

“மாரியாத்தா, என் பெண்சாதியையும் புள்ளையையும் காப்பாத்து, தாயே!” என்று ‘நேந்து கொண்டு’, தன் மாமனார் ஆவுடைத் தேவரை அழைத்து வரத் திரும்பினான் சுருளாண்டி,

அதுசமயம், நாலைந்துபேர் யாரையோ சுமந்து வந்ததைக் கண்டான் அவன். அவன் காப்பாற்றி, ஆட்கள் சிலரை ஏவி வீட்டில் சேர்ப்பிக்க வேண்டிக்கொண்ட அந்த உருவத்தை ஏன் இங்கே கொண்டு வருகிறார்கள்?

‘லாந்தர்’ வெளிச்சம் பரவியது. தன்னுடைய மாமியார் வருவதைக் கண்டான் சுருளாண்டி. விழித்து நோக்கினான். தூக்கி வந்த உருவத்தைக் கண்டதும், “‘மாமா!” என்று ஒரு குரல் உந்திக்கமலத்திலிருந்து புறப்பட்டது. பகைமையும், பகைமையும் பழி வாங்கிக்கொண்டு விட்டனவோ? இத்தகைய முடிவின் விளைபொருள் தான் அன்போ ?

ஆவுடைத் தேவர் நடையில் கிடத்தப்பட்டார். வேப்பெண்ணெய் உள்ளங்காற் பாதங்களில் ஆவி பறக்கத் தடவப் பட்டது.

“என் கஷ்டத்தோட கஷ்டமாய் உங்க ரெண்டு பேரையும் இத்தனை நாள் காப்பாத்தின் நான் சொச்ச நாளைக்கும் அப்படியே செய்யமாட்டேனுங்களா , முத லாளி?… நீங்க எதுக்குக் குளத்திலே விளுந்து சாக எத்தனிக் கணும்? அந்த நாளையிலே உங்க உப்பைத் தின்ன இந்த ஏழை ஒருகாலும் நன்னி கெட்டுப் போயிடமாட்டானுங்க, ஐயா”

யாரோ ஓர் ஏழை, மனம் விம்மிப் புலம்பியழுதான்!

சுருளாண்டி விழிப்புற்றான்; உணர்வு பெற்றான் ; மனை வியைத் தொட்டு எழுப்பினான் அவன் ; அவளுடைய உடல் தணலாய்ச் சுட்டது கற்பைப்போல! “அலமேலு, உங்க அப்பா வந்திருக்காங்க. பாரு!” என்றான், சுருளாண்டி.

அலமேலு நயனங்களை விலக்கினாள். “அப்பா! அப்பா!” என்றாள்.

ஈரத்துணிகள் ஒதுங்கின! சுருளாண்டி சமையற்கட்டினுள் நுழைந்தான்; கை வைக்கப்படாமல் இருந்த அலமேலுவின் ‘வட்டிற் சோற்றை’ எடுத்து வந்தான்; கொண்டவளிடம் நீட்டினான்; கருவாட்டுக் குழம்பு எட்டு ஊருக்கு மணத்தது!

“அலமேலு , நீ எளுந்திருச்சி உன் கையாலேயே உங்க அப்பாருக்குச் சாதம் பிசைஞ்சு கொடு. நடந்ததை எல்லாரும் மறந்துப்பிடுவோம். நீ பெத்துப் பிழைச்சதும், உங்க அப்பாவையும் ஆத்தாளையும் நம்ப கூடவே கூட்டிக் கிட்டு ஜெயங்கொண்டம் போயிடலாம். அப்பதான், எனக்கு நல்ல புத்தி வந்ததாக என்னைப் பெத்தவங்களும் ஒப்புக்கிடுவாங்க!…” என்று விம்மினான் சுருளாண்டி. விழி நீருக்கு மனச்சாட்சியைப் புனிதமாக்கும் சக்தி எப்படித் தான் உருவாகிறதோ !

“அப்பா!” – நீர் மல்க, வட்டிற் சோறும் கையுமாக நின்ற மகளைக்கண்டு, இதழ் விலக்கினார் பெரியவர்; “அலமேலு!” என்ற தந்தையின் பாசங்கொண்ட உயிரின் குரல் எங்கும் எதிரொலி பரப்பியது!

– சிறுகதைக் கோவை (பதின்மூன்று சிறந்த எழுத்தாளர்களின் உயர்ந்த ஓவியங்கள்), முதற்பதிப்பு: மே 1961, எஸ்.ஆர்.சுப்பிரமணிய பிள்ளை பதிப்பகம், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *