பிரார்த்தனை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 20, 2021
பார்வையிட்டோர்: 3,001 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அன்னம்! வாடி இங்கே, எப்போதும் ஒரே விளையாட்டுத்தானா? வந்து சாமியைக் கும்பிடடி! கண்ணைத் திறந்து பாரடியம்மா; காமாட்சி என்று சேவிச்சுக்கோ காலையிலே எழுந்ததும், கனகாம்பரமும் கையுமா இருக்கிறாய். மாலையிலே மல்லிகைப் பூவுடன் மகிழ்கிறாய். இப்படியே இருந்துவிடுமா காலம்? வா, வா, விழுந்து கும்பிடு”.

அன்னம், சின்னஞ் சிற்றிடையாள், சேல்விழியாள் சிவந்த மேனியாள், சிரிப்புக்காரி, உலகமே அறியாதவள். தாயம்மாள், அன்னத்தைப் பெற்றவள். வயதானவள். உலகின் மாறுதலைக் கண்டவள், உத்தமர்கள் உலுத்த ரானதையும் கண்டிருக்கிறாள்; ஓட்டாண்டிகள் குபேரரானதையும் கண்டாள். தனது ஒரே மகள் அன்னம் அழகுடனிருக்கிறது கண்டு பூரிப்பு, ஆனால் உலகமறியாமல், உண்பதும், உறங்குவதும், உடுப்பதும், ஊர்ப்பேச்சுப் பேசுவதும், பூத்தொடுப்பதும், புத்தகம் படிப்பதுமாகவே காலங்கழிக்கிறாளே என்ற கவலை. இதற்காகக் கவலை ஏன்? என்று கேட்கத்தான் உங்கள் மனம் தூண்டும். தாயம்மா ளுக்கல்லவோ தெரியும், அந்தக் குடும்பத்தின் கஷ்டம். நிலத்தை உழுது நீர் பாய்ச்சியவனல்லவா, பயிர் வளரு வது கண்டு பூரித்துக் கலை முளைப்பது கண்டு கவலைப் பட்டு, ஏரி வற்றுவது கண்டு வாடி, வானத்தை அண்ணாத்து பார்த்து. மகமாயி! இன்னமும் மழை இல்லாமே போனா, வயலும் காயும் ; என் வயிறும் காயும் என்று வருத்தத்துடன் கூறுவான். வெறும் வழிப் போக்கனுக்கு என்ன வாட்டம்? போகிற போக்கிலே பயிரை மிதித்துத் துவைத்துக் கொண்டுதான் போவான். அன்னத்தைக் கொண்டு அஷ்ட ஐஸ்வரியம் அடையவேண்டும் என்பதல்ல, தாயம்மாளின் எண்ணம். வாழ்வதற்கே அந்த ஒரு வழிதான் இருந்தது. அன்னத்தை தான் உயிரோ டிருக்கும் போதே நல்லவனிடம் பிடித்துக் கொடுத்து விட் டால் தான், அவள் நிம்மதியடைய முடியும். இல்லையானால் அன்னமும் ஆலாகப் பறக்க வேண்டியது தானே! தாயம் மாள் பட்ட கஷ்டங்களெல்லாம் நினைவுக்கு வந்தன. எத்தனை சண்டைகள், எவ்வளவு பட்டினி, தூற்றல், அப்பப்பா! பகையாளிக்குக்கூட நேரிடக் கூடாது இந்த கஷ்டம் என்று எண்ணினாள் தாயம்மாள்.

பெண் உருவாக இருந்தால் விழுங்கிவிடுவது போலத் தான் ஆண்கள் பார்க்கிறார்கள். கொஞ்சும் போதோ. நீயே பூலோகரம்பை! உன்னையன்றி வேறொருவளைத்தொடேன் என்று சத்தியம் செய்வார்கள். ஆனால் கலியாணம் என் றால் மட்டும், அதற்கு வேறு இடம், அந்தஸ்து, குலம், ஜாதிக்கட்டு, வீட்டுக் கட்டுப்பாடு என்று ஏதேதோ பேசு வார்கள். ‘கலியாணம் செய்து கொண்டால் என்ன கண்ணே! நமக்குள் இருக்கும் பிரியம் போய் விடுமா? என்று பேசுவார்கள். விம்மினால், கண் துடைப்பார்கள். அந்த நேரத்திலே நெஞ்சு நெகிழும். பிறகு அவர் வேறு உலகம், இவள் வேறு உலகம். பிளவு, விரிந்து கொண்டே போகும். கலியாணத்துக்கு ஒரு கன்னி , காதலுக்கு வேறோர் கன்னி என்ற முறை ஏற்படும். இந்தக் கோளாறு தாயம்மாளை விபசாரியாக்கிற்று. அன்னம் அதன் விளைவு அன்னத்தையாவது நல்ல கதிக்குக் கொண்டுவரவேண்டு மென்று தாயம்மாள் எண்ணினதிலே தப்பென்ன, பாபம்!

மிராசுதார் வீட்டு மகன் மலையப்பன், தாயம்மாள் வீட்டுக்குத் தாராளமாக வரப்போக இருந்தான். தாயம் மாளின் தகப்பன் பூரித்தான். ஊரார் தாயம்மாளின் தகப்பனிடம் கொஞ்சம் பயப்படவும் ஆரம்பித்தார்கள். தாயம் மாள் ஏழைக்குடி. ஆனால், அவளுடைய எழில் மலையப்பனை அந்தக் குடிசைக்கு வரவழைத்தது. மலையப்பனின் பெற்றோர்கள், ‘பையன் கெட்டுக் கீரை வழியாவதற்குள் ஒரு முடி போட்டுவிட வேண்டும்’ என்று முடிவு செய்தனர். அதற்குள் குடிசையிலே மலையப்பன் தாயம்மாளைச் சரிப் படுத்திவிட்டான். அதிகக் கஷ்டங்கூட இல்லை. அவன் தொட்டான். அந்தத் தளிர் சாய்ந்தது. ‘உன்னைத் தான் கலியாணம் செய்து கொள்ளப்போகிறேன். எங்கப்பாமீது ஆணை’ என்று மலையப்பன் கூறினான். அந்தக் குமாரி ஆனந்தமடைந்தாள். அடிவயிற்றிலே அந்த ஆனந்தத்தின் சாட்சி, மெதுவாகத் தவழத் தொடங்கிற்று. அந்தச் செய்தி தெரிந்ததும் மலையப்பன் ஊரைவிட்டே நழுவினாள். தாயம்மாளின் தகப்பன் துக்கத்தையும், கோபத்தையும் கண்ணீரால் கழுவினான். பயல் மகா பேர்வழி! அவனை எப்படியோ அந்தத் தாய் மயக்கி மடக்கிப் போடப் பார்த்தாள். சிறுபயல் தானே, அவள் கண்ணைக் காட்டினாள்; சொக்கிவிட்டான். எதுவோ நடந்து விட்டது. இப்போது கடிதம் எழுதியிருக்கிறான் கொடைக் கானலிலிருந்து அந்த குடும்பத்துக்கு ஏதாகிலும் பணம் கொடுத்து ஊரைவிட்டு அனுப்பிவிடுங்கள் என்று, எனவே, மிராசுதார் தன் மகன் திருந்திவிட்டான் என்ற திருப்தியோடு கடிதத்தை அவன் அன்னையிடம் படித்துக் காட்டினார். அந்த அம்மை, “அகிலாண்டேஸ்வரி, மலையப்பனுக்கு இந்த நல்ல புத்தியைக் கொடுத்தாளே” என்று மகிழ்ச்சியோடு பிரார்த்தித்தார்கள். தாயம்மாளின் பிரார்த்தனை என்னவென்று, அந்த அம்மைக்கு என்ன தெரியும்?

கருவுற்ற காரிகை, உடல் மெலிந்து, ஊண் உறக்க மிழந்து, கவலையால் தாக்குண்டு படுக்கையிலேயே புரண்டு தன் நிலையை எண்ணிப் பயந்து, ஊர் தூற்றுவது கேட்டு மிரண்டு என்ன செய்வதென்று தெரியாது வாடி, “மாரியாயி” நான் என்ன பாபம் செய்தேன்? என்னை இக் கதிக்கு ஆளாக்கினாயே! அவர் காட்டிய அன்பு என்னை இணங்கவைத்துவிட்டது. அவர் எவ்வளவு பிரியமாக, சத்தியம் செய்து என்னைத் தாலி கட்டுவதாக அவர் அப்பாமீது ஆணையிட்டுச் சொன்னார்! நான் நம்பினேன்! என்னை நட்டாற்றிலே விட்டுப் போய்விட்டாரே ! இந்த ஏழையை இந்தப்பாடு படுத்தலாமா? நான் உனக்கு என்ன குறை செய்தேன்? பூஜையிலோ, விரதத்திலோ, பக்தியிலோ நான் தவறவில்லையே ! என் தலை மீது இந்தக் கல் விழலாமா” என்று காளியைப் பிரார்த்தித்து கண்ணீர் வடித்தாள். காளிக்கு என்ன இது தானா வேலை? கண்ணீர் வடிக்கிற பெண்களுக்குக் கருணை காட்டுவது என்ற வேலையிலே காளி ஈடுபட்டால், ஓய்வே கிடைக்காதே! காளியின் அருள் கிடைக்கவுமில்லை, கரு சிதையவுமில்லை. “காளி! ஊரிலே வருகிற காலரா, பிளேக், கடும் ஜுரம் ஏதாவது எனக்கு வரக்கூடாதா! என்னை உன் பாதத்திலே சேர்த்துக்கொள்ளேன்” என்று பிரார்த்தித்தாள் பேதை. காளியின் பாதத்திலே இருக்கும் பிணக்குவியல், அமோகமாயிற்றே இவளுக்கேது இடம். வயிற்றிலே, அன்னம், தாயம் மாளைத் தன் காலால் மெல்ல உதைத்துக்கொண்டிருந்தாள். வயிற்றிலே குழந்தை தவழுது முகத்திலே புன்னகை தரும் மற்றவர்களுக்கு, தாயம்மாளுக்கோ திகிலைத் தானே தரும். மிராசுதார், கொஞ்சம் பணம் கொடுத்து ‘இதுகளை’ ஊரைவிட்டுத் துரத்திவிடவேண்டும் என்று முதலிலே நினைத்தார். பிறகு யோசித்தார் , பணம் தருவானேன்; மிரட்டினால் ஓடாதா என்று அதைப் போலவே செய்தார். வேற்றூரில் சர்க்கார் ஆஸ்பத்திரியில் தான், கலியாணமாகாத தாயம்மாளுக்கு, அழகான பெண் குழந்தை அன்னம் பிறந்தாள். பிறகு பட்ட கஷ்டங்கள் இவ்வளவு அவ்வளவல்ல! எத்தனையோ அவதிகள். எவனெவனோ நாயகர்கள். ஒவ்வொருவனிடம் பழகிய போது ஒவ்வோர் நிலை, நினைப்பு. சுபாவம் அவள் விபசாரியானாள். “அந்தப் படுபாவி என்னை இக்கதிக்கு விட்டு விட்டான். அவன் தலையிலே இடிவீழ அவன் குடும்பம் அழிய. காளி அவனுக்குக் கூலி கொடுக்காமல் போவாளா” என்று தாயம்மாள் மிராசுதாரின் மகனைத் திட்டுவாள்; காளியைப் பிரார்த்திப்பாள். அவன் தலையிலே இடியா விழுந்தது! பக்கத்து ஊர் மிராசுதாரின் ஒரே மகளைக் கலியாணம் செய்து கொண்டான். அந்த மிராசும் இவன் தலையிலே விழுந்தது. சர்க்கார் வேறு அவன் தலையிலே ஒரு ‘ராவ்பகதூரை’ விழ வைத்தனர். கோயில் குருக்கள் அந்தச் சுற்றுப்புரத்திலே, “மலையப்பன் மகா பக்திமானன்றோ” என்று பிரசாரம் செய்தார். எந்தத் திருவிழாவுக்கும் மலையப்பன் பிரசன்னம்! தவறிய தாயம்மாள் போல் வேறுஎத்தனையோ தையல்கள் உண்டே, அவர்கள் இந்தத் தர்மப்பிரபுவின் நேசத்தைப் பெறுவார்கள். அந்தச் சமயத்திலே, அந்தக் கோயில் ஐயர்கள், இந்தக் காரியத்துக்கு உளவு, உதவி. இது என்ன கேவலமா என்ன? சாட்சாத் சிவபெருமானே சுந்தரருக்கும் பரவைக்கும் தூது போனாராமே!

தாயம்மாளின் விபசார வாழ்வின் வேதனைகள் கூறவும் முடியாது. கூறினால் என்ன? யார் பரிதாபப்படுவார்கள் ஒருவரிருவர் விலாசம் விசாரிப்பார்கள்; வேறென்ன நடக்கும்! அன்னம் வளர்ந்து பருவமடைந்தாள். தாயம்மாள் உலகிலே உழன்று அலுத்தாள். ஒரு ஓட்டை வீடு, ஒரு ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள நகை, உடலிலே பலவகையான ரோகம், உள்ளமோ எரிமலை, இந்நிலையில் இருந்த தாயம்மாள், அன்னத்தை எவனுக்காவது கட்டிக் கொடுத்துவிட வேண்டுமென்று கலியாணத் தரகர்களிடம் கூறினாள். வழக்கப்படி காளியை வேண்டினாள். விபசாரியின் மகளைக் கட்டிக் கொள்ள எவன் சுலபத்திலே இசைவான்? ஆனால், அன்னத்தின் அழகோ அவ்வளவு சுலபத்திலே, ‘நான் மாட்டேன்’ என்று மறுத்து விடும்படி ஆண்களைச் கூறச் செய்யாது. தாய் விபசாரியானால் உனக்கென்ன, அன்னத்தின் ஓய்யாரத்தைப் பார்! கொடி போலிருக்கிறாள்! குளிர்ந்த பார்வை! எண்ணத்தைக் கிளறும் இதழ்; முரடரையும் குழந்தை உள்ளம் கொண்ட வராக்கிவிடும் பேச்சு; சங்கீதச் சிரிப்பு; அன்னத்துக்கு என்ன மாசு இருக்கிறது. தாயம்மாள் விபசாரி என்றால், அது. அவளுடைய வேதனைக்கு ஒரு அத்தாட்சி. அதே வேதனை அன்னத்துக்கு வரவிடாதபடி தடுக்க நீ அவளைக் கலியாணம் செய்து கொள்” என்று அன்னத்தின் கண்கள் இளம் ஆடவரின் நெஞ்சுக்குக் கூறின. எனவே, சிலர் “ஆமாம், செய்து கொண்டால் தான் என்ன?” என்று பேசிடவும் தொடங்கினர். எந்த ஜாதியாக இருப் பினும் சரி , ஏதோ மாதம் இருபது ரூபாய் சம்பாதித்து, என் பெண்ணைக் காப்பாற்றுபவனாக இருந்தால் போதும் என்று தாயம்மாள் கூறினாள். தரகர்கள் தம்மாலான வரை முயன்றனர். பெண் பார்க்கச் சிலர் வந்து போயினர் காரியம் முடியவில்லை. அந்தக்கவலைதான் தாயம்மாளுக்கு. அந்தச் சமயம் அவளை நாயகியாகக் கொண்டிருந்தவன் ஒரு கள்ளுக்கடை கண்டிராக்டர். எனவே, அவன் தாயம் மாள் அதிகக் கவலைப்பட்டால், கொஞ்சம் போட்டுக் கொள்ளச் ‘ சொல்லுவான். தாயம்மாளுக்கு அந்தப் பழக்கமும் உண்டு .

அன்னத்தின் நெஞ்சம், அசையாமலில்லை. அடிக்கடி அவ்வீதி வழியிலே தன்னைக் காண்பதற்காகவே வரும் ஆறுமுகம் என்ற வாலியன் மீது அவளுக்கு ஆவல்! அவர் கள் சந்திப்பு, நித்திய நிகழ்ச்சி, வீட்டிலே, உள் வாசலிலே, அன்னம் பூத்தொடுத்துக் கொண்டிருப்பாள். ஆறுமுகம், அந்த வீட்டுக்கு எதிரிலே இருந்த வெற்றிலைப் பாக்குக் கடைக்கு வருவான் ; வெற்றிலை போட்டுக் கொண்டு நிற் பான். இருவருக்கும் சந்திப்பு ! புன்னகை, இருவர் மண மும் மெள்ள மெள்ள ஒன்றாகிக் கொண்டு வந்தது. பேசவில்லை அவர்கள், பேசுவானேன்? அந்தப் பெரும் புலவர் கூறினது பொய்யா? “கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின்வாய்ச் சொற்கள் என்ன பயனுமில!” தாயம்மாள் இரண்டோர் முறை இந்தக் காட்சியைக் கண்டதுமுண்டு. பச்சை சிரிப்பையும், பசப்பு மொழியையும் கண்டு ஏமாந்துதானே நாம் இந்தக் கதிக்கு வந்தோம். அன்னத்தை எவனாவது இதுபோல் கெடுத்துவிடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கருதி, சில தடவைகளிலே கண்டித்தாள்.

“வாசலிலே இருந்தால், தெருக் கதவைச் சாத்தவேண்டாமா, எது எதுகளோ மொட்டையும், கட்டையும், கடையிலே நிற்கிறதே” என்று தாயம்மாள் கூறுவாள். அன்னத்தின் முகம் சுளிக்கும். “பைத்தியக்காரி! உன் நன்மைக்குத்தாண்டி. நான் சிறுசா இருக்கச்சே அந்தக் குடி கெடுப்பான் கொஞ்சி என்னைக் கெடுத்ததாலே தான் நான் இந்தக் கதிக்கு வந்தேன், உலகம் ரொம்ப கெட்டது. பார்த்துப் பிழைக்க வேண்டுமடி” என்று புத்தி கூறினாள்.

“அவர் மொட்டையுமல்ல, கட்டையுமல்ல” என்று அன்னத்தின் மனம் சொல்லிற்று; வாய் திறக்கத் துணிவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, கண்டிராக்டர் ஒரு நண்பருடன், தாயம்மாள் வீட்டுக்கு வந்தார். வருகிறபோதே கொஞ்சம் டிகிரிதான்! கையிலேயும் கொஞ்சம் எடுத்து வந்திருந்தார்.

அவருடைய மனம் கோணும்படி தாயம்மாள் நடக்க முடியுமா? நடந்தால், வாழ்க்கை கோணலாகிவிடுமே? ஆகவே, வருகிறவன் குடித்துக் குளறினால், இவளும் அது போலவேதான் செய்வாள். அன்னம் பருவத்துக்கு வந்த பெண், துணையாக இருந்த தாத்தாவும் செத்துவிட்டார் . எனவே, அன்னத்தைப் பொழுதோடு சாப்பிட்டு விட்டு. ரூமிலே கதவைத் தாள் போட்டுக் கொண்டு படுத்துத் தூங்கச் சொல்லிவிட்டு, கண்டிராக்டர் கொண்டுவந்த ரசங்களைப் பருகுவதிலே ஈடுபட்டாள். போதை மூவருக்கும் ஏறிவிட்டது. பேச்சும், சிரிப்பும், பலமாகிவிட்டது. புதிதாக வந்தவன் கைகாரப் பேர்வழி என்பது அவனது பேச்சினாலே தெரிந்தது. வாலிபன், கண்டிராக்டரின் நண்பன். அன்றையச் செவ்வு அவனுடையது. காரணத்தோடுதான் அத்தச் செலவு செய்தான். காமக் கள்ளன்.

நடு நிசி வரையிலேதான் தாயமமாளும் கண்டிராக்டரும் குளறிக்கொண்டாவது இருக்க முடிந்தது. அதற்கு மேல் அவர்கள் சாய்ந்து விட்டனர், மரம் போல்.

வந்த கள்ளன் போதை ஏறியவன் போல் இருந்தானே தவிர, உண்மையிலே கொஞ்சம் சுறுசுறுப்பு வரும் அளவுக்குத்தான் சாப்பிட்டிருந்தான். இருவரும் சாய்ந்ததும் “வந்த வேலையைக் கவனிப்போம்” என்று கிளம்பினான், அன்னத்தின் அறையை நோக்கி.

அன்னம் தூங்கிக் கொண்டிருந்தாள். கதவைத் தட்டினான் காமுகன். அன்னம் யார் என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தாள், தூக்கக் கண்ணோடு. அறை வாயிற்படியிலே. புதிய முகம் கண்டு, சற்றுப் பயந்து. பிறகு அவருடன் வந்தவர் என்று தெரிந்து கொண்டு, என்ன? என்ன வேண்டும் என்று கேட்டாள்.

உல்லாச உலகிலே நன்கு பழக்கப்பட்டவன் அவன்! “என்ன வேண்டுமா? தெரியவில்லையா?” என்றான். அன்னம் தெரிந்துகொண்டாள். திகிலடைந்தாள். அதற்குள் அவன், அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டான். திமிறினாள், கூவினாள். அவளுடைய சக்தி அவனுக்குச் சுண்டைக்காய்! கூவிய வாயிலே, தன் குடி நாற்றமடிக்கும் வாயைக் குவித்தான். கட்டிலின் மீது அமளி!

“ஐயோ அம்மாவை எழுப்புகிறேன். என்னை யாரென்று நினைத்தாய்? என்னைக் கலியாணம் செய்து கொடுக்கப் போகிறார்கள்”

“இப்போது நடக்கப்போவது என்னாவாம்?”

“இந்த மாதிரி தொழிலுக்கு நான் இஷ்டப்படவில்லை தெரியுமா? எங்கம்மாவுக்குத் தெரிந்தால் என்னை சும்மா விடமாட்டாள்.”

“சரிதாண்டி! அவனிடம் நான் சொல்லி விட்டேன். அவனும் ஒப்புக்கொண்டுதான் அழைத்து வந்தான் என்னை”

“நிஜமாகவா? என்னைக் கலியாணமல்லவா செய்ய ஏற்பாடு செய்தார்கள்?”

“கழுத்திலே தாலி கட்டினால் தான் கலியாணமா? கலியாணம் செய்து கொண்டு பிறகு நடுத்தெருவிலே விட்டுவிடவில்லையா? நான் உன்னை கடைசி வரை காப்பாற்றுவேன்.”

“ஊஹும், நான் ஓத்துக்கொள்ளமாட்டேன்.”

கடைசியில் அவள் ஒத்துக்கொண்டாள். எதற்கு? விடியற்காலை 5 மணிக்கு, கதவைத் திறந்து அவனை வெளியே அனுப்ப! அவன் மகா சமர்த்தான். அவளை இணங்கச் செய்து விட்டான். தாயம்மாளுக்கு இது சம்மதமென்று அன்னத்தை நம்பச் செய்துவிட்டான்.

பொழுது விடிந்தது. போதை தெளிந்து, தாயம்மாள் புதியவனைத் தேடினாள். புன்னகையுடன், அன்னம், “அவர் அரை மணி நேரத்திற்கு முன்தானம்மா போனார். இராத்திரிக்கு வருவதாகச் சொன்னார்” என்று கூறினாள். தாயம்மாள், “அவனிடம் உனக்கென்னடி பேச்சு” என்று கோபித்துக் கேட்டாள். அன்னத்தின் அறைக்கும் போனாள். அடிவயிற்றிலே அடித்துக்கொண்டாள். “நீயும் இந்த வழிக்குத்தான் வந்துவிட்டாயா? அடிப்பாவி” என்று அலறினாள். அங்கு கட்டிலின் மீது அவனுடைய கைக்குட்டை விழுந்திருக்கக் கண்டு.

“நீ சொன்னதாகச் சொன்னார். எழுப்பிக் கேட்கலாமென்று பார்த்தேன். நீ ஓரே மயக்கமாக இருந்தாய்” என்றாள் அன்னம்.

தாயம்மாள் அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. கன்னத்திலே கையை வைத்துக்கொண்டு உட்கார்ந்தாள், கண்களிலே நீர் தளும்பிற்று.

கண்டிராக்டரைக் கேட்டுக் கேட்டுப் பார்க்கிறாள் தாயம்மாள். அன்று வந்தாரே அவர் எங்கே? என்று. மூன்று மாதத்திற்குப் பிறகு, சிரஞ்சீவி சிவாநந்தனுக்கும், சௌபாக்கியவதி சுத்தரிக்கும் விவாஹ சுப முகூர்த்தம் என்ற திருமணப் பத்திரிகையைக் கொடுத்தார் கண்டிராக்டர். அன்று வந்தானே அவனுக்குத்தான் கலியாணம் என்று சொன்னார்.

தம்பதிகளை ஆசீர்வதிக்கும்படி கலியாணப் பத்திரத்திலே எழுதியிருந்தது. தாயம்மாள் “அடபாவி! என் குடியைக் கெடுத்தானே” என்று சபித்தாள்.

“ஏண்டி தடிக்கழுதே அவனைத் திட்டுகிறே” என்றார் கண்டிராக்டர்.

“அன்னம் மூணு மாசம் ஆச்சு தலை முழுகி.”

“அப்படியா? அவனா?”

“ஆமாம்! அன்று அழைத்து வந்தாயே? அன்று அன்னத்தை சரிப்படுத்திவிட்டான். இந்தப் பைத்தியக்காரப் பெண்ணும் இடம் கொடுத்து விட்டு இப்போது முழிக்குது”.

“ஒரு நல்ல இடமாகப் பார்த்து முடிப்போம் என்று நினைச்சேன். மூணு மாசமா?”

“அதோ கேக்கலையா, அவ வாந்தி எடுக்கிற சத்தம்”

ஆமாம்! அன்னம் கரு நோயினால் வாந்தி எடுத்துக் கொண்டுதான் இருந்தாள். தாயின் வழி மகளும். ஆடவரின் காம உணர்வும், கட்டுப்பாட்டுக்காகக் காதலைக் கருக்கும் உள்ளமும், விபசாரிகளை உண்டாக்குகிறது! தாயம்மாளும், அன்னமும் அதற்குச் சாட்சிகள். ஆனால் உத்தமர்கள் வாழும் இந்த உலகிலே, அந்த ஊமைகளின் கண்ணீரைக் காணவா போகிறார்கள்? இப்போது தாயம்மாளின் பிரார்த்தனை “காளி நல்லபடியாக ஒரு குறையும் வராமல் என் மகள் பிரசவிக்க வேண்டும்” என்பதுதான்! “என் மகளைக் கெடுத்த பாவி தலையிலே இடிவிழச் செய்” என்று காளியிடம் தாயம்மாள் முறையிடவில்லை. தனக்கு அதுபோல நேரிட்டபோது முறையிட்டு என்ன பலன் கண்டாள், பாபம்!

– அண்ணாவின் ஆறு கதைகள் , திராவிடப்பண்ணை, திருச்சி -2, மூன்றாம் பாதிப்பு 1968

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *