கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 2,574 
 
 

புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும் ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே அது என்ன என்று என்னைக் கேட்டால் எப்படித்தான் நான் சொல்வது. எழுத்தாளனாய் இருந்து ஒருவன் கொஞ்சம் மொத்துப்பட்டால் மட்டுமே இதுகள் எல்லாம் அத்துப்படி ஆகும்.

யாருக்கேனும் யான் பட்ட இந்த அவத்தையை உடன் சொல்லிவிடவேண்டும் என்று உறுத்தலாயிருக்கிறதே பிறகென்ன செய்ய. ஆகத்தான் கதை.

புத்தக வெளியீட்டாளர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் ஒரு எழுத்தாளர் பேசிவிடலாம். அதற்கென்னக் காசா பணமா. அப்புறம் நேரம் கிடைத்தபோதெல்லாம் மூலையில் உட்கார்ந்து எழுதி எழுதிச் சேர்த்து வைத்திருப்பதை யார் சுமப்பது. ..
புத்தக வெளியீட்டளருக்கு ஒரு கடிதம் கிடிதம் எழுதி ப்போட்டுவிட்டு ப்பதில் கிதில் வந்துவிடும் என்று ஒரு எழுத்தாளர் எப்போதும் எதிர்பார்க்கவேண்டாம்.

அப்படியெல்லாம் ஒரு குசுவும் நடந்துவிடாது. நேரகப்போய் ஒரு புத்தக வெளியீட்டளரைச்சந்தித்து கையில் எடுத்துகொண்டு வந்திருக்கிற படைப்பைப் புத்தகமாகப்போடவேண்டும் என்று பற்கள் அத்தனையும் காட்டிக்கேட்கலாம். ‘பார்க்கிறேன்’ என்று ஒரு வார்த்தை பதில் பதிப்பாளரிடமிருந்து வந்து விட்டாலே அப்பப்பா நீங்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள், உடனே பாருங்கள். தெருவில் நடக்கும்போது இனி உங்களுக்கு இரண்டு இஞ்ச் உயரம்கூடி ப்போய்த்தான் இருக்கும்.

நான்கு வேதங்களையும் ஒரு நான்கு ஆண்டுகள் படித்தேன். ருக்கு யஜுர் சாம அதர்வண என்னும் இவ்வேதங்கள் என்னதான் அப்படிச் சொல்கின்றன என்று துருவிப் பார்த்தேன். எனக்குப்பிடித்தவைகளை பிடிபட்டவைகளை க் கவிதைகளாக ஆக்கினேன். வேதவனம் என்று பெயரிட்டேன். கவிதை விருட்சங்கள் நூறு வந்தன. இந்த மாதிரிக்கு வேதங்கள் பற்றி த்தமிழில் இதுகாரும் வந்ததில்லை என்று விஷயம் தெரிந்தவர்கள் சொன்னார்கள்.

மாநகரத்தில் ஒரு பெரிய மனிதர் கச்சிதமாய் முன்னுரை தர மாயமாய்ப்போன என் நண்பர் சித்தன் உதவினார். புத்தகம் வெளிவந்தது. புத்தகம் வெளியிட்டதில் தான் பிரச்சனை ‘ பார்லி’’ என்னும் ஒரு தானியப்பெயர் காலப்பொருத்தமில்லை அது அப்படி அப்படியே கவிதைகளில் வரக்கூடாது. பார்லிக்குப்பதிலாக ஒரு தானியம் என்று போடுங்கள். இப்படிப் பிழை திருத்திய பின்னர் மட்டுமே வேதவனம் புத்தகத்தை வெளிக்கொண்டு வரலாம் . ஒரு நண்பரின் ஆலோசனை. அதுவும் வெளியீட்டு விழா அன்றே.

வெளியே உலவிக்கண் சிமிட்டிய குழந்தை ஒன்றை மீண்டும் இங்குபேட்டருக்குள்ளேயே அனுப்பி வைத்தார்கள். தான் கொண்டு வந்த வேதவனம் இருபது பிரதியையும் புத்தக வெளியீட்டாளர் மீண்டும் மூட்டைக்கட்டிப்பத்திரமாய் வைத்துக்கொண்டார். அப்புறம் என்ன என்று கேட்கிறீர்களா. அப்புறம்தான் என் ராசிக்கு எட்டாம் இடத்தில் சனிக்கிரகம் வந்திருப்பது பிரத்தியட்சமாய் அனுபவமானது.

ஆண்டுகள் உருண்டோடின. புத்தகம் வரவில்லை. எத்தனை முறை முயற்சித்தும் ஆன கதை ஒன்றுமில்லை. இன்னும் பத்து நாள் இன்னும் ஒரு மாதம் இந்தப் பொங்கலுக்கு இந்த புத்தக க்காட்சிக்கு என்று பதில் வரும். வெறும் பதில் மட்டுமே வரும். வேத வனம் வரவே இல்லை. என் கஷ்டம் எனக்கு.வெளியீட்டாளருக்கும் ஆயிரம் இருக்கலாம்.
பார்லி என்னும் வார்த்தை வேத வனத்தில் ஒரு நான்கு இடங்களில் காணப்படலாம். அதனில் என்ன அப்படிக் குடிமுழுகிப்போய்விடப்போகிறது. பார்லி என்கிற பதத்திற்குப் பதிலாக ஏதோ ஔரு தானியம் என்று மட்டுமே வார்த்தை மாற்றிப்போட்டு விடுவதால் என்ன தேசிய மாட்சியை மீட்கப்போகிறோமோ

வேதத்தில் சொல்லாததை ஊரெல்லாம் சொல்லிச்சொல்லி, நல்லபடிக்குச் சொல்லி இருப்பதை மொத்தமாய் மறைத்து தம் வயிறு வளர்க்க மட்டுமே மொழி தெரியாதோர் ஊருக்கும் தெருவுக்கும் வந்து கூட்டமாய்ப் பிழைத்துக்கொண்டிருப்பது மட்டுமே இங்கு நிதர்சனம்.

என்னச்சொல்கிறோம் என்று சொல்பவனுக்கும் தெரியாது செய்பவனுக்கும் தெரியாது இதில் ஜம்பம் என்ன வேண்டிக்கிடக்கிறது.

பதிப்பகத்தாரை நேரில் சென்று பார்த்தாயிற்று. புத்தகம் இதோ வந்துவிட்டது அதோ வந்துவிட்டது போங்கள் என்பார் நம்மிடம்.. இப்படி அவர் நம்மிடம் பேசுவதும் கூட அவரின் வளர்ப்பு நாயுக்குப்பிடிக்காது போலிருக்கிறது. அது அவரை ப்பேசவிட்டால் தானே. அதுவல்லவா க்கொஞ்சிக்கொண்டே இருக்கிறது எந்நேரமும்.

ஒரு புத்தகக்கண்காட்சி கூடவே வந்தது. அதற்குள்ளாக வேதவனம் வந்து விடும் என்றார். புத்தகக்கண்காட்சியில் அரங்கைத்தேடி அந்த பதிப்பகத்தாரைக்கண்டு பிடித்தேன். அவர்தான் புத்தகக்கடையில் இருந்தார்.

‘வாங்க வாங்க இன்னும் உங்க புத்தகம் அந்த வேதவனம் மட்டும் வரல்ல. இன்னும் அந்த ஒர்க் முடியல ஆனா வந்துடும், இந்த க்கண்காட்சி இன்னும் பத்து நாளு இருக்குது. அதுக்குள்ள அதை கொண்டாந்துடறேன். நீங்க வேற எதனா புத்தகம் வாங்கறாதா இருந்தா பாருங்களேன்.’

நம் குழந்தை படிக்கும் ஒரு பள்ளிக்கூடத்திற்கும் நம் குழந்தை அடியே எடுத்துவைக்காத வேறு ஒரு பள்ளிக்கூடத்திற்கும் நாம் போய் வந்தால் மனதிற்குள் ஒரு வித்தியாசம் உணர்வோமே அப்படித்தான் உணர்ந்தேன்.

நான் எழுதிய வேத வனம் இல்லா புத்தக அடுக்குகள் எனக்கு வெறுமையாகவே அனுபவமாயின தாட்சண்ணியத்திற்கு என்று இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். காந்தியின் சத்தியசோதனை மு.வ.வின் திருக்குறளுரை பாரதி பாரதிதாசனின் கவிதைகள் வள்ளலாரின் அருட்பா தி.ஜா வின் மோகமுள் சுந்தரராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள் இவை எப்போது வேண்டுமானுலும் எத்தனை பிரதி வேண்டுமானாலும் வாங்கி வைத்துக்கொள்ளலாம். தப்பே இல்லை. அவை வாங்குவது நஷ்டமும் இல்லை. அடித்துச்சொல்வேன்.

கண்காட்சிக்கு க்கடைசி நாள் சென்று பார்த்தேன். அவர் கண்காட்சிக்கடையில் இல்லை. யாரோ அவருக்கு உறவுக்காரப்பையன் ஒருவன் அமர்ந்துகொண்டு புத்தக வியாபாரம் பார்த்தான். அவனையும் கேட்டுப்பார்த்தேன். பதிப்பாளர் எங்கோ போனார். யாருக்குத்தெரியும் என்று கையை விரித்தான். எதாவது நடந்து அந்த வேதவனம் வெளிவந்துவிடாதா என்கிற பேராசை எனக்கு. இந்த பிரசவ வேதனை எல்லாம் ஒருவர் அனுபவித்தால்மட்டுமே புரிந்துகொள்ளமுடியும்.. இல்லாவிட்டால் எதோ பேத்துகிறான் சுத்த அசடு என்பார்கள். அவர்கள் மீதும் தப்பில்லை. செறுப்பு நம் காலைக்கடிப்பது அடுத்தவனுக்கு எப்படிப்புரியும் .நியாயம்தான். ஆக புத்தகக்காட்சி முடிந்தும் காரியம் ஆகவில்லை.

ஒரு நாள் நானே போனில் பதிப்பளாரோடு தொடர்புகொண்டு விசாரித்தேன்.

‘எப்பதான் அந்த வேதவனம் வெளி வரும்’

‘வந்துபுடும் கொஞ்சம் பணம் கொறையுது. மேலட்டை போட்டதுல பாக்கி. அத குடுத்துட்டு அதுகளை கொண்டாந்து பைண்டு பண்ணணும்’

‘செலவு எவ்வளவு வரும்’

‘ஏன் நீங்க தர்ரேன்னு சொல்றீங்களா. ஒரு அஞ்சி ருவா தேவப்படும்’

‘நானே ஏற்பாடு செஞ்சி தர்ரேன்’

‘அது எப்படி சாரு நீங்க கொடுக்கறது நான் வாங்கிகறது.. மொறயா இது’

இப்போதுதான் முதல் முறையாக என்னை ப்பதிப்பகத்தார் தன் வாயால் சார் என்று சொல்லி ப்பேசுவதைக்கேட்கிறேன்.

‘அப்புறம் புத்தகம் வரணுமே’

‘சார் பணத்தை அனுப்பி வையுங்க நான் மிச்ச கதைய பாக்குறேன்’

மிச்சகதைக்கு என்ன பொருளோ நான் ரூபாய் ஐந்தாயிரத்தை அனுப்பி வைத்தேன். வீட்டுச்செலவுக்கான பணத்தில் ஒரு ஐந்தாயிரத்தை என் மனைவிக்கு த்தெரியாமல் ஒதுக்குவது என்பது அவ்வளவு சாதாரண விஷயமா என்ன. அதனை எப்படியோ செய்துவிட்டேன். ஒருக்கால் மனைவிக்கு என் பித்தலாட்டம் தெரிந்தும் இருக்கலாம். குறவன் நெளுவு குறத்திக்குத்தெரியாமலா போய்விடும். சிலது தெரிந்தும் அவள் சும்மா இருப்பாள். எப்போது சண்டை பிடிப்பாளோ அச்சம் அடி வயிற்றில் பிசைந்துகொண்டேதான் இருக்கிறது. உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்தேதான் ஆகவேண்டும்..

இனி என் புத்தகம் வேத வனம் வெளிவந்துவிடும் என்று நம்பிக்கையோடுதான் இருந்தேன். பதிப்பகத்து ஆசாமி என்ன செய்தாரோ தெரியவில்லை. கதை ஒன்றும் ஆகவில்லை. இந்த ஆண்டு புத்தகக்கண்காட்சிக்குள் அது வந்துவிடும் என்று அவர் சொன்னது.காற்றோடு போனது. கண்காட்சி வந்தது.போனது. வேத வனம் மட்டும் வரவே இல்லை. எண்ணிப்பார்க்கிறேன். என்னதான் மார்க்சீயத்தை விடிய விடிய பேசிப்பேசிப்பார்த்தாலும் நம் பிறவிக்குணம் லேசில் போகிறாதா என்ன. இதுகள் எல்லாம் அட்டமத்துச்சனியின் உபயமாகவும் இருக்கலாம்.

ஒருநாள் தொலைபேசியில் பதிப்பகத்தாரை அழைத்து இது என்னதான் நியாயம் என்று கேட்டுவிட முடிவு செய்தேன். கொஞ்சம் அதிகம்தான். இப்படி எல்லாம் நான் முடிவுக்கு வருபவனா அல்லதான். என்னசெய்வது. தொலைபேசியில் அந்த பதிப்பகத்தாரின் எண்ணைப்போட்டேன்

நீண்ட நேரம் மணி அடித்தது. மாலைநேரம். ஒரு சிறுமியின் குரல் மட்டுமே கேட்கிறது அடுத்த முனையில்.

‘அப்பா தண்ணி அடிச்சிட்டு இப்ப புத்தகங்க ரூமுல படுத்துதான் கெடக்குகுறாரு. காலைல பேசுங்களேன் அங்கிள்’

‘நீ யாரும்மா’

‘நான்தான் அப்பான்னு சொன்னேனே அங்கிள்’

‘உன் பெயர் என்னம்மா’

‘நிவேதிதா’

‘ என்னை மன்னிச்சுடுமா’ சொல்லி போனை வைத்தேன். அன்று நாள் முழுவதும் மனம் கனக்க அந்தச்சிறுமியின் நினைவாகவே இருந்தேன். இன்னும்தான். என்னுடைய வேதவனம் வெளிவராவிட்டால் ஒன்றும் குடிமுழுகிப்போய்விடாது போங்கள்.

– அக்டோபர் 2012

எஸ்ஸார்சி (பிறப்பு: மார்ச் 4 1954) என்கிற எஸ். ராமச்சந்திரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கடலூர் மாவட்டம் தருமநல்லூரில் பிறந்தவர். பாரத் சஞ்சார் நிகாம் நிறுவனத்தில் இளநிலைக் கணக்கு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்ற இவர் எட்டையபுரம் பாரதி பிறந்த நாள் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, பாரத மாநில வங்கி இலக்கிய விருது போன்றவைகளையும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *