லதாவுக்கு பரந்தாமன் இரண்டாவது புருஷன். இப்படித்தான் இந்தக் கதையை ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது ஓரளவுக்குத்தான் உண்மை. லதாவுக்கு பதினேழு வயதாக இருக்கும் போதே கொண்டையம்பாளையத்து மிராசுதார் சுப்பிரமணியத்துக்கு கட்டிக் கொடுத்துவிட்டார்கள். விவரம் பத்தாத வயது என்றெல்லாம் சொல்ல முடியாது. பக்குவம் இல்லாத பருவம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
லதாவுக்கு பதினெட்டு வயது முடிவதற்குள்ளாக மகனும் பிறந்துவிட்டான். மகனை கவனித்து, மாமியாரின் அழிச்சாட்டியத்துக்கெல்லாம் ஈடு கொடுத்து, சுப்பிரமணியத்துக்கு சோறாக்கி கொட்டி- இங்கு கொட்டி என்பதை அழுத்தம் திருத்தமாக வாசியுங்கள். சுப்பன் பெருஞ்சோற்றுக்காரன். உப்புச்சப்பு இல்லாமல் செய்து வைத்திருந்தாலும் கூட மூன்று ஆட்கள் தின்னும் அளவிலான சோற்றை ஒரே ஆள் தின்பான். கொஞ்சம் காரஞ்சாரமாக செய்திருந்தால் கேட்கவே வேண்டாம். இப்படியாக திருமணத்திற்கு பிறகான நான்கைந்து ஆண்டுகளை ஓட்டி முடித்த போது லதா இருபது வயதுக்கான வனப்பை பெற்றிருந்தாள்.
இந்த காலகட்டத்தில் மாமியார் மண்டையை போட்டிருந்தாள். மகன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தான். சுப்ரமணியம் ஊருக்குள் பஞ்சாயத்து செய்யும் பெரிய புள்ளி ஆகியிருந்தான். பஞ்சாயத்து முடிந்து வரும் போது ஆக்கி அடுப்புக்கு அருகில் வைத்திருந்தால் அள்ளிப்போட்டுத் தின்றுவிட்டு தூங்கிவிடுவான். மாமியார் போன பிறகு மொத்த பன்னாட்டும் லதாவின் கைகளுக்கு வந்துவிட்டது. வேட்டி துணிமணிகளை வெள்ளாவி போட்டு வெளுப்பதற்கும், வீடெல்லாம் சுத்தப்படுத்தி பாத்திரம் கழுவுவதற்கும், தோட்டங்காட்டு வேலைகளை பார்ப்பதற்கும், சமையல் செய்வதற்கும் என ஏகபட்ட ஆட்களை நியமித்துவிட்டாள்.
ஊருக்குள் ஏதாவது நல்ல காரியம் என்றால் தனது வாலிபத்தின் நெளிவு சுளிவுகள் தெரிய பட்டுச்சேலை உடுத்தி அலுங்காமல் போய் வருவதும், எழவு வீடென்றால் பத்து நிமிடங்கள் உட்கார்ந்துவிட்டு வந்துவிடுவதும் லதாவின் வாடிக்கையாகியிருந்தது. நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் ஆண்களின் கண்களையும் பெண்களின் கண்களையும் தன்னை நோக்கி ஈர்ப்பதில் லதா கில்லாடி ஆகியிருந்தாள். மற்ற நேரங்களில் டிவி பார்ப்பதும் பொழுது போகாத நேரத்தில் யாருடனாவது தாயம் விளையாடுவதும் என்று காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு இந்த சுக வாழ்க்கையும் சலிக்க ஆரம்பித்திருந்தது. அப்பொழுது அவள் இருபத்து நான்கு வயதை அடைந்திருந்தாள்.
இந்தச் சமயத்தில்தான் பக்கத்து தோட்டத்தை குத்தகைக்கு ஓட்ட பரந்தாமன் குடும்பம் குடி வந்திருந்தது. பரந்தாமன் பி.எஸ்.சி படித்துவிட்டு வேலைக்கு எதுவும் போகவில்லை. விவசாயம் பார்க்கிறேன் என்று சொன்னதற்கு அவனது அப்பாவும் மறுப்பு சொல்லவில்லை. அவர்கள் குடி வந்து பால் காய்ச்சும் போதே லதாவுடன் பரந்தாமனின் அம்மா ஒட்டிக் கொண்டாள். அதன் பிறகாக பரந்தாமன் லதாவுடன் ஒட்டிக் கொண்டான். ஆரம்பத்தில் அக்கா என்றுதான் லதாவை அழைத்தான். ஆனால் அது அவளுக்கும் அவனுக்கும் செளகரியமாக இல்லாததால் மற்றவர்கள் முன்பாக மட்டும் அக்கா என்று டீலிங்கை மாற்றிக் கொண்டார்கள்.
இருவரும் ‘ஒண்ணுமண்ணாக’ மாறிய ஒரு வருடம் வரைக்கும் வெளியில் யாருக்கும் தெரியவில்லை. பரந்தாமன் தன் வீட்டிற்கு வரும் நேரத்தில் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களை வெளியில் அனுப்புவது லதாவுக்கு பெரிய சிரமமாக இருந்தது. மற்றவர்களைக் கூட சமாளித்துவிடலாம் போலிருந்தது. சமையல்காரன் முருகனைத்தான் சமாளிக்க முடியாமல் திணறினாள். முருகனை வெளியேற்றுவது பீடித்திருக்கும் ஏழரைச் சனியை வெளியேற்றுவது போல என பரந்தாமனிடம் ஒரு முறை சொல்லியிருக்கிறாள். அதே முருகன் தான் இவர்களை முதன் முதலாக அலங்கோலமாக பார்த்தவனும்.
தகவல் வெளியே கசியாமல் இருக்க நூறு இருநூறு என டிப்ஸ் வாங்கியவன் பிறகு ஆயிரம் ஐநூறு என்று கறக்கத் துவங்கினான். ஆனாலும் அவனது ஓட்டை வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்கவில்லை. ஊருக்குள் இரண்டு மூன்று பேர்களிடம் சொல்லிவிட்டான். அந்தச் செய்திக்கு கைகளும் கால்களும் முளைத்து கூடவே றெக்கையும் முளைத்து ஊர் முழுவதுமாக சிறகடித்தது. சுப்பிரமணியம் அதிர்ச்சியடைந்தாலும் ’இருந்துவிட்டு’ போகட்டும் என்று விட்டிருந்தான். தெரியாதது போலவும் நடித்துக் கொண்டிருந்தான்.
இப்படி ஆறுமாதம் காலம் ஓடியது. லதாவும் பரந்தாமனும் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. திடீரென்று அறுபது பவுன் நகையையும் ஒன்றரை லட்ச ரூபாய் பணத்தையும் எடுத்துக் கொண்டு காணாமல் போய்விட்டார்கள். அவளது மகன் மட்டும் இரண்டு நாட்கள் அழுதான். சுப்பிரமணியன் அதிகம் கவலைப்படவில்லை. ஆனால் ஊர்தான் அதிகம் கவலைப்பட்டது. கடைசியில் யாரோ ஒரு புண்ணியவன் அவர்கள் இருவரும் சாவக்கட்டுபாளையத்தில் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அறிவித்தார்.
பணம் தீரும் வரைக்கும் கொஞ்சலும் குலாவலுமாக இருந்தவர்கள் அத்தனையும் கரைந்த பிறகு சண்டைப்போடத் துவங்கினார்கள். சண்டையில் அடிதடி சர்வசாதாரணம் ஆனது. சாவக்கட்டுப்பாளையத்திற்குள்ளும் இவர்களின் புகழ் கொடி கட்டினாலும் இருவரும் புருஷன் பொண்டாட்டி என்றுதான் மற்றவர்கள் நம்பினார்கள். பரந்தாமன் குடித்துவிட்டு வருவதும், கண்டவளோடு போய் வருவதும் சர்வ சாதாரணமாகிப்போனது. லதாவும் சளைத்தவள் இல்லை. ஊருக்குள் பல பேருக்கு ‘பழக்கம்’ ஆகத்துவங்கினாள். வருமானத்திற்கும் குறைவில்லாமல் இருந்தது.
இந்தக் கதையை கொண்டயம்பாளையத்தில் கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து போன போது பரந்தாமன் இறந்திருந்தான். எய்ட்ஸ் வந்து இறந்து போனான் என்றுதான் சாவக்கட்டுபாளையத்தில் பேசிக் கொண்டார்கள். லதாவே பரந்தாமனை அடித்துக் கொன்றுவிட்டதாகவும் இன்னொரு பேச்சு உண்டு.
லதா தனியாக இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்ட சுப்பிரமணியன் கொஞ்சம் வருத்தமுற்றான். அழைத்துவந்துவிடலாம் என்றும் கூட யோசித்தான். அடுத்த வாரம் அவளிடம் பேசிப்பார்க்கலாம் என்று முடிவு செய்திருந்தான்.
லதாவின் அழகு எதுவும் குறைந்திருக்கவில்லை என்றாலும் லதாவுக்கும் எய்ட்ஸ் இருக்கும் என்ற பயத்தில் ஏற்கனவே பழகியிருந்தவர்கள் அவளை ஒதுக்கத் துவங்கினார்கள். லதாவுக்கு வருமானமும் நின்றிருந்தது.
தன் வாழ்க்கையின் உச்சபட்ச தனிமை இதுவென்று அழத் துவங்கியிருந்தாள். திக்குத் தெரியாத காட்டில் தவிப்பதாகவும் கூட தனக்குள் புலம்பினாள். திடீரென்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சாவக்கட்டுபாளையத்திலிருந்தும் காணாமல் போயிருந்தாள். அவள் எந்த ஊருக்கு போயிருக்கிறாள், தனியாக இருக்கிறாளா போன்ற விவரங்களை கண்டறிந்து அறிவிக்கும் பொறுப்பை இன்னொரு புண்ணியவான் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதுவரை நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.
– ஜூலை 16, 2012
ha ha ha