ரீவைண்ட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 9,450 
 
 

அது என் சொந்த ஊர். அங்கு நான் கழித்த நாட்களை பற்றி தங்க தகட்டில் பட்டு ஜரிகையினால் எழுதினால் நான் சொல்ல வருவதை நீங்கள் சொல்லாமலே புரிந்துகொள்ளலாம். ஏனெனில் அவை ஆனந்தமான என் தொடக்கப்பள்ளி நாட்கள். என் தலை பூ மட்டும் மதியமே காய்ந்துவிடுவதும், ஒரு மார்க்கில் செகண்ட் ரேங்கை தவரவிடுவதும் மாதம் இரு சனிக்கிழமைகளிலும் அரை நேரம் பள்ளி வைப்பதுமே எனக்கு அதிகபட்ச கவலைகளாய் இருந்தன அந்நாட்களில். இது நடந்தது சென்ற நூற்றாண்டின் இறுதி, தொண்ணூறுகளின் வால். நான் மூன்றாம் வகுப்பும் தங்கை L.K.G யும் படிக்க புது பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். மூன்று வருடம் அங்கு படித்ததில் போட்டிகளும் பரிசுகளும் வீட்டு அலமாரியை நிறைத்தன, நீங்கள் நம்பாவிட்டாலும அதுதான் உண்மை.

என்னையும் என் தங்கையையும் பள்ளிக்கூடம் கிளம்ப செய்வதே என் அன்னையின் ஒவ்வொரு காலையின் குறிக்கோளும் போராட்டமும் ஆகும். குளிக்க வைப்பது முதல் டாட்டா காட்டும் வரை அம்மாவின் கைகளுக்கு ஓய்வே கிடையாது. காலையில் இட்லி பனையில் இட்லி ஊத்திவிட்டு எனக்கு எண்ணெய் தடவி தலை பின்னிவிட தொடங்குவார் ரிப்பன் வைத்து மடக்கி கட்டிய இரட்டை சடை. எவ்வளவு தான் இறுக்கி பின்னினாலும் மதிய இடைவெளிக்குள் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடன் போட்டியிட என் தலை தயாராகிவிடுவது தினசரி கதை, கடைசி பீரியடில் எதாவது ஒரு சடை அதன் இருப்பிடத்தைவிட்டு நழுவி நெட்டையும் குட்டயுமாய் ஊஞ்சல் ஆடும். ஊஞ்சல் என்றதும் நினைவு வருகிறது எங்கள் பள்ளியின் சின்ன கிரௌண்டில் ஓரமாக போடப்பட்ட அடியில் குழி விழுந்த ஸ்லைடும் ஊஞ்சலும். பி.டி பீரியடில் மட்டும் க்யூ இல் நின்று ஆட வேண்டும். எனக்கு சிறுகதை எழுதுவது புதிது ஆதலால் செய்திகள் முன்னும் பின்னுமாய் இருந்தால் பொறுத்துக்கொள்ளவும்.

பிரவுன் கலர் கட்டம் போட்ட சட்டை டார்க் பிரவுன் மேல் பினோபாரம், ஓரத்தில் தீயில் காட்டிய (அதன் ஓரம் பிரியாமல் இருக்க) கருப்பு ரிப்பன், CMS (பள்ளியின் பெயர் சுருக்கமாக) என்று வெள்ளை நூலில் எம்ப்ராய்டரி போட்ட டை, பிரவுன் பெல்ட், ஒரு ஜோடி கருப்பு பாச்சை போன்ற பள பள ஷு இதுதான் யுனிபார்ம். கிறிஸ்த்துவ பள்ளி என்பதால் யுனிபார்ம் ரொம்ப ஸ்டிரிக்ட். அதுமட்டும் இல்லாமல் ஆங்கிலத்தில் பேசாவிட்டால் அபராதம் வேறு விதிக்கப்படும். ஒரு வார்த்தைக்கு ஒரு ரூபாய் வீதம் வசூலிக்கப்படும். தவறாக பேசினாலும் ஆங்கிலத்திலேயே பேசவேண்டும் என்பது வசதி எங்களுக்கு, ஷேக்ஸ்பியரின் தங்கை மகள் போல தொடர்ந்து ஆங்கிலம் பேசுவேன் (அப்போது எனக்கு ஷேக்ஸ்பியர் அறிமுகம் இல்லைதான்).

பள்ளிக்கு வேனில் போவோம், குளிப்பது முதல் ஷூ போடுவதுவதுவரை சமர்த்தாய் கிளம்பும் என் தங்கைக்கு வேன் வரும் நேரத்தில் மட்டும் வயிற்று வலியாவது கால் வலியாவது தவறாமல் வந்து அட்டனன்ஸ் போட்டு விடும். வேன் தாத்தா மிகவும் பொறுப்பானவர், ஒரு கீ.மீ தூரம் கடக்க 15 நிமிடம் பிடிக்கும், அது தான் பள்ளிக்கும் எங்கள் வீட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி அல்லது தூரம். எனது நினைவு அடுக்குகளை தூசு தட்டி, வேன் தாத்தா முகத்தை நினைவு கூற முயல்கிறேன் ஆனால் தோற்றுதான் போகிறேன் ஒவ்வொரு முறையும், கஜினி முஹம்மதை நெஞ்சில் நிறுத்தி மீண்டும் மீண்டும் என் மூளைக்குள் படையெடுத்ததில் தூசி தும்மலுடன் கரையான் அரித்த கறுப்பு வெள்ளை புகைப்படமாய் கிடைத்துவிட்டது அவரின் நரை தட்டிய சிகையுடன் கூடிய நீண்ட முகம் . அவர் டிரைவர் சீட்டில் இருந்து பின்னால் என்றோ திரும்பி பார்த்த போஸ் இல் நச் என்று நெஞ்சில் உதித்தது.

அப்பா அனுப்பும் பணத்தில் பெரும்பகுதி லோன் கட்டிவிடும் அம்மா, பொருளாதார நிலையை சீர்செய்ய நினைத்ததாலோ அல்லது என் தங்கை வளர்ந்துவிட்டால் என தோன்றியதலோ ஒரு கீ.மீ தூரம் உள்ள பள்ளிக்கு நடந்து செல்ல ஆரம்பித்தோம் அடுத்த ஆண்டு முதல். என் மனதுக்கு பிடித்த நாட்கள் அவையெல்லாம். வாழ்க்கை பாரத்தை சுமக்க போகும் தன் மகளுக்கு முதுகில் கொஞ்சம் தெம்பு இருக்கட்டும் என கருதியோ என்னவோ என் அம்மா எங்கள் வீடு உதவியாள் மருதாயீயை என் பள்ளி பையை சுமந்து வரவும் பத்திரமாக பள்ளியில் கொண்டு விடவும் ஏற்பாடு செய்திருந்தார். இரு முனைகளிலும் கயிறு கட்டிய கருப்பு நிற தடித்த ஃபிரேம் கொண்ட மூக்கு கண்ணாடி வழியே நாற்பத்தைந்து வருடங்களாய் உலகை காணும் கண்கள், கொடைக்கானல் பள்ளத்தாக்காய் கன்னங்கள், 3 ஆம் நம்பர் ட்ரிம்மர் போட்டது ஒன்ற கிராப்பு தலை (முடியை வெட்டிக்கொள்ளுமா இல்லை வளரவே வளராத என தெரியவில்லை), கசங்கிய வெளுத்துப்போன புடவை, இடது இடுப்பில் எனது செங்கமட்டை நிற பெரிய பள்ளி பை, வலது கையில் தங்கையின் பொம்மை போட்ட கருப்பு பை இவ்வாறாக என் மனதில் மருதாயீ யின் உருவம் L.E.D TVயில் H.D படம் போல தெளிவாய் தெரிகிறது. நாங்கள் எங்களது ஊட்டச்சத்தின் ரகசியம் அடங்கிய மதிய உணவை கருவில் கொண்டுள்ள ஒயர் கூடையை தூக்கி செல்வோம், அதில் அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலும் அடக்கம். வெள்ளி கிழமைகளில் மதிய உணவு கூடையை சுமக்க தேவையில்லை, அம்மாவே வெள்ளி கிழமைகளில் சாப்பட்டு கூடையுடன் பள்ளிக்கு வருவார். பள்ளியை ஒட்டி உள்ள சர்ச் இல் அன்றைய உணவு இடைவேளை கழியும். சர்ச் யில் வளர்க்கப்படும் புறாக்கள், லவ் பர்ட்ஸ், வண்ண மீன்கள் வாத்து கூட்டங்கள் எல்லாம் அளவில்லா ஆனந்தத்தை எங்கள் பிஞ்சி மனதில் பிய்ச்சி அடிக்கும். அங்கு இருக்கும் கிருஸ்த்துவ சகோதரிகளை பார்க்கும்போது எனக்கும் அவர்களை போல் திருமணம் செய்துக்கொள்ளாமல் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் நினைவு இருக்கிறது, ஆனால் அந்த எண்ணம் எப்போது கைவிடபட்டது என்பது நினைவில் இல்லை.

பள்ளிக்கு செல்லும் போது நான்காவது வீட்டில் கம்பௌண்ட் சுவருக்கு உள்ளே இருக்கும் துளசி இலையை பறித்து வாட்டர் பாட்டில் உள்ளே மிதக்க விடுவது எங்களுக்கு மிகவும் பிடிக்கும், வகுப்பில் ஒருவள் இப்படி கொண்டு வர நாங்களும் அதை கடைபிடிக்க ஆரம்பித்தோம். இப்போதும் துளசி செடியை எங்காவது பார்க்கும் போது வாட்டர் பாட்டில் ஞாபகம் வர தவறியதில்லை. எத்தனை வகை முறுக்கு சாபிட்டிருந்தலும் (என் கையால் சுட்ட அரிசி உட்பட) பள்ளி விட்டு நடந்து வருகையில் வாங்கி தின்ற பாட்டி கடை முறுக்கை மட்டும் மறக்கவே முடியாது. அதை கடை என்று சொன்னால் ஊரில் உள்ள கடைகள் எல்லாம் கோவித்துகொண்டு என்னுடனான பேச்சுவார்த்தையை முறித்துகொள்ளும். அந்த பழைய வீட்டின் அறை ஜன்னலை எடுத்து விட்டு, சாக்கு பருதாவால் பின்கட்டை அடைத்து, நீண்ட பலகையை படுக்க போட்டு அதில் எண்ணி நான்கே பிளாஸ்டிக் டப்பாக்களில் தேன் மிட்டாய், ஆசை சாக்லேட், முறுக்கு வகையறாக்கள் இருக்கும், நீண்ட S போன்ற வளைந்த கம்பியில் பிளாஸ்டிக் பையில், அழிந்து போன இனங்களான 25 பைசா குச்சி மிட்டாய், லிப்ஸ்டிக் போட்டது போல உதடு சிவக்கும் ஜவ்வு மிட்டாய் போன்றவை தூக்கில் தொங்கும். கோடுபோட்ட நோட்டு ஐந்து, இரண்டு ரூபாய் பேனா, ஸ்லேட்டு குச்சி என்னும் “பலப்பம்” போன்ற கல்வியியல் ஐட்டங்களும் வைத்திருப்பார்.

உயர்க்கல்விக்காக சொந்த ஊரைவிட்டு அருகாமை நகர பள்ளியில் சேர்ந்து பின் சொந்த வீட்டையும் விட்டு நகரத்துக்கு குடிப்பெயர்ந்து, பெருநகர வாழ்க்கை சக்கரத்தில் சிக்கி, குடும்பவுறவு நீர்சுழற்சியில் சுற்றி, பொருளாதார கடலில் மீன்கள் தேடிகொண்டும் இருக்கிறேன். தொப்புள்கொடி போன்று ஊரை மறந்தேபோனேன். இப்போது ஊர் சென்று தேடினாலும் வேன் தாத்தா, மருதாயீ, பெட்டி கடை பாட்டி போன்றோர் கிடைப்பார்களா காலன் அவர்களை இன்னும் மிச்சம் வைத்திருப்பானா என தெரியவில்லை. ஒருவேளை காலம் என்னை விரல்பிடித்து அங்கு அழைத்து சென்றாலும் நான் அவர்களை தேடபோவதில்லை. என்னால் முடிந்ததெல்லாம் அவர்களையும் அங்கு இருந்த நாட்களையும் அதிகபட்ச காலம் நினைவில் வைத்து மனதுக்குள்ளேயே ஆனந்திப்பது தான். உங்கள் சிறு வயது வாழ்க்கையையும் அவ்வபோது நினைவு படுத்திகொள்ளுங்கள் முடிந்தால் என்னை போல் எழுதிதள்ளுங்கள்.. மனது ஒன்று மட்டுமே எத்தனை முறை கேட்டாலும் ரீவைண்ட் பட்டனை அழுத்தி கடந்போன வாழ்க்கையை கொஞ்ச நேரம் வாழ்ந்துகொள்ள அனுமதிக்கும் வள்ளல்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *