நீந்தத் தெரிந்த ஒட்டகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 14,272 
 

“இந்தியா மலேசியா பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் தொழிலாளி என்றால் அதிகம் கொடுக்க வேண்டும். கொஞ்சம் படிப்பு வாசனையிருக்கும்.

பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்தோனேசியா சம்பளமும் குறைவு.பள்ளிப் படிப்பு பாதி முடித்தோர் இருப்பார்கள்.”

மஸ்கட் நகரில் வீட்டு வேலை, சமையல் செய்ய ஹவுஸ் மெய்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை என்றதற்கு ஏஜென்சி கொடுத்த தகவல்.அவர்கள் விளக்கம்.

“பரவாயில்லை பாகிஸ்தான் பங்களாதேஷ் “ஆக இருக்கட்டும் என்றேன். ஆகட்டும் ஓரிரு மாதத்தில் விசாவோடு வரவழைப்பதாய் ஏஜன்ட் சொன்னார்கள்.

“உன் பெயர் என்ன” எனக்கேட்டு திரும்பி முகத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டேன். சிறுவயதில் என்னை நானே பார்த்து கொள்வது போல் இருந்தாள். ஹவுஸ் மெய்டு வேலைக்கு வந்த பாகிஸ்தான் இளம் பெண்.

அவள் ஆயிஷா என்பதை சொல்லும் முன்பே அவள் ஊர் பாசிலாபாத் என்ற பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் இருந்து வந்திருக்கிறாள்
14 வயதில் நிக்காஹ் ஆகி பதினெட்டு வயதிற்குள் இரண்டு பெண் குழந்தைகள் பிறகு முத்தலாக் ஆனவளாம். இப்பொழுது வயது 21. தொடக்க வகுப்பு வரை முடித்தவள் என்ற விவரங்கள் ஏஜன்ட் தந்த பயோடேடா படித்து முடித்தேன்.

டேடா மேனேஜ்மென்ட் கம்பெனி ஓமன் நாட்டின் அரசு அலுவலகங்கள் டிஜிட்டல் செய்ய ஐந்தாண்டு காண்டாராக்ட்.என் கணவரும் நானும் லக்னோவில் ஆரம்பித்த கம்பெனிக்கு காண்ட்ராக்ட் கிடைக்க வந்தோம் மஸ்கட்டிற்கு. வீட்டு வேலை சமையல் செய்ய வந்தவள் அந்த ஆயிஷா.

“சிராஜுதீன்” என்றேன் நான். லாப்டாபில் மூழ்கியபடியே என் கணவன் “என்ன ஃபாத்திமா” என்றான்.

வேலைக்கு வந்திருக்கிறாள் பாகிஸ்தான்காரி . சிறு வயதில் நான் எப்படி இருந்தேனோ அதே போல் இருக்கிறாள் பார்ப்பதற்கு என்றேன்.

சிராஜ் சிரித்தபடி இரண்டு பாத்துட்டேன். இன்னும் ஐந்து பார்க்க வேண்டும் என்கிறாயோ என்றான்‌.

ஏழு பேர் ஒரே மாதிரி உலகத்தில் இருப்பார்கள் என்ற கற்பனை கதையை நகைச்சுவையாய்ச் சொன்னான்.

எனக்கு என் ஆயா உத்திரபிரதேச எட்டாவா மாவட்டம் சிறு கிராமத்தில் இருப்பது நினைவிற்கு வந்தது. வயது 90 இருந்தாலும் நல்ல திடகாத்திரமான வைரம் பாய்ந்த உடல் வலிமை கொண்டவர். என் தந்தை லக்னோவிற்கு வந்து செட்டில் ஆக வற்புறுத்தியும் வர மறுத்தவர் வருகின்ற ரம்ஜான் விடுமுறையில் போய் பார்க்க முடிவு செய்தேன்.

“ஆயா” என்று உரத்த குரலில் அழைத்தேன்.பசு மாட்டுச்சாணியில் மண் சுவற்றில் விரட்டி தட்டிக் கொண்டிருந்தவள் திரும்பிப் பார்த்து “யாரது” என்றாள். காரிலிருந்து இறங்கி கிராமத்தில் அந்த தாழ்வார மரத்தில் கை வைத்தபடி நான் நிற்பதை பார்த்தார் ஆயா.

ஓடிப்போய் “நான் ஃபாத்திமா ஆயா “என்று ஆயாவின் சாணிக் கையோடு அணைத்துக் கொண்டேன்.

ஆயா வைத்திருக்கும் துருப்பிடித்த டிரங்க் பெட்டியை பரணிலிருந்து பத்திரமாய் இறக்கினேன். அவரது பழைய வாழ்க்கை கிளறியதால்

உள்ளேயிருந்து தூசி தட்டிய குரூப் ஃபோட்டோ பிளாக் அன்டு ஒயிட் எடுத்துக் கொடுத்தவள் கண்களில் சோகம் ததும்பியது. ஆயா பேச ஆரம்பித்தார்.

அதில் இருப்போரை ஒவ்வொருவராய் அடையாளம் காட்டினார் ஆயா.

” என்னையும் என் தங்கச்சி அதான் அவர் பக்கத்தில் இருக்கா பாரு சிறுக்கி! இரண்டு பேரையும் கட்டிக்கிட்டான். அவளுக்கு ஒரே பொண்ணு மூனு பசங்க . அவுங்கபிறந்த பிறகு 14 வருஷம் கழிச்சு உங்கம்மா பிறந்தாள்”

“.எங்க அப்பா சொத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு ஊரைச் சுற்றுவது தான் என் புருஷன் வேலை.”

“உங்கம்மா பிறந்த வருஷமே என்னோட அப்பாவிற்கு வைசூரி‌ வந்து கண் போச்சு”

” என் தங்கச்சசியும் அவனும் என்னை ஒதுக்கிட்டாங்க.நிலத்தை புடுங்கிட்டு எங்கப்பனையும் சரியா கவனிக்கலை. ”

சிவராஜ் சாஸ்திரின்னு பண்டிட் இந்த ஊர்க்காரரு. லக்னோல வக்கீல். அவரது பூர்வீக சொத்தை வச்சு கோஷாலா என்ற பசுமடமா பராமரிப்பு செய்து வந்தார்.

அப்பப்போ லக்னோவிலிருந்து வந்து போவார்

அந்த பசுமடத்தை கவனிக்கிற வேலையைக் கொடுத்தார். ”

“என் புருஷன் மேலே கோர்ட்டில் வழக்கு கொடுக்கிறேன் என்றார் பண்டிட். போகட்டும் சாமி என் தங்கச்சி புள்ளகுட்டிகாரி நல்லா இருக்கட்டும் என்று சொல்லி என் அப்பாவை கூட்டி வந்து நானே சாகும் வரை காப்பாத்தினேன்.

உங்கம்மாவை படிக்க வச்சாரு பண்டிட் அந்த காலத்திலேயே. என்னமோ டைபிங் அது இதுன்னு பண்டிட் படிக்க வச்சார்.லக்னௌ‌ விதான் சவுதால வேலை கிடைச்சது.

பண்டிட்டே‌அவர்‌ பிரண்டு வக்கீல் குமாஸ்தாவான உங்க அப்பனை மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வச்சார் லக்னோவில். நீயும் உங்கம்மாவிற்கு பதினாலு வருஷம் கழிச்சு பிறந்தாய் என்றாள்.

உங்கம்மா அப்பா நிக்கா ஆன அதே வருஷம் இந்தியா பாகிஸ்தான்னு இரண்டாப் பிரிஞ்சு சுதந்திரம் கிடச்சது. என் புருஷனும் என் தங்கச்சி புள்ளங்களோட என்னோட பங்கையும் சேர்த்து வித்திட்டு பாகிஸ்தான் போறதா முடிவு எடுத்தாங்க. என்னைத் தேடி வந்து நல்ல வாழ்க்கை நம்ம மதம், நம் மதத்திற்கான நாடு , சண்டை சச்சரவு இல்லாத சந்தோஷ வாழ்கை கனவுகள் சுமக்கும் நாடு உருவாகிவிட்டது என எக்காளமிட்டான். இந்த பிச்சைக்கார ஹிந்துஸ்தான் நம்மையும் பிச்சை எடுக்க வைக்கும் என்று எல்லோரும் பாகிஸ்தான் போய்விடலாம் என என்னையும் அழைத்தார்கள். என் வைராக்கியம் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வந்த மண். என் உயிர் இங்கேயே வாழ்ந்து போகட்டும் வரமாட்டேன் என பண்டிட் வீட்டு வேலையிலேயே இருப்பேன் என மறுத்து விட்டேன். தங்கச்சி பிள்ளைகளை என் கணவனையும் அங்கு போக வேண்டாம் என பலமுறை தலையில் அடித்து சொன்னேன். என் தங்கச்சி கிட்ட மன்றாடினேன். நடக்கிற கலவரம் நம்மல கொன்றுவிடுவார்கள் என்றாள். நமக்கு பாதுகாப்பு இல்லை.வெள்ளைக்காரனும் போயிட்டான். நமக்கு பந்தோபஸ்து இல்லை என்றாள். அங்கு ஒன்று இங்கு ஒன்றுமா நடப்பதை வைத்து முடிவு‌ எடுக்காதே என்று சொன்னது செவிடன் காதில் சங்கு ஊதியதாய் ஆனது. இது நாளடைவில் சரி செய்வார்கள் என்றும் சொல்லிப் பார்த்தேன்.. நாம் இருக்கும் இந்த பகுதி தாகூர் பிராமணர் யாதவர் நிறைந்த பகுதி. நம்மை சகோதர சகோதரியாக பார்த்துக் கொள்வார்கள் என்றேன். கெஞ்சினேன்
பண்டிட்டும் எவ்வளவோ புத்திமதி சொன்னார்.எனக்கு படிப்பறிவு இல்லாட்டியும் நம்ம தேசம் புண்யபூமி ன்னு ஆணித்தரமாக எண்ணியவள் நான்.

அதற்கு அப்புறம் எனக்கு எந்த தகவலுமில்லை. என்ன ஆனார்கள் என்றும் தெரியாது. பண்டிட் போய் சேர்ந்திட்டார். எனக்கு மூனு வேளை சோற்றுக்கு உங்கம்மா படிக்க வச்சது கல்யாணம் பண்ணி வச்சது பண்டிட் தான்.

சாகும் முன் குருடான எங்கப்பாக்கு கொடுத்த வாக்குபடி என்னோட சம்பளம் அவரே சேர்த்து வித்துட்டுப் போன நிலங்களை அப்படியே வாங்கி என் பேர்ல எழுதி வச்சார். அதுல தான் அவர் வைராக்கிய மாக செஞ்ச கோஷாலா ங்கிற பசுக்களை பராமரித்து வருகிறேன். போர்டு கூட அந்த பண்டிட் பேர் தான் வச்சிருக்கேன்.இந்த‌உசுரு இருக்கிற வரைக்கும் இந்த பூமியில் சுவாசிச்சு அடங்கனும். அதனால் தான் உங்க அப்பா போதும் வா லக்னோன்னு கூப்பிட்ட போது மாப்பிள்ளை வீட்ல தங்குவது மரியாதையில்லைன்னு ஒதுங்கினேன் கண்ணே.

எழுபதாண்டு வரலாறு ஏழு நிமிடங்கள் சொல்லி முடித்தார் ஆயா. ஏகப்பட்ட பெருமூச்சு. மூச்சிரைத்தல் நா தழுதழுத்தல் லேசான அழுகை. தன்னோட மண் என்று சொல்லும் போது வீராப்பு . அப்ப்பா எத்தனை விதமான முக மாறுதல் சுருக்கங்களுக்கிடையே.

அவர்கள் என் ஆயா இல்லை.ஒரு நடமாடும் சித்தி பெற்ற மஹான்.சுற்றுவட்டார மக்கள் சாதி இன மத பாகுபாடின்றி கை வைத்தியத்திற்கு வருவார்கள் .பிராத்தனை செய்து கொள்ள வருவார்கள். சமையல் கற்க. இன்னும் எத்தனையோ.

தீபாவளி ஹோளி ரம்ஜான் பக்ரீத் கிறிஸ்துமஸ் என எந்த பண்டிகையாயிருந்தாலும் ஆயாவிற்கு ஆடை உணவு உண்டு.

மாட்டிற்கு ஏதேனும் வியாதி பால் உற்பத்தி குறைச்சல் கன்று ஈன பிரச்சினை என சுற்றுவட்டாரத்திற்கு கால்நடை மருத்துவர் கூட.

ஆயா குழந்தைக்கு உரை குத்து என்று வருவார்கள் ஒரு குழந்தை நிபுண மருத்துவர்.

ஆயா கருவப்பட்டைல பல்பொடி கொடு.பல் ஆடுது. என்று ஆட்டம் கண்ட பல்லால் அடுத்து ஆட்டுக் கால் கடிப்பார்கள் ஒரு பல் மருத்துவர்.

ஆயா சுளுக்கு எடுக்க பொழுது சாய்ந்து கூட்டமே வரும். ஏன்னெ வெயில் இறங்கும் போதுதான் சுளுக்கு எடுப்பார்கள். ஆனால் இப்போது பக்கத்து வீட்டு இப்ராஹிம் அம்மாவிற்கு கற்றுக் கொடுத்து அவரை ஆயா மேற்பார்வையில் சுளுக்கு எடுக்கச் செய்கிறார். சுளுக்கு எடுப்பவர் உடல் வலி மிகுந்திடும். ஒரு ஆர்தோ டாக்டர்

புகையிலை தவிர்க்க டப்பா பாக்கெட் இன்று அச்சிடப்படும் பயங்கர படங்கள் எனக்கு வேடிக்கை தான். கிட்டதட்ட 80 ஆண்டுகள் புகையிலை சுவைஞி என் ஆயா.

அதிகாலைல புகையிலையை சிறு உரல் போன்ற பாத்திரத்தில் இடிக்கும் சத்தம் கூவ மறந்து தூங்கும் சேவலைக்கூட எழுப்பிடும்.

பசுமாடுகள் கிழவி வயசுக்கு மரியாதை கொடுத்து தனக்கு தீனி கிடைக்கும் வரை‌ பறக்காவட்டித்தனம் காட்டாது.

கடந்த பத்தாண்டுகளாய் சைவத்திற்கு மாறினார்.உடல் குடல் நலம் செரிமானத்திற்கு என்பார்.ஆனால் புகையிலை போடாமல் இருப்பதில்லை.

ஓலைகளால் வயதான பெண்களை வைத்து கொட்டான் செய்து நேராக கைவினை அங்காடிக்கு தரகர் இல்லா வணிகம் செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தலைவர்

ஊர் பஞ்சாயத்தில் இவர் ஒன்று சொன்னால் யாரும் எதிக்கமாட்டார்கள்.அநேகமாக ஏற்புடையதாகவே இருக்கும்.

இன்னும் இன்னும் நிறைய நிறைய. அவரது கை வைத்தியம் பக்கத்து வீட்டு இப்ராஹிம் எழுதி வருகிறார்.

“ஆயா உன்னை உம்ரா மற்றும் நான் வாழும் நாட்டிற்கு நோன்பு முடிந்தும் அழைத்துச் செல்வேன்.”

இந்த முறை தவிர்க்க முயன்றால் குண்டு கட்டாய் தூக்கி செல்வேன். இது எனது அன்பு கட்டளை. எனது திட்டம் என்னுள்ளேயே

ஆயா தவிர்க்க தன் உடல் வயதை முன்னிறுத்துவாரென்பதால் எனது கணவன் தம்பி லக்னோ ஜி ஹெச் மருத்துவர் கொண்டு சுற்றுலா செல்ல உடற்தகுதி செக் செய்து வைத்துக் கொண்டேன்.

அல்லா அருளால் சவுதி உம்ரா நல்லபடியாய் முடித்து மஸ்கட் வந்தோம். ஹோட்டல் ரூமில் வசதியாக ஆயா மற்றும் உடன் வந்த என் கணவர் அவர்தம்பி என் அம்மா அப்பா என் குழந்தைகள் அனைவரும் டென்ஷனில். எனது குடும்பம் நிலை கொள்ளாமல் இருந்தது. எந்த விதமான உணர்ச்சி கிளர்ந்தால் ஆயா உடல் நலம் குறையாதிருக்க முதலுதவிக்காக தயார் நிலை.

ஆயிஷா உங்க ஆயாவ வரச் சொல் அதான் உங்க அம்மா வோட ஆயாவை என்று சொன்னேன் எனது ஹவுஸ் மெய்டிடம்.

ஆயிஷா விற்கு கட்டாய பெய்டு லீவு தந்து பாகிஸ்தான் போய் ரம்ஜான் முடிந்து அவள் தாய் மற்றும் அவள் தாயின் ஆயாவை உடற்தகுதி பார்த்து அழைத்து வரச் சொல்லி இருந்தேன்.

கூட்டி வந்தாள் ஆயிஷா. வயது 87 என பாஸ்போர்ட் சொன்னது.

எனது ஜட்ஜ்மென்ட் சரியா தப்பா நிர்ணயம் செய்யும் வேளை நெருங்கியது.

இரண்டு ஆயாக்கள் மீட்டிங். 73 ஆண்டுகள் கழித்தா இல்லை உம்ரா முடிந்து வந்த 73 நிமிடங்களா?

நான் ஆயீஷா அம்மாவையும் அந்த அம்மாவின் ஆயாவையும என் ஆயாவிடம் அறிமுகம் செய்தேன். ஆம் 73 ஆண்டுகள் இடைவெளி பசுமையான இளங்கால வாழ்க்கை அங்கே உணர்ச்சிகள் ஓடிய காட்சிகள் காணொளியாய் நாளைய வலிமிகு கட்டாய பாகப்பிரிவினை தந்த மனிதகுல நரக வேதனைகள் அப்பட்ட டாக்குமெண்டரி பதிவாகியது.

என் ஆயாவின் கணவர் அங்கு என் சின்ன ஆயா குழந்தைகளை விட்டு வேறு கல்யாணம் என திசைமாற அவருக்கு பிறந்த ஆண்வாரிசுகள் மனைவிகளுடன் சேர்ந்து அடித்து துரத்த இன்று தனது விதவைப் பேத்தியும் அவள் மகள் விவாகரத்தான ஆயிஷா மற்றும் அவள் குழந்தைகள் கவனிக்க வாழும் கதையை வைராக்கியத்தோடும் வீரத்தோடும் லட்சியத்தோடும் வாழும் என் ஆயாவிடம் கண்ணீர் பெருக சொன்னாள் எனது‌பாகிஸ்தான் நாட்டில் வாழும் சின்ன ஆயா.

“இவை போகுமுன்னேயே பண்டிட் இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொன்னது சரியா போச்சு. பண்டிட் அவர்கள் மூலம் தொடர்பு கொள்ள முயன்றேன். ” என்றாள் என் ஆயா.

அப்பாவியாக என் ஆயா உள்ளத்தில் கொஞ்சமும் விஷம் இல்லாமல் சளனமில்லாது பேசினார்.

தன் மீது சுமத்திய பாவங்கள் ,இன்னல்கள் கொடுத்து நடுத் தெருவில் விட்டுச் சென்றவள் தங்கை என்ற வன்மம் துளியும் இல்லாத என் ஆயா .

நாங்கள் அழுதோம் துக்கத்தில் இல்லை ஆனந்தத்தில். அன்று என் ஆயா எடுத்த முடிவும் அவர்களால் வளர்க்கப்பட்ட அம்மா மற்றும் எங்கள் லக்னோ நகர வளமான வாழ்வும் கண்ணீர் வரவழைத்தது.

போகாதே என்று 1947ல் தடுத்தவர் முன் மண்டியிட்டு கோரிக்கை வைத்தார் என் பாகிஸ்தான் சின்ன ஆயா .இறுதி காலத்தில் பாவமூட்டை கழுவிட ஹிந்துஸ்தான் வருகிறாராம் என் சின்ன ஆயா.

என் ஆயா” சாத்தியமா? ஃபாத்திமா! அல்லா விருப்பம் போலே” என்றாள் என்னிடம். கூன் விழுந்த முதுகுடன் பார்க்க படுத்திருக்கும் ஒட்டகம் போன்று உருவம் கொண்ட என் ஆயா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *