மூத்திரக் குழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,743 
 
 

மூத்திரக் குழி பத்தி எங்க ஊர்ல கொறஞ்சது முப்பது கதையாவது கேட்ருப்பேம். சின்னவயசுல பாம்படக் கெழவி சொன்ன கததான் மொதோமொதல்ல நாங் கேட்டது. வெத்தில போட்ட எச்சி தெறிக்க பாம்படக் கெழவி சொல்வா பாருங்க கத… சாய்ங்காலம் ஆத்தா தேடி வார வரைக்கும் அங்கனையே கெடப்போம்.

“அப்ப, கட்டபொம்மனுக்கு சமுத்திரம்னு ஒரு எதிரி இருந்தாம்.” கெழவி சொல்லும். “சமுத்ரம் ஒரு கள்ளன். ராவெல்லாம் போய் களவாண்டுட்டு காலையில காணாமப் போவாங். கட்டபொம்மனுக்கு சேதி போச்சு. சமுத்திரத்த புடிக்க மாறுவேசத்துல அலஞ்சான் கட்டபொம்மன்.

ஒருநா சமுத்ரம் களவாணப் போவையில அங்கன ஒரு அழகானப் பொம்பளயப் பாத்தான். அழகுன்னா அவ்ளோ அழகு. கன்னமெல்லாம் பூப்போல இருந்துச்சு. கண்ணெல்லாம் வண்டுபோல ஓடுச்சு, அவ நடையும், ஒடையும்.. சமுத்ரம் மயங்கிட்டான். அவள எப்டியாவது புடிச்சிரணும்னு பின்னாலேயே போனாங். கொஞ்ச தூரம் கடந்த பொறவுதான் சமுத்திரம் கட்டபொம்மங் கோட்ட வாசல்ல வந்திருக்கோம்னு தெரிஞ்சுகிட்டான். அந்த அழகான பொம்புள கட்டபொம்மந்தான். அப்புறம் தப்பிக்க ஏலுமா?

பிடிபட்ட சமுத்ரத்துக்கு மரணம்னு விதியாச்சு. நம்ம மூழி மல இருக்குல்லா அந்த மல உச்சிலதான் அப்ப தலைய வெட்டுத மேட இருந்துச்சு. சமுத்ரத்துக்க கடசி ஆச என்னான்னு கட்டபொம்மங் கேட்டான். எந்தலய வெட்டும்போ அது எங்கன வுழுதொ அங்கன என்ன பொதைக்கணும்னான் சமுத்ரம். அட இவ்ளோதானான்னு சரிண்ணாங் கட்டபொம்மன். நெறஞ்ச பௌர்ணமி ராவுல ஊரே கூடி நின்னு பாக்கையில சமுத்ரந்தலய வெட்னான் ஏவலாளு. தல உருண்டு கீழ உளுந்துச்சு… அது கீழ அங்கன உளுந்து கெடக்கும்னு பாத்தா…தல மலையில உருண்டு கீழ வந்துட்டே இருந்துச்சு.. எல்லாரும் பின்னால ஓடியாராவ. தல உருளுது உருளுது உருண்டுட்டே இருக்கு. எல்லாருக்கும் ஆச்சரியம்ணா ஆச்சரியம். கடேசியா தல உருண்டு இங்க மூத்ரக்குழில இருக்க கெணத்துல வுழுந்துச்சு. கட்டபொம்மனும் அவங் கடேசி ஆசைய நெறவேத்தணுமேன்னு கெணத்துல பொணத்தபோட்டு மூடிட்டாங். அண்ணையிலேந்து அந்த எடத்துக்கு பேரு சமுத்ரக் குழின்னு ஆச்சு. நல்லா தண்ணி வந்துட்டிருந்த கெணத்துல தண்ணியே இல்லாம போச்சு. சமுத்ரக்குழிதான் பொறவு மாறி மாறி மூத்ரக் குழின்னு ஆச்சு.”

பாம்படக் கெழவி சொல்லுத கதயில அந்தக் கெணறு இருக்கது மட்டுந்தான் உண்ம. கெழவிக்கு எப்டி இந்த கத தெரியும்னு யாருக்குந்தெரியாது. அவளா உண்டுபண்ணதா இல்ல அவளுக்கும் யாரோ சொன்னாவளான்னு யோசிச்சிருக்கேன். பாம்படக் கெழவி செத்தண்ணைக்கு இநதக் கதையுஞ் செத்துபோச்சி.

எங்க ஊர்ல வெளிக்குப் போற எடந்தாங்க மூத்திரக் குழி. சமுத்ரக் குழிங்கறதெல்லாம் கட்டுக்கத. கிராமத்துல கக்கூசா இருந்துச்சு? பக்கத்து ஊர்லயெல்லாம் அவனவன் வெளையில போயிருவானுவ. எங்க ஊர்ல வெளையெல்லாங்கெடையாது. ரெண்டே ரெண்டு பெரிய தெருதான். ரெண்டு தெருவுக்கும் நடுவுல மூத்ரக்குழி. சின்னக் குழியில்ல அது பெரிய எடம். காடு வளந்து கெடக்கும். பொதருக்கு நடுவுல பாழடஞ்ச கெணறு. கெணத்த தூரத்திலேந்து பாக்கத்தான் முடியும். பக்கத்துல போவமுடியாத அளவுக்கு முள்பொதரு. பாம்பும் ஓணானும் ஓடும். ராத்ரில ஒருத்தனும் போமுடியாது. அதுக்கு இருட்டு மட்டும் காரணமில்ல. மாடங்கோயில் பூசாரி சொல்த கததான் முக்கியமான காரணம்.

“திருவாங்கூர் மகாராசங்கிட்ட கரியாளுண்ணு ஒரு மந்த்ரவாதி இருந்தாங். மகா கெட்டிக்காரெய்ன். அவனுக்குத் தெரியாத மாந்த்ரீகமே கெடையாது. மழ வேணும்னா கொண்டு வருவான், போர்ல செயிக்கவெப்பாங், நோயக் கொணமாக்குவான், கரியாள் இருந்தவரைக்கும் மகராசாவுக்கு எதிரிண்ணு ஒருத்தனுமில்ல. நான் சொல்லுதது ஒரு அஞ்நூறு அறநூறு வருசத்துக்கு முன்னால. மனுசனுக்கு எந்த ஆச வந்தாலும் தப்பிச்சரலாம் பெண்ணாச வந்துச்சுண்ணா?” கண்ண உருட்டிட்டு எச்சரிக்கமாறி கேப்பாரு. “கரியாளு மகாராசாவுக்க மக மேல ஆச வச்சாங். அவள யாருக்குந்த் தெரியாம, அவளுக்கே தெரியாம மந்திர சக்தியால அடஞ்சான். அவளுக்கும் கொளந்த உண்டாச்சு.

மகாராசா யாரையெல்லாமோ சந்தேகப்பட்டாரு ஆனா கரியாள மட்டும் சந்தேகிக்கவேயில்ல. அவ்ளோ நம்பிக்க, பாசம். கரியாளு நேராக் கேட்ருந்தா மகளக் குடுத்ருப்பான் ராசா. கோவத்துல ராசா கரியாளக் கூப்டான். எம் மவளுக்கு இதச் செஞ்சவன் அணுவணுவா சாவணும்னாம். கரியாளுக்கு அரசனுக்குத் துரோகம் பண்ணிட்டோமேன்னு வருத்தமாப் போச்சு. நேரா போனான் அரசன்ட. ‘ராசா ஒம்ம மவளக் கெடுத்தவன அழிக்கப்போறேன். ஆனா நம்ம நாட்டு எல்லைய உட்டு வெளியப் போனாத்தான் இதச் செய்யமுடியும். எனக்கு ஒரு குதிர தா’ண்ணான். ராசா குதிரயக் குடுத்தான். அன்னைக்கு ராத்ரி கரியாளு குதிரயில ஏறி நம்மூரு மூத்ரக் குழிக்கு வந்தான். அங்க வச்சி அவனோட பூசைய ஆரம்பிச்சாங். மந்திரஞ் சொல்லச் சொல்ல அவன் ஒடம்பு கொஞ்சம் கொஞ்சமா அழிய ஆரம்பிச்சுச்சு. இதுக்கெடையில ராசாவுக்கு சந்தேகம் வந்துச்சு. கரியாளு ஏன் எல்லைய விட்டுப் போறாண்ணு அவன் போன தெசைக்கு அவனத் தேடி வந்தாரு.

ராசா வரச்ச பூச உச்ச கட்டத்துக்கு போயிட்டிருக்கு. வேண்டாம் வேண்டாம்னு கெஞ்சுறாரு ராசா. ஆனா… கரியாளு ஒடம்பு அழிஞ்சுபோச்சு. கரியாளு மந்த்ரவாதி செத்த பெறவு அவனோட மொத்த ஆயுதமெல்லாம் அங்கனையே சுத்திட்டிருக்கு. ராத்ரியில அங்கன சத்தங் கேக்கதும், கூத்தும் கும்மாளமும் நடக்கதும் அதுக செய்யதுதாம்ப்டே.”

பூசாரிக் கத சொல்லையில அவரு மொகத்தப் பாத்துக் கேட்டியண்ணா இன்னும் பயந்துருவிய. கெடா மீச ஆடும், அவரு புருவமே மெரட்டுத மீசதான், பெரீய கிர்தா, நீண்ட தலமுடி தேகமெல்லாம் முடி, கம்பீரமான ஆளு. ஒரு கட்டத்துல கண்ண ஒரு உருட்டு உருட்டுவாரு, அப்பவே கரியாளு இவர்தானோண்ணு தோணும்.

மந்த்ரவாதியோட ஆயுதம்ணா கத்தி கபடாயெல்லமில்ல. அதெல்லாம் குட்டி பிசாசுவ. அவன் ஏவலுக்கு காத்துருந்து சொல்றதச் செய்யுற குட்டி பிசாசையெல்லாம் ஆயுதம்ணு சொல்வாவ.

நான் சின்னதாயிருக்கும்போ ஊர் தெருவுல வெளக்கெல்லம் கெடையாது. ஏழுமணிவாக்குல செமையா இருட்டிரும். அங்கன பண்ணையார் வீட்டு முத்தத்ல லாந்தருக்கு கீழ ஒக்காந்து ஊர் பிள்ளவ எல்லாம் படிக்கும். அந்த இருட்ல மூத்ரக்குழி பக்கம் யார் போவா? அதனால கரியாளு கதைய ஊர்ல நம்பவேண்டியதாத்தான் போச்சு.

இதுல அவனவன் கற்பனையும் சேந்துரும். நேத்து ராத்ரி பனமரம்போல ஒரு ஆளு நட்ந்து போச்சுண்ணு ஒருத்தஞ் சொல்வான், இன்னொருத்தன் முதுவுல யாரோ அடிச்ச மாறி இருந்துச்சு, திரும்புனா யாருமேயில்லம்பான், அந்தப் பக்கம் போனா எருக்கம் வாசன வருதும்பான், ஒருத்தஞ் சூடம்ணு சொல்வாங். ஆனா எனக்கு நம்பிக்கயில்லாமயிருந்துச்சு, எந்தாத்தா சாவுற வரைக்கும்.

அப்போ எனக்கு ஏழெட்டு வயசிருக்கும். 1965ன்னு நெனைக்கேன். விடியக்காலம். எங்க ஆத்தா ஒப்பாரி சத்தம் கேக்க முழிச்சேன். “எல ராசா. ஒங்க தாத்தா மூத்ரக் குழியில செத்து கெடக்காம்.”ணா. எப்டி ஓடுணேன்னே தெரியாது புதரத்தாண்டி கல்லு முள்ளு பாக்காம ஒட்டிப் போனேங். கெணத்தடி பொதருக்குள்ள தாத்தா செத்து கெடந்துச்சு. வாயில கொஞ்சம் ரத்தம் ஒறஞ்சுபோயிருந்துச்சு. கண்ணு பெருசா யாரையோ பயத்துல வெறிச்சு பாத்தமாறி, கழுத்துல கருஞ்செவப்பா தோலு சுருங்கியிருந்துச்சி. எங்கப்பா கல்லுல உக்காந்து அழுதிட்டிருந்தாவ. என்னக் கூப்ட்டு பக்கத்துல நிக்கவச்சி கட்டி புடிச்சாவ. “தாத்தாவப் பாத்தியால?”ண்ணு அழுதுட்டே கேட்டாவ. பெறவு விசும்பிட்டே இருந்தாவ.

ஊரெல்லாம் இதாம் பேச்சு. மாவெளையான் பேய் நெரிச்சு செத்துட்டாண்ணு சொன்னாவ. அண்ணையிலேந்து இருட்டுனதுக்கப்புறமா மூத்ரக்குழி பக்கமே போமாட்டேன். தாத்தாவ பேயடிச்சுச்சுன்னு ஊர்ல எல்லாரும் இண்ணை வரைக்கும் பேசுவாவ.

ஒரு நாலு வருசத்துக்கு முன்னால ஒரு தற்கொல கேஸ் விசயமா பெரியாஸ்பத்ரி பொண அறைக்குப் போவேண்டியிருந்துச்சு. அங்க டாக்டர் நமக்கு தெரிஞ்ச ஆளு. ரெண்டு மூணு கேசக் காமிச்சாரு. அப்ப ஒரு பொணத்த பாத்தேன். அப்டியே எந்தாத்தா செத்த கணக்குலேயே கெடந்துச்சு. அதே முழி, வாயில ரத்தம் எந்தாத்தனுக்கு கழுத்துல இருந்தாப்ல செவப்பா தடம். டாக்டர்ட கேட்டேன் ‘என்ன கேஸ் இதுண்ணு’. ‘கழுத்த நெரிச்சு கொன்னுசுக்காங்கப்பா’ண்ணாரு. மூத்ரக்குழி பேயடிச்சு எந்தாத்தா செத்ருக்க வாய்ப்பில்லண்ணு தெரிஞ்சது. எந்தாத்தா செத்து கொஞ்ச நாள்லயே அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் தகறாறாயிருந்துச்சு. கூட்டி கழிச்சா தாத்தாவக் கொலதான் செஞ்சிருப்பானுவ. ஊர்ல இருந்த பேய் பயத்துல இதையெல்லாம் யாரு பாக்கா. அப்ப போலிஸ் ஸ்டேசனெல்லாம் டவுன்லதான் இருந்துச்சு. ஊர்ல வெட்டு குத்துன்னாலே போலிசுக்கு தெரியாது. கெழவன் செத்ததையா பாக்கப்போறானுவ? யாரு கொன்னதுண்ணு இப்பவா தேட முடியும்? எங்கப்பனாகூட இருக்கலாம்.

அந்த நாத்தம் புடிச்ச மூத்ரக் குழிக்கு இத்தன கதையாண்ணு யோச்சிச்சிருகேன். மாதாக் கோயில் சாமியார் ஒருத்தருண்டு. பேரு எரோணிமூஸ். பக்தியான ஆளு. எங்ககிட்ட நல்லா பழகுவாரு. அவர் காலத்துலதான் மாடன் கோயில் திருநாளைக்கு கீழ தெருவுல மாதா கோயில் வரைக்கும் லைட் போடுத பழக்கம் ஆரம்பிச்சுது. அவரு ஒரு மூத்ரக் குழி கத சொல்வாரு.

1600வாக்குல இங்கனோடி ஒரு வெள்ளக்கார சாமியாரு வேதம் பரப்பிட்டே போனாராம். அவரு இங்கோடி வரையில பயங்கர தாகம் எடுத்துச்சாம். அப்ப மூத்ரக்குழி இருக்க எடத்துலயெல்லாம் வயக்காடாம். வயலுக்கெல்லாம் அங்க இருந்த ஒத்தக் கெணத்துலேந்துதான் தண்ணியடிப்பாவளாம். அப்ப அந்த சாமியாரு இந்த கெணத்துபக்கமா வந்து தண்ணி கேட்ருக்காரு. ஆனா ஊர்க்காரனுவெல்லாஞ்சேந்து தண்ணி குடுக்கமாட்டேன்னுட்டாவ. அந்த சாமியாரும் கண்ண மூடிட்டு மந்திரம் சொல்லிட்டு சிலுவையத் தூக்கி காட்னாராம். எல்லார் கண்ணுமுன்னாலயும் கெணத்து தண்ணி வத்திப்போச்சாம். அண்ணையிலேந்து அந்தக் கெணத்துல தண்ணியிலாமப் போவ, வயக்காடெல்லாம் கருவேலங்காடாச்சுன்னு சொல்வாரு எரோணிமூஸ்.

இந்தக் கத நல்லாயிருக்கேண்ணு நம்ம இஞ்சினியர் பயகிட்ட கேட்டேன். ஒரு சிரி சிரிச்சான். “மாமா. இந்த எடத்துல வயக்காடு இருந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்ல. அந்தக் கெணறு இருக்கே அது தோண்டி, இங்க தண்ணி வராதுண்ணு பாதில மூடிட்டானுவ. இப்பவும் அங்கோடி தேடுனா தண்ணியே கெடைக்காது”ம்பான்.

இப்டியாபட்ட மூத்ரக்குழி, என் தாத்தனுக்கு நெனவு தெரிஞ்ச நாள்லேந்தே ரெண்டு தெரு மக்களும் காலையில வெளிக்கு ஒதுங்குற எடமாத்தான் இருந்துச்சு.

அவனப் புடிச்சி இவனப் புடிச்சி 11 வருசத்துக்கு முன்னால, எங்க ஊர்வழியா பஸ் வுட்டானுவ. பஸ்ல வர்ற போற வெளியாட்கள் எல்லாரும் இந்த எடம் வந்துச்சுண்ணா மூக்கப் போத்திக்கிருவானுவ. எங்களுக்கு சங்கடமாயிருந்தாலும், ஊர் பயவ ஒதுங்க ஒரு எடம் வேணுமே?

அப்ப ஒருநா, நம்ம மஸ்கத் பண்ணையார் அங்க ரோட்டோரமா சைக்கிள உருட்டிட்டு வந்தாங். பண்ணையார்னா யாரோ எவரோன்னு நெனைக்காதிய. எங்கூட படிச்ச பய. கஞ்சப்பய. அப்பந்த் தாத்தன் சேத்துவச்ச சொத்த வச்சு பொழப்பு நடத்துதான். ஆனா எங்கூட நல்லா பழகுவான். வேல வெட்டி இல்லாததால சைக்கிள்ள போயி தோப்பு தொறவ பாத்துட்டு எங் கடைக்கு வந்து கத பேசுததுதான் அவன் பழக்கம். எதுல உட்டென்.. ஆங் பண்ணையாரு சைக்கிள உருட்டிட்டு வரும்போது 19ஆம் நம்பர் பஸ்லேந்து எவனோ மூத்ரக்குழியப் பாத்து காறித் துப்பிட்டான். அது நேரா மஸ்கத் பண்ணையார் மூஞ்சில போய் பட்டுச்சு. அண்ணைக்கு கடைக்கு வரும்போதே கெட்டவார்த்தயால அறுத்துட்டே வந்தான். எல என்னாச்சுண்ணேன். சொன்னாங். ‘இந்த மூத்ரக் குழிய தூக்கணும்ல’ண்ணான்.

நானும் அவனும் போயி எம் எல் ஏவப் பாத்து பேசுனோம். அவன் பண்ணையாருக்கு தூரத்து சொந்தம். ரெண்டுவாரங் களிச்சு வாங்கண்ணான். போனோம். அண்ணாச்சி அந்த எடம் பூரா பொறம்போக்கு நெலந்தாண்ணான். இப்ப ஆட்கள் ஒதுங்குற எடத்த திடீர்னு தூக்க ஏலாது. அங்கன மொதல்ல ரெண்டு கக்கூஸ் கட்டுவோம். பெறவு பாக்கலாம்ணான். ரெண்டு மாசத்துல கீழ தெருவுல ரெண்டு செட்டு மால தெரிவுல ரெண்டு செட்டுன்னு அரசாங்க கக்கூஸ் கட்டி உட்டானுவ. ஊர்ல திருவிழா கணக்கா கொண்டாடுனாவ.

எம் எல் ஏ வந்திருந்தான். அப்ப ஒரு விசயஞ் சொன்னான். ‘அண்ணாச்சி. இந்தப் பக்கத்துல நல்ல ஸ்கூல் எதுவும் இல்ல. ஊர்ல மூத்ரக் குழிய ஒதுக்கித் தந்தா ஒரு ஸ்கூலக் கட்டிரலாம்ணான்’. ரெண்டு தெருவுஞ் சேந்து முடிவெடுத்து இனி மூத்ரக்குழில ஒதுங்கக்கூடாதுன்னு முடிவெடுத்தோம். ஊர் கெணத்துலேந்து டாய்லெட்டுக்கு தண்ணி வசதியெல்லாஞ் செஞ்சோம். சுகாதார ஆபீஸ்லேந்து டாய்லெட்ல எப்டி போவணும்னு படமெல்லம் போட்டு காமிச்சானுவ.

அடுத்த ரெண்டு வருசத்துலேயே மூத்ரக்குழி இருந்த எடத்துல ஒரு உயர் நிலைப்பள்ளி வந்துச்சு.

அரசு உயர்நிலைப்பள்ளின்ன யாரும் அதக் கூப்பிடுறதில்ல. மூத்ரக்குழி பள்ளிக்கூடம்னுதான் கூப்டுதானுவ.

– ஜூன் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *