லூக்கா 22:34

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 6, 2013
பார்வையிட்டோர்: 14,386 
 
 

ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான் தொடங்கியது. காலையில்தான் அவளுக்கு அடி விழும். மற்ற வீடுகளில் நடப்பது போல மாலையில் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதில்லை. அலுவலகத்துக்குப் புறப்படும் அவசரத்தில் அவர் அடித்துவிடுவார். பின்னர் அலுவலகத்திலிருந்து மன்னிப்புக் கேட்டு தொலைபேசி வரும். போகப்போக அதுவும் நின்றுவிட்டது. ஆனால் அடி விழுவது தொடர்ந்தது.

அடி என்றால் கோபத்தில் வன்மத்துடன் அடிக்கும் அடி இல்லை. வலி இராது. ஆனால் சமீபத்தில் அவர் வார்த்தைகள் வலிக்கத் தொடங்கியிருந்தன. ‘தின்று தின்று கொழுத்துப்போய் இருக்கிறாய்’ என்று சொல்லிவிடுகிறார். அன்று காலையில் அவளுடைய உருவத்தைக் கண்ணாடியில் பார்த்த போது அவளுக்கே கொஞ்சம் அருவருப்பாகத்தான் இருந்தது. பத்து வருடத்துக்கு முன்னர் அவள் கனடாவுக்கு வந்தபோது ஒல்லியாகத்தான் இருந்தாள். அவள் கண்கள் கூராகக் காதுக்குக் கிட்டப்போய் முடியும். படிக்கும் காலத்தில் கண் களைப் பார்த்து மயங்கியவர்கள் பலர் இருந்தார்கள். அவளுடன் படித்த காப்ரியல் அந்தோனிப்பிள்ளை அவள்மேல் பைத்தியமாக இருந்தான். அவள் பிறப்பதற்கு முன்னர் ஓடிய படம் ஒன்றில் ஏ.எம்.ராஜாவும் பி. பானுமதியும் பாடிய பாடல் ஒன்று பிரபலமாகியிருந்தது. அதன் வரிகள் ’மாசிலா உண்மைக் காதலே! மாறுமோ செல்வம் வந்த போதிலே!’ என்றிருக்கும். அந்தோனிப்பிள்ளை அந்த வரிகளை மாற்றி அவளைக் காணும்போதெல்லாம் இப்படிப் பாடுவான்.

மார்செலா என்னைக் காதலி
மறக்குமோ ஓ உந்தன் கூர்விழி.

அவன் இப்பொழுது அவளை மறந்துபோயிருப்பான். ஆனால் அவளை கூர்விழி என்று அவன் வர்ணித்ததை அவளால் இன்றைக்கும் மறக்க முடியவில்லை.

மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று இருந்தவளைப் பாதியில் நிற்பாட்டி கனடாவுக்கு அனுப்பிவிட்டார்கள். அவளுக்குக் கணவராகப் போகிறவர் மிஸிஸாகாவில் உரிமம் பெற்ற ‘வீடு விற்பனை முகவர்’ என்று சொன்னார்கள். மிஸிஸாகா என்றாலோ உரிமம் என்றாலோ வீடு விற்பனை முகவர் என்றாலோ என்னவென்று அவளுக்குத் தெரியாது. பெரிய அரசாங்க உத்தியோகமாக இருக்கும் என்று மார்செலா நினைத்தாள். அவர் 15,000 டொலர் ஏஜண்டுக்குக் கட்டி அவளை கள்ள விசாவில் எடுப்பித்

திருந்தார். கொழும்பில் விமானம் ஏறியபோது கனடாவைப் பற்றிய கற்பனைகள் எக்கச்சக்கமாக இருந்தன. எச்சில் பூசாமல் தபால்தலை ஒட்டலாம் என்று சொன்னார்கள். இரவு வந்த பின்னரும் அங்கே சூரியன் மறைவதில்லை என்றும் கேள்விப்பட்டிருந்தாள். அது பெரிய பிரச்சினையாக இராது. ஆனால் இங்கே வந்து இறங்கிய பின்னர் அவள் வெறும் வேலைக்காரிதான் என்பதை வெகு சீக்கிரத்திலேயே கண்டுபிடித்துவிட்டாள். கணவர் அவளுக்கு நேரம் ஒதுக்கவில்லை. மாதத்தில் 3–4 வீடுகள் எப்படியும் விற்றுவிட வேண்டும் என்று அலைந்துகொண்டிருந்தார். வீடு விற்பனை முகவர் என்றால் வேறு ஒன்றுமில்லை, வீட்டு புரோக்கர்தான் என்பது புரிந்தது.

அவர் கொஞ்சம் உயரமாகச் சற்று வளைந்து இருந்ததைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. ஆனால் அவர் கோபப்படும்போதும் சிந்திக்கும்போதும் துயரப்படும்போதும் முகத்தில் பெரிய வித்தியாசம் தெரியாது. சிரித்ததை அவள் பார்த்ததே கிடையாது. அவர் வாய் திறந்தால் அது அநேகமாக ஒரு கேள்விக்காகத்தான் இருக்கும். ‘ஊதா நிற ஓர்கிட் பூத்துக்கிடக்கிறது.’ ‘உடம்பிலும் பார்க்க நீண்ட அலகு கொண்ட பறவை ஒன்றை இன்று பார்த்தேன்.’ இப்படியெல்லாம் பேசியதே கிடையாது. இவள் சிலசமயம் சம்பாசணையைத் தொடங்குவாள். ‘யேசுவுக்கு நல்ல வழக்கறிஞர் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் சிலுவையில் அறைந்திருப்பார்களா?’ பதில் இல்லை. முன்கோபத்தை முந்திய அவசரக்காரராக இருப்பதுதான் அவர் லட்சியம். ஓர் ஆணியை கண்டெடுத்தால் ‘கூர் பிழையான பக்கம் இருக்கிறது’ என்று சொல்லி எறிந்துவிடுவார்.

அவர்களுடைய வீடு 19வது மாடியில் சகல வசதிகளுடனும் இருந்தது. இரவில் யன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போது மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒரு நகரம் அவள் காலடியில் கிடப்பது போலத் தோன்றும். கணவனின் அலுவலம் இருப்பது எட்டாவது மாடி என்று சொல்லியிருக்கிறார். அவர்கூட அவளுடைய காலுக்கு கீழேதான். வீடு ஒரு சந்தியில் இருந்ததால் இரண்டு பக்க ரோடும் வழுவழுவென்று சறுக்கிக்கொண்டு நெடுந்தூரம் போவது தெரியும். இப்படியே போனால் இந்த ரோட்டு எங்கே முடிகிறது என்று ஒருநாள் கணவரிடம் கேட்டாள். வீடு விற்பனை முகவர் புத்திசாலி முகத்தை வெளியே கொண்டுவந்து அபூர்வமாகப் பதில் சொன்னார். ‘ரோட்டுகள் முடிவதில்லை. முடியும் இடத்தில் அவை மீண்டும் தொடங்குகின்றன.’

அலுவலகம் போகு முன்னர் அன்று என்ன உணவு சமைக்க வேண்டும் என்று கணவர் உத்தரவு கொடுத்துவிட்டுத்தான் புறப்படுவார். எந்த அவசரமென்றாலும் அதை மறப்பதில்லை. அவர் போன பின்னர் வேண்டிய சமையல் சாமான்களை சுப்பர் மார்க்கெட் போய் மார்செலா வாங்கி வருவாள். அது பக்கத்தில்தான் இருந்தது. திரும்பும் வழியில் சிலவேளை தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்வதுண்டு. வழக்கத்தில் அங்கே அந்நேரம் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அன்று ஓர் இளம்பெண் மண்டியிட்டு ஏதோ வேண்டியபடி இருந்தாள். சின்னப் பெண். இரண்டு கண்கள், ஒரு வாய் இவற்றுக்கு மட்டுமே போதுமான அளவு முகம். கண்கள் மூடியிருந்தாலும் கண்ணீர் வழிந்தது. உலகத்தில் துயரம் இல்லாதவர்கள் யார் என நினைத்தாள். அவளுக்குப் பக்கத்தில் மண்டியிட்டு இருவருக்காகவும் பிரார்த்தித்தாள்.

‘தேவனே, எனக்கு முன்னே போகாதீர்.
எனக்குப் பின்னேயும் வராதீர்.
என் பக்கத்திலே வாரும்.
எனது மன்றாட்டைக் கேளும்
இறைப்பிரசன்னம் பெற
எம்மை ஆசீர்வதியும்.’

மார்செலாவிடம் இதுவரை ‘நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?’ என்று யாரும் கேட்டதில்லை. கேட்டால் சொல்லியிருப்பாள். வாழ்க்கையில் அவள் ஆகச் சந்தோசமாக இருந்தது எட்டு மாதங்கள்தான். அவள் கொழும்பிலிருந்து கனடாவுக்குப் பயணம் செய்ய எடுத்துக்கொண்ட கால அவகாசம் அது. அவள் சிறையிலிருந்தாள், முதுகில் அடி வாங்கினாள், பட்டினி கிடந்தாள், அமெரிக்காவில் காலையும் கையையும் சங்கிலியால் பிணைத்து இழுத்துச் சென்றார்கள். ஆனால் சுதந்திரமாக இருந்தாள். ஒவ்வொரு முடிவையும் அவள்தான் எடுத்தாள். அவள் வாழ்க்கையை அவள் தீர்மானித்தாள். இலங்கையில் அப்பா முடிவுகளை எடுத்ததுபோல கனடாவில் அவள் கணவர் எடுத்தார். என்ன கார் வாங்குவது? அவர் முடிவெடுத்தார். சமையலறைக்கு என்ன கலர் வர்ணம் பூசுவது? அவள் கணவருக்குத் தெரியும். மத்தியானம் என்ன கறி சமைப்பது? அவள் கணவர் சொல்வார். சுதந்திரமாக இருப்பதென்றால் என்ன? முடிவெடுக்கும் உரிமைதானே.

வழக்கமாக கணவர் மாலை ஏழு மணிக்கு வீடு திரும்புவார். ஏதாவது பெரிய விற்பனை நடந்தால் பத்து மணிகூட ஆகலாம். அவள் அவருக்கு விருப்பமான உணவு வகையைச் சமைத்து வைத்திருப்பாள். அவர் சுவைத்து உண்ணும்போதே நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தபடி இருக்கும். ஒன்றையும் தவறவிடமாட்டார். ஒன்றை அலட்சியப்படுத்தினால் அந்த விற்பனை வேறு ஒருவருக்குப் போய்விடும். ஒன்றிரண்டு முறை அவருடைய கவனயீனத்தினால் பெரிய தொகையை இழந்திருக்கிறார். அவர் சொல்வார்; ‘ஒரு வாடிக்கையாளரைத் தயார் செய்ய ஒன்பது வருடம் ஆகலாம். அவரை இழக்க ஒரு நிமிடம்கூட ஆகாது.’

ஒருமுறை கணவர் நெடுஞ்சாலையில் வேகமாக பயணித்துக்கொண்டிருந்தபோது ஓர் அழைப்பு வந்தது. ஆனால் அழைத்தவர் பேசியது புரியவில்லை. செல்பேசியை அணைத்துவிட்டு இவரே அரைமணி நேரம் கழித்து அவரைக் கூப்பிட்டார். ஆனால் விற்பனை வேறு ஒரு முகவர் பேரில் முடிந்து, இவருக்குக் கிடைக்க வேண்டிய 9,000 டொலர் பணம் இன்னொருவருக்குப் போய்விட்டது. எப்பொழுதும் எந்த நேரமும் செல்பேசி அழைப்பை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். இதை பல தடவை அவளிடம் சொல்லியிருக்கிறார்.

அவள் கணவர் குடிகாரர் இல்லை. எப்போதாவது நல்ல விற்பனை ஒன்று படிந்தால் அதில் சம்பந்தப்பட்டவர்களோடு குடித்துக் கொண்டாடு வதுண்டு. குடித்துவிட்டு வரும் நாட்களில் சாதுவாகப் பதுங்கியபடி வந்து படுத்துத் தூங்கிவிடுவார். அடுத்த நாள் காலை ஒன்றுமே நினைவில் இராது. அன்றும் அப்படித்தான். இரவு நேரம் 11 மணியாகிவிட்டது, ஒரு தகவலும் இல்லை. அழைக்கலாமா என்று யோசித்தாள். முக்கியமான கூட்டத்தில் இருக்கும்போது அழைப்பது பிடிக்காது. அவளுக்கு அவருடைய எண் மட்டுமே தெரியும். அலுவலக எண்கூடத் தெரியாது. அவர் நண்பர்களும் பரிச்சயமில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றபோது மின்தூக்கி 19ம் மாடியில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. வாசலுக்கு ஓடினாள். புருசன் தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தார். நிறையக் குடித்திருந்தார். இந்த நிலையில் எப்படி கார் ஓட்டினாரோ தெரியவில்லை. பொலீஸில் பிடிபட்டிருந்தால் லைசென்ஸைப் பிடுங்கியிருப்பார்கள். செல்பேசியை வழக்கமாக மின்னேற்றியில் செருகுவார். அதைக்கூடச் செய்யாமல் படுக்கையில் அப்படியே உடுப்பைக் கழற்றாமல் விழுந்தார். அவள் ஒன்றுமே பேசவில்லை. சாப்பிடுங்கள் என்று தொந்திரவு செய்யாமல் அவருடைய கோட்டைக் கழற்றி, சப்பாத்தை அகற்றி படுக்க வைத்தாள். அவள் சமைத்த சாப்பாடெல்லாம் மேசையில் இருந்தது. அவளும் சாப்பிடவில்லை. அவற்றை எடுத்து ஒவ்வொன்றாகக் குளிர்பெட்டியில் அடுக்கினாள்.

மார்செலா கனடாவுக்கு வந்த புதிதில் எல்லோரையும்போலக் குழம்பிப்போனாள். தூரத்தை கி.மீட்டரில் சொன்னார்கள். ஆனால் காலநிலை வெப்பத்தை சென்டிகிரேட்டில் அளந்தார்கள். வீட்டு அளவை சதுர அடி என்றார்கள். மணமுடித்த முதல் நாள் கிலோ கணக்கில் வாங்கிய அரிசியைச் சோறாக்கி நல்ல கறியும் சமைத்து மேசையில் பரிமாறினாள். அவர் உடனே சாப்பிட ஆரம்பித்தபோது இவள் ‘ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம்’ என்று கத்தினாள். அவர் கவனிக்காமலே சாப்பிட்டு முடித்துவிட்டார். இவள் அதிர்ச்சியில் வாயைத் திறந்துவைத்துக்கொண்டு நின்றாள். அவர் ‘என்ன? சற்பிரசாதத்துக்காகவா வாயைத் திறந்து வைத்திருக்கிறீர். மூடும்’ என்றார். பின்னர் அவள் தன்னுடைய சாப்பாட்டை பிளேட்டில் போட்டு சமையலறை தரையில் அமர்ந்து பிரார்த்தித்துவிட்டு உண்ணத் தொடங்கினாள். கணவனுக்கு அது பிடிக்கவில்லை. ‘இவ்வளவு விலை கொடுத்து ஓக் மேசை வாங்கி வைத்திருக்கிறேன். அதிலிருந்து சாப்பிடும்’ என்றார். அவருக்காக மேசையில் அமர்ந்து உண்டபோது சாப்பிட்டது போலவே இல்லை.

காலை வேளைகளில் அவளுக்கு நடுக்கம் தொடங்கும். அவர் தொலைப்பதைத் தேடி எடுத்துக்கொடுப்பதுதான் வேலை. கார்ச்சாவி, கண்ணாடி, செல்பேசி, அலுவலகக் கோப்பு, கைப்பெட்டி இப்படியாகத் தேடிஎடுக்க வேண்டும். ஒருநாள் செல்பேசியை தொலைத்ததற்காக அவள் தலையில் ஓங்கி அடித்துவிட்டார். தலைக்கு ஓடிய ரத்தம் அப்படியே நின்று திரும்பிவிட்டது. மயக்கமாக வந்தது. அப்போது பார்த்து செல்பேசி அடித்தது. அவர் கோட்டுப் பையினுள் அது கிடந்தது. அவளிடம் மன்னிப்புக் கேட்காமல் செல்பேசியில் அழைத்தவருடன் பேசினார். செல்பேசியில் குறுஞ்செய்திகளும் ரகஸ்யம் ரகஸ்யமாக வந்து அமர்ந்துகொள்ளும். இத்தனைக்கும் இடையில் முகச்சவரம் செய்து, குளித்து, உடை மாற்றி அவசரமாகப் புறப்படுவார். அந்தச் சமயங்களில் 19ம் மாடி சுழல்வதுபோல இருக்கும். அவருக்குப் பின்னால் ஓடியபடியே இருப்பது நாளடைவில் பழகிவிட்டது.

முதன்முதல் துப்பாக்கி பற்றி அவள் எண்ணியது ஒரு நாள் காலை வேளையில்தான். இவர் குளித்துக் கொண்டிருந்தார். செல்பேசியில் யாரோ அழைத்தார்கள். இவள் செல்பேசியைத் தொட்டுவிட்டாள். அதற்குத்தான் அடி. எந்தக் காரணம் கொண்டும் அவள் செல்பேசியைத் தொடக் கூடாது. ரேடியோவில் திருப்பித் திருப்பி ஒரே விளம்பரம் வருவதுபோல பலதடவை சொல்லி ஞாபகமூட்டியிருக்கிறார். எதற்காக என்று கேட்டு அவருடன் வாக்குவாதம் செய்ய முடியாது. கடந்த நாலு வருடங்களில் அவர் ஆறு செல்பேசி மாறிவிட்டார். மற்றவர் சொல்வதைக் கேட்கும் வழக்கம் என்பது அவரிடம் கிடையாது. விவாதம் என்று வந்தால் அவர் சொல்வதுதான் சரி என்று ஆரம்பத்திலேயே முடிவாகிவிடும். அப்போதுதான் அவளுக்கு அந்த எண்ணம் தோன்றியது.

அவள் கிராமத்திலிருந்து ஒரு போராளிப் பெண் இயக்கத்தில் சேர்ந்தாள். மாலதி அக்கா என்று மார்செலா அவளைக் கூப்பிடுவாள். இந்திய ராணுவம் போன பின்னர் ஒரு நாள் வந்தாள். அவள் மாங்குளம் போரில் பங்கெடுத்து வெற்றியீட்டிய கதையை அம்மாவுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். மார்செலாவுக்கு பத்து வயதிருக்கும். இயக்கத்தின் சீருடையில் மாலதி அக்கா அழகாக இருந்தாள். பாம்பின் உடம்பு எல்லா பக்கமும் வளைவதுபோல வளைந்தாள். ‘மார்செலா, மார்செலா’ என்று அவள் அழைத்தபோது அது வேறு யாருடையவோ பெயர் போல இனிமையாக ஒலித்தது. தூரக் கண்ணாடியை மாலைபோலக் கழுத்திலே அணிந்திருந்தாள். கையிலே வைத்திருந்த ரீ–81 சீனத் துப்பாக்கியைத் தொட்டுப்பார்க்க அனுமதித்தாள். 500 மீட்டர் தூரம் அது சுடும் என்றாள். அதன் கனமும் வழுவழுப்பும் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. மாலதி அக்கா சிரித்துக்கொண்டே அம்மாவிடம் சொன்னாள் ‘ஒரு துப்பாக்கி கையிலே இருந்தால் எந்த விவாதத்திலும் வெற்றி பெற்றுவிடலாம்.’

காலை எழுந்தபோது பெரும் பதற்றமும் கூடவே எழுந்தது. வழக்கமாக அதிகாலை எழும்பும் கணவர் 7 மணிக்கு பிந்திப்போய் கண் விழித்தார். முதல் நாள் இரவு அலுவலக ஆடையுடன் படுத்தது அவருக்கு ஞாபகம் இல்லை. செல்பேசியில் ஒன்றிரண்டு அழைப்புகள் வர ஆரம்பிக்க அவற்றுக்குப் பதில் கூறினார். குளித்து ஆடை மாற்றி அவசர அவசரமாக மேசையில் அமர்ந்து சாப்பிட்டார். அன்று மிக முக்கியமான நாள். அவர் வாழ்க்கையில் என்றும் இல்லாத விதமாக ஆகப் பெரிய விற்பனை ஒன்று முடிவாகும் என்று தொலைபேசியில் யாருக்கோ சொன்னார். முதல் நாள் மாலை குடித்து கொண்டாடியது இதற்காகத்தான் இருக்கும் என்று மார்செலா ஊகித்துக் கொண்டாள்.

அலுவலகம் புறப்படுவதற்காக மேல் கோட்டை எடுத்து அவள் பின்னால் நின்று பிடிக்க கைகளை நுழைத்து அணிந்தார். வாசலை நோக்கி நகரும்போதே அவள் கைப்பெட்டியைக் கொடுத்தாள். அஞ்சல் ஓட்டக்காரர் பின்னுக்குத் திரும்பாமலே கைநீட்டி வாங்குவதுபோல வாங்கினார். கார்ச் சாவியை நீட்டினாள். அதையும் பெற்றுக்கொண்டவர் சற்று நின்று நிதானித்தார். ஏதோ திடீரென்று ஞாபகம் வந்ததுபோல பரபரப்பாக செல்பேசியை எடுத்து ஓர் எண்ணை அழைக்க முயன்றார். முடியவில்லை. மனைவியைப் பார்த்து ‘நீர் செல்பேசியை தொட்டீரா?’ என்றார். அவள் இல்லையே என்று அவரையே பார்த்தாள். அவர் அழைக்க வேண்டிய

நம்பரை ‘தொடர்பு’ பகுதியில் தேடினார். இல்லை. இன்னொன்றைத் தேடினார். அதுவும் இல்லை. மேலும் கீழுமாகத் தேடித்தேடிப் பார்த்தார். ஓர் எண் கூட இல்லை. எல்லாமே மாயமாக மறைந்துவிட்டன. மனைவியை உற்றுப்பார்த்தார். அவள் உடல் உதற நின்றுகொண்டிருந்தாள். ‘நீர் செல்பேசியை பாவித்தீரா?’ அவள் ‘ஏன் கேட்கிறீர்கள்? அதை எப்படிப் பாவிப்பது என்று சொல்லித் தரவே இல்லை. தொட்டாலே எரிந்து விழுவீர்களே.’

ஒரு நம்பரும் இல்லை. எல்லாமே அழிந்து போனது. இது எப்படி சாத்தியம்? நான் அவசரமாக வீடு வாங்குபவரை அழைக்க வேண்டும். எட்டு மணிக்கு முன்னர் தொடர்பு கொள்ளாவிட்டால் ஒப்பந்தம் செல்லாததாகிவிடும். 15,000 டொலர் எனக்கு நட்டம்.’

‘வீட்டு டெலிபோனிலிருந்து அழைத்துப் பேசலாமே’ என்றாள்.

‘மொக்கு, எனக்கு அவருடைய நம்பர் தெரியாதே!’

‘உங்கள் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுங்கள். அவர்களுக்குத் தெரிந்திருக்கும்.’

‘மொக்கு, மொக்கு. அலுவலக நம்பர் என்ன எனக்கு மனப்பாடமா? எல்லாம் அந்தச் சனியன் பிடித்த செல்பேசியில் அல்லவோ கிடக்குது.’

‘செல்பேசி கம்பனியை அவசரத்துக்குக் கூப்பிட முடியாதா?’

‘எத்தனை தரம் சொல்வது? அந்த நம்பரும் என்னிடம் இல்லை. எல்லா இழவும் இதிலேதான் இருக்கு.’

‘காரை எடுத்துக்கொண்டு வேகமாகப் போனால் விற்பனை முடிய முன்னர் போய்ச் சேர்ந்துவிடலாம்’ என்றாள்.

அவர் 19ம் தள மின்தூக்கியை நோக்கி ஓடினார். இவளும் தொடர்ந்தாள். திடீரென்று கழுத்துடன் சேர்த்து முழு உடம்பையும் திருப்பி அவளிடம் ’எங்கள் வீட்டு டெலிபோன் எண் என்ன?’ என்றார். அவள் சொன்னாள். மின்தூக்கி கதவு மூடுமுன்னர் ’இன்றைக்கு கோழிப் பொரியல்’ என்று கத்தினார். அவள் சரி என்று தலையாட்டினாள்.

சரியாக ஐந்து நிமிடம் கழித்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவளுக்கு அது வரும் என்று தெரியுமாதலால் காத்திருந்தாள். அவர்தான் பேசினார். ‘உண்மையை சொல்லும். நீர் ஏதாவது செய்தீரா? ஒரு நம்பர்கூட மிச்சமில்லையே!’

‘ஏசுவே! என்ன சொல்லுறியள்? நான் அதைத் தொட்டதே கிடையாது! எத்தனை தரம் சொன்னால் நம்புவீர்கள்? எனக்கு ஒன்றுமே தெரியாது.’ அவர் இணைப்பைத் துண்டித்தார்.

அவரிடமிருந்து வேறு அழைப்பு வராது என்பது நிச்சயமானவுடன் மார்செலா அவசரமாக படுக்கை அறைக்குள் நுழைந்தாள். ஏற்கனவே அணிந்திருந்த ஆடையைக் களைந்து எறிந்துவிட்டு அவள் புருசனுக்குப் பிடிக்கவே பிடிக்காத பெரிய பெரிய சூரியகாந்தி பூப்போட்ட இரவுஉடையைக் கழுத்து வழியாக அணிந்துகொண்டாள். நேற்று அவருக்காக இரண்டு மணி நேரம் கோது உடைத்து, கழுவி, பிரட்டி, ஊறவைத்து சமைத்த றால் குழம்பு அப்படியே தொடாமல் சட்டியுடன் குளிர்பெட்டியில் கிடந்தது. அதைச் சூடாக்கினாள். தமிழ் கடையில் வாங்கிய, துண்டு துண்டாக வெட்டாத, முழுப்பாணை குளிர் பெட்டியிலிருந்து எடுத்தாள். மூன்று பேருக்குப் போதுமான கோப்பியைப் பெரிய பாத்திரத்தில் தயாரித்து ஒரு குவளையையும் கையில் எடுத்துக்கொண்டாள். அத்தனையையும் குளிர்பெட்டிக்கு முன் தரையில் பரப்பினாள். எல்லாம் அந்தந்த இடத்தில் இருக்கிறதா என்று ஒரு முறை கண்ணால் சரி பார்த்தாள். பிளேட்டும் கரண்டியும் தேவைப்பட்டன. அவற்றையும் கையில் எடுத்தாள். நேராக நின்று குளிர் பெட்டியில் முதுகைச் சாய்த்து வைத்து பின்னர் அப்படியே சறுக்கி தரையில் அமர்ந்துகொண்டாள். சமையலறையில் அரைவாசி நிரம்பியது.

நேற்றிரவு சாப்பிடாதது நினைவில் வந்தபோது பசி அதிகமாகியது. கண்களை மூடிக்கொண்டு ‘பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே’ என ஆரம்பித்தாள். விறுவிறுவென்று ஸ்தோத்திரத்தை சொல்லி ‘தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும், ஆமென்’ என்று முடித்தாள். றால் குழம்பின் கறி வாசனை அவளைச் சுற்றி நின்றது. பிளேட்டில் குழம்பை ஊற்றி முழுப்பாணில் ஒரு துண்டு பிய்த்து அதில் தொட்டு சாப்பிட்டாள். கண்களை மூடி முழுச்சுவையையும் ருசித்தாள். பின்னர் ஒவ்வொரு துண்டாகப் பிய்த்துப் பிய்த்து தோய்த்துத் தோய்த்து உண்டாள். குவளையில் கோப்பியை ஊற்றி ஒரு மிடறு விழுங்கினாள். அரைவாசிப் பாண் வயிற்றுக்குள் போன பிறகு கொஞ்சம் நிறுத்தி நிதானித்து யோசித்தாள். முதல் நாள் இரவு கணவர் நித்திரையான பின்னர் படுக்கையில் வீசியிருந்த கணவரின் செல்பேசியை தற்செயலாகத் தொட்டதை நினைத்துப்பார்த்தாள். அது உயிர்த்து நீல நிறமாக ஒளிர்ந்து அவளை வசீகரித்தது. போர்வையினுள் வைத்து அதனுடன் விளையாடினாள். சேமிக்கப்பட்டிருந்த தொடர்பு எண்களை ஒவ்வொன்றாக அழித்தது நினைவுக்கு வந்தது. பின்னர் செல்பேசியை அதே இடத்தில் அதே கோணத்தில் இருந்தமாதிரியே வைத்துவிட்டுப் படுத்தாள், ஆனால் தூக்கம் வர வெகு நேரமாயிற்று.

சில நாட்களுக்கு முன் தொலைக்காட்சியில் ஒரு காட்சி பார்த்தது நினைவுக்கு வந்தது. பனிப் பிரதேசத்தில் வாழும் இரண்டு நீர்ப் பிராணிகள். ஒன்று சீல் மற்றது வால்ரஸ். நீண்டு வளைந்த தந்தங்கள் கொண்ட வால்ரஸ் சீலை வேட்டையாடும். அதனுடைய நீண்ட தந்தத்தினால் சீலின் உடம்பில் ஒரு துளை போடும். பின்னர் துளையிலே வாயை வைத்து அதன் கொழுப்பை எல்லாம் உறிஞ்சி விடும். இதில் பரிதாபம் என்னவென்றால் சீலுக்கு தான் உண்ணப்படுகிறோம் என்பது தெரியவே தெரியாது. அது தெரிய வருமுன்னரே காற்றுப்போன பலூன்போல அது இறந்து போய்விடும்.

மூன்று மணி நேரத்தில் அகர வரிசையில் அடுக்கியிருந்த 500 நம்பர்களை அவள் அழித்தது ஒரு சாதனைதான். அதை நினைத்தபோது அவள் முகத்திலே நீண்ட ஒரு புன்னகை அரும்பி நெடு நேரம் நின்றது. வாழ்க்கையில் அவள் அப்படிச் சிரித்தது மூன்றாவது தடவை. முதல் தரம் எட்டு வயதில் அவள் யார் உதவியும் இல்லாமல் 10 யார் தூரம் சைக்கிளில் ஓடியபோது அப்பா அவளை தலைக்கு மேல் தூக்கினார். அப்பொழுது சிரித்தாள். அடுத்தது பள்ளிக்கூடத்தில் அவள் ஏ லெவல் செய்தபோது வகுப்பில் மாணவர்கள் ஒருவருமே செய்ய முடியாத சிக்கலான கணிதத்தை அவள் சொற்ப நிமிடத்தில் செய்துகாட்டினாள். வகுப்பாசிரியர் அவளைப் பாராட்டினார். அப்போது எழுந்து நின்று நாணிக்கொண்டு சிரித்தாள்.

இப்படி ஒரு மகிழ்ச்சியையும் திருப்தியையும் சுதந்திர உணர்வையும் அவள் நீண்டகாலமாக அனுபவித்தது கிடையாது. மறுபடியும் மீதிப் பாணை பிய்த்துத் தோய்த்துச் சாப்பிட ஆரம்பித்தாள்.

மார்செலா என்னைக் காதலி
மறக்குமோ ஓ உந்தன் கூர்விழி

உடம்பு என்னவோவானால் ஆகட்டும். அவள் கூர்விழி அப்படியேதான் இருந்தது. கூர்மதிக்கும் குறைவில்லை. துவக்கைப் பற்றிய எண்ணம் அறவே ஒழிந்துபோனது. மூன்றாவது குவளை கோப்பியை அவள் பருகத் தொடங்கியபோது காலை 11 மணி ஆகியிருந்தது.

1937 ஜனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாணம் அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அ. முத்துலிங்கம், அப்பாத்துரை ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்த ஏழு பிள்ளைகளில் ஐந்தாவது ஆவார். கொக்குவில் இந்துக் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல்லூரியிலும் பயின்ற இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின் இலங்கையில் சாட்டர்ட் அக்கவுண்டனாகவும், இங்கிலாந்தின் மனேஜ்மெண்ட் அக்கவுண்டனாகவும் பட்டம் பெற்றவர். பணி நிமித்தமாக பல நாடுகளுக்கு பணித்திருக்கும் இவர் ஏறத்தாழ இருபது ஆண்டுகள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *