வடக்கத்தி மாப்பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 17, 2017
பார்வையிட்டோர்: 9,895 
 
 

லண்டன்:

அந்த அதிரிச்சியை எப்படித்தாங்குவது என்று இலட்சுமிக்குத் தெரியவில்லை.

அவள் அந்த விடயத்தைச் சொன்னதும் அவளின் குடும்பத்தினர் அவளைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள் என்று எவ்வளவு கற்பனை செய்திருந்தாள்.

அவளின் குடும்பத்தினர் அவளிடம் நடந்துகொண்ட முறையைப் பற்றிய நினைவு தொடர்ந்தது.அவள் எரிச்சலுடன் நடந்தாள்.அவள் மனம் மிகவும் கலங்கியிருந்தது. பாதாள ரயில் வாசல் அவளை ஆவென்று வரவேற்றது.கீழே போகும் எஸ்கலேட்டர் வேலைசெய்யவில்லை.அவள் கீழேயிறங்கும் படிகளில் தடதடவென விரைவாக இறங்கிளாள்.அவள் முன்னால் ஒரு கறுப்பு நிற முதிய பெண்,மிகவும் கஷ்டப்பட்டு நடந்துகொண்டிருந்தாள்.அதைக்கண்ட ஒரு வெள்ளையின வாலிபன் அவளுக்குக் கைகொடுத்து உதவி செய்து கூட்டிக் கொண்டுபோகிறான்.

இன மத நிற வர்க்க வேறுபாடற்று அந்த இருமனிதர்களும்,’மனித நேயம்’என்ற பரிமாணத்துக்குள் பிணைந்து நடந்து கொண்டிருந்தது அவளின் கவனத்தைக் கவர்ந்தது.

இலட்சுமி .இருபத்தி எட்டு வயதான, பட்டப் படிப்பு படித்த ஒரு பெரிய உத்தியோகத்தர். ஆனால் அவளை அவள் குடும்பத்தினர் ஒரு குழந்தைபோல் நடத்துவதை அவளாற் புரிந்துகொள்ளவோ அல்லது தாங்கிக்கொள்ளவோ முடியவில்லை.

‘ மிகவும் சிக்கலான உலகத்தைப்பற்றி உனக்கென்ன தெரியும்?’ அவளின் தாத்தா அவளிடம் அப்படித்தான் கேட்டார். அவருக்கு எண்பது வயதாகிறது. எண்பது வருட அனுபவமும் மூன்று தலைமுறைகளைத் தாண்டிய அவரின் கருத்துக்களும், லண்டனில் பல தரப்பட்ட மக்களுடனும் படித்த,வேலைசெய்யும் அவளால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று அவர் நினைப்பது அவளுக்குப் புரியும்,ஆனால் அவை அத்தனையையும் அவள் ஏற்றுக் கொள்ளவேண்டும் அவர் எதிர்பார்ப்பது அவளின் சுயமையை, அறிவை மட்டப்படுத்தியதாக அவள் நினைக்கிறாள்.

‘நீ,வாழ்க்கை பற்றியோ வித்தியாசமான மனிதர்கள் பற்றியோ அனுபமில்லாதவள்,உணர்ச்சி வசப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுத்து உன் எதிர்காலத்தைப் பாழாக்கிக்கொள்ளாமல்;, இந்த விடயத்தில் அறிவு பூர்வமாக ஒரு முடிவு எடுப்பது நல்லது பாட்டி இலட்சுமியின் அன்புடன் தடவிக்கொடுத்தபடி புத்திமதி சொன்னாள்.

‘கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர்……’ மாமா மேற்கொண்டும் ஏதோ சொல்ல வந்தவர்,இலட்சுமியின் கண்களிற் தெரிந்த கோப நெருப்பைக்கண்டதும் தனது பேச்சைப் பாதியில் முடித்துக்கொள்கிறார்.

நினைவுகள் அவளைத் தொடர, அவள் அவசரமாக ரெயினில் ஏறிக்கொண்டாள்.அவளுக்குப் பின்னால் ஓடிவந்து ஏறிக்கொண்டவன் அவளில் மோதிக்கொண்டதால் இலட்சுமியிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டான்.

யார் தன்னில் மோதியவன் என்றுபார்க்கத் தன் பார்வையை உயர்தியவளின் விழிகள், கம்பீpரமான தோற்றமுடைய,இந்திய உபகண்டத்தைச் சேர்ந்த, அந்த இளைஞனின்; விழிகளில் மோதித் தாழ்ந்துகொண்டது.அவள் நெஞ்சில்; நெருஞ்சி முட்கள் குத்துவதுபோன்ற வேதனை. சட்டென்று,அவளின் அன்பனின் விழிகள் ஞாபகம் வந்தது.அவளின் அன்பன் நாராயணிண் அழகிய விழிகள் அவளில் மேய்வதை வாழ்நாள் பூராவும் ரசிக்கலாம். அவளில் இன்று மோதிக்கொண்டவன் ஒரு ஆசிய நாட்டு இளைஞன்.அவன் பெயர் என்னவாக இருக்கும்? ராஜேந்திரனா? ரஹீமா,டேவிட்டா,அல்லது வைத்தியநாதனா அல்லது அவளின் தகப்பனின் பெயர்போல் சுந்தரலிங்கமா?

ட்;ரெயினால் இறங்கியதும்,ஆபிசுக்குப் போகும் வழியில் இருக்கும் இந்தியரின் கடையில் ( அல்லது பாகிஸ்தானியர்? அப்படியிருக்காது, திருமதி கடைக்காரி குங்குமப் பொட்டு வைத்திருந்தாள்) வழக்கம்போல் ‘கார்டியன்’ பத்திரிகை வாங்கிக் கொண்டாள்.

‘என்ன உங்கள் முகம் ஒருமாதிரியிருக்கிறது,’ திருமதி கடைக்காரி இலட்சுமியிடம் கேட்டாள். இலட்சுமி பத்திரிகை வாங்கும்போது எப்போதாவது இருந்து சில வார்த்தைகளைத் திருமதி கடைக்காரியிடம் பேசுவதுண்டு.

‘நல்ல மழை, அல்லது சரியான குளிர்’ என்பதுபோல் இரண்டு சொற்களை இருவரும் பரிமாறிக் கொள்வதுண்டு.இன்று திருமதி கடைக்காரி இலட்சுமியிடம் நான்கு வார்த்தைப் பரிவர்த்தனை செய்தாள்.

‘நீங்கள் இந்தியரா?’ இலட்சுமி சட்டென்று திருமதி கடைக்காரியை வினவினாள்.

‘ஆமாம்,அதற்கென்ன திடிரென்று?’ திருமதி கடைக்காரியின் குரலிற் குழப்பம்.

இலட்சுமி பேப்பருக்குப் பணம் கொடுத்தபோது,’ஏன் நான் தேவையில்லாத கேள்வி கேட்டேன்’ என்பதை நினைத்துத் தன்னைக் கடிந்து கொண்டாள்.

அந்த உணர்வில்,தர்மசங்கடத்துடன் கடையைவிட்டு வெளியே வந்தாள். இன்று நாராயணன் போன் பண்ணுவான்.’உனது தாய் தகப்பனுக்கு எங்கள் விடயம் பற்றிப் போன் பண்ணினாயா?’ என்று கேட்பான்.

அந்த நினைவுகளுடன் மாரடிக்காமற் தன் கைப்பையைத் திறந்து ‘வாக்மென்;னை’ எடுத்துத்தன் காதில் மாட்டிக்கொண்டாள்.’ஜோன் லெனனின்’, ‘இமாஜின்’ என்றபாட்டு அவளின் மூளைக்குள்த் தாவியது. பேதங்கள் இல்லாத புதிய உலகைக் கற்பனை செய்யும் பாடலது! அவள் நடையும் ஆபிசை நோக்கி விரைந்தது.

ஆபிஸ் றிசப்சனிலிருந்த மிஸஸ் பீட்டர்சன் இலட்சுமிக்குக் குட்மோர்னிங் சொன்னாள். பெரிய ஆபிஸ் கதவைத் திறக்கும் வழியில்,,இலங்கையைச் சேர்ந்த மிஸ்டர் மூர்த்தி குட்மோர்னிங் சொன்னார்.அவர்கள் இருவரும் இருவேறு டிபார்ட்மென்டுகளில் வேலை செய்கிறார்கள்.அதனால் அடிக்கடி சந்திப்பது குறைவு.அவருக்கு அவளின் தந்தையின் வயதைவிடக் கொஞ்ச வயது குறைய இருக்கலாம்.அவர் எக்கவுண்ட டிப்பார்ட்மென்டில் வேலைசெய்கிறார்.இவள் ஐ.டி.டிப்பார்ட்மென்டில் வேலை செய்கிறாள்.

அவளுடைய டிப்பார்ட்மென்டில் இன்னும் யாரும் வராததால் வெறிச்சென்று கிடந்தது.இப்போதுதான் ஒன்பது மணியாகிறது. இனித்தான் ஒவ்வொருத்தராக வந்துசேருவார்கள். இன்னும் சில நிமிடங்களில் ஆபிஸ் நிறைந்துவிடும்..

வேலை ஆரம்பிக்கமுதல் ஸ்ராவ் றூமுக்குப் போய்க் காப்பிபோடும்போது,யாரோ வருவதன் சந்தடி கேட்டது. பின்னால்த் திரும்பிப் பார்க்காமலேயே, தனக்குப் பின்னால் யார் நிற்கிறார்கள் என்று இலட்சுமியினாற் சொல்ல முடியும்.அவளுடன் வேலை செய்யும் உஷா பாவிக்கும் வாசனைத்திரவியம் இலட்சுமிக்குப் பழக்கம்.

அவள் வந்து குட்மோர்னிங் சொன்னதும் இலட்சுமி பதிலுக்குக் குட்மோர்னிங் என்று முணுமுணுத்தாள். உஷா,இந்தியத் தாய்தகப்பனுக்கு லண்டனிற் பிறந்த நாகரீகமான பெண். கலகலவென்று எல்லோருடனும் பழகுவாள். அவளுக்கு நிறையச் சினேகித சினேகிதிகள் இருக்கிறார்கள். இலட்சுமியின் நெருங்கிய சினேகிதிகளில் ஒருத்தி.

இலட்சுமியின் குரலில் பிரதிபலித்த சோகத்தை உணர்ந்த உஷா இலட்சுமியின் அருகில் வந்து,’என்ன முகம் நீண்டபோயிருக்கு?’என்று கேட்டுக்கொண்டு இலட்சுமியின் முகத்தைத்தன் அழகிய நீண்ட விரல்களாற் தடவி விட்டாள். உஷா மிகவும் நேர்மையானவள்.’வாழ்க்கையில் மிக முக்கியமான செல்வம் நேர்மையாக வாழ்வது’என்று அவள் அடிக்கடி சொல்வாள்.உஷாவுக்கும் இலட்சுமிக்கும் ஒரேவயது. உஷாவுக்குத் திருமணமாகி மூன்று வருடங்களாகின்றன.தாய் தகப்பனின் சொற்படி ஒரு இந்திய மாப்பிள்ளையைக் கட்டிக்கொண்டவள். இப்போது கணவனைப் பிரிந்து வாழ்கிறாள்.

லண்டனிற் பிறந்து வளர்ந்தாலும் இந்தியாவுக்குப்போய் தாய் தகப்பன் சொற்படி திருமணம் செய்து எதிர்காலத்தை அமைப்பதற்கு, உஷாபோல் எத்தனையோ பெண்கள் மேற்கு நாடுகளில் வாழ்கிறார்கள்.

உஷா இலட்சுமியைக் கூர்ந்து நோக்கினாள்.’வீட்டில் கல்யாணம் பேசுகிறார்களா?’ உஷா காப்பியை ஊற்றிக்கொண்டு இலட்சுமியைக் கேட்டாள்.

‘உனக்கு அது எப்படித்தெரியும?’; என்பதுபோல் இலட்சுமி உஷாவைப் பார்த்தாள்.இருவர்கண்களும் ஒன்றாகமோதி ஒருத்தரை ஒருத்தர் அளவிட்டன.

‘என்ன உன்னுடைய மிஸ்டர் நாராயணனை உனது வீட்டாருக்குப் பிடிக்கலியா?’உஷாவின் குரலில் குறும்பு.

‘யாருக்குமே பிடிக்கல்ல’இலட்சுமியின் கண்களில் சட்டென்று நீர் கனத்தது.

உஷாவுக்கு,இலட்சுமியின் காதல் தெரிந்திருந்தாலும்,இலட்சுமி அதுபற்றி உஷாவிடம் அதிகம் பேசமாட்டாள். உஷா இப்போதுதான் அவளின் வாழ்க்கையில் பெரிய ஒரு திருப்பத்தில் நுழைந்து வந்திருக்கிறாள்.அவளிடம்போய்த் தன் பிரச்சினைகளைச் சொல்லவெளிக்கிட்டால் உஷா, இந்திய பெண்களுக்கெதிரான ஆண்களின் அடக்கு முறைத்தனம்பற்றிப் பிரசங்கம் வைக்கத் தொடங்கிவிடுவாள்.

இலட்சுமி தனது நீர்; கனத்த கண்களுடன் உஷாவைப் பார்த்தாள்.இருவரும் எம்.ஏ பட்டம்பெற்றவர்கள். கிட்டத்தட்ட ஒரே விதமான கலாச்சாரத்திலிருந்து வந்தவர்கள்.

உஷா,சட்டென்று இலட்சுமியை அணைத்து முத்தமிட்டபடி,’ ஐ விஷ. யு ஆல் த பெஸ்ட்..எல்லாம் சரியாய் நடக்கும்..கவலைப்படாதே’.

இலட்சுமி,அவளின் அன்பன் நாராயணன் பற்றிச் சொன்னபோது,’எதற்கும் கவனமாக இரு இலட்சுமி’என்று புத்திமதி சொன்னாள்.

‘உஷா,நீ கல்யாணம் செய்துகொண்ட இந்தியனுக்கும் உனக்கும் சரிவராவிட்டால் எல்லா ஆண்களும் அப்படித்தான் என்று நினைக்காதே’இலட்சுமி பதட்டத்துடன் சொன்னாள்.

‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்ப்பதில்லையா?’ உஷா பெருமூச்சுவிட்டாள்.இருபத்தியெட்டு வயதில் வாழாவெட்டியான துயரம் முகத்தில் தெரிந்தது.

காப்பியைக் கையிலெடுத்துக்கொண்டு,ஆபிஸ் பக்கம் நகர்ந்தாள் உஷா. அவளது அழகை ரசித்துக் கொண்டு அவளுடன் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியவனுடன் ஒத்துப்போகாமல் பிரிந்த துயர் அவளிம் ஒட்டிக்கிடக்கிறது. ஆபிஸில் இன்னும் ஜனநடமாட்டம் கூடவில்லை.

‘எங்கள் இந்து மதக் கலாச்சாரத்தில் உள்ள மனித நேயத்துக்கெதிரான சாதி,மத,இன,வர்க்கக் கொடுமைகளுக்கு எதிராகத்தானே புத்த மதமும்,iஐனமும் சீக்கிய மதங்களும் இந்தியாவிற் தோன்றின?.உலகத்திலேயே பெரிய நாடுகளிலொன்றான, சீனாவிலும்,அதற்குப் பக்கத்து நாடான ஜப்பானிலும்,என் உலகின் பல பாகங்களிலும் புத்தமதம் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது.அதற்குக்காரணம், இந்து சமயம் தூக்கிப் பிடிக்கும் தீண்டாத்தன்மை, பெண்ணடிமைத்தனம், போன்றவைதான் காரணமென்று தெரியவில்லையா?’உஷாவின் பல தர்க்கங்களிலும் இவை ஒரு சில.

உஷா தனது எதிர்காலம்பற்றி எத்தனையோ கற்பனைகளை வளர்த்துக்கொண்டவள்.கல்யாணமாகி இரண்டாம் வருடம் வீங்கிய கண்;களுடன் ஆபிசுக்க வந்தபோது இலட்சுமி திடுக்கிட்டு விட்டாள்.

‘இதெல்லாம் கல்யாண வாழ்க்கையில் சர்வசாதாரணம் என்று அம்மா சொல்கிறாள். கணவனின் அன்புச் சேட்டைகளால் சிவக்க வேண்டிய அவள் கன்னம் அவனது கொடுமையான தாக்குதலால் கறுத்துப்போயிருந்தது.

இலட்சுமிக்கு யோசனை பிடித்துக்கொண்டது.’நாராயணன் இப்படி இருக்க மாட்டான்..’ அவள் அவசரமாகச் சொன்னாள்.

அவனை இரண்டு வருடங்களுக்கு முன்,ஒரு இன்போர்மேஷன் டெக்னோலோஜி ட்ரெயினிங் ஒன்றில் இலட்சுமி சந்தித்தாள்.

மும்பாயிலிருந்து,தனது மேற்படிப்புக்காக லண்டன் வந்திருப்பதாகச் சொன்னான்.அவனது அடக்கமான குணம்,அழகான தோற்றம்,பெண்களைக் கவுரமாக நடத்தும் தன்மை என்பன இலட்சுமியை அவனுடன் பேசிப் பழக உந்துதலான காரணிகளாக அமைந்தன.

ஓரு கிழமை ட்ரெயினிங் முடியவிட்டு அவர்கள் பிரிந்தபோது, சம்பிரதாயமாகத் தங்கள் விசிட்டிங் கார்ட்டுகளைப் பரிமாறிக்கொண்டார்கள்.அதறகு;மேல் அவள் அவனிடமிருந்து ஏதும் மேலதிக தொடர்பு வரும் என்று அவள் நினைக்கவில்லை.

அதன் பல மாதங்களின் பின் லண்டன் சவுத் பாங் என்ற இடத்திலுள்ள நாஷனல் பிலிம் தியேட்டரில் இந்தியப் படவிழா நடந்தபோது,இலட்சுமி அவளின் மாமாவுடன் மிராள் சென் என்ற இந்திய முற்போக்கு டைரக்டரின் படம் பார்க்கச் சென்றாள்.

நாராயணன் ஒரு ஆங்கிலச் சினேகிதனுடன் படத்திற்கு வந்திருந்தான்.இருவரும் ஹலோ சொல்லிக்கொண்டார்கள். இலட்சுமியின் மாமா ஏதோ வாங்க நகர்ந்தபோது,’உங்கள் பார்ட்னரா?’என்று அவன் தயக்கத்துடன் தொடங்கினான். அவன் குரலில் ஏமாற்றம் தொனித்தது. அவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். ‘அவர் எனது மாமா, …அம்மாவின் கடைசித் தம்பி…அவருக்கும் என்னைப்போல் முற்போக்கான படங்கள் பார்க்கப் பிடிக்கும்’அவள் சிரித்தபடி சொன்னாள்.அவன் முகத்தில் மலர்ச்சி.

‘அப்படி நினைத்தற்கு மன்னிக்கவும’அவன் கண்கள் இவள் முகத்தில் மேய்ந்தன.

அடுத்த நாள் அவன் போன் பண்ணினான். இவள் மரியாதைக்காக,’இன்னொருதரம் சவுத் பாங் தியேட்டரில் சந்திப்போம்’ என்றாள்.

ஏன் ஒரேயிடத்தில் சந்திக்கவேண்டும்?…..’ அவன் தர்மசங்கடப்படுவது அவளுக்குப் புரிந்தது.அவள் சில வினாடிகள் மௌனமானாள்

‘அல்பேர்ட் ஹாலில் இந்தியன் மியுசிக் புரோக்ராம் ஒன்றிருக்கிறது……’அவன் தயங்கினான்.’நீ என்னுடன் சங்கீதம் கேட்க வந்தால் மிகவும் சந்தோசப் படுவேன் என்று அவன் தன் மனதுக்குள் சொல்வது இவளுக்குப் புரிந்தது.

‘சரி, நான் உங்களை கென்சிங்டன் ஸ்ரேசனில் நாளைக்குப் பின்னேரம் சந்திக்கிறேன்…டிக்கட் எடுத்து வையுங்கள்’ அவள்,நிதானமாக, துணிவாகச் சொல்லி அவனின் தர்மசங்கடத்தைப் போக்கினான்.

அவள் லண்டனிற் பிறந்து வளர்ந்தவள். பலதராப் பட்ட கலாச்சாரப் பின்னணியுள்ளவர்களுடன் படித்தவள், பழகுபவள், வேலை செய்பவள்.நல்லவர் கெட்டவர்களை ஓரளவு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்தவள். ஓரு கிழமை ட்ரெயினிங் நடந்த காலத்தில் அவனுடன் பல தடவைகள் பல மாணவர்களுனடன் சேர்ந்து சாப்பிட்டிருக்கிறாள். ட்ரெயினிங் முடிந்த பின்னேரங்களில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டேல் லாபியிலிந்துகொண்டு மணிக்கணக்காகப் பலதையும் பற்றிப் பேசியிருக்கிறார்கள். வெளியுலகம் பற்றிய அவனின் முற்போக்குக் கருத்துக்கள் பிடித்துக் கொண்டன. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவனின் தாத்தா சிறைக்குப் போன கதை சொன்னான்.பலதரப்பட்ட எழுத்தாளர்களின் படைப்புக்களைப் படித்திருப்பது அவனின் பேச்சிலிருந்து புரிபட்டது.

பிரித்தானிய எழுத்தாளர் தோமஸ் ஹார்டியின் படைப்புக்கள் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னான்.அவளுக்குப் பிடித்த கிளாசிக்கல் எழுத்தாளர்களில் தோமஸ்ஹார்டியும் ஒருத்தர் என்பதை இலட்சுமி அவனுக்குச் சொல்லவில்லை.இருவருக்குமுள்ள இலக்கிய ரசனையுடன் வேறு எத்தனையோ விடயங்களால் அவனை அவளுக்குப் பிடித்து விட்டது. இதுவரையும் தனது திருமணவிடயத்தை ஏதோ காரணங்களால் ஒத்திப் போட்டவளுக்கு அவளைப் பார்த்ததும் தனது எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டாள்.

அவனைத் தெரிந்து அளவில், அவன் ஒரு நல்ல மனிதன் என்பதை அவள் உணர்வாள்.அவனைச் சந்தித்து இந்திய இசையை ரசிக்க அவள் தயங்கவில்லை

அப்போது லண்டனில் வசந்தகாலம்.அவள் கென்சிங்டன் ஸ்ரேசனில் இறங்கியபோது,அவன்,இவள் வருகையைப் பார்த்து,பரபரப்புடன் குட்டிபோட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்தான்.

அவள் வருவதை அவன் கவனிக்கவில்லை.தூரத்தில் நின்றபடி அவனையுற்று நோக்கினாள். அவன் கிட்டத்தட்ட ஆறடி உயரமுள்ள உயர்ந்த தோற்றமுடையவன்.சாதாரண இந்தியர்களை விட உயரமாக.மிகவும் கம்பீரமாகத் தெரிந்தான்.

அன்று அவர்கள் இந்திய கலை நிகழ்ச்சிப்போயிருந்தார்கள் அவள் தனது வாழ்நாள் முழுதும் ரசிக்கும், வீணை, புல்லாங்குழல் இசைகள் தேனாக அவள் மனதில் பாய்ந்தது.அதற்குக் காரணம் இசை மட்டுமல்ல.அவளருகில் இருப்பவனும்தான் என அறிந்து கொள்ள அவள் தயங்கவில்லை;.

‘நான் ஒரு இந்துமதத்தைச் சேர்ந்த இந்தியன்..ஆனால் நாத்திகவாதி..’அவன் அவர்கள் ஒன்றாக ட்ரெயினிங் எடுத்தகாலத்தில் சாப்பாட்டு மேசையில் வைத்துச் சொன்னபோது அவள் அதைப் பெரிதாக எடுக்கவில்லை.

‘அவன் பெயர் நாராயணனா, அவன் ஒரு பார்ப்பனியனாக இருக்கலாம்…அந்த ஆரிய பரம்பரைதானே இந்தியாவில் இத்தனை பிரிவுகளையும் உண்டாக்கி வைத்து இலாபம் அடிக்கிறது.’ உஷா அவனைப் பற்றிக் கேள்விப்பட்டதும் இப்படித்தான் வெடித்தாள்.

‘இவர்கள் இந்தியாவுக்கு வந்து, அங்கிருந்த ஆதிக்குடிகளைத் தங்கள் அடிமைகளாக வைத்திருக்க வர்ணாசிரமத்தையுண்டாக்கினார்கள்,ஆண்கள் கடவுளின் அம்சங்கள்,அவர்களின் தேவைக்குக் கடவுள் பெண்களைப் படைத்திருக்கிறார்.என்ற மனுதர்ம சாத்திரத்தை எழுதிப் பெண்களை அடிமைகள் மாதிரி நடத்துபவர்கள்’ கணவனிடம் அடிபட்ட தனது கன்னத்தைத் தடவிக்கொண்டு உஷா வெடித்தாள்.

தனது காதலுக்கும் மனுதர்மசாஸ்திரத்திறுகும் முடிச்சுப்போடும் உஷாவைக்குழப்பத்துடன் பார்த்தாள் இலட்சுமி.உஷா இலட்சுமியைப் பரிதாபத்துடன் பார்த்தாள் எந்தக் குழியில் போய் விழப்போகிறாய் என்ற பார்வையது.

‘சாதிகள் இல்லையடி பாப்பா என்றும் பெண் அடிமைத்தனத்துக்கும் எதிராக எழுதிய பாரதியும் ஒரு பார்ப்பனன்தான்’இலட்சுமி பதிலுக்கு வாதாடினாள்.

‘இந்தியக் கோயில் எதற்கும் போயிருக்கிறாயா?’உஷா கேட்டாள்.

‘காதலுக்கும் கோயில்களுக்கும் என்ன சம்பந்தம்?’ இலட்சுமியின் குழப்பம் அதிகரித்தது.காதல் என்பது இருவர் மனதில் ஆரம்பிப்பது,அதற்குக் கடவுள் சாட்சி உடனடிதோவையா? இந்திய மண்ணை மிதிக்காதவள் இலட்சுமி. இந்தியக் கோயில்கள் பற்றி உஷா கேட்டகேள்விகளுக்குத் தான் எந்தக் கோயிலுக்கும் போகவில்லை என்று தலையையாட்டினாள்.

‘கோயிலில் வைத்திருக்கும் கடவுள் சிலைகளைக் காட்டி இந்தப் பார்ப்பனிகள் பணம் கறக்கப் பார்ப்பனர்கள்.கடவுளே வியாபாரப்பொருளான நாட்டில், உண்மையான ஆத்மீக தேவைகளை நிறைவேற்ற இன்னொரு சமயம் வந்தாலும் ஆச்சரியமில்லை’.உஷா பேசிக்கொண்டேயிருந்தாள். அவள் லண்டன் மாதிரி இந்தியாவும் பரவாயில்லாத ஒரு ஒழுங்கான கட்டமைப்புடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பது பேச்சிற் தெரிந்தது.

;இந்தியக் கோயில்களில் பார்ப்பனியர் தொல்லை,கடவுளை மூலதனமாக்கிப் பிழைக்கிறார்கள், தெருக்களில் பிச்சைக்காரர் தொல்லை,அதுவும்; வெளிநாட்டாரைக்கண்டால் அந்தத் தொல்லை ஆயிரம் மடங்கு’ உஷாவுக்குத் தன் உள்ள ஆத்திரத்தை எதிலேயோ காட்டிக்கொண்டிருந்தாள்.இலட்சுமிக்கு அன்றைக்கெல்லாம் வேலையோடவில்லை.

கொஞ்ச நேரத்துக்குப் பின் ஸ்ராவ் கன்டினுக்குப்போனபோது மிஸ்டர் மூர்த்தி பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார்.’இந்தியாவில் நடக்கும் அரசியற் கூத்துகளைப் பார்த்தால் ஜனநாயகம் தற்கொலை செய்துகொள்ளும்போலிருக்கிறது’என்றார்.அவர் என்ன படிக்கிறார் என்று எட்டிப் பார்த்தபோது அவர், இந்தியாவில் வாஜ்பாஜி அரசாங்கம் விழுந்தபின் நடக்கும் அரசியற் பிரச்சினைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என்று தெரிந்தது.’இந்தியாவில் கிரிமினல்களும் கள்ளக் கடத்தற்காரர்களம் பாராளுமன்றத்தை ஆட்டிப்படைக்கிறார்கள் போலிருக்கிறது…சே சே என்ன தரம் கெட்ட அரசியல்வாதிகள்’மிஸ்டர் மூர்த்தியின் அரசியல் பற்றிய விமர்சனத்தைச் கேட்காமல் இலட்சுமி மெல்ல நழுவினாள். அரசியல் என்பது பொய்யும் வஞ்சகமும் கழுத்தறுப்புக்களும் நிறைந்த கேவலமான சதுரங்கம் என்று அவருக்குத் தெரியாதா?அந்த விளையாட்டு இந்தியாவிலும் மட்டுமா நடக்கிறது?

இலட்சுமி தனது இடத்தில் அமர்ந்ததும் அவளுடன் வேலை செய்யும் நையீரிய நாட்டைச் சேர்ந்த நிகோஷி இலட்சுமியைப் பார்த்துக் குறும்பாகச்சிரித்தாள்.’ உனது அன்பன் போன் பண்ணினார்,நீ சாப்பிடப்போயிருக்கிறாய் என்று சொன்N;னன்.

இலட்சுமி நன்றியுடன் நிகோஷியைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள்.

நாராயணனுக்கு என்ன மறுமொழி சொல்வது?

அவன் இன்னொருதரம் மீண்டும்; போன் பண்ணப்போகிறான்,இவளிடமிருந்து இனிய செய்தியைக் கேட்கத் தவிப்பான்.அவனுக்கு என்ன சொல்ல?அம்மா அழுது புலம்பியதைச் சொல்வதா, அப்பா ஆத்திரத்தில் உறுமிக் கொட்டிய வார்த்தைகளைச் சொல்லவா?

மாமா சொன்ன அன்பான அறிவுரைகளைச் சொல்வதா, பாட்டனின் தத்துவப் பேச்சக்களை,அத்துடன் பாட்டியின் கெஞ்சல்களைப் பற்றிச் சொல்லவா?

இலட்சுமி வேலையில் கவனம் செலுத்தாமல் தர்மசங்கடத்துடன் தவிப்பதை அடுத்த மேசையிலிருக்கும் நிகோஷி கவனித்தது இலட்சுமிக்குத் தெரியும்.

நிகோஷி ஒரு அழகிய கறுப்புப்பெண்.அவளின் கண்கள் கவிதை பிறக்கப் பண்ணக் கூடிய கவர்ச்சியானவை.அந்தக் கவர்ச்சியில் அவர்களின் ஆபிஸ் மனேஜர் டேவிட் ஹமில்டன் தலைகீழாக விழுந்து விட்டார். நிகோஷியும், டேவிட்டும், நிறத்தால், மொழியால், நிலத்தால் வேறு துருவமானவர்கள்.காதலால் ஒன்று பட்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு இருவருடங்களுக்கு முன் திருமணமானது. நிகோஷி இப்போது நான்குமாதக் கர்ப்பிணி. டேவிட் தனது காதல் மனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பூவொரு தட்டும் பொன்னொரு தட்டுமாகப் பார்த்துக்கொள்கிறார். இரண்டு கலாச்சாரத்தின் அத்தனை வேறுபாடுகளும்,ஒருமித்த காதலில் ஒன்றாகச் சங்கமித்திருக்கிறது.

அவள் சிந்தனை சிறகடித்தபோது டெலிபோன் மணியடிக்கிறது.

அவள் மனம் படபடக்கிறது.அவனுக்கு என்ன பதில் சொல்வது?அவன் குரலைக்கேட்டதும் அழுதுவிடுவாள் போலிருந்தது.

‘மகளே,எங்கட சாதி, குல கோத்திரத்தில உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்’ தகப்பனின் அழுத்தமான குரல் அவளின் ஞாபகத்திற்கு வருகிறது.

அவளின் இளமைக்காலம் தொடக்கம்,அவளது பெற்றோர்கள்,அவள் எப்படியும் ஒரு இந்துமதத்தைச் சேர்ந்தவனைக் கல்யாணம் செய்யவேண்டும் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் அவளுக்குச் சொல்லி வந்திருக்கிறார்கள்.அவளும் அவர்களின் எதிர்பார்ப்புக்களை மதித்து வளர்ந்தவள்.அவளுடைய உறவினர்களில் ஒருசிலரும், சினேகிதர்களிற் பலரும் தமிழரல்லாதவர்களைத் திருமணம் செய்துகொண்டபோது அவளின் தாய்தகப்பன,இலட்சுமியும் அப்படியேதும் செய்துவிடக்கூடாது என்ற பயத்துடன் இலட்சுமிக்குப் பல புத்திமதிகளைச் சொன்னார்கள்.

அவள் அவர்களை மதித்தவள். அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராகத் தான் ஒன்றும் செய்யமாட்டேன் என்று தனக்குள்ச் சங்கற்பம் செய்துகொண்டவள்.இன்று அவள் தங்களது எதிர்பார்ப்புகளைக் குப்பையிற் தூக்கியெறிந்து விட்டதாகக் குமுறுகிறார்கள்.

அவள் தானொரு தமிழனை அத்துடன் இந்து மத்தவனை விரும்புவதாக அவள் சொன்னதும் அவர்கள் சந்தோசப் பட்டார்கள். அவன் யாழ்பாணத்தில் எந்த ஊர் என்று அவர்கள் கேட்க, அவன் ஒரு இந்தியன் என்று இவள் சொல்ல,’ ஐயையோ ஒரு வடக்கத்தியானா?’ என்று இருவரும் ஒNருயடியாக அலறியபோது அவள் திடுக்கிட்டாள்.

அன்று அவர்களின் வீட்டில், அம்மாவும் பாட்டியும் சமயலறையில் வேலையாக இருந்தார்கள். பாயாசத்திற்கு இனிப்பு கூடிவிட்டது என்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

அப்பாவும் மாமாவும் விஸ்கி போட்ட உற்சாகத்தில், தமிழ்நாட்டில் நடக்கும் அரசியல் கூத்துக்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஓரு தமிழ் ஆடிட்டருக்கு முதலமைச்சரும் அவரது உடன்பிறவாச் சகோதரியும் கொடுத்த’செருப்படிப் பூசையைப்’ பற்றி விவாதித்துக்கொண்டிருந்தார்கள்.

தமிழன் இவ்வளவு தாழ்வுணர்ச்சி கொண்டன் என்பதை நினைக்க வெட்கமாகவிருக்கிறது என்று மாமா பெருமூச்சு விட்டார். அந்த நேரம்,இலட்சுமி,அப்பா, தாத்தா, மாமா என்று மூவரையும் பார்த்து ஏதோ சொல்ல வெளிக்கிட்டாள்.

அவளின் குரலில் தொனித்த சீர்pயஸ்னெஸ் அவர்களின் பேச்சை நிறுத்தியது. என்ன சொல்லப் போகிறாள் என்பதுபோல் அவளைப் பார்த்தனர்.

‘நானும் சிலவேளை சென்னையில் போய் செற்றிலாகிவிடவேண்டுமென்று நினைக்கிறேன்’ அவள் மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

அவர்கள் இவள் சொல்வதைப் புரியாமலோ புரிந்து கொள்ள விருப்பமில்லமலோ கொஞ்ச நேரம் பேசாமலிருந்தார்கள். அவளது பாட்டியார் சத்திய சாயிபாபா பக்தை. அடிக்கடி புட்டபுத்திக்குப் போவள். தனது பேத்தியாரையும் தனது பக்தி மார்க்கத்துக்க இழுக்குப் பணியில் கவனமாக இருப்பவள்.

மாமா நேரடியாகக் கேட்டார், ‘மட்ராஸ் பையனில் காதலா?’

அவர் அப்படிக் கேட்டதும் அவள் சந்தோசத்துடன் தனது காதலைப் பற்றிச் சொன்னாள். சமயலறைக்குள் இருந்த பாட்டியும் அம்மாவும் அங்கு வந்து சேர்ந்தார்கள். அப்பா நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

‘ வடக்கத்தியானா?’ ஒருமித்த குரலில் அவர்கள் ஆச்சரியம் அலறலாக வெளிப்பட்டது.

‘இந்தியரைப் பற்றி உனக்குத் தெரியுமா? அப்பா கேள்வி கேட்டார்.

‘அவர்கள் தங்கள் வீட்டுக்கு வரும் மருமகளைச் சரியாக நடத்த மாட்டார்கள்’ பாட்டி விம்மினார்.

தாத்தா ஒரு நாத்திகர் ஆனால் பாட்டியோ ஒரு பெரிய சாயிபாபா பக்தை.அவர் அவளது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஐப்பது வருட சுதந்திர சீவியம் அவர் லைப்ரரிக்குப் போக, அவள் பஜனைக்குப் போவாள்.

‘ நாராயணன்…’ தனது காதலனைப் பற்றிய விபரத்தைச்சொல்ல வாயெடுத்த இலட்சுமியை,’ நாராயணனோ நரசிம்மனோ, அதெல்லாம் உனக்குச் சரிவராது. அப்பாவின் குரல் கோபத்திலும்,விஸ்கி வெறியிலும் தள்ளாடியது.

அம்மாவின் முகத்தில்,மழைக்காக இருண்ட மேகத்தின் நிழல்கள். தாயின் பேதை மனம் மகளின் நல்வாழ்க்கைக்குப் பிரார்த்தித்தது. மகளுக்குக் கொடுத்த சுதந்திரத்தை இப்படியா துஷ்பிரயோகம் செய்வது?

அவர்களின் சொந்தக்காரப் பெண்ணொருத்தி ஒரு வெள்ளையினத்தவனைச் செய்து இருவருடங்களில் விவாகரத்த செய்து கொண்டாள்.அதைக் கண்ட தாய்,’ இலட்சுமி ஒரு நாளும் வெள்ளையனைச் செய்யாதே’ என்று மகளிடம் கெஞ்சினாள்.

ஒன்றை விட்ட மாமா ஒருத்தர், கலப்பு நிறத்தில் பிறந்த பெண்ணைச் செய்தபோது அந்தக் கல்யாணத்துக்குத் தங்கள் வீட்டிலிருந்து யாரும் போகக் கூடாது என்ற அப்பா தடையுத்தரவு போட்டு விட்டார்.

கல்யாணம் முடிந்து சில நாட்களில் அப்பாவுக்குத் தெரியாமல், இலட்சுமி தனது தம்பி பாரதியையும் தாயைக் கூட்டிக்கொண்டு சென்று புது மணத் தம்பதிகளுக்குப் பரிசு கொடுத்து விட்டு வந்தார்கள்.

தம்பி பாரதி இப்போது அமெரிக்காவில் வாழ்கிறான். ஸ்பானிஸ் மொழி படிப்பதாகச் சொன்னான் ஸ்பானியப் பெண்ணைக் காதலிக்கிறான் போலும்.தாய் தகப்பனுக்குத் தெரிய வரும்போது வீட்டிற் பெரிய திருவிழாவை எதிர் பார்க்கலாம்.

டெலிபோன் அடிக்கிறது. ‘ஐiயையோ அது நாராயணனா,’?

இல்லை, அவளின் மாமா பேசினார்.அவளிடம் நெருக்கமாகப் பேசும் பழகும் ஒரேயொரு பிறவியது.

அவள் லண்டனிற் பிறந்து வளர்ந்தவள்,’வடக்கத்தியான்’ என்ற பதத்திற்குள் அடங்கிக் கிடக்கும் பல அர்த்தங்களைப் புரியாதவள். அவளின் தாய்தகப்பன், இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள்.அவர்கள் ஏன் வடக்கத்தியான் என்று’இந்தியனை’ அழைக்கிறார்கள் என்ற விளக்கத்தை,இலட்சுமி தகது மாமாவிடம் கேட்டாள்.

‘ இந்தத் தலைமுறை மிகவும் ஒடுங்கிய பிரதேசவாழ்க்கைக்குள் தங்கள் சிந்தனைகளை ஒடுக்கிக் கொண்டவர்கள். அவர்களுக்குத் தங்களை நெருங்கியவர்களைத் தவிர யாரையும் பிடிக்காது. தமிழர் விடுதலை என்று பேசுவார்கள் ஆனால் அடுத்த பிரதேசத் தமிழரை மதிக்க மாட்டார்கள்.அந்த அளவு பிரதேச வெறி பிடித்தவர்கள். இன்று புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்கிறார்கள்,ஆனால் தங்களுக்குள்ளேயே எல்லாத் தொடர்புகளையும் உறவுகளையும் வைத்துக் கொள்வார்கள். மற்ற இனத்தைப்பற்றியோ, கலாச்சாரம் பற்றியோ அறிந்து கொள்ள அவர்களுக்குத் தேவையுமில்லை. அக்கறையுமில்லை’மாமா பிரசங்கம் செய்தார்.

‘மாமா ஐ லவ் நாராயணன்’ இலட்சுமி குழந்தைபோற் தேம்பினாள். இருபத்தியெட்டு வயதுப் பெண் முப்பத்தைந்து மாமாவிடம் ஆதரவு தேடியது.

‘ உன்னுடைய பிரச்சினையை நான் முழுக்க முழுக்கப் புரிந்திருக்கிறேன்’ மாமா நேர்மையானவன்.லண்டனிற் படித்தவன். பரந்த உலகத்துப் பரிமாணங்களை அலசத் தெரிந்தவன்.

‘இலட்சுமி, நீ லண்டனிற் பிறந்தவள், உலகத்தை ஓரளவு உணரத் தெரிந்து கொண்டவள்….’மாமா என்ன சொல்ல வருகிறார்?

‘லண்டனிற் பிறந்து வளர்ந்த பலர் தங்களுக்குத் தெரியாத கலாச்சாரத்துக்குள் நுழையும்போது வரும் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதிலும், இந்தியாவுக்கப் போய்த் திருமணம் செய்துகொண்ட எத்தனையோ கல்யாணங்கள் விவாரத்தில் முடிந்திருக்கின்றன….’

அவள் இடை மறித்தாள். ‘விவாகரத்து என்பது எந்த விதமான கல்யாணத்திலும் வரும்.. நாராயணன் நல்லவர். நான் அவனை விரும்புகிறேன்.. நம்புகிறேன்’

‘ஆரம்பத்தில் எல்லாம் கவர்ச்சியாகத்தானிருக்கும்…’பேசிக் கொண்டிருந்த மாமாவை இன்னொரு தரம் இடைமறித்தாள் இலட்சுமி.

‘மாமா நீங்களுமா என்னைச் சிறு பிள்ளை மாதிரி நடததுகிறீர்கள்?’ அவள் ஆத்திரத்துடன் கேட்டாள்.

‘இலட்சுமி நான் உனது தகப்பன்போல் குறுகிய வட்டத்திற்கள் உலகத்தைப் பார்க்கவில்லை.லண்டனிற் பிறந்து வளர்ந்த உனக்கும் இந்தியாவிற் பிறந்து வளர்ந்த உன்னுடைய அன்பனுக்கும் அறிவு ரீதியாக எத்தனையோ ஒற்றுமைகள் இருந்தாலும், கலாச்சாரத்தின் கட்டுப்பாட்டுக்குள் பெண்கள் வாழவேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்தியாவில் நீ செட்டிலாக முடியுமா என்பதைக் கவனமாக யோசி”

மாமாவுடன் தொடர்ந்து பேச அவள் விரும்பவில்லை.. அனுதாபமாகவும் அறிவுரையாகவும் பல கோணங்களில் அவளின் எதிர்கால வாழ்க்கையை அவர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள்.

அவளின் சினேகிதி உஷாவின்; திருமணவாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகள் இலட்சுமியின் மனதில் தொடர்கின்றன.

‘அவரின் சேவகி போலத்தான் என்னை நடத்தினார்.இருவரும் உத்தியோகம் பார்க்கிறோம். ஆனால் பின்னேரம் வீட்டுக்கு வந்ததும்,அவர் ஏதோ பெரியமனிதன் மாதிரி எனது பணிவிடைக்குக் காத்திருப்பார். நானும்தான் வெளியிற் போய் வேலை செய்கிறேன் என்ற அனுதாபமே இல்லை. ஏதும் உதவி செய்யுங்கள் என்று கேட்டால்,சிலவேளைகளில் வீட்டுவேலைகள் பெண்களின் கடமை என்பார்.அதற்கும் மேலாக நான் ஏதும் முணுமுணுத்தால் பொத்தடி வாயை, என்ன வெளியிற் போய் உழைக்கிறாய் என்ற கர்வமா என்று சண்டை பிடித்துவிட்டு கன்னத்தில் இரண்டு தருவார்.’ உஷாவின் அழுகை ஞாபகம் வருகிறது.

‘உனது பெற்றோர் என்ன சொன்னார்கள்?’ இலட்சுமியிடம் அவளின் அன்பன் ஆர்வத்துடன் கேட்டான்.அவன் குரலில் நம்பிக்கை.எதிர்காலக்கனவுகளின் பிரதிபலிப்பு.அவளுக்கு அழுகை வந்தது.தாய் தகப்பனின் கட்டளைக்காகத் தன் காதலைத் துறக்க முடியுமா?

இவனை மறந்து விட்ட தாய்தகப்பனுக்காக இன்னொருத்தனைத் திருமணம் செய்துகொண்டு வாழ்க்கை முழதும் மனதில் குமைந்து கொண்டு அவளால் வாழ முடியுமா?

”இல்லை..அவர்களுக்கு இன்னும் எங்கள் விடயம் பற்றிச் சொல்லவில்லை’ மனதறிந்த பொய் சொன்னாள் இலட்சுமி.உண்மையைச் சொல்லிவிட்டு அதனால் வரும் மாற்றங்களை அவளாற் தாங்கமுடியாதிருந்தது.

‘சீக்கிரம் பேசு இலட்சுமி.. நான் இன்று எனது தாய்தகப்பனுடன் இதுபற்றிப் பேசப்போகப்போகிறேன்.’அவன் நம்பிக்கையுடன் சொன்னான்.

இலட்சுமி டெலிபோனை வைத்ததும்,’என்ன உன்னுடைய லவ்லவரா உளறிக் கொட்டுகிறார்?’ உஷா குறும்புடன் கேட்டாள். ஆமாம் என்பதுபோல் தலையாட்டினாள் இலட்சுமி.

‘எவ்வளவு வரதட்சணை கேட்கிறார்?’ உஷா கிண்டலாகக் கேட்டாள்.

இலட்சுமி கோபத்துடன் தனது சினேகிதியை முறைத்துப் பார்த்தாள். வரதட்சணையா ? இலட்சுமி கைநிறைய உழைக்கும் ஒரு பெரிய உத்தியோகத்தர்,யார் தயவிலும் வாழவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாதவள். யாரையும் விலை கொடுத்து மாப்பிள்ளையாய் வாங்கும் நியதி அவளுக்குக் கிடையாது.

‘என்ன இலட்சுமி முறைக்கிறாய்?ஆரம்பத்தில் இதெல்லாம், ஒரு அப்பழுக்கற்ற காதற்கதை போலத்தான் தோன்றும்,இந்தியாவில் ஒரு வருடத்திற்கு ஐயாயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் வரதட்சணக்கொடுமையால் கொலை செய்யப் படுகிறார்கள்.’ உஷாவின் வரதட்சணை பற்றிய பேச்சுக்கு ஒன்றும் பேசாமல் மௌனமாகவிருந்தாள் இலட்சுமி.

இலட்சுமி மிகவும் குழம்பிப் போயிருந்தாள். வீட்டுக்குச் செல்லத் தர்ம சங்கடமாகவிருந்தது. அவளுக்கு இருபத்தியெட்டு வயது. அவள் தனது பெற்றோரின் அனுமதிக்குக் காத்திருக்கும் பதினாறு வயதும் பெண்ணல்ல.ஆனாலும் அவளைப் பாலூட்டித் தாலாட்டிய தாய் தகப்பனைத் துயர் படுத்த அவள் விரும்பவில்லை.

வீடு வந்து சேர்ந்ததும் ஏதோ துக்கமான விடயம் நடந்த இடம்போல் சூனியமாகவிருந்தது.அப்பா தனது அறையில் முடங்கிக் கிடந்தார்.அம்மா வழக்கம்போல் சமயலறைக்குள் தஞசமாகவிருந்தாள். இலட்சுமியும் தனது அறைக்குள் ஒதுங்கிக்கொண்டாள். சாப்பிட மனம் வரவில்லை.

தனது அன்புக்குரியவனுடன் சேர்ந்துகொண்டு எங்காவது ஓடிவிடவேண்டும்போலிருந்தது.

”என்ன உண்ணா விரதப் போராட்டமா?’ அம்மா அறைவாசலில் நின்று கேட்டாள். இலட்சுமி அம்மாவுக்குப் பதில் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். தாய் வந்து மகளின் பக்கத்தில் உட்கார்ந்தாள்.அவள் பெருமூச்சுவிடுவது கெட்டது.

‘இலட்சுமி உனக்கு இருபத்தியெட்டு வயது. நீ நன்றாகப் படித்தபெண். பொருளாதார ரீதியாக,எங்களிற் தங்கியிருக்கவேண்டிய எந்த நிலையும் உனக்கில்லை’

தாயின் குரலில் இழையோடிய தாங்க முடியாத சோகம் இலட்சுமியை அழப்பண்ணியது.

‘மகளே,நாங்கள் இலங்கைத் தமிழர்கள்.எங்களுக்கு என்ன பிள்ளை பிறக்கிறது என்பது பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளாத சமுதாயம் எங்களுடையது. ஆணோ பெண்ணோ இறைவன் கொடுத்த கொடை என்று தாலாட்டிப் பாராட்டி வளர்ப்பது எங்களது கலாச்சாரம..ஆனால் இந்தியாவில் அப்படியில்லை.ஆண்குழந்தையைப் பெற்றுக் கொடுப்பது மிக முக்கியம் என்ற தங்கள் வீட்டுக்கு வந்த மருமகளிடம் எதிர்பார்ப்பார்கள்;’அம்மா பேசிக் கொண்டிருந்தாள்.

‘நீ பிறந்தபோது,நீ பெண்குழந்தை என்ற நாங்கள் துக்கப்படவில்லை…ஆனால் இந்தியாவில், ஒரு பெண் ஆண்வாரிசைப் பெற்றுக்கொடுக்காவிட்டால் அவளைப் படாத பாடு படுத்துவார்கள் என்று படித்திருக்கிறேன்,நீ எனது ஒரேயொரு பெண், எல்லாத் தாய்கள்போல நான் உனது சந்தோசத்தில் அக்கறையாக இருக்கிறேன்’

இலட்சுமி தாயின் பேச்சை இடைநிறுத்தாமற் கேட்டுக்கொண்டிருந்தாள்.

‘சோமநாதர் மாமாவின் மகளுக்கு என்ன நடந்ததென்று தெரியுமா?’அம்மா தொடர்ந்தாள்.

அம்மா,இலட்சுமிக்கு இதை ஏன் ஞாபகப் படுத்த நினைக்கிறாள் என்று தெரியும். சோமநாதரின் மகள் ஒரு டாக்டர். மிகவும் வசதியான குடும்பம்.அவளுடன் படித்த ஒரு இந்திய டாக்டரைத் திருமணம் செய்துகொண்டு இந்தியா சென்றாள்.

நான்கு வருடங்களின் கையில் இரண்டு வயதுப் பெண்குழந்தையும் வயிற்றில் ஒரு குழந்தையுடனும் லண்டன் திரும்பி விட்டாள். காரணம் கேட்டால் அவள் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை.

ஆனால் விடயம் வெளியிற் கசியத் தொடங்கி விட்டது.இவளது இரண்டாவது கர்ப்பத்தில் வளர்வது பெண்குழந்தை என்று தெரிந்ததும், குழந்தையைக் கருவிலேயே அழித்து விடச் சொன்னார்களாம்!

டாக்டர்கள் உயிர்களைக் காப்பாற்றும் உத்தியோகம் செய்பவர்கள். அவள் தனது சிசுவைக் கொலை செய்ய மறுத்து விட்டு லண்டன் திரும்பிவிட்டாள். இப்போது அவன் இரண்டாம்தாரக் கல்யாணம் செய்து விட்டான்.

இலட்சுமியின் எதிர்காலத்தை அம்மா ஏன் பயங்கரமானதாகக் கற்பனை செய்கிறாள்? இலட்சுமியைப் பயப்படுத்தவா?

‘மகளே, இந்தியா சுதந்திரம் பெற்றபின் கொலை செய்யப்பட்ட பெண்குழந்தைகள் கிட்டத்தட்டஆறு கோடிக்கு மேல் என்ற அறிக்கைகள் சொல்கினறனவாம். உனது மாமாதான் எனக்குச் சொன்னான்.’

அம்மா பேசிக் கொண்டிருக்கிறாள். தூரத்தில் ஏதோ ஒருகோயிலில் மணியொலித்துக்கொண்டிருந்தது. ஆத்மீக உணர்வுகளுக்கு முதலிடம் கொடுக்கும் இந்தியாவிலா இதெல்லாம் நடக்கிறது?

‘அம்மா என்னை வதைக்காதீர்கள். உங்களது குறுகிய சிந்தனை என்னைத் துக்கப் படுத்துகிறது. எல்லா மனிதர்களும் கொடுமையானவர்களில்லை. உங்கள் மகள் அப்படியான ஒருத்தனைத் தெரிவு செய்திருப்பாள் என்ற நீங்கள் நினைப்பது எனது அறிவை மட்டம் தட்டிப் பேசுவதுபோலிருக்கிறது.’

இலட்சுமியின் குரலில் அனல் வெடித்தது.

‘மகளே, எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும். உனது நல்வாழ்க்கைக்கு எனது ஆசிர்வாதம்’ தாயின் கண்ளில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் ஆபிசுக்குப் போனதும்,உஷா இலட்சுமியின் முகத்தை ஆராய்ந்தாள்.

‘அம்மா அப்பாவை எதிர்த்துக் கொண்டு வடக்கத்தியானை–இந்தியனை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்து விட்டாயா?’ உஷா தயக்கத்துடன் கேட்டாள்.

உஷா ஒரு நாள் சொன்ன விடயம் ஞாபகம் வருகிறது.’

‘பெற்றோர் பார்த்த சாதி சமய,உறவு. பொருளாதார வசதி எல்லாம் படைத்தவனைச் செய்தால் விவாகரத்து செய்ய அந்தப் பிடிப்புக்கள் விடாது.குடும்பத்தினருக்காக, பண்பாட்டுக்காக,கலாச்சாரத்திற்காக வாழ்வெல்லாம் எங்களுக்குப் பிடிக்காதவனுடன் கண்ணீருடன் மாரடிக்கவேண்டும்.

நாங்களாகப் பார்த்து யாரையும் செய்தால், அந்தத் திருமணம் சரிவராது என்ற கண்டால் அதிலிருந்து வெளியேறுவது எங்களின் பொறுப்பு.எதிர்காலம் எங்களுடையது’ அதை இன்னொரு தரம் உஷாவுக்கு அவள் சொன்னதை ஞாபகப் படுத்தவேண்டும்போலிருக்கிறது.

‘உஷா, வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம்,யார் வெல்வார்கள்,யார் தோற்பார்கள் என்று சொல்ல முடியாது. நான் தெரிவு செய்தவன் நல்லவன,; என்னை அன்புடன் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.அந்த நம்பிக்கையில் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறேன்.அதை நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்’ இலட்சுமி உறுதியான குரலிற் சொன்னாள்.

‘ஆல் த பெஸ்ட்’ உஷா அன்புடன் தனது சினேகிதியைத் தழுவிக் கொண்டாள்.

‘ஞானம்’ பிரசுரம்-இலங்கை

(யாவும் கற்பனையே)

இராஜேஸ்வரி பாலசுப்பிமணியம் - கிழக்கு இலங்கையில் பிறந்து லண்டனில் கடந்த 45 வருடங்களாக வாழ்கிறேன். -கல்வி: மானுட மருத்துவ வரலாற்றில் முதமாமணிப்பட்டம்(எம்.ஏ) திரைப்படத்துறையில்பி.ஏ ஹானர்ஸ் பட்டம்.இன்னும் பல பட்டங்களும் தகுதிகளும் -எழுத்துக்கள்: 7 நாவல்கள்,6 சிறுகதைத்தொகுப்புக்கள்,2 மருத்தவ நூல்கள, 1 முரகக் கடவுள் வழிபாடு பற்றிய ஆராய்ச்சி. -இலங்கையிலும் இந்தியாவிலும் பல விருதுகள் கிடைத்திருக்கின்றன. -கோவை ஞானி ஐயாவின் உதவியுடன் பதினொருவருடங்கள் பெண்கள் சிறுகதைப்போட்டி நடத்திப் பல பெண்களை எழுதப்பண்ணியிருக்கிறேன்.அவற்றில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *