மௌன ராகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2022
பார்வையிட்டோர்: 4,381 
 
 

(2002 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘ட்ரிங்…ட்ரிங்…ட்ரிங்…

அமைதியை உடைத்துக் கொண்டு அலறியது டெலிபோன்.

படுக்கையில் சாய்ந்திருந்த அவள்… எழுந்தாள்……

“ஹலோ ….”

“ஹலோ…பரீதா..நான் தான் சுலைஹா கதைக்கிறன்.”

“ஏது இந்த நேரத்தில்…. ஏதும் அவசரமோ ….?”

“உனக்கு ஓய்வான நேரம் இந்த நேரம் தானே? அதனால் தான் இந்த நேரம் கதைக்கிறேன்…”

“சரி… சரி… விஷயத்துக்கு வா…”

“போடி….உன்னை நினைத்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது…அதனால் தான்…”

“சரி… சரி… அறுக்காதே… என்ன விசயம்.?”

“ஆமான்டி… அன்று நாங்க உங்க வீட்டுக்கு வந்த நேரம் நீயும்…. உன் ஹஸ்பண்டும் எங்களை எப்படி கவனித்தீர்கள்… தாங்ஸ் டி….. உன் இலட்சியம் போலவே இலட்சத்தில் ஒரு புருஷன் அமைந்து விட்டான்…. என் கணவர் உங்களிருவரையும் புகழ்ந்து தள்ளுகிறார். உன் அமைதிக்கும் அறிவுக்கும் அல்லாஹ் உனக்கு நல்லதொரு வாழ்வு தந்திருக்கிறான். படித்து பட்டம் பெற்ற நீ…. முன் உதாரணமாக செயல்படுகிறாய்… எனக்கு எவ்வளவு சந்தோஷம்…. நான், சுபைதா…. நஸ்ரீன்…. இவர்களை ஸ்கூல்ல சந்தித்து உன்னைப் பற்றி கூறினேன்..”

“நன்றி…நன்றி…”

“நன்றி சொல்ல வேண்டியது நான். அவர்களும் ஒரு நாள் உன் வீட்டுக்கு வருவார்களாம்…. ஏழ்மை விளிம்பில் எங்களுடன் ஒரே அறையில் இருந்த நீ…. இப்படி சொகுசாக வாழ்வதை எண்ணி… நான் அல்லாஹ்வை புகழ்கிறேன். அத்துடன் நீ எனக்குச் செய்த உதவியையும் என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.”

“சரி…சரி…புகழ்ந்த து போதும்…டெலிபோன் பில் ஏறும்…”

“பரவாயில்ல… நான் ஸ்கூல் அறையிலிருந்து கதைக்கிறன்… இன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திப்போம்….”

நீண்ட பெருமூச்சொன்று அவள் இதயத்திலிருந்து வெளியே கனலாக வந்தது. கண்களிலிருந்து வடிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

சுலைஹா…நீ வஞ்சகமில்லாதவள்… சாதாரணமாகப் பேசி விட்டாய்… ஆனால் என் நிலைமை உனக்குப் புரியாது….ஒரு மனிதனுக்கு இரண்டு பக்கங்கள். நீ…என் ஒரு பக்கத்தைத்தான் பார்த்தாய்…மறுபக்கத்தை பார்த்தாயானால் அனுதாபப்படுவாய். இல்லை, இல்லை, இரத்தக் கண்ணீர் வடிப்பாய்… – தனக்குள்ளே கூறியவளாக கண்களிலே ஆறு பெருக்கெடுத்தோட அறைக்கதவை மூடினாள்…கட்டிலில் அமர்ந்து மீண்டும் மனதோடு உரையாட ஆரம்பித்தாள்.

சுலைஹா….நான் பெரிய வாழ்வு வாழ்கிறேன். சந்தோஷமாக காலத்தை கழிக்கிறேன் என்று உன் நினைவு. உண்மைதான்டி…உண்மைதான். கத்துகிறாள்…முடியமட்டும் அழுத அவள்…தாவணியால் முகத்தைத் துடைத்துக் கொள்கிறாள். ‘சுலைஹா உனக்குத் தெரியும் சிட்டுக்குருவிகளாக நாம் கலாசாலையில் உலவினோம். எமது எதிர்கால இலட்சியங்களைப் பற்றி கற்பனையில் திளைத்தோம்…. எவ்வளவு அலங்கார வாழ்வு…. சின்னச் சின்ன கனவுகள்…பசுமை நிறைந்த நினைவுகள்; என்ன சொல்ல! பட்டாம் பூச்சிகளாக பறந்தோம் அறிவு வளர்ந்த அந்தப் பருவத்தில் மொட்டாக இருந்தோம்…. நானும் நீயும், சுபைதாவும், நஸ்ரீனும் எப்படி எல்லாம் கதைத்தோம்!

கலாசாலையை விட்டு வெளியேறினால் எங்களுக்கு எமது பெற்றோர் கல்யாணம் பேசுவார்கள்…கல்யாண மார்க்கெட்டில் இளைஞர்களின் ரேட்… ஆளுக்கு தகுந்த மாதிரி இருக்கும். எவ்வளவு படித்தாலும் பெண்களுக்கு ரேட் இல்லை; எவனுக்கோ கழுத்தை நீட்டி பிள்ளை பெறும் இயந்திரமாக மாற வேண்டும்…இது கூடாது; . எங்கள் ஸீனியர், மர்யம் – பீ.ஏ. அவங்களுக்கு டீச்சர் வேலை கிடைத்தது…. கல்யாண மார்கெட்டில் சொந்த வீடோ கூடுதலான ரேட்டோ. கொடுக்க முடியாத அவளுக்கு சாதாரண ஒரு டிரைவரை கை பிடிக்க நேர்ந்தது. இப்படி எத்தனை பேர்களைப் பற்றி நாங்கள் கதைத்தோம். இப்படி எங்களுக்கிடையே நடக்கக் கூடாது எனக் கனவு கண்டோம்…அது நடந்தது… எமது இலட்சிய வாழ்வு மண்ணாகி விட்டது. பெண்கள் எவ்வளவு தூரம் முற்போக்கு என்றும், புரட்சி என்றும் பேசினாலும் – ஆண்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் பெண்கள் அடிமைகள்தான்…உனக்கென்ன… உன் இலட்சியப்படியே வாழ்வு அமைந்து விட்டது. ஆனால் சுபைதா, நஸ்ரீன் இவர்களின் பெற்றோர் கல்யாணச் சந்தையில் மணவாளர் தேடுகிறார்கள்.

என்பெற்றோரும் இதே நிலையில் தான் இருந்தார்கள். ஆனால்…. என் மூலம் என் குடும்பத்தாருக்கு அதிர்ஷ்டம் அடித்து விட்டது. உனக்குத் தெரியும் எங்கள் வாப்பா சாதாரண ஒரு தொழிலாளி…. இரண்டு ஆண்கள், மூன்று பெண்கள் உள்ள குடும்பத்தில் நான் மூத்தவள். ஜீ.சீ.ஏ. படித்து முடித்த என் தம்பி இரண்டு பேரும் பெக்டரி ஒன்றில் லேபராக வேலை செய்தனர்…. தங்கைகள் வீட்டில், எனக்குப் புலமைப் பரிசிலுடனும் உள்ளூர் சமூக மன்றங்களின் உதவியுடனும் பீ.ஏ. வரை படிக்க முடிந்தது…. ஆசிரியர் தொழில் கிடைத்தால் எங்கள் வீட்டு கஷ்டம் நீங்கும் என எண்ணினேன். ஆனால் என்னை படிக்க வைக்க என் உம்மா, வாப்பா எடுத்த சிரமத்தை விட மாப்பிள்ளை தேடுவதில் அதிகக் கஷ்டப்பட்டனர். உனக்கமைந்த வாழ்வு போல எனக்கு அமையாதா….. என ஏங்கி நின்றேன்… 1 நாள் தவறாமல் இஸ்லாமிய இலட்சியம் பேசும் சமூகம் இலட்சம் கேட்கும் பொழுது என்னைப் போன்றோர் என்ன செய்வார்கள்! சமுதாயம் இதைப் பற்றி சிந்திப்பதில்லை; ஏதாவது தவறு நடந்தால் நாக்கில் நரம்பின்றிக் கதை கட்டுவார்கள்….. இவர்களைப் போன்றோரால் எமது சமுதாயம் இங்கிருந்து எங்கே போகுமோ!’

இப்படி இருக்கும் பொழுதுதான் சுலைஹா, நாங்கள் எவரும் எதிர்பாராத கலியாணப் பேச்சு வந்தது. எமது ஊரிலே வசதியான இடத்திலிருந்து என்னை பெண் கேட்டு வந்தனர். இது எனக்கு உலக அதிசயமாக இருந்தது. எங்கள் சமூகத்தில் எல்லாரும் இலட்சம் கேட்பவர்களல்லர்; இலட்சியவாதிகளும் உள்ளனர்…. ஏழைப் பெண்ணை வசதியான ஒருவர் – கூடுதலான மஹர் கொடுத்து, இதர செலவுகளும் செய்து – கலியாணம் முடிப்பது என்றால் அது உண்மையான இஸ்லாமிய வரம்பு முறைதானே! எங்கள் வீட்டில் எல்லாருக்கும் விருப்பம்….

கலியாணத்துக்கு முன்பே அவர்கள் கோரிக்கை விடுத்தனர்…

“தொழில் செய்யக் கூடாது.” தொழிலை விட்டேன். “முழு பர்தா முறையில் உடை அணிய வேண்டும்.” எங்கள் வீட்டில் எல்லாரும் அதைப் பின்பற்றினர்.

தம்பிமார்களுக்கு வேலைத்தளத்தில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. – எமது வீடும் பெரிதாக எல்லா வசதிகளுடனும் கட்டப்பட்டது. எங்கள் வீட்டில் சந்தோஷம் தாண்டவமாடியது. எங்கள் நடைமுறையும் மாறியது.

எமது திருமணம் சாதாரணமாகவும், எளிமையாகவும் அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் நடைபெற்றது.

திருமணம் நடந்து சில நாட்கள் கழிந்து விட்டன. என் கணவர் என்னுடன் அன்பாக நடந்தார். சிரித்த முகத்துடன் உபசரித்தார். ஆனால். ஆனால்…எப்படிச்சொல்வேன்! அது அழகிய துப்புரவான கிணறு; நீறையத் தண்ணீர் கிணந்தில்; புதிய வாளி தொங்குகிறது. ஆயினும் கயிறு எட்டுவதில்லை; எப்படித் தண்ணீர் அள்ள முடியும்? – இது தான் என் நிலைமையும். உனக்குப் புரிந்திருக்கும்…இரவு நேரங்களில்…அவரின் இயலாமை என்னைத் தவிக்க வைத்தது; இரவின் தனிமை என்னை வாட்டியது…

தலையிலே எரிமலை வெடித்தது. என்னை இப்படியா சோதிக்க வேண்டும்! நான் ஏமாற்றப்பட்டேன். எனக்கு ஆத்திரம் மேலிட்டது. அவர் சட்டையைப் பிடித்து…. “நான் என்ன குற்றம் செய்தேன்…? இப்படி இருக்கும் நீங்கள் ஏன் என்னை திருமணம் செய்தீர்கள்?” தலையை அவர் நெஞ்சிலே அடித்து ஓலமிட்டேன்.

சிறிது நேரம் என்னைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்த அவர். “திருமணம் என்றால் இது மட்டும் தானா? நீ படித்தவள்… இதைப் புரிந்து கொள்வாய் என்றுதான் உன்னை திருமணம் செய்தேன்….” என்றார்.

“உங்கள் பலவீனத்தை மறைக்க இப்படியும் ஒரு சமாளிப்பா? ஒரு பெண்ணின் உணர்வுகளை கட்டுப்படுத்தி வாழ்க்கையை பாழ் படுத்துவதுதானா உங்கள் பணச் செல்வர்க்கின் பண்பு?

என் கோபம் அவரை நிலைகுலையச் செய்திருக்க வேண்டும்… மேற்கொண்டு அவர் எதையும் பேசவில்லை.

“நீங்கள் பேசமாட்டீர்கள். ஆனால் என்னால் இப்படி வாழ முடியாது. உலகிலுள்ள சகல ஜீவராசிகளுக்கும் ஏற்படும் உணர்வு இது. நான் எப்படி விதிவிலக்காக முடியும்? நான் நாளை எங்கள் வீடு செல்வேன். குவாஸிகோர்ட்டில் எல்லாவற்றையும் முறையிடுவேன்…..” என்றேன்.

திகைத்துப் போய் நின்றார்.

“பரீதா நான் குற்றவாளிதான். உனக்கு மட்டுமல்ல… இந்த சமூகத்துக்கே நான் ஒரு குற்றவாளி. என் பலவீனத்தைப் போக்க பணம் இறைத்து செலவு செய்தேன். இயற்கையை மாற்ற முடியாது…பத்து தலைமுறைக்கு வாழ என்னிடம் பணம், சொத்து உள்ளது. ஆனால் நான் இயலாதவன்… என் சொத்து, சுகத்தில் என்ன பிரயோசனம். தலையை சுவரில் மோதிக் கொண்டு அழுகிறார்…சற்று நேரத்தில் மௌனத்தைக் கலைத்தவராக என்னை வாஞ்சையுடன் பார்த்து…பரீதா, நீ என்னை டிவோஸ் பண்ணி சமூகம் என்னை இயலாதவன் என இகழ்ந்தால்…நான் உயிருடன் இருந்து என்ன பிரயோசனம்? நான் இப்படி இருந்தால் தான் என்னால் தலை நிமிர்ந்து வாழ முடியும்…”

சிறிது அமைதிக்குப் பின் அவர் மீண்டும் தொடர்ந்தார். “பரீதா, நீ எடுக்கப் போகும் முடிவை மறுபரிசீலனை செய்…என் நிலைமையை விட உன் குடும்ப நிலமையை யோசித்துப் பார்…அதன் பின் உன் முடிவை எடு….” என்றார்.

நான் சிந்தித்தேன்.. எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும். வாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டார். பணம் இல்லாத நேரத்தில் அவரை குடும்பத்தார் முதல் எல்லாரும் இளக்காரமாக நினைத்தனர். இன்று அவர் உதவியை நாடி எத்தனை பேர் வருகின்றனர்! ஹாஜியார்…என அவரைச் சுற்றும் கூட்டம்; என் தம்பிமார் பொறுப்புடன் எந்தளவு சந்தோஷமாக வாழ்கின்றனர். சொந்தக் காரில் பயணம் போகின்றனர்.. தங்கச்சிகளுக்கு பெரிய இடங்களிலிலிருந்து கலியாணப் பேச்சுவார்த்தைகள் வருகின்றன…உம்மாவின் சந்தோஷம்…இவைகளை என் சுயநல வாழ்வுக்காக கெடுக்க வேண்டுமா…? கூடாது… கூடவே கூடாது…சுலைஹா…இப்பொழுது புரிகிறதா? எனது அடுத்த பக்கம் எப்படி இருக்கிறது…? யாருக்கு தெரியும்…தெரிய வேண்டுமா…? கூடாது…அது என்னுடன் புதையட்டும்…இரவு நேரம் என்னை கொல்லத்தான் செய்கின்றது…என்றாலும் நான் ஒரு மரக்கட்டை…என்று எண்ணியவாறே நீண்ட பெருமூச்சொன்றை விட்டாள் பரீதா.

– நவமணி – 2002. மார்ச்.03, மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.-

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *