வடாம் மாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 10,943 
 

என் பெயர் ராகவன். நான் மதுரை விமான நிலையம் வந்து இறங்கிய போது மாலை 5 மணி. இந்தியாவின் முன்னேற்றம் விமான நிலையம், ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றில் நன்றாக தெரிகின்றது. 60 சதவிகித மக்களின் வருமானத்திலும், வாழ்க்கை முறையிலும் பெரிய அளவு மாற்றங்கள் இல்லாவிட்டாலும், வெறும் 2 சதவிகித பேர் உபயோகபடுத்த கூடிய விமான நிலையங்கள் சர்வதேச தரத்திற்க்கு முன்னேற்றபட்டுள்ளன. நான் படிக்கும் போது பார்த்த விமான நிலையத்திற்க்கும், இப்பொழுதுள்ள விமான நிலையத்திற்க்கும் உள்ள வித்தியாசம் பார்த்து அசந்து போய் விட்டான்.

இந்தியாவிற்க்கு வந்து 10 ஆண்டுகள் ஆகி விட்டன. மதுரைக்கு அருகிலுள்ள திருவேடகம் பக்கத்திலுள்ள கிராமம்தான் எனது சொந்த ஊர். ஆற்றில் எறியபட்ட ஏடுகள், ஆறு ஓடும் திசைக்கு எதிர் புறமாக வந்து கரையேறியதால் திருஏடுஅகம் என்று பெயரிடபட்டு இன்று மருவி திருவேடகம் என்று அழைக்கபடுவதாக அம்மா சொல்லி கேள்வி. அம்மா என்ற சொல் நினவுக்கு வந்தவுடன் நான் நிகழ்காலத்திற்க்கு வந்தேன்.

இஸ் இட் மதுரை டாடி? என்ற பையனிடம்

“எஸ் பாய், வீ கேவ் டு கோ அனெதர் 10 கிலோ மீட்டர்ஸ் டு ரீச் அவுர் வில்லேஜ்”

“ஏன்னா, அவன் கிட்ட தமிழ்ல பேசுங்க. இங்க இருக்கிற போதாவது அவன் கிட்ட முழுசா தமிழ்ல பேசுவோம் என்றாள் மனைவி.

அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் வசிப்பவர்கள். 10 வருடங்கள் கழித்து இந்தியா வந்துள்ளோம். நான், என் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே கிராமம்தான்.

“வாங்க, வாங்க பிராயணம் எல்லாம் சௌகரியம் தானே? ஹலோ பாய் எப்படி இருக்க? நல்லா வளர்ந்துட்டான் என்று பேரனை அணைத்து கொண்டார் மாமானார்.

“சௌகரியமா இருந்துச்சு அப்பா. அம்மா எங்க?”

“அவ காரில உட்கார்ந்திருக்கா. மூட்டு வலி. படக்குன்னு இறங்க முடியாது. வராதன்னு சொன்னா, பேரனை பார்க்கனும்ன்னு ஆன்ஸைட்டி. ஆத்துகாரர் எங்க?”

“ஹலோ அங்கிள். எப்படி இருக்கீங்க? அத்தை சௌகரியமா?” என்றபடி டிராலியை தள்ளிட்டு வந்தேன்.

நன்னா இருக்கோம்ன்னு அவர் என் முகத்தை பார்த்த பொழுது அதில் பல்வேறு விஷயங்கள் பரிமாறப்பட்டன.

காரில் அமர்ந்தவுடன், அங்கிள் ஹவ் இஸ் ஷீ? என்று கேட்டேன்.

“கான்ஷியஸா இருக்கா. ஆனா சர்வைவ்வல் ஒரு வாரத்திற்க்கு மேல் இருக்காது. கொஞ்சம் கொஞ்சமா அடங்கிடும்ன்னு டாக்டர் சொல்லிட்டார். அதனால வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துட்டோம். நீங்க கொஞ்சம் முன்னாடி வந்திருக்கனும்”.

“வரணும்ன்னுதான் ரொம்ப முயற்சி பண்ணேன். தனியா வந்திருக்கனும்ன்னா வந்திருக்கலாம். இவங்க ரெண்டு பேரையும் கூட்டிக்கிட்டு வரணும்றதால லேட்டாயிடுச்சு. முழிச்சு பார்க்குறாளா?”

“பார்க்குறா, கொஞ்சம் கொஞ்சம் பேசுறா. ஆனா உட்கார முடியல. அவங்களை பராமரிக்குறதுக்குன்னே ஒரு ஆளை போட்டிருக்கேன். நாங்களே நேரா அதிகம் போறதில்ல. கோபாலன் தான் பார்த்துக்குறான். அவன் செலவு பண்ணுறமாதிரிதான் சொல்லி இருக்கோம். வைராக்கியம், கோபம் இதுக்கு உதாரணம்ன்னா உங்க அம்மாதான்”.

எனக்கு அழுகை முட்டியது. கொளுத்தும் வெயிலில், என்னை அம்மா தர தரவென இழுத்து கொண்டு வந்த நிகழ்வு என் ஞாபகத்திற்க்கு வந்தது.

என்ன வேகம். அவள் வேகத்திற்க்கு ஈடு கொடுத்து என்னால் ஓடி வர முடியல. “அம்மா மெதுவா, நான் விழ போறேன்” என்று கத்துனவனுக்கு ஒரு குட்டு தான் கிடைத்தது. வலியில் எனக்கு அழுகை முட்டியது.

“ சும்மா இரு. தாயும் மகளும்ன்னாலும் வாயும் வயிறும் வேறுன்னு சும்மாவா சொன்னாங்க. காசு இருக்கிறவாக்குதான் மரியாதை. கூட பிறந்தவாளா இருந்தாலும் காசு இல்லைன்னா மதிக்க மாட்டேங்கறா. உங்க அப்பன் கடங்காரன் இதுல்லாம் தெரிஞ்சும் நம்மளை அனாதையா வுட்டுட்டு போயிட்டார். நான் எங்க போவேன், வா சாவோம்” என்று புலம்பியபடி தர தரவென இழுத்துட்டு போனாள். இவனுக்கு ஒன்னும் புரியல. இழுத்த இழுவைக்கு ஏத்தபடி ஓடினான்.

இவ்வளவுக்கும், அவனோட மாமா வீட்டுக்குதான் அவனை அம்மா அழைச்சிட்டு போயிருந்தா. முன்னாடி எல்லாம், அப்பாவோட சேர்ந்து போறப்ப அவங்க மாமா வாங்க அத்திம் பேர்ன்னு வாச வரை வநது அழைச்சுட்டு போவார். இந்த தடவை நாங்க போய் கதவை தட்டுறோம், ரொம்ப நேரமா யாரையும் காணோம். வேலைக்காரி வந்து, நீங்க இனிமே இங்க வர வேணாம்ன்னு மன்னி சொல்ல சொன்னாங்கன்னு சொல்லிட்டு போயிட்டா.

அந்த வார்த்தையின் தாக்கத்தில்தான் என்னை அப்படி தர தரவென இழுத்துட்டு போயிருக்கான்னு எனக்கு ரொம்ப நாள் கழிச்சு புரிஞ்சுச்சு.

வீட்டுக்கு போய் அழுதுகிட்டே உட்கார்ந்திருந்தா. “அம்மா பசின்னேன்”.

என் உடம்புல அவள் கை படாத இடமே கிடையாது. அப்படி ஒரு அடி. வலி தாங்காமல் ஓவென அலறினேன். நான் போட்ட சத்ததில், அக்கம் பக்கத்தில் இருந்தவங்க எல்லாம் ஒடி வந்தாங்க.

“ ஏய் பங்கஜம், உனக்கு கிறுக்கு பிடிச்சுருச்சா? ஏன் இவனை போட்டு இப்படி அடிக்கிறன்னு” பக்கத்து வீட்டு மாமி என்னை அம்மாகிட்ட இருந்து இழுத்துகிட்டா.

“ பசி, பசின்னா நான் எங்க போவேன் மாமி. ஆதரவு இல்லாம தவிக்கிறேன். கூட பிறந்தவன்னு கை விட்டா, நான் எங்க போறதுன்னு தவிக்கிறேன். இந்த கடன்காரன், நேரம் காலம் தெரியாம, பசி பசிங்கிறான்” என்று ஓவென அழுதாள்.

பக்கத்து வீட்டு மாமிக்கு என்ன சொல்லுறதுன்னு தெரியல. மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தாலும், மிருகங்கள் போல் பகிர்ந்துண்டு வாழ்வதில்லை. வீடு, குடும்பம் என்ற எல்லை கோட்டுக்குள் வசிக்கிறோம். அந்த எல்லை கோட்டுக்குள் சட்டென யாரையும் அனுமதிப்பதில்லை. அந்த மாமி பாவம் என்ன செய்வாள்.

“ நான் இவனை அழைச்சிட்டு போய் சாப்பாடு போட்டுட்டு, உனக்கும் கொடுத்து வுடுறேன். நாளைக்கு பெரிய வீட்டுகாரரை போய் பார்ப்போம்”. என்று சொல்லிவிட்டு என்னை பார்த்து வாடா என்று அழைத்தாள்.

நான் முடியாது என்று மறுத்துவிட்டு என் அம்மாவிடம் போய் ஒட்டி கொண்டேன். அவளது கோபம் இப்போது பாசமாக மாறியது,

“போடா, நீயாவது போய் ஏதாவது சாப்பிடு”.

“எனக்கு வேணாம். நான் தனியா போமாட்டேன். நீயும் வா” என்று அடம்பிடித்தேன்.

“அவன் வர வேண்டாம். நான் கொடுத்து வுடுறேன். சாப்பிடு. காலையில பெரிய வீட்டுகாரரை பார்ப்போம். எதுவும் பெரிசா முடிவெடுத்துடாத” என்று போயிட்டாள் மாமி. அவள் பையன் கொஞ்ச நேரத்தில் பழைய சாதம் கொடுத்து விட்டு சென்றான். அந்த சாதத்தை பார்த்தவுடன் அவள் அழுகை இன்னும் அதிகமானது.

நான் எப்போது துங்கினேன்னு தெரியல. எந்திரிச்ச போது, எங்க அம்மா அடுப்புல ஏதோ செஞ்சுகிட்டு இருந்தா.

“ அம்மா” என்றேன்.

“இந்தா, இந்த காப்பிய குடி. அம்மா கொஞ்சம் வெளிய போய்ட்டு வந்துர்றேன்”.

நானும் வர்றேன்னு அடம் பிடித்து அவளோட போனேன்.

பெரிய வீட்டுகாரர் வீட்டுக்குதான் நாங்க போனோம். எங்க கிராமத்தில் ஓட்டு வீடு இல்லாமல் காரை வீடு கட்டி வாழ்பவர். அந்த ஊர்ல பாதி நில புலன் அவருது. மதுரையில் ஒரு ஹோட்டல் நடத்திட்டு இருந்தார்.

அவங்க வீடே கூட்டமா இருந்துச்சு. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலைய பார்த்திட்டு இருந்தாங்க. நேத்து வந்த மாமியும் அங்க உட்கார்ந்திருந்தாங்க.

“வா பங்கஜம், பெரிய மாமிகிட்ட சொல்லிட்டேன். போய் பாருன்னா”.

பெரியமாமி எங்க அம்மா மாதிரி இருந்தா. அந்த மாமா எங்க அப்பா மாதிரிதான் இருந்தார்.

“ வா பங்கஜம், குழந்தைய போட்டு அடிச்சயா? நமக்கு இதுதான் சாஸ்வதம்ன்னு எழுதியிருக்கா என்ன? நமக்கு கண்டிப்பா ஒரு வழி கிடைக்காமயா போயிடும். மாமாகிட்ட சொன்னேன். வடாம் போட ஆள் வேணுமின்னு தேடிக்கிட்டு இருக்கேன், மாமி வருவான்னா வேலையில சேர்ந்துக்க சொல்லுன்னு சொல்லிட்டார். பையன ஸ்கூலுக்கு அனுப்பு. சாப்பாடு, சம்பளம் கிடைக்கும் சம்மதமான்னா”.

என் அம்மா முகத்தில ஒரு மலர்ச்சி. அவளுக்கு வாழ்க்கையில கிடைச்ச பிடிப்பு, என் தலையில தடவுனதுல தெரிஞ்சுச்சு. அவளோட ஒட்டிக்கிட்டேன்.

அடுத்த நாள் நான் ஸ்கூலுக்கு அனுப்பபட்டேன். படிப்பு எனக்கு சுலபமா வந்துச்சு. அம்மா டெய்லி வேலைக்கு போய்ட்டு வந்தா. அவ வடாம் பிடிச்சு போய், தனியாவும் வந்து அவகிட்ட வாங்கிட்டு போனா. பெரிய வீட்டுகாரர் ஒரு நாள்,

“ மாமி உங்க வடாம் எல்லாருக்கும் பிடிச்சிருக்கு. தனியா கவர் போட்டு விக்கலாம்ன்னு பார்க்குறேன். பெரிசா செய்ய உங்களால முடியுமா? இலாபத்துல பங்கு தர்ரேன்னார்”.

“மாமா, இந்த ஜீவன் உசிரோட இருக்க நீங்க தர்ற சாப்பாடு போதும். என் குழந்தை படிப்ப மட்டும் பார்த்துக்கோங்க, மாடா உழைக்க நான் ரெடின்னா”.

அவர் என்னை அழைத்து அணைத்து,” இவன் பெரிய படிப்பு படிக்கிறது என் பொறுப்பு மாமின்னார்”.

என் பள்ளியின் தரம் மாறியது. ஹாஸ்டலில் சேர்க்கபட்டேன். மிக பிரமாதமாக படித்தேன். என் அம்மாவின் பெயர் கால போக்கில் வடாம் மாமியாக மாறி போனது. லீவுல வருவேன். அம்மாவின் சாப்பாடு தேவாமிர்தமாக இருக்கும். கேலியாக ஒரு நாள் நானும் வடாம் மாமி என்றேன். அவள் முகத்தில் நீண்ட நாள் கழித்து சிரிப்பை பார்த்தேன்.

“ நன்னா படிக்கிறேயா குழந்தே?”

“ நல்லா படிக்கிறேன்மா. இன்ஜீனியரிங்க் படிக்கணும்”.

“மாமாகிட்ட சொன்னியா?”

“ சொன்னேன்ம்மா. அவர் எதை பத்தியும் கவலைபடாம படின்னு” சொன்னார்.

தெய்வம் மனுஷ ருபம்ன்னா அம்மா.

நாட்கள் வேகமாக ஓடியது. காலேஜ் நாட்களில் லீவுல வரும் போது, பெரிய வீட்டுகாரர் அவர் கணக்கு வழக்குகளை பார்க்க வர சொல்லுவார். அவர் வீட்டுல எனக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்தது.

படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்தது. சென்னையில வேலை. அயல்நாட்டுடன் தொடர்புடைய தனியார் நிறுவனத்தில் வேலை. ஆர்டர் கிடைத்தவுடன்,நேராக அம்மாவின் காலடியில் ஆர்டரை வைத்தேன். மாமாகிட்ட சொல்லிட்டியான்னு எழுந்து உள்ளே ஓடி அவர் காலில் விழுந்தா.

பதறி போய் எழுந்திருச்சார். “மாமி என்ன இப்படி பண்ணுறீங்க. இந்தா மங்களம், வந்து பங்கஜம் பண்ணுறத பாருன்னு” அவர் சம்சாரத்தை அழைத்தார்.

மடங்கி விழுந்த என் அம்மாவின் முதுகு குலுங்குவதை பார்க்கும் போது அவர் அழுகிறாள் என்பது தெரிந்தது. எனக்கு என் அம்மா அழுவதை பார்க்கும் போது அழுகை வருவது போலும் இருந்தது. கோபமும் வந்தது.

“ என்னடா, என்னாச்சு?”

“எனக்கு அப்பாயிண்மெண்ட் ஆர்டர் வந்திருக்கு மாமா, அத சொன்னேன். சந்தோஷத்தில உங்ககிட்ட வந்து அழுறா”.

“கங்கிராட்ஸ். ஏம்மா, உன் கஷ்டத்துக்கு விமோசனம் கிடைச்சிருக்கு. சந்தோஷமா சொல்லாம, அழுதுட்டு இருக்க. எழுந்திரி. டேய் மாமிகிட்ட கொடுத்து, சாமிகிட்ட வைக்க சொல்லு”.

மாமி சாமிகிட்ட என் ஆர்டரை வைச்சு எடுத்து மாமாகிட்ட கொடுத்தா. அவர் காலில விழுந்து வாங்கிக்கிட்டேன்.

“டேய் வேலையில சேர்ந்து, வீடு பார்த்து அம்மாவை அழைச்சு போய் வச்சுக்கோ”.

“என்ன மாமா கேலி பண்றேளா. நான் எங்கேயும் போ மாட்டேன். அவன அவனா பார்த்துக்குவான். நான் இருக்குறது உங்களுக்கு கஷ்டமாயிருக்கான்னா அம்மா.

“ஏண்டி உன் வடாம் இல்லாம எங்க வியாபாரம் இருக்குமா? நீ இருக்குறது எங்களுக்கு எப்படி கஷ்டமாயிருக்கும். நீங்க சும்மா இருங்கன்னு” மாமாவை அதட்டினாள் மாமி.

என் அம்மாவின் முகத்தில் ஒரு கம்பீரம் குடி வந்ததை அன்று நான் உணர்ந்தேன். இந்த ஒரு தருணத்தை அவள் கற்பனை செய்து இருப்பாளா? என்ன விதமான எண்ணங்களுடன் அவள் மனது இருந்திருக்கும்? வருடத்தில் பல நாட்கள் அவளது அருகாமையில் இல்லாமல்தான் சென்றிருக்கின்றது. அந்த தனிமையில் அவள் என்ன செய்திருப்பாள். வடாம் போடும் பக்குவத்தை பற்றிய சிந்தனையை தவிர வேறு என்ன இருந்திருக்க முடியும். அவளிடத்தில் நேராக கேட்க எனக்கு தைரியம் இல்லை.

வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் கழித்து ஒரு திருப்பம் ஏற்பட்டது. என்றுமே திருப்பம் சிலருக்கு குழப்பமாகவும், சிலருக்கு தெளிவாகவும் இருக்கும். எனக்கு குழப்பமான திருப்பம் வந்தது. அது பெரிய வீட்டுகாரரின் பெண் உருவத்தில் வந்தது. அவரது பெண் குமுதினி, நல்ல அழகு. நல்ல படிப்பு. என்னை விட இரண்டு வயது கம்மி. படிக்கும் காலத்தில், எப்போதாவது அவர் வீட்டில் நேருக்கு நேர் பார்க்கும் போது குசலம் விசாரிப்போம். படிப்பை பற்றி பேசுவோம். படிக்கும் காலத்தில் வேறு எந்த விதமான ஈர்ப்பும் அவள் மேல் ஏற்படவில்லை.

வேலைக்கு சேர்ந்து, 6 மாதம் கழித்து அவள் வீட்டுக்கு போயிருந்த போதுதான் அவள் பார்வையிலும், என் பார்வையிலும் ஒரு வித்தியாசம் ஏற்பட்ட்து. நான் அவளுக்கு ஒரு ஆண் மகனாகவும், எனக்கு அவள் ஒரு பெண் மகளாகவும் தெரிந்த்து காதல் என்றால், எங்களுக்குள் அப்படி ஒர் உணர்வு ஏற்பட்டதை எங்களால் தவிர்க்க முடியவில்லை.

விஷயத்தை போட்டு முதலில் உடைத்தது அவள்தான். என்னதான் வேலையில் சேர்ந்து அந்தஸ்த்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அவர்கள் போட்ட சலுகையில் வளர்ந்த ஒருவன், அவர்களுக்கு மருமகனாக வருவது அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. என்னை மருமகனாக ஏற்பதால் மற்றவர்கள் ஏளனத்துக்கு ஆளாகி விடுவோம் என்று மாமாவும், மாமியும் உறுதியாக நம்பினார்கள்.

“பங்கஜம், உன் பிள்ளையாண்டான் என்ன காரியம் செஞ்சிருக்கான் பார்த்தியா? அவன படிக்க வைச்சதுக்கு இதுதான் அவன் செலுத்துற நன்றியா? படிச்சா புத்தி மாறிடுமா என்ன? இவளுக்கு அவன் புத்தி சொல்ல வேணாம்? என் சம்பந்தியா ஆகணுமின்னு உனக்கும் ஆசை இருந்துச்சா என்ன?”

சிவ சிவான்னு என் அம்மா காதை பொத்துகிட்டு, ஒரு கட்டைய எடுத்து அடிக்க ஆரம்பிச்சா. உடம்பின் எல்லா பக்கத்திலும் அதே அடி. ஆனால் எனக்கு வலிக்கவில்லை.

“டேய் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண நினைக்கிறேயடா. பாவ பட்டு நின்ன நம்ம காப்பாத்துன்ன தெய்வம்டா. அவர நோக வைக்க கூடாதுடா? போயிடு இங்க வராத. உனக்கு கல்யாணம் பண்ணனுமின்னு ஆசை வந்திருந்தா, மாமாகிட்ட சொல்லு. அவர் நல்ல பொண்ண பார்த்து கட்டி வைச்சிருக்க மாட்டாரா. ஏண்டா உன் புத்தி இப்படி போச்சு. உசர உசர பறந்தாலும் ஊர் குருவிடா நம்ம. அவாளுக்கு சரிசம்மா ஆகனுமின்னு நினைக்கிறதே பாவம்டா. போய் அவர் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு போ. இனி இங்க வராதன்னு மாமா இருந்த திசைய நோக்கி கும்புட்டு போய்ட்டா”.

நான் கோபத்துல வீட்டுக்கு போய் என் டிரஸ்ஸ எடுத்துட்டு என் பிரண்ட் கோபாலன் வீட்டுக்கு போய்ட்டேன். அன்னைக்கு நைட்டே நானும் குமுதினியும் கிராமத்த விட்டு ஒடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். கிராமமே அல்லோகல பட்டு, எங்க அம்மா சாப்பிடாம, வீட்ல படுத்து கிடந்ததாகவும், குமுதினி அம்மாதான் அவளை சமாதானப் படுத்தினதாகவும் கோபாலன் எனக்கு லெட்டர் எழுதி இருந்தான். கிராமத்துக்கும் எனக்கும் தூதுவன் கோபாலன் தான். நான் அடுத்த இரண்டாவது மாசமே. கம்பெனி மூலமாக அமெரிக்கா போய்விட்டேன்.

கால வேகத்துல, பணம் மனுஷனை பிரிக்கிற மாதிரியே இணைக்கவும் வைக்கின்றது. வியாபாரத்துல வந்த நஷ்ட்த்தை ஈடு கட்ட குமுதினி அப்பா கஷ்டபடுறார்ன்னு கோபாலன் கிட்ட இருந்து லெட்டர் வந்தது. அவங்க அப்பாகிட்ட குமுதினி போன்ல விரிவா பேசி, மன்னிப்பு கேட்டு பணத்தை அனுப்பி வச்சா.

என் மாமா ஒரு விரிவான கடிதம் எழுதினார். நான் அவரோட போன்ல மன்னிப்பு கேட்டு பேசினேன். என் அம்மாவை சமாதானபடுத்த மட்டும் எனக்கு தைரியம் வரல. அவகிட்ட என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்கிறா. எங்க மாமாவே சமாதானம் சொன்னாலும், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யுறது பாவம். என் புள்ள பாவம் செஞ்சுட்டான். அவன் செஞ்ச பாவத்துக்கு நான் பரிகாரம் பண்ணுறேன். அவன் எனக்கு வேணாம்ன்னு சொன்னதையே சொல்லி சொல்லி புலம்புறான்னு கோபாலன் எனக்கு லெட்டர் எழுதினான்.

டோண்ட் வொரி. நாம நேரா போனா சமாதானப் படுத்திறலாம் டியர்ன்னு என் மனைவி சமாதானம் சொன்னாலும், நேரே வரக் கூடிய தைரியம் வரல. உங்க அம்மாவுக்கு உடம்பு ரொம்ப சரியில்ல. இனியும் லேட் பண்ணாதன்னு கோபாலன் அழுத்தி சொன்னவுடனேதான் வந்தேன்.

“நீங்க இன்னும் முன்னாடி வந்திருக்கனும்” இது என் அத்தை முறை.

வந்திருந்தா, என்னை மன்னித்திருப்பாளா. வைராக்கியத்திற்க்கு பேர் போனவள். அவ அண்ணன் வீட்டுக்கு அவ போனதேயில்லை. யார் யாரோ சமாதானப் படுத்தியும், அவ சமாதானமாகவில்லை. என்னை மட்டும் மன்னித்திருப்பாளா. இன்று மரணப் படுக்கையில், அவளது இயலாமையில் பார்க்க போகின்றேன். கோபத்தை நிச்சயமாக காட்ட முடியாது. ஆனால் மன்னிப்பாளா? அவள் மன்னிச்சாலும் மன்னிக்கா விட்டாலும், நான் செய்தது அவ்வளவு பெரிய பாவமா? என்ற கேள்விக்கு எனக்கு விடை கிடைக்குமா? என்று தெரியவில்லை.

“டியர் அழாதீங்க. பீளீஸ் கண்ட் ரோல் யுவர் செல்ப்” என்று என் மனைவி சமாதானபடுத்தினாள். கார் ஊருக்குள் நுழைந்தது, ஊரின் மாற்றங்கள் கோபாலன் மூலமாக தெரிந்திருந்ததால் எனக்கு எந்த விதமான ஆச்சர்யமும் வரவில்லை..

என் வீட்டின் முன் கார் நின்றது. அது மட்டும் மாறவில்லை. என் அம்மா மட்டும் என்னை மன்னித்திருந்தால், வீட்டை இப்படியா வைத்திருப்பேன். அரண்மனை போல் மாற்றி இருக்க மாட்டேனா? கோபாலன் கார் கதவை திறந்து விட்டான். அவனை அணைத்து ஓவென அழுதேன். நான் செய்ய வேண்டிய பல காரியங்களை என் அம்மாவுக்காக செய்தவனில்லையா. என் கண்ணீரால் அவனை நனைப்பதுதான் என் நன்றியாக இருக்க முடியும்.

“டேய் போதும்டா, வா அம்மாவ பார்க்கலாம். முழிச்சுட்டுதான் இருக்கா. ஊசி போட்டா தூங்கிடுவா”.

“வேண்டாம்டா, நான் போகல. வெளிய நிக்கிறேன்னு” சொல்லிட்டு, என் பையனை அழைத்து,

“கோ அண்ட் சீ யுவர் கிராண்ட் மதர் பாய்”.

அவன் உள்ளே சென்றான். நேரம் யுகமாக கழிந்தது. பத்து நிமிடம் கழித்து,

“டாட், ஐ திங்க் கிராண்ட் மா டைட். என் கை பிடிச்சபடியே இருந்தாங்க. சிரிச்சாங்க. அப்புறம் ஐ திங்க் ஷி டைட்”.

உள்ளே ஓடினேன். உழைச்சு ஒடாகின உடம்பு, வடாம் பிழிந்து காய்த்து போன கை, முகம் மலர்ந்திருந்த்து. என் பையனை பார்த்து அவள் சிரித்த சிரிப்பு இன்னும் அவள் முகத்தில் இருந்தது. அதுதான் எனக்கான மன்னிப்பு.

அவள் காலில் முகம் புதைத்தேன். என்னோடு சேர்ந்து தீடிரென என் பையனும் அழ ஆரம்பித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *