மெல்லுணர்வு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2014
பார்வையிட்டோர்: 8,995 
 

குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது.

இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானதால் அவசரத்தில் உள்ளே இருந்து வெளிவர துடிக்கும் சிறுவன் கதவைத் தட்டுவது போல் நெஞ்சாங் கூடு அதிர்ந்தது. சேரா குளிருக்காக போரத்தியிருந்த மண்ணிற கம்பிளி போர்வையின் ஊடாக அவளது கைகளின் மணிக்கட்டுப் பகுதியை பிடித்தபோது கழுத்தை திருப்பி மெதுவாக என்ன என்பது போல் சிரித்தாள்.

‘இந்தப் போர்வையாக நான் மாறக்கூடாதா?’

‘இது கொஞ்சம் அதிகமில்லையா?’ என்றபடி தனது விரல்களால் அவன் விரல்களை கோர்த்து பிடித்தபோது உடல் வெப்பம் அவனுக்கு கொதிநிலையை அடைந்தது. வாயிலிருந்த உமிழ்நீர் வற்றிவிட்டது போல் இருந்தது. தண்ணீர் குடித்தால்தான் சரி வரும் என நினைத்தபடி அவளது கழுத்தில் மெதுவாக சரிந்து முத்தமிட்டபோது அவளது கலைந்த பல கேசங்கள் வாயில் சிக்கி பல்களிடையே சென்றன. கழுத்தில் முகம் புதைத்தான். இதற்கு மேல் அவனால் விமானத்தில் அவளை நெருங்கமுடியாது.

ஐம்பது வயதில் இப்படியான காதலும் கத்தரிக்காயும் தேவையா என யாராவது பார்த்தால் கேட்பார்கள். அவர்களுக்கு அவனது வரலாறு தெரியுமா? சொன்னால்தான் புரியுமா?. இருபத்தைந்து வயதிற்கு கீழ்த்தான் காதல் ஏற்படுவதை எமது சமூகம் தமிழ் திரைப்படங்களில் பார்த்திருக்கிறது. காதல் என்பது அந்த வயதிற்கு மேல் ஏற்பட்டால் அது கயமை அல்லது லோலாத்தனம் என வரையறுத்துள்ளது. ஆனால் இளவயதில் காதல், சாதி ,மதம், குடும்பச்சுமை, சகோதரிகள் , சீதனம் என பல விலங்குகளைப் போட்டு சிறையடைக்கப்படுகிறது.

காதல் உணர்வுகள், பச்சைப்பயறை மணல்போடாமல் சூடான சட்டியில் வறுப்பது போன்று வாட்டி கருக்கி எடுத்துவிடுகிறது. இளவயதுக் காதல் குளிர்கால நெடும் தூக்கம் கொண்டு பனித் திணை மிருகங்கள் உயிர்களுடன் உறைந்து விடுவது போல் எத்தனை இளம் உள்ளத்து உணர்வுகள் மரத்துவிடுகின்றன.

அவனது காலத்தில் ஆண்கள் படித்து பல்கலைக்கழகம் சென்றால் அவர்களை சந்தைக்கு வந்த காளை மாட்டைப்போல் ஏலம் விடுவதற்கு அக்கால சமூகம் தயாராக இருந்தது. பிள்ளைகளைப் பிடித்து குருடாக்கி பிச்சையெடுக்க வைக்கும் பாதகனைப் போல் சமூகம் இருந்தது என்ற கூற்று சில சந்தர்ப்பங்களில் மிகையானது அல்ல.

இலங்கையில் பல்கலைக்கழக பிரவேசத்தில் தரப்படுத்தல் வந்தபோது, இந்த ஏல வியாபாரம், பங்குச் சந்தை சரிவடைவது போல் தேக்கமடைந்தது. அதனாலும் ஆயுதப்போராட்டம் வந்திருக்க வேண்டும். ஆனால் அதை ஒரு காரணமாகச் சொல்ல யாழ்ப்பாண சமூகத்திற்கு துணிவு இல்லை.

ஆனந்தன், தனது நண்பன் ஒருவன் பள்ளிக் காலத்தில் காதலிப்பதைப் பார்த்து கான்வெண்டில் படித்த ரெஜீனா என்ற பெண்ணிடம் பழக முயன்றான். பாடசாலை முடிந்து அவள் போகும் வழியில் சைக்கிளில் வந்து மறித்து சுகம் விசாரிக்க முற்பட்டபோது காறித் துப்பிவிட்டு சென்றுவிட்டாள் . அவளது துப்பல் உலர்ந்து போனாலும் அதன் தாக்கம் பல வருடங்களாக தொடர்ந்;தது.

ஏன் அவள் தன்னை உதாசீனம் செய்தாள்? குறைந்த பட்சம் முகத்தை திருப்பிக் கொண்டு போயிருக்கலாம். அவ்வாறு அவமானம் செய்வதற்கு காரணம் என்ன?

ஐந்தடி எட்டங்குல உயரத்தில் தான் கருப்பு நிறமாக இருந்ததுதான் காரணம் என ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனந்தனிலும் பார்க்க அவலட்சணமானவர்கள் காதலிகளை வைத்திருந்த போது தனது இயலாமைக்கு காரணம் வேறாக இருக்கவேண்டும் என நினைத்தான். ஆண்களே படித்த யாழ்;ப்பாண இந்துக்கல்லூரியில் தொடர்ந்து படித்ததால் பெண்களிடம் பழகும் நாகரீகம் தெரியவில்லையோ? அல்லது பெண்களை அணுகும் முறையில் தவறா?

மவுனமாக கேள்விகளை மட்டும்தான் அவனால் கேட்க முடிந்தது. நண்பர்களிடம் முதல் காதலின் தோல்வியை பகிர்ந்து கொள்ள அவமானமாக இருந்தது. அவளில் ஆத்திரப்படவும் முடியவில்லை. எச்சிலை துடைத்து விட்டு அந்த காதலை மறந்துவிட்டான். அந்தத் துப்பலுடன் காதலிக்கும் எண்ணம் அவனை விட்டு போய்விட்டது.

அவன் பேராதனை பல்கலைகழகம் சென்ற முதலாவது வருடத்தில் தகப்பனார் ஏலத்துக்கான ஏற்பாட்டைத் தொடங்கிவிட்டார். இரண்டு தங்கைகளையும் சீதனம் கொடுத்து மாப்பிள்ளை எடுக்கவேண்டும் என காரணம் காட்டியதால் வேறுவழி இல்லாமல் சகோதர பாசத்தின் பிளக்மெயிலில் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.

பட்டம் பெற்று, மகாவலிகங்கை மறித்து கட்டும் திட்டத்தில் கொத்மலையில் சிவில் எஞ்ஜினியராக வேலை தொடங்கியபோது ஏலம் உச்ச நிலையடைந்து திருமணவிவகாரம் சூடு பிடித்தது.

ஆனந்தனின் தந்தை கணக்கு வாத்தியார். அவர் கணக்குப் போட்டு சீதனமாக கேட்ட பணம், இரண்டு எஞ்னியரை வளைச்சுப் போடக்காணும். இரண்டு தங்கைகளுக்கும் சேர்த்து சீதனமாக சேர்த்து கேட்ட தொகையாக இருக்கவேண்டும். அக்காலத்தில் யாழ்ப்பாணக் குடும்பங்கள் வீடு வளவுகளை எல்லாம் அடைவு வைத்து இளம் பொடியங்களை ஏரோபுளட்டில் பெர்லினுக்கு அனுப்பியதால் பலரிடம் காசு சேமிப்பில் இல்லை. அனுப்பிய பொடியள் பெர்லின் எல்லை கடந்து பிரான்ஸ், சுவிற்சலண்ட் என்று அலைந்து வேலை செய்து எப்ப காசு அனுப்புவார்கள் என தபால்காரனை வழிமேல் விழி வைத்து பெற்றோர் காத்திருந்த காலம்.

ஆனந்தனின் தந்தை பலரது வயிற்றெரிச்சலையும் கொட்டிக்கொண்டார். பலர் உள்ளுக்குள் திட்டினார்கள்.வாத்திக்கு பேராசை என்றார்கள். சிலர் முகத்துக்கே நேரடியாகச் சொன்னார்கள்.

‘உங்கடை மகனுக்கு இவ்வளவு இலச்சம் கொடுத்து கலியாணம் செய்யிறதிலும் பார்க்க, பிரான்சில் கோப்பை கழுவிறவனுக்கு என்ர பிள்ளையைக் கொடுப்பன். குறைந்த பட்சம் நிம்மதியாக உயிர்ப்;பயம் இல்லாமல் என்ர மகள் படுத்தெழும்புவாள்’.

மற்றொருவர் ‘என்ன உங்கட மகனுக்கு தங்கத்தில குஞ்சாமணி இருக்கெண்டா இவ்வளவு காசு கேட்கிறீர்கள். சரி அப்படி இருந்தாலும்; அதை வைத்து என்ன செய்யமுடியும்?’ என சிரித்தபடி கேட்டதாக தங்கச்சி ஒட்டுக் கேட்டுச் சொன்னாள்

அம்மாவும் தன் பங்குங்கு ‘என்ர மகன், உங்களாலே கிழவனாகிவிடுவான்’ என புறுபுறுக்கத் தொடங்கிவிட்டாள். விடுமுறைக்கு வந்த ஆனந்தனுக்கு இவற்றைக்கேட்டு வெறுப்பு வந்து இனி யாழ்ப்பாணம் வருவதில்லை என தீர்மானித்தான்

இறுதியாக கொழும்பு பலசரக்கு கடையின் முதலாளி ஒருவர் ஏலத்தில் வென்று இருபத்திரண்டு லச்சம் டொனேசன், கொக்குவிலில் வீடு கார் என வியாபாரத்தை முடித்தார. யாழ்ப்பணத்தில் இரண்டு தங்கைகளுக்கு திருமணம் முடித்துவைப்பதற்காக இருபத்தியிரண்டு லச்சம் வாங்கி தந்தையின் சொற்படி கேட்டு டொனேசன் காசை அப்படியே கொடுத்துவிட்டு நல்ல பிள்ளையாக திருமணம் செய்தான் ஆனந்தன்;;.

முப்பத்திரெண்டு வயது வரை காய்ந்து பருத்தி விதைபோல வெடித்து பறக்கும் நிலையில் இருந்த ஆனந்தனுக்கு வாழ்க்கைப்பட்ட மேனகா வானத்து மேனகா போல் இல்லாமல் , பலசரக்குக்கடைத் தானியத்தின் போசிப்பில் அமோகமாக விளைந்து இருந்தாள். அவளது அங்கலாவண்யங்கள் ஆனந்தனுக்கு கவர்ச்சியாக இருந்தது. இரண்டு வருடங்கள் மகியங்கனையில் எஞ்ஜினியராக இருந்தபோது முதலாவது மகள் பிறந்தாள். மகள் உமா பிறந்த சில மாதங்களில் வந்த 83 கலவரத்தில் இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் போனபின்பு மெல்பேனுக்குக்கு வந்தனர்.

இலங்கையில் வசதியாக வாழ்ந்தவர்களுக்கு வேலை கிடைக்காமல் அவுஸ்திரேலிய வாழ்க்கை கசந்தது. அரசாங்க உதவிப்பணத்தில் வாழவேண்டி இருந்தது. வாழ்க்கையின் சக்கரங்களில் மேல்பக்கத்தில் இருந்து சவாரி செய்தவன்;, இப்பொழுது அடிப்பக்கத்தில் நசிபடுவது புரிந்தது. உதவிப்பணத்தில் வாழ்க்கை ஓட்டுவது கடினம் என்பதால் எஞ்ஜினியர் வேலை கிடைக்கும் நேரத்தில் கிடைக்கட்டும் என தீர்மானித்து மெல்பனில் டாக்சி சாரதியாக வேலைசெய்தான். வருமானம் அதிகம் கிடைப்பதால் இரவு சிப்ட் ஓடினான். டாக்சியில் இருந்து வீடு வந்தவுடன் களைப்பில் சாப்பிட்டு நித்திரை கொண்டு மீண்டும் எழுந்து போகும் இயந்திர மனிதனாக நடந்து கொண்டான்

அவுஸ்திரேலிய நாட்டு சுதந்திரமான சூழலில் மேனகாவின் கனவுகளும் அவனது கனவுகளும் வேறுதிசைகளில் சென்றன. அவன் பகலிலும் அவள் இரவிலும் கண்டனர்.

இருவரது இல்லற வாழ்வு புயலில் சிக்கிய கப்பல்போல் தத்தளிக்கத் தொடங்கியது. காதல் உணர்வுகளைக் கொண்ட இரண்டு ஆத்மாக்கள் மீட்டும் இராகம் என்றில்லாமல் உடல் அரிப்பில் வேலியில் உராயும் வெள்ளாடுபோல் சுகித்துவிட்டு பகலில் நித்திரைக்கு செல்வான். ஆரம்பத்தில் பல்லைக் கடித்தபடி பொறுத்துக்கொண்ட மேனகா பத்தினிப் பெண்ணாக நடந்தாள். பின்பு வெறுப்பை உடல் மொழியில் வெளிப்படுத்தினாள். சில தடவைகள் அவள் ‘நீ மென்மையான உணர்வுகள் இல்லாத மனிதன்’ என்று சொல்லிவிட்டு அழுது கொண்டு வேகமாக குளியலறை சென்றிருக்கிறாள் மேனகா. அவள் குளியலறையில் இருந்து வருவதற்குள் ஆனந்தன் நித்திரையாகி விடுவான். மேனகா வாய்விட்டு திட்டியபடியே வீட்டில் வலம் வருவாள். காலையில் இறக்கிய கருப்பணிச்சாறு மாலையில் வாயில் வைக்க முடியாத புளித்த கள்ளாகிவிடுவதுபோன்று அவள் வாழ்வும் புளித்துப்போனது. புணர்வில் எப்படி மென்உணர்வைக் காட்ட முடியும் என்பது ஆனந்தனுக்குப் புரியவில்லை.

உடல் உறவுக்கு மென்னுணர்வுகள் தேவையில்லை என்பதை நிருபித்தபடியே உள்ளத்தில் காதல் இல்லாமல் கலவி செய்யலாம் என்பதற்கு அடையாளமாக ஒரு மகள் பிறந்தாள். ரேணுகா பிறந்ததும் மேனகா அத்துடன்; தாம்பத்தியவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள். கர்ப்பிணியாக இருந்த போது தற்காலிகமாகத்தான் இருக்கும் நினைத்த ஆனந்தனுக்கு ஏமாற்றம் தொடர்ந்தது.

ஆரம்பத்தில் குழந்தை அழும்போது குழந்தையின் அறையில் படுக்க ஆரம்பித்தவள் பின்பு சிட்னியில் இருந்து வரும் இன்பத்தமிழ் என்ற வானொலியை கேட்கவென்று கடந்த பத்துவருடங்களாக வேறு அறையில் படுத்தாள். டாக்சியோடும் வேலை போய் எஞ்ஜினியரிங் வேலை கிடைத்த பின்பும் நிலைமை மாறவில்லை. வெளியாருக்கு கணவன் மனைவியாக, பிள்ளைக்கு தாய் தந்தையாக வாழ்ந்தார்கள்

இப்படியாக தொலைத்த இரவுகள் அவனுக்கு நாற்பது வயதில் இருந்து நலமடிக்கப்பட்டுவிட்டதாக உணரப் பண்ணியது. சாப்பாட்டை மேசையில் வைத்து விட்டு தொலைக்காட்சி பார்ப்பாள்.இல்லையென்றால் உடம்பு நோகிறது என படுத்துவிடுவாள். என்றாவது ஒருநாள் தட்டுத் தடுமாறி கால் கைபட்டால் விரோதியைப் பார்ப்பது போல் பார்த்து விட்டு விலத்திக் கொண்டு போய்விடுவாள். பெரிய மகள் பெரிதாகியதால் இந்த விடயங்கள் அவளைப் பொறுத்தவரை தடை செய்யப்பட்ட விவகாரங்களாகிவிட்டன.

அவனிடம் கிரகாச்சாரம் முடிந்து பிரமச்சரியம் எதிர்பார்த்தாள். வாழ்கை என்பது சக்கரம் தானே?

இளைஞனாக இருந்தபோது தகப்பனை தனது எதிரியாக நினைத்த ஆனந்தனுக்கு இப்பொழுது மேனகா அந்த இடத்தை எடுத்து விட்டாளே என்று எரிச்சல் அதிகமாகியது.

எனக்கு நெருங்கியவர்களாலேயே நான் தொடர்ந்து சபிக்கப்படுகிறேனே. இதற்கு மற்றவர்கள் மட்டும் பொறுப்பா? இல்லை நானும் பொறுப்பேற்கவேண்டுமா?

அவனுக்கு மனம் அலைபாய்ந்தது.

இக்காலத்தில் ஆனந்தனின் தந்தையார் இறந்த செய்திவந்த போது ஆனந்தனுக்கு எந்தக் கவலையுமிருக்கவில்லை. எனக்கு செய்த கொடுமைக்கு கொஞ்சம் சீக்கிரமாக போய்விட்டார் என நினைத்துக்கொண்டான். கொழும்பில் குண்டு வெடித்ததை காரணம் காட்டி யாழ்ப்பாணம் போவதையும் தவிர்த்துக்கொண்டான்.

கொழும்பில் குண்டு வைத்தவர்களை மனதில் மெச்சிக் கொண்டான். அம்மா அதன் பின்பு கனடாவில் வதியும் தங்கைகளிடம் சென்றுவிட்டாள்.

மேனகாவோடு ஒன்றாக இருந்து பிரயோசனம் இல்லை. கோடைவெயில் உறிஞ்சிய தண்ணீர் மாதிரி அவளது காம உணர்வுகள் ஆவியாகிவிட்டால் அவளை தவறு சொல்லி சொல்லி எதுவும் நடக்கப்போவதில்லை. அந்தக்காலத்திலே யாழ்ப்பாண கத்தரிக்காயும் பருப்பு சோறுமென உண்டே செழிப்பாக இருந்தவள் இப்பொழுது அவுஸ்திரேலிய இறைச்சி ,மீன் , சுத்தமான மரக்கறி என்று இரண்டு மடங்காக வீங்கிவிட்டாள். முப்பத்தியேழு வயதில் அவள் கன்னியாஸ்திரியாகிவிட்டாள்.

அவளை விட்டு விலகுவதுதான் நல்லது. இப்படி இருவரும் இரண்டு அறைகளில் வாழ்க்கையை விரயமாக்கவியலாது என அவனது உள்ளுணர்வு சொல்லியது.

பிரிவது இலேசாகத் தெரியவில்லை. பிரிந்தால்வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்யவேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. ஆனந்தன் அதே போல் உள்ளத்தில் பல கேள்விகள் எழுந்தன. இந்த வயதில் என்ன செய்வது? குடும்பத்தை பிரியும் போது சொத்துக்கள் பிரிக்கப்படுவதுடன் பிள்ளைகள் வாழ்வில் குழப்பமும் ஏற்படும்.

இவற்றை சமாளிப்பது என்ற தீர்மானத்துக்கு வந்தபோது பத்துவருடமாக பாவனையில் இல்லாத ஆண்மையை நம்பி எப்படி வேறு ஒரு பெண்ணைத் தேடுவது என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த வயதில் ஆண்மையை பரிசோதிக்க ஒரே வழியாக பணம் கொடுத்து பெண்ணொருத்தியை பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தபோது கால்நூற்றாண்டுக்கு முன்பு தந்தையின் செயல் நினைவுக்கு வந்தது.

இருபத்தைந்து வயதில் அப்பு எனது ஆண்மைக்கு லட்சக்கணக்கில் விலை பேசினார்;. நான் இப்பொழுது பணத்தை கொடுத்து தேடவேண்டியுள்ளது.

பத்திரிகையில் பார்த்து ஒரு மணிக்கு விலை பேசிய பின் அவளை சந்தித்தான். டாக்சி ஓட்டியகாலத்தில் வாடிக்கையாளரிடம் பேசிய அனுபவம் இப்பொழுது கை கொடுத்தது.

முகவரியை யும் நேரத்தையும் கேட்டு அவளது வீட்டிற்கு சென்றபோது கதவை திறந்ததும் சிரித்தபடி வரவேற்று தன்னை ரோஸ் என அறிமுகப்படுத்தினாள்.

இதுதான் முதல் தடவையா? என்றாள்

நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். அதிக மேக்கப்புகள் இல்லாமல் சாதாரணமாக இருந்தாள். கொஞ்சம் அரைகுறையாகத்தான் உடையணிந்திருந்தாள். தொடையின் பெரும்பகுதி வெளித்தெரிந்தது.மார்புப் பகுதியிலும் மேற்சட்டையை கத்தரிக்கோல் விளையாடியிருந்தது.

அவளது தொழிலுக்கான யூனிபோம் ஆக இருக்கலாம். விளம்பரமில்லாமல் வியாபாரம் நடக்குமா?

அந்த ஹோலில் உள்ள சோபாவில் உட்காரும்படி சொல்லிவிட்டு உள்ளே சென்று சில நிமிடத்தில் வைன்கிளாசுயுடன் வந்தாள்.

இப்படியான உபசாரத்தை அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தயக்கத்துடன் கையை நீட்டி வாங்கியதும் மீண்டும் உள்ளே சென்று தனது கையிலும் ஒரு வைன் கிளாசைகொண்டு வந்தாள்

வீட்டில்கூட இப்படி உபசாரம் நடக்காது. பொக்கற்றில் கையை விட்டு அவளிடம் பேசிய தொகையை கொடுத்த போது, நன்றி சொல்லி விட்டு மீண்டும் உள்ளே சென்று திரும்பிவந்து,பக்கத்தில் உடலோடு நெருங்கி இருந்தபடி ‘உங்கள் கதையை சொல்லுங்கள்‘ என்றாள்

ஆரம்பத்தில் தனது அந்தரங்க விடயங்களை அவளுக்குச் சொல்லத் தயக்கமாக இருந்தாலும் மெதுவாக சொல்ல ஆரம்பித்தான்.

‘பலவருடங்களாக மனைவியுடன் உறவில்லை. மீண்டும் திருமணம் செய்யவிருக்கிறேன். என்னை கொஞ்சம் பரிசோதிக்க எண்ணி இங்கே வந்தேன்.

‘எவ்வளவு காலமாக காய்ந்திருந்தீர்கள்?;’

‘கிட்டத்தட்ட பத்துவருடங்கள்’

‘அப்பாடி….. இது எப்படி முடிந்தது. கத்தோலிக்க பாதிரிமார்களே பிரமச்சாரியம் பேணாத இந்த நாட்டில் இது பெரிய சாதனை’ எனச்சொல்லி கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விட்டு மீண்டும் உள்ளே சென்று இரண்டாவது வைன் கிளாசை கொண்டு வந்து முன்னால்வைத்தாள்

‘இது யாருக்கு?’

‘உங்களுக்குத்தான்’

‘வைனைத் தந்து அனுப்பிவிட நோக்கமா?’ என நகைச்சுவையாக அவன் கேட்டான்.

குடித்த வைன் பேச்சைக்கூட்டி இலகுவாக்கியது

பத்துவருடம் காய்ந்த மனிதரை கொஞ்சம் ரிலக்ஸ் பண்ணவேண்டும்.மனமும் உடலும் இறுகியபடி இருந்தால் உடலுறவு இன்ப அனுபவமாக இராது. ஏதோ ஒரு காரியத்தை முடித்து விட்டது போன்ற திருப்திதான் ஏற்படும்’ என்று சொன்னவாறு கட்டி அணைத்தாள்

அவளது அணைப்பில் இரண்டாவது வைன் விரைவாக உட்சென்றது.

அவளே கையைப் பிடித்து மங்கலான அறையொன்றுக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் தனது மேலாடையை களைந்ததும் அதிசயத்தை பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தான். பத்து வருடங்களின் பின்பாக ஒரு பெண்ணுடலை அன்றுதான் பார்க்கிறான். அவனைப் பொறுத்தவரை எங்கிருந்தோ புத்துயிர் கொடுக்கப்பட்டு உயிர்த்தெழுவது போன்ற சிலிர்ப்பு உடலெங்கும் பரவியது.ஆரம்பத்தில் சிறிய எறும்பு ஊருவது போன்ற உணர்வு மெதுமெதுவாக அலையாகி அவனை பல இடங்களுக்கு வான்வெளியில் கொண்டு சென்று இறுதியில் உடலெங்கும் ஒரு சுனாமி போல் வெடித்தெழும்பி மீண்டும் புவியில் கொண்டு வந்து போட்டபின்பாக அடங்கியது.

ஆனந்தனுக்கு அவளது வைனும் , அம்மணமான உடலும் எங்கோ பறந்திருந்த பறவையை மீண்டும் மரப்பொந்துக்குள் பாதுகாப்பாக வைத்துவிட்ட தேவதையின் செயலாக்கியது.

‘அவளது கட்டிலில் இருந்து எழும்ப முயற்சித்தபோது கையை பிடித்து இழுத்தாள். இன்னமும் உங்களது பணத்திற்கான வேலை மிச்சம் இருக்கிறது.அவசரப்படவேண்டாம்’என்றாள்.

மருத்துவர் புண்ணுக்கு மருந்து கட்டிவிட்டு வார்த்தைகளால் ஆறுதலளிப்பது போலிருந்தது அவளது பேச்சு.

மீண்டும் அவளை அணைத்தவாறு படுத்தபோது ‘என்ன வேலை செய்கிறீர்கள்?’;

‘எஞ்ஜினியர்’

‘எப்பொழுது இறுதியாக மனைவியை விடுமுறையில் அழைத்து சென்றீர்கள்?’

‘இன்னமும் இல்லை. வீட்டில் முகம் பார்த்து பேசுவதற்கே சிரமமாக இருக்கும்போது விடுமுறைக்கு கூட்டிப்போய் என்னதான் செய்வது?

‘எத்தனை பிள்ளைகள்?

‘ பதினைந்து , பன்னிரெண்டு வயதுகளில் இரண்டு’

‘உங்கள் மனைவி வீட்டில் இருந்து பிள்ளைகளை பார்த்துக் கொள்ளும்போது நீங்களும் அந்த வேலைகளில் பங்கேற்பது உண்டா?’

‘நான் இருளோடு வேலைக்குப்போய் வேலை முடித்து இருளோடு திரும்பி வரும்போது வேறு எதுவும் செய்ய முடியாது. சில மணிநேர தொலைக்காட்சியுடன் சாப்பாடு என்று எனது ஒரு நாள் முடிந்துவிடும். சனி ஞாயிறு குழந்தைகளின் விளையாட்டு , படிப்பு என நாட்கள் கரைந்து விடுகின்றன.’

‘உங்கள் மனைவிக்கு காசு கொடுப்பீர்களா?’

‘இல்லை. அவளது பெயரிலும் இணைந்த வங்கிக் கணக்கு என்பதனால் அவளால் எடுத்துக் கொள்ளமுடியும்.’

‘அதுவல்ல. நீங்கள் கொடுப்பதற்கும் அவளாக எடுக்கும் உரிமைக்கும் பெரிய வித்தியாசம் உளளது. நான் சொல்லுவது உங்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். இருந்தாலும் சொல்கின்றேன். பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் ஆண்களிலும் பார்க்க வித்தியாசமானவர்கள். மனதில் மகிழ்வோடு இருந்தால் மட்டுமே உடலுறவில் நாட்டம்கொள்வார்கள். உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? உடலுறவுக்கான சமிக்ஞையை தொடக்குபவர்களே பெண்கள்தான். உங்களது மனைவிக்கு வயதென்ன?

‘முப்பத்தேழு’

‘எனக்கு வயது நாற்பத்தைந்து. உங்கள் மனைவியை வித்தியாசமான முறையில் கையளவேண்டும் என நான் நினைக்கிறேன்.’

‘எனக்கு சைக்கோலஜி கவுன்சில்லிங் தந்ததற்கு நன்றிகள்.’ எனச்சொல்லிவிட்டு வெளியே வந்த ஆனந்தனுக்கு ரோஸ் ஞானோபதேசம் செய்த குருவாக தோன்றினாள்.

எப்படி எனது மனைவியோடு வித்தியசமாக நடப்பது? ஆனந்தன் ஆழ்ந்து யோசித்தான்.

இலகுவானதாக இராது. குறைந்தது குடும்பத்தோடு ஹொலிடேக்குச்செல்வோம் எனத் தீர்மானித்து மேனகாவிடம், ‘இந்த விடுமுறையில் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு நாம் மலேசியா போவோமா’ என்றுகேட்டதும் அவள் பட்டாசாக வெடித்தாள்.

‘ஏன்… இப்பொழுதுதான் பிள்ளைகளின் ஞாபகம் வந்ததா?’

‘இப்பொழுதுதான் சந்தர்ப்பம் வந்தது.’

‘நான் ஹொலிடே காலத்தில்; பிள்ளைகளுக்கு ரியூஷன் ஒழுங்கு செய்து வைத்திருக்கிறேன். அதனால் இயலாது.’

திருத்தி மீண்டும் ஓட முடியாத வாகனமாகி விட்டதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டு புதிதாக ஒன்றை வாங்குவது என்ற டாக்சி சாரதி தொழில் அனுபவம் ஆனந்தனை மாற்றி யோசிக்கவைத்தது.

மிஞ்சிப்போனால் மேலும் பத்தோ பதினைந்து வருடங்கள்தான் வாழப்போகின்றோம். எஞ்சியிருக்கும் காலத்தை வீணாக்குவதில்லை என முடிவு செய்தான். ரோசியின் தொடர்பால் இன்னமும் ஆண்மை துளிர்க்கையில் தனது உணர்வுகள் ஊற்றெடுக்கும் கிணறாக இருப்பது அவனுக்குப் புரிந்ததும். மிகுதியுள்ள வாழ்க்கை காலத்தை விரும்பும் பெண்ணொருத்தியுடன் கழிப்பதென்று ஆனந்தன் முடிவு எடுத்தான்.

முடிவு எடுத்தாலும் அதை எப்படிச் சொல்லுவது? செய்வது?

வேறு வழியில்லாமல் விவாகரத்து செய்வதாக அவன் கூறியபோது அவள் அதற்குச்சம்மதித்தாள். சொந்த வீடும் அவனது சுப்பரெனுவேசனில் பாதியும் சேர்ந்தால் மில்லியன் டொலருக்கு மேல் வரும். பொருளாதாரத்தில் பிள்ளைகளுக்கும் மேனகாவிற்கும் குறை வராமல் சொத்து பிரிக்கப்பட்டதோடு பிள்ளைகளின் தொடர்புகள் சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டது.

ஒருவிதத்தில் மேனகா தனக்கான சுதந்திரத்தை பெற்றதாக உணர்ந்தாள். இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து பொன்விலங்கு வாங்கி தன்னை பிணைத்தாக ஆரம்பத்திலே நினைத்தவளுக்கு குழந்தைகள் அவளது மனதில் நிறைவையும் ஆறுதலையும் கொடுத்தார்கள். விவாகரத்து இதுவரைகாலம் சுமந்த சுமையை இறக்கியதாக மேனகா உணர்ந்தாள்.

ஆனந்தனது பிரச்சினை தொடர்ந்தது.

எப்படி பெண்தேடுவது? இன்ரநெற்றில் உள்ள விளம்பரங்கள் மூலம் முயற்சித்தபோது தாராளமாக தரவுகள் வந்தன. கடைகள், ஹொட்டேல் என்று சீனப்பெண்கள், பிலிப்பைனஸ் பெண்களாக பார்த்து டேற்றிங் செய்தான். ஒவ்வொரு பொண்ணும் பல வருடங்கள் வயதில் குறைவாக இருந்தது மட்டுமல்ல, பலரது நோக்கம் அவுஸ்திரேலிய குடியுரிமை பெறுவதேயாகும். இறுதியில் அவுஸ்திரேலிய- ஐரிஸ் வெள்ளை இனப் பெண்தான் அவனது பழைய வாழ்க்கையை கேட்டாள். நாற்பத்தைந்து வயதான அவளுடைய இரண்டு பிள்ளைகளும் இங்கிலாந்தில் தங்களது வாழ்க்கைத்துணைகளோடு இருந்தார்கள். இவளும் பிள்ளைகள் வீட்டை விட்டு போனபின்புதான் புதிதாக துணை ஒன்றைத்தேடும் எண்ணத்தில் இருந்தாள்.அவளை அவனுக்கும் பிடித்தது.சாப்பாட்டு கடைகளில் சாப்பிட்டால் தனது தரப்புக்குத் தானே பணம் கொடுக்க வேண்டும் என்ற அவளது கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. மற்றவர்கள் அவனது சொத்துவிவரத்தை மட்டுமே கேட்டனர்.

அவளுடனான ஒருவருட காதல்விவகாரங்களுடன் அவனுக்கும் மேனாகாவுக்கும் விவாகரத்தும் கிடைத்தது. அதன்பிறகு ஆனந்தன் சேராவை பதிவுத்திருமணம் செய்தான்.

———-

அன்று இரவு சிட்னியில் உள்ள பெரிய ஹோட்டலில் தேன்நிலவை கழிப்பதற்காக சேராவும் ஆனந்தனும் போய்க்கொண்டிருந்தார்கள். போயிங் விமானத்தின் வேகம் அவனுக்கு குறைந்திருப்பதாகத் தெரிந்தது.

அவனது அவசரத்தை சேரா புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அவனது தொடைகளில் தனது கையைப் போட்டாள்..

அவளது கைகளில் முழங்கைகளுக்கு கீழ் இருந்த சில குண்டுமணி கரிய புள்ளிகளை தடவினான்

‘நாற்பத்தைந்து வயதில் ஐரிஸ் பெண்ணை மணம் செய்தால் இப்படியான புள்ளிகளை தவிர்க்க முடியாது‘ என்றாள் மின்னலான சிரிப்புடன்.

எப்பொழுதும் நேரடியாக பேசுவது அவளது சுபாவம். அப்படியான அவளது உரையாடல் வந்து விழும் வார்த்தைகள் , மற்றவர்ளை வார்த்தைகளைத் தேடும் நிலைக்குத்தள்ளி விடும்.

‘இந்தப் புள்ளிகள் உனக்கு அழகை கூட்டுகின்றன’என்றான்.

‘சட்டப்… நான் ரீன் ஏஜ் பெண்ணாக இருந்தால் இதை ஏற்றுக் கொண்டு சந்தோசப்படுவேன்.’

‘எனக்காக அப்படி மாறுவாயா?’

‘ரீன்ஏஜ் பெண்ணாக மாறினால் எனது அனுபவம் என்னை விட்டுப் போய்விடுமே?’

சிரித்தவாறு அவனது தலையைத் தட்டியபடி கூறினாலும் அவளது இதயத்தின் சிறு மூலையில் இந்த வயதில் திருமணம் செய்யாமல் தவிர்த்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தது. ஆனந்தனை நேசித்தாலும் கல்யாணம் என்ற பந்தம் இருட்டில் உள்ளே நுழைந்த திருடனைப்போல் ஆகிவிட்டது அவளுக்கு. ஆனந்தன் அவசரப்படுத்தினாலும் மேலும் சில வருடங்கள் தான் பொறுத்து பார்த்து இருக்கவேண்டும் என மனதிற்குள் அவள் யோசிக்கத்தொடங்கினாள்.

சிட்னி கிங்ஸ்போட் விமான நிலையத்தில் இறங்கி பதிவு செய்திருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றபோது இரவு எட்டுமணியாகிவிட்டது . ஹோட்டல் அறை ஹனிமூன் சூட் எனப்படும் இரண்டு அறைகளைக்கொண்ட ஆடம்பரமான வீடு போல் இருந்தது. வரவேற்பு அறை, அதைவிட இரண்டு அறைகள் கொண்டது அந்த சூட்.

வரவேற்பு அறையில் பழங்கள் வைக்கப்பட்டு இருந்தன. பெரிய அறையில் அழகாக விரிக்கப்பட்டிருந்த கிங் சைஸ் கட்டில் அவனது மனதில் கிளர்ச்சியை உருவாக்கியது.

‘எனக்கு பசிக்கிறது’என்றாள்சேரா.

‘அறைக்கு வரவழைப்போமா?’

‘ஹோட்டலுக்கு அருகாமையில் சைனீஸ் ரெஸ்ரோரண்டைப் பார்த்தேன். நாங்கள் அங்கு போய் சாப்பிடுவோம்.’

ஆனந்தன் மனதுக்குள் இன்று இரவு எட்டு மணியில் இருந்து காலை எட்டு மணிவரையும் அவளுடன் கட்டிலில் இருப்பது என்ற திட்டத்திற்கு மாறாக வெளியே போக இருந்தது ஏமாற்றத்தைக் கொடுத்தது.

வெளியே சென்றபோது சிட்னியின் கடல்காற்று மெதுவாக முகத்தை தடவி நாக்கில் உப்பு கரித்தது. அலையோசை கேட்காத போதிலும் கடல் அதிக தூரத்தில் இல்லை என்பதை உணர்த்தியது.

ஹோட்டலின் கீழ்பகுதியை அண்டிய பகுதியில் வரிசையாக இருந்த பல்வேறு உணவுக்கடைகளில் ஒன்றான சீனா உணவுகடையொன்றின் உள்ளே அவள் புகுந்தாள். சுத்தமாக துடைக்கப்பட்டிருந்ததால் மூடியகண்ணாடிக்கதவு அவளது முன்தலையில் இடித்தது.சற்று நிலையிழந்து பின்வாங்கினாள்

நெற்றியை தடவியபோது ‘சேரா, நீ ஓகேயா’ எனக்கேட்டான் ஆனந்தன்.

சிலகணங்களில் ‘பிரச்சினை இல்லை’ என்ற அவள் உள்ளே பிரவேசித்த போது ஆனந்தன் அவளை பின்தொடர்ந்தான்

அவள் வெஜிரேரியனாக இருந்ததால் அவளிடமே உணவை தெரிவு செய்யச் சொன்ன போது அவள் தெரிவு செய்தாள்.

‘உணவின்போது வைன் தேவையா?’ என்றபோது தலையாட்டி மறுத்தாள்

‘ஏன் மவுனமாகிவிட்டாய்?’

ஓன்றுமில்லை என தலையை ஆட்டினாள்

ஆனந்தனுக்கு மனதில் அமைதியில்லை எப்பொழுதும் இந்த ஒரு வருடத்தில் சேரா இப்படி மவுனமாக இருந்தது கிடையாது. அவனுக்கு முற்றிலும் புது அனுபவமாக அந்தத்தேன்நிலவு கரைகிறது.

‘உனது முகத்தில் குழப்பமாக இருக்கிறதே?

அவளிடம் இருந்து பதில் வரவில்லை

விரைவாக உணவு முடிந்ததும் அமைதியாக சேரா ஆனந்தனைப்பின் தொடர்ந்தபடி ஹோட்டலுக்குள் சென்றாள்.

அறைக்குள் சென்றதும் ‘என்னை மன்னிக்கவேண்டும்.’ என்றாள்.

‘நாம் ஹனி மூனுக்கல்லவா வந்தோம்’

‘ஆனந்தன் மன்னிக்கவேண்டும். எனக்கு அப்போது தலையில் அடிபட்டபோது உங்களை மெல்லிய உணர்வுள்ள கணவனாக என்னால் பார்க்க முடியவில்லை. தற்போதைய மனநிலையில் தனிமையில் படுக்க விரும்புகிறேன்’ என அந்த கதவை மூடிக்கொண்டு பெரிய அறையினுள்ளே சென்றாள் சேரா.

மெல்லுணர்வு.அது என்ன மெல்லுணர்வு? என யோசித்தபடியே அந்தச் சிறிய அறையில் இருந்த தொலைகாட்சியில் எதாவது ரொமான்ஸ காட்சிகள் கொண்ட படம் வராதா என பல சனல்களை மாற்றியபடி இருந்தான் ஆனந்தன்.

– ஞானம் மாத இதழ்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *