யானே பொய் என் அன்பும் பொய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,826 
 

“இவங்க புலியூர் சார்தானே” என்று கேட்ட முதியவரைப் பார்த்து வியப்புடன் பார்த்தேன். அப்பா நின்று கண்ணைச் சுருக்கி பார்த்தார். அது அதிகாலை நேரம், ஞாயிற்றுக்கிழமை. அப்பாவிற்கு என்பது வயதைக் கடந்த பிறகு, நடமாட்டம் குறைய ஆரம்பித்திருந்தது. விடுமுறை நாட்களில் அவரை ஏரிக்கரைக்கு நடக்க அழைத்து வருவது வாடிக்கையானது. அவர் நின்று, நின்று வருவது மனதுக்கு வலியைத் தந்தாலும், காலைத் தென்றல் அவருக்கு ஒரு புத்துணர்ச்சியைத் தரும் என்று நம்பினேன். கேட்ட புதியவரிடம்,

“அப்பாவை உங்களுக்குத் தெரியுமா”

“நல்லா தெரியுமே. தம்பி, நான் நாகூர் சப்ஸ்டேஷன்ல வேலை பாத்தப்ப அப்போ பஸ்ல பழக்கம்.” என்று அப்பா அருகே வந்தார்.

“என்னை தெரியுதா அய்யா”

அப்பா கண்ணை மீண்டும் சுருக்கி பார்த்து, சிரித்து “பக்கிரிசாமி, ஈ.பி. பக்கிரிசாமி, நல்லா இருக்கியா” என்றார்.

பக்கிரிசாமி மிட்டாய் கண்ட குழந்தை போல “ஆமா..இருவது வருஷம் ஆச்சி, கண்டுபிடிச்சிட்டீங்களே” என்றார்.

எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பா பழைய கதைகளைப் பேசுவதற்கு, நகரத்தில் நண்பர்கள் இல்லை. என்னுடன் இருக்க வேண்டும் என்று நகரத்திற்கு அழைத்து வந்தது, சில சமயம் தவறோ என்ற எண்ணம் தோன்றும். எப்போதாவது உறவினர்கள் வீட்டிற்கு வரும் பொழுது நேரில் பேசுவார், சில நாட்கள் தொலைபேசியில் பேசுவார். அவர்கள் பேசட்டும் என்று, ஒரு மரத்தடியில் கீழுள்ள பெஞ்சில் அப்பாவை அமரவைத்து, பக்கிரிசாமி அவர்களையும் அமரச் சொன்னேன்.

“தம்பி, உங்களுக்குத் தெரியாது. அய்யாவோடு பேசணும்னே , ராமர் மடத்திலிருந்து நாகூருக்கு வேலைக்கு சைக்கிள்ல போகமா, நம்ம, திருவாளுர் 7ம் நம்பர் பஸ்ல வருவேன். வேற எந்த வண்டியிலேயும் ஏற மாட்டேன். இவ்வளவு ஏன்? மன்னார்குடி வண்டி சுந்தரத்தில இளையராஜா பாட்டு போட்டு சும்மா விருட்டுன்னு பரப்பான். நம்ம ஊரு டிக்கெட்டு எல்லாம் அதுலதான் போகும். இவங்க அதுல ஏற மாட்டாங்க. எட்டணா ஜாஸ்தி ” என்று சிரித்தார் பக்கிரிசாமி. அப்பாவும் சிறிது சிரித்தார்.

நான் பாதி சிரித்தேன். அப்பாவின் சிக்கனம் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர் பிள்ளைகள் விஷயத்தில் என்றுமே சிக்கனமாக இருந்ததில்லை.

“கால் நல்லாயிருக்கா?” அப்பா மெதுவாக, பக்கிரிசாமியைப் பார்த்துக் கேட்டார்.

“ஓ. பேரன் கூட கால் பந்தே விளையாடறேன். நல்லா ஞாபகம் வச்சிருக்கீங்க” என்று அப்பாவிடம் சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து,

“ஒரு நாள் சைக்கிள்ல, நாகூர்ல இருந்து வரும்போது, வைநெருப்பு ஊர் கிட்ட, வாய்க்கால் பாலம் கட்ட பள்ளம் தோண்டி போட்ருந்திச்சி. அதுல உளுந்து, முட்டி விலகிடிச்சி. சைக்கிள் ஓட்ட முடியல்ல. அப்பத்தான் ஒரு நாள், அய்யாவோட ஏழாம் நம்பரு வண்டியில வந்தேன். கால் கட்ட பாத்துட்டு இடம் உட்டாங்க. அப்புறம் தினமும் அவங்க ஆழியூர் ஏறி எனக்கும் சீட்டு போட்டுட்டு வருவாங்க. ஒரு நாள் இரண்டு நாள் இல்ல..மூணு வருஷம்..அப்புறம் நான் கீவளூர் ஸ்டேஷன் வந்துட்டேன். இருந்தாலும்

அய்யாவை ராமர் மடத்தில நின்னு பாத்து கைய காட்டிட்டு போனாதான் எனக்கு நிம்மதி. ஒரு சமயம் அய்யா ஒரு வாரம் வரல. அவங்கள பாக்க, அவங்க வேல பாக்குற போஸ்ட் ஆபிஸ் போய்ட்டேன்னா பாத்துக்கிங்க ”

“அப்படியா” என்றேன்.

“உங்கள பத்தியும் நல்லா தெரியும். நீங்க வேர்க்கடலை மூட்டை தானே. வீட்ல அம்மா அப்படித்தானே சொல்லுவாங்க”

“ஆமா” என்று கூச்சத்தில் நெளிந்தேன்.

“உங்கள பத்தி சொன்னதில்லையே” என்றேன்.

பக்கிரிசாமி சிரித்தார் “நீங்க கேட்டாத்தானே சொல்லுவாங்க” என்றார்.

“படிப்பு, வேலை, கல்யாணம்னு, குழந்தைகள்னு பிஸியா இருக்கான். நல்ல புள்ளத்தான்” என்றார் அப்பா.

“பின்ன. நம்ம புள்ள..சோடை போகாதுங்க. என்ன, சில விஷயம் புரியறதில்ல. பின்னாடி புரியும்” என்றார் பக்கிரிசாமி.

நான் பேச்சு வேறு எங்கோ செல்வதை மாற்ற நினைத்து, “வீட்டுக்கு வாங்க. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் தான்.” என்றேன்.

“வர்றேன். ஒரு நாள் என் பொண்ணோட வர்றேன்.” என்றார் பக்கிரிசாமி.

“டீச்சர் ஆயிட்டாளா, செண்பகம்” என்றார் அப்பா மெதுவாக.

“அதான் அய்யாகிங்கிறது. அக்கறை அப்போதும் சரி. இப்பயும் சரி.” என்று என்னை பார்த்து சொல்லிவிட்டு, அப்பாவை பார்த்து “ப்ரொபெஸரா ஆயிடிச்சி” என்றார்.

அப்பா சிரித்தார்.

“நீங்க வாக்கிங் டெய்லி வருவீங்களா” என்றேன்.

“முடிஞ்சப்ப வருவேன்.” என்றார்.

“நான் தனியா வந்தா, ரெண்டு ரவுண்டு வருவேன்” என்றேன் பெருமையாக.

“அய்யா, நடக்க ஆரம்பிச்சா, சைக்கிள்ல விட வேகமா போவாங்க” என்றார்.

எனது பெருமை உடைந்து, முகத்தை திருப்பி, ஏரியை பார்த்தேன். அவர் தொடர்ந்தார்.

“ஒரு நாள் மழையில. வண்டி எதுவும் வரல. அய்யா ஒரு ஜவ்வு தாள் பைய வாங்கி, தலைக்கு மேல வச்சுக்கிட்டு, சும்மா அய்யனார் மாதிரி வேகமா வேகமா நடந்து போயிட்டாங்க. அடுத்த நாள் வந்து அந்த ஜவ்வு தாள கொடுத்தாங்க. அது நல்லதில்லைனு சொன்னாங்க. அப்போ புரியல. இங்க வந்து பாத்தா எங்க பாத்தாலும் ஜவ்வு தாள், குப்பை. இப்ப புரியுது”

“அப்படியா. ஊர்ல இருந்தப்ப, வீட்ல குப்பை குழி இருக்கும். இங்க கிடையாது. இங்க வந்தப்புறம். பாலிதீன் கவர் வேணாம். குப்பைக்கு பேப்பர் யூஸ் பண்ண சொன்னாங்க. நமக்கு அது சரி வராது. எனக்கு எப்போதுமே வீடு கிளீனா இருக்கனும். கார்ப்பரேஷன் சொல்லற மாதிரி மக்கர, மக்கா குப்பையெல்லாம் பிரிச்சி, பிரிச்சி போட்ருவேன். நாமளே சொல் பேச்சு கேக்கலைனா, மத்தவங்க எப்படி கேப்பாங்க. நான் நல்ல சிட்டிசனா இருக்கும்னு நினைக்கிறேன் ” என்றேன். கர்வப்பட்டேனோ என்று எண்ணினேன். தவறில்லை என்றது மனது.

“தம்பி. தப்பா நினைக்காதீங்க. உங்க அப்பா எனக்கு சொன்னதை உங்களுக்கு சொல்றேன்.” என்றார்.

தலையாட்டினேன்.

“உலகத்தில, ஒவ்வொன்னோட கழிவும் அடுத்ததுக்கு உணவாகனும். இல்ல உரமாகனும். உங்க வீட்ல குப்பை எடுத்து கொண்டு போய் கொட்டி, அது இன்னொரு இடத்துக்கு போய், அப்படியே இருந்தா அதுக்கு பேரு சுத்தம் இல்ல.”

குழம்பி “அப்போ, குப்பையை க்ளீன் பண்ணி நாங்களே வச்சுக்க முடியுமா” என்றேன்.

“இல்ல தம்பி. உங்க வீட்ல இருந்து எடுக்கிற குப்பை, இன்னொரு இடத்திற்கு போறது சுத்தம் இல்ல. கழிவு நீரை உங்க வீட்லயிருந்து எடுத்துட்டு போய், ஏரி, குளம்னு டவுன விட்டு வெளில போய் விட்டுட்டு வந்தா, அதுக்கு பெரு சுத்தம் இல்ல. சுயநலம்” என்றார் பக்கிரிசாமி.

தாக்கப்பட்டதாக உணர்ந்தேன். அப்பாவை பார்த்தேன். இதே மாதிரியான கருத்தை அவர் சொன்ன பொழுது, அவரிடம் கோவித்து, ஒரு நாள் முழுவதும் அவரிடம் பேசாமல் இருந்தேன். பாலிதீன் கவர்களுக்கு பதிலாக செய்தித்தாள் காகிதத்தில் பொருட்களை மடிக்கச் சொல்லுவார். பொருள் வாங்க பை எடுத்து செல்ல வற்புறுத்துவார். நடைமுறையில் சாத்தியம் இல்லாத அறிவுரை என்று வாதிடுவது நினைவுக்கு வந்தது.

“சார். அப்பாவும் இதே மாதிரி சொல்லுவார்.” என்றேன்.

“சொல்லலனா தான் ஆச்சரியம்.”

“சரிங்க சார். நாங்க கிளம்புறோம். அப்பாவை ஞாபகம் வச்சு வந்து பேசினதுக்கு, தேங்க்ஸ் சார்” என்றேன்.

“தம்பி. யாருக்கு யார் நன்றி சொல்றது. அப்பாவை பார்த்து பத்திரமா கூப்பிட்டு போங்க” என்றார் பக்கிரிசாமி.

தொலைபேசி என்னை கொடுத்தேன். குறித்துக் கொண்டார்.

“அப்பா. போலாமா.”

அப்பா தலை அசைத்து, பக்கிரி சாமியைப் பார்த்து “ரொம்ப சந்தோசம் உன்ன பாத்ததில்ல.” என்றார் சன்னமாக.

பக்கிரிசாமி பழைய கதைகள் மீண்டும் பேசினார், பின்னர் “போயிட்டு வாங்க அய்யா. நானே வீட்ல வந்து பாக்கிறேன்”

அப்பாவை வீட்டுக்கு கூட்டி வந்து அமர செய்து கேட்டேன் “ஏன்பா. அவருக்கு ஏன் உங்கள அவ்ளோ புடிச்சிருக்கு”

“அது. புடிக்கறதில்ல. அபிமானம்.”

“அதான். எதனால?. சீட்டு புடிச்சிக்குடுத்துததுக்கா?”

“இல்ல. செய்யற வேல எல்லாத்திலேயும், பழகிற மனுஷன்கள் கிட்டேயும், காக்கா குருவினு எல்லா ஜீவராசி கிட்டேயும், அக்கறையா இருக்கனும். அக்கறை உண்மையா இருக்கனும். அவ்ளோதான்.” என்றார்.

எனக்கு மனதைப் பிசைந்தது. சின்ன வயதில் அப்பா சொல்லும் கதைகளில்கூட கெட்டவர்கள் இருந்தது கிடையாது. அவரது கதையில் வரும் சிங்கமும், புலியும், எல்லோருக்கும் நண்பனாகவே இருந்தது. அப்பாவிடம் என்னைப் பற்றிப் பேசுவேன். குழந்தைகளைப் பற்றிப் பேசுவேன். ஒரு நாளும் அவரை பற்றிக் கேட்டதில்லை.

யோசிக்க யோசிக்க நான் சரிதானா என்ற எண்ணம் அதிகமானது. நான் என்ற வட்டம், எனது என்ற சதுரத்தில் மாட்டிக் கொண்டதாகத் தோன்றியது. அதில் அப்பா இல்லை. அனைத்திலும் உண்மையாக இருக்கிறேனா என்ற கேள்வி தொக்கி துளைத்தது. அப்பா சொல்லும் “அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது” நினைவுக்கு வந்தது. ‘எனது’ “அண்டமானால்”, என்னில் தொடங்கி, எங்கோ முடிந்தாலும், எங்கோ தொடங்கி என்னில் முடிந்தாலும், என்னைப் பற்றும் என்று ‘நான்’ சொன்னது. நினைவைத் திருப்பி இழுத்தேன்.

நான் அப்பாவை அக்கறையோடு கவனிக்கின்றேனா? என்று கேட்டுக்கொண்டேன். இல்லை என்பதாகத் தோன்றியது. மற்ற வேலைகளில் மூழ்கினேன், இரவில் அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்து, மறந்து தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்து அப்பாவிடம் பேசலாம் என்று போன பொழுது அப்பா எழவேயில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *