கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 14,705 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வத்ஸலாவை நான் வைத்திருப்பதாக ஒரு கொடூரமான வதந்தி அந்தக்காலத்தில் பரவியிருந்தது. பொறாமைக்காரர்களும், பொறுக்கிகளும், வயிறெரிபவர்களும் செய்த வேலை அது. அந்த வதந்தி அவ்வளவும் உண்மையே.

பத்து வயதுப் பையனும் இதுவெல்லாம் தேவையா என்று சிலர் புத்திமதிகள் சொன்னார்கள். இதை பற்பனுக்கும், சிவராசனுக்கும் அல்லவா சொல்லியிருக்கவேண்டும்!

ஒரு பெண் கொஞ்சம் சிவப்பாக இருந்துவிட்டால், கொஞ்சம் கண்களுக்கு கை பூசியிருந்தால், கொஞ்சம் ஒற்றைப் பின்னலை இறுக்கி வாரி மஞ்சள் ரிப்பன் கட்டியிருந்தால் உடனே இப்படியான கழிசடை எண்ணங்கள் தோன்றவேண்டுமா? அவளை வளைக்க என்ன பாடெல்லாம் பட்டிருப்பார்கள்!

இவர்களுக்கெல்லாம் நான் செய்த தியாகத்தைப்பற்றி என்ன தெரியும்? வார்ச்சட்டை போடுவதையே நிறுத்திவிட்டேன். என் அப்பா என்றால் மகா தீர்க்கதரிசி. நாலு வருடங்களுக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை முன்னதாகவே கணித்துக்கூறிவிடுவார். நான் வளர வளரப்போடுவதற்கென்று இரண்டு அங்குலம் இடம் விட்டு தொள தொளவென்று வைத்த வார்ச்சட்டையை நான் போட மறுத்துவிட்டேன். ஓரேயடியாக முடியாது என்று சொல்லிவிட்டேன். நான் சொன்னால் சொன்னதுதான்.

இதுமட்டுமா? பத்து வருடங்களாக செய்யாத ஒரு காரியத்தையும் நான் வத்ஸலாவுக்காக துணிந்து செய்தேன். காலை வேளைகளில் அம்மா என் கன்னத்தை நசுக்கிப்பிடித்து கன்ன உச்சி வாரிவிடுவாள் அல்லவா? அதைக்கூட தடை செய்துவிட்டேன். என் சொந்தக்கையால் தலையை மேவி இழுத்துவிடத் தொடங்கியிருந்தேன்.

இதுவெல்லாம் பற்பனுக்கும், சிவராமனுக்கும் எங்கே தெரிந்திருக்கப்போகிறது! அது மாத்திரமா? வத்ஸலா எங்கள் வளவுக்குள்தான் ஒரு குடிசையில் வசித்து வந்தாள். தேசவழை என்று ஒன்று இருப்பது இவர்களுக்கு தெரியாதா? எனக்கில்லாத உரித்தா?

வத்ஸலா குடும்பம் வந்தேறு குடிகள். பஞ்சத்தில் அடிபட்டு வந்தவர்கள். எங்கள் வளவின் ஒரு மூலையிலேயே குடிசைபோட்டுக்கொண்டு இருந்தார்கள். வத்ஸலாவுடைய அப்பா முன்னொரு காலத்தில் வண்டியோட்டி பிழைத்தாராம். ஓர் உடைந்த வண்டியும், தட்டுமுட்டுச் சாமான்களுமாக வந்து சேர்ந்தவர்கள்.

இலந்தப்பழம் பொறுக்கும்போதுதான் அவள் எனக்கு பரிச்சயமானாள். அவளுடைய பாவாடை நிறைய பழங்கள் சேர்ந்ததும் ஒரு சருவச்சட்டியில் தண்­ர் ஊற்றி அவற்றை போடுவோம். ஆர்க்கிமெடிஸ் கண்டுபிடிக்கத் தவறிய ஒரு சித்தாந்தத்தை நான் வெகு கவனத்துடன் அவளுக்கு விளக்குவேன். புழு அரித்த பழங்கள் எல்லாம் மிதக்கும்; நல்ல பழங்களே கீழே போய்விடும் என்பதுதான் அது. அவள் கண்கள் அகலமாக விரியும். இதற்குமுன் இப்படியான அந்தரங்கங்களை யாரும் அவளுடன் பகிர்ந்து கொண்டது கிடையாது.

அந்த வயதிலும் நான் தயாள குணம் படைத்தவன். பார்த்துப் பார்க்க மாட்டேன். மிதக்கும் பழங்கள் எல்லாவற்றையும் வத்ஸலாவிடம் கொடுத்துவிடுவேன். அவளுக்கு உற்சாகம் தாங்காது. அப்படியான ஒரு சமயத்தில்தான் அவள் எனக்கு ஒரு ரகஸ்யம் சொன்னாள்.

அவளுடைய மாடு வரப்போகிறதாம். வண்டி இழுத்து ஓய்வுபெற்ற மாடு அது. பராமரிப்பது கஷ்டம் என்றபடியால் இப்ப நாலுமாதமாக அதை ‘எருக்கட்ட’ விட்டிருநதார்களாம் அநத் மாடு திரும்பி வரப்போகிறதென்பதில்தான் அவளுக்கு எவ்வளவு சந்தோஷம். அதிகாலையில் விரிந்த நந்தியா வட்டைப்பூ போல அவளுடைய முகம் மலர்ந்திருந்தது.

‘எருக்கட்ட’ விடுவதென்றால் இப்படி ஒன்றுக்கும் உதவாத மாட்டை கொண்டுபோய் வயலில் விட்டுவிவார்கள். அதுவும் அங்கேயிருக்கும் புல்பூண்டை சாப்பிட்டு உயிரைப் பிடித்து வைத்திருக்கும். பிரதியுபகாரமாக தன்னுடைய சாணியைத் தாளராமாகத் தந்து வயலுக்கு எரு சேர்க்கம். வயலில் நடவு முடிந்ததும் மாட்டை வீட்டுக்கு திருப்பி விடுவார்கள். இந்த ஏற்பாடு retired மாடுகளுக்கு மிகவும் வசதியாக இருந்தத.

ஒரு மாட்டுடன் அந்நியோன்யமாகப் பழகம் சந்தர்ப்பம் எனக்க இதற்குமுன்பு கிடைத்ததில்லை. அதுவும் வில்லங்கக்ள் ஏற்படலாம் என்பது என் சிற்றறிவுக்கு அப்போது எட்டவில்லை.

சிவக்கொழுந்து மாமா எங்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்தார். பரம்பரை பாட்டு வாத்தியார். வெளிக்குந்தில் இருந்து பாடிக்கொண்டே இருப்பார். அவர் பாடும் நேரங்களில் நாங்கள் தவறாமல் அங்கே இருப்போம். ஏதோ ஒன்று எங்களை அங்கே இழுத்துவிடும்.

பத்து வயதுகூட நிரம்பாத எங்களுக்கு சங்கீதத்தைப் பற்றி என்ன தெரியும்? ஆனால் இருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்று கேட்டுக்கொண்டே இருப்போம். அந்த இசையில் ஏதோ ஒரு மாய சக்தி இருந்தது. பிரம்மாண்டமான கடல் பறவை ஒன்று செட்டைகளை விரித்து வட்டமடித்து சிறுகச்சிறுக கீழே இறங்குவதுபோல அந்த ராகம் கேட்பதற்கு வெகு சுகமாக இருக்கும்.

அது மெதுவாகத்தான் ஆரம்பமாகும். ஒரு கையகலத்து அருவிபோல கொஞ்சமாக ஊற்றெடுக்கும். பிறகு விரிந்து விரிந்து கிளைவிட்டு பெருகும்; எதிர்பாராத விதமாக வளையும், குதிக்கும், பிரவகிக்கும். ராகம் வடிந்து சமநிலைக்கு வரும்போது மூச்செடுக்க வெளியே வரும் திமிங்கலம்போல நாங்களும் எங்களை ஆசுவாசப் படுத்திக் கொள்வோம்.

இசை முடிந்ததென்றாலும் கோவில் மணியின் கார்வைபோல அந்த நாதம் மனதிலே கொஞ்ச நேரத்துக்கு ஓடிக்கொண்டே இருக்கும்.

மாமா கண்ணைத் திறப்பார்.

“ஏன் மாமா, அப்படியே மனதில் சந்தோஷம் பொங்குதே? இது என்ன ராகம், மாமா?”

“இது மார்க ஹ’ந்தோளம்; அடி முடியைக் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு ஒர் அபூர்வமான ராகம். ஆயுள் முழுக்க சாதகம் செய்தாலும் இந்த ராகத்தில் மறைந்து கிடக்கம் சூட்சுமங்களை ஆழம்காண முடியாது எனக்குப்பிடித்த ராகம்.”

வத்ஸலாவின் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டே போவேன். லேசாக இருக்கும். அவள் நடந்து வந்ததாகவே தெரியாது; மிதந்ததுபோல படும். மனத எதற்காகவோ ஆனந்தத்தில் துள்ளும்.

எங்கள் கிராமத்தில் ஒரு விசேஷம் இரண்டு நாளைக்கு மழை தொடர்ந்து பெய்தாலும் ஒரு சொட்டுத் தண்ணியும் நிலத்தில் தேங்கி நிற்காது. மண் உறிஞ்சி எடுத்துவிடும். கால் பதித்து நடக்கும்போது மெத்தென்று குளிர்ந்திருக்கும். வெள்ளம் ஓடி மண்ணெல்லாம் வார் வாராகி வரிக்குதிரைக் கோடுபோல ரம்மியமாக இருக்கும். சின்னச்சின்னக் காளான்களெல்லாம் சூரியனைப் பார்ப்பதற்கு குதித்துக்கொண்டு வெளியே வந்து குடை பிடித்து நிற்கும். ரத்தச்சிவப்பான தம்பலப் பூச்சிகளும் ‘பார், பார்’ என்று வந்துவிடும்.

அப்படியான ஒரு சுகமான நாளில்தான் மாடு வந்து சேர்ந்தது. நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒருவருக்கும் தெரியாமல் வத்ஸலா என் வீட்டுக்கு வந்து ஜன்னல் வழியாக ‘ஸ்க், ‘ஸ்க்’ என்று கூப்பிட்டாள். நானும் மாட்டைப்பார்க்க ஆவலுடன் ஓடினேன்.

மாடு என்றால் ஏதோ காராம்பகவின் அண்ணனாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் கண்ட காட்சி என்னைத்தூக்கி அடித்தது.

எலும்பும் தோலுமாக ஒரு மாடு. தலையை நிமிர்த்தி வைக்கக்கூட திராணி இல்லாமல் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு நின்றது. கழுத்திலே உள்ள தொங்கு சதை நிலத்தில் முட்டியது. முதுகு நிறையப் புண்கள். அதில் மொய்க்கும் ஈக்களைக்கூட விரட்டக்கூட அதன் வாலில் தென்பு இல்லை. பொட்டுப்பொட்டாக மயிர் எல்லாம் உதிர்ந்துவிட்டது. வயோதிகத்துக்கும் மாட்டுக்கும் நடந்த சண்டையில் வயோதிகம் வென்றுவிட்டது.

பொத்துப் பொத்தென்று சாணம்போட்டு ஒரு கலன் மூத்திரம் பெய்ததேயொழிய வேறு ஒன்றும் பெரிதாகச் சாதிக்காமல் நின்றுகொண்டிருந்தது.

பேயறைந்தது போலக்கிடந்த என் முகத்தை வத்ஸலா கண்டிருக்கவேண்டும்.

“என்னடா, உனக்குப் பிடிக்கேல்லியா?”

“இல்லை, இல்லை, மாடு நல்லாகத்தான் இருக்கு. என்னடி பேர்?”

“ராமா என்று பேர். ராமு!….ராமு!”

இப்படிச் சொல்லிக்கொண்டே அதன் தொங்கு சதையைத் தடவிவிட்டாள், வத்ஸலா. அப்போது மாடு தலையை உயர்த்தி அவள் முகத்தோடு வந்து செல்லமாக உரசிக்கொண்டது.

அந்த ஒரு கணத்திலேயே வத்ஸலாவின் இதயத்திற்குள் புகுவதற்கு இலகுவான வழி மாட்டின் வாலைக்கெட்டியாகப் பிடிப்பதுதான் என்பது எனக்குப் புரிந்துவிட்டது.

“வத்ஸ”, இங்கை பார். ராமுவின் கண்கள் என்ன வடிவாக இருக்கு!”

ராமு தலையைப் படபடவென்று ஆட்டியது. கழுத்து சலங்கை டங் டங்கென்று சத்தம்போட்டது. மாடு சோனியாயிருக்கலாம், ஆனால் புத்தி இன்னும் முற்றிலும் மழுங்கவில்லை என்பதை நான் கண்டுகொண்டேன்.

“அம்மா!”

“அம்மா!”

“என்னடா? நீ இன்னும் தூங்கவில்லையா?

“அம்மா, அம்பாளுக்கு என்ன வாகனம்?”

“சிங்கம்”

“முருகனக்கு?”

“அது உனக்கு தெரியும்தானே! மயில்”

“சிவபெருமானுக்க என்ன வாகனம்?”

“ரிஷபம், காளைமாடு”

“அம்மா!”

“என்னடா! இனி காணும். நித்திரை கொள்.”

“இல்லை, அம்மா! முருகனுக்கு மயில். அது சரிதான், அவர் உலகத்தை சுற்றிப்பார்க்க அம்பாளுக்கு சிங்கம். அதுவும் சரி. யமனுக்கு எருமைக்கடா. அதுவும் பொருத்தம்தான், சிவபெருமானுக்கு காளைமாடு, இது சரியாயில்லையே!”

“அதுவந்து, மாட்டுக்கம் மனிதனுக்கும் பெரிய தொந்தம் இருக்கு. பசுமாடு பால் தரும்; சாணத்தால் வீடு மெழுகலாம்; வறட்டி தட்டலாம், காளை மாடு என்றால் ஏரிலே பூட்டலாம். வண்டியில் கட்டி இழுக்கலாம். அதனுடைய தோலைக்வட செருப்பாக உபயோகப்படுத்தலாம். மாடு அவ்வளவு உதவி மனிதனுக்கு. அதுதான் சிவபெருமான் அதற்கு நன்றி சொல்லும் முகமாக இப்படி தனக்கு வாகனமாகும் பதவியைக் கொடுத்திருக்கிறார். எத்தனை பெரிய பேறு!”

“அம்மா!”

“இடிக்காதை, சும்மா படடா”

அம்மா சொன்ன கதை எனக்கு சரியாகப்படவில்லை. ஒரு பக்கக்கொம்புக்கு சிவப்பு சாயமும், மறுபக்கத்துக்கு நீலமும் அடித்திருந்தார்கள். சிவபெருமானுடைய மாட்டுக்கும் அப்படி இருக்குமா? அடுத்த நாள் வத்ஸலாவிடம் இதைப்பற்றி கேட்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டேன்.

தொங்கு சதையும், பாளமாகப்பிளந்த முதுகுப் புண்ணுடனும் அந்த மாறு என் கனவில் வந்தது. தலையைத் தலையை ஆட்டியது. என்னைப் பரிதாபமாகப் பார்த்து முடிறயிட்டது. நான் விழித்துப் பார்த்தபோது பாய் எல்லாம் நனைந்து இருந்தது. மெள்ள நகர்ந்து அம்மாவை அணைத்துக் கொண்டேன்.

ராமு ஒரு சாதுவான மாடு. அதுவும் ஒரு காலத்தில் நல்ல கம்பீரமாகத்தான் இருந்ததாம். ஆனால் centre of gravity பற்றி அதற்கு ஒரு இளவும் தெரியாது. ஒரு நாள் வண்டி நிறைய செங்கல் அடுக்கி இழுத்து வந்தபோது வண்டி குடை சாய்ந்துவிட்டதாம். ஒரு காலில் நல்ல அடி. அன்று படுத்ததுதான். அதற்குப்பிறகு ராமு வண்டி இழுக்கவேயில்லையாம்.

அடுத்தவேளைச் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற கவலை இல்லாமல் ராமு தள்ளாடியபடியே நிற்கும். அதற்கு தீனி தேடுவது எங்களுக்க வேலையாகிவிட்டது. இதற்கு வத்ஸலாவின் பெற்றோர் அவ்வளவு கவலைப்பட்டதாகத் தெரியவில்€லை. மாடு காற்றைக்குடித்து சீவிக்கும் என்று அவர்கள் கருதியிருக்கலாம்.

நாங்கள் கிரமமாக ராமுவுக்கு புல்லும், பலாவிலையும், களவாக ஒடித்த குழையையும் போட்டு வளர்த்தோம். இதைத் தவிர supplementary சத்துணவாக கழுநீர்த்தண்ணியும் கொடுத்துவந்தோம். தவிடு, பிண்ணாக்கு என்பதெல்லாம் உயர்ந்த ரக மாடுகளுக்கென்று ஏற்பட்டது. ராமு போன்ற ஏழை மாடுகளுக்கு அது கிடைக்க வழியே இல்லை.

எங்கள் வாழ்நாளில் கணிசமான ஒரு பகுதி இப்படி ராமுவுடன் கழிந்தது. முதலில் எனக்குப் பயமாகத்தான் இருந்தது. ‘தொட்டுப்பார், தொட்டுப்பார்’ என்று வத்ஸலாதான் உற்சாகப்படுத்தினாள். நான் தொட்ட இடத்தில் அதன் உடம்பு சுழி வந்தது என் விரலும் கூசியது.

ஆசு ஆசென்று அது சுழுநீர் குடித்து முடிக்குவரை காத்திருந்து பார்ப்போம். ரயில் எஞ்சின்போல் மூச்சு விட்டுக்கொண்டே குடிக்கும். அவரசத்தில் சில நேரங்களில் மூக்கை உள்ளே நுழைத்ததும் தண்­ரில் குமிழ்கள் மேலே வந்துவிடும். தலையைப் பலமாக ஆட்டும்போது திவலைகள் எல்லாம் எங்கள்மேல் தெறிக்கும்.

ஆனால் ராமு மிகவும் சிரமப்பட்டது படுப்பதற்கும். எழுந்திருப்பதற்கும்தான். படுப்பது தீர்மானித்துவிட்டால் மெல்லமெல்ல முன்னங்கால்களை மடித்து தன் உடம்பையே கீழே கீழே இறக்கும். தரையில் இருந்து இரண்டு சாண் உயரம் இருக்கம்போதே அதன் பெலன் எல்லாம் தீர்ந்துபோய்விடும். அப்படியே பொத்தென்று உடம்பைக் கீழே போட்டு சரிந்து விழுந்துவிடும்.

எழுந்து நிற்பதென்றால் இன்னும்கூட உபத்திரவம். சரி கணக்காக ஐந்து நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும்.

ராமு வேகமாக மெலிந்துகொண்டே வந்தது. முதுகுப் புண்களும் ஆறுவதாகத் தெரியவில்லை. அதை அவிழ்த்து விட்டு எங்கள் வளவிலேயே கதியால் ஓரங்களில் கிடைக்கும் புல்லைச் சாப்பிடவிட்டோம். அதன் பின்னாலேயே மின்க்கெட்டோம். எங்கள் முயற்சியை எப்படியும் முறியடித்து விடவேண்டும் என்று ராமு பாடுபடுவதாக எங்களுக்குத் தோன்றியது.

“வத்ஹு, உனக்குத்தெரியுமாடி? சிவபெருமானுடைய வாகம் ரிஷபம், காளைமாடு என்று.”

“தெரியும்டா, கடவுளடைய வாகனம் கடவுளுக்கு சமானம்டா. என்ன செய்யிறது. எவ்வளவுதான் சாப்பாடு போட்டாலும் ராமு இப்படி மெலிந்துகொண்டே போகுது. என்னடா செய்வம்?”

அப்போது ஒரு யோசனை தோன்றியது. அபூர்வமான கெட்ட யோசனைகள் எனக்கு படபடவென்று வரும். இரவு நேரத்தில் மாட்டை ரகசியமாக அவிழ்த்துவிட்டு ஊரை மேயவிடுவதென்று சதியாக முடிவுசெய்தோம்.

இரண்டு நாள்வரை இந்த சதியை யாருமே கண்டு கொள்ளவில்லை. மூன்றாவது நாள் மாடு திரும்பிவந்துவிட்டது. பனைமட்டையால் யாரோ மாட்டைப்போட்டு வெளுத்திருந்தார்கள். காகங்கள் இளைப்பாறுவதற்காகப் படைக்கப்பட்டதில் தோல் எல்லாம் உரிந்து சதை வெளியே தொங்கியது. என்ன கோலம்! பழைய புண்களுடன் இப்பொழுது புதுப்புண்களும் சேர்ந்துகொண்டன.

இன்னும் பல யோசனைகள் என் கைவசம் இருந்தன. ஆனால் அம்மாவின் திடீர் தலையீடு எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

நான் மாட்டு வேலை செய்வதையும் வத்ஸலாவுக்காக சொந்தக்கையால் சாணம் அள்ளிப்போடுவதையும் அம்மா ஒரு நாள் கண்டுவிட்டாள். அம்மாவுக்கு வந்த கோபத்தைப் பார்க்கவேண்டும். அன்று வீட்டிலே எனக்கு நல்ல சாத்துப்படி கிடைத்தது.

“பெரிய கடையில் இருந்து வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறாங்கள். கசாப்புக்கு போற மாட்டுக்கு சாணம் அள்ளுறியா?”

அம்மா பிடரியில் அடித்துவிட்டாள். அடி பரவாயில்லை. தாங்கக்கூடியதுதான். ஆனால் வத்ஸலா? கசாப்புக்கடை விஷயம் தெரியவந்தால் அவள் மனம் என்ன பாடுபடும்!

“மாமா, என் அப்பா கேட்கும்போது காம்போதி, தோடி, மோகனம் என்றெல்லாம் பாடுவீர்களே! ஆனால் உங்களுக்காக பாடும்போது இதே ராகத்தை நீங்கள் திருப்பித் திருப்பி பாடுறீங்கள்? வேறு ராகம் பாடமாட்டீங்களா?”

மாமா என்னைக் கொஞ்சநேரம் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார்.

“காம்போதி, தோடி போல இது பணக்கார ராகம் இல்லை. இது என் போன்றவர்களுக்காக ஏற்பட்டது. மார்க ஹ’ந்தோளம். லேசில் இதை வசப்படுத்த முடியாது. மிக்க பிரயாசைப்படவேண்டும். இது கைவசமாகிவிட்டால் சங்கீத தேவதையே அடிமை என்றுதான் அர்த்தம்.”

மாமா பாடினார் அந்த ராகத்தின் எடுப்பும், விரிவும், விஸ்தாரங்களும் புதியவைகளாக இருந்தன. மலர்ச்சரங்கள் ஒன்றன்மேல் ஒன்று விழுவதுபோல அந்த ராகத்தின் சோபை பெருக்கிகொண்டே போனது.

“மாமா, இந்த ராகத்தில் அப்படி என்ன விசேஷம்?”

“அப்பிடிக்கேள், இதன் ஆரோகணத்தில் ஏழு ஸ்வரங்கள். பார் இப்படிப்போகும்.

ஸ ரி க ம ப த நி ஸ்

“அவரோகணத்தில் ஸ்வரங்கள் இப்படி திரும்பும்.”

ஸ் நி த ப ம க ஸ

“கவனித்தாயா? திரும்பி வரும்போது ரி கிடையாது. அதுதான் விசேஷம்.”

“அது சரி, மாமா நேற்று இதே ராகம் வேறு மாதிரி இருந்ததே! இண்டைக்கு இப்பிடி இருக்குதே! இது ஏன் மாமா?”

‘அதுதான் trademark. மோனலிசா சித்திரத்தை யார் எங்கிருந்து பார்த்தாலும் அது அவர்களையே பார்ப்பதுபோல இருக்கும். மனோரஞ்சிதப்பூ நினைத்த வாசத்தைக்கொடுக்கும். அதுபோலத்தான் இந்த ராகமும். குதூகலமான நேரங்களில் இந்த ராகத்தைப் பாடும்போடு சந்தோஷமாக இருக்கும். வேறு சமயங்களில் மனதுக்கு வெகு சாந்தமாக இருக்கும். இன்னும் சில நேரங்களில் சோமாக இருக்கும். அதுதான் இதன் தன்திதன்மை.”

அன்று மாமாவுடன் வெகு நேரம் இருந்தோம் ராக ஆலாபனை முடிந்ததும் அந்தத் தெலுங்குக் கீர்த்தனையை வரிவரியாகப்பாடி விளக்கம் கூறினார். நாங்கள் இருவரும் மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தோம்.

‘வாடி, வத்ஸ”’ என்று அவளை இழுத்துக்கொண்டு திரும்பினேன். அன்று அவளுக்கு எப்படியும் ராமுவைப்பற்றி சொல்லிவிடவேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் வத்ஸலாவுடைய முகத்தை நேருக்கு நேர் பார்த்ததும் இருந்த தைரியம் எல்லாம் ஓடிவிட்டது. அதுவும் அன்று எங்கள் மனம் ஒரு நாளும் அநுபவித்திராத ஒரு வித பூரணமான அமைதியில் அல்லவா கிடந்தது!

எங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் பெண்கள் தொகை வெகு குறைவு. எங்கள் வகுப்பிலேயே மூன்று கந்தசாமிகளும், இரண்டு பெண்களும் இருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிலே ஒருத்தி வத்ஸலா, மற்றது பத்மாவதி. ஒல்லியாய், உயரமாய தலைக்கு வழியவழிய எண்ணெய் வைத்துக்கொண்டு வருவாள்.

வத்ஸலா அப்படியில்லை, வீட்டில் தரித்திரம் பிடுங்கினாலம் பள்ளிக்கு வரும்போது பளிச்சென்று இருப்பாள். கிழிசல் இல்லாத பாவாடை உடுத்திக்கொண்டு கலகலவென்று சுபாவமாகப் பேசுவாள். அவள் என்னோடு கதைத்தால் பற்பனம் சிவராசனும் வயிறெரிந்து சாவார்கள்.

வத்ஸலாவிடம் ஒரு தையல்பெட்டி இருந்தது. அதற்குள் தையல் சாமான்கள் வைத்திருந்தாளா என்பது பரம ரகஸ்யம். ஆனால் அது ஒரு அட்சய பாத்திரம். அதைத்திறந்து வத்ஸலா ஒரு புளியங்காயை எடுத்து என் கைக்குள் அமுக்கம்போது சொன்னாள், “ராமு படுத்தபடியே இருக்கு, இரண்டு நாளாய்ச் சாப்பிடவில்லை. ஒருக்கால்வந்து பாரடா.” அதற்கிடையில் அவள் கண்களில் நீர் கோத்துவிட்டது.

அன் பின்னேரமே போனேன். நான் என்ன மாட்டு வைத்தியரா? மாட்டை மேலேயும் கீழேயும் பார்த்தேன். மாட்டின் அந்திமம் நெருங்கிவிட்டது என்பது என் சிற்றறிவுக்குக் கூட தெரிந்துவிட்டது. பாம்புபோல சிமிக்கிடாமல் வந்து என் முதுகைத் தொட்டாள். திரும்பிப்பார்த்தேன். உடம்பு குலுங்க மேலுதட்டைக் கடித்தபடி வத்ஸலா நின்றுகொண்டிருந்தாள்.

ஆனால் எங்களுக்குத் தெரியாமல் வத்ஸலாவின் தகப்பனால் ஒரு காரியம் பண்ணினார். தரித்திரத்தில் இருப்பவர்களுக்க கடவுள் தந்திர புத்தியையும் கொடுத்திருப்பார் போலும். மாடு இறந்துவிட்டால் தோல் விலைக்குத்தான் போகும். உயிரோடு இருக்கும்போது விற்றுவிட்டால் ராத்தலுக்கு இவ்வளவு என்று கொடுத்துவிடுவார்கள் என்பது அவருக்குத்தெரியும்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே மாடு போய்விட்டது. வத்ஸலாவைப் பார்க்கமுடியவில்லை. அவளுடைய உற்சாகம் மறைந்துவிட்டது. மாட்டை எருக்கட்ட கொண்டு போய்விட்டார்கள். எப்படியும் திரும்ப வந்துவிடும் என்றுதான் அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். எனக்குத்தெரிந்த உண்மையை நான் கூறவில்லை.

“ஏண்டா, ராமுவுக்கு தினம்தினம் தவிடு, பிண்ணாக்கு எல்லாம் வைப்பார்களா?”

“வைப்பார்கள், வைக்காமல்?”

“இல்லையடா, ராமு கிழடாகிவிட்டது. எழுந்து நிற்பதற்குக்கூட அது சிரமப்படும் நல்லாய்ப் பார்ப்பாங்களா?”

“பார்ப்பாங்கள்”

“ஏண்டா, முதுகிலே எல்லாம் இருக்குமே; இப்ப காய்ந்திருக்குமா? பாவமடா!”

வத்ஸலா ராங்கியான பெண் என்னதான் வறுமையில் வாடினாலும் அவள் தன் ஏழ்மையை வெளியே காட்டியதே இல்லை. சிரிக்கும்போது முத்துப்பல்வரிசை பளிச்சிடும். இரண்டு கைகளையும் இடுப்பிலே வைத்துக்கொண்டு அவள் நின்றால் எதோ நடனத்துக்கு தயாராக நிற்பது போலத் தோன்றும்.

அந்த வத்ஸலா கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டு வந்தாள். மாடு ‘வரும், வரும்’ என்று வாசரைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். எத்தனையோ தடவை சொல்லிவிடலாமா என்று பார்த்தேன். அவ்வளவு தைரியம் எனக்கு வரவில்லை.

மழை சோவென்று அடித்து கால் வைக்கும் இடமெல்லாம் மெத்தென்று இருந்தது. வாரடித்து நிலமெல்லாம் சிவப்பு நிறமாகவும், வெள்ளை நிறமாகவும் கோடுபோட்டுக் கிடந்தது. தம்பலப்பூச்சிகளெல்லாம் வந்துவிட்டன. காளான்கள் குடை விரித்துவிட்டன. வத்ஸலா தினம்தினம் கழுநீர்த் தண்ணியை வைத்துக்கொண்டு வாசலிலே காத்திருந்தாள். மாடு இன்னமும் திரும்பவில்லை.

மழைக்காலங்களில் இசையை அநுபவிப்பது வித்தியாசமா இருக்கும். வெள்ளைப்படுதாவில் சைத்திரிகன் லாவகமாக தூரிகையை இழுத்ததுபோல அந்த நாதமானது வெகு தூரம் வரை கேட்கும் மாமாவின் கண்டத்தில் இருந்து புறப்பட்ட இசை நாலு திசைகளையும் சென்று நிரப்பி ஒருவித பிறயத்தனமுமில்லாமல் உயிர்நிலையைத் தொட்டு தொட்டு பரவசப்படுத்தியது.

மார்க ஹ’ந்தோளம்தான். ஒரு சிறு புள்ளியிலிருந்து கோலம் போடுவதுபோல அந்த ராகம் விரிந்து விரிந்து கொண்டுபோனது. அப்படி நுட்பமான சங்கதிகளை நான் ஆயுளில் கேட்டதே கிடையாது. மனதை உருக்கம் சோகம் கவ்வியது. ராகம் மேல் ஸ்தாயிக்குப்போய் தொட்டபோது வயிற்றை என்னவோ செய்தது.

வத்ஸலாவின் கண்கள் பளபளத்தன. இன்னும் கொஞ்சம் போனால் அழுதுவிடுவாள் போல இருந்தது.

ராக ஆலாபனையை முடித்துவிட்டு சிவக்கொழுந்து மாமா பாடத்தொடங்கினார்.

“சலமேலரா சாஹேத ராமா

சலமேலரா”

இசை தரும் மயக்கத்தை அநுபவிப்பது ஒன்று; அர்த்தத்தை அறிந்து ரசிப்பது வேறு. இசையின் சூட்சுமத்தை உணர்ந்து அநுபவிப்பது இன்னொரு வகை. இந்த மூன்றும் கலந்த நிலையில் ஏற்படும் பரவசம் ஒரு தனி அல்லவா?

மாமாவின் உடல் மெல்ல மெல்ல அசைந்தது. ஒரு பச்சைக் குழந்தையை அணைப்பதுபோல ராகத்தோடு சேர்ந்த அவருடைய திரேகம் ஆடிக்கொண்டிருந்தது.

“சலமேலரா சாஹேத ராமா

சலமேலரா”

“ஹே! ராமா, அயாத்தி மன்னா! ஏன் இந்த உதாசீனம்? என்னால் இனியும் உன் பிரிவை தாங்கமுடியாது…”

நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் இந்தத் தியாகராஜர் எங்களுக்காகவே பாடி வைத்துவிட்டுப்போனது போல இருந்தது.

சில நிமிடங்களில் மாமாவின் உடம்பு வெடவெடன்று நடுங்கியது. கண்களில் தாரை தாரையாக நீர் கொட்டியது.

பாட்டை உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டே வந்தேன்.

ஆரோகணத்தின்போது ஏழு ஸ்வரங்களும் இருந்தன.

அவரோகனத்தில் போதும் அதே ஸ்வரங்கள்தான் திரும்பி கீழே வந்தன

ரிஷபம் மட்டும் திரும்பவில்லை.

– 1996-97, வடக்கு வீதி (சிறுகதைத் தொகுப்பு), மணிமேகலைப் பிரசுரம், நவம்பர் 1997

– அ.முத்துலிங்கம் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2003, தமிழினி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *