கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 1,718 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த எழுபத்திநான்கு வயதில் தான் தோக் செங் மருத்துவமனையில் வாசம் எனக்கு. நோய் என்ன, சொல்லிக் கொண்டா வரும்!? எத்தனைக்கெத்தனை, ஒரு தலை வலி என்றும் மருந்து என்றும், அறியாமல் இருந்தேனோ, அத்தனைக்கத்தனை இந்த நான்கு வருடங்களாய் சேர்த்து வைத்து, ஒன்று மாற்றி ஒன்று பட்டுக் கொண்டிருக்கிறேன். இன்னும் எத்தனை நாளோ! காமாட்சி, அதான் என் மனைவி, ஹூம், ஒருவரையும் கஷ்டப் படுத்தாமல் போக ஆசைப்பட்டு, அதே போல தூக்கத்திலேயே போயும் சேர்ந்து விட்டாள்.

சன்னல் வழியாக வானம் தெரிய, அதுவும் என்னைப் போல் சுறுசுறுப்பில்லாமல் மப்பும் மந்தாரமுமாய்க் காட்சி அளிக்கிறது. மழையின் அறிகுறிகளை வானம் துல்லியமாகக் கூறியது. மருந்து வாடை பழக இன்னும் இரண்டு நாளாகும் போலிருந்தது. வீட்டுக்கு எப்போது போவோம் என்று முதல் நாளே குழந்தையாய் மனம் அடம் பிடித்தது. இம்முறை சிகிச்சை எத்தனை நாளாகும் என்று சொல்வதற்கில்லை என்று மருத்துவர் சூசகமாகச் சொல்லி விட்டிருந்தார்.

தாதி கொடுத்த மருந்தும், நினைவுகளின் தாலாட்டுமாய் எப்போது உறங்கினேனோ தெரியவில்லை, குமாரின் குரல் கேட்டுத் தான் கண் விழித்தேன். “இப்போ உடம்பு எப்படிப்பா இருக்கு?”, கையில் கொண்டு வந்த பையை மேசையில் வைத்த படியே கேட்கிறான்.

“மருந்து தான் தராங்களேப்பா. நேத்திக்கி இருந்ததுக்கு இன்னிக்கு ரொம்பவே பரவால்லன்னு தான் சொல்லணும். ஆமா, உனக்கு இந்த முறையாவது வேல கிடைச்சிடுமா? இன்டர்வியூல நல்லா தானே செஞ்ச? ஏதும் தகவல் சொன்னாங்களா?”

“இதுவும் கிடைக்கும்னு எனக்குத் தோணலப்பா. நாளைக்கி போகப் போற கம்பெனியாவது சரியா வருமான்னு பாக்கலாம். படிப்பு அதிகம், தகுந்த சம்பளம் தர முடியாதுன்னு எல்லா கம்பெனியிலயும் தயங்கறாங்க. எல்லா இடத்திலேயும் பொருளாதார நெருக்கடியாத் தானே இருக்கு. அவங்களச் சொல்லியும் பயனில்ல.”

“அப்ப செலவுக்கெல்லாம் என்னப்பா செய்வ?”

“அண்ணன் கொஞ்சம் பணம் கொடுத்தாருப்பா. ஒரு டையாலிஸிஸுக்கு பணம் இருக்கு. அப்புறம் தேவைன்னாலும் இருக்கு. ஆனா, பத்தாது. இன்னும் வேணும். அக்காவக் கேக்கணும், என்ன செய்யறதுன்னு தெரியல. பார்ப்போம்”

“உங்கக்காவுக்கு வேல இருக்கு. ஆனா மாப்பிள்ளைக்கு வேல போயி ரெண்டு மாசமாச்சே குமார். அவங்களே எப்படிச் சமாளிக்கிறாங்களோ என்னமோ, இதுல நாம் வேற எப்படி எதிர் பாக்க முடியும்?” – எனக்குக் கவலை அதிகமானது.

“ம், தெரியும்பா. இருந்தாலும் சும்மா கேட்டுப் பார்ப்பமேன்னு தான் கேட்டேன். என்னோட ஃபிரெண்டு கிட்ட கூட சொல்லி வச்சிருக்கேன்பா பணம் கிடைக்கும்.”

என் முகத்தில் தெரிந்த கவலையை உணந்த குமார், “எப்படியும் சமாளிப்பேன். அதுக்காக நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க”, என்கிறான். “டையாலிஸிஸ்னா சும்மாவா, பணம் நிறையா தான் ஆகும். ஓரளவுக்கு ‘மெடிசேவ்’ என்னோடது உபயோகிக்கலாம். ஆனா, நீங்க கவலையே படாதீங்க. நான் பார்த்துக்கறேன். இப்ப, உங்களுக்கு ஏதும் வேணும்னா சொல்லுங்க. வாங்கிட்டு வரேன். எதுவும் வேணாம்னா நா கிளம்பறேன்.”

“எனக்கு ஒண்ணும் வேணாம்பா. நீ வீட்டுக்குப் போய் குளிச்சி சாப்புடு. மூஞ்சியப் பாத்தாலே களைச்சிருக்கன்னு தெரியுது. போப்பா, வீட்டுக்குப் போ. வண்டிய வேகமா ஓட்டாதே”, சரியென்று தலையை ஆட்டிய படியே கிளம்பிச் சென்று விடுகிறான் குமார்.

இவன் இப்படித் தனக்குக் கல்யாணம் வேண்டாம், கல்யாணம் வேண்டாம் என்று சொல்லியே நாற்பத்தியிரண்டு வயதாகியும் எதிர் காலச் சிந்தனை இல்லாமல் இருக்கிறான்.

மருத்துவமனை வாசலில், வாகனங்களின் வரவு அதிகரித்திருக்கிறது. ‘சர் சர்’, என்று ஒரே வாகன இரைச்சல்! இந்தச் சன்னல் மட்டும் வேடிக்கை பார்க்க வசதியாயிருக்கிறதால், எனக்கு நேரம் போகிறது. இல்லையென்றால் என் பாடு படு திண்டாட்டம் தான்.

கதவு தட்டும் ஓசை, யாராயிருக்கும் என்று என்னைத் திரும்ப வைக்க, கதவைத் திறந்த வண்ணம் என் நண்பன் பழனியப்பன், அவனுடைய கவர்ச்சிச் சிரிப்பை உதிர்த்தபடி நுழைகிறான்.

“வா, பழனி, எப்படியிருக்க?”, மகிழ்ச்சியில் நான் கேட்க,

“இந்த வயசுக்கும், உனக்கு குசுபுக்கொண்ணும் கொறச்சலில்லப்பா. நா கேக்க வேண்டிய கேள்விய, நீ கேக்கறயா? ம், சரி சொல்லு, நீ எப்படி இருக்க?”, சிரித்தபடியே பழனியப்பன் அதிரடியாய் ஆரம்பிக்கிறான்.

“நாளைக்கிக் காலையில டையாலிஸிஸ். குமார் உள்ளங்கையில என்னைத் தாங்கறான். ஆஸ்பத்திரியிலயும் நல்லா கவனிக்கிறாங்க. எனக்கென்ன, நல்லா தான் இருக்கேன்.”

“வாய் தான் சொல்லுது. முகத்துல ஒரு நிம்மதியையும் காணமே. உடம்புன்னா சீக்கு வராமயேவா இருக்கும்? மிஷினா என்ன? சிறுநீரகமும் இத்தன வருஷம் உனக்காகவே உழைச்சுருக்கு. உடம்புன்னு இருந்தா இதெல்லாம் சகஜமப்பா. நல்ல மகனப் பெத்திருக்கன்னு நெனச்சி சந்தோஷப் படு,”

“ப்ச், அதில்லப்பா, குமார நினைச்சுத் தான் கவலயெல்லாம். செலவையெல்லாம் எப்படிச் சமாளிப்பானோ, பாவம். வேலயும் இல்லையே. டையாலிஸிஸ் அது இதுன்னு ஏகத்துக்கு செலவாகும் போல இருக்கே. அவனுக்கும் வேல போயி நாலு மாசமாச்சி. ம், இன்னோண்ணு இன்னும் கெடச்ச பாடில்ல.”

“என்ன நீ ? உன்னோட உடம்பப் பாத்துக்காம, ம்? சும்மா கவலப் பட்டுக்கிட்டு. குமாருக்கு மட்டுமா வேல போச்சி? போச்சி? ஊரே, உலகமே நெருக்கடியில சிக்கித் தவிச்சி கிட்டிருக்கு. நீ என்னடான்னா இதுக்குப் போயி கவலப்பட்டுக்கிட்டு, உன்னோட வயசுக்கும் அனுபவத்துக்கும் இதுகூட புரியலேன்னா, சின்னஞ் சிறுசுகளுக்கு யாரு புரிய வைக்கிறது? ம், இல்ல தெரியாமதான் கேக்கறேன், இந்த நெருக்கடி நிரந்தரமா? கலைஞ்சு போகப் போகிற மேகம்பா இது. குமாருக்கென்ன, நல்ல திறமை, படிப்பு இருக்கு. நீ ஏன் தான் இந்த மாதிரி கவலப் படறையோ?’

“சரி, வேல கிடைக்கும்னே வச்சுக்குவோமே. இப்படிக் கல்யாணமே வேணாம்னு பிடிவாதம் பிடிச்சிக் கிட்டு, இந்த நாலாம் மாசம் நாப்பத்தி ரெண்டு வயசாகுது. தலையில நரைச்ச முடிய மறைக்க சாயம் போட்டா ஆச்சா? கொஞ்சம் கூட கல்யாணா நெனப்பேயில்லாம இருக்கறது தான் எனக்கு பெரும் கவலையா இருக்கு. அவங்கக்காவும் சொல்லிச் சொல்லி சலிச்சிட்டா. அவங்கம்மா, புண்ணியவதி தன் பங்குக்கு அழுது சிரிச்சி படாத பாடு பட்டுட்டு, பாவம் போயும் சேர்ந்துட்டா. வேற எதுக்கில்லைனாலும், வயசான காலத்துல அவனுக்கும் ஒரு ஆதரவு வேணுமே. அவனும் பல நேரங்கள்ள, தனிமையில தவிக்கறான் தெரியுமா. என் கண்ணு மூடறதுக்கு முன்னாடி இவனுக்கு ஒரு கல்யாணத்த,” உணர்ச்சிகள், நான் தொடங்கிய வாக்கியத்தை முடிக்கவிடாமல் வதைத்தன. கண்ணீரைக் கட்டுப் படுத்திப் பார்த்துத் தோற்றேன்.

“அய்யோ என்னப்பா இது. கதிரேசா, வர வர ரொம்ப உணர்ச்சி வசப்படற, ஒண்ணு மாத்தி ஒண்ணா யோசிச்சு யோசிச்சு கவலப்படறியா? என்னப்பா நீ? நான் என்னோட மச்சானோட கொழுந்தியா மகளப் பத்தி வேணா அவங்க வீட்டுக்காரங்களோட பேசிப் பாக்கறேனே. அட, சும்மாப் பேசிப் பார்ப்போம். முடிஞ்சா சந்தோசம். இல்லேனா வேற இடம் இருக்கவே இருக்கு. நீ எதுக்கும், குமார் கிட்ட பேசி வை. இதெல்லாம் நம்ம கையில இல்லைப்பா. ஏதோ முயற்சி வேணா செய்யலாம். ஆனா ஒண்ணு, உலகத்துல நம்பவே முடியாததெல்லாம் நடக்குது. குமார் கல்யாணம் என்ன சாதாரண சுண்டக்கா விஷயம். நடத்த முடியாதா என்ன?”

“ஹா ஹா, சரி, சரி நீ அவங்க கிட்டக் கேளு. நானும் மெள்ளப் பேசிப் பாக்கறேன். உங்கூட பேசினதுல மனசே லேசானது போல இருக்கு, வந்ததுக்கு ரொம்ப நன்றிப்பா வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொல்லுவாங்க. எனக்கு இனிமேல் தினமும் நீ வந்தா டையாலிஸிஸ் செலவெல்லாம் மிச்சமாகும் போல இருக்கு.”

“ம், அவசர வேல ஒண்ணு இருக்கு. வரேன், நாளைக்கிப் பாக்கலாமா?”, என் தோளில் தட்டி, ‘பிராண்டு’ சிரிப்பைத் தந்துவிட்டு கையை ஆட்டி விட்டு போய் விடுகிறான்.

பீடிகையெல்லாம் முடிந்து, மழை பெய்து கொண்டிருந்தது சன்னல் வழியாகத் தெரிந்தது. இளமைக் காலத்தில், நான் ஆடிய ஆட்டங்கள் எத்தனை எத்தனை! குற்றம் கண்டு பிடிக்கவே, என்மனைவி காமாட்சியை நான் அக்காலத்தில் சொல்லம்புகளால் எத்தனை சாடியிருக்கிறேன். பெரும்பாலும் அறிந்தேயும், அறியாமல் கொஞ்சமும் என்று நிறைய. பின்பலமாய் என் அம்மாவும் இருக்கவே, என் ஆதிக்கம் அளவுக்கதிகமாய்த் தான் காமாட்சியைக் கஷ்டப் படுத்தி விட்டது.

தாதி வந்து சூடாகப்பால் ஒரு டம்ளரில் கொடுத்து விட்டுப் போய் விடுகிறார். பாலைக் குடித்து விட்டு சாய்ந்த வண்ணம் படுக்கையில் உட்காருகிறேன். நினைவுகள் நிகழ் காலத்திலிருந்து விடை பெற்றுக் கடந்த காலத்திற்குத் தாவுவதைத் தடுக்காமல் லயிக்கிறேன். அதில் ஒரு அலாதி சுகம் தான் எனக்கு.

முதல் இரண்டு பிள்ளைகளுக்கும் இருந்த அளவு, குமார் பிறந்த போது காமாட்சிக்கு தாய்ப்பால் சுரக்கவில்லை. எனக்கு அவளைத் துன்புறுத்த ஒரு சின்ன விஷயமே போதுமானதாய் இருந்தது. ஆகவே இதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு காமாட்சியைத் துன்புறுத்த ஆரம்பித்தேன். மற்ற இருவரும் பத்து மாதம் வரை தாய்ப்பால் குடித்தனர். குமாருக்கு அவளால் மூன்று மாதம் கூடக் கொடுக்க முடியவில்லை. குமார் வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சையில் பிறந்திருந்தான். ரத்த இழப்பு அவளுக்கு அதிகமாய் இருந்தது. உடல் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருந்தது. சூழ்நிலை அப்படியிருந்ததே தவிர அவளுக்குத் துளியும் வஞ்சனையில்லை. அதை அறிந்திருந்தும், அவளைத் துன்புறுத்தி மகிழ்ந்து பழகிய எனக்கு புத்தி கெட்டிருந்ததே.

ஆறேழு வயதில் கணக்குப் பாடத்தில் குமார் தடுமாறியதைப் பார்த்து மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு, ‘நீ தாய்ப் பால் கொடுக்காததால் தான்’ என்று அநியாயமாய் குற்றம் சாடினேனே. மூத்தவன் கணக்கில் ‘படு கெட்டி’ என்பதைக் காட்டி காமாட்சியின் மனதை நோகச் செய்தேன். காமாட்சி எப்படித் துடித்தாள் என் ஏச்சுக்களைக் கேட்டு! நாட்கணக்கில் நினைத்து நினைத்து அழுதாள். என் குற்றச்சாட்டை, குமார் தன் நினைவில் வைத்திருந்ததை நான் அறிந்த போது, அவனுக்கு பதின்மவயது. எதிர் பாராத அதிர்ச்சி! அந்த அதிர்ச்சி தந்த குற்ற உணர்வு, கட்டை வேகும் வரை வரும் போலிருக்கிறதே!

பால் சுரப்பது தாயின் கையில் இல்லை என்பதும், பிள்ளைகளில் தந்தையாவது பேதம் காண்பிக்கக் கூடும், தாய் நிச்சயம் காண்பிக்க மாட்டாள் என்று தெரியாதவன் இல்லை. அத்துடன், புத்திசாலித்தனம் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு வகையில் இருக்கும் என்பதையும், அறிந்தவன் தான். அப்போது இருந்த இளமையும்

முறுக்கும் காமாட்சியை புண்படுத்திப் பார்க்கச் சொன்னது. அதற்கு இன்று வரை காரணம் என்னால் கண்டு பிடிக்க முடிந்ததில்லை.

பல முறை, மூன்று பேரில் குமார் தான் மிகவும் நன்றாகப் படிக்கப் போகிறான் என்று கூறிக் கொள்வாள். அப்போதெல்லாம் அவளை நான் அலட்சியப் படுத்தியிருக்கிறேன். ஆனால், அவள் வார்த்தைகளே அவனுக்கு ஆசிகளாய் அமைந்தன. குமாரின் புத்திசாலித்தனம் அவளுக்கு நன்கு தெரிந்திருந்தது. அவள் தீர்க்கதரிசி! குமாரே மூவரிலும் அதிகமாகப் படித்தான்! கட்டடவியலில் முதுகலைப் பட்டம் பெற்றுச் சிறப்பாகத் தேர்ந்தான். மறக்கக் கூடிய நாளா அது!

வருடங்கள் ஓட ஓட, என் வயதும் ஏற ஏற எல்லாவற்றிலும் இயலாமை, அதன் பொருட்டு கோபம் என்று அவதிப்பட்டேன். பதிலுக்கு அமைதி காத்தால் ஒரு பிரயோசனமும் இல்லை என்று உணர்ந்த காமாட்சி, மெள்ள மெள்ள எதிர்ப்பைக் காட்டப் பழகினாள். உடனே எனக்குச் சுயபச்சாத்தாபம் பிடுங்கித் தின்னும்! என்னிடம் இயல்பாகவே ஒட்டிக் கொள்ளும் குமார் தான் அச்சமயங்களில் எனக்கும், என் சுய அனுதாபத்திற்கும் வடிகால்!

வடிகாலாய் நான் குமாரைத் தேர்ந்தெடுத்ததற்கு எங்களிருவருக்கும் இடையே இருந்த அன்பே காரணமாய் அமைந்தது என்று காலம் கடந்து தான் நான் உணர்ந்தேன். குமாரின் அன்பைத் தக்க வைக்கத் துடித்த என் துடிப்பு எனக்குத் தெரியாமலேயே கூடியது. அதன் பொருட்டு அவனது அனுதாபம் எனக்குக் கைகொடுக்கும் என்று நான் நம்பினேன். வடிகாலாய் நான் அவனிடம் கொட்டிய மனக் கசப்பெல்லாம், அவனுக்கு விளைவிக்கப் போகும் தீங்கை நான் உணரத் தவறினேன்.

அவன் வயதையும் மறந்து, காமாட்சியைப் பற்றி எல்லாக் கசப்புகளையும் அவனிடம் கொட்டினேன். பிஞ்சு மனதில் நஞ்சை என்னை அறியாமலேயே கலந்திருப்பதை நான் உணரும் போது காலம் தாமதமாகி விட்டிருந்தது! எனக்கு வடிகாலாய் இருந்த குமாருக்கு இன்று ஒரு துணையே இல்லா நிலை! குலுங்கிக் குலுங்கி அடக்க முடியாமல் அழுகிறேன். இருப்பது மருத்துவமனை என்பது தெரியும் போது அழுகை கட்டுப்படுகிறது. புரண்டு மறுபுறம் படுக்கிறேன்.

இருபத்தியாறு வயதில் குமார் தனக்குத் திருமணமே வேண்டாம் என்ற போது பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை நான். சரி, கொஞ்ச காலம் தனிக் காட்டு ராஜாவாகத் தான் இருக்கட்டுமே என்று நினைத்தேன். வேறொரு சமயம் தனிமையில் பேசும் போது தான், அவனுக்குக் கல்யாணத்திலும், மனைவி என்ற பந்தத்தில் அறவே நம்பிக்கை இல்லாதது தெரிந்தது. இதற்குக் காரணமே நான் என்பது எனக்கு மட்டுமே தெரியும். குற்ற உணர்வு என்னை வாட்ட ஆரம்பித்தது. வீட்டில் உள்ள அனைவருமே மாறி மாறி பல விதங்களில் முயன்றும் பலனே இல்லாமல் போனது. வருடங்கள் உருண்டோட, நம்பிக்கை தேய்ந்து ஓய்ந்தது என்றே கூடச் சொல்லலாம். நித்திரா தேவியின் துணயுடன் நான் அமைதியான உறக்கத்தில் ஆழ்கிறேன்.

மறுநாள்,

“உஸ், அப்பாடா, என்னா வெயில், நேத்திக்கி தானே, விடாம அந்த மழை கொட்டிச்சி. இன்னிக்கிப் பாரு கொளுத்துது”, என்றபடி பழனியப்பன் புயலென அறையினுள் நுழைகிறான்.

“வா பழனீ, உக்காரு”, உட்காரவில்லை பழனியப்பன். நின்றுகொண்டே, “கதிரேசா, அவசரமாப் போகணும், நாளைக்கி வரேன். என் மச்சானோட கொழுந்தியா மகளுக்கு, குமார விட ரெண்டர வயசு கம்மி. நீ கூடப் பாத்திருக்கியே. நெறம் கொஞ்சம் கொறவு. ஆனா, நல்ல லெட்சணமா இருப்பா, நல்ல வேலைலயும் இருக்கா.”

“என்னப்பா, கால்ல கஞ்சிய ஊத்திக் கிட்டு ஓடறே? அந்த கோகிலாவச் சொல்றியா?”

“அதே பொண்ணு தான்பா. அறியாத வயசுல, ஏதேதோ தப்பு செஞ்சிடிச்சு. ஆனா, ஒழுக்கமானவ தான். அந்தப் பழங்கதை ஒனக்கு தான் தெரியுமே. அவங்க வீட்டுல கல்யாணம் செய்யறதாத் தான் இருக்காங்க. குமார் சரின்னு சொன்னா மேற்கொண்டு பேசலாம். அவன் கிட்டக் கேளு. நா முக்கிய வேலையா ‘டீdஎஸ்’ ‘டீபீஎஸ்’ வங்கிக்கி போகணும்பா. வரட்டா? நாளைக்கி சொல்லு நா வரேன், என்ன?”, பேசிக் கொண்டே ஓட்டமும் நடையுமாக பறந்து விடுகிறான். இந்த முறையாவது குமாரை, எப்படியாவது சம்மதிக்க வைக்கணும் என்று என் மனம் ஆயத்தமாகிறது.

குமாரும் வர,

“குமார் இன்டர்வியூக்கு கிளம்பிட்டியா, நல்லா செய்யிப்பா. பசியாறிட்டியா?”

“நா பசியாறியாச்சு. எனக்கு ‘தெம்பனீசு’ க்கு போகணும்பா. அங்கிருந்து ‘பெடோக்’குக்குப் போயி, அக்கா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்னு இருக்கேன்”

“நேத்திக்கி உங்க அண்ணனப் பாத்தியா? என்ன சொல்றான்?”

“அவருக்கும் பணத் தட்டுப்பாடாம். ரெண்டெடத்துல கேட்டிருக்காறாம். பாக்கலாம்னு சொன்னாரு. பசங்கல்லாம் என் கிட்ட நின்னு கூடப் பேசலப்பா. எல்லாம் பெரிசாகுதுங்க இல்லையா, முன்னெயெல்லாம் சித்தப்பா, சித்தப்பான்னு வந்து தானா ஒட்டிக்கும். இப்பல்லாம், ‘ஹாய்’ சித்தப்பா, ‘பாய்’ சித்தப்பான்னு சொல்லிட்டு ஓடுதுங்கப்பா.”

“ம்.. அது அப்பிடித்தான், அதுங்க அதுங்களோட அப்பனப் பாத்துக் கிட்டாலே பெரிசு. சித்தப்பன வேற பார்த்துக்குங்களா? ம்,. நீ தான், கல்யாணப் பேச்செடுத்தாலே அண்ணனோட குடும்பம் இருக்கு. பிள்ளைங்க இருக்காங்கன்ற. ஏதோ நாளு கிழமைனா கூடி இருக்கலாம். ஆனா கூடவே இருக்க முடியாதே. உனக்கு ஒரு மகனிருந்தா செய்யிறாப் போல வருமா? உனக்குன்னு ஒரு துணை வேணும் குமார். எனக்காவது நீயிருக்க. என் காலம் முடிஞ்சப்புறமா, நாளைக்கி உனக்கு யாரிருக்கா? சொல்லு. சித்தப்பன்னு மரியாதை அன்பு இருக்கும். ஆனா அதுக்கு மேல எதிர் பார்க்க முடியுமா, சொல்லு. உறவெல்லாம் ஊறுகாய் மாதிரி தான் சேர்த்துக்க முடியுமே தவிர, ஊறுகாயையே சாதம் மாதிரியா சாப்புட முடியும்?”

“சரிப்பா ஆரம்பிச்சுட்டீங்களா, எனக்கு நேரமாச்சி, நா சாய்ந்திரமா மறுபடியும் வரேன்பா. உங்களுக்கு ஏதும் வாங்கிட்டு வரணுமா?”

“எனக்கு எதுவும் வேணாம் குமார். நா சொன்னத மட்டும் யோசி. பழனியோட மச்சானோட கொழுந்தியா மக கோகிலா இருக்கா இல்ல உனக்கு அவளப் பார்த்தா என்னானு நினைக்கிறேன்”, பேசிக் கொண்டிருக்கும் போதே பதில் சொல்லாமல் அறையை விட்டுச் சென்று விடுகிறான்.

கல்யாணப் பேச்சு எடுத்தாலே, ஒரேயடியாய் ஆத்திரத்தில் கத்தி சண்டையிடும் குமார் சாதாரணமாய் பேசியதே, எனக்கு சற்று நம்பிக்கையைக் கொடுக்கிறது. அவனும் யோசித்திருப்பானே. இப்போதும் எம்ஆர்டீயிலும் என்ன வேலை, யோசிக்கட்டும். என் வார்த்தைகள் அவனை யோசிக்க வைக்கும். அவன் யோசிக்க ஆரம்பித்து விட்டதை அவன் முகம் கிளம்பும் போது காட்டியதே! முருகா, குமாருக்கு மட்டும் கல்யாணம் நடந்தா, தைபூசத் தன்னிக்கி நிச்சயம் நா உனக்குப் பால் குடம் எடுக்கறேன்!

மாலையில் வந்த குமாரின் முகத்தில் களைப்பையும் மீறி ஒரு மகிழ்ச்சியின் தீற்றல் தெரிகிறது. படுத்திருந்த நான் படுக்கையிலேயே பேசுவதற்கு வாகாக சாய்ந்த வண்ணம் உட்கார்ந்து கொள்கிறேன்.

“வேல கிடைக்கிற மாதிரி இருக்கா, குமார்?”

“கிடைக்கும் போலத் தெரியுதுப்பா. சம்பளம் கொஞ்சம் கொறச்சலானாலும் பரவாயில்லன்னு மறைமுகமா சொல்லிட்டேன். உங்களுக்கு எப்பிடியிருக்குப்பா.”

“டையாலிஸிஸ் செஞ்சதுக்கப்பறம் கொஞ்சம் நல்லாவே இருக்கு குமார்.”

‘அப்பா, அண்ணன் அண்ணி எல்லாரும் இப்ப வருவாங்கன்னு நினைக்கிறேன். அக்கா மட்டும் நாளைக்கி முடிஞ்சா வரேன்னிருக்காங்க. அக்கா உங்களுக்காக புட்டு கொடுத்தனுப்பியிருக்காங்க. இப்ப சாப்பிடுறீங்களாப்பா?”

“வையி, அப்பறமா சாப்பிட்டுக்கறேன்.”

“மாமாவுக்கு காய்ச்சல். அக்கா தான் ரெண்டு நாள் சம்பளமில்லாம லீவு போட்டிருக்காங்க. ரெண்டு பேரும் சண்டையில்லாம இன்னிக்கித் தான் நா பாக்கறேன்.” “அதான் குடும்பம். ஆயிரம் பூசல் இருந்தாலும் நல்லது கெட்டதுனா தான் ஆடாட்டாலும் தன் சதையாடுமேப்பா.”

“அக்கா சம்பளத்துல தான் குடும்பம் நடக்குது. ரெண்டு பேர் சம்பாதிக்கறதுல உள்ள நன்மையே இது தான்னு தோணுது. பெரிய பிள்ளைங்க படிப்பு, இப்ப மாமாவுக்கு வைத்தியம்னு பயங்கறச் செலவுன்னு அக்கா ஒரே புலம்பல். பணம் கேக்கப் போனவன் கேக்காமலேயே திரும்பிட்டேன்.”

“ஏதோ, அவ வேலையாவது நெலச்சாச் சரி.”

“நீ சாப்பிட்டியா குமார்”

“அக்கா வீட்டுலயே சாப்புட்டுட்டேன்பா. ஆமா…. பழனி மாமா வந்தாரா?”

ம், சரி தான், பையன் யோசிச்சிட்டான். என் வழிக்கு வருகிறான். அண்ணனோட பிள்ளைங்க தன்னோட பிள்ளைங்கன்னு நினைச்சிகிட்டிருந்தான் இப்போ தான் இவனுக்குப் புரியவே ஆரம்பிச்சிருக்கு போலயிருக்கு. அதெல்லாம் நிரந்தரமில்லன்னு. அந்தப் பிள்ளைங்க இப்பயே இப்பிடின்னா, நாளைக்கி கல்யாணமெல்லாம் நடந்தா அதது தன் குடும்பமாயில்ல போயிடும்? ஒரு தலவலி காய்ச்சல்னு வந்தாலும் தன் பெண்டாட்டி பிள்ளைங்க மாதிரி வருமா? சண்டையும் பூசலும் இல்லாமயா இருக்கும். அது பாட்டுக்கு அது. இப்பயாவது புரிஞ்சி கிட்டானே!

“பழனி நாளைக்கி தான் வருவான். ஏன் கேக்கற?”, என்று அவன் முகத்தைக் கூர்ந்து கவனித்தபடி நான் கேட்க, “இல்ல, சும்மா தான்”, என்று அவன் மழுப்ப,

“சொல்லு குமார்”, என்று நான் விடாமல் வார்த்தைகளை வாங்க,

“இல்ல அவருக்கு பதில் சொல்லணும்னு சொன்னீங்களே, அந்த கோகிலா எங்க வேல பாக்கராப்ல?”, மெள்ளத் தயங்கியபடி கேட்கிறான். எனக்கு மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. என் குற்றத்திற்குத் தண்டனையாய், குற்ற உணர்வில் என்னை வாட்டியெடுத்த ஆண்டவனுக்கே போதும் என்று தோன்றி விட்டது போலும்!

“கோகிலாவ கல்யாணம் செஞ்சிக்க, குமார் தயார்னு சொல்லிடவா”

“மொதல்ல எனக்கு வேல கிடைக்கணும், அதுக்கப்பறம் தான் மத்தது எல்லாம்.”

“குமார், இப்பயாச்சும் என் வயத்துல பாலை வார்த்தயே. வேல கெடைச்சிடட்டும். கிடைச்சப்புறமாவே நிச்சயம் பண்ணலாம்.”

குற்றவுணர்வே என்னைக் கொன்று விடுமோ என்று பயந்த எனக்கு குமாரின் மன மாற்றம் புதுத்தெம்பை அளித்தது. குமாருக்குக் ‘குடும்பம் தேவை’ என்று உணர்த்திய அந்தப் பழனி ஆண்டவனுக்கு நான் மனதுக்குள்ளேயே மகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்தேன். தைப்பூசத்திற்குக் பால் குடம் எடுக்கவேனும் நான் குணமாக வேண்டும். இந்த ஒரு செய்தி போதுமே எனக்கு, இனிமேல் என் ஆரோக்கியம் மேம்பட.

– தமிழ் முரசு 27-7-02, 3-8-02 திண்ணை.காம்-06-10-03

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *