கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 10, 2024
பார்வையிட்டோர்: 605 
 
 

(1930களில் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இரண்டாம் பாகம்

அதிகாரம் 16-17 | அதிகாரம் 17(தொடர்ச்சி…)-18 | அதிகாரம் 19-21

அதிகாரம் 17 – அணங்கோ? ஆய்மயிலோ? (தொடர்ச்சி….)

தன்னை மேனகா உற்று நோக்குவதைக் கண்ட நூர்ஜஹான் கன்றிற் கிரங்கும் தாயைப்போல அன்பும் இனிமையும் பெய்த முகத்தோடு அவளது கன்னத்தைத் தடவிக் கொடுத்து, “அம்மா! உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? இன்னமும் மயக்கமாக விருக்கிறதா?” என்று கேட்டாள்.

உடனே மேனகா ஏதோ வார்த்தை சொல்லத் தொடங்கினாள்; ஆனால், அவள் பேசியது ஒருவன் கிணற்றுக்குள்ளிருந்து பேசுதலைப்போல விருந்தது.”அம்மா! நான் ஏதோ உடம்பு அசௌக்கியப்பட்டுக் கிடப்பதாய்த் தெரிகிறது.நீ என் விஷயத்தில் காட்டும் அந்தரங்கமான அன்பையும்,படும் பாடுகளையும் காண என் மனம் உருகுகிறது. என்னைப்பெற்ற தாய்கூட இவ்வளவு அருமை பாராட்டிக் காப்பாற்றுவாளோ வென்ற சந்தேகம் உதிக்கிறது. நீ மகா உத்தமியென்பதை உன் முகமே காட்டுகிறது. ஆகையால், உன்மேல் எவ்விதமான சந்தேகங் கொள்ளவும் என் மனம் இடந்தரவில்லை என்றாலும் சில விஷயங்களை அறிந்து கொள்ள என் மனம் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறது. தயவு செய்து நான் கேட்பதைத் தெரிவிப்பாயா?” என்றாள். உடனே நூர்ஜஹான் முகமலர்ச்சி யடைந்து, “எல்லா விஷயங்களையும் சந்தோஷமாகத் தெரிவிக்கிறேன். எதை வேண்டுமானாலும் கேட்கலாம்” என்று கூறினாள். 

முற்றிலும் அந்தரங்கமான அபிமானத்தைக் காட்டிய அந்தச் சொல்லைக் கேட்ட மேனகா சிறிது ஆறுதலும் துணிவு மடைந்து, “நான் இப்போது எங்கிருக்கிறேன்? நேற்றிரவு நான் கண்ட மகம்மதியருக்கு நீ அநுகூலமாயிருப்பவளா? அல்லது, எனக்கு அநுகூலமாயிருப்பவளா? என் தேகம் இப்போது களங்கமற்ற நிலைமையிலிருக்கிறதா? அல்லது, களங்க மடைந்து, தீயில் சுட்டெரிக்கத்தக்க நிலைமையிலிருக்கிறதா?’ என்று மிகவும் நயந்து உருக்கமாகக் கேட்டாள். 

அவளது சொற்கள் மிக்க பரிதாபகரமாக விருந்தன; வாய் குழறியது. கண்களினின்று கண்ணீர் பெருகி வழிந்தது. நூர்ஜஹானது வாயிலிருந்து எவ்விதமான மறுமொழி வரப்போகிறதோ வென்று அவளது வாயையே உற்று நோக்கினாள். அந்த ஒரு நொடியும் ஒரு யுகமாய்த் தோன்றியது. இயற்கையிலேயே மேன்மையான குணமும் இளகிய மனமும் பெற்ற நூர்ஜஹான் அந்தப் பரிதாபகரமான காட்சியைக் கண்டு நைந்திளகி மேனகாவினண்டையில் நன்றாக நெருங்கி அவளை அன்போடு அணைத்து, அவளது கண்ணீரைத் தனது முந்தானையால் துடைத்து, “அம்மா! அழாதே, உனது கற்பிற்குச் சிறிதும் பங்க முண்டாகவில்லை. நீ கத்தியால் குத்திக்கொள்ளப் போனதைக் கண்டு நானே உனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினேன். உடனே நீ பயத்தினால் மூர்ச்சையடைந்து, உயிரற்றவள் போலக் கீழே விழுந்து விட்டாய். நானும் என்னுடைய அக்காளும் உன்னை எடுத்து வந்து விட்டோம். இப்போது நாம் அந்த வீட்டிலில்லை. இது மைலாப்பூரிலுள்ள என் தகப்பனாருடைய பங்களா. நீ இனி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்” என்று உறுதி கூறினாள். அந்த சந்தோஷகரமான செய்தியைக் கேட்டவுடனே மேனகாவின் தேகம் கட்டிற் கடங்காமல் பூரித்துப் புளகாங்கித மடைந்தது. நூர்ஜஹானது பேருதவியைப்பற்றி அவள் மனதிலெழுந்த நன்றியறிவின் பெருக்கினால், உள்ளம் பொங்கி யெழுந்தது. கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. தென்றலால் நடுங்கும் மாந்தளிர்போல, அவளது மேனி துடித்தது. “அம்மா புண்ணியவதி! என்னுடைய கற்பைக் கொள்ளை கொள்ள நினைத்த கள்வனிடமிருந்து என்னைக் காப்பாற்றியதன்றி, என் உயிரைக்கவர்ந்து சென்ற எமனிடமிருந்தும் அதை மீட்ட பேருபகாரியாகிய உனக்கு நான் எனது நன்றியறிவை எவ்விதம் காட்டப்போகிறேன்!” என்று விம்மி விம்மி உருக்கமாகக் கூறினாள். 

நூர்:- நன்றா யிருக்கிறதே! கரும்பைத் தின்பதற்கு வாய் கூலி கேட்பதைப்போல இருக்கிறதே இது! விலை மதிப்பற்ற கற்பினாலேயே பெண்மக்களுக்கு இவ்வளவு மேன்மையும் பெருமையும் மதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையால், ஒவ்வொரு ஸ்திரீயும் தனது உயிரைக் காட்டிலும் கற்பையே உயர்ந்ததாக மதித்து அதைக் காப்பாற்றக் கடமைப் பட்டிருக்கிறாள். நம்முள் ஒருத்தியின் கற்புக்குத் துன்பம் நேரிடுமாயின் அதை மற்றவள் தன்னுடைய துன்பமாகக் கருதி விலக்கக் கடமைப் பட்டிருக்கிறாள். அப்படிச் செய்யத் தவறுவாளானால் ஒருத்தியின் இழிவில் மற்றவளுக்கும் பங்கு கிடைக்குமென்பது நிச்சய மல்லவா! என்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொள்ள நான் எவ்வளவு தூரம் கடமைப் பட்டவளோ, அவ்வளவுதூரம் உன்னுடைய மானத்தைக் காப்பாற்றவும் நான் கடமைப்பட்டவள். நாம் உண்பதைக் குறித்து, கைக்கு வாயும், வாய்க்கு வயிறும், வயிறுக்கு எல்லா அவயவங்களும் உபசார வார்த்தை சொல்லி நன்றி செலுத்துதல்போல இருக்கிறது, இவ்விடத்தில் நாம் ஒருவருக்கொருவர் நன்று செலுத்துவது” என்றாள். 

நூர்ஜஹானது கண்ணிய புத்தியையும் உயர்ந்த குணங்களையும் ஜீவகாருண்யத்தையும் கண்ட மேனகா பெருவிம்மிதங்கொண்டு தாங்க மாட்டாமல் மெய்ம்மறந்து சிறிது மௌனமாயிருந்தபின், “ஈசுவரன், மலைபோல வந்த என் ஆபத்தை, மகா உத்தமியான உன்னுடைய நட்பைக் காட்டி, பனி போல விலக்கிவிட்டான் போலிருக்கிறது. அம்மா! முதலில் இந்த மஸ்லின் துணியை விலக்கி விட்டு; என்னுடைய புடவையை உடுத்திக் கொண்டால், எனது கவலையில் முக்காற் பங்கு தீரும். இந்தத் துணி துணியாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் ஆடையின்றி வெற்றுடம் போடிருப்பதாகத் தோன்றுகிறது” என்று நயந்து கூறினாள். 

நூர்:-“மேனகா! கவலைப்படாதே; இங்கே புருஷர் எவரும் வரமாட்டார்கள். கீழே விழுந்த உன்னை வேறு அறைக்குக் கொணர்ந்த உடன் டாக்டர் துரைஸானியை வரவழைத்தோம். அவள் வந்து நாடியைப் பார்த்தவுடன் முதலில் உனது புடவை, நகைகள் முதலியவற்றை விலக்கிவிட்டு இந்த மஸ்லின் துணியை அணிவிக்கச் சொன்னாள். அப்படிச் செய்யாவிடில், தடைபட்டு நின்றுபோன இரத்த ஓட்டம் திரும்பாதென்று கூறினாள். இன்றைக்கு முழுவதும் இதே உடையில் இருக்கவேண்டுமென்று சொல்லி யிருக்கிறாள்” என்று நயமாகக் கூறினாள். ஆனால், நூர்ஜஹான் மேனகாவுக்கு மஸ்லினை யுடுத்தி மருந்துகளை உபயோகித்து ஸோபாவில் படுக்க வைத்து, துரைஸானியையும், தனது சகோதரியையும் அவளண்டையிலிருக்கச் செய்து, தான் மேனகாவின் உடைகளையணிந்து, தனது கணவனது அந்தரங்கமான சயன அறைக்குப் போன விஷயத்தை அவளிடம் அப்போது கூறுதல் தகாதென நினைத்து அதை மறைத்து வைத்தாள். தனது கணவனுடன் தான் சச்சரவு செய்து, அவனால் துரத்தப்பட்டு ஓடி வந்தவுடன் மேனகாவை மோட்டாரில் வைத்து மூவருமாக மைலாப்பூருக்குக் கொணர்ந்ததையும், அந்நேரம் முதல் துரைஸானி பங்களாவிலேயே தம்முடன் கூடவிருந்து அப்போதே போனாளென்பதையும் தெரிவித்தாள். அம் மூவரும் தன்னைக் காப்பாற்றும் பொருட்டு செய்த காரியங்களை யெல்லாம் கேட்ட மேனகாவின் மனதிலெழுந்த நன்றியறிவின் பெருக்கை எப்படி விவரிப்பது! அவளது கண்கள் கண்ணீரைப் பெருக்கின. வாய்பேசா மௌனியாய் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளது அதிகரித்த சந்தோஷம் திடீரென்று துக்கமாக மாறியது. முகம் மாறுபாடடைந்தது. அதைக்கண்ட நூர்ஜஹான், “ஏனம்மா விசனப்படுகிறாய்? உன் விஷயத்தில் நாங்கள் ஏதாயினும் தவறு செய்தோமா? எங்கள் மேல் கோபமா?” என்றாள். 

அதைக் கேட்ட மேனகா, “ஆகா! மகா பேருபகாரிகளான உங்கள் மேல் கேவலம் சண்டாளகுண முடையோர்களே கோபங் கொள்வார்கள். நான் அதை நினைக்கவில்லை. நீங்கள், என் கற்பையும் என் உயிரையும் காத்தது எனக்கு ஒப்பற்ற பெரிய உதவி யென்று செய்தீர்கள். ஆனால், இன்னொரு காரியம் செய்திருந்தீர்களானால், அது எல்லாவற்றிலும் மேலான பரம உதவி யாயிருக்கும். என்னுடைய கற்பை மாத்திரம் காப்பாற்றியபின், என்னை மூர்ச்சை தெளிவிக்காமல், அப்படியே இறந்துபோக விட்டிருந்தால், ஆகா! அந்த உதவிக்கு இந்த உலகம் ஈடாயிராது. ஆனால், அந்த உதவியைப் பற்றி நன்றி கூற நான் உயிருடனிருந்திருக்க மாட்டேன்; என்னுடைய ஜீவன் மாத்திரம், எத்தனை ஜென்மமெடுத்தாலும் உங்களை மறந்திராது. இத்தனை நாழிகை எனது உயிர் இவ்வுலகத்தின் விஷயங்களை மறந்து எங்கேயோ சென்றிருக்கும். எனது கற்பு அழியாமல் காப்பாற்றப்பட்டதைப்பற்றி நான் அடைந்த ன்பத்தைக்காட்டிலும், என் கணவனை விட்டுப் பிரிந்ததால் இனி நான் அநுபவிக்க வேண்டியிருக்கும் நரக வேதனை எனக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. அதைக் குறித்த துயரம் இப்போதே மேலிட்டு வதைக்கத் தொடங்கிவிட்டது. நான் என்ன செய்வேன்?” என்று கூறிப் பரிதவித்தவளாய் தனது கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தாள். திரும்பவும் இரண்டொரு நிமிஷத்தில் கண்களைத் திறந்து, “அம்மா!என் விஷயத்தில் இவ்வளவு உபகாரம் செய்த குணமணியான உனது பெயர் இன்னதென்று அறியவும், உனக்கும், நேற்றிரவு என்னை வற்புறுத்திய அந்த மனிதருக்கும் என்ன உறவு முறை யென்பதையறியவும் என் மனம் பதைக்கிறது. அவைகளைத் தெரிவிக்கலாமா?” என்று நயந்து வேண்ட நூர்ஜஹான் விசனத்தோடு,”என்னுடைய பெயர் நூர்ஜஹானென்பது. ஆனால், நீ கேட்ட இரண்டாவது விஷயத்திற்கு மறுமொழிதர எனக்கு மனமில்லை. அந்த மனிதர் இதுவரையில் எனக்கு உறவினராயிருந்தது உண்மையே. நேற்றிரவு முதல் அவருக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லாமற் போய்விட்டது. ஆகையால், இப்போது அவரை நான் அன்னியராகவே மதிக்கிறேன்” என்று துக்கமும் வெட்கமும் பொங்கக் கூறினாள். 

அதைக் கேட்ட மேனகாவிற்கு அதன் கருத்தொன்றும் விளங்கவில்லை. ஊன்றி யோசனை செய்து அதன் கருத்தை அறிய முயன்றாள். களைப்படைந்திருந்த அவளது மூளை அதனால் பெரிதும் குழம்பியது. பெரிதும் ஆவலுடன், ”நூர்ஜஹான்! நீ சொல்வது இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை; அவர் உனக்கு நெருங்கிய உறவினர் இல்லையென்றால், நீ அந்த வீட்டிலிருந்திருக்க மாட்டாய். நடந்தது நடந்துபோய்விட்டது. என்னிடம் உண்மையை மறைப்பதேன்? அந்த மனிதருடைய துர் நடத்தையால் உன் மனது அவர் மீது மிகவும் வெறுப்படைந்திருப்பது நிச்சயமாய்த் தெரிகிறது. இப்போது உறவு ஒன்றுமில்லை யென்றே வைத்துக் கொள்வோம்; இதற்கு முன்னிருந்த உறவு முறைமையைத் தான் தெரிவிக்கக் கூடாதா?” என்று அன்பாக வற்புறுத்திக் கூறினாள். 

நூர்ஜஹான் வெட்கத்தினால் தனது முகத்தைக் கீழே தாழ்த்தினாள். ”அம்மா மேனகா! அந்தக் கெட்ட மனிதரை எனது உறவினரென்று சொல்லிக் கொள்ள வெட்கமாயிருக் கிறது. தவிர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அயல் மாதை விரும்பி அலையும் இழி குணமுடைய ஒரு மனிதரை ஒரு ஸ்திரீ தனது கணவரென்று சொல்லிக்கொண்டால் உலகம் நகைக்கு மல்லவா? அந்த இழிவான நிலைமையிலேயே நான் இப்போதிருக்கிறேன்” என்று கூறினாள். அதிகரித்த வெட்கத்தினாலும் துயரத்தினாலும் அவளது தேகம் துடித்தது. கண்ணீர் வழிந்தது. அவளது மனதும், கண்களும் கலங்கின. அந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்ட மேனகா, “அடடா! எனக்குப் பேருபகாரம் செய்த மனிதருக்கு நான் நல்ல பதிலுதவி செய்தேன்! ஐயோ! பாவமே! மூடத்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டு உன்னைத் துக்கத்தில் ஆழ்த்தி விட்டேனே! ஆகா!” என்று பெரிதும் பச்சாதாபமும் விசனமும் அடைந்தாள். விரைவாக எழுந்து நூர்ஜஹானது கண்ணீரைத் துடைத்துத் தேற்ற நினைத்து நலிந்த தனது மேனிக்கு வலுவைப்புக்கட்டி எழுந்திருக்க முயன்றாள். அவளது மெலிந்த நிலையில் அது அளவு கடந்த உழைப்பாய்ப்போனது. உடனே கண் இருண்டு போனது. மூளை குழம்பியது. மயக்கங்கொண்டு உணர்வற்று, அப்படியே சயனத்தில் திரும்பவும் வீழ்ந்து விட்டாள். முன்னிலும் அதிகரித்த மூர்ச்சையடைந்து பிணம்போலானாள். 

அதைக்கண்ட நூர்ஜஹான் பெரிதும் கவலைகொண்டு, அவளுக்கு எவ்விதமான தீங்குண்டாகுமோ வென்று மிகவும் அஞ்சி, தனது கணவனைக் குறித்த நினைவையும் விடுத்து அவளைத் தெளிவிப்பதே அலுவலாய்ச் செய்யத் தொடங்கினாள். திரும்பவும் மருந்தை மார்பில் தடவினாள். அவள் விழித்திருந்தபோது, உள்புறம் அருந்தும் மருந்தைக் கொடாமல்தான் ஏமாறிப் போனதை நினைத்து வருந்தினாள். அந்த முறை மேனகாவின் மூர்ச்சைத் தெளிவிக்க நூர்ஜஹான் எவ்வளவு பாடுபட்டாளாயினும் அவளது உணர்வு அன்று மாலைவரையில் திரும்பவில்லை. அப்போதைக் கப்போது மேனகாவின் கண்கள் மாத்திரம் இரண்டொரு விநாடி திறந்து மூடிக்கொண்டனவன்றி அவள் உலகத்தையும் தன்னையும் மறந்து கிடந்தாள். 

அவள் நன்றாகக் குணமடையும் முன்னர் தான் அவளிடம் அதிகமாக உரையாடி, அவள் மனதிற்கு உழைப்பைக் கொடுத்து விட்டதைக் குறித்து தன்னைத் தானே தூற்றிக்கொண்டவளாய் நூர்ஜஹான் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். அதிக மூர்க்கமாகப் பொங்கியெழுந்து வதைத்த எண்ணிறந்த நினைவுகளால், சூறாவளிக் காற்றில் அகப்பட்ட சருகைப் போல அவளது மனம் தடுமாறியது. மேன்மையும் இரக்கமுமே வடிவாய்த் தோன்றிய அந்தப் பொற்கொடி என்ன செய்வாள்! எதைக் குறித்து வருந்துவாள்! மேனகாவிற்கு வந்த விபத்தைக் குறித்து வருந்துவாளா? அன்றி, தனது கணவனது இழிகுணத்தையும் வஞ்சகச் செயலையும் நினைத்து வருந்துவாளா? தான் நல்ல கணவனை யடைந்து அது காறும் பேரின்ப சுகமடை ந்ததாக நினைத்திருந்த தனது எண்ணமெல்லாம் மண்ணாக மறைந்ததையும், தனது எதிர்கால வாழ்க்கையே இருள் சூழ்ந்த பாழ் நரகாய்ப் போனதையும் நினைத்து வருந்துவாளா? மேனகா எவ்விதமான களங்கமுமற்றிருந்தாள் என்பதை ருஜுப்படுத்தி அவளது கணவனிடம் எப்படிச் சேர்ப்பது என்பதைக் குறித்து வருந்துவாளா? தனது உயர்ந்த கல்வியாலும், அறிவாலும், புத்தியாலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் தான் தனது நாதனை இன்புறுத்தி, அதனால் தானும் இன்புற நினைத்திருந்த தனக்கு, நற்குணம், விவேகம், முதலியவற்றின் அருமையை ஒரு சிறிதும் உணராதவனும் கேவலம் அழகை மாத்திரம் கருதி அயல் வீட்டுப் பெண்களின் மீது மோகங்கொண்டு தீமைகள் இயற்றும் காமாதுரன் புருஷனாக வந்து வாய்த்ததை நினைத்து வருந்துவாளா? தான் இனி தனது ஆயுட் காலத்தை எவ்வாறு கடத்துவதென்பதை யெண்ணி வருந்துவாளா? தான் உண்ணும் கவளத்தையும் தனது புத்திரிக்கு அருமையாக ஊட்டி உயிரை போல மதித்து வளர்த்துக் கல்வி முதலிய சிறப்புகளை யுண்டாக்கி ஏராளமான செல்வத்தையும் வாரிக்கொடுத்து இன்புறும் பொருட்டு கணவன் வீட்டுக்குத் தன்னை அனுப்பிய தந்தை அந்த வரலாறுகளைக் கேட்டு எவ்வாறு பொறுப்பாரோ, அல்லது மனமுடைந்து மரிப்பாரோ வென்னும் நினைவினால் வருந்துவாளா? எதைக் குறித்து வருந்துவாள்? எதை மறந்திருப்பாள்? அத்தனை நினைவுகளும் ஒன்றன் பின் னொன்றையும், ஒரே காலத்திலும் மகா உக்கிரமாக எழுந்து அவளது மனதை அழுத்தி ஒவ்வொன்றும் முதன்மை பெற நினைத்து உலப்பியது. பல மலைப்பாம்புகள் ஒரு ஆட்டுக்கடாவின் உடம்பில் கால்முதல் நெஞ்சுவரையிற் சுற்றிக்கொண்டு தயிர் கடைவதைப்போல அது திணறிப்போம் படி அழுத்தி அதன் எலும்புகளை யெல்லாம் நொறுக்குதலைப் போல அவளது மனதை அத்தனை எண்ணங்களும் கசக்கிச் சாறு பிழிந்தன. 

அந்த நிலைமையில் அவளது சகோதரி அலிமா என்பவள் அப்போதைக்கப்போது அங்கு தோன்றி உணவருந்த வரும்படி அவளை அழைத்தனள். நூர்ஜஹான் தனக்குப் பசியில்லை யென்று சொல்லி அவளை அனுப்பிவிட்டுத் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். இரண்டொரு நாழிகைக்கொருமுறை மேனகாவின் கண்கள் திறக்கும் போது, அவளுக்கு மருந்து கொடுக்க முயன்றும், ஏதாயினும் ஆகாரம் கொள்ளும்படி அவளை வேண்டியும், அவளுக்குக் குணமுண்டாக்க தன்னால் யன்றவற்றையெல்லாம் புரிந்தவண்ணம் இருந்தாள். அவள் கண்களை மூடிய பிறகு, இவள் தனது விசனங்களான படைகளால் தாக்கப்பட்டு, அதைப் பொறாமல் தத்தளித் திருந்தாள். பூங்கொம்பிலிருந்து பூக்களும் பனித்திவலைகளும் உதிர்தலைப்போல, அவளது கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் கீழே வீழ்ந்து, பெருகி, அவளது ஆடைகளை நனைத்தன. துக்கமும், வெட்கமும் ஆத்திரமும் பொங்கி யெழுந்து வதைத்தன. தேம்பித் தேம்பி அழுது நெடுமூச்செறிந்து உயிர்சோர ஓய்வடைந்து உயிரற்ற ஓவியம் போல இருந்தாள். அன்றைப் பகல் முற்றிலும் தண்ணீரும் அருந்த நினைவு கொள்ளாமல் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்தாள். வஞ்சகனான தனது கணவன் முகத்தில் தான் இனி எப்படி விழிப்பதென்றும், அவனுடன் எப்படி வாழ்வதென்றும் நினைத்து அவனிடம் பெருத்த அருவருப்பை அடைந்தாள். தனது துர்பாக்கியத்தை நினைத்துத் தன்னையே வைதுகொண்டாள். தனது தந்தையினிடத்தில் விஷயங்களை வெளியிட்டு தனது கணவனை இழிவு படுத்தவும் அவளுடைய பேதை மனது இடங்கொடுக்க வில்லை. ஆனால் அவரது உதவியினாலேயே மேனகாவை அவளது கணவனிடம் திருப்திகரமாகச் சேர்க்க முயலவேண்டும்; தனது கணவன் குற்றத்தைக் கூடிய வரையில் மறைத்துக் குறைவுபடுத்திக் கூறுவ தென்றும், மேனகா தனது கணவனை யடைந்தவுடன், தான் விஷத்தைத் தின்று உயிரை விட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டாள். அன்றுமாலையில் டாக்டர் துரைஸானி வரவில்லை. அவள் தவறாமல் காலையில் வருவதாயும், அது வரை கவலைப்படாமல் அதே மருந்தை பிரயோகிக்கும்படியும் செய்தி சொல்லியனுப்பினாள். 

அதைக்கேட்ட நூர்ஜஹான், மேலும் துன்பக்கடலில் ஆழ்ந்தனள்; மறுநாட்காலையில் துரைஸானி வரும்வரையில், மேனகா பிழைத்திருப்பாளா வென்று பெரிதும் அஞ்சினாள். வேறு துரைஸானி யொருத்தியைத் தருவிக்கலாமா வென நினைத்தாள். ஆனால், அந்த இரகசியங்களைப் பலருக்குத் தெரிவிப்பது தவறென எண்ணினாள். இத்தகைய எண்ணிறந்த வேதனைகளில் ஆழ்ந்து அன்றிரவையும் ஊணுறக்க மின்றிப் போக்கினாள். அவளது சகோதரியும் அவளுடன் அன்றிரவு முற்றிலுமிருந்து அவளை உண்ணும்படியும், சிறிது நேரமாயினும் துயிலுக்குச் செல்லும்படியும் வற்புறுத்தி வேண்டியதெல்லாம் வீணாயிற்று. அந்தப் பயங்கரமான இரவு மெல்லக் கழிந்தது; மறுநாட் பொழுது புலர்ந்தது. மேனகாவின் உணர்வை கிரகணம்போல் மறைத்திருந்த இரவு கழிந்தவுடன், அவளது உணர்வு தெளிவடைந்து மதியும் பிரகாசிக்கத் தொடங்கியது. அவள் கண்களை நன்றாகத் திறந்து கொண்டாள். முதல் நாள் முற்றிலும் ஆகாரமின்றி இருந்தமை யால் அவளது தேகம் நிலைத்துநில்லாமல் பறந்தது. கண்கள் ருண்டன. தலை சுழன்றது. தேகம் அசைக்க வொண்ணாமல் மரத்துப் போயிருந்தது. 

அத்தகைய சமயத்தில் ஒரு மோட்டார் பைசைக்கில் வந்து அந்த அறைக்கு வெளியில் நின்றது. அடுத்த நிமிஷத்தில் டாக்டர் துரைஸானி மிகவும் சுறுசுறுப்பாக உள்ளே நுழைந்தாள். 

அவளைக் கண்டவுடன் நூர்ஜஹான் விரைந்தெழுந்து துரைஸானியை வரவேற்று ஆசனத்தில் அமரச்செய்தாள். துரைஸானி உடனே நாடி பார்க்கும் குழாயை எடுத்து மேனகாவின் மார்பு முதலிய இடங்களில் வைத்து ஆராய்ச்சி செய்து விட்டு நாற்காலியில் உட்கார்ந்தாள். ஆனால், அவளது முகம் திருப்திகரமாகக் காணப்படவில்லை. முதல்நாட் காலையில் அவள் அவ்விடத்தை விட்டுப் போன பின்னர் நிகழ்ந்தவற்றையும், மேனகாவின் நிலைமையிலுண்டான மாறுபாடுகளையும், அவள் ஆகாரமே கொள்ளாமலும், கண்களை திறவாமலும் ஒரே நிலைமையில் கிடப்பதையும் நூர்ஜஹான் அவளிடம் உடனே விரிவாய்க் கூறித் தனது அச்சத்தை வெளியிட்டாள். அதைக் கேட்டதுரைஸானி, “நான் நேற்றைய தினம் மிகவும் அருமையான மருந்தைக் கொடுத்தேன். அதனாலேயே இவள் தனது இயற்கை நிலைமையை அடைந்திருப்பாள். நீங்கள் இருவரும் சம்பாஷணை செய்ததனாலேயே இவளுடைய நிலைமை கெட்டுப்போயிருக்கிறது. அவிந்து போகும்போது விளக்குச் சுடர் துடிப்பதைப் போல இவளுடைய நாடி இப்போது மிகவும் கேவலமாக இருக்கிறது; இனியாவது இரண்டொரு நாளைக்கு இவளிடம் அதிகமாகப் பேசவேண்டாம்; இப்போது மிகவும் அருமையான ஒரு மருந்துக்கு சீட்டெழுதிக் கொடுக்கிறேன்; அதை உடனே வரவழைத்துக் கொடுங்கள்; விரைவில் தெளிவடைந்து விடுவாள். இன்று மாலையில் இவளை மோட்டார் வண்டியில் வைத்துக் கொஞ்சநேரம் கடற்கரைக்குக் கொண்டுபோங்கள். நான் தவறாமல் மாலை ஆறுமணிக்கு வருகிறேன். பயப்படவேண்டாம்” என்று கூறியவண்ணம் ஒரு காகிதத்தில் மருந்துகளின் பெயரை எழுதிக் கொடுத்து, “நான் போய்விட்டு வருகிறேன். பார்லி அரிசிக் கஞ்சியையாவது காப்பியையாவது கொஞ்சம் கொடுங்கள். ஆகாரம் அதிகமாகச் செல்லவில்லையே என்னும் கவலை வேண்டாம்” என்று சொல்லி விட்டு விடைபெற்றுக் கொண்டு எழுந்து சென்றாள் துரைஸானி. 

உடனே நூர்ஜஹான் சீட்டிற் காட்டப்பட்ட மருந்தையும் வரவழைத்து மிகவும் பாடுபட்டு மேனகாவுக்கு அருந்து வித்தாள். அதன் பிறகு நான்கு நாழிகை வரையில் அவள் நன்றாகத் துயின்று அப்புறம் கண்ணை விழித்தாள். அவளுடம்பில் புதிய மாறுபாடு உண்டாயிற்று. பசியும் களைப்பும் தோன்றின. முகம் மார்பு முதலியவிடங்களில் வியர்வை கசிந்தது; சிறிது நேரம் கழிந்தது; சயனத்தில் ஒரு நிலைமையிலிருப்பது அவளுக்கு அருவருப்பாகவும் துன்பமாகவும் தோன்றியது. அப்புறம் இப்புறம் புரண்டு படுத்து, மெல்ல எழுந்து அருகிலிருந்த திண்டில் சாய்ந்து கொள்ள முயன்றாள். அதைக்கண்ட நூர்ஜஹான், “மேனகா! நான் பிடித்துக் கொள்ளுகிறேன்; மெல்ல எழுந்து சாய்மான நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளுகிறாயா? அதில் சாய்ந்து கொண்டால் சுகமாயிருக்கும்” என்று அன்போடு கேட்க, அவள், “ஆகட்டும்” என்று தலையை அசைத்தாள். அருகிலிருந்த, மெத்தை தைக்கப்பட்ட அழகான சாய்மான நாற்காலி யொன்றைக் கட்டிலிற்கு அருகில் இழுத்தாள். அதன் கால்களில் சகடைகளிருந்தமையால், அது ஓசையின்றி எளிதில் வந்தது; உடனே மேனகா தானே எழுந்து விடுவதாய்க் கூறித் தனது உடம்பை நிமிர்த்தி எழுந்திருக்க முயன்றாள். ஆனால், தேகம் கட்டிலும் நில்லாமல் கீழே தள்ளிவிட்டது. பொத்தென்று தரையில் வீழ்ந்து விட்டாள். அதைக் கண்டு சகியாத நூர்ஜஹான் பெரிதும் திகிலடைந்து பாய்ந்து, குழந்தையை எடுப்பதைப் போல வாரி எடுத்துச் சாய்மான நாற்காலியில் விடுத்தாள். அவளின் மஸ்லின் உடையை ஒழுங்காக அணிவித்தாள். உடம்பில் கசிந்த வியர்வையைத் தனது பட்டுத் தாவணியால் துடைத்த பின்னர் அந்த அறையை விட்டு வெளியிற் சென்றாள். உடனே ஒரு பிராம்மணப் பரிசாரகன் வெள்ளிச் செம்பில் வென்னீர், பற்பொடி முதலியவற்றை உட்புறம் கொணர்ந்து, அவளுக் கெதிரிலிருந்த மேஜையைச் சுத்தம் செய்து, அதன் மீது வைத்து விட்டு வெளியிற் சென்றான். அதைக் கண்ட மேனகா திடுக்கிட்டு அவனை உற்று நோக்கி மிகவும் வியப்படைந்தாள். தன் விஷயத்தில் அந்த மகம்மதியப் பெண் அளவிறந்த அபிமானத்தையும், அன்பையும் கொண்டு செய்துள்ள ஏற்பாடுகளைக் கண்டு நன்றி சுரக்கப் பெற்றவளாய் அவளது வருகையை ஆவலுடன் எதிர் பார்த்தாள். அடுத்த நொடியில் நூர்ஜஹான் உள்ளே நுழைந்து, “அம்மா! முகத்தைச் சுத்தம் செய்து கொள்” என்றாள். 

மேனகா:- “ஆகா! என் விஷயத்தில் நீ எவ்வளவு பாடுபடுகிறாய்! என்னென்ன ஏற்பாடுகள் செய்திருக்கிறாய்! உனது மனப்பூர்வமான அன்பைக் காண என் ஹிருதயம் பொங்கி எழுகிறது. ஆனால், இத்தனையும் விழலுக் கிறைத்த நீராயிருக்கிறதே யென்றுதான் ஒரு விதமான விசனம் என்னை வதைக்கிறது. பயனற்ற இந்த உடம்பை இப்படியே மடிந்துபோக விடாமல் நீ எதற்கு இவ்வளவு உபசரணை செய்து இதை வீணிலே காப்பாற்றி என்ன செய்யப்போகிறாய்? என் உடம்பு தேறி நல்ல நிலைமைக்கு வருவதாக வைத்துக் கொள்வோம். அதன் பிறகு நான் எங்கே போகிறது? என் புருஷன் வீட்டிற்குப் போவதற்கு வழியில்லை. தகப்பனார் வீட்டிற்குப் போய் நடந்தவற்றைச் சொன்னால் அவர்கள் என் சொல்லை நம்பி என்னை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், புருஷன் வீட்டார் என்னைப்பற்றி எவ்விதமான தூஷணை சொல்லுகிறார்களோ தெரியவில்லை. ஒரு வேளை நானே உன் புருஷனிடம் ஓடிவந்து விட்டேனென்று கட்டுப்பாடாகச் சொன்னாலும் சொல்வார்கள். அவ்வளவு அவமானத்தை நானுமடைந்து என் பெற்றோருக்கும் உண்டாக்கி உயிர் வாழ்வது தகுமா? அதைக்காட்டிலும் உயிரை விட்டுவிடுவதே மேலல்லவா! அம்மா! இந்த உபசரணைகளை யெல்லாம் விடுத்து, என்னை ஒரே நொடியில் கொல்லும் விஷத்தில் கொஞ்சம் துரைஸானியினிட மிருந்து வாங்கிக் கொடுப் பாயானால் உனக்குப் பெருத்த புண்ணியம் உண்டாகும்; அதுவே பெருத்த உதவியுமாகும். எத்தனை ஜென்ம மெடுத்தாலும் அதை நான் மறக்கமாட்டேன்!” என்று நயமாகக் கூறி வேண்டினாள். அம்மொழியைக் கேட்ட நூர்ஜஹானது மனமும் கண்களும் கலங்கின. கண்ணீர் விடுத்தாள். அவளுடன் சம்பாஷித்தல் கூடாதென துரைஸானி கண்டித்துக் கூறியுள்ளது நினைவிற்கு வந்தது. என்றாலும், மேனகாவிடம் இரண்டொரு வார்த்தைகள் கூறி அவளது மனதைச் சாந்தப்படுத்தி நம்பிக்கை உண்டாக்கவேண்டுவ தவசியமென்று கருதினவளாய், “அம்மா! மேனகா! நீ சொல்லுவதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், இன்னொரு விஷயம் இருக்கிறது. இவ்விதமான விபத் தெல்லாம் உண்டாகுமென்று நாம் கனவிலும் எதிர் பார்த்தோமா? இல்லையல்லவா! அடுத்த நிமிஷத்தில் நமக்கு என்ன தீமை சம்பவிக்குமோ! அதை நாம் அறியோம்; நேற்றிரவு நீ தத்தளித்து முடிவில் எமன் வாயிலிருந்தபோது உன்னைக் காப்பாற்ற ஆண்டவன் என்னைக் கொணர்ந்து விட வில்லையா? நீங்காதது போலத் தோன்றும் பயங்கரமான விபத்தையும் நீக்கக்கூடிய ஆண்டவன் எங்கிருந்து நம்மெல்லோரையும் பாதுகாத்து வருகிறான். அவனையே முற்றிலும் நம்பி, நாம் ஒழுங்கான வழியிலே செல்வோம். பிறகு ஏற்படும் முடிவு அவனருளைப் பொருத்ததாகும். ஏதோ ஒரு நோக்கத்துடன் நம்மை விபத்தில் விடுத்தவன் அதை விலக்குவதற்கும் வழி காட்டுவான். ஆகையால் மனந்தளர விடாதே யம்மா! மேலே நடக்க வேண்டுவன வற்றைப் பற்றி அப்புறம் யோசனை செய்வோம். இப்போது உனது உடம்பை நல்ல நிலைமைக்குக் கொண்டு வருவது முக்கியமான விஷயம். நீ இப்போது அதிகமாய்ப் பேசுவதும், வருந்துவதும் கூடாதென்று துரைஸானி சொல்லியிருக்கிறாள். ஆகையால், பல்லைத் தேய்த்துக்கொள். பிராமணப் பரிசாரகர் காப்பித் தயாரித்திருக்கிறார். இந்த பங்களா மிகவும் பிரமாண்டமானது; நாங்களெல்லோரும் வசிக்குமிடம் நெடுந்தூரத்திற்கு அப்பாலிருக்கிறது. இது, நானும் என்னுடைய அக்காளும் ஏகாந்தமாயிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் சிறிய சவுக்கண்டி. இங்கே எவ்வித அசுத்தமுமில்லை. பரிசாரகர் காப்பி தயாரித்திருக்கிறார். முன்னால் அதில் கொஞ்சம் சாப்பிடு’ என்றாள். 

அதைக் கேட்ட மேனகா தனக்குக் கடவுளின் உதவி ஏற்படுமென்றும், தான் பழையபடி தனது கணவனுடன் திருப்திகரமாகச் சேர்ந்து வாழ்க்கை செய்தல் கூடுமென்றும் நம்பிக்கை கொள்ள வில்லையேனும், மருந்தைப் பருகியதனால் தனது வாய் முதலியவை அருவருப்பாகத் தோன்றின வாகையால், முகத்தை சுத்தி செய்து கொள்ள நினைத்தாள்.எதிரிலிருந்த தண்ணீரை எடுத்து வாய், முகம், கை, கால்கள் முதலியவற்றை சுத்தி செய்து கொண்டு நாற்காலியிற் சாய்ந்தாள். அவ்வாறு எழுந்து உட்கார்ந்ததனாலும், கை, கால்களுக்கு உழைப்பைக் கொடுத்ததனாலும், தேகத்தில் தண்ணீர் பட்டதனாலும் ஒரு விதமான களைப்பு மேலிட்டதனால் மயக்க மடைந்து நாற்காலியிற் சாய்ந்து உறங்கினாள். மேல் நடந்த விஷயங்களை யெல்லாம் விரிவாகக் கூறுவது மிகையாகும். 


அன்று மாலை ஐந்தேகால் மணிக்கு ஒரு மோட்டார் வண்டி அவர்களிருந்த சவுக்கண்டியின் வாசலில் வந்து நின்றது. அதில் மேனகா தனது சொந்த உடையையும் ஆபரணங்களையும் அணிந்தவளாய் வாடித் துவண்டு சாய்ந்திருந்தாள். உச்சி முதல் உள்ளங்கால் வரையில் துப்பட்டியால் தன்னை மறைத்துக் கொண்டு நூர்ஜஹான் அருகில் உட்கார்ந்திருந்தாள். வண்டி நிற்கு முன் அலிமா அங்கு வந்து ஆயத்தமாக நின்றாள். வண்டி நின்றவுடன் இரண்டு மகமதியப் பெண்களும் மேனகாவை மெல்லத் தாங்கி உட்புறம் அழைத்துப் போய் சாய்மான நாற்காலியில்விட அவள் அதில் சாய்ந்து கொண்டாள். நூர்ஜஹானது தேகம் படபடத்துத் தோன்றியது. உஸ்ஸென்று ஒரு நாற்காலியில் உட்கார்ந்தாள். மேனகாவின் மேனியில் குளிர்ந்தகடற் காற்றுப் பட்டதனாலும், வண்டியின் ஓட்டத்தினாலும் இரண்டு நாட்களாக மரத்துப்போயிருந்த அவளது தேகத்தில் சுறுசுறுப்பும் ஊக்கமும் உண்டாயின; இரத்தமும் நன்றாக ஓடத் தலைப்பட்டது. இரண்டு நாட்களாக ஆகாரங் கொள்ளாமையால் ஏற்பட்ட களைப்பு அப்போதே மேலிட்டுத் தோன்றியது. அந்த நிலைமையில் கடற்கரையில் ஒரு மனிதருக்கு நேர்ந்த விபத்தைக் கண்டதனால் அவள் மனது பொங்கி எழுந்து இன்னமும் தத்தளித்தது. அவ்விருவரது தோற்றமும் சந்தேகப்படத் தக்கதாய்க் காணப்பட்டமையால், அலிமாபி நூர்ஜஹானைப்பார்த்து என்ன விசேஷமென்று கேட்க, நூர்ஜஹான், “ஆகா! என்ன வென்று சொல்லுவேன்! நாங்கள் உலாவி விட்டு வரும்போது பாதையில் ஒருவர் மீது மோட்டார் வண்டி ஏறிவிட்டது. அடடா! எவ்வளவு இரத்தம்! பாதை யெல்லாம் சேறாய்ப் போய் விட்டது. அதை கண்டவுடன் எனக்கு மயக்கம் வந்துவிட்டது. ஏது! இனி அந்த மனிதர் பிழைக்கமாட்டார்” என்றாள். 

அதைக் கேட்ட அலிமாபி திடுக்கிட்டு அச்சங்கொண்டு, ‘நம்முடைய வண்டியா ஏறியது?” என்றாள். 

நூர்ஜஹான்,”இல்லை. வேறு வண்டி; நம்முடைய வண்டி அப்போது அருகில் வந்தது. நமக்கு ஏதாவது துன்பம் உண்டாகுமோ வென்று நினைத்து நாங்கள் வேகமாய் வந்துவிட்டோம். தவிர நியாயஸ்தலத்தார் இந்த விஷயத்தில் எங்களை சாட்சியங்களாகக் கோருவார்களானால், மேனகா கச்சேரிக்குப் போக நேரும்; அதனால் உபத்திரவம் உண்டாகு மென்றும் நினைத்து வண்டியை விரைவாக விடச் சொன்னேன். அந்த இரத்தத்தைக் கண்டவுடன் மேனகாவும் மயங்கி விழுந்துவிட்டாள். இப்போது விரைவாக துரைஸானியை அழைத்துவந்து இதனால் மேனகாவின் உடம்பில் எவ்வித விபரீதமும் ஏற்படாமல் நாம் முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டும். நம்முடைய மோட்டார் வண்டியை அனுப்பு’ என்றாள். அவள் உடனே வெளியிற் சென்று வண்டியை அனுப்பினாள். 

ஆறுமணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப்போன துரைஸானியை அதற்கு முன்னமாகவே அழைத்துவர நினைத்து, அவர்கள் தமது மோட்டார் வண்டியை ஐந்தேகால் மணிக்கு அனுப்பினார்களாயினும், துரைஸானி வரவில்லை; மணி ஆறாயிற்று . அப்போது அவள் தவறாமல் வந்துவிடுவா ளென்று நினைத்து நூர்ஜஹான் அவளது வருகையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். மேனகா தனது சுயஉணர்வுடன் இருந்தாளாயினும், அயர்வினால் வாய் திறந்து பேச மாட்டாமல் கண்களை மூடிக்கொண்டே படுத்திருந்தாள். மணி ஆறுக்கு மேலும் நகர ஆரம்பித்தது. ஆறே கால், ஆறரை, ஆறேமுக்காலும் ஆனது; நூர்ஜஹானது ஆச்சரியம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மணி ஏழு அடித்தது. வாசலில் மோட்டார் வண்டி, ‘கிர்’ றென்று வந்து நின்றது. நூர்ஜஹான் எழுந்து வந்தாள். விரைவாக உட்புறம் நுழைந்த துரைஸானி, “நூர்ஜஹான்! மன்னிக்க வேண்டும். உன்னுடைய வண்டி ஐந்தரை மணிக்கு முன்னாகவே வந்து விட்டது. நான் புறப்படப்போன சமயத்தில் மிகவும் ஆபத்தான நிலைமையில் ஒருவர் கொண்டுவரப்பட்டார்; ஆகையால் நான் வரக்கூடாமல் போய்விட்டது.அவர்மேல் மோட்டார்வண்டி ஏறிவிட்டதாம். அவர் பிழைப்பாரோ மாட்டாரோவென்னும் நிலைமையில் வந்தார்; எங்கள் வைத்திய சாலையில் தலைமை உத்தி யோகஸ்தரான துரை உடனே அந்த மனிதருக்குச் செய்ய வேண்டிய சிகிச்சைகளைச் செய்தார். அவருடன் நானும் கூட எப்போதும் இருக்க வேண்டும் ஆகையால் இதற்குமுன் வரக்கூடாமல் போய்விட்டது. இந்தப் பெண்ணுக்கு உடம்பு எப்படி இருக்கிறது? அவசரமாக வண்டி அனுப்பினாயே” என்று சொல்லிக் கொண்டே மேனகாவின் நாடியைச் சோதனை செய்தாள். 

அப்போது நூர்ஜஹான், “எவ்விடத்தில் வண்டி ஏறியது?” என்றாள். 

துரை:- கடற்கரைப் பாதையில் சென்னை துரைத்தனத் தாரின் சர்வகலாசாலைக் கெதிரில் ஐந்து மணிக்கு -என்றாள். 

நூர்:- அவர் பிழைத்தாரோ இல்லையோ? 

துரை:- ஏது! பிழைப்பது சந்தேகம்! உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் போய்விட்டது! நாளைக்குக் காலையிலேதான் எதையும் நிச்சயமாகச் சொல்லக் கூடும். அதிருக்கட்டும். இந்தப் பெண்ணின் உடம்பு இவ்வளவு படபடத்திருப்பதன் காரணமென்ன? நான் சொன்னபடி கடற்காற்றிற்கு அழைத்துப் போனாயா? 

நூர்:- ஆம்! அழைத்துப்போனேன். அதனால் உடம்பு சிறிது தெளிவடைந்தது. ஆனால் நீங்கள் இப்போது குறித்த விபத்தை நாங்கள் நேரில் கண்டோம். அங்கே ஓடிய இரத்த வெள்ளத்தைக் கண்டு மேனகா மூர்ச்சித்து விட்டாள். இங்கே வந்தவுடன் மருந்தை உபயோகித்தேன். இப்போது சிறிது குணமாயிருந்தாலும் அந்தப் படபடப்பு மாத்திரம் இன்னமிருக்கிறது. இதனால் ஏதாவது துன்பம் சம்பவிக்குமோ வென்று உங்களை சிறிது முன்னாகவே வரவழைக்க வெண்ணி வண்டி யனுப்பினேன். 

துரை:- அப்படியானால் அந்த மனிதரின் மேல் ஏறிய வண்டி யாருடைய தென்பது உங்களுக்குத் தெரிந்ததா. 

நூர்:- இல்லை. அந்த வண்டி மிகவும் வேகமாய்ப் போய் விட்டது. நாங்களும் உடனே வந்து விட்டோம். 

அப்போது துரைஸானி தனது கையிலிருந்த ஒரு மருந்தை மேனகாவின் இமையில் தடவிவிட்டு, “மேனகா! மேனகா!” வென்று இரண்டு முறை கூப்பிட, அவள் உடனே தனது கண்களைத் திறந்து கொண்டு மெல்ல, “ஏன்” என்றாள். 

துரை:- ஏதாவது ஆகாரம் சாப்பிட்டாயா? – என்றாள்.

மேனகா மெதுவாக, “இல்லை” என்றாள். 

துரைஸானி, “இனிமேல் ஆகாரம் சாப்பிடாமல் இருப்பது பிசகு. வெறும் பாலாகிலும் கொஞ்சம் சாப்பிடத்தான் வேண்டும்; ஆகாரமில்லாமலேயே இந்தக் களைப்பு தோன்றி யிருக்கிறது; நூர்ஜஹான் பால் தயாராக இருந்தால் கொஞ்சம் வரவழை” என்றாள். 

அடுத்த நிமிஷம் காய்ச்சப்பட்ட நல்ல பசுவின் பால் வந்து சேர்ந்தது. துரைஸானி அதைக் கையில் எடுத்துக்கொண்டு மேனகாவின் வாய்க்கருகில் கொண்டுபோய், “மேனகா வாயைத் திற” என்றாள். அவள் கண்ணைத் திறவாமலே வாயைத் திறந்தாள். உடனே துரைஸானி பாலில் சிறிது அருந்துவித்தாள். “சரி! இதுபோதும்! நாளைக்குள் உடம்பு குணமடைந்துவிடும். இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும். இன்று ராத்திரி முழுவதும் அந்த மனிதருக்கருகில் இருந்து கவனிக்க ஒரு தாதியை அமர்த்தவேண்டும். நான் போகிறேன். நாளைக்குக் காலையில் நான் இங்கு வரவேண்டுமானால் ஆளனுப்பு” என்று சொல்லிக்கொண்டு வாசலை நோக்கி நடந்தாள். 

நூர்:- அப்படியே செய்கிறேன். அந்த மனிதர் யாரென்பது தெரிந்ததா? என்றாள். 

துரை:- ஆம் தெரிந்தது; அவர் தொளசிங்கப்பெருமாள் கோவில் தெருவிலுள்ள ஒரு வக்கீலாம், பிராமண ஜாதியைச் சேர்ந்தவராம். அவருடைய பெயர் என்னவென்றோ சொன்னார்கள். (சிறிது யோசனை செய்து) ஆம், ஆம். வராகசாமி ஐயங்காராம் – என்றாள். அந்த சொல்லைக்கேட்ட மேனகா, “ஐயோ! என் புருஷனல்லவா!” என்று அலறிக் கொண்டு நாற்காலியை விட்டு விசையாக எழுந்தாள். நூர்ஜஹானும் துரைஸானியும் முற்றிலும் திகைப்படைந்து அவளிடம் ஓடிவந்தார்கள். 

அதிகாரம் 18 – டம்பாச்சாரி விலாசம்

நண்டுக்குத் திண்டாட்டம்; நரிக்குக் கொண்டாட்டம்” என்று ஜனங்கள் ஒரு பழமொழியை வழங்குதல் உண்டு. அவ்வாறு வராகசாமி வண்டியில் அறைபட்டு, முழங்காலை ஒடித்துக் கொண்டு, வைத்தியசாலையிற் கிடந்து உயிருக்கு மன்றாடிய தருணத்தில், அவனது அரிய சகோதரிமாரிருவரும் சாமாவையரும் அவனுக்கு மறுகலியாணம் செய்வதற்குரிய ஏற்பாடுகளையும் அவன் வீட்டிற்குத் திரும்பி வருவதற்குள் பங்களாவை வாங்கிக்கொண்டு அதற்குப் போய்விடுவதற்குரிய காரியங்களையும் செய்யத் தொடங்கினர். வராகசாமி அவசியம் பிழைத்துக்கொள்வானென்றும், பத்துப் பதினைந்து நாட்களில் அவனைப் பங்களாவிற்கு அழைத்துவந்து விடவேண்டு மென்றும் அவர்கள் நினைத்தனர். வராகசாமி வீட்டிலிருந்தால் அவன்பொருட்டு ஒவ்வொரு நாளும் இரண்டு முறை சமையல் செய்வதில் அப்பெண்டீர் தமது பொழுதைப் பெரும்பாலும் போக்குவர். இப்போது அவனில்லாமையால் விடுமுறை பெற்றவர் போல, தாமே அரசாய்க் காரியங்களை நடாத்தி மூன்று நாட்களுக் கொருமுறை சமையல் செய்வதும், பட்சணம் பலகாரங்களைத் தயாரித்துத் திண்பதும், சாம்பசிவம், கனகம்மாள் முதலியோருக்குச் சென்னையில் நேரிட்ட துன்பங்களைப்பற்றிப் புரளிசெய்து கைகொட்டி நகையாடு வதும், பங்களாவில் கலியாணத்தை ஆடம்பரமாகச் செய்வது பற்றி சாமாவையரிடம் வாதுகள் செய்வதும், வண்டியில் அறைபட்ட வராகசாமியின் மூடத்தனம் குறித்து ஏளனம் செய்வதும் வேலைகளாகச் செய்து தமது பொழுதை நித்திய கலியாணமாகப் போக்கிக் கொண்டிருந்தனர். 

சாமாவையரோ தமது சொந்த நலத்தைக் கருதாது, அவர்களது நன்மையையே மனதிற் கொண்டவரைப்போல நடித்தாராயினும், தம்மிடமிருந்த ஒன்பதினாயிரத்தைந்நூறு ரூபாயையும் அப்படியே தமக்கு அருப்பணம் செய்து கொள்ள நினைத்தார். பங்களாவை தமது பேரில் விலைக்கு வாங்கி சந்தேகத்திற்கு இடமின்றி அவர்களை ஐந்தாறு மாதகாலம் அதில் குடியிருக்க விடுத்து, அதற்குள் அவர்களிடம் ஏதாவது முகாந்திரத்தை முன்னிட்டு சண்டையிட்டு பிரிந்துபோய், வக்கீல் மூலமாக நோட்டீசனுப்பி அவர்களை பங்களாவி லிருந்து வெளியேற்ற நினைத்திருந்தார். நிற்க, அவரது சொந்த ஊராகிய கோடாலிக் கறுப்பூராரான தமது நண்பர் ஒருவரது பெண்ணை வராகசாமிக்கு மறுமணம் புரிந்து விட்டு அதனால் ஏதாவது பொருள் சம்பாதித்துக் கொள்ளவும் நினைத்திருந்தார். 

வராகசாமி வைத்தியசாலைக்குச் சென்று ஒரு வாரமானது. கும்பகோணத்தில் குடியிருந்த சம்பந்தியிடம் சென்று, முகூர்த்த நாளை நிச்சயித்துக் கொண்டு, நாகைப்பட்டணம் போய் பங்களாவை விலைக்கு வாங்கிக் கொண்டு, விரைவில் வந்துவிடும்படி பெருந்தேவியம்மாள், கோமளம்மாள் ஆகிய இருவராலும் சாமாவையர் அனுப்பப்பட்டார். அவர், சென்னையிலிருந்து புறப்படும் ரயிலில் அன்றிரவு ஏறி மறுநாட் காலையில் கும்பகோணம் வந்து சேர்ந்தார். அவர் தமது வருகையைப்பற்றி முன்னாகவே தமது ஆப்த நண்பரான சம்பந்திக்குக் கடிதத்தின் வாயிலாக அறிவுறுத்தி யிருந்தார். ஆகவே, சம்பந்தி வரதாச்சாரியார் சாமாவையரது வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். 

வராகசாமியின் முதல்மாமனாரான சாம்பசிவையங்காரது குணத்தையும், முதல் மனைவியான மேனகாவின் குணத்தை யும் நமது வாசகர்கள் நன்றா யறிவார்களல்லவா. 

அவனுக்கு இரண்டாவது மாமனாராக வரப்போகும் வரதாச்சாரியாரின் நிலைமை, குணம் முதலியவற்றையும், மேனகாவிற்கு பதிலாக வரப்போகும் நாட்டுப்பெண் பங்கஜவல்லியின் அழகு, குணம் முதலியவற்றையும் அறிந்துகொள்ள, நமது வாசகர்கள் அவாவுவது இயற்கையே. ஆகலின், அவர்களைக் குறித்த சில விவரங்களை இங்கு கூறுவது அவசியமாகிறது. 

கும்பகோணத்திற்கு அருகில் ஓடும் கொள்ளிட மென்னும் ஆற்றங்கரையின் மீது கோடாலிக் கறுப்பூர் என்று ஒரு சிறிய ஊரிருக்கிறது. அதுவே நமது சாமாவையர் திருவவதரித்த புண்ணிய ஸ்தலமாகும். அந்த ஸ்தலத்தில் வரதாச்சாரியார் என்னும் பெயரைக் கொண்ட ஒரு சீமானிருந்தார். அவருக்கும் சாமாவையருக்கும் இரகசியமான பல காரணங்களால், ஆழ்ந்த நட்பு ஏற்பட்டு நெடுநாளா யிருந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தது. அந்த வரதாச்சாரியாரே இப்போது வராகசாமிக்கு இரண்டாவது மாமனாராக வர விருப்பங்கொண்டவர். அவரை பெரிய அகத்து (வீட்டு) வரதாச்சாரி என்று யாவரும் அழைப்பது வழக்கம். அவரது முன்னோர் மிகுந்த செல்வவந்தராயும், ஏராளமான விலையுயர்ந்த நிலம், கால் நடைகள் முதலியவற்றை உடையோராயும், அவ்வூருக்கே தலைவராயும், ஆசார ஒழுக்கங்களில் இணையற்றவராயும் இருந்தனராம். அவ்வளவு பெருத்த செல்வமும், அவரது பாட்டனார் காலத்திலேயே, “செல்வோம்” என்று சொல்லிக் கொண்டு போய்விட்டதாம். அவர் கும்பகோணத்தில் தனலட்சுமி என்ற ஒரு அழகிய தாசியினிடம் சரணம் புகுந்தமையால், அவரது வீட்டிலிருந்த தனலட்சுமியும் கும்ப கோணத்திற்குப் போய்விட்டாள். அவளிடம் அவருக்கிருந்து ஆசையை இவ்வளவு அவ்வளவென்று அளவிட்டுக் கூறுதல் முடியாத காரியம். அவரது கடைசிக் காலம் வரையில் அந்த மோகம் அதிகரித்துக் கொண்டே வந்ததன்றி அது ஒரு சிறிதும் குறையவில்லை. தாம் இறக்குந் தருணத்தில் அவளது மடியில் தலையை வைத்துக்கொண்டு, உயிரை விட வேண்டுமென்பது அவருடைய கடைசி வேண்டுகோள். அந்தப் புண்ணியவதி அதை அவருடைய விருப்பின்படி நிறைவேற்றி வைத்தாள். அவருடைய புத்திரர் (வரதாச்சாரியாரின் தந்தை) நன்றாகப் படித்த மேதாவி; மகா வைதிகர்; தந்தை எவ்வளவுக் கெவ்வளவு தனலட்சுமியின் மீது வாஞ்சை வைத்தாரோ அவ்வளவுக் கவ்வளவு புத்திரர் ஊரிலுள்ள ஜனங்களின் மீது அன்பை வைத்து மகா குணசீலகுணமுடையவரென்று நற்பெயரெடுத்தார். அவரது காலத்தில் அரைவயிற்றுக்குப் போதுமான வருமானமுடைய நிலமும், பெரிய மாடி வீடு ஒன்றும் மிகுதியாய் நின்றன. எதை இழக்கினும் தமது மாடிவீட்டை மாத்திரம் இழக்க மனமற்றவராய் அவர் அதிலேயே குடியிருந்து ஊர் ஜனங்களால் ஆதரிக்கப் பெற்று, தமது காலத்தை நல்ல காலமாய்க் கடத்தினார். அவர் தமது புத்திரரான வரதாச் சாரியை வைதிகத் துறையிலேயே திருப்பிவிட எவ்வளவு பாடுபட்டாராயினும் அவர் பாட்டனாரின் குணத்தைக் கொண்டவரா யிருந்தார். அவர் தந்தைக்குத் தெரியாமல், கும்பகோணத்திற்குப் போய் இங்கிலீஷ் பள்ளிக் கூடங்களில் பயின்று, எண்ணிறந்த கெட்ட நண்பர்களின் தொடர்பினால், செய்யத்தகாத காரியங்களை யெல்லாம் செய்து கெட்டலைந்து, பரீட்சைகள் ஒன்றிலேனும் தேறாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கிழவரது கடைசி விருப்பம் வரதாச்சாரிக்கு ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து வைத்துவிட்டுப் போக வேண்டு மென்பதாகும். அவர் விண்ணுலக மடைந்தார். புத்திர சிகாமணி, உலக விஷயம் யாவற்றையும் அறிந்தவரா யிருந்தார். ஆனால், எத்தகைய தொழிலையும் செய்து ஜீவனஞ் செய்ய வகையறியாது தவித்தார். தந்தையைப் போலப் பொருள்தேட அவர் வைதிகரல்லர்; வெளியூர்களில் சர்க்கார் உத்தியோகம் பெற, இங்கிலீஷில் தக்க திறமையும் பட்டப்பேறு மில்லை. ஆகையால், அவர் எதை போஜனஞ் செய்தார்? தம்முடைய வீட்டிலேயிருந்து வீட்டையே போஜனஞ்செய்ய ஆரம்பித்தார். வீட்டை அடமானம் வைத்து, பணத்தில் ஒரு பாகத்தை வைத்துக் கொண்டு வெளி வேஷம் போட ஆரம்பித்தார். அவரது ஆசையோ ஆகாயத்தை அளாவியது. தாம் ஏழை யென்பதை அவர் நம்பவே இல்லை. பிறர் அவ்வாறு குறித்துக் கூறியதையும், அவர் கடுமையாகக் கண்டித்து வந்தார். ஆகையால், அவருக்கு அவ்வூரார் எத்தகைய சிறிய உதவியும் செய்ய முன் வரவில்லை. தாம் பெரிய அகத்து வரதாச்சாரியார் என்பதை அவர் மறக்கவே இல்லை. அவர் பெரிய அகத்தில் குடியிருந்ததன்றி,  அவர் மனதிலும் பெரிய அகம் குடிகொண்டிருந்தது. அவர் எப்போதும், ஒரு சாண் அளவு அகன்ற ஜரிகையுள்ள வஸ்திரங்களை அணிவார். வெள்ளிப் பூண் கட்டப்பட்ட வழுவழுப்பான கருங்காலித் தடி யொன்றும்,இங்கிலீஷ் சமாச்சாரப் பத்திரிகையும் அவரது கையில் எப்போதும் இருந்தன. காலில் உயர்ந்த ஜோடு அணியாமல் காலைக் கீழே வைக்க மாட்டார். அவருடைய சிவப்புத் தோலும் மடிப்புத் தொந்தியும் அவர் பெரிய மனிதர் என்று பொய் சாட்சி கூறின. அவர் எதைச் சொன்ன போதிலும் அழுத்தந் திருத்தமாகவும், அதற்குமேல் அப்பீலில்லை யென்று நினைத்தும் பேசுவார். அவர் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் முதலிய தேசங்களின் விஷயங்களைப் பற்றிப் பேசுவாரன்றி, சென்னை கும்பகோணம் முதலிய ஊர்களின் செய்தியைப் பேசுதல் தமக்குச் சிறப்பல்லவென்று கருதினார். அவரது உண்மை மதிப்பை உள்ளபடி உணர்ந்த அவ்வூர் ஜனங்களிடம் அவரது சரக்கு அதிகமாக விற்பனையாக வில்லை. ஜனங்கள் அவரை வரதாச்சாரி யென்பதற்குப் பதிலாக டம்பாச்சாரி என்ற பெயரால் குறித்தனர். 

அவருக்கு வாய்த்த மனைவியோ, அவரைவிடப் பதின்மடங்கு தேர்ச்சிபெற்ற பகல் வேஷக்காரியாயிருந்தாள். அவள் எப்போதும் வாசற் கதவைச் சாத்தித் தாளிட்டுக்கொண்டு உட்புறத்திலேயே இருப்பாள். அயல் வீட்டுப் பெண்டீர், “ஏன் இப்படிச் செய்கிறாய்?” என்று கேட்டால், பெண்பிள்ளைகள் தமது வீட்டின் படியைவிட்டு அப்புறம் போவது கற்புக்கு அழகல்லவென்று அவர்களுக்குப் புராணங்களிலிருந்து பதிவிரதைகளின் வரலாறுகளைச் சொல்ல ஆரம்பிப்பாள். ஆனால், உண்மைக் காரணம் அதுவன்று. அவள் காதறுந்த ஓர் ஊசியின் பொருட்டுக் கூட, தனது கற்பையும், ஆத்மாவையும், அடகு வைக்கத் துணிந்த உத்தமி. அவள் வெளியில் வராத காரண மென்னவெனில், அவளுக்கிருப்பவை விலையுயர்ந்த இரண்டு பட்டுப்புடவைகளே யாகும். அவை, வீட்டை விட்டுவெளிப்படும்போது மாறி மாறி யணியப்படுபவை. வீட்டிற்குள் ஒரு கந்தையால் இன லை மறைவு காய் மறைவாய் தனது உடம்பை மறைத்துக் கொண்டிருப்பாள். அவளுடைய அடுப்பு மூன்று நாளைக்கொருமுறை புகையும். ஆனால் காலை வேளையில் வீட்டின் வாசலில் சாணித் தண்ணீர் தெளிக்க வரும்போது நூறு ரூபாய் விலை மதிப்புள்ள பட்டுப்புடவை, சில ஆபரணங்கள் முதலியவற்றை அணிந்திருப்பாள். பெருத்த வெள்ளிச் செம்பில் சாணித் தண்ணீர் கொணர்ந்து, சந்திரமதி காலகண்டையர் வீட்டில் வேலைசெய்ததைப் போல, அவ்வாறு செய்வது தனது மேன்மைக்குக் குறைவாயினும் கால வித்தியாசத்தால் அதைச் செய்ய நேரிட்டதென்பதை தனது முகத்தின் வருந்திய தோற்றத்திற் காட்டித் தண்ணீர் தெளிப்பாள்.வரதாச்சாரியார் பிற்பகல் வேலைகளில் நடைத் திண்ணையில் திண்டில் சாய்ந்துகொண்டு தெருவில் செல்வோரை அமர்த்தலாகப் பார்த்துக்கொண்டிருப்பார். அவருடைய மனைவி அவருக்கு வெள்ளிக் கிண்ணியில் சிற்றுண்டி கொணர்ந்து கொடுப்பாள். அதற்குள்ளிருக்கும் சிற்றுண்டியை எவரும் பார்க்கா வண்ணம் அவர் மறைத்துச் சாப்பிடுவார். அவர் நல்ல உயர்ந்த பட்சணங்களைச் சாப்பிடுவதாக ஜனங்கள் முதலில் நினைத்துக்கொண்டனர். அவர் சாப்பிடுவ தென்னவென்பதை அறிய ஆவல் கொண்ட எதிர்த்த வீட்டு இராஜகோபாலன் ஒரு நாள் ஒளிந்திருந்து, அவர் மனைவி வெள்ளிக் கிண்ணியை வைத்துவிட்டுப் போனவுடனே தடதடவென்று வரதாச்சாரியிருந்த இடத்திற்கு வந்து, “இன்றைக்குப் பத்திரிகையில் என்ன விசேஷம்?” என்று கேட்ட வண்ணம் கிண்ணியைப் பார்த்து விட்டான். வரதாச்சாரி திகைத்து அதை மறைக்க முயன்றது பலியாமற் போயிற்று. வறுக்கப்பட்ட பத்துப் பதினைந்து மொச்சைக் கொட்டைகள் கிண்ணியிலிருந்ததைக் கண்டு எதிர்த்த வீட்டுக் காரன் ஏமாறிப் போய்த் திரும்பினான். அவ்விஷயம் அன்று மாலைக்குள் ஊர் முற்றிலும் பரவியது. அன்றுமுதல் வரதாச்சாரியின் மனைவிக்கு ஜனங்கள் மொச்சைக்கொட்டை யென்று பெயரிட்டனர். 

இவ்விரு வேதசாரிகளும் ஒத்துழைத்துப் பல வருஷங்கள் ம்மாதிரி நாடகம் நடித்து வந்தனர். அவர்களுக்கு ஒரு சிறிய பெண்ணிருந்தது. நமது கதை நிகழ்ந்த காலத்தில் அதற்கு வயது பதின்மூன்றென்று அவர்கள் ஜாதகம் தயாரித்து வைத்துக் கொண்டிருந்தனர். தந்தையும் தாயும் செயற்கை வேஷதாரிகளா யிருந்ததைப்போல பெண் இயற்கையிலேயே வேஷதாரியாய் ஜனித்திருந்தது. அதன் உடம்பு சிவப்பாயும், குள்ளமாயும், கரணை கரணயான குண்டுக் கைகளையும், கால்களையும் பெற்று பெருச்சாளியைப் போலத் திணிந்த அங்கங்களைக் கொண்டிருந்தது. அதன் தோற்றம் உரலுக்குச் சேலை உடுத்தியதைப்போலிருந்தது. உடம்பின் கீழ்ப்பாகம் இளமையையும் மேல்பாகம் முதிர்ச்சியையும் காட்டின. அதன் முகம் இருபத்தைந்து வயதான தருணியின் முகம்போல முற்றிப்போயிருந்தது. அதற்கு இன்னம் கலியாணம் ஆக வில்லை. அந்தப் பெண்ணை பி.ஏ., பி.எல்., பட்டம்பெற்ற ஒரு பிள்ளைக்குக் கொடுக்க வேண்டுமென்பது மொச்சைக் கொட்டை யம்மாளின் விருப்பம். அத்தகைய மணமகன். கிடையாவிடின், டிப்டி கலெக்டர் பிள்ளைக்காயினும், அல்லது, நூறுவேலி நிலத்திற்கதிபதியின் பிள்ளைக் காயினும், கொடுக்கவேண்டுமென்பது டம்பாச்சாரியின் நினைவு. ஆனால், அவ்வூர்ப் பெண்டீரான கோடிவீட்டுக் கோமாளி யம்மாளும், நடுவீட்டு நாச்சியாரம்மாளும், அடுத்த வீட்டு அலர்மேலம்மாளும் தாமரைக்குளத்தில் நீராடுகையில், இவ்விஷயங்களைக் குறித்து சந்தேகமறப் பேசிக்கொண்டனர். 

கோமாளி:-ஏனடி! நாச்சிக்குட்டி! மொச்சக்கொட்டை யகத்துப் பெண்ணும் என்னுடைய பிள்ளை குப்பனும் பார்த்திப வருஷப் பஞ்சத்திலே ஒரே ராத்திரியிலே பிறந்தவர்கள். குப்பனுக்கு இப்போதுதான் ஜாதகம் பார்த்தோம். அவனுக்கு இருபத்துநான்கு வயதாகிறது, இந்த பங்கஜவல்லிக்குப் பதினாலு வயதாமே! என்ன அதிசயமடி! – என்று தனது வலது கையை மோவாயில் மாட்டி வியப்புக்குறி காட்டிக் கூறினாள். 

நாச்சி:- அடி பைத்தியமே! போ; அது இருசியென்பது உனக்குத் தெரியாதா? நூறு வயசானாலும் அது ருதுவாகாது. 

அலர்:- அதைப் பார்த்தாலே கடுவன் பூனை மாதிரி பயமாயிருக்கிறதே! அதை எந்தக் கட்டையிலே போவான் தாலிக்கட்டித் தடுமாறி நிற்கப்போறானோ! வண்ணாரச் சுப்பிக்கு அது ஒரு நாள் இடுப்புத் துணியை விழுத்துப் போட்டதாம். அது ஆணுமில்லையாம், பெண்ணுமில்லை யாம்; அலியாம்-என்றாள். 

இவ்வாறு அவ்வூர் மகளிர் பங்கஜவல்லியைப் பற்றி வம்புகள் பேசிவந்தனர். அந்தப் பெண்ணின் தோற்றமும் அதற்கு ஒத்ததாகவே இருந்தது. அவள் பிறந்ததும் உண்மையில் இருபத்து நான்கு வருஷங்களாயின. அவள் பிரவிடை யாகவுமில்லை. புருஷன் என்ற நினைவையே அது கொள்ளவு மில்லை. அவ்வதந்தி ஊர்முற்றிலும் பரவியது. அவ்வூரார் எவரும் தமது புத்திரற்கு அந்தப் பெண்ணை மணம் புரிவிக்க நினைக்கவில்லை. அந்த இரகசியத்தை அறியாத அயலூரார் எவரேனும் பெண்ணைப் பார்க்க வருவாராகில் உடனே விஷயம் அவரது காதிற்கு எட்டிவிடும். வந்த வண்டியிலேயே திரும்பிப் போய்விடுவர். அவ்வூர் ஜனங்கள் இந்த உண்மையை யறிந்திருந்தன ரென்றாலும் வரதாச்சாரியார் அவர் மனைவி ஆகிய இருவரின் செருக்கையும் வேஷத்தையும் கண்டு மிகவும் அருவருப்பைக் கொண்டு, அவர் விஷயத்தில் பலவாறு புரளி செய்யத் தொடங்கினர். பிரவிடையான பெண்ணை அவர்கள் கலியாணம் செய்து கொடுக்காமல் வைத்துக்கொண்டிருப் பதாகப் பறையடிப்பதுபோல, ஓயாமல் அதையே கூறி, அவர்களை ஜாதியைவிட்டு விலக்கி வைத்தனர். எவரும் அவர்களது வீட்டிற்குப் போவதையும் நிறுத்திவிட்டனர். ஊரில் நடக்கும் நன்மை தீமைகளுக்கு அவரை அழையாமலும், அவரைப் பந்தியில் வைத்துக் கொண்டு போஜனம் செய்யாமலும் ஒதுக்கி விட்டனர். 

அந்த அவமானத்தைப் பொறாமல், அவர் அவ்வூரை விட்டு, கும்பகோணத்தில் வந்து குடியேறினார். நமது சாமாவையர் இந்தக் குடும்பத்திற்கு அநுகூலமான நண்பராத லால், அவர் வரதாச்சாரியாருக்கு ஒரு உத்தியோகமும் செய்து வைத்தார். என்ன உத்தியோகம்? சாமாவையருடைய எஜமான் நைனா முகம்மதுவின் கம்பெனியில் சீமைத்துணிகள் வியாபாரம் நடத்தப்பட்டது என்பதை இவ்விடம் குறிக்க வேண்டியிருக்கிறது. அந்தக் கம்பெனிக்கு வரதாச்சாரியார் கும்பகோணத்துக்கு பிரதி நிதியாக (ஏஜென்டாக) நியமிக்கப் பட்டார். அதற்குச் சம்பளம் கிடையாது. எந்த வியாபாரிகளா யினும் துணிகள் தேவை யானால், அந்த உத்தரவை வரதாச்சாரியார் வாங்கி சென்னைக்கு அனுப்பினால், அதில் நூற்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் அவருக்கு லாபம் கிடைத்தது. அதில் மொத்தத்தில் மாதம் முப்பது ரூபா வரையில் வந்து கொண்டிருந்தது. வரதாச்சாரியார் அத்துடன் நிற்கவில்லை. 

அவர்தமக்கு மாதம் ஒன்றுக்கு ரூபா 500 – சம்பளமென்றும் அந்தக் கம்பெனியில் ஜனங்கள் பணத்தொகைகளை வட்டிக்குக் கொடுத்தால் நூற்றுக்கு இரண்டு வட்டி கிடைக்குமென்று சொல்லிக்கொண்டு வந்தார். அவர், அவருடைய மனைவி ஆகிய இருவரின் வெளிப்பகட்டைக் கண்டு பலர் ஏமாறிப் போய், தாம் எவ்வளவோ பாடுபட்டு நெடுங்காலமாய்ச் சேர்த்து வைத்திருந்த பணங்களை அவரை நம்பி அவரிடம் கொடுத்திருந்தனர். அவர்கள் ரகசியமாகச் சேர்த்து வைத்திருந்த சிறுவாடுகளை வரதாச்சாரியார் சென்னைக்கு அனுப்பாமல் தாமே பலகாரம் செய்துவிட்டு அவர்களுக்கு வட்டிப்பணத்தை மாத்திரம் காலத்தில் கொடுத்து எண்ணிறந்த ஏழைகளை வஞ்சித்து தமது வயிற்றை வளர்த்து வந்தார். 

நமது சாமாவையர் இவருடைய பெண்ணைத்தான் வராகசாமிக்குக் கட்டிவிட நினைத்து, இவரைப் பற்றி பெருந்தேவியம்மாள் கோமளம்மாள் ஆகிய இருவரிடமும் ந்திரன் சந்திரன் என்று பெரிதும் புகழ்ந்து கூறி அவர்களை ஏமாற்றிக்கொண்டு வந்தார். இவரிடத்திற்கே சாமாவையர் இப்போது வந்து சேர்ந்தார். 

சாமாவையர் வந்து உள்ளே நுழைந்த சமயத்தில் வரதாச்சாரியார், ஒரு தோசைக்காரக் கிழவி நாற்பது வருஷ காலமாக இடியாப்பம் சுட்டு விற்றுச் சேர்த்து வைத்திருந்த தொகையான ரூபா ஐந்நூறை அவளிடத்திலிருந்து அபகரித்துக் கொண்டிருந்தார். அவள் அவ்வளவு பெருத்த தொகையை வ்வித தஸ்தாவேஜு மில்லாமல் அவரை நம்பி அவரிடம் கொடுப்பதைப் பற்றி ஒரு சிறிது அஞ்சி பணத்தைக் கொடுக்கத் தயங்கியிருந்த தருணத்தில் சாமாவையர் ஒரு பெருத்த சாவகாரி வருவதைப்போல ஆடம்பரமாக உள்ளே நுழைந்தார். அவரைக் கண்ட வரதாச்சாரியார் எழுந்து மரியாதையாகவும் அன் போடும், “வாருங்கள் வாருங்கள்’ என்று கூறி வரவேற்று அவரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்தார். உடனே டியாப்பக்காரியை நோக்கி, “ஏ கிழவி! நீ இந்த ஐந்நூறு காசுக்கு இவ்வளவு யோசனை செய்கிறாயே! இவர்களைப் பார்த்தாயா? இவர்கள் யார் தெரியுமா?” என்றார். கிழவி திகைப்படைந்து சாமாவையரைப் பார்த்தாள்.”இவர்கள் கீழ்ப்பாதி மங்கலம் மைனர். இவர்களுக்கு 549 வேலி நிலம் இருக்கிறது. லெட்சலெட்சமாய்ப் பணத்தை எங்கள் கம்பெனியில் வட்டிக்குப் போட்டிருக்கிறார்கள். இவர்கள் கூட தஸ்தாவேஜு கேட்கவில்லையே! இந்தா நான் முடிவாகச் சொல்லுகிறேன்; உனக்குத் தைரியமிருந்தால் கொடுத்து விட்டுப்போ. இல்லாவிட்டால் எடுத்துக்கொண்டு போ.நான் வர்களுடன் பேசவேண்டும்” என்று உறுதியாக மொழிந்தார். 

கிழவி திகைப்பும் குழப்பமுமடைந்து தயங்கி நின்றாள். உடனே சாமாவையர், “பாட்டி! இந்த இடத்தில் பணம் கொடுத்தால் பயமே இல்லை. இவர்களுடைய சொல்லே போதுமானது; பத்திரம் எதற்கு? சாட்சி எதற்கு? ஒன்றும் தேவையில்லை. இதோ பார் நான் இருபதினாயிரம் ரூபா கொணர்ந்திருக்கிறேன். பத்திரமில்லாமலே கொடுக்க போகிறேன்” என்று தமது ரயில்வே பாக்கை (தோல் பையை)த் திறந்து அதிலிருந்த ஒரு பெருத்த துணி மூட்டையை அவிழ்த்துக் காட்டினார். அம்மூட்டை முழுவதிலும் பவுன்களே நிறைந்து கண்ணைப் பறித்தன. அதைக் கண்ட கிழவி வாயைப் பிளந்தாள்; வரதாச்சாரியும் திகைத்தார்; ஆனால், அவர் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. கிழவியின் மனதில் உடனே பெருத்த நம்பிக்கை பிறந்தது. தனது கந்தைத் துணி மூட்டையை அவிழ்த்து, ரூபா ஐந்நூறையும் கலகலவென்று வரதாச்சாரியின் முன்னர் கொட்டிவிட்டு, போதாதற்கு அவரையும் சாமாவை யரையும் வணங்கி நமஸ்காரம் செய்துவிட்டு விடை பெற்றுக் கொண்டு வெளியில் நடந்தாள். வஞ்சகரிருவரும் தமது வெற்றியை நினைத்து மகிழ்வடைந்து ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை செய்து கொண்டனர். 

உடனே சாமாவையர், “அடே வரதாச்சாரி! நீ பலே சாமர்த்தியசாலியடா! ஒரு நிமிஷத்தில் ரூபாய் ஐநூறு தட்டிவிட்டாயே! உன்னுடைய உத்தியோகம் நல்ல உத்தியோகம் ” என்றார். 

வரதாச்சாரி நன்றியறிவைக்காட்டி, “எல்லாம் நீ கொடுக்கும் பிச்சையல்லவா? உன் பெயரைச் சொல்லிப் பிழைக்கிறோம்; இனி மேலும் உன்னாலேயே பிழைக்க வேண்டும். உன்னுடைய கடிதம் நேற்றுக் காலையில் வந்தது. உனக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை யாரிடம் சம்பாதிக்கலாமென்று பார்த்தேன். இந்தக் கிழவி காவிரி யாற்றங்கரைப் பாலத்தடியில் ஆப்பம் சுட்டு விற்பவள். அந்த வழியாக நான் போகும்போதெல்லாம் இவள், “சுவாமி! தெண்டம்” என்று ஒரு கும்பிடு போடுவாள். நான் வட்டிக்குப் பணம் வாங்குகிறவனென்பதை யறிந்துகொண்டே இவள் அப்படிச் செய்துவந்தாளென்றும், இவளிடம் பணம் இருக்கிற தென்பதையும் நான் யூகித்துக்கொண்டேன். பக்த சிரோன்மணியான வள் காணிக்கை வைத்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுதல் செய்வதை மறுப்பது பாவமல்லவா? “சுவாமி! தண்டம்” என்று இவள் சொல்லும் போதெல்லாம், “கவலைப்படாதே! ஒருநாளைக்கு தெண்டம் வைக்கிறேன்” என்று நான் நினைத்துக்கொண்டு போவதுண்டு. இவள் நல்ல சமயமாக இன்று வந்து உதவினாள். அது இருக்கட்டும், வராகசாமிக்கு இப்போது உடம்பு எப்படி இருக்கிறது?” என்றார். 

சாமாவையர்:- முக்கால் பாகம் குணமடைந்துவிட்டான்; அவனை வீட்டுக்கு அனுப்பும்படி நாம் இப்போது விரும்பினாலும் வைத்தியசாலை அதிகாரிகள் அவனை அனுப்பத் தடையில்லை. ஆனால், நல்ல காற்று ஓட்ட முள்ள விசாலமான வீட்டிலேதான் அவன் இப்போதிருக்க வேண்டுமாம். இப்போது அவர்கள் குடியிருப்பது மிகவும் சிறிய வீடு; காற்று ஓட்டம் இல்லாதது. கரையோரத்தில் ஒரு பங்களா இருக்கிறது. அதை அவர்கள் விலைக்கு வாங்கிக் கொண்டு இன்னம் இரண்டு மூன்று நாட்களில் கிரகப் பிரவேசம் செய்யப் போகிறார்கள். அந்தப் பங்களாவுக்கு நாலைந்து நாளில் வராகசாமியை அழைத்து வரப்போகிறோம். கடற்காற்று வீசினால் அவன் சீக்கிரம் குணமடைந்துவிடுவான். 

வரதா:- இந்த நிலைமையில் கலியாணம் செய்துகொள்ள அவன் சம்மதிப்பானா? 

சாமா:- அதைப்பற்றி கவலைப்படாதே! நானும் அவன் தமக்கையும் சொல்வதை அவன் ஒரு நாளும் மீறமாட்டான். தவிர, இந்த விஷயத்தில், நாங்கள் இன்னொரு யோசனை செய்திருக்கிறோம். இப்போது நாங்கள் வாங்கப்போகும் பங்களாவின் விலை ரூபா பதினாயிரம். அவனுடைய தமக்கை, அவனுக்குத் தெரியாமல் பதினாயிரம் ரூபா சிறுவாடு சேர்த்து வைத்திருந்தாள். அவன் வருமுன், இந்தப் பணத்தைக் கொடுத்து பங்களாவை என் பேருக்கு வாங்கப்போகிறோம். கலியாணத்துக்காக,நீ பதினாயிரம் ரூபா கொடுத்ததாகவும் அதனால் பங்களாவை வாங்கினதாகவும் சொல்லப் போகிறோம். உன்னிடம் வாங்கின பிறகு, கலியாணம் வேண்டாமென்று அவன் சொல்ல மாட்டானல்லவா- என்றார். 

வரதா:- பங்களாவை உன்பேரில் ஏன் வாங்கப் போகிறீர்கள்? 

சாமா:- பங்களாவுக்குச் சொந்தக்காரன் நம்முடைய நைனா முகம்மதுவின் சிற்றப்பன். அவன் மற்றவருக் கென்றால் அதை பன்னிராயிரம் ரூபாய்க்குத்தான் கொடுப்பான். எனக்கு இரண்டாயிரம் ரூபா குறைப்பான். அதனால் என்பேரில் வாங்கப்போகிறோம். அப்புறம் பெருந்தேவி பேரில் மாற்றப்போகிறோம். 

வரதா: அப்படியானால், கலியாணத்துக்காக நான் கொடுக்க வேண்டிய பதினாயிரம் ரூபாயைக் கொடுக்க வேண்டாமா? 

சாமா:- நல்லகாரியம் செய்தாய்! நாங்கள் வராகசாமிக்காக இந்தக் கட்டுக்கதையைச் சொல்லப்போகிறோம். உன்னிடமிருந்து பதினாயிரம் ரூபா வாங்கவேண்டு மென்னும் பேராசையினாலே தான் பெருந்தேவி கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கிறாள். பணத்தை ரகசியமாக உன்னி. மிருந்து வாங்கி தன்னிடம் கொடுக்க வேண்டு மென்று அவள என்னிடம் சொல்லியிருக்கிறாள். பணம் வராவிட்டால், பெண் அழகாயில்லை என்று ஏதாயினும் காரணம் சொல்லி கலியாணத்தை நிறுத்திவிடுவாள். ஆகையால் தந்திரமாக அவளை ஏமாற்ற வேண்டும். 

வரதா: எப்படி தந்திரம் செய்கிறது? 

சாமா: அவளிடம் உன்னைப்பற்றி நான் மிகவும் புகழ்ந்து பேசியிருக்கிறேன். நீ ஒரு வேலை செய்; இருநூறு, முன்நூறு ரூபாயை அரையணா, காலணாவாக மாற்றி ஒரு சாக்கு மூட்டையில் அதைப்போட்டு இன்னமும் ஒட்டுத்துண்டு களையும், அதில் போட்டு பெருத்த மூட்டையாகப் போட்டுக்கொண்டு வந்துசேர். பணம் தேவையான போதெல்லாம் அதிலிருந்து அலட்சியமாக எடுத்து வீசி ஆடம்பரம் செய். அதைக் கண்டு அவள் ஏமாறிப்போவாள். அவளுக்கெதிரில், நான் உன்னிடம் வந்து வரதட்சணை எங்கே யென்று கேட்பேன். “இதோ அடுத்த ரயிலில் பெண்ணின் அம்மான் பணம் கொண்டு வருவார்; காரியம் நடக்கட்டும், தாலி கட்டுமுன் வந்துவிடும்” என்று சொல்லிக் கொண்டிரு. அவள் சந்தேகப்படாதபடி நானும் அவளுக்கு உறுதி சொல்லி வைத்திருக்கிறேன். தாலி கழுத்தில் ஏறியவுடன் “ரயில் தவறிப்போய்விட்டது போலிருக்கிறது. நான் ஊருக்குப் போய் உடனே அனுப்பி விடுகிறேன்” என்று சொல்லி விட்டு நீ ஊரைப் பார்த்துக் கம்பியை நீட்டிவிடு. அப்புறம் யோசித்துக் கொள்வோம். நீ பங்களாவுக்குப் பணம் கொடுத்து விட்டாயென்று முதலில் அவர்கள் வராகசாமியிடம் சொல்லி விடுவார்கள். ஆதலால் அப்புறம் இதைப்பற்றி ஒன்றும் சொல்லமாட்டாமல், திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி சும்மா இருந்து விடுவார்கள். 

வரதா:- அது நல்ல யோசனை தான். கலியாணம் பங்களாவிலா நடக்கும்? 

சாமா:- அதையும் பேசி முடித்துவிட்டேன். கலியாணத்தை வீட்டில் நடத்தினால் ஐந்து நாள் ஆகும். உனக்குப் பணச்செலவும் அதிகமாகும். ஏதாவது ஒரு கோவிலில் செய்தால், ஒரு நாழிகையில் ஐந்து நாளைக் காரியத்தை முடித்துக் கொண்டு வந்துவிடலாம். அதனால் ஒரு தந்திரம் செய்திருக்கிறேன். இந்த பங்கஜவல்லி குழந்தையாயிருந்த போது மாந்தம் வந்ததாயும், இவள் பெரியவளான பின், திருப்பதி கோவிலில் வந்து கலியாணம் செய்து வைப்பதாய் அப்போது நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டதாயும், அதன் படி கலியாணத்தைத் திருப்பதியில் செய்யவேண்டுமென்றும் சொல்லிவிட்டேன். அவர்கள் இணங்கிவிட்டார்கள். உனக்குக் கொஞ்சமும் துன்பமில்லாமல், எல்லா விஷயங்களையும் நான் முடித்துவிடுகிறேன். இதோ என்னிடம் ரூபா 9500 இருக்கிறது. பங்களா வாங்க 500 குறைவாகிறது. அதை மாத்திரம் நீ கொடுத்து விடு. மற்றதை முடித்து வைப்பது என்னுடைய பொறுப்பு. 

வரதா:- சரி; இதைக் கிழவி கொடுத்த பணத்தை இப்படியே நீ எடுத்துக்கொள் – என்று தமக்கெதிரிலிருந்த பணத்தைக் கொடுக்க, சாமாவையர் அதை வாங்கித் தமது மூட்டையில் சேர்த்து கட்டிக்கொண்டார். 

வரதா:- முன் கலியாணம் செய்திருந்த பெண் இனிமேல் வருவாளா? 

சாமா:- அவள் ஏன் வருகிறாள்? அவள் தான் ஒரு நாடகக்காரனோடு ஓடிப்போய்விட்டாளே! அந்தக் கவலை வேண்டாம். 

வரதா அப்படியா! அதுவும் நல்ல அதிர்ஷ்டம் தான். எப்படியாவது நமது பங்கஜவல்லி வக்கீலைக் கலியாணம் செய்துகொண்டு பங்களாவுக்கு எஜமானியாக இருந்து வாழ்வதை நாம் ஒரு நிமிஷமாவது கண்ணாரப் பார்த்து சந்தோஷப்படுவது போதும் – என்றார். 

இவ்வாறு அவ்விரு நண்பரும் நெடுநேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தனர். அதற்குள் வரதாச்சாரியின் மனைவியும் அங்கு வந்து, அப்போதே மலர்ந்த தாமரை மலரைப் போன்ற இனிய முகத்தோடு சாமாவையரை வரவேற்று, க்ஷேமம் விசாரித்து, பல விஷயங்களைப்பற்றி உசாவி, மகிழ்ச்சியடைந்து, அளவளாவியிருந்தாள். அவருக்குரிய விருந்து முதலியவற்றிற்கு வேண்டிய ஏற்பாடுகளை மிகுந்த பரபரப்போடும் உவப்போடும் செய்து முடித்தபின் ஒரு நிமிஷமும் அவரை விடுத்து அப்புறம் செல்லாமல் மிகவும் குழைவாக அவரோடு சம்பாஷணை செய்தவண்ண மிருந்தாள். அன்றைய மாலை வரையில் ஐயரவர்கள் வரதாச்சாரியின் இல்லத்தில், அம்மாளின் வரம்பு கடந்த அன்பினால் சகலவித சுகங்களையும் அநுபவித் திருந்தார். கணவன் மனைவி ஆகிய இருவரும் அவருக்கு இராஜஉபசாரம் செய்து, முதல்தரமான விருந்தளித்து, இன்பக் கடலிலாட்டி, அவர் மனம் குளிரும்படி நடந்துகொண்டனர். மாதுரியமான சிற்றுண்டிகளைத் தயாரித்து, அந்தப் பெருந் தெய்வத்திற்குப் படைத்து நிவேதனம் செய்வித்தனர். எவ்விதமாயினும் தமது பெண்ணை உயர்வான இடத்தில் கொடுக்கவும், தம்மீதுள்ள ஜாதிக் கட்டை விலக்கிக் கொள்ளவும் அவர்கள் மிகுந்த ஆவல் கொண்டிருந்தனர். தவிர, தமது பெண் அலியாதலால் பிறக் காலத்தில் புருஷனோடு அவள் வாழ்க்கை செய்யாவிடினும், அவளுடைய சவரட்சணைக்குத் தேவையான பெரும் பொருளாயினும், அவளது புக்ககத்திலிருந்து கிடைக்குமென்று நினைத்தனர். இந்த மூன்று காரணங்களினால் அவர்கள் இந்தச் சம்பந்தத்தையே கொண்டுவிட உறுதி செய்து கொண்டு, அதற்குத் தகுந்த கருவியாகிய சாமாவையரை சரணாகதரக்ஷ கராக அடைந்து அவருக்குத் தொண்டு புரிந்தனர். 

சாமாவையர் அன்றிரவு போஜனத்தை மாலை ஏழரை மணிக்கே முடித்துக்கொண்டார். நாகைப்பட்டணம் சென்று பங்களாவின் விக்கிரயப் பத்திரத்தை மறுநாளே முடித்துக் கொண்டு, சென்னைக்குத் திரும்ப நினைத்தவராய், இரவு ஒன்பது மணிக்குக் கும்பகோணத்திலிருந்து புறப்பட்ட ரயிலுக்கு வந்து சேர்ந்தார். கையில் ரயில் பைக்குள் ரூபா பதினாயிரம் பவுன்களாகவும், நோட்டுகளாகவும், ரூபாயாகவும் மூட்டை கட்டப்பட்டிருந்தன. அதை மிகுந்த எச்சரிக்கையோடு வைத்துக் கொண்டு வண்டியிலேறினார். ஒருவர் கும்பகோணத்திலிருந்து நாகைப்பட்டிணம் போக வேண்டுமானால், கும்பகோணத்தில் ரயிலேறி மாயவரத்தில் இறங்கவேண்டும். அவ்விடத்தில் வந்துள்ள வேறு ரயிலில் ஏறித் திருவாரூர் போய்ச்சேரவேண்டும். அவ்வூரில் வந்துள்ள வேறு ரயிலிலேறி நாகைப்பட்டணம் செல்லவேண்டும். கும்பகோணத்தில் வண்டியில் ஏறிய சாமாவையர், அதில் ஜனநெருக்க மில்லாமையால் உல்லாசமாகப் பலகையின் மீது காலை நீட்டி விட்டு, பக்கத்தில் சாய்ந்து கொண்டார். ரயில் புறப்பட்டு கிடுகிடாயமாகப் பறக்க வாரம்பித்தது. சாமாவையரும் தமது மனக்குதிரையைத் தட்டிவிட்டார். அதுவும் தனது வேலையைச் செய்யத் தொடங்கியது. அவர் இன்பகரமான நினைவுகளில் ஆழ்ந்தார். சென்ற சின்னாட்களாக அவர் பிறவிக்குருடன் திடீரென்று பார்வை பெற்றதைப்போல விருந்தார். பிறந்த நாள் முதலாக, நித்திய தரித்திர நிலைமையி லிருந்துவந்த ஐயரவர்கள் தம்முடைய தென்று ஒரு பவுனைக் கூடக் கண்டவரன்று. திடீரென்று புதையல் அகப்பட்டதைப்போல, அவரிடம் ரூபா பதினாயிரம் வந்து சேருமானால், அவர் மனதிலுண்டாகும் களிப்பும், பூரிப்பும், ஆநந்தமும் அளவில் அடங்கியவை யாமோ? ஒரு நிமிஷத்தில் அவர் தமது பழைய நிலைமையை மறந்து, புது மனிதராக மாறிவிட்டார். அந்தப் பணத்தை என்ன செய்வது? வட்டிக்குக் கொடுப்பது நல்லதா, அல்லது அதை வைத்துக்கொண்டு வர்த்தகம் செய்வது நல்லதா, அன்றி பங்களாவை வாங்குவதே உசிதமா வென்று பல நாட்கள் இரவுகளில் தனிமையிலும் தமது மனைவியோடு கலந்துப் ம் யோசனை செய்தார். “பங்களா பாதி விலைக்கு வருகிறது. அதில் துரை மாரைக் குடி வைத்தால் மாதம் ஒன்றுக்கு ரூ.200 – கிடைக்கும். அதில் உற்பத்தியாகும் பழமரங்களின் மகசூல் வருஷத்தில் ஆயிரம் ரூபா கொடுக்கும். ஆகையால், பங்களாவை வாங்குவதே சிறந்தது என்று நினைத்து அவ்வாறே முடிவு கட்டிக்கொண்டார். தவிர பங்களாவில் பெருந்தேவி முதலியோரைச் சிறிது காலமாயினும் குடிவைக்காமல், பணத்தை அப்படியே அபகரித்துக்கொண்டால் மூடர்களான அவ்விரு சகோதரி மாரும் ஆத்திரமடைந்து, தம்மோடு பெருத்த சண்டை யிடுவரென்றும், மேனகாவை விற்றது முதலிய இரகசியங்கள், அதனால் வெளிப்பட்டு விடுமென்றும், பிறகு தமக்குப் பல துன்பங்கள் சம்பவிக்குமென்றும் நினைத்தார். ஆகையால் பங்களாவை தமது பேருக்கு வாங்கிக்கொண்டு, அவர்களைச் சில மாதங்கள் வைத்திருந்து, பிறகு வக்கீல் மூலமாக நோட்டீஸ் கொடுத்து அவர்களை வெளியேற்றிவிடவும், அதன் பிறகு தாமும் தமது மனைவியும் பெருஞ் செல்வத்துடன் சுகமாக வாழலாமென்று செய்யப்பட்ட இவ்வித நினைவுகளில் இப்போது ரயிலில் சாய்ந்திருந்த வண்ணம் தமது சிந்தையைச் செலுத்தி அவைகளில் ஈடுபட்டவராய் இரவு பத்தரை மணிக்கு மாயாவரம் வந்து சேர்ந்து வண்டியை விட்டு இறங்கினார். திருவாரூருக்குப் போக ஆயத்தமாக வண்டிகள் வெற்று வண்டிகளாக இருந்தன. சிலவற்றில் இரண்டொரு மனிதர் உட்கார்ந்தும், படுத்து மிருந்தனர். வெறுமையாயிருந்த ஒரு வண்டியில் சாமாவையர் மூட்டையை வைத்தார். அந்த ரயிலில் திருவாரூர் போய்ச் சேர இரவு ஒரு மணியாகும் ஆதலால், தாம் வெற்று வண்டியிலிருந்தால், கவலையின்றி சிறிது துயிலலாமென்று நினைத்தே ஐயரவர்கள் ஏகாந்தத்தை நாடினார். வேறு எவரும் வராமல் தடுக்கும் நோக்கத்துடன் அவர், காலடி வைக்கும் பலகையில் நின்றார். முதல் மணி அடிக்கப்பட்டது. புகை வண்டி ஊதியது. இரண்டாவது மணியும் அடிக்கப்பட்டது. அதற்குமேல் எவரும் வரமாட்டார்களென்று நினைத்த சாமாவையர் உட்புறம் சென்று கதவை மூடித் தாளிட்டுக் கொண்டு கதவி லண்டையில் உட்கார்ந்தார். அடுத்த நிமிஷத்தில் ஒரு யௌவன மங்கை, “இதோ இந்த வண்டியில் ஏறலாம்” என்று சொல்லிக்கொண்டே விரைவாக வந்து, சாமாவையர் இருந்த வண்டியின் கதவைத் திறந்து வண்டிக்குள் ஏறினாள்.சாமாவையர் உடனே எழுந்து கடைசி யிடத்தில் உட்கார்ந்து கொண்டார். முதலிடத்தில் அந்த அணங்கு உட்கார்ந்தாள். அவளுக்குப் பின்னால் வந்த இன்னொரு மனிதன் ஒரு டிரங்குப் பெட்டியையும் ஒரு கூஜாவையும் உட்புறம் வைத்து விட்டுக் கதவைச் சாத்தித் தாளிட்டவனாய் வெளியில் நின்று, “அம்மா கமலம்! பத்திரமாகப் போய்ச் சேர். நாளைக்கு வருகிறேன். ஸ்டேஷனில் இறங்கும்போது சாமான்களை விட்டு விடாதே! தூங்கி விடாதே!” என்று சொல்லி எச்சரித்துவிட்டு, சாமாவையரைப் பார்த்துக் கைகுவித்து வணங்கி, ‘சுவாமிகள் எந்த ஊருக்குப் போகிறீர்கள்?” என்று பணிவாகக் கேட்டான். அவர், ‘நாகைப்பட்டணம் போகிறேன்” என்றார். அந்த மனிதன், “சரி! நிரம்ப சந்தோஷம், இந்தக் குழந்தை திருவாரூர் வரையில் வருகிறாள். இவளை அதுவரையில் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுங்கள்” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். சாமாவையர் மிகுந்த பரோபகார குணம் பிரகாசித்த இனிய முகத்தைக் காட்டி, “அப்படியே செய்கிறேனப்பா! கவலைப்படாதே; என் தங்கையைப்போலப் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். அப்போது வண்டி ஊதிக்கொண்டு நகர்ந்தது. அந்த அழகிய பெண்மணி சகிக்க வொண்ணாத நாணத்தினால் தனது தேகத்தை நெளித்துக்கொண்டு, “நான் போய் வருகிறேன்” என்று குயிலைப்போல மொழிந்து, வெளியிலிருந்த மனிதனிடம் விடைபெற்றுக் கொண்டாள். அதற்குள் வண்டி விசையாக ஓடியதால், அந்த மனிதன் நெடுந்தூரத்திற் கப்பால் பின் தங்கிவிட்டான்.

– தொடரும்…

– மனோரஞ்சிதம் என்னும் இதழில் இந்நாவல் வெளிவந்தது. மேனகா நாவலை ஒட்டி 1935-ம் ஆண்டு மேனகா என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது

– மேனகா (நாவல்) – இரண்டாம் பாகம், முதற் பதிப்பு: 2004, ஜெனரல் பப்ளிஷர்ஸ், சென்னை.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் (1880-1942) தமிழ் எழுத்தாளர். பொதுவாசிப்புக்குரிய வணிகக் கேளிக்கைப் படைப்புகளை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். திகம்பரச் சாமியார் என்னும் துப்பறியும் கதாபாத்திரத்தை உருவாக்கியவர். 1942-ல் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் காலமானார். தமிழில் பிரிட்டிஷாரால் நவீன காவல்துறையும், நீதிமுறையும் உருவாக்கப்பட்டதை ஒட்டி குற்றங்களை காவலர் நவீன முறையில் துப்பறிவதன் மீது வாசகர்களின் ஆர்வம் உருவாகியது. தொடக்ககால தமிழ் பொதுவாசிப்பு எழுத்துக்கள் பெரும்பாலும் துப்பறியும் மர்மக் கதைகளாகவே அமைந்தன.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *