கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,218 
 
 

மார்ச் 5 2007. லஞ்சுக்கு தஞ்சாவூர் குஸைனுக்கு சென்று தனக்கு பிடித்தமான சிக்னேசர் காய்கறி ரைஸ் சாப்பிடலமா, பெங்களூர் எக்ஸ்பிரஸ் சென்று தக்காளி சாதம் கட்டலாமா,உடுப்பி சென்று அவியல்-ரைஸ் அமுக்கலாமா என்ற சிந்தனையில் இருந்தான் ராகுல். நியுஜெர்சியில் தென்னிந்திய ஹோட்டலுக்கு பஞ்சமே இல்லை. அதுவும் Rt 1- Rt 27 அருகில் அலுவலகம் அமைந்ததற்கு ராகுல் பலமுறை கடவுளுக்கு நன்றி கூறியிருக்கிறான்.

லஞ்சுக்கு புறப்படுமுன்னே, மதியம் உள்ள வேலைகளை அறிய காலென்டரை ஓபன் செய்ய, மதியம் ஒரு மணிக்கு மீட்டிங் இருந்தது. உடுப்பி, தஞ்சாவூர்,பெங்களூர் பயணங்கள் அனைத்தும் ரத்து.

ராகுலின் கால்கள், அலுவலக பான்ட்ரி நோக்கி விரைந்தன. அவசர பசி வந்தால் வேண்டுமென ஒரு பாக்கெட் ப்ரெட்டும், பட்டரும், ஒரு பாட்டில் ஜாமும் வாங்கி வைத்திருந்தான். அவை அனைத்தையும் எடுத்து இரண்டு ப்ரெட்-பட்டர்-ஜாம் சான்ட்விச் தயார் செய்து, ஒரு கிளாஸ் தண்ணீருடன் மக்கள் குறைவாக உள்ள இடத்தில் போய் அமர்ந்தான். செல்போனில் ஒரு முறை மணியை பார்த்துவிட்டு ப்ரெட்-பட்டர்-ஜாமை கையில் எடுத்து வாயில் வைத்தான்.

செப்டம்பர் 1985. பதினைந்து குடும்பங்கள் வசிக்கும் ஒரு பெரிய குடியிருப்பு. இரண்டு நாட்களுக்கு வேண்டிய குடிநீரை பிடித்து வைத்து விட்டு, ராகுலின் பாட்டி தாத்தாவிற்கு, 7:30 மணி காப்பி கொடுத்துவிட்டு, ராகுல்,கோகுல் இருவரையும் ரெடி செய்து, லஞ்ச் பாக் செய்துவிட்டு, கிளம்பினால் பத்மா. பத்மாவின் வலது கை பிடியில் ராகுலும், ராகுலின் லஞ்ச் கூடையும்; இடது கை பிடியில் கோகுலும், கோகுலின் லஞ்ச் கூடையும். ராகுல், கோகுல் இருவர் முதுகிலும் அவர்களைவிட சுமை அதிகமான புத்தக மூட்டைகள். ராகுல் முதலாம் வகுப்பு. கோகுல் ல்.கே.ஜி

வீட்டிலிருந்து பள்ளிக்கு பதினைந்து நிமிடம் நடை. திநகர் உஸ்மான் சாலையை கடக்க நின்று கொண்டிருந்தார்கள்.ராகுலின் பார்வை சென்ற மாதம் அப்பாவுடன் சென்ற பேக்கரி நோக்கி பதிந்தது. ஒரு முறை லஞ்சுக்கு பண்-பட்டர்-ஜாம் வாங்கி தருவதாக அப்பா கூறியது நினைவிற்கு வந்தது. இன்று அம்மா ஏற்கனவே லஞ்சுக்கு தக்காளி சாதம் பாக் செய்ததும் நினைவில் இருந்தது. என்ன தூண்டியதோ ராகுலை, அம்மாவிடம் பண்-பட்டர்-ஜாமுக்கு அடி போட்டான்.மூன்று முறை பொறுமையாக இன்னொரு நாள் என பத்மா கூறி வந்தாள். பத்மாவின் குரலில் வழக்கமாக கொஞ்சும் பொழுது இருக்கும் ஆசை குரலும் இல்லை; எச்சரிக்கும் பொழுது இருக்கும் கண்டிப்பு குரலும் இல்லை. பேக்கரியை கடந்து ஐந்து நிமிடமாகிவிட்டது. இனிமேல் அம்மா பண்-பட்டர்-ஜாம் வாங்கி தர முடிவு செய்தால் ஸ்கூலுக்கு நேரத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்தும் ராகுல் திரும்பவும் அம்மாவிடம் கேட்டான். கோகுல் வாய் திறக்காமல் வந்து கொண்டிருந்தான். தனது வலது கையை பத்மாவிடமிருந்து விடுவித்துக்கொண்டு புத்தக மூட்டையைச் சரி செய்வதுபோல் பாவனை செய்துவிட்டு, அம்மாவைச் சுற்றி ராகுலின் தோளை தட்டினான். ராகுல் அதை பொருட்படுத்தவில்லை. பள்ளி சென்றடையும் வரை கேட்டுக்கொண்டே வந்தான். பத்மா நடை வேகத்தை அதிகரித்தாலே தவிர, பதில் எதுவும் பேசவில்லை. கோகுலை அவன் பிள்டிங்கில் விட்டுவிட்டு ராகுல் பிள்டிங் நோக்கி நடந்தாள். ராகுல் கிளாஸ் ஜன்னல் அருகே நின்று கொண்டு ராகுலுக்கு பண்-பட்டர்-ஜாம் வாங்கி தராத காரணத்தை கூறினாள். ஐந்து நிமிடம் கழித்து ராகுல் வகுப்புக்குள் சென்று விட்டான். மாதத்தில் ஏழாம் தேதி பிறப்பதற்கும் தனக்கு பண்-பட்டர்-ஜாம் கிடைப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று ராகுலுக்கு புரியவில்லை.

அன்று மதியம் நண்பர்களுடன் அமர்ந்து லஞ்ச் சாப்பிடும் பொழுது, அருண்,அன்பான தோழமையோடு ராகுல் அருகே வந்து “எதுக்குடா உங்க அம்மா காலையிலே படி இறங்கி போறப்ப அழுதுகிட்டே போனாங்க?” என்று கேட்டான். அன்று தக்காளி சாதத்தை ராகுல் மிகவும் விரும்பி சாப்பிட்டான்.

மார்ச் 5 2007. மனதிற்குள் அம்மாவை நினைத்து சிறிதாக புன்னகைத்துவிட்டு இன்று ப்ரெட்-பட்டர்-ஜாமை மிகவும் விரும்பி சாப்பிட்டான்.

– கார்த்திக் [kaarththik@gmail.com] (ஆகஸ்ட் 2007)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *