ரத்தக் கண்ணீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 1,972 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[பம்பாயிலிருந்து சில மைல் தூரத்தில் கடலில் எலிபெண்டாத் தீவில் சில குகைகள் இருக்கின்றன. ஒரு குகையில் அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. அவற்றில் சில உடைந்திருக்கின்றன. மற்றக் குகைகளில் அநேகமாகச் சிற்பங்களே இல்லை. சில வருஷங்களுக்கு முன் இந்தக் குகைகளுக்குச் சென்று பார்த்தபோது தோற்றிய கற்பனைக் கதையை அன்பர்களுக்குச் சொன்னேன். அதுவே சிறிது மெருகேற்றி இங்கே தரப்படுகிறது.]

கடலின் கொந்தளிப்பு அதிகமாயிற்று. படகு நிலை கொள்ளாமல் கவிழ்ந்து விடுமோ என்ற பயம் யாவருக் கும் ஏற்பட்டது. ஏதோ உல்லாசமாகப் புறப்பட்ட வர்கள் திடீரென்று காற்று இப்படி வீசுமென்று நினைக்க வில்லை. பாய்களை லாகவமாகப் பிடித்தார்கள். மீண்டும் கரைக்குப் போகும் வரையில் அபாயம் வராமல் இருக் குமா? அருகே ஒரு தீவும் அதில் மலையும் தெரிந்தன. அங்கே போய் இறங்குவதே நல்லது என்று தோன்றியது, படகில் இருந்தவர்களுக்கு.

“நீலா , படகை இந்தத் தீவுக்கு விடலாமா? இல்லை, கரைக்கே ஓட்டலாமா?” என்று கேட்டான் மாணிக்கம்.

“கரைக்கா? அதற்கு உனக்குத் தைரியம் உண்டா ? பேசாமல் இந்தத் தீவுக்கு ஓட்டலாம்” என்றான் நீலன்.

“அந்தத் தீவு மலையும் காடுமாக இருக்கிறதே! அங்கே புலியும் சிங்கமும் இருந்தால் என்ன செய்வது? கடலுக்குப் பயந்து அவற்றிற்கு இரையாவதா?” என்று கேட்டான் மாணிக்கம்.

“இத்தனை பேர் இருக்கும் போது காட்டு மிருகங் களுக்குப் பயப்படவேண்டாம். நெருப்பு மூட்டினால் புலியோ சிங்கமோ நம்முடைய பக்கத்தில் வராது. வில்லும் அம்பும் கையில் இருக்கும் போது பயப்படக் காரணமே இல்லை. அந்தத் தீவுக்கே போகலாம். இந்தக் கொந்தளிப்பில் நாம் கரை போய்ச் சேருவோம் என்ற நிச்சயம் இல்லை. தீவுக்குப் போவோம். அங்கே போய் எதையாவது செய்துகொள்ளலாம்.”

நீலனுடைய கருத்தையே படகில் உள்ளவர்கள் ஆமோதித்தார்கள். படகு தீவை நோக்கிச் சென்றது. தீவு அருகில் வர வர அதன் உருவம் நன்றாகத் தெரிந்தது. மிகவும் உயர்ந்த மலையன்று. நெடுந் தூரத்திலிருந்து பார்த் தால் ஓர் யானை படுத்திருப்பது போலத் தோன்றியது. அதனால் அதற்கு ஆனைத் தீவு என்ற பெயரை வைத்திருந்தார்கள். அது வரையில் அங்கே யாராவது வந்திருக்கிறார்களோ, என்னவோ? நீலனும் அவனுடைய நண்பர்களும் முதல் முறையாக இப்போதுதான் அவசியத்தால் அந்தத் தீவுக்கு வருகிறார்கள்.

மும்பாதேவியின் பக்தர்களாகிய அவர்கள் அப் போது அந்தத் தேவியை வேண்டிக்கொண்டார்கள். நீலன் நடராஜப் பெருமானை வேண்டிக்கொண்டான். நீலனும் மாணிக்கமும் தமிழ் நாட்டிலிருந்து வந்து மும்பையில் குடியேறின சிற்பிகள். நல்ல வீரர்கள். எதற்கும் அஞ்சாதவர்கள். சிற்பக்கலையில் வல்லவர்கள்.

மெல்ல மெல்லப் படகு தீவை அடைந்தது. அவர்கள் சந்தேகப்பட்டது போல எந்தத் துஷ்ட மிருகமும் அவர் களை வரவேற்க வந்து நிற்கவில்லை. ஜனங்கள் நடமாடின தற்கு அறிகுறியாகச் சட்டி பானை உடைசல்களும் கிழிசல் துணிகளும் அங்கங்கே கிடந்தன.

மரங்கள் அடர்ந்திருந்தாலும் இருண்ட காடென்று சொல்வதற்கில்லை. பெரிய புலிகளும் சிங்கங்களும் வாழும் தகுதி அந்தக் காட்டுக்கு இல்லை. சிறுத்தைகள், நரிகள், பாம்புகள் இருக்கலாம். நல்ல கனி மரங்கள் இருந்தன. மணம் மூக்கைத் துளைக்கும் காட்டு மலர் மரங்கள் பல இருந்தன. கடலுக்கு நடுவே நின்ற அந்த மலை மிக அழ காகவே இருந்தது. கலைஞரின் கண்ணுக்கு அது பெரிய அழகுக் குவியலாகத் தோற்றியது. நீலன் அங்கே நின்று பார்த்தான்.

“மாணிக்கம், என்ன அற்புதமான தீவடா இது! இதுவரையில் நாம் இங்கே வராமல் போனது தவறு. இப் போதாவது வரும்படியாக இந்தக் காற்றுச் செய்தது. பிரம்மாண்டமான பாறைகள் எவ்வளவு உறுதியாக நிற்கின்றன! அதோ பார், அங்கே மலையின் பக்கம் உள்ளே குழிந்திருக்கிறது. அந்த இடத்தில் கொஞ்சம் வேலை செய்தால் அற்புதமான குகை ஒன்றை நிருமித்து விடலாமே! அடேடே! அதோ பார், அங்குள்ள பாறை அப்படியே நெட்ட நெடுக நிற்கிறது. உள் வாங்கி யிருக்கும் அதன் அடிப்பாகத்தை இன்னும் வெட்டினால் அழகான குகையாக்கி விடலாமே. ஜனங்கள் வந்து தங்கி வேடிக் கையாகப் பொழுது கழிக்க இந்தக் குகைகள் உதவுமே. முடியுமானால் இந்தத் தீவையே நாம் அற்புதக் குகை களால் நிரப்பி விடலாம். தமிழ் நாட்டுச் சிற்ப நயங்களைக் காட்டலாம். நம்முடைய கூட்டத்தார் தனியே இங்கிருந்து வாழலாம்….”

“என்னப்பா, இங்கே கால் வைத்தவுடனே ஆகாசக் கோட்டை கட்ட ஆரம்பித்து விட்டாயே! காற்றுக்குப் பயந்து நாம் இங்கே ஒதுங்கியிருக்கிறோம். எப்போது வீடு போய்ச் சேருவோம் என்ற நிச்சயம் இல்லை. நெடு நேரம் இங்கே தங்கினால் ராத்திரி வந்து விடும். ராத்திரி வேளையில் இத்தகைய இடங்களில் தங்குவது அபாயம். நம்முடன் வந்திருக்கிறவர்கள் தம்முடைய வீட்டையும் குடும்பத்தையும் நினைந்து ஏங்குகிறார்கள். அவர்களை எப்படி மீண்டும் வீட்டில் கொண்டு போய்ச் சேர்ப்பது என்ற கவலை சிறிது கூட இல்லாமல் நீ குகையென்றும் சிற்ப மென்றும் பேசுகிறாயே!” என்று மாணிக்கம் கூறினான்.

“வீடும் குடும்பமும், சோறும் சுகமும் தினந்தோறும் இருக்கிற கவலைகள். அவைகளை மறந்துவிட்டு ஒரு கண மாவது இருக்க வகை உண்டா? கண் முன்னாலே நிற்கும் இந்த இயற்கை அழகிலே கருத்தைச் செலுத்தாமல் இங்கு வந்தும் கவலை தானா? அட பாழும் மனித ஜன்மமே! இது வரைக்கும் இங்கே நாம் வந்ததில்லை. எப்படியோ வந்து விட்டோம். எதிர்பாராத அழகைப் பார்க்கிறோம். இதை ரசிக்க உனக்கு மனசு வரவில்லையே! அவ்வளவு குருடனாகவா போய்விட்டாய்?”

மாணிக்கம் மேலே பேச்சை ஓட்ட விரும்பவில்லை. மற்ற நண்பர்கள் நாலைந்து பேரும் அவனும் சேர்ந்து அந் தத் தீவை ஆராயத் தொடங்கினார்கள். நீலனும் உடன் சென்றான். அங்கங்கே பிரம்மாண்டமான தேன் கூடுகள் தொங்கிக் கொண்டிருந்தன. சில இடங்களில் தேன் கசிந்து ஓடிக்கொண்டிருந்தது. ஒருவாறு அந்தக் காட்சிகளை யெல்லாம் கண்ட பிறகு ஊர்நோக்கிப் புறப்பட நினைத் தார்கள். புயல் ஒருவாறு ஓய்ந்திருந்தது. நீலனுக்கு அவ் வளவு விரைவில் அவ்விடத்தை விட்டுப் போக மனம் இல்லை. இருந்தாலும் உடன் வந்தவர்கள் வற்புறுத்தும் போது என்ன செய்வது? மறுபடியும் யாவரும் புறப் பட்டு மும்பை வந்து சேர்ந்தார்கள்.

2

யானைத் தீவைப் பார்த்தது முதல் நீலனுக்கு அத னிடம் இறுகலான பற்று ஏற்பட்டது. அவனும் மாணிக் கமும் உறவினர்கள். நல்ல உடல் வலிமை உடையவர்கள். தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு கூட்டத்தைச் சார்ந்தவர் கள். பரம்பரை பரம்பரையாகக் கல் தச்சு வேலை செய்கிற வர்கள். பெரிய பெரிய மலைகளைக் குடையும் வேலைகளில் அவர்களுடைய முன்னோர்கள் ஈடுபட்டிருந்தார்கள். நாளடைவில் தமிழ்நாட்டில் அவர்களுக்கு வேலை கிடைக்க வில்லை. வடக்கே நோக்கிப் புறப்பட்டார்கள். மும்பையில் வந்து தங்கினார்கள். இரண்டு தலைமுறைகளாக இவர்கள் வடநாட்டு வாசிகளாய் விட்டார்கள்.

கல்தச்சர்களானாலும் அவர்களுக்குள் சிலர் அருமை யான சிற்ப வேலையிலும் திறமை பெற்றிருந்தார்கள். கல்தூண்களில் பலபல நுண்ணிய வேலைப்பாடுகளைப் பொறித் துக் காட்டும் திறமை அவர்களிடம் இருந்தது. அத் தகைய சிற்பிகளே நீலனும், மாணிக்கமும். சுறுசுறுப்பும் உழைக்கும் திறமையும் உள்ள யுவர்கள் அவ்விரண்டு பேரும், எப்போதும் இணை பிரியாமல் இருப்பவர்கள்; கட்டிளங்காளைகள்.

இருவரிலும் நீலன் பிறப்பிலே கலைஞன் என்று சொல்வதற்குரியவன், கூலிக்கு வேலை செய்தால் கூட அவன் வேலை செய்யும் போது அதில் ஒன்றிப்போய் நிற்பான். அவ்வளவு உயர்தரமான கலைஞன் என்று மாணிக்கத்தைச் சொல்ல முடியாது. ஆனாலும் அவனும் சிற்பக் கலைத் திறமை படைத்தவனே.

இந்தக் கூட்டத்தில் ஒரு மடமங்கை இள மானைப் போல் வளர்ந்து வந்தாள். தங்கம் என்பது அவளுடைய பெயர். தங்கம் அவள் நிறம். தங்கம் அவள் குணம் நீலனுக்கும் மாணிக்கத்திற்கும் உறவினள். இன்னும் மணமாகாதவள். அழகு விக்கிரமாகத் திகழ்ந்த அவளிடம் நீலனுக்கும் ஆசை இருந்தது, மாணிக்கத்திற்கும் ஆசை இருந்தது. இருவரும் தங்கள் உள்ளக் கோயிலில் அவளை வைத்துப் பூசித்தார்கள். ஆனால் அவள் யாரை விரும்பினாள்? யாரை விரும்பவில்லை? – பெண் உள்ளத்தை அவ் வளவு எளிதிலே அறிந்து கொண்டுவிட முடியுமா?

இருவருமே தனித்தனியே மனப்பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். தங்கத்தின் தகப்பனிடம் குறிப் பாகத் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினார்கள். அவனோ , “வயசு வந்த பெண் அவள். அவளுக்கு யாரைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் பிரியமோ அவனையே பண்ணிக்கொள்ளட்டும். நான் குறுக்கே நிற்கப்போவ தில்லை. அவளிடம் இன்னாரைப் பண்ணிக்கொள் என்று நான் சொல்லமாட்டேன்” என்று சொல்லிவிட்டான்.

அவளிடம் நேரே கேட்கும் துணிவு இருவருக்கும் வரவில்லை. நீலன் தங்கத்தை விரும்புவது மாணிக்கத்துக்குத் தெரியும்; அப்படியே மாணிக்கம் தங்கத்தை மணக்க முயல்வது நீலனுக்குத் தெரியும், வஞ்சக உள்ளம் இல் லாமையால் அவள் விருப்பமே முடிவாக ஏற்றுக் கொள்வதற்குரியது என்று இருந்தார்கள் இருவரும். இந்தக் காதல் போட்டியினால் அந்த இரண்டு காளையர்களிடை யிலும் இருந்த நட்புக்குப் பங்கம் ஒன்றும் ஏற்படவில்லை. அவர்களுடைய பெருந்தன்மைதான் அதற்குக் காரணம் சிற்பக் கலையைப் பற்றிய அறிவு தங்கத்துக்கும் உண்டு; சிற்ப எழிலை நன்றாக ரசிக்கத் தெரிந்தவள் அவள். அழகிய சிற்ப உருவங்களைக் கண்டால் மணிக் கணக்காகப் பார்த்துக்கொண்டே இருப்பாள். நீலனும் மாணிக்கமும் உண்டாக்கிய சிற்பப் படைப்புக்களைப் பார்த்துப் பாராட்டுவாள். நீலனுடைய நுண்மையான கலைத்திறனைக் கண்டு வியப்பாள்.

இப்பொழுதெல்லாம் நீலனுக்கு எப்போது பார்த் தாலும் யானைத் தீவைப் பற்றிய பேச்சுத்தான். “என்ன வேலை வேண்டியிருக்கிறது! நம்முடைய உளிகளையெல் லாம் கொண்டுபோய்க் கடலில் தான் போடவேண்டும். அந்த மலையில் இருக்கும் பாறைகளைக் குடைந்து மண்டபம் அமைப்பதாக இருந்தால் அந்த உளிகளுக்குக் கௌர வம் உண்டு” என்று சொல்வான். சில சமயங்களில் மாணிக்கத்தினிடம் யானைத் தீவுக்கு மறுபடியும் போய்வர வேண்டுமென்று வற்புறுத்துவான். அவனுடைய தொந் தரவு தாளாமல் மறுபடியும் ஒருநாள் மாணிக்கமும் வேறு சில நண்பர்களும் நீலனை அழைத்துக்கொண்டு யானைத் தீவுக்குப் போய் வந்தார்கள். ஆனால் இந்த முறை மாணிக் கமும் அந்தத் தீவின் அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தான். “அன்று வந்தபோது எப்படியாவது ஊர் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி யிருந்தது. இப்பொழுது தான் நிதானமாகப் பார்க்க முடிகிறது. நீலா, நீ சொல்வது சரியே! இந்த இடம் மிகவும் அழகாகத்தான் இருக்கிறது” என்று கூறினான். நீலனுடைய உற்சாகம் வளர்வதற்குக் கேட்பானேன்? “இந்த இடத்தில் நாம் குகைகளைக் குடைந்தால் என்ன?” என்று கேட்டான்.

“நாம் மாத்திரம் குடைந்தால் போதுமா? வேறு நண் பர்களின் உதவியும் வேண்டாமா?” என்றான் மாணிக்கம்.

“சிற்பக் கலையில் நம் தகப்பன்மார் சம்பாதித்து வைத்தது போதும். நாமும் சம்பாதித்திருக்கிறோம். மற்றவர்களிலும் நம்மைப்போல இருக்கிறவர்களை அழைப் போம். வருகிறவர்கள் வரட்டும். அதிகப்படி ஆட்கள் வேண்டுமென்றால் கொஞ்சம் பண உதவியும் செய்யலாம். இப்போது நான் சொல்லும் காரியத்தின் பெருமை எல் லோருக்கும் தெரியாது. இங்கே என் கனவு பூர்த்தியாகுமானால் மும்பையிலிருந்து தினந்தோறும் மக்கள் இங்கே வந்து இன்புறும் காலம் வரும்.”

“நடக்காத காரியத்தைப் பற்றி நாலு நாள் பேசி னாலும் பயன் இல்லை. ஏதோ நாலில் ஐந்தில் நாம் இப் படியே வந்து விட்டுப் போவோம். அதுதான் இப்போது சாத்தியம்; மற்றதெல்லாம் ஆகாசக் கோட்டை.”

“ஒரு நாள் நம்முடைய மாமனையும் இங்கே அழைத்து வந்து காட்ட வேண்டும்” என்றான் நீலன் மாமன் என்றது தங்கத்தின் தந்தையையே.

“மாமன் என்ன? தங்கத்தையும் சேர்த்து அழைத்துக் கொண்டு வரலாம்.”

இந்தப் பேச்சு முதலில் விளையாட்டாகவே ஆரம்ப மாயிற்று. அப்புறம் காரியமாகவே ஆயிற்று. அடுத்த தடவை அவர்கள் யானைத் தீவுக்கு வரும் போது தங்கமும் அவள் தகப்பனும் வந்தார்கள்.

தங்கம் வந்து பார்த்தாள். ஆஹா! அவள் அடைந்த ஆனந்தத்தை என்னவென்று சொல்வது? “அப்பா, இந்த மாதிரி இடத்தில் நம் ஆயுள் முழுவதுமே இருந்து விட லாம் என்று தோன்றுகிறது” என்றாள்.

“இங்கேயா? மழைக்கும் காற்றுக்கும் என்ன செய் வாய்? சோற்றுக்கும் துணிக்கும் என்ன செய்வது?” என்று கேட்டான் தந்தை.

சோறு துணி மும்பையிலிருந்து வாங்கி வரு கிறோம். அதோ அந்தப் பாறைகளைக் குடைந்தால் அழ கான குகைகளை அமைத்து விடலாம். பிறகு மழைக்கும் காற்றுக்கும் பயம் எதற்கு”

‘ஆ! இவள் என்ன சொல்கிறாள்? என் கருத்தையே சொல்கிறாளே! ஆஹா! என்ன ‘ரசிகை!’ என்று உள்ரூறக் குது குதுப்படைந்தான் நீலன்.

“என்ன மாணிக்கம், தங்கம் சொல்கிறதைக் கேட்டாயா? இங்கே குகையைக் குடைகிறதாம்; இருக்கிறதாம்! பழைய காட்டு மிராண்டிகளைப் போல் வாழ்கிறதாம்” என்று தங்கத்தின் தகப்பன் ஏளனமாகப் பேசினான். அதைக் கேட்க நீலனுக்குச் சகிக்கவில்லை.

“என்ன மாமா, அப்படிச் சொல்கிறீர்கள்? நாமாகக் குகைகளைக் குடைந்து மண்டபம் செய்து அழகு உண்டாக்குவது காட்டுமிராண்டி வேலையா? அழகிய சிற்பக் கோயிலாக இந்த மலைப் பக்கத்தை ஆக்கி விட்டால் அப்போது தெரியும் இதன் அருமை. தங்கம் சொல்வதில் உயர்ந்த உண்மை இருக்கிறது” இப்போது தங்கமும் தொடர்ந்து பேசலானாள்.

“நீல அத்தான் சொல்வது தான் சரி. கலைஞர்களாக இருந்தால் இந்தப் பாறையைக் குடைந்து மண்டபம் ஆக்க வழி தெரியும். இவ்வளவு உன்னதமான பாறைகளில் சிற்பச் செல்வத்தைக் கொட்டும் வகை அவர்களுக்குத்தான் தெரியும்.”

நீலனுக்கு உள்ளம் பூரித்தது. மாணிக்கத்தைப் பார்த்தான். மாணிக்கம் இப்போது பேசலானான்.

“உண்மைதான். முயன்று வேலை செய்தால் இங்கே அழகான குகைகளைச் செதுக்கலாம். தூண்களும் மண்டபமும் குடையலாம்; முடிந்தால் சிற்பங்களைக் கூட அமைக்கலாம்.”

நீலன் வியப்போடு அவனை விழித்துப் பார்த்தான். தங்கத்தைத் திருப்திப்படுத்தப் பேசும் பேச்சல்லவா இது?

“எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஏன் நாமே இந்த முயற்சியை மேற் கொள்ளக் கூடாது? நல்ல இடமாகத் தேர்ந்து குகைகளைக் குடையலாமென்றே தோன்றுகிறது” என உற்சாகத்தோடு பேசினான் நீலன்.

தங்கம் வாய் திறந்தாள்; “அப்பா கூட உதவி செய்யலாம். ஆனால் சிறு வயசுடையவர்கள் செய்தால் வேகமாகக் காரியம் முடியும். இங்கே பாறையைக் குடைந்து மண்டபம் போல ஆக்கும் வீரனுக்கு மாலையிட வேண்டுமென்று யாரேனும் ஒரு பெண் விரும்பினால் அது ஆச்சரியமாகாது.”

இப்போது தங்கத்தின் தகப்பன் அவளை உற்று நோக்கினான். தன்முன் நிற்கும் இளைஞர்களை அவள் போட்டியில் ஈடுபடச் செய்யப்போகிறாளா என்ன? பழைய காலத்தில் சாகசச் செயலில் யார் ஜயிக்கிறார் களோ அவருக்கு மாலையிடும் வழக்கம் இருந்ததாகக் கதைகளில் கேட்கிறோம். தங்கம் இப்போது அத்தகைய சுயம்வரத்தை விரும்புகிறாளா? கலைப் போட்டியில் ஜயிக்கும் காளையைக் கைப்பிடிக்கும் கருத்துடையவளா?…தந்தை இவ்வளவும் எண்ணினான்; இதற்கு மேலும் எண்ணினான்.

“கலைத் திறமையைக் காட்டச் சந்தர்ப்பம் வந்தால் கலைஞன் சும்மா இருப்பானா?” என்று தட்டி எழுப்பப் பெற்றவனைப் போலச் சொன்னான் மாணிக்கம்.

“அப்படிச் சொல்லுங்கள். எங்கே, பார்க்கலாம். இங்கே அழகிய குகையை யாராவது குடையட்டும்…அவருக்கே நான் மணமாலை சூட்டுகிறேன். கலையை விலை யாக வைத்து என்னை அர்ப்பணம் செய்யத் தயாராக இருக்கிறேன்” அவள் இதைக் கூறும் போது ஆவேசம் வந்தவளைப் போலப் பேசினாள்.

3

யானைத் தீவில் உளியின் ஒலி ஒலிக்கத் தொடங்கியது. ஒரு பெண்ணின் உற்சாகப் பேச்சானது கலைஞர்களைத் தூண்டி விட்டது. மாணிக்கம் ஒரு பக்கமும் நீலன் ஒரு பக்கமும் மலையைக் குடையலானார்கள். உதவிக்கு வேறு சிலரையும் அவர்கள் கூட்டிக் கொண்டார்கள். இந்த வேலையில் வெற்றி பெற்றால் தங்கத்தின் காதல் கிடைக்கும் என்ற ஆசை அவர்களுக்குப் போதை ஊட்டியது; முக்கியமாக மாணிக்கத்துக்கு இப்போது அளவற்ற ஊக்கம் உண் டானதற்கு அதுதான் காரணம். நீலனுக்கும் அந்த ஆசை இல்லாமற் போகவில்லை.

இரண்டு குகைகள் உருவாகிக் கொண்டிருந்தன. நீலன் குடைந்த குகை சற்றுப் பெரிதாக இருந்தது. மாணிக்கத்தின் குகை அவ்வளவு பெரிதன்று. வேலை வேகமாக நடந்தது. மாதக் கணக்கில் நடந்தது. வருஷங்கள் கூட ஆயின.

கலைஞர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப் போது தங்கம் தன் தகப்பனோடு வந்து பார்த்துப் போவாள். ஒரு விதமாக மாணிக்கம் குகையைக் குடைந் தான். தூண்களைச் செதுக்கத் தொடங்கினான். இதற்கே இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன. தினந்தோறும் வராமல் வாரம் இரண்டு மூன்று முறை வரலானான்.

நீலனோ குகையோடு ஐக்கியமாய்ப் போய் விட்டான். என்றைக்காவது ஒரு நாள் ஊர் போவது, மற்ற நாட்களில் யானைத் தீவிலே இருந்து விடுவது. கண்ணும் கருத்துமாகக் குகையைக் குடைவதில் அவன் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு இப்பொழுதெல்லாம் வேறு எந்த நினைவும் வரவே இல்லை. வெறும் குகையைக் குடைவ தோடு அவன் லட்சியம் அமைந்து விடுவதாகத் தெரியவில்லை. அவனுக்கு அந்தக் குகையில் சிற்ப உருவங்களைச் செதுக்க வேண்டு மென்ற எண்ணமும் உண்டாயிற்று. அதற்கு ஏற்ற வகையில் அவன் கைகள் வேலை செய்தன. தூண்கள் உருவாயின. சுவர்கள் தோன்றின. அவற்றில் உருவங்கள் தோன்றலாயின. நடராஜப் பெருமான் தாண்டவத்தைக் குகை வாயிலிலே செதுக்கலானான். அதற்குப் பிறகு அவனுக்கு உலக ஞாபகமே இல்லை. அவ னுடைய நண்பர்களும் அவனுடைய ஒருமைப்பாட்டைக் கலைக்கவில்லை. சோற்று மூட்டையை அவன் அருகில் வைத்து விட்டுப் போய் விடுவார்கள். எவ்வளவு நேரம் வேலை செய்வானோ தெரியாது. அவன் உளியினால் செதுக் கினானா? இல்லை, இல்லை; உளியினால் எழுதினான். அவ்வளவு நுண்ணிய வேலைப்பாடாக இருந்தது அந்த உருவம்.

அந்தப் பக்கத்தில் குகை உருவாகி விட்டது. மாணிக்கம் தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள முனைந்தான். தங்கத்தையும் அவள் தகப்பனையும் அழைத்துக் கொண்டு வந்தான். தான் குடைந்த குகையைக் காட்டினான், நீலன் குடைந்த குகைக்கும் போய்ப் பார்த்தார்கள். அப்போது நீலன் மிகுந்த அசதியினால் பிணத்தைப் போல் தூங்கிக் கொண்டிருந்தான். சுவரில் அரைகுறையான சிற்பம் உருவாகியிருந்தது. தங்கம் அதன் மேல் கண்ணை ஓட்டினாள். அவள் தகப்பன் நீலனை எழுப்பப் போனான். “அவரை எழுப்ப வேண்டாம்” என்று தங்கம் சைகை செய்தாள். அங்கே பேசுவதற்குத் கூட அவள் விரும்பவில்லை. நெடுநேரம் அந்தச் சிற்பத்தையே பார்த்துக் கொண்டு நின்றாள். அப்பால் புறப்பட்டாள். மற்றவர்களும் புறப்பட்டு விட்டார்கள்.

ஓடத்தில் ஏறி அவர்கள் ஊருக்கு மீண்டு வந்தார்கள். தங்கம் தகப்பனைப் பார்த்தாள். “அப்பா , இந்த வேலையை இவர்கள் ஆரம்பித்து மூன்று வருஷகாலம் ஆய் விட்டதல்லவா?” என்றாள்,

“ஆம்!” என்று தலையசைத்தான் அவன்.

“மாணிக்க அத்தான் வேலையை முடித்து விட்டார்; ஆனால் நீல அத்தான் எப்பொழுது முடிப்பாரோ?”

“எதற்குக் கேட்கிறாய்?” என்றான் தகப்பன்.

“நீல அத்தான் இப்போதைக்குத் தாம் எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பாரென்று தோன்றவில்லை. இன்னும் எத்தனை வருஷங்கள் ஆகப் போகின்றனவோ ஆகட்டும், ஆகட்டும்!”

“அதுவரைக்கும் நீ கல்யாணம் செய்து கொள்ளாமலே இருக்கப் போகிறாயா?” என்று தகப்பன் கேட்டான். அந்தக் கேள்வி மாணிக்கத்துக்கு ஆறுதலைத் தந்தது. ஆனால் அடுத்த கணத்தில், “என்ன சொல்லப் போகிறாளோ?” என்ற வேதனையையும் தந்தது.

“நான் கிழவியான பிற்பாடு கல்யாணம் பண்ணிக் கொள்வதானால் காத்திருக்கலாம்” என்று சிரித்தாள் தங்கம்.

மாணிக்கம் உள்ளே கிளுகிளுத்தான். தகப்பனோ ஒன்றும் தெரியாமல் விழித்தான்.

“அப்பா, நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். மாணிக்க அத்தானையே கல்யாணம் பண்ணிக் கொள்வதாகத் தீர்மானம் செய்துவிட்டேன். ஆனால் ஒரு நிபந்தனை: நீல அத்தானுக்கு நாங்கள் கல்யாணம் செய்து கொண்ட செய்தியை யாரும் தெரிவிக்கக் கூடாது” என்றாள்.

மாணிக்கத்துக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. தான் இருப்பது பூலோகமோ கைலாசமோ என்று இருந்தது, அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டான். “என்ன மாமா, தங்கம் சொல்வதைக் கேட்டீர்களா?” என்றான்.

ஓடம் கரையைச் சேர்ந்தது. மாணிக்கத்தின் உள்ள மாகிய ஓடமும் இன்பக் கரையை அடைந்தது. ஒரு நல்ல நாளில் தங்கத்தை மாணிக்கம் மணந்து கெரண்டான். இனிமேல் அவனுக்கு யானைத் தீவில் வேலை இல்லை. அதை நீலனுக்கே விட்டு விட்டுத் தங்கத்தின் காதலிலே லயித்திருந்தான்.

4

யானைத் தீவில் நீலன் சிற்பங்களைச் செதுக்கி வந் தான். நடராஜரின் ஆனந்தத் தாண்டவம் அற்புதமாகச் சமைந்து விட்டது. பிறகு மற்றோரிடத்தில் உமாதேவி யார் ஊடற் காட்சியை அமைத்தான். அதற்கு நேர் எதிரே ராவணன் மலையை எடுக்க உமாதேவி சிவபெரு மானை அணையும் காட்சியைச் சிலையில் செதுக்கினான்.

அவன் கையில் கல் மெழுகைப்போல வளைந்து கொடுத்தது. கையும் காலும், மார்பும் வயிறும் அவன் சிற்றுளியால் உண்டாயின; முகங்கள் தோன்றின; அவற் றில் முறுவலும் மலர்ந்தது. கோபம், தாபம், உவகை ஊக்கம் – இத்தகைய பாவங்களைச் சிற்ப உருவங்களில் காட்டினான். வண்ணமில்லை, கிண்ணமில்லை. எல்லாம் கல் ; ஒரு சில் பெயர்ந்தால் உருவமே மூளியாகிப் போகிவிடும். அத்தகைய நிலையில் அணு அணுவாக அவன் கோலஞ் செய்தான். குகை மண்டபத்தின் நடுவில் திரிமூர்த்தி யுருவத்தை அமைத்தான். மூன்று மூர்த்திகளும் ஒருங்கே அமைந்த திருவுருவம் அது. இரவெல்லாம் உள்ளக் கிழியில் எழுதிக் கற்பனை செய்வான். பகலெல்லாம் உளி யினால் அவற்றை உருவாக்குவான்.

பரிவாரங்களையும் மூலமூர்த்திகளையும் படிப்படியாகப் பொறித்தான். அணிகளையும் ஆடைகளையும் மெல்லப் பரிவாரங்களையும் மூலமூர்த்திகளையும் படிப்படியாகப் பொறித்தான். அணிகளையும் ஆடைகளையும் மெல்ல மெல்ல வனைந்தான். முகத்தில் மயிரிழை மயிரிழையாக மெருகேற்றினான். ஒவ்வொன்றும் பூர்த்தி பெற்று முழு உருவமாகத் தோற்றம் பெற்றது. அதைக் கண்டு கண்டு களிகூர்ந்தான்.

வெளியே, காலம் ஓடிக்கொண்டிருந்தது. உள்ளே கலையுருவங்கள் உருவாகிக் கொண்டிருந்தன. காற்றும் மழையும் வெயிலும் வெப்பமும் அவனுக்கு உறைக்க வில்லை. நாளும் வாரமும் மாதமும் வருஷமும் அவனை அசைக்கவில்லை. அவன் தாடி வளர்ந்தது; அதுதான் காலம் செய்த மாறுபாடு. அவன் நெற்றியில் சுருக்கங்கள் ஏற்பட்டன; அதுவும் காலத்தின் விளைவு. ஆனால் இந்த மாறுதல்கள் தன்னிடம் நேர்ந்திருப்பதை அவன் உணர வில்லை. ஒவ்வொரு புதிய உருவமும் முற்றுப் பெற்ற போது புதிய பிறவியை எடுத்தவனைப்போல ஆனான் நீலன்.

நாட்கள் மாதங்கள் ஆயின; மாதங்கள் வருஷங்கள் ஆயின. அங்கே மும்பையில் இந்தக் கலைப்பணியை மூட்டி விட்டவள், கன்னியாக இருந்தவள், மனைவியானாள். இப் போது தாயும் ஆகிவிட்டாள். ஒரு குழந்தை, பிறகு இரண்டு குழந்தை; இப்போது மூன்றாவது குழந்தையும் பிறந்திருக்கிறது. ஐந்து வருஷங்களில் மூன்று குழந்தை கள் பிறந்துவிட்டன. அவள் மாணிக்கத்தோடு வாழ்ந் தாள். அவனைக் கணவனாக ஏற்றுக்கொண்டாள். ஆனால் நீலனை மறந்துவிட்டாளா? அதுதான் இல்லை. அவனை இப்போதெல்லாம் அதிகமாக நினைத்தாள். இப்போது என்ன செய்கிறாரோ! எப்படி இருக்கிறாரோ? வேலை எப் போதுதான் முடியப்போகிறதோ!’ என்று எண்ணினாள். யாராவது போய் வந்தால் விவரங்களைக் கேட்பாள். உலகத்தையே மறந்து அவன் சிற்பத்தில் மூழ்கியிருப்பதைக் கேட்கக் கேட்க அவளுக்கு ஆனந்தம் உண்டாகும். ‘சீக்கிரம் முடியவில்லையே!’ என்ற வேதனையும் ஏற்படும்.

யானைத் தீவுக்கு இப்போதெல்லாம் அதிகமாக யாரும் போவதில்லை. நீலனுக்குச் சோறு கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வருவார்கள்; அவ்வளவுதான். அவனோடு பேசுவது கூட இல்லை. அவனுக்குப் பேச நேரம் ஏது?

நீலன் உள்ளத்தில் வகுத்துக்கொண்ட சிற்ப மண்ட பம் கண்முன் கல்லிலே உருவாகி விட்டது. ஆஹா! என்ன அழகிய கலைக் கோயில்! தேவர்கள் வந்து அமைத் தது போல அல்லவா இருக்கிறது? எல்லாம் முடிந்த பிறகு முழுமையும் ஒரு முறை பார்த்தான் நீலன். தன் தோளைத் தானே தட்டிக்கொண்டான். சந்தோஷத்தால் வெறிக் கூச்சல் போட்டான். அந்த உவகை வெறி அடங்கின பிறகு ஓரிடத்தில் உட்கார்ந்தான். அப்படியே தூங்கிப் போனான்.

எழுந்த பிறகு மறுமுறை தன் கைவேலை முழுவதும் நிதானமாகப் பார்த்தான். தான் எப்போது இந்த வேலை யைத் தொடங்கியது என்ற கேள்வி தோன்றியது. மெது வாக அவனுக்குப் பழைய செய்திகள் நினைவுக்கு வந்தன; இதுவரையில் மறந்திருந்தவை யெல்லாம் ஞாபகத்துக்கு வந்தன. தங்கம் அவன் அகக் கண்ணில் வந்து நின்றாள். அவளை மணம் செய்துகொள்ளும் ஆசையிலிருந்தல்லவா இந்தக் குகை ஆரம்பமாயிற்று? இப்போது இது முடிந்து விட்டது. அவள் இதை இப்போது பார்த்தாளானால் எவ் வளவு பூரித்துப் போவாள்! இப்போது அவன் பழைய நீலனாக இருந்து எண்ணினான். சோறு கொண்டு வந்தவனிடம் சொல்லியனுப்பினான்; “வேலை முடிந்துவிட்டது. தங்கத்தை அழைத்து வா” என்று தான். தங்கம் பழைய உருவத்தில் கன்னி குலையாமல் இருப்பாளென்பது அவன் எண்ணம் போலும்! அவன் காலத்தை மறந்து வேலை செய்தவன் அல்லவா? ஆனால் காலம் அவனையோ, தங்கத்தையோ மறக்குமா? அது தன் வேலையைச் செய்துகொண்டேயிருந்தது.

தங்கத்தை எதிர்பார்த்திருந்தான் நீலன். எட்டு வருஷங்கள் கடந்து போனதை அவன் அறியவில்லை. தங்கம் செய்தி கேட்டு ஆர்வத்தோடு வந்தாள். இந்த முறை தகப்பனோடு வரவில்லை; மாணிக்கத்தோடு, தன் கணவனாகி விட்ட மாணிக்கத்தோடு, வந்தாள்.

ஓடத்திலிருந்து இறங்கி இருவரும் வந்தார்கள். ஐந்து வருஷமாகத் தன் நண்பனைப் பாராமல் இருந்தான் மாணிக்கம். இப்போது பார்க்க வந்தான். மாணிக்கமும் தங்கமும் இணைந்து வருவதைக் கண்டான் நீலன். தங்கமா அது? இளைத்துக் கிழடு தட்டிப் போயிருக்கிறாளே! இதென்ன? மாணிக்கத்தோடல்லவா வருகிறாள்? அவனைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு விட்டாளோ?

அதற்குள் அவர்கள் இருவரும் நெருங்கிவிட்டார்கள். அவர்கள் கணவன் மனைவியாகி விட்டார்கள் என்பது பளிச்சென்று நீலனுக்குப் பட்டு விட்டது. அவள் கழுத்தில் தாவி ஏறியிருக்கிறதைப் பார்த்தான். அந்தக் கணத்தில் அவனிடம் ஒரு வெறி தலைப்பட்டது. அவ்வளவு காலமும் மறைந்திருந்த ஆவல் உச்ச நிலையில் இருந்தது. இப்போது அத்தனையும் ஏமாற்றமாகிவிட்டது. அவன் மூளை கலங்கியது போலாகிவிட்டது. வெகு வேகமாக ஓடினான், குகையை நோக்கி – ஒரு கடப்பாரையை எடுத்தான். வாயிலில் இருந்த சிற்பத்தைப் பார்த்து அடித்தான். “ஏ சண்டாள உலகமே! துரோக உலகமே! உனக்கு இந்தச் சிற்பம் வேண்டாம். ஒழியட்டும் பாறையைக் குடைந்து சிற்பத்தைப் பொறித்தது அயலானுக்கு இன்பத்தைப் பறி கொடுக்கவா? ஒழி, ஒழி” பைத்தியம் பிடித்தவனைப்போல் அவன் சிற்பத்தின் சில பகுதிகளை உடைத்து விட்டான்.

அதற்குள் மாணிக்கம் ஓடினான். உடன் வந்தவர்களும் ஓடினார்கள். நீலனைக் கட்டிப் பிடித்தார்கள். “என்னடா நீலா, இப்படிச் செய்கிறாய்! உயிரைக்கொடுத்துச் செய்ததைக் குலைக்கப் புகுந்தாயே!” என்று அழுகை யும் கூச்சலுமாகச் சொன்னார்கள்.

அவன் அடங்கவில்லை. தங்கம் ஓடிவந்தாள். கண்ணீர் தாரை தாரையாக ஊற்றத் தலைமயிர் குலைய ஓடி வந்தாள். திடீரென்று நீலன் காலில் விழுந்து அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டாள். “அண்ணா, நீ என் தெய்வம்; நான் உன் பக்தை. இந்தக் காரியத்தை நிறுத்தி விடு. நான் சொல்லவேண்டியதைச் சொல்கிறேன். கொஞ்சம் காது கொடுத்துக் கேள்” என்று அழுதாள். அவளுடைய பெண்மைக் குரல் காதில் விழுந்தபோது நீலன் உள்ளம் வேதனைப்பட்டது. தன் தலை மயிரைப் பிய்த்துக்கொண்டான். “உலகம் பொய்! மாயை! கற்பனை! வெறும் தோற்றம்! போலி!” என்று கத்தினான்.

கிடந்த படியே தங்கம் பேசினாள். “ஆம் அண்ணா, நீ சொல்வது தெய்வ வாக்கு. உலகம் பொய் தான், மாயை தான். ஆனால் இந்தப் பொய் உலகத்தில் மெய்யாக நிற்பது கலை. இந்த மாயா உலகத்தில் மாயையை வென்று வாழ்வது கலை. நீ அதைச் சிருஷ்டித்தாய், சிருஷ்டித்தவனே அழிப்பது பாவம் பெற்ற பிள்ளையைக் கழுத்தைத் திருகிப் போடும் தாய் உண்டா?”

அவளிடம் அழுகையும் பேச்சும் கலந்து கலந்து வந்தன. நீலனுடைய வெறி அடங்கியது. கலை என்ற வார்த்தையை அவள் அடுத்தடுத்துச் சொன்னாள். அது அவன் காதில் விழவிழ அவனுடைய படபடப்பு நின்றது. சோர்வு ஏற்பட்டது. அப்படியே உட்கார்ந்துகொண்டான். இப்பொழுது அவள் எழுந்து நின்றாள்.

“அண்ணா, நான் சொல்வதைக் கேட்கிறாயா? இந்த உன்னதமான கலையை நிர்மாணம் செய்த தெய்வம் நீ என்று உண்மையாக மதிப்பு வைத்துப் பேசுகிறேன். உன்னுடைய ஏமாற்றத்துக்குக் காரணத்தையும் தெரிந்து கொண்டிருக்கிறேன். இந்தக் கலைமேல் ஆணையாக, உன்மேல் ஆணையாகச் சொல்கிறேன். உன்னை ஏமாற்றவேண்டுமென்பது என் நினைவு அல்ல. உன்னுடைய கலையை மலரச் செய்ய வேண்டுமென்பதுதான் என் ஆசை. உலக இன்பங்களெல்லாம் காலத்தால் வாடிப்போய்விடும். என்னைப் பார். முன்பு நான் எப்படி இருந்தேன்? இப்போது என் உடல் தேய்ந்து அழகு மறைந்து நிற்கிறேன். இதுதான் உண்மையான உலகம். இதற்கு வளர்ச்சி உண்டு. வாட்டம் உண்டு. ஆனால் நீ படைத்திருக்கும் சிற்பக்கோயிலுக்கு வாட்ட மில்லை. நீ உண்டாக்கிய உருவங்களுக்கு நரை திரை மூப்பில்லை.”

“அப்படியானால் நீ ஏன் அப்பொழுதே உண்மையைச் சொல்லக்கூடாது?” என்று தலையைத் தூக்கிக் கேட்டான் நீலன்.

“நீ கேட்பது நியாயம் அண்ணா, நியாயம். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு நான் இங்கே வந்து பார்த்தேன். நீ அப்போது தான் உன் சிற்பத்தைத் தொடங்கியிருந்தாய். உலகை மறந்து வேலை செய்யும்படி விட்டுவிட்டால் நீ தெய்விகச் சிற்ப உருவங்களைச் சிருஷ்டிப்பாயென்பது எனக்குத் தெரியும். ஆகவே உன்னை உன் போக்கிலே விட்டு விடுவதுதான் தர்மம் என்று எண்ணினேன். என் எண்ணம் வீணாகவில்லை. நீ படைத்த சிற்பம் இனி எப்போதும் இந்தத் தீவைக் கலைக் கோயிலாக வைத்திருக்கப்போகிறது. நீ என்னை மணந்திருந்தால் இந்தப் படைப்பு ஏற்பட்டிருக்குமா? யோசித்துப் பார். உன்னையே நீ ஏமாற்றிக் கொள்ளாதே. உனக்குக் கலையின் மேல் இருந்தது தான் உண்மைக் காதல். என் மேல் உனக்குக் காதல் இருந்ததாகத் தோற்றியது வெறும் தோற்றம். இல்லாவிட்டால் என்னை மறந்து, உலகத்தையே மறந்து இந்த வேலையில் ஈடுபட்டிருப்பாயா? ஒரு நாளா, இரண்டு நாளா? எட்டு வருஷங்கள் கழிந்து விட்டனவே!”

“என்ன, எட்டு வருஷங்களா!” என்று கேட்டான் நீலன்.

“ஆம் அண்ணா ஆம்; நீ காலத்தை வென்று விட்டாய்; காமத்தையும் வென்று விட்டாய். ஏதோ பழைய வாசனை ஒரு கணம் உன்னைப் பேயாட்டம் ஆட்டி விட்டது.

“நின்று நிதானித்துப் பார். உன்னை மற்ற மனிதர் களைப் போலப் பெண்டு பிள்ளையுடன் வாழ்ந்து நாளைப் போக்கும்படி செய்ய எனக்கு மனம் இல்லை. நீ இந்தத் தெய்விகக் கலையை நிருமிக்கப் பிறந்தவன். உப்புக்கும் புளிக்கும் கவலைப்படப் பிறந்தவன் அல்ல. காசுக்கும் காமத்துக்கும் அடிமைப்படப் பிறந்தவன் அல்ல. உனக்கு ஏற்ற இடத்தில் உன்னை இருக்கச் செய்து, உன் கலைத் திற மையை மலரவைத்தது பாவமானால் அந்தப் பாவத்துக்கு முழுப் பொறுப்பாளி நானே என்று ஒப்புக்கொள்கிறேன்.”

நீலன் பெருமூச்சுவிட்டான்.

“நிமிர்ந்து பார் அண்ணா , எங்களை. உன் சிநேகி தரைப் பார். அவர் குடைந்த குகை அதோ இருக்கிறது. அங்கே வெறும் உளிதான் வேலை செய்தது. இங்கேயோ? உன் அறிவு வேலை செய்தது; உன் உள்ளம், உன் உயிர் வேலை செய்தது. ஆஹா! என்ன அற்புதமான சிருஷ்டி”

“தங்கம், போதும். எனக்குப் புத்தி வந்தது. உண்மையில் நான் ஒரு கணம் பேயாகத்தான் மாறி விட்டேன். மாணிக்கம், நீ பாக்கியசாலி; ஒரு விதத்தில். ஆனால் உன்னைக் காட்டிலும் நான் அதிகப் பாக்கியசாலி. நீ தங்கத்தின் காதலைப் பெற்ற பாக்கியசாலி. ஆனால் நான் தங்கத்தின் ஆணையைப் பெற்ற பாக்கியசாலி.”

“அப்படிச் சொல்லாதே அண்ணா” என்று இடை மறித்தாள் தங்கம். “நீ என்னுடைய ஆணையைப் பெறவில்லை. என்னுடைய அஞ்சலியைப் பெற்றாய். மறுபடியும் சொல்கிறேன்; நீ என் தெய்வம். எல்லோருக்குமே தெய்வம். உன் கையில் உருவானது தெய்விகப் படைப்பு. அது என்றும் வாழும். உன் கலைத் திறமை அதோ அந்த அற்புதத் தாண்டவ மூர்த்தியை உண்டாக்கியது. இந்தப் பாவியின் நினைவு உனக்கு வெறியை மூட்டி அந்தச் சிறிய ஊனத்தை உண்டாக்கிவிட்டது. அதைப் பார். உடைந்த உறுப்பிலிருந்து ரத்தம் சொட்டவில்லை. ஆனால் அதைக் காணும் என் இருதயத்தில் ரத்தம் சொட்டுகிறது. நிமிர்ந்து பார், ஒரு கணத்தில் நீ செய்த காரியத்தை.”

நீலன் நிமிர்ந்து பார்த்தான். ஊனமான சிற்பம் அவன் கண்களில் பட்டது. அதில் ரத்தம் சொட்டவில்லை யென்பது உண்மை; தங்கத்தின் இருதயத்தில் ரத்தம் சொட்டியதா, இல்லையா? அதை உணர முடியாது. ஆனால் நீலன் கண்ணில் மாத்திரம் ரத்தக் கண்ணீர் வழிந்தது!

– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *