(1997 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
என் பிறப்புத் தீவு இருபத்து மூன்று வருஷங்களுக்குள் எவ்வளவோ மாறியிருப்பதை நான் கண்ட ஆறு மணித்தியாலங்களில் மாத்தளையில் கால் பதித்தேன். மாத்தளையைக் காண்பதில் எனக்கேற்பட்ட உணர்ச்சிக்குப் பெயர் என்னவாக இருக்கும்? பொறாமை? வயிற்றெரிச்சல்? ஏமாந்த துயரம்?… இன்னும் கொஞ்சம் மலையேறினால், நான் கேள்விப்பட்டவற்றை நேரிடை கண்டால்…
‘அடேய், ராம்ஸே! உன்போன்ற நாட்டுப் பற்றில்லாதவர்கள் போன பிறகுதான் நான் உருப்பட்டேன்!’ என்று முகம் பார்த்தே இந்த மலைநாட்டின் வாசல் சொல்கிற மாதிரி ஒரு பிரமை!
பெற்று வளர்த்த மலையை இகழ்ந்தா ஓடினேன் என்ற விரக்திப் பரிணாமத்தில், மதுரையிலிருந்து இதுவரை கனக்காத இரு வியாபாரப் பெட்டிகளும் என் மனச்சுமைபோற் கனத்தன – செந்தோமஸுக்கருகில் இறங்கும் போது.
நாட்டுப் பற்று! எனக்கது இருக்கவில்லை தான். எப்படி இருந்திருக்க முடியும் – மலைப்பற்றே இல்லாதிருந்த போது? அதை எனக்குக் கல்வியோ தொழிற்சங்கங்களோ அரசோ அக்கம் பக்கமோ சொந்த உறவுகளோ ஊட்டாமல், பிறகெப்படி, மந்திரத்தாலா வந்திருக்க முடியும்?
வரவேயில்லை! அதனால் நான் போக வேண்டி வந்தது; போனேன் – போகாதவர்களையும் போகும்படி அவமதித்து விட்டு!
மனைவியின் உறவுகள் மதுரையைத் தேர்ந்தன. தமிழ் வளர்த்த பூமி என்னையும் வளர்க்குமென்று நானும் போனேன்.
எவ்வளவோ வாதாடியும் என் தாய் – தகப்பனுக்கு இலங்கையே மதுரமாக இருந்தது.
இலங்கையன் என்று சொல்லிக்கொள்ளும் உரிமை இல்லாத நிலைல, அதிலும் மலையகத்தான் என்று முத்திரை விழ அருவெறுத்த அவதியில், புகுந்தகத்தோடு சுவர்கக டிக்கட் பெற்றுவிட்ட பெருமையில், மதுரை – ஆனையூர் என் ஊராகப் பதிவுற்றது.
பொற்றாமரை வாவியை நாசஸ்த்தலமென்று, மாசி மிட்டாய் மலைத் தீவை வாசஸ்த்தலமாக்கிக் கொண்ட என முந்தையோரின் முட்டாள் தனத்தைச் சரிக்கட்டுவதாக நான் பெருமைப்பட்ட பதிவு அது!
அந்த மூன்றாம் படை வீட்டில் எனக்குத் தமிழ் நீதி அளிக்கச் சங்கப் பலகையே இல்லாமற் போனதே, அதுதான் ஊழ்வினை!
அப்படி என்னதான் அங்கே நடந்ததென்று தோண்டுவதில் பலனில்லை. சில விஷயங்கள் எதுவும் நடக்காமலேயே நடந்தேறுவதில்லையா?
அலிகளுக்குக் குழந்தைப்பேறு இல்லாததைப் போல இந்த ராம்ஸேக்கு இதுவரை நாட்டுப்பற்று வந்ததேயில்லை!
அப்பா முந்தி அடிக்கடி சொல்வார்:
“அடே ராமூ!… நம்ம நம்பிக்கைங்கிறது நம்மளோடயே செத்துப் போறதில்லைடா! நாம செத்தாலும், அது இந்தக் காத்து மாதிரி, இந்த ஒலகத்லயே கெடக்கும்! நம்மவுட்டு அதே நம்பிக்க இன்னொருத்தருக்கு வந்திட்டா, அது எத்தன யுக – யுகாந்திரங் கழிஞ்சாலுஞ் சரி, நம்மக்கிட்ட இருந்த அந்த அதே நம்பிக்க, இவரோட நம்பிக்கயோட சேர்ந்துக்கிடும்! அதத்தான் உட்ட கொற – தொட்ட கொறன்னு சொல்றது….”
புராணமென்று அப்போதெல்லாம் அவரை நான் அவமரியாதார்ச்சனை செய்ததுண்டு. நான் திடமிழந்த பிறகுதான் அதன் திடகாத்திரமே தெரிந்தது.
எனக்கும் அந்த நாட்டுப் பற்று நம்பிக்கை வந்து சேரவேயில்லை. வர விடாமற் செய்தார்களா என்பதுவும் தெரியவில்லை. இப்போதிப்போதுதான் ஏதோ தட்டுப்படுகிற மாதிரி…
நேத்திரங்கள் விற்றுச் சித்திரங்கள் வாங்குவதை மகாகவியே கை கொட்டி நகைத்திருக்கின்றான்!….
எங்கள் தகப்பனார் இலங்கையோம் என்று எழுபத்திரண்டில் எழுத்தில் பதிந்துவிட்டு, அடுத்த வருஷமே மண்ணுக்குள் புதைந்து அதை நிரூபித்தார். அவ்வாண்டே, என்னையும் பிரியும் கண்ணீரை அம்பா வடிக்க வடிக்க, ஆனை மீது ஊரப் போவதாக நான் கப்பலேறினேன்.
இங்கில்லாத ஆனையா என்றெல்லாம் நான் அன்று எண்ணிப் பார்க்கவில்லை. தோட்டக்காட்டானியத்திலிருந்து பெறும் விடுதலை ஒன்றுதான் இலட்சியம்!
கால் நூற்றாண்டில் பஸ் ஸ்டாண்டும் மாறிவிட்டது…. மனக் குடைச்சலைத் தற்காலிகமாகத் தடுத்துக் கொண்டேன்.
பஸ்ஸில் வீடு போக முடியாது. பெட்டிகல தோட்டத்தில் ஒரு மைல் மலையேற்றம். டாக்ஸி பிடித்தால் கட்டணம் ஜாஸ்த்தி வரலாம். ஆட்டாதான் கூட்டு. எவ்வளவு கேட்பான்? பத்து?…. இதென்ன மதுரையா?…
கை தட்டினேன். விழுந்து கும்பிட்ட மாதிரி வந்து நின்றது. குனிந்து டிரைவரைப் பார்த்தேன். சிங்களத்தை மறந்தாயிற்று. அவனது முக நரம்புகளாலேயே மொழியைத் தெரிந்து கொண்டவன் போல் தமிழிலேயே வினவினேன்:
“சுடுகந்த போக என்னா வரும்பா?”
“காளி கோயில் வருங்க!”
“அட, சார்ஜு என்னா வரும்பா ?”
“சுடுகந்தைல எங்க போகணும்?”
“பெரிய பங்களாவுக்கு”
“அறுவது ரூவா தாங்க.”
“அட, கம்மியா சொல்லுப்பா!”
“என்னா சொன்னீங்க?”
“முப்பது ரூபா தர்றேன்!”
“அறுவது – கொறயாதுங்க!”
“அட, நாப்பது தர்றேன்!”
“ஏலாதுங்க சேர்! தோட்டத்துப் பாத ஆக மோசம்! லோட் வேற!”
“நாப்பத்தஞ்சு! தீத்திடு!”
“அறுவதுதாங்க ரேட்! வெரி சொரி!”
அறுக்கட்டு மென்று இருவருமாகப் பெட்டிகளை ஏற்றி ஏறினோம்.
அதே நிலம்; வீதி; குடிபடை மாற்றம். அதே ஆலமரம் கலாசார மாற்றம். அதே மாரியாத்தா; என்னிடமும் அதே பக்தி; என்னில் மாற்றம்! மாரி மீது வைத்த பக்தியை நான் ஏன் மலை மீது வைக்காமற் போனேன்?
எழுபத்து மூன்றில் விபரமில்லாக் குழந்தையாக இலங்கை வயிற்றிலிருந்து மதுரை மண்ணிற் போய்ப் பிறந்த நான், ஆட்டா போகப் போகத் தொண்ணூற்றேழின் வாலிபனாக இருந்து பண்ணாமத்து மச்சினியைக் காதலிக்கத் தொடங்கினேனா?
இதே மச்சினியை அன்று உதாசீனப் படுத்தினேன். இவள் இலங்கையனை மணந்தாள்; நான் -மதுரைக்காரியை. இன்றைய காதல் நியாயமானதாகுமா?…
தோட்டம் என்பதை ஒத்துக்கொள்வதில் அப்படியொரு மானங்கெட்டதனம் அன்று – எனக்கு!
சூரியனுக்கு முன்பே சுடர் கொளுத்திக் கொண்டு பிள்ளைகளுக்குப் பால் வார்ப்பதற்காகப் பால் வெட்டப் போய், விழி மணி இருளும் ஒரு மணிப் பசியில் கூடு திரும்பிக் கொதிக்க வைத்து, சரஸ்வதியிடம் போயிருக்கும் பிள்ளைகளுக்கு முதலில் எடுத்து வைத்து மூடித்தாங்களும் பெயர் பண்ணி விட்டு, மீண்டும், சூரியன் கறுக்கும் வரையில் கொக்காப் பழம் பிடுங்கியோ, புல்லோ அந்திப் பாலோ வெட்டியோ, மண்பால் தோண்டியோ, வாய் வயிறுகளைக் கட்டிப் பிள்ளைகளையும் கம்பனிகளையும் தொழிசங்கங்களையும் வியாபாரிகளையும் நாட்டையும் ஒரு சேரக் காத்து வளர்த்த, என் பிரஹ்மங்களின் இதயுபுரிகளையே சுட்டெரித்த மிருகப் பருவத்தில் உருத்திரனாய்த் திரிந்த காலம் அது.
அரசாங்க எடுபிடித்துவமோ உடுப்புக்குரிய உத்தியோகமோ கிடைக்கவில்லை. அலைந்து அலுத்தபோது கண்டியில் ஒரு சர்வர் சந்நியாஸம்.
மூன்றாம் மாதத்தில் கொழும்பில் ஒரு சேல்ஸ்மன் உபன்னியாஸம்.
கஞ்சி கை கிடைத்திராத எனக்கு அது போதுமானதாக இருந்தது. தோட்டப்புறம் அனுசரிக்காத நாகரிகக் கூடாரத்துக்குள் நான் ஒட்டகமாகத் தலை நுழைத்த பிறகு.
‘தம்பி பேரென்னா?’
“ராம்ஸே!”
“அருமயான பேரு! ஊரு?”
‘மாத்தள!’
‘அருமயான ஊரு!’ மாத்தளைல எங்க?’
‘டவுன்லதான்!’
‘டவுன்ல எங்க?’
‘டவுன்ல மேப்பக்கமா!’
நாட்டுப் பற்றுக்கு முன், மலைப் பற்றுக்கு முன், ஏன் இந்த வீட்டுப் பற்றே ராம்ஸேக்களுக்கு விட்டுப் போனதென்று யாருமே ஆராய்ந்ததாக இல்லை.
சில வாத்திகளும் ஸ்ட்டாஃப்மாரும் நகரக் கல்வி மான்களும் எங்களைத் தோட்டக்காட்டுப் பயல்களாகவும் புல்வெட்டப்போடா’க்களாகவும் ஐந்திலேயே வளைத்து விட்டதாலா? அம்மாங்கமே எங்களுக்குப் புலம் பெயர்ந்தோர்க்குரிய பிச்சையை மட்டுமே இட்டதாலா? நாலு திசைகளுள் எந்தச் திசையுமே வந்து தேறுதலாவது சொல்லாததாலா?…
தோட்ட வெறுப்பின் மனோ வியாதி நாட்டு வெறுப்பாக வளருமென்று ஐக்கிய நாட்டுக்கே அறிவில்லை! நிர்வாகத் துரோகங்களைப் புரிந்து கொள்ளாத நானும் எனக்கே துரோகியாகிப் போனேனே!….
தோட்டத் துரோகிகள் என்று பட்டியல் போடுகிறார்களே, அது பூரணமடையாது – என்னை வெறுத்த என் பெயர் அதில் முதலாவதாக விழும் வரை!
ஒரே தங்கையின் கல்யாணம் வந்ததுவும், எதிலுமே பட்டுக் கொள்ளாமல் இருந்த நான் என் நகர மனைவியும் இல்லாது கொழும்பிலிருந்து நேராக இதே மாத்தளைப் பிள்ளையார் கோவில் வந்ததுவும், அந்தத் தோட்டக் காட்டுப் பந்தியில் உட்காராமலே தாலி கழுத்துப்பட்ட கணத்தோடு அம்மாவிடம் ஐநூறும் தங்கையிடம் ஐநூறும் நீட்டி விட்டுத் திரும்பியதுவும் மீண்டும் ஒரு தரம் சித்திரவதையாக இப்போது என் நினைவுக் கொப்பரையிற் குமிழியிட்டன.
என்னைக் கண்ட ஒவ்வொருவருமே அப்போதப்போதே அவரவர் காதுகளுக்குள் கிசுகிசுத்துக் கொண்டார்கள். விஷயதானம் எனக்குத் தெரியும். அதை நான் சட்டை செய்யாத காலமல்லவா அது!
நாலைந்து வருஷத்திய நோயாளி அப்பா. வயதுக்கு மீறிக் கிழண்டிருந்தார். முகூர்த்தத்துக்கு முன் அவர் தயங்கித் தயங்கி என்னிடம் வந்தமை, இப்போதெல்லாம் என்னை அறுக்கும் ஓர் ஆயுதம்!
“…பெரிய தம்பி…” என்றார் அடங்கிப் பயந்த மெதுத் தொனியில். “பசிக்ற மாதிரி…. இருக்குதுப்பா!….”
சனியன் தொலையட்டம் என்ற பாவத்தோடு, “வாங்க!” என்று சொல்லிவிட்டு, கோவில் பக்கமாக இருந்த சல்காதோ ஹோட்டலுக்கு அவர் போனால் அதன் தரம் மாசு பட்டு விடும் என்பது போல, எதிர்த்திசையிலிருந்த சைவக்கடைக்கு நடந்தேன். ஒரு சர்வரை விரல் சொடுக்கினேன். வந்தான்.
நாட்டின் கஜானாவுக்குத் தன் சக்தியை எல்லாம் தாரை வார்த்து முடித்ததால் வீதியைக் கடக்கக் கூடத் திராணியற்றுத் தடுமாறிக் கொண்டிருந்த தந்தைக்கு ஒரு கை கொடுக்கவே வெட்கப்பட்டோ எரிச்சற்பட்டோ முந்திப் போயிருந்த நான், அவரை சர்வரிடம் சுட்டிக்காட்டி, “அந்தாள் கேக்றதக் குடுப்பா!” என்றேன் இரண்டு ரூபா நோட்டையும் கொடுத்து.
வெளியே வந்தேன். அதற்குள் தெய்வம் கை கொடுத்து வீதி கடந்திருந்த அப்பாவிடம் பத்து ரூபாயைக் கொடுத்துத் “தின்னுட்டு வாங்க!” என்று முணு முணுத்து விட்டுக் கோவிலுக்குள் புகுந்து நின்றேன் – கனவான்களுக்கிடையில்.
கூலிக்காரனின் மகனாக இருக்க இயலாதவனால், பணக்கார முதலாளியின் மருமகனாகக் கூடவா இருக்க இயலாது? இருந்தேனே, பாவி…
அப்பாவின் சாப்பாடு எது என்று அம்மாவிடம் கேட்டிருக்கலாம். அல்லது நானே கவனித்து வாங்கிக் கொடுத்திருக்கலாம்.
மாப்பிள்ளை வீட்டிலேயே அவர் இறந்து போனதாக மறுநாள் தந்தி வந்தது – என் இருதயம் தெரிந்து அவர் இருதயம் நின்று போனது போல!
ஒரு நாட்டையே வாழ வைத்தவரை நான் வாழ வைக்கவில்லை!’
தோட்டத்துக்குப் போக அன்றும் கூசினேன்; இன்றும் கூசினேன். அன்று என் மேன்மையை மறந்து; இன்று என் கீழ்மையை உணர்ந்து!…..
நான் தோட்டக்காட்டான்தான் என்று இமயத்தில் நின்று கூவ இன்று பதைக்கிறேனே, யாருக்கு என்ன இலாபம் விளையப் போகிறது?…..
மரண வீட்டிலும் என் பீத்தல் அடங்க வில்லை! மாப்பிள்ளைப் பையன் படித்தவன். கம்மடுவைத் தோட்டம். வேலை இல்லாதவன். தோட்டத்திலேயே நாலு மாடுகளை வளர்த்துப் பாலூற்றி வந்தான். அவனுக்கேற்ற பொருளாதாரத்தில் பெட்டி வாங்கிச் சுடுகந்தைக்கே சடலத்தைக் கொண்டு வந்திருந்தான்.
“இதென்ன பெட்டி அது! பிச்சைக்காரப் பொட்டி! ஐநூறு அறுநூறு ரூவாப் பெட்டி வாங்கியிருந்தா நான் வந்து பணங்குடுக்க மாட்டனா? நல்ல நேரம், அவளோ மாமா மாமியோ வரல்ல! பட்டிக்காட்டான் குடும்பம் மாதிரித் தப்படிப்பும் ஒப்பாரியும் வேற!… இதுதான் நான், இந்தப் பக்கமே வாறதில்ல!… எப்பிடியாச்சிந் தொலைங்க!….”
இடுகாட்டோடு கொழும்பு வந்தவன் தான். தாயகப் பயணம் சொல்லிக் கொள்ளத்தான் நான் அடுத்ததாகத் தாயிடம் போனேன்.
நெஞ்சப் புண்ணைக் கிளறிக் கொண்டிருந்த நினைவு வேலை அகற்றிவிட்டு, “தம்பிக்கு எந்தூருப்பா? “என்றேன்.
“சுடுகந்தைங்க!” –
“சுடுகந்தையா?… யார் மகன்?…..என்னைத் தெரியவில்லையோ?… —
“அப்பா யாரு?” என்றேன்.
“மாரியப்பாங்க!”
“ஓம் பேரு?”
“மலயாண்டி!”
மாரியப்பாவின் இரண்டாவது மகன்! மூக்கு வடித்தபடி நாற்ற உடுப்புகளோடு ஆட்டுப்பட்டி ஸ்க்கூலுக்குப் போனவனா இந்த மன்மதன்?
“ஆட்டா ஒன்னுதா?”
“ஆமாங்க சேர்! அண்ணாச்சி வாங்கிக் குடுத்தாரு!”
“அவருக்கென்னா ஜோலி?”
“அவரு ஜீயேக்கியூ பாஸ் பண்ணுனாரு. தொடர்ந்து படிக்க வசதி இல்லீங்க. ஒரு சான்ஸ் கெடச்சி ஓமானுக்குப் போயி மூணு வருஷம் பில்டிங் சுப்பவைஸரா இருந்துட்டு வந்தாரு. நானுஞ் ஜிஸீயீ படிச்சிட்டு சும்மா இருந்தேனுங்களா, இந்த ஓட்டோவ வாங்கிக் குடுத்துட்டு மறுபடியும் ஓமானுக்குப் போயி ஒண்ணா வருஷங்கிட்ட ஆகுது…
“அப்பாம்மா?”
“ஊட்லதாங்க!”
“லயத்திலயா?”
“அதெல்லாம் உட்டு மூணு வருஷம் ஆச்சிங்க! சுடுகந்தைலயே ஒரு காணி வாங்கி ஊடு கட்டியிருக்கிறோம் – பழய பிச்ச கண்டாக்கையா ஊட்டுக்கு மேப்பக்கமா!”
நாட்டுப் பற்றோ தோட்டப் பற்றோ இல்லாத நான் போன பிறகு தோட்டம் முன்னேறி விட்டதுதான். வளம் தேடி அங்கே போனேன். ஆனால் மல்ட்டி வீஸா எடுத்து வியாபாரம் செய்து பிழைக்க இங்கே வர வேண்டியதாகி விட்டது! அது பிராயச்சித்தம்! இருபது வருஷங்களுக்கு மேலாக நான் வெந்து கருகும் தவத்தை மெச்சி அந்த மதுரை மீனாட்சி எனக் களித்த வரமாகத்தான் இருக்க வேண்டும் இந்த மல்ட்டி வீஸா!
என் விருப்பம் போல் எப்போதும் வரலாம். தோட்டக்காட்டானாக வாழலாம்; அம்மாவின் கடைசிக் காலத்தில் அவருக்கு ஒத்தாசையாக மாதத்தில் பத்திருபது நாட்களைக் கழிக்கலாம். அன்று என் நாகரிகத்திற்கு துணை போன மலட்டு மனைவியையும் அழைத்து வந்து என் பிறப்பிட மகிமையை உணர்த்தலாம்……
அம்மா மட்டுமல்ல, இந்த மலையகமே பெருமைப்பட ஏதாவது செய்ய வேண்டும். என் எதிரிகள் போல் தொடர்பின்றி வாழும் தங்கையும் தம்பியும் பாசம் பிழிய நான் வாழ்ந்து காட்ட வேண்டும்! …… ஆனாலும், இவ்வுலகில் என்னைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக அம்மாவைத் தவிர வேறேவரும் இருக்கப் போகிறார்களா?…..
‘தமிழுக்கு ‘ஜெ’ என்று பேர், என் அன்று சொன்னவர்கள், இன்று ‘ஜெயிலுக்கு ‘ஜே’ என்று பேர், என்று பல்ட்டி அடிக்கிறார்கள் அங்கே, அந்தப் பட்டியலில் இவர்கள் என்னையும் சேர்த்து விடுவார்களோ?
ஆனை மீது நான் இவர்வதற்கு மாறாக உன் மீது ஆனை இவர்ந்ததால் விழி பிதுங்கியதில் பார்வை கிடைத்த பிறகு, நான் இங்கே வெறுத்த கலாசாரங்களே அங்கே கடவுளாச்சாரங்களாக மிளிர்வது கண்டு உன் தோட்டக்காட்டானியத்தின் அருமை – பெருமைகளை உணர்ந்த பிறகு, கண்ணீர் கொண்டு அம்மாவுக்கு எழுதி வந்தேன். சென்ற ஆண்டு இப்படி எழுதினேன்:–
‘தம்பியுடனோ தங்கையுடனோ போய் இருங்கள், அம்மா. அல்லது யாத்திரை வருவதாக இங்கே வந்து விடுங்கள்! மலையாக மூன்று பேர் இருக்கும் போது நீங்கள் ஏன் தனிமையில் வாடவேண்டும்? அப்பாவைப் புதைத்த இடத்திலேயே உங்களையும் அடக்க வேண்டும் என்ற உங்கள் பிடிவாதத்தில் அர்த்தமே இல்லை. மயானத்தை விற்றுவிட்டார்கள், அங்கே வீடுகள் எழுந்து விட்டன என்று நீங்கள் தானே எழுதியிருந்தீர்கள்?’
படிப்பறிவில்லாத அம்மா, தொங்க வீட்டு விசாலாட்சி மூலம் எழுதிய பதில் என்னைக் கூனிப் போகச் செய்து விட்டது.
அப்பாவின் பக்கம் என்பது இந்தத் தோட்டத்து மண்ணை, ‘மகனே! பிறந்தகம் பிரிந்த நீங்கள் மூவருமே மூன்று திக்குகளில் அடங்கி விடுவீர்கள். உங்கள் அப்பா தனித்துப் போகக் கூடாது! என்னை இங்கே புதைத்தால், ஒரு கல்லையாவது நட மாட்டர்களா? வருஷத்துக்கு ஒரு முறையாவது உங்கள் வீட்டை நீங்கள் திரும்பிப் பார்க்க மாட்டீர்களா?-‘
“அம்மா, உங்கள் தலைச்சன் பிள்ளையாகவே நான் இருப்பேன், அம்மா! என் மடியில் உங்கள் உயிரோ உங்கள் மடியில் என் உயிரோ பிரியட்டும்! இன்னும் இரண்டு கிலோ மீட்டர்தான் தாயே…’
சே, அரை நூற்றாண்டாகியும் எனக்குப் புத்தியில்லை! வருவதாக அம்மாவுக்கு முதலிலேயே எழுதியிருக்க வேண்டும். இப்படித் திடீரென்று அம்மா முன் போய் நின்று, அந்த ஆனந்த அதிர்ச்சியில்…
இல்லை!..அப்படி எதுவும் நடக்காது…மறுபடியும் மனக்கொதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
“சர்க்கார் சுவீகரிக்கப் போகுதுன்னு பங்காளிங்க சுடுகந்தயக் கூறு போட்டாங்களாமே, இப்ப தோட்டம்னே ஒண்ணு கெடயாதோ?”
“சேர் இந்தியாங்களா?” “ஆமாப்பா, மதுர!”
பேச்சிலயே நெனச்சேன்!……. சுடுகந்தன்னு முழுசா ஒரு தோட்டம் இல்லதான். ரோட்டோரத் துண்டெல்லாங் கொலனியாகீறிச்சி. எங்க காணியும் அங்கதாங்க. நடுப்பகுதியில ஒரு நூறேக்கர் மாதிரி ஒரு தோட்டமா நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.”
“ஜனங்க?”
“ஆரம்பத்ல கொஞ்சங் கஷ்ட்டமாத்தாங்க இருந்திச்சி. போகப் போக வெளி வேல, வெளிநாட்டு வேலன்னு மளமளன்னு ரொம்பப் பேருக முனனேறீட்டாங்க! இப்ப சுடுகந்தைல வட்டிக்குக் குடுக்றாங்க; பிஸினஸ் பண்றாங்க; பத்து முப்பது பேருக்கு மேல வெளிநாட்ல இருக்றாங்க! கொஞ்சப் பேர் காணி பூமியும் வாங்கீட்டாங்க போங்க!”
“தோட்டக் காடெல்லாம் இப்படியேதானா?”
“அப்பிடியெல்லாம் பாதிப்பில்லீங்க! நாட்டுப் பக்கமா இருந்த லோக்கல் தோட்டங்க கொஞ்சம் இப்பிடித்தான். ஆனா பெரிய தோட்டங்க எல்லாம் வேற வகயா முன்னேறீறிச்சின்னுதாங்க சொல்லணும்! கைல – மடிய்ல இருந்தவுங்க இந்தியாவுக்குப் போய்ட்டாங்க. இங்க நின்னு போனவுங்க எப்பிடியும் பொழச்சாகணுமே! எடம் மாறுனாங்க; தொழில் மாத்துனாங்க; புள்ளைக வேற வளந்தாச்சு! அப்புறம் என்னாங்க…” –
“சிலோன்ல தோட்டக்காடெல்லாம் பொதுவா எப்படி?”
“காடுங்க்ற பேச்சுக்கே எடமில்லீங்க! செல தோட்டக்கள்ல எலக்ட்றிஸிட்டி வந்திறிச்சி. சொந்தமா ஊடு கட்டிக் குடுக்கப் போறாங்க. ஓட்டுரிம கெடச்ச பொறகு அரசே மதிக்குதுங்களே! நாலஞ்சி பேருவேல செய்ற குடும்பம்னா ஏழெட்டாய்சஞ் சம்பாத்தியமாகுது! இன்னொரு பத்து வருஷம் போய்ட்டா பாருங்க, அதிலயும் இந்தக் துவேஷக் கண்ணுக படாம இருந்திட்டா, தோட்டங்க எல்லாயே கைத்தொழில் பேட்டையாகீறும்!…
“இது… இப்ப ஒரு… பத்திருவது வருஷத்துக்குள்ளதாம் போல?…”
“ஆமாங்க! எங்க அப்பாம்மா காலத்லயும் அதுக்கு முந்தியும் கண் மூடிக் கெடந்தாங்க. எதுக்கெடுத்தாலும் இந்தியாதான் அவுங்களுக்கு! அதுனால இங்க உள்ள பொறுக்கிக நல்லா ஏமாத்துனாங்க! சிறிமா – சாஸ்த்திரி ஒப்பந்தத்துக்குப் பொறகு இது தல கீழா மாறீறிச்சி! ‘பதி’ யோட கல்வித் திட்டத்தால் பாதி, இப்ப உள்ள தலமொற படிச்ச தலமொறயாகீறிச்சி! வர்ற தலமொற இத உட நல்லாருக்குங்க!”
“அப்படியும் இன்னும்… ஸட்ரைக்கு, அது, இதுன்னு….”
“எல்லா சமூகத்லயும் அது உள்ளதுதானுங்களே! வெலவாசி ஏறிப் போச்சி! நாகரிகம் வேற! சமாளிக்கணுமே?.. இதுக்காக இந்தியாவுக்கு ஓடீற முடியுமா? அதுனாலதான் இதெல்லாம். சரிபாதி இன்னும் படிப்பறிவில்லீங்களே! ஒருத்தன் ஸட்ரைக்குப் பண்ணும்பான். சரீம்பாங்க! ஒருத்தன் அய்யோ வேணாம்பான். சரீம்பாங்க! எல்லாம் வறுமயும் படிப்பில்லாத கொறயுந்தான்!…… ஆனா முந்திமாதிரி இல்லீங்க! எலங்கைல எந்தக் கட்சி ஆட்சிக்கு வாறதா இருந்தாலும், தோட்டத்து ஜனங்களோட ஓட்டு வேணுங்க!!…
என் பத்தினித் தாயைப் பரத்தை என்று அக்கம் பக்கம் கேலி பண்ணியபோது நான் தலைமை வகித்தேன் அன்று. இன்றோ அதே அக்கம் பக்கம் கோவில் கட்டுகிறது! நான்?….
ஒரு சுற்றுப் பருத்திருந்த காளியைத் தாண்டி, தவறணைப் பாத்திகளில் மாதிரி முளைத்தெழு வீடுகளைத் தாண்டித் தோட்டத்தின் உள்ளே போகப் போக, ஆட்டாவின் அறுபது ரூபாவை நியாயப்படுத்தியது பாதை.
ஒரு மாற்றமும் இல்லாத அப்பாவி வெள்ளை மரத்தையாவின் மாயத்தோடு காலனி முடிவடைந்து தோட்டப் பழைமை வரவேற்றது.
எனக்குப் போல் றபர் மரங்களுக்கும் அதிக வயது தெரிந்தது. கவ்வாத்துப்பட்ட கொக்கோ மரங்கள், மலையாண்டியைப் போற் சடைத்திருந்தன. நீளமான தொட்டிகளுடன் பிடுங்கவும் பொறுக்கவுமாக வரக்கட்டிற் பெண்கள்.
பழைமை எனக்குள் தலை உயர்த்தியது. அம்மா – அப்பாவோடு பழம் பிடுங்கியது. பொறுக்கியது, விதை எடுத்தது, ஒரு வாகனம் போனால், ஹோட்டலுக்குள் நுழைந்த பெண்ணை சர்வர்கள் பொத்து விடுகிற மாதிரித் தோட்டமே வேடிக்கை பார்ப்பது…
பாடமாத்தியில் திரும்பி பங்களாவைப் பார்க்க ஏறியது ஆட்டா. கீழ்ப்பக்கமாக ஒட்டுலயம் தெரிந்தது. நான் பிறந்தது, வளர்ந்தது, வெறுத்தது – எல்லாமே அங்கே தான்! சாவதானமாகப் போய்ச் சமாதானப்பட வேண்டும்!
அம்மா இப்போது அங்கே இல்லை. தம்பி, மட்டக்களப்பில் ஒரு கம்பனி மானேஜர். தங்கை கணவர் கொழும்பில் பால் மாக் கம்பனி ஒன்றில் குவாலிட்டி கண்ட்றோலர். பங்களாவுக்குக் கீழ்ப் பக்கமாக இருந்த டிஸ்பென்ஸரி காலியான போது, இவர்கள் வந்து போகும் வசதி கருதி, இப்போதைய துரை, சிறிய விலையில் அம்மாவுக்கு அதை விற்றிருந்தார்.
இன்னும் ஒரு கால் கிலோ மீட்டர்தான்…. அம்மா!…
“சேர் பங்களாத் தொரயவா பாக்கப் போறீங்க?”
“…. என்னயத் தெரியல்லியா, மலயாண்டி?…”
ஆட்டா நடுப் பாதையில் நின்று போக மலையாண்டி திரும்பினான்.
“… நான்… உண்ணாமல மகன் ராமசாமி! இந்தியா போன ராமசாமி…”
“அண்ணேன்!” என்றவன் வார்த்தைகளை மறந்தவன் போல் விழித்தான்; தடுமாறினான். பிறகு, தலையைத் தாழ்த்திச் சொன்னான்.
“… ஒங்கம்மா… ஒங்கம்மா.. நேத்து ராத்திரி எறந்துட்டாங் கண்ணேன்!”
பிறகு நடந்தவற்றை என்னால் கோவையாகச் சொல்ல முடியவில்லை – தெரியவில்லை!…
பெறுமதியான பெட்டிக்குள் எங்கள் அம்மா, அப்பாவிடம் போகத் தயாராய் இருந்தார்…..
தங்கை என்னிடம் சொன்னது ஞாபகம் இருக்கிறது:- “நம்மள ஒரு அடியாவது அம்மா அடிச்சிருக்கு மாண்ணேன்!”
நான் எப்படிக் கதறினேன் என்பது ஞாபகமில்லை. ஆனால் நான் புலம்பிக் கதறியிருக்க வேண்டும்.
அப்போது தம்பி சொன்னது ஸ்பஷ்ட்டமாக என சரித்திரத்தில் பதிந்திருக்கிறது:
“பொலம்பாதீங்கண்ணேன்!…’நாஞ் செத்தா யாரும் ஒப்பாரி வைக்கக் கூடாது; தப்படிக்கக் கூடாது; ஒங்கண்ணனுக்கு அது புடிக்காது’ன்னு சொல்லீட்டுத் தான் அம்மா தெய்வமாகீச் சீண்ணேன்!….”
“ஐயையோ!” என்று அந்தக் குன்றுகள் கேட்கும்படி நான் அலறியதுவும் அப்படியே ஞாபகமுண்டு.
– 1997, சுதந்திர இலங்கையின் தமிழ்ச் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1998, இலங்கைக் கலைக்கழகம், பத்தரமுல்ல