கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 19, 2012
பார்வையிட்டோர்: 10,692 
 

ஆரவாரத்துடன் மாப்பிள்ளை ஊர்வலம் கல்யாண வீட்டை நோக்கிப் புறப்பட்டது. நாகஸ்வரம், கொட்டு மேளச் சத்தத்தை அமுக்கியது, நெருப்பைக் கொளுத்தியதும் படபடத்த நீளமான பட்டாசுச் சரம். கந்தக நெடியுடன் கங்கு நட்சத்திரங்கள், அங்குமிங்கும் சிதறிவிழுந்து மறைந்தன. புகைமேகம் காற்றில் அலையாடி அலையாடி… மேலழும்ப, தெப்பக்குளத்து நீரலைகளில் பட்டுத்தெறித்த சூரியக் கதிர்கள், துகள்களாய் மின்னிச் சிரித்தன.

ஊர்வலம் மூனா.வானா ராவுத்தர் வீட்டை நெருங்கும்போது, மாப்பிள்ளையின் காருக்கு முன்னே அவனது நண்பர்கள் – நேற்றிரவு நடந்த பார்ட்டியின் தாக்கம் குறைந்திருந்தாலும்… அதே சுதியுடன் – கல்யாண வீட்டுக்கு ஒவ்வாத, ‘டண்டணக்கா… டமுக்கு டப்பா…’ மூணுசாமி அடி அடிக்கச் சொல்லி, மேளக்காரர்களிடம் வம்பு செய்தனர்.

வற்புறுத்தலால் லயம் மாறிவிழும் ஒழுங்கற்ற அடிகளுக்கு எழும் ஓசைக்கு பேண்ட், ஷர்ட், ஷ¥ போட்டு ‘டக் – இன்’ செய்தவர்கள் ஆடும் அழகை, தெருவில் போனவர்கள் வந்தவர்களும், நாச்சித்தேவர் டீக்கடையில் நின்றிருந்தவர்களுமேகூட நிறையவே ரசித்தனர்.

‘இங்கிலீசு’ சுப்பையா வாத்தியார் வீட்டு வாசலில் நின்றிருந்தப் பெண்கள், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துவிட்டு, வாய்மூடி நமுட்டாகச் சிரித்தனர். ஒரு கிழவி, “பாடையில போறவனுக ஆடுற ஆட்டத்தைப் பாரேன்” என்று இடுங்கிய கண்களுடன் பொக்கை வாய்த்திறந்து, சந்தோஷச் சிரிப்பு சிரித்தாள்.

தெப்பக்குளத்துத் தெற்குப் பக்க அரச மரத்தடியில் கட்டப்பட்டிருந்த பசுவும், அதன் கன்றும், புல்லை மென்றுகொண்டே தலைநிமிர்த்துப் பார்த்தன.

‘டும்டும்டும்டுர்ர்ர்… டும்டும்டும்டுர்ர்ர்…’ மேளத்தின் கடூர அடிகள், வேலுச்சாமியின் நெஞ்சில் இடியாய் விழுந்தன. இத்தனைநேரமும் மனக்கலக்கத்தில் இருந்தவர், இப்போது தவிக்க ஆரம்பித்தார்.

விசேஷ வீட்டிலிருந்து நாலுவாசல் தள்ளி அவர் வீடு. மணப்பெண்ணுக்குத் தாய்மாமன் முறை. முறையான அழைப்பு இருந்தது. இருந்தும் அவர் போகவில்லை!

பதினைந்து நாட்களுக்கு முன்பிருந்த நிலை, இன்று அவருக்கில்லை. மீசைக்காரர் என்றால், அது வேலுச்சாமியின் ஆகுபெயர். சுற்றுவட்டாரத்தில் பிரபலம். பெருமை என்ற மூன்றெழுத்துக்குள் மடங்கிப்போனவர். கண்விழித்து எழுந்ததிலிருந்து தூங்கப் போகும்வரை யாராவது ஒருவர், தேடி வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களது பிரச்சனையை காதுகொடுத்துக்கேட்டு அதற்கு, ‘இப்பிடிச் செய்… அப்பிடிச்செய்’ என்று வழிமுறைகள் சொல்லுவார். அவர் சொல்வது வந்தவர்களுக்குப் பிடித்துப்போகும். செயல்படுத்தினால் பலன் கிடைக்கும். வழிகேட்டு வந்த யாரும் மனம் வெறுத்துப் போனதேயில்லை. வந்தவர்களால் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்று தோன்றினால், சட்டையை மாட்டிக்கொண்டு அவரே தெருவில் இறங்கி, ‘மாங்குமாங்’ கென்று நடந்து, சம்பந்தப்பட்டவரிடமே போய்விடுவார். அவரைக் கண்டதும் சம்பந்தப்பட்டவர்கள், ‘ஆகட்டும்’ என்பதைத் தவிர வேறு வார்த்தைகளை அனாவசியமாகச் செலவிடுவதில்லை.

அந்த வகையில் அவருக்கு, தன் மீதே ரொம்பவும் பெருமிதம். வழிமுறைகள் சொல்வதற்கு, அவர் காசு வாங்குவதில்லை. ஒருசிலர் தயக்கத்துடன் நீட்டும்போது, ‘அட… போ!’ என்று, செல்லமாகத் தட்டி மறுத்துவிடுவார்.

முப்பாட்டன் சொத்து. வைப்பு, தொடுப்பு, கூத்தி, சீட்டு, ரேஸ், தண்ணீ என்று எதுவுமில்லாமலேயே நாலு பக்கமும் கைவீசி, ஊருக்கு, உறவுக்கு என்று அள்ளிக் கொடுத்து… ஆக்கிப்போட்டு… அது, வகை தொகையாய் அழிந்துகொண்டே போனது.

இருந்த கொஞ்ச நஞ்சத்தை, “நீ இப்பிடியே அழிச்சுக்கிட்டுப்போனா, நாங்கக் கையேந்த வேண்டி வந்துரும். ஒதுங்குப்பே!” என்று செட்டாகப் பேசிய மூன்று மகன்களும் அவரை ஓரம்கட்டி, நெருக்கிக் கையெழுத்து வாங்கி, எல்லாவற்றையும் விற்றுக் காசு பண்ணி, அங்கேயே ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டார்கள். அவரது முந்தைய செயல்கள், பிள்ளைகளை இப்போது ஞாயம் கேட்கவும், பேசவும் வைத்தன.

வேலுச்சாமியால் மீற முடியவில்லை. “ஒனக்கு எந்த மகன்ட்ட சாப்புட விருப்பமோ… வா. ஒம்மருமகளுக கஞ்சி ஊத்துவாளுக” என்று சொல்லிக்கொண்டே அவரவர் பாதையில் போய்விட்டனர்.

தோப்பு, தொரவு, காடு, கரை என்று பசுமையாய் இருந்தவர், பொட்டக் காட்டு ஒத்தப் பனையாகிப் போனார். மனுஷன் சம்பாதிக்கவில்லை என்றாலும் செல்வாக்கோடு காலத்தை ஓட்டிவிட்டதால், யாரிடமும் போய் அவர் அண்டவில்லை. வீட்டை வாங்கிய புண்ணியவான், அதைக் காலிசெய்ய மூன்று மாத கால அவகாசம் கொடுத்திருந்தான். ஆனால் சொத்தை விற்றுக் காசு பண்ணிக் கொண்ட பிள்ளைகளோ, பத்துக் காசைக் கூட கண்ணில் காட்டவில்லை.

தாய்மாமன் முறைத் தீர்க்க… மணப் பெண்ணுக்குச் சீர் செய்ய… எங்கெங்கோ கடன் கேட்டு கை நீட்டனார். அவரது இன்றைய நிலையை அறிந்தவர்கள், கை விரித்தோ, உதட்டைப் பிதுக்கியோதான் பதில் சொன்னார்கள்.

அவருக்குப் பழங்கதையை நினைத்துப் பார்க்க மனம் வரவில்லை. விரல் சொடுக்கினால் ஓடி வந்தவர்களும், கை நிறைய வாங்கிக்கொண்டு போனவர்களுமே பம்மினார்கள்.

மாப்பிள்ளையின் நண்பர்கள் ஆடிய ஆட்டத்துடனே ஊர்வலம், ஒரு வழியாகக் கல்யாண வீட்டை தாமதமாக வந்துசேர்ந்தது. ஆரத்தி எடுத்து மாப்பிள்ளையை வழி மறித்தனர், கொழுந்தியாக்கள். மாப்பிள்ளைக்காரனுக்கு கை குட்டை. கொழுந்தியாக்களைக் குளிர்விக்க, அவன் தாராளமாய் பணம்போடவில்லை. பொட்டச்சிகளும் விடவில்லை. “என்ன மாமோய்… இவ்வளவுதானா ஒங்கப் பவுசு. வெறும் பத்து ரூபாயை நீட்டி மொழக்கிப் போடுறீங்க. கொழுந்தியாக்க நாங்க கேக்குறதுக்கே இப்படின்னா… நாளைக்கி பொண்டாட்டிக்கு என்னத்தை செஞ்சுக் கிழிச்சுறப் போறீங்க?” என்றாள் ஒருத்தி.

மாப்பிள்ளைக்கு பேச வாய் வரவில்லை.

“ஒங்களுக்கு பர்ஸ்வேறக் கேக்குதோ?” என்று அவனிடமிருந்து அதைப் பறித்தாள், ஒருத்தி. அதை மற்றொருத்திப் பிடுங்கித் திறந்துபார்த்து, “அய்… மாமாது காலி பர்ஸ்டீ!” என்றாள்.

அந்த இடம் சிரிப்பால் நிறைந்தது.

மாப்பிள்ளையின் நண்பர்கள், “ஓ…!” என்று கூச்சல் போட்டார்கள். அது அவனுக்குத் தெம்பைத் தந்தது. ‘மாப்ளே, எடுத்துக் காட்டுறா ஒஞ்சரக்கை!” என்று ஏத்திவிட்டான், ஒருவன்.

மாப்பிள்ளை தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து, சில நூறு ரூபாய்த்தாள்களை எடுத்துக் காட்டி, “நான் கிழிக்கிறது இருக்கட்டும். மாப்பிள்ளை சரக்கு இங்கே இருக்கு!” என்று ஆட்டினான்.

“ஏய், ஏற்கனவே லேட்… வழிய விடுங்கம்மா!” யாரோ குரல் கொடுக்க, மாப்பிள்ளையால் உள்ளே போக முடிந்தது.

மாப்பிள்ளை மணமேடையில் உட்கார்ந்த கொஞ்சநேரத்தில், கலகலா சத்தம் ‘சட்’ டென்று நின்று, கசமுசாவென பேசும் சத்தம் எழுந்தது. ஒலிபெருக்கியில் வந்த சத்தம், நாலுவீடு தள்ளி வீட்டுக்குள் பம்மிக்கிடந்த வேலுச்சாமியின் காதிலும் துல்லியமாக விழுந்தது. தாலியைத் தொட்டுக் கொடுக்க தன்னைக்கூட தேடலாம் என்று அந்த ‘கசமுசா’வுக்கு அர்த்தம் கற்பித்துக் கொண்டார். சிலநிமிடக் கரைச்சலுக்குப் பின், அந்தச்சத்தம் நின்றுபோனது. தொடர்ந்து கெட்டிமேளச் சத்தம், “டும்டும்” என்று கேட்டது.

தாலிகட்டு முடிந்துவிட்டது. இனி சாப்பாடு. சாப்பிட்டுவிட்டு வெளியில் வரும்போது, மொய்! தாலிகட்டு நடக்குமுன்பே வாசலில் மேஜைபோட்டு, சிவப்புத்துணி விரித்து, அதன் மேல் மஞ்சள் துணியால் வாய்க்கட்டிய குடம் பார்வையில் படும்படி உட்கார்ந்திருந்தது. பெரிய குடம்!

குடத்துக்குப் பக்கத்தில் இளைஞனொருவன் கோடுபோட்ட ஒரு குயர் நோட்டும், ரெனால்ட்ஸ் பேனாவுமாகக் காத்திருந்தான். அவனருகே மற்றொவன் கையில் மைக் வைத்திருந்தான். முதல் பந்தி நடந்து கொண்டிருந்தது. பெண்ணின் அப்பன் தங்கவேலு அவசரமாக வாசலுக்கு வந்து, “இந்தக் குடம் நெரம்புனதும், அந்தக் கூடையில மொய் வாங்கிப் போடுப்பே!” என்று சொன்னான். கை காட்டிய கூடையை, அவர்கள் பக்கம் நகர்த்தி வைத்தான். அதுவும் மஞ்சள் துணியால் போர்த்தப்பட்டிருந்தது. மறக்காது ஒரு விஷயத்தை நினைவுபடுத்திவிட்ட திருப்தியில், தலையாட்டிக்கொண்டே உள்ளே போனான்.

முதல் பந்தியில் சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்த முதல் ஆள், சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “அட, நான்தான் மொத ஆளு!” என்று பிறர் காதில் விழும்படி தனக்குத்தானே பேசிக்கொண்டு, ஆயிரத்தியொரு ரூபாயை பெயர், ஊர் சொல்லிக் கொடுத்தான். பெயரையும் ஊரையும் சொல்லும்போது, வார்த்தைகள் கெளரவச் சாயத்தில் தோய்ந்து வந்தன.

பேனா வைத்திருந்த இளைஞன் ரூபாயை வாங்கி, எச்சில் தொட்டு எண்ணி, மேஜையில் சர்வ அலங்காரத்துடன் கொலு வீற்றிருந்த பெரிய குடத்தினுள் திணித்தான். பிறகு, குண்டு குண்டான கையெழுத்தில் நோட்டில் எழுதினான்.

மைக் வைத்திருந்த இளைஞன், நோட்டில் எழுதப்பட்டிருந்த விவரத்தைப் பார்த்து, “மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா எழுமலையைச் சேர்ந்த முத்துவேல் தேவர் மகன் ராமசாமித் தேவர் மொய்யாக ஆயிரத்தியொரு ரூவா எழுதிருக்கார்!” என்று சொல்ல… ஒலிபெருக்கிகள் அதை, அலறலுடன் உச்சரித்தன.

மொய் ஆரம்பமாகிவிட்டது. இனி, சாப்பிட்டவர்கள் வரிசையாக வந்து எழுதுவார்கள். பந்திகள் முடிந்ததும், மொய் எழுதியவர்களின் பெயர்களை மறுபடியும் மொத்தமாக வாசிப்பார்கள். அதன்பின் யார் யார் சாப்பாட்டுக்கு வரவில்லை. யார் யார் மொய் எழுதவில்லை என்று கணக்கெடுப்பார்கள். அவர்கள் பெயரை மைக்கில் சொல்லிச் சாப்பிட அழைப்பார்கள். அப்படி அழைக்கப்பட்டுவிட்டால், இந்த வட்டாரத்தில் அது, அவமானம்!

நிர்க்கதியாய் நிற்கும் வேலுச்சாமியின் இன்றைய நிலை, தங்கவேலுவுக்கு நன்றாகவே தெரியும். உறவுமுறை நல்லமுறையில் நீடித்திருந்தால் ஒருவேளை அவன் இவரை எதிர்பார்க்காதுகூட விட்டிருக்கலாம். எப்போதோ நடந்த சின்ன விஷயத்தை இருவருமே மனதில் பூட்டிவைத்துக் கொண்டு, மச்சினர்கள் கோதாவில் நடந்துகொண்டு வந்ததை, அவன் இப்போது பயன்படுத்திக் கொள்வானோ எனும் அச்சம் வேலுச்சாமிக்குள் நிறையவே இருக்கிறது.

தங்கவேலுவும் பெருமைக்காரன்தான்!

‘மானக்கேடு…மானக்கேடு’ மன ஓட்டம் அறுபட்ட வேலுச்சாமி, அந்தப் பெயர்களுடன் தனது பெயரும் வந்துவிடுமோ என்று எண்ணி எண்ணி மறுகினார்.

இதற்கு முன் ஊரில் எந்த விசேஷம் நடந்தாலும், தன் சார்பில் ஆயிரத்தியொன்று என்று பத்து நூறு ரூபாய்த்தாள்களையும் ஒரு ஒருரூபாய்த்தாளையும் ஷோக்கா புத்தம் புதிதாய் எடுத்துநீட்டி, பந்தாக்காட்டி, பவிசாய் அசத்துபவர். இப்போது நடந்த கல்யாணத்தில், மணப்பெண்ணுக்கு அவர் தாய் மாமன் வேறா? தாய் மாமனின் சீரும் மொய்யும் குறிப்பிட்டுச் சொல்லும்படி இருந்தாக வேண்டும். அது, இங்கே எழுதி வைக்கப்படாத விதி!

சிங்கிள் டீக்கும், சிப்பி பீடிக்கும் இன்று அவர் சிங்கியடிக்கும்போது, சீரும் மொய்யும் செய்ய அவர் எங்கே போவார்?

சாப்பாட்டுப் பந்தி முடிந்து போனதுபோலத் தெரிந்தது. மொய் எழுதுபவர்களின் பெயர் தொடர்ச்சியாய் வரவில்லை.

தங்கவேலு பின்வாசல் பக்கம் போனான். மனைவி முத்தம்மாவிடம், “ஏம்புள்ள, மேலத் தெரு மாரிப் பயலுக்கு பத்திரிக்கை வெச்சோம்ல்ல. அவன் வரலியே. அவம்பொண்ணு கல்யாணத்துக்கு ஐநூத்தியொண்ணுதானே எழுதுனோம்!” என்று கேட்டு தெளிவு செய்துகொண்டு திரும்பினான்.

வழியில் நாய் ஒன்று, குறுக்காகக் கால்களுக்கிடையில் ஓடியது. “வக்காளி” என்று அதை எத்தியவன், மைக்கை நோக்கிப் போனான். நாய் ‘வவ்வவ்’ வென்று வாலை கால் களுக்கிடையில் இடுக்கிக் கொண்டு ஓடியது.

நொடியில், நாயின் ‘வவ்வவ்’ சத்தப் பின்னணயில் அவன் குரல் கோபமாகவும், எள்ளலாகவும் ஒலித்தது. “யப்பே.. மாரி, ஒனக்கும் சேத்துத்தான் கல்யாணச் சாப்பாடு ஆக்கிருக்கு. வா, வந்து சாப்புட்டுட்டுப் போ. ஞாபகம் இருக்கா? ஒம்பொண்ணு கல்யாணத்துல ஐநூத்தியொண்ணு மொய் எழுதிருக்கோம். ஆமா!”

கல்யாணத்துக்கு பத்திரிகை வைத்ததில், ஏறத்தாழ எல்லோருமே வந்துவிட்டார்கள். வராதுபோன ஒரு சிலரையும், கணவன் மைக்கில் பெயர்ச்சொல்லி கூப்பிட்டு சாப்பிட அழைக்க… பெண்ணின் தாய் முத்தம்மா பொசுங்கிப் போனாள். வராததில் ஒரு நபர் அண்ணன் வேலுச்சாமி எனும்போது, அவளுக்குக் கலக்கியது.

வரவேற்பு, பந்தி, சாப்பாடு, மேற்பார்வை, வழியனுப்பு என்றிருந்த தங்கவேலு, இவற்றிற் கிடையே சமையல் கட்டுக்கு வந்தான். “ஏப்புள்ளே, தோட்டிப் பய ஆதிய, பின் பக்கம் வரச் சொல்லியிருக்கேன். அவன்ட்ட சோத்தையும், கறிக்கொழம்பையும் அள்ளிக் குடுத்து மேலத்தெரு மாரி வூட்ல தந்துட்டு, அப்பிடியே நாம செஞ்ச மொய்ப் பணம் ஐநூத்தியொண்ணையும் வாங்கியாரச் சொல்லு!” வார்த்தைகளில் வேகம் இருந்தது. “மைக்ல சொல்லியும் அவன் வரலை பாரு?”

இதுநாள்வரை ஊரில் மற்றவர்கள் அப்படிக் கொடுத்தனுப்பி, மொய் வாங்கி வரச் செய்ததை பெரிதாக எண்ணாத முத்தம்மா, இன்று விசனப்பட்டாள். அடுத்து, இதுபோல தன் அண்ணன் வேலுச்சாமிக்கு ஆள் அனுப்பித் தாய்மாமன் சீரும், மொய்யும் வாங்கிவரச் சொல்லி விடுவானோ என்று மறுகினாள். கணவனைப் பற்றி அவள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தாள். அண்ணனாவது பெருமைக்காரன் மட்டுந்தான். புருஷனோ பெருமையுடன் பிடிவாதக்காரனும் கூட! முறையாகப் பத்திரிகை வைக்கக் கிளம்பிய அன்று, “ஆமா, ஒங்கண்ணே இப்ப வெறும் பயலா இருக்கானே. முறை சீர் என்ன செய்வானாம்?” என்று நக்கலாய் அவளிடம் கேட்டது, இப்போது நினைவுக்கு வந்தது.

பின் வாசலில் நின்றிருந்த ஆதியிடம், சோற்றையும் கறிக்குழம்பையும் எடுத்துக் கொடுத்தவள், ‘விசுக்’கென்று வெளியேறினாள்.

மூதாதையர் கட்டிய வீடு. அய்யாவும் அப்பத்தாவும் வாழ்ந்த வீடு. அப்பா பிறந்த வீடு. தனது வாழ்க்கை நிகழ்ந்த வீடு. அடுத்தத் தலைமுறைக்கு இல்லையென்று கைமாறி விட்டது. பிள்ளைகளில் யாராவது ஒருவர், மற்ற பங்குகளுக்கு விலைகொடுத்து வாங்கியிருக்கலாம். தொடர் சங்கிலியின் கணு விடுபடாமல் இருந்திருக்கும். நினைப்பு மேலிட வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் போனார். சுவர்களைத் தடவிப் பார்த்தார். காரை பெயர்ந்து போயிருந்த இடத்தை விரல்களால் வருடினார். உதிர்ந்த காரைத்தூளை, உள்ளங்கையில் வைத்து ரசித்தார். பார்வை உத்திரங்களின்மேல் படர்ந்தபோது, கதவு தட்டப்பட்டது. வேலுச்சாமிக்குள் ‘மளுக்’.

எதிர்பார்த்துதான் என்றாலும், ‘குப்’பென்று வியர்த்தது. அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டார். “ஆளனுப்பிட்டானோ?”

கதவைத் திறக்காமலிருக்க முடியாது. ஆளிருப்பது எல்லோருக்கும் தெரியும். ‘ஆவது ஆகட்டு’மென்று நடந்துபோய்த் திறந்தார். வாசலில் முத்தம்மா!

“என்னண்ணே இப்டி?”

அவர் அவளை எதிர்பார்த்திருக்கவில்லை. கண்ட மாத்திரத்திலேயே அவருக்குக் கண் கலங்கியது. உடம்பு குலுங்கினார்.

“அழாதேண்ணே… ஒனக்கு ஒரு அவமானம்ன்னா, அது எனக்குந்தான். விசேஷத்துக்கு நீ வராட்டி, அந்த மனுஷன் அசிங்கப் படுத்திருவாரு. காலாகாலத்துக்கும் உன் அண்ணன் தாய்மாமன்முறை செய்யலைன்னு சொல்லிச் சொல்லியே என்னையக் காய்ச்சுவாரு!”

வேலுச்சாமி விரக்தியாகப் புன்னகைத்துக் கொண்டார். “நான் வர்றது இருக்கட்டும்மா. வெறுங் கைய எப்பிடிம்மா வீசிக்கிட்டு வர்றது? அதுவும் தாய்மாமன்!” சொல்லிக் கொண்டே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்தார்.

“இருந்தா, நீ இப்பிடியா மொடங்கிக் கெடப்பே! ஒம்மனசு எனக்குத் தெரியதாண்ணே?” கலங்கியக் கண்களைத் துடைத்துக்கொண்ட முத்தம்மா, இடுப்பு மடிப்பிலிருந்து ஒரு காகிதப் பொட்டலத்தை எடுத்தாள். “இந்தாண்ணே, இதுல முப்பாதாயிரம் ரூவா இருக்கு. இதக் கொண்டாந்து தாய்மாமன் முறைன்னு சபையில வெச்சுட்டு சாப்புட்டுட்டு வா!” வார்த்தைகள் குமுறலுடன் வெடவெடத்தன. கேவலை அடக்க முடியாமல் தடுமாறினாள். இரு கன்னங்களிலும் நீர்த்தாரைகள் வழிந்தோடின.

“நம்ம பக்கத்துல முறைசீர் செய்ய முடியாதவங்க அவமானம் தாங்காம ஊரைவிட்டு ஓடிர்றதும், கிணத்துல பாஞ்சுர்றதும், பூச்சி மருந்தைக் குடிச்சுர்றதும் வழக்கமாயிருச்சேண்ணே… வழக்கமாயிருச்சே!” இருகைகளாலும் தலையிலடித்துக்கொண்ட முத்தம்மா, மடிந்து உட்கார்ந்தாள். நெஞ்சு பிளந்து கதறல் கிளம்பியது.

Print Friendly, PDF & Email

1 thought on “மொய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *