மூன்றாவது மாலை…!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 23, 2022
பார்வையிட்டோர்: 5,336 
 
 

“அம்மா.. மணி பன்னிரெண்டு ஆயிடுச்சும்மா… அப்புறம் உங்க இடத்தில வேற யாராச்சும் வந்து உக்காந்திடுவாங்க…
கெளம்புங்கம்மா….!

“அஞ்சல… ஒரு நிமிஷம்.. பாத்ரூமுக்கு போயிட்டு போகலாமே…!”

“இப்பத்தானேம்மா கூட்டிட்டு போனேன்..சரி.வாங்க..!

அஞ்சலைக்குத்தான் தெரியும்..இந்து பிடித்தால் பிடித்ததுதான்…

அஞ்சலை மெதுவாக அவள் கையைப் பிடித்துக் கொண்டு வெளியில் வந்து அறைக்கதவை பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டு கிளம்பினாள்..

***

இந்துமதியைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு பரிதாபமாக இருக்கும்..

எவ்வளவு பணம் இருந்தென்ன , வசதி இருந்தென்ன… கண் தெரியாத அம்மாவை வைத்துப் பாதுகாக்க முடியாத குழந்தைகள் பிறந்தென்ன.. பிறக்காமல் இருந்தென்ன.?

இந்து அம்மாவைப் பார்த்துக்கொள்ள வந்து இதோ..ஆறு வருடமாகிறது….

“அஞ்சலை…அம்மாவ பூமாதிரி பாத்துக்கணும்… நானும் அண்ணனும் வெளிநாட்டில இருந்தாலும் எங்க நெனவெல்லாம் இங்கதான் இருக்கும்…. அவுங்களுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது…

செலவுக்கு எப்ப பணம் வேணும்னாலும் இந்த நம்பருக்கு ஒரு மிஸ்ட் கால் குடு…

நாங்க வருஷத்தில ஒரு தடவ மாத்தி மாத்தி வந்து பாத்துப்போம்… ஒரு நிமிஷம் கூட தனியா விடாத..”

சொன்னபடியே இந்த ஆறு வருடத்தில் ஒரு தடவை கூட தவறாமல் நந்தினியும் கிரணும் வந்து பார்த்துவிட்டு போயிருக்கிறார்கள்…

இந்துமதியைப்போல ஒரு தாய் கிடைக்க கொடுத்து வைக்க வேண்டும்… குழந்தைகளைப் பற்றி தவறாக ஒரு வார்த்தை வாயிலிருந்து வர வேண்டுமே…!

அவர்களைப் பற்றி குற்றம் சொல்பவர்களின் வாயை மேலே பேச விடாமல் அடைத்து விடுவாள்..

“என் குழந்தைகளப் பத்தி என்ன விட நல்லா புரிஞ்சவங்க யாரு இருக்க முடியும்..?

அவங்களுக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு..கண்ணு தெரியாத என்ன வச்சிட்டு கஷ்ட்டப்படறதுக்கா அவங்கள இத்தன படிப்பு படிக்க வச்சோம்..

அவங்க நல்ல நெலைமைல இருக்காங்கன்னு கேட்டா அதுவே எனக்கு போதும்.

அவுங்கதான் என்னோட இரண்டு கண்கள்…இதப்பத்தி யாரும் பேச வேண்டாம்…”

***

இந்துமதி நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவள். நந்நகுமாரைப்போல ஒரு கணவன் கிடைத்தது அவள் செய்த பாக்கியம்.

சிலருக்குத்தான் பிறந்த வீடும் புகுந்த வீடும் மனதுக்கு பிடித்த மாதிரி அமைந்து விடும்..

இந்துமதி அந்த விஷயத்தில் யோகக்காரி..

நந்தினி.கிரண்.. !

பெற்றோர்கள் பெருமைப்படும் குழந்தைகள்… அவர்களை நன்றாகப் படிக்க வைக்க வேண்டுமென்பது மட்டுமே இருவரின் குறிக்கோளாக இருந்தது….

மேற்படிப்புக்கு வெளிநாட்டுக்கு அனுப்பியே தீருவேன் என்று நந்தகுமார் பிடிவாதமாய் இருந்தான்.

இந்துமதிக்கு அதில் அவ்வளவு விருப்பமில்லாவிட்டாலும் நந்தகுமார் சொன்னால் சரியாகத்தான் இருக்குமென்று விட்டு விட்டாள்…

எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது….

***

இந்துமதியைப் பற்றி அஞ்சலைக்குத் தெரிந்த அளவு அவளது குழைந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்..

“அம்மா.. பசங்க உங்கள கூட்டி வச்சுக்க கூடாதா.. ?
உங்கள தனியா இந்த முதியோர் இல்லத்தில விட எப்படி மனசு வந்திச்சு ?”

“அப்பிடி சொல்லாத அஞ்சலை.. நந்தகுமார் உயிரோட இருக்கிறவரைக்கும் பசங்க படிப்பு ஒண்ணுதான் அவருக்கு முக்கியமா இருந்துது…

அவரு வெளிநாட்ல போயி ஆராய்ச்சி பண்ணனும்னு ரொம்பவே ஆசப்பட்டார்…ஆனா அவங்க அம்மா தன்ன விட்டுட்டு எங்கயும் போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க..

கடைசிவரைக்கும் அந்த ஏக்கம் அவர விட்டுப் போகல.

சாகும்போது எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டாரு..!

எந்த காரணத்தைக் கொண்டும் பசங்கள தடுத்து நிறுத்திடாத…நம்ம சுயநலத்துக்காக அவுங்க எதிர்காலத்த பாழடிக்கக் கூடாது…”

“அது சரிம்மா..இப்ப உங்களுக்கு பார்வ வேற போயிருச்சே..இந்த நெலையில…..”

“எனக்கு நீ இருக்கியே..அது போறும் அஞ்சல..நீயே சொல்லு..

எங்குழந்தைங்க எனக்கு என்ன குற வச்சிருக்காங்க.. என்ன மகாராணியாட்டம் வச்சிருக்காங்களே..

எனக்கு யார் என்ன சொன்னாலும் கவலயில்ல…”

***

இந்துமதி எப்போதுமே அழகாக உடுத்திக் கொண்டு பளிச்சென்று இருப்பாள்.கண்தெரியவில்லை என்று ஒருநாள் கூட குறைபட்டுக்கொண்டதேயில்லை.

அஞ்சலை தான் அவளுக்கு எல்லாமே…பீரோ சாவியை அஞ்சலையை நம்பி கொடுத்துவிடுவாள்..!

அவள்தான் அவளுக்கு வேண்டிய புடவை , மேட்சிங் பிளவுஸ் , அப்புறம் கழுத்தில் போட்டு கொள்ள விதவிதமான மாலைகள், தோடுகள் , வளையல்கள் என்று எடுத்துக் கொடுப்பாள்…

***

“அஞ்சலை.. ஒரு ஹாப்பி நியூஸ்..கிரண் வரான்..! அவனோட கூட சாராவும் வரா..என்னோட மருமகளுக்கு நல்ல பரிசா கொடுக்கணும்..நாளைக்கு நகைக் கடைக்கு போகணும்.. சீக்கிரம் ரெடியாகணும்…”

கிரணுக்கு போனமாசம்தான் திருமணம் ஆனது.சாரா அவனுடன் கூடப் படித்தவள்..ஐந்து வருடப் பழக்கம்…அங்கேயே பதிவுத் திருமணம் செய்து கொண்டு விட்டான்..

நந்தினியும் அவள் கணவன் சுரேனும் மட்டுமே கூட இருந்தார்கள்..

அம்மாவைப் பார்க்க இப்போது வருகிறார்கள்…

***

“அஞ்சலை..இந்த டிசைன் எப்படி இருக்கு..??”

கைகளால் காசுமாலையைத் தடவிப் பார்த்து பார்த்து மகிழ்ந்து போனாள் இந்துமதி…

இரண்டு லட்சம் ….!! காசுமாலை பளபளவென்று மின்னியது…

பணத்தை எடு அஞ்சலை…!

***

“இந்தா..பத்திரமா பீரோவுல வச்சு பூட்டிட்டு சாவியக் குடு…!”

இனி கிரணும் சாராவும் வரும்வரை அவர்களைப்பற்றியேதான் பேசிக் கொண்டிருப்பாள்…

***

அஞ்சலையின் தலையில் பேரிடியாக இறங்கியது அந்த செய்தி.. அவள் கணவனுக்கு இரத்தகுழாயில் அடைப்பு..உடனே
பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவில்லையென்றால் பிழைப்பது நிச்சயமில்லை என்று கூறிவிட்டார் டாக்டர்..

உடனடியாக இரண்டு லட்சத்துக்கு எங்கே போவது..??

இந்துமதி தயவு தாட்சண்யம் இல்லாமல் மறுத்து விட்டாள்..

சம்பளத்தைத் தவிர மேற்கொண்டு ஒரு பைசா தரமாட்டாள்.. இந்த ஒரு குணம் மட்டும் அஞ்சலைக்கு பிடிப்பதேயில்லை..

அவள் குணம் தெரிந்து குழந்தைகள் வரும்போதெல்லாம் அவளுக்குத் தெரியாமல் ஐந்தாயிரம் , பத்தாயிரம் என்று கொடுத்து விட்டு போவார்கள்..

அதனால்தான் அவள் இந்த ஆறு வருஷமாக இந்துமதியை விட்டுவிட்டு போகாமல் விசுவாசமாக இருக்கிறாள்..

***

கிரணும் சாராவும் வர இன்னும் குறைந்தது இரண்டு வாரமாகும்…

அன்று கோவிலில் ஒரு பூஜை.நன்றாக அலங்காரம் செய்து கொண்டு போய்விட்ட வந்த களைப்பில் இந்துமதி சீக்கிரமே படுக்கப் போனாள்.

“இந்தா..பீரோ சாவி.. எல்லாத்தையும் எடுத்து பத்திரமா பூட்டிட்டு சாவிய என் தலைகாணிக்கடியில வச்சிடு.. நான் சீக்கிரம் தூங்கப் போறேன்..”

போனதுமே படுத்தது தான்..குறட்டை சத்தம் கேட்டதுமே அஞ்சலைக்கு தன் தெரியும்..இனி காலையில்தான் கண்விழிப்பாள்..

அஞ்சலை பீரோவைத்திறந்து இந்துமதி போட்டுக் கொண்டு போன நகைகளை உள்ளே வைத்து கதவை மூடப் போனவள் அங்கேயே ஒரு வினாடி தயங்கி நின்றாள்..

இன்னும் ஒரு வாரத்தில் கணவன் முத்துக்குமாருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும்.. கையில் பத்து பைசா கிடையாது..

புதிதாக வாங்கிய காசுமாலைப் பெட்டி அவள் கவனத்தை ஈர்த்தது..

பெட்டியைத் திறந்து பார்த்தாள்..

பேசாமல் இந்த காசுமாலையை எடுத்துக் கொண்டு போவது.அவளுக்குத் தெரிந்த கோவிந்தன் ஆசாரியிடம் கொடுத்து அதேபோல ஒரு டூப்ளிகேட் நகையைச் செய்து சத்தமில்லாமல் திருப்பி வைத்து விடுவது.

ஒரிஜினல் காசுமாலையை அடமானம் வைத்து கணவனின் ஆபரேஷனை முடிப்பது.

கடனோ உடனோ வாங்கி நகையை மீட்டு திருப்பி வைத்து விடுவது…!!

உண்ட வீட்டில் இரண்டகம் செய்வது எவ்வளவு பெரிய துரோகம்… அஞ்சலைக்கு புரியாமலில்லை.. ஆனாலும் அவளுக்கு இது பெரிய தவறாகத் தோன்றவில்லை..

அவள்தான் திருப்பி வைத்து விடப்போகிறாளே…..!!

பெட்டியிலிருந்து மாலையை மட்டும் எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு சத்தம் போடாமல் பீரோவை மூடி சாவியை தலைகாணிக்கடியில் வைத்துவிட்டாள்…

பெருஞ்சுமை கண்மேல் ஏறி உட்கார்ந்தது போல அழுத்தியது.. ஒரு வினாடி கூட இமைகள் மூட மறுத்தன…

சரியாக நாலு நாளில் டூப்ளிகேட் நகையைத் திருப்பி வைத்ததும் தான் அவள் மனது கொஞ்சம் லேசானது..

நல்லவேளை நடுவில் இந்துமதி நகை பேச்சையே எடுக்கவில்லை…

***

“அஞ்சல..இன்னியிலிருந்து பத்து நாள் வரமாட்டேன்னு சொன்னியே..மீனாவ கூட்டிட்டு வந்து வச்சிட்டுத்தான் போகணும்.. அப்புறம் சரியா பத்து நாள்ல திரும்பிடணும்…
பீரோவிலேர்ந்து ரூபாய எடு…”

ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எண்ணிக் கொடுத்தாள்…

வாங்கும்போதும் கை நடுங்கியது..

“மீனாவ இப்பவே கூட்டியாந்து விட்டுட்டுதான் நான் போவேன்…!!”

***

இந்துவைக் கையில் பிடிக்க முடியவில்லை… அடிக்கடி வாசலுக்கும் உள்ளுக்கும் நடந்தபடி இருந்தாள்…

கிரணும் சாராவும் ஓடிவந்து இந்துவைக் கட்டிக் கொண்டார்கள்..

“யுவர் மாம் இஸ் கார்ஜியஸ். வெரி வெரி ப்ரெட்டி…”

என்று கூறியபடியே அவள் கன்னத்தை முத்தமிட்டாள் சாரா…

“கிரண்….!இங்க வா..இந்தா சாவி..பீரோவத் திற..சாராவுக்கு ஒரு சர்ப்ரைஸ்…!!

அந்த நகைப்பெட்டிய எடு கண்ணா..”

கையில் நகைப்பெட்டியை வாங்கி அதைத் திறந்து அதிலிருந்த காசு மாலையை எடுத்தாள்..

“சாரா டியர்..பக்கத்தில வா….”

அவள் கழுத்தைக் தடவி மாலையை அணிவித்து கட்டிப் பிடித்து ஒரு முத்தமும் குடுத்தாள்..

இருவருமே நெகிழ்ந்து போனார்கள்…

“கிரண்….அம்மாவ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நாம கூடவே கூட்டிட்டு போலாமே…”

“எனக்கும் அப்படி ஒரு ஐடியா இருக்கு.. முதல்ல அங்க போய் நாம ஏற்பாடு பண்ணிட்டு தான் கூட்டிட்டு போகணும்.அதுக்கு ஒரு ஆறுமாசமாவது ஆகும்…”

“கிரண்..சாரா…தப்பா நெனைக்காதீங்க..எனக்கு இங்க ரொம்ப பிடிச்சிருக்கு..நிறைய ஃபிரண்ட்ஸ்..நல்ல பொழுதா போகுது..அவசரப் படாதே..”‘

அடுத்த ஒரு வாரமும் அம்மாவுக்கு பிடித்த இடத்துக்கெல்லாம் கூட்டிக் கொண்டு போனார்கள்….ஒரே கிஃப்டாக வாங்கிக் குவித்து விட்டார்கள்…. மீனாவுக்கு நாலு நாள் லீவு கொடுத்துவிட்டார்கள்…

***

இன்னும் கிளம்ப நாலு நாள் தான் இருந்தது..

இந்துமதியின் பெஸ்ட் ஃபிரண்ட் சந்திரவதனாவின் எழுவதாவது பிறந்த நாள்.. மிகவும் ஆடம்பரமாக கொண்டாட தீர்மானம் பண்ணியிருக்கார்கள் அவளுடைய மகனும் மருமகளும்..!!

இருவரும் பெங்களூரில் பெரிய டாக்டர்கள்…சொந்த கிளினிக் வைத்திருக்கிறார்கள்..

சந்திரா மிகவும் தைரியசாலி.. கணவன் ஆர்மியில் பெரிய பதவி வகித்தவர்…..!!

இந்த காப்பகத்தில் அவள் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடக்காது…

ஊரிலிருந்து அவளுடைய மகன் மதனும் மருமகளும் பேத்தி மானசியும் வந்துவிட்டார்கள்…

சாராவுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. அவளுக்கு இந்தியாவில் ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வது புதிய அனுபவமாக இருந்தது..

இந்துமதி அவளுக்கு அழகாக புடவை கட்டிவிட்டாள்…. கழுத்தில் மின்னியது காசுமாலை…

மான்சி சாராவையே சுற்றி சுற்றி வந்தாள்.. கழுத்திலிருந்த காசுமாலையைத் தொட்டு தொட்டு பார்த்தாள்..

“மானசி..உனக்கு இது பிடிச்சிருக்கா..காட்டு..போட்டு விடறேன்…”

இப்போது மானசி கழுத்தில் மின்னியது காசுமாலை..

குழந்தை எல்லோரிடமும் பெருமையடித்து கொண்டிருந்தாள்..

சாராவுக்கு இந்திய உணவு ரொம்பவே பிடித்து விட்டது… எல்லோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பி விட்டார்கள்..

சாராவும் கிரணும் இந்துமதியைக் கூட்டிக்கொண்டு கிளம்ப தயாரானார்கள்..

“மீனா..அம்மாவ கூட்டிட்டு நீ முன்னால போ.. நாங்க இன்னும் பத்து நிமிஷத்தில வந்திடுவோம்…”

“சாரா.. உன் காசுமாலைய வாங்கிக்கோ…!!”

“மான்சி..ஆன்ட்டிக்கு பை சொல்லு…”
“பை ஆன்ட்டி…!”

கழுத்தில் மாலையைப் காணவில்லை..

“மான்சி..மாலை எங்கம்மா…??”

“மாலையா….?”

குழந்தை சுத்தமாக மறந்து விட்டிருந்தாள்…

“கழுத்தில போட்டு விட்டேனே..மறந்திட்டியா….?”

குழந்தை அழ ஆரம்பித்துவிட்டாள்…

அம்மா காவேரிக்கு ஒன்றும் புரியவில்லை.காலையில் மிகவும் பிஸியாக இருந்ததால் நடந்தது ஒன்றுமே தெரியாது..

அவளுக்கு தர்மசங்கடமாகிவிட்டது..

ஒரு இடம் விடாமல் தேடியும் மாலை கிடைக்கவில்லை…

சந்திரவதனா ரொம்ப ரோஷக்காரி.

“மதன்..ஆன்ட்டிகிட்ட மாலை எவ்வளவு பவுன் , என்ன விலைன்னு கேட்டு உடனே கடைக்குப் போய் வாங்கி குடுத்திட்டுதான் ஊருக்கு கிளம்புற…!”

கிரண் எவ்வளவு தடுத்தும் மதன் கேட்கவில்லை..உடனே கடைக்குப் புறப்பட்டு விட்டான்..

***

அஞ்சலை எதிர்பார்த்தது ஒன்றுமே நடக்கவில்லை…

சொக்கலிங்கம் ஒரு வாரம் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தான்.

அறைக்கு வந்து மூன்று நாளில் மறுபடியும் சீரியசாகிவிட்டது..

கடைசியில் டாக்டர் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார்.

அஞ்சலை எதிர்பார்த்தற்கு மேலேயே காசு செலவழிந்து விட்டது…

காசும் போய் கட்டிய புருஷனும் போய் அஞ்சலை பித்து பிடித்தவள்போலானாள்….

காசு மாலை……?? அதை மீட்கும் நிலையிலா இருக்கிறாள் ??

கிரணும் சாராவும் கிளம்புவதில் மும்மரமாயிருந்தார்கள்..

“அம்மா..அஞசல புருசன் போயிட்டாரும்மா.. நானும் இன்னும் ஒரு வாரத்தில ஊருக்கு போவணும்…”

மீனாவும் கெடு வைத்து விட்டாள்..

“அம்மா… நானும் சாராவும் போய் அஞ்சலயப் பாத்துட்டு ஊருக்கு போறோம்.. பாவம் சொக்கலிங்கமும் போயிட்டாரு ….”

“பாவம்..சாரா எதுக்கு…நீ மட்டும் போய் பாத்துட்டு வந்தால் போதாதா…??

***

அஞ்சலை வீட்டில் இன்னும் உறவுக்காரர்கள் கூடியிருந்தார்கள்..

அஞ்சலை கிரண் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தயங்கினாள்..

கிரண் அஞ்சலை கையில் பத்தாயிரம் ரூபாயைத் திணித்தான்..

அஞ்சலை உறவுக்காரர்கள் முன்னால் பேசத் தவித்தாள்..

“தம்பி.. சாராம்மாவப் பாக்க முடியாம போயிடிச்சே…அம்மா எப்பப்பரு அவுங்க நெனப்புலேயே இருந்தாங்க…!!”

“ஆமா அஞ்சல..உன்ன கூட்டிட்டு போயி காசு மால வாங்கி வச்சிருந்தாங்க போலியே…ஆசையா கழுத்தில் போட்டு விட்டாங்க…

அடுத்த வருஷம் அம்மாவ கூட்டிட்டு போயிடுவோம்.. அதுவரைக்கும் நீதான் பாத்துக்கணும்…”

“தம்பி.. பதினாறாம் நாள் காரியம் முடிஞ்சதும் உடனே வந்திடமாட்டேன்..!! அதுவரைக்கும் மீனாவ இருக்கச் சொல்லியிருக்கேன்….”

***

அஞ்சலை ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.. இனியும் மூடி மறைத்தால் நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

இந்துமதியிடம் நடந்ததெல்லாம் சொல்லிவிட வேண்டும்…

இவ்வளவு நம்பிக்கையையும் பிரியத்தையும் வைத்திருக்கும் அந்த குடும்பத்தை இனிமேலும் ஏமாற்ற முடியாது..

***

“அஞ்சலை …வா…வா…! உன் குரல கேட்டு எத்தன நாளாச்சு…??

இப்பத்தான் எனக்கு உயிரே வந்தமாதிரி இருக்கு…!!”

“அம்மா…உங்கள பத்திரமா அஞ்சல கிட்ட ஒப்படைச்சிட்டேன்…

வரேம்மா….!!

வரேன் அஞ்சலை…”

மீனாவும் கிளம்பி விட்டாள்…

இந்துமதி ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தாள்…

அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்துவிட்டு மீதியிருக்கும் வேலையெல்லாம் முடித்துவிட்டு இந்துமதியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள் அஞ்சலை…!!!

“அம்மா..உங்க கிட்ட ஒரு முக்கியமான சமாச்சாரம் சொல்லணும்…!”

“இரு..அஞ்சலை.. நானும் உங்கிட்ட ஒரு முக்கியமாக விஷயம் சொல்லணும்… முதல்ல அதக்கேளு….”

இந்துமதி சாரா வந்ததிலிருந்து நடந்தது ஒன்றுவிடாமல் அஞ்சலையிடம் விவரமாக சொல்லச் சொல்ல அவளுக்கு தன் காதுகளை நம்ப முடியவில்லை…

‘ இது இன்னா கூத்து…?? அந்த குழந்த எதுக்கு காசு மால மேல ஆசப்பட்டு வாங்கி போட்டுகிச்சு…?? அப்புறமா அது ஏன் தொலையணும்…??

யாரு அந்த மாலைய எடுத்திருப்பாங்க..??

ஐய்யோ…! அது தங்கம்னு நெனச்சு புதுசா வாங்கி குடுத்த அந்த மவராசி என்னிய எவ்வளவு பெரிய ஆபத்தில இருந்து காப்பாத்தி இருக்காங்க….??

“என்ன கைமாறு …??”

அஞ்சலை பேச்சு வராமல் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்து விட்டாள்….

“அஞ்சல. அஞ்சல..இருக்கியா.? என்ன சத்தத்தையை காணம் உன்னால நம்ப முடியல இல்ல..?

“ஆமாம்மா…. நம்பத்தான் முடியல..”

ஆமா..நீ ஏதோ முக்கிய சமாச்சாரம் சொல்லணும்னு சொன்னியே…!!

“அது ஒண்ணுமில்லம்மா…. நானும் அந்த காசுமாலைய பத்திதான் சொல்லணும்னு இருந்தேன்…

சாராம்மா கழுத்துக்கு அது எத்தினி அழகா இருந்திருக்கும்..நானு பாக்க குடுத்து வைக்கலியே…

அம்மா.. உங்க மனசு சொக்கத் தங்கம்…!! உங்களுக்கேத்த மருமகதான் வந்திருக்கு…!

உங்களுக்கு ஒரு குறையும் வராது..!!

தொட்டதெல்லாம் பொன்னாகுற கைம்மா உங்க கை…”

வழுவழுப்பான அவளது கைகளைப் பிடித்து தடவிக் குடுத்தாள் அஞ்சலை…!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *