கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 10,401 
 
 

சுந்தரத்துக்குப் பொங்கிப் பொங்கி வந்தது. அவர் உள்ளே வரும்வரைகூடப் பொறுக்க முடியவில்லை. அப்பாவாக இல்லாமல் இன்னொருத்தராக இருந்திருந்தால் மனதுக்குள் தோன்றுகிற எல்லாவற்றையும் முகத்துக்கு முகம் கேட்டிருப்பான். தடதடவென்று கீழே இறங்கி வந்து ‘தார்சா வோடு இணைகிற மச்சுப் படியின் கடைசியில் நின்று கொண்டு குமுறினான்.

‘இதெல்லாம் ரொம்ப அநியாயம்.’ அந்த இருட்டில் வார்த்தை சுள்ளென்று சீறிவிட்டு அமுங்கியது. யாருடைய முகமும் யாருக்கும் தெரியவில்லை. அவர் செருப்பைக் கழட்டின காலோடு பம்ப் அடிக்குப் போனார். எதிர்த்த வீட்டில் சிமினி லைட் அவருக்கு மறைவில் வைக்கப்பட்டு, ‘ஒருத்தனைக்’ கொடியில் கிடந்த துணிகளின் தொங்கலான நிழல்கள் விகாரமாகப் படிந்திருந்தன.

கடகடவென்று பைப்பை அடிப்பதையும், மேலுக்கும் முதுகுக்கும் நீரை அடித்துக் கொண்டிருந்ததையும் சுந்தரம் பார்த்துக்கொண்டு நின்றான். ‘கணார்’ என்று எதையோ அவர் எட்டி உதைத்தார். செம்பாக இருக்கவேண்டும். உருண்டு அலறிக்கொண்டு, ஈரம் சிதறச் சிதற முருங்கை மரத்தடியில் போய்க் கவிழ்ந்து நின்றது. சுந்தரம் அவசரமாய் சுவிட்சைப் போட்டான். விளக்கு எரியாது. அவர் வந்துதான் மீட்டர்பெட்டியைத் திறந்து ஸ்விட்சைப் போடவேண்டும். தார்சாவில் இருந்து திடுக்கென்று இறங்கி மேல் நடையில் ஒரு காலும் கீழ் நடையில் ஒரு காலுமாக நின்றான்.

எதிர்த்த வீட்டின் வெளிச்சம் உயரமாகிக் கலைந்து இடம் மாறியது; குஞ்சு சிமினிலைட்டும் கையுமாய் வெளியே வந்தாள். உருண்டு கிடக்கிற செம்பைத் தேடினாள். இருட்டுக்குமேல் ஒரு மங்கலான வெளிச்சம் அவள்மீது படர்ந்திருந்தது. மேல்வாட்டாகப் பரவின வெளிச்சத்தில் மூக்கும் வாயும் மோவாயும் வெளிறிப் போயிருந்தன.

‘இன்னொரு நாள் செம்பு கிம்பு பம்படியில் கிடந்தது உரக் குழிக்குள்ளே தலையைச் சுத்தி விட்டெறிஞ்சிடுவேன்.’ வாயைக் காறிக் கொப்பளித்து விட்டு நகர்ந்து வந்தார். கொஞ்சநேரம் குஞ்சு அங்கேயே நின்றது. காது வழியாக உள்ளே போனதையெல்லாம் வாய் வழியாகக்கூடத் திறந்து விடமுடியாமல் அது முங்கித் திணறுவது போல மூச்சு முட்ட, விளக்கை ஏந்திக் கொண்டிருந்தது.

அவர் நடையேறி உள்ளே போனார். போனவர் உடனே ஸ்விட்சைப் போடவில்லை. அது இருட்டுக்குள் கஷ்டப்பட வேண்டுமாம். கொஞ்சம் விளக்குக்காம்பைத் திருகிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கையில், சுந்தரம் நடந்து போய்ச் செம்பை எடுத்து அவளிடம் கொடுத்து விட்டு வந்தான். அப்பியிருந்த மணலைக் கையால் வழித்தபடி குஞ்சு மினுமினுவெனப் பார்த்தது. வாயும் உதடும் முடியாததைப் பார்வை ஈடு பண்ணிவிட்டது.

பக்கென்று வாசல் லைட் எரிந்தது. மிகவும் பவர் குறைவான அந்த எலெக்ட்ரிக் வெளிச்சத்தில், அந்த சிமினி விளக்கும் குஞ்சுவும் வித்தியாசமாக இருந்தது. பகலில் மத்தாப்புக் கொளுத்தினது மாதிரி. செம்பும் கையுமாய்க் குஞ்சுவின் நிழல் அலைந்து அலைந்து உள்ளே போய்த் தணிந்து மறுபடியும் கொடித்துணிகளின் நிழல் வேறுவேறு உருவங்களில் வாசலில் பாய்ந்தன.

முருங்கைமரம் அசையாமல் பூவும் பிஞ்சுமாய் நின்றது. மழை விழுந்திருந்ததால் இலையினுடைய குளிர்ச்சி பார்க்கும்போதே தெரிந்தது. சிடுசிடுவென்று பத்துப் பதினைந்து சிட்டுக்குருவிகள் அடைந்து கொண்டிருந்தன. ஈரத்தரையில் விறைத்துப் போனது போல் பொட்டுப் பொட்டாகப் பூ உதிர்ந்து கிடந்தன. மிகவும் வளர்ந்துவிட்ட பாம்பு அரணை ஒன்று மரத்தின் பக்கத்தில் இருந்து உரக்குழி பக்கம் போனது. சுந்தரத்திற்கு உடம்பு சிலிர்த்தது. எப்போதோ கல்லெறிந்து கொன்ற ‘பாம்புராணி’யின் வால் மனதுள் துடித்தது. பழைய அடுப்புக் கட்டிகள் உடைந்து, பொதுமி, இடிந்து போய் கிடக்க, அதன் மத்தியில் கழுத்து முறிந்த ஒரு நீல சீசாவில் மழைத்தண்ணீர் தேங்கி நின்றது. எண்ணெய் போல. அந்தச் சீசாவில் இறந்து போன குஞ்சுவின் பாட்டிக்கு மருந்து வாங்கிக் கொடுத்திருக்கலாம், அல்லது ஜமுக்காளத்தையும் தலையணையையும் தெருவில் வீசினது போல அந்தச் சீசாவையும் வீசியிருக்கலாம். அந்தப் பாட்டியுடைய தங்கச்சி மகனும் குடும்பமும்தான் வடக்கே தொலைவில் இருந்து உடனே வர வசதிப்படாமல், ஆறேழு மாதத்துத் துக்கத்தைத் தாங்கிக் கொண்டு இன்று காலை வந்திருக்கிறார்கள்…

அதற்குமேல் சுந்தரத்திற்கு நினைக்க முடியவில்லை. நட்சத்திரத்தையெல்லாம் யாரோ உலுக்கிப் பறித்துக்கொண்டு விட்டது போல வானம் மொட்டையாக இருந்தது. பின்னால் வீட்டுப் ‘பட்டாசலில்’ நிற்கிறவருடைய நிழல் இவன் வரை வந்து கொம்புச் சிலுப்பலாய் முட்டிவிட்டு ‘என்ன அங்கனே?’ என்பது போல் மறுபடியும் நகர்ந்து கொண்டது.

‘இந்த ஆள்கிட்டே என்ன கேள்வி?’-அவனுக்குத் தன் அப்பாவைப் பார்க்கக்கூடப் பிடிக்கவில்லை. ரொம்ப அவசரமாகச் சட்டையை மாட்டிக் கொண்டு சுப்பு வீட்டிற்குக் கிளம்பினான்.

***

சுந்தரம் வந்ததிலிருந்து உட்கார்ந்தே இருந்தான். பேசவில்லை. கொஞ்ச நேரம் லாத்தினான். வெளியே பார்த்தான். மறுபடியும் இரண்டு தலையணையைத் தட்டிப் போட்டுச் சாய்ந்து குத்தலாகத் தரையையே பார்த்துக் கொண்டிருந்தான். மெழுகின தளத்தில் சாணிப் பொறுக்கு கிளம்பி நின்றது. உடம்பைக் கசங்கலாக மடக்கிக் கொண்டு சுப்புவையே பார்த்தான். காலில் வெடித்துக் கீறலிட்டு வளர்ந்திருந்த நகக்கண்களின் இடுக்கில் இருந்த ஆற்றுமணலை நெருடியவாறே சொன்னான்.

“சுப்பு, சாகலாம்போல இருக்கு.”

“கிறுக்கனுகப்பா.”

“இப்படித்தான் என்னமாவது உளறுவேண்ணு வந்ததுமே நினைச்சேன்.”

“எங்கப்பாதான் உளறுவாரு. அவனெல்லாம் ஒரு மனுஷனா?”

“என்னத்துக்கு அப்பாவைப் போய் அவன் இவன்னுகிட்டு?”

“அதான் சொன்னேன சுப்பு. மனுஷனோடயே சேர்த்தியில்லை. அப்புறம்லா அப்பாவோட சேர்த்தியா இல்லையாண்ணு பார்க்கணும்.”

“அதெல்லாம் பார்க்கிறதுக்கு நீ யாரு?”

“வீட்டுக்குள்ளேயும் வெளியிலேயும் கூடவே இருந்து பார்க்கிறது நான்தானே. விடிஞ்சதும் விடியாததுமா முருங்கைக்காயைக் கிளைகிளையா எண்ணி, நேத்தைக்குவிட இன்னைக்குக் குறைந்திருக்கா? எவனாவது ராத்திரியோட ராத்திரியாக் களவாண்டுகிட்டுப் போய்ட்டானான்னு பார்க்கத் தெரியும். சுவாமி படம் தொங்கவிட குஞ்சு வீட்டில் ஆணியடிச்சா-தாட்பூட்ணு வீடு இடிஞ்சுபோற மாதிரிக் குதிச்சு அதைப் புடுங்கிப் போடத் தெரியும். மேல்பக்கத்துச் சுவர்ல தெருவை ஒட்டி எவனும் விளம்பரம் எழுதீட்டாள்னா வாளி வாளியாய்த் தண்ணி அடிச்சுக் கழுவிவிடத் தெரியும். வாடகைக்கு இருக்கிறவங்க தோட்டத்துக்குப் போயிட்டுக் கால் கழுவணுன்னு தண்ணியடிக்க வந்தால் ‘அதெல்லாம் தெருப் பைப்பில் வச்சிக்கிடணும்- வாஷரும் தட்டும் வாங்கிப் போடுகிறவனுக்கில்லா தெரியும்ணு விரட்டத் தெரியும்.”

“ப்ச்சு, சரிடே. இதெல்லாம் புதுசு ஒண்ணும் இல்லையே. அதுக்கென்ன இப்போ ?”

“அதுக்கென்னவா? இந்த வாயில்லாப் பொண்ணு குஞ்சுவை என்ன பேச்சு பேசுவா தெரியுமா? ஒரு நாள் இவர் மடையை மறிச்சு முருங்கைக்குத் தண்ணீர் பாய்ச்சிக்கிட்டு இருக்கிறது தெரியாமல், கத்திரிக்காய் அவிச்சதண்ணீரைக் கொட்டிவிட்டதற்கு இவர் போட்ட கூச்சலுக்கு இன்னொருத்தன்னா திருப்பி நாலு கேட்டிருப்பாங்க.”

“திருப்பிக் கேக்க முடியாதவங்கிறதுனாலதானே தைரியமே.”

“இந்த மாதிரி அப்பிராணி ஜனங்கள் என்றால், அதிகாரி நான் தான்னு கூகூண்ணு சத்தம் போடுகிறது. எவனாவது திண்டா முண்டாக்காரன்னு தெரிஞ்சா மொட்டைக் கடுதாசி போடுகிறது. இவன் பிளானைக் கொடுக்காமல் வீட்டுக்குள்ளே ஒரு கட்டை உசத்தியிருக்காண்ணு- இல்லை, அம்பது ரூவா வாடகை வாங்கிட்டு முப்பதுண்ணு சொல்லுதாண்ணு…”

“ஏன் இப்படி மடமடண்ணு ஒப்பாரி வச்சுக்கிட்டே போற?”

“பாவி, அநியாயப் பாவி. ஒப்பாரியக்கூட வைக்கக் கூடாதுண்ணுட்டானய்யா இவன்.”

“பாட்டி செத்த சமயம் நடந்ததைச் சொல்லுதயா?”

“இப்பம், இண்ணைக்கும் நடந்திருக்கு.”

“இப்பமா?!”

“பச்சு.”

“இப்பம் என்ன ஒப்பாரிக்கு அவசியம்?”

“வீட்டில் வச்சு அழக்கூட விடலையே பாவிமட்டை.”

“என்ன சொல்லுத நீ?”

“குஞ்சுவோட பாட்டி இறந்து போனாள்லா. இவங்களோட தங்கச்சி மகனும் வடக்கேயிருந்து உடனே வர அசந்தர்ப்பமாப்போயி, அந்த அழுகையையும் துக்கத்தையும் பொத்திப் பொத்தி ஆறு மாசமா இறுக்க மூடிவச்சுட்டு, இப்பதான் வந்திருக்காங்க குடும்பத்தோட. ‘என்னைப் பிள்ளைபோல வளர்த்தியே. உன்னைக் கடைசிக் காலத்தில் பார்க்கக்கூடக் கொடுத்து வைக்கலையே பாவி’ண்ணு அவரு அழுது விழுந்துகிட்டு, பெண்டாட்டியும் பிள்ளையுமா நுழைஞ்சிருக்காரு. எங்கப்பா என்னடாண்ணா, காட்டுமிராண்டி மாதிரி அங்கேபோய் நிண்ணுகிட்டு…”

“உஸ்ஸ்ஸ் .”

“…இருந்தவங்க போனவங்களையெல்லாம் நினைச்சு நினைச்சு ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு இடமில்லை. ஆத்தங்கரை குளத்தங்கரைண்ணு எங்கேயாவது போய் அழுங்க, விழுங்க, என்ன எழவையும் பண்ணிக்கிடுங்கண்ணு கத்தியிருக்கார். அந்தக் குடும்ப சுபாவமே அப்படிப்போலேருக்கு. சரிதான்னு அத்தோடே விட்டுட்டாங்க. ஒரு பொட்டுகூட சத்தம் போட்டு அழலை. சாயந்திரம் என்னடாக்கண்ணா, எல்லாரும் ஒண்ணா ஆத்தங்கரை மேட்டில் போய், வாய்விட்டும் அழமுடியாமல், அழாமலும் இருக்க முடியாமல், கொத்துக் கொத்தாய்க் கண்ணீர் விட்டுக்கிட்டு இருக்காங்க.”

“ச்சச்சு. கஷ்டமா இருக்கே கேக்கிறதுக்கே.” ”கஷ்டம்ணு லேசா சொல்லிவிட முடியுமா. வாடகையும் கொடுத்துக்கிட்டு, சந்தோஷத்தைக்கூட இல்லை, எழவைப் பகுந்துக்கிட முடியாமல் அனாதி மாதிரி ஆற்றுமணல்ல உட்கார்ந்து அழுது தேத்திக்கிறதுண்ணா அது எவ்வளவு பெரிய சித்ரவதை, பேசாமல் வீட்டைப் பூட்டிச்சாவியை மூஞ்சிலே எறிஞ்சுட்டுப் போக வேண்டியதுதானே, ஊரிலே வாடகைக்கு வேறே வீடா இல்லை?”

“அதென்ன கண்ட்ராவி, அந்த வீடே அப்படியிருக்கு சாபம் பிடிச்ச மாதிரி ஒண்ணு இல்லாட்டா ஒண்ணு ஆகிக்கிட்டே இருக்கு. நிழல்ல வளர்ந்த செடி கணக்கா உயிரே இல்லாமல் ஒவ்வொருத்தரும் இருக்காங்க. காணுங் காணாததுக்கு இந்தக் குஞ்சு வேறு…”

“….”

“சொல்லி முடிச்சாச்சுல்ல. இன்னம் ஏம்ப்பா உம்முண்ணு இருக்கணும்?”

“மனசே சரியில்லை .”

“என்னைக்குச் சரியாயிருந்தது உனக்கு?”

“இந்த வீட்டை விட்டுப் போனாச் சரியாப் போகும்.”

“அதெல்லாம் சரி. டே”

“இல்லை சுப்பு. ஒரு ரெண்டு நாளாவது இங்கே இருக்கக்கூடாது. எங்கேயாவது போகணும்.”

“எங்கே போகலாம்கே?”

“அருவிக்கரைக்கு. சீஸன் நல்லா இருக்கும். மழை வேறே விழுந்திருக்கு.”

“மலங்காட்டுத் தண்ணி உடம்புக்கு ஒத்துக்காது.”

“இங்கே மனசுக்கு ஒத்துக்கலை.”

“கண்டிப்பாய்ப் போகணுமா?”

“ஆமா. நீ வரலைண்ணா ரூவா கொடு. நான் போய்ட்டு வாரேன்.”

“நான் வரலைண்ணு சொன்னேனா. நல்ல கிறுக்கன் வந்து சேர்ந்தாம்ப்பா.”

“நான் கிறுக்கன்தான்.”

“வீட்டில சொல்லிக்கிடலையா?”

“சொல்லாட்டாலும் ரொம்பத் தேடீரப் போறாங்களாக்கும்.”

“சமையல் ஆச்சிகிட்டக் கூடவா.”

“என்ன சொல்லு?”

“நீ சொல்லாட்டா நான் சொல்லிருதேன்.”

“நானே சொல்விடுதேன். விடு.”

“கிறுக்கன். கிறுக்கன்!”

***

சுப்பு வரவில்லை. தான் இருந்துகொண்டு யாரையோ விட்டுச் சொல்லியனுப்பியிருந்தான். முழுங்கி முழுங்கி அந்தப் பையன்- ‘சுந்தரம் வீடு இதானே?’ என்று கேட்டுக்கொண்டே குஞ்சு வீட்டுக்கு முன்னால் நின்றான். ‘வ்ர்ர்ர்ம்’ என்று ஒரு கருவண்டு உறுமிக் கொண்டே பறந்தது. குஞ்சு அலசிக் கொண்டிருந்த சேலையை முறுக்கித் தோளில் போட்டுக்கொண்டு எதிரே கையைக் காட்டியது.

“குஞ்சுவின் மாமா- வடக்கேயிருந்து வந்தவர்- ‘என்ன வேணும்’ என்று வெளியே வந்தார். வந்த பையன் ‘ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை’ என்று இவர் முகத்தையே பார்த்தான். ஊர்ந்து ஊர்ந்து மேலே வந்த வார்த்தையைத் தொண்டையில் அமுக்கித் திணறினான்.

“அதாள் வீடு. சுந்தரம் ஊருக்கில்லை.”

“அவங்க அப்பா.”

“கிராமத்துக்குப் போயிருப்பார் போலேருக்கு.”

“வீட்ல வேறே யாரும் இல்லையா தகவல் சொல்றதுக்கு.”

“’சமையல் ஆச்சி இருக்கா. என்ன சொல்லணும் – பாதகமில் லைண்ணா நானே சொல்லீருதேன்.”

“கொடியில் ஈரச்சேலை சொட்டிச் சொட்டித் தரையில் தெறித்தது. அதை உருவிப் பக்கத்தில் இருந்த வாளியில் போட்டுவிட்டு மீண்டும் பையனைப் பார்த்தார். குஞ்சு வந்து தேங்காய்ச்சில்லைக் கழுவிக்கொண்டு போனாள். உள்ளே ‘டகடக’ வென்று அம்மியடிக்கிற சத்தம் கேட்டது. உறுமல் சத்தமே வண்டாகப் பறந்து கொண்டிருந்தது.

“அவங்க அப்பா எப்ப வருவாங்க?”

“தெரியலையே?”

“இன்னிக்கு வந்திருவாங்களா?”

“வர்ரதைப் பத்தியே திருப்பித் திருப்பிக் கேட்டிட்டிருந்தா எப்படிப்பா? நானும் உன்னை மாதிரித்தான் அசலூரில் இருந்து வந்து இங்கே உட்கார்ந்திருக்கிறவன்.”

“அப்படியா!” என்றவன் சடாரென்று சொல்லிவிட்டான்.

“என்னது?” என்று எழுந்தவர், ‘என்னது?’ என்று மறுபடியும் கேட்டுக்கொண்டே ‘ஆச்சி, ஆச்சி’ என்று எதிர்த்த வீட்டுக்குள் போனார்.

சுந்தரம் இறந்து விட்டானாம். அருவித்தண்ணீரில் மூச்சுத் திணறிவிட்டதாம். ரொம்ப நேரம் கழித்துக் கம்பிக்கிராதிக்குள் சிக்கின உடலைக் கண்டு பிடித்து எடுத்தார்களாம். குஞ்சுவின் மாமா அப்புறம் பேசவில்லை. பையனை அங்கேயே இருக்கச் சொன்னார். கிராமத்திற்கு ஆள் அனுப்பினார். தலையைக் கோதிக் கோதிவிட்டு நரைமுடி பிரியக் கொஞ்சநேரம் நின்றார். உடனடியாகப் போய், எல்லா ஏற்பாடும் செய்து, ஒரு டாக்ஸியில் தூக்கிக் கொண்டு வந்து இறங்கினார். சுப்பு ஒரு கை, டாக்ஸி டிரைவர் ஒரு கை, இவர் ஒரு கையென்று பிடித்துத் தாங்கலாகக் கிடத்தினார்கள். மேற்சட்டையில்லாமல் வெறும் அண்டர்வேரும், துண்டுமாய் அருவியில் குளித்த சுகத்தில் உறங்குவது போல உடம்பு இருந்தது. தலைமுடி பஞ்சு பஞ்சாகச் சுருண்டு கிடந்தது. சுப்புவைப் பக்கத்தில் இருத்திவிட்டு அவர் விலகி முருங்கைமரத்துப் பக்கம் போய் நின்றுகொண்டார்.

முருங்கை மரம் பொல் வென்று சிலிர்த்து நின்றது. அணில்கள் மௌனமாகத் தாவித் தாவிப் பூவுதிர்த்தன. பைப்படியில் பத்துப் பதினைந்து குருவிகள் அலகைச் சிணுக்கிச் சிணுக்கி நனைத்துக்கொண்டு விர்விர் எனப் பறந்தன. சம்பந்தமே இல்லாமல் ஒரு நாய் உரக்குழிவரை முகர்ந்துவிட்டுத் திரும்பி ஓடியது. தோட்டத்துச் சுவரில் மழை ஈரத்தில் கரும்பச்சையாகப் பாசி படர்ந்திருந்தது. உள்முட்டுதல்களை அணைத்து இறுக்கின முகத்துடன் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்.

டாக்ஸி நிற்கிற சத்தம் கேட்டது.

யாரோ எழுந்து வாசலுக்குப் போனார்கள்.

குடையும் கையுமாய் ‘ஏ! ஐயா’ என்ற பாய்ச்சலாக நெஞ்சில் அறைந்து கொண்டு சுந்தரத்தின் அப்பா வந்து மேலே விழுந்தார். குபீரென்று உத்தரவு கிடைத்தது போல் எல்லோரும் சத்தமாக வாய்விட்டு அழுதார்கள்.

‘தாங்க முடியலையே, தாங்க முடியலையே’ என்று குஞ்சுவின் அம்மா அழுதாள். குஞ்சுவைத் திமிற விடாமல் சமையல்கார ஆச்சி பிடித்துக்கொண்டிருந்தாள். குளறிக் குளறி சப்தம் கிழிந்தது அழுகையில். முருங்கைமரத்துப் பக்கம் தனித்து நின்று வாயைப் பொத்திப் பொறுமிக் கொண்டிருந்த குஞ்சுவின் மாமா- “உன்னைக் கடைசிநேரத்தில் பார்க்கக்கூடக் கொடுத்து வைக்கலையே பெரியம்மே, இனிமேல் எப்பப் பார்க்கப்போறேன் பெரியம்மே?’ என்று பெருஞ் சத்தத்தில் அழுதார்.

திடுக்கென்று ஏறிட்டுப் பார்த்துவிட்டுச் சுந்தரத்தின் கால்மாட்டில் தலையைப் புதைத்துக் கட்டிக்கொண்டு உடைந்து பெருகினார் அப்பா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *