அந்த. வக்கீல் ஆபிஸில் காத்திருந்தேன்.வக்கீல் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார்.அவர் போன பிறகு வக்கீலுக்கு எதிரே உள்ள சேரில் அமர்ந்தேன்.
“சொல்லுங்க சார் என்ன விஷயம்?”
என்றார் வக்கீல்.அவருக்கு வயது அறுபத்தைந்துக்குள் இருக்கும்.கிட்டத்தட்ட என் வயது தான்.
“சார் எனக்கு இரண்டு மகன்கள்.கல்யாணமாகி சென்னையில் குடும்பத்தோடு இருக்கிறார்கள்.நானும் என் மனைவியும் இங்கே இருக்கிறோம்.
எனக்கு இரண்டு வீடு,ஒரு தோப்பு இருக்கிறது.இப்போதே சொத்தை மகன்கள் பெயரில் எழுதி விடலாமா? என்று உங்களிடம் ஆலோசனை கேட்க வந்திருக்கேன்.”
வக்கீல் என்னை உற்றுப் பார்த்தார்.
“ஏன்? உங்களுக்கு உடம்புக்கு எதுவும் பிரச்சனையா?”
“இல்லை சார் எனக்குப் பின்னாடி அவங்களுக்குள்ளே சன்டை போட்டுக்க கூடாது! அதனால்தான் இப்படி ஒரு யோசனை!”
“அப்போ உங்களுக்கு என்ன பாதுகாப்பு?”
“சார் என் பையன்களை முழுசா நம்புறேன்.அவங்க எங்களை கடைசி வரைக்கும் பார்த்துகுவாங்க!”
“என்ன சார்!இந்தக் காலத்துல இப்படி இருக்கீங்க?
என் சொந்த அனுபவத்துல எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்றேன்!
அதுக்கு அப்புறம் முடிவு பன்னுங்க.
சார் எனக்கு ஒரு பையன்,ஒரு பொண்ணு! என் பையன் என்னைப் போலவே ஒரு லாயர்.தனியா பிராக்டிஸ் பன்றான். சமீபத்துலதான் என்னோட சம்பாத்தியத்துல ஒரு வீடு வாங்கினோம்.என் பொண்ணு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி லவ் மேரேஜ் பன்னிக்கிட்டா.நாங்க எவ்வளவோ சொல்லியும் கேட்கல.அதனாலதான் அந்த வீட்டை என் பையன் பெயருக்கே முடிச்சோம். அதற்குப்பிறகு அவனுக்கு கல்யாணமும் முடிச்சாச்சு. இப்போ அவன் மனைவி பேச்சை கேட்டுகிட்டு எங்களை வீட்டை விட்டு அனுப்பிட்டான்.நாங்க இப்போ வாடகை வீட்லதான் இருக்கோம். என் சொற்ப வருமானத்துல வண்டி ஓடுது. யோசிச்சு முடிவு பன்னுங்க!”
யோசிக்க வேண்டிய விஷயம்தான்.
அதனால் இப்போதைக்கு அந்த முடிவை தள்ளி வைத்து விட்டேன்.