மூத்தவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2017
பார்வையிட்டோர்: 6,294 
 
 

எதிர் வீட்டில் வழக்கம் போல் இன்றும் சண்டை. எப்போதும் போல் பெண்ணின் குரலே ஓங்கி ஒலித்தது.

கேசவன் நூத்துக்குப் பத்து வார்த்தைகள் ஆரம்பத்தில் பேசினான். இப்போது ஒரு வார்த்தைகூட பேசவில்லை. குரல் கேட்கவில்லை.

“நீங்க ரோசபாசமில்லாதது போல இப்படி மௌனமா இருந்தே என் கழுத்தை அறுக்குறீங்க. மொதப் பொண்டாட்டி செத்ததும் என்னைக் கலியாணம் பண்ணியிருக்க வேணாம். பேசாம…பெத்த பொண்ணு, புள்ளைங்களோட ஆக்கித் தின்னிருக்கனும். இல்லே…. அதுங்களை எங்காவது சொந்தபந்தம், அனாதை ஆசிரமத்துல சேர்த்துட்டு நீங்க சாமியாராவோ சன்னியாசியாவோ ஆகி இருக்கனும்.”- ஜானகி என்றும் போல் அவள் இறுதி வார்த்தைகளை வீசினாள்.

கேசவன் எப்போதும் போல் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு வெளியே வந்தான்.

தனலட்சுமிக்கு அவனைப் பார்க்கப் பாவமாக இருந்தது. அழைத்துக் கேட்க யோசனையாக இருந்தது. ~என்ன அவர்கிட்ட போட்டுக் கொடுக்குறீங்க.| ஜானகி பேசலாம். அல்லது தவறாக நினைக்கலாம்.

கேசவன் பிள்ளையாய்ப் பிறந்த நாளிலிருந்து இன்றுவரை எதிர் வீடு. இவள் கண்ணுக்குத் தெரிந்து வளர்ந்த பிள்ளை. அவன் படித்து அரசாங்க வேளையில் கைநிறையச் சம்பளம். மிகவும் நல்லபிள்ளை என்பதால் ஏழை வீட்டில் பெண்ணெடுத்தான்.

விசாலம் கோயில் குருக்கள் பெண். அவள் நான்கு பெண்கள் கொண்ட பெரிய குடும்பம். இரண்டு பெண்களைப் பெற்றோர்கள் இருப்பதை வைத்து எப்படியோ கரை சேர்த்து விட்டார்கள். இரண்டு முடித்ததால் குடும்பம் ரொம்ப தடுமாற்றம். அந்த கஷ்டத்தைப் பார்த்துதான் கேசவன் எதுவும் தேவை இல்லை என்று பெண்ணெடுத்தான்.

விசாலம் தங்கமானப் பெண். அழகானவள். கணவன் மனம் கோணாமல் நடப்பவள். ரொம்ப அன்பு ஆசையாய் குடித்தனம் செய்தாள். இரு ஆண், ஒரு பெண் பிள்ளைகள் பெற்றுப் போட்டாள். இந்த காலத்தில் மூன்று அதிகம். முதல் இரண்டும் ஆணாப் பிறந்ததால் கேசவனுக்குப் பெண்ணைப் பார்க்க ஆசை. அவனுக்குப் பெண் பிள்ளைகள் மேல் எப்போதும் பிரியம். தெருவில் எவர் குழந்தையாக இருந்தாலும் எடுத்துக் கொஞ்சுவான். அது போல எங்கு சென்றாலும் பெண் பிள்ளைகள் கண்ணில் பட்டால் தூக்கிக் கொஞ்ச கூச்சப்படமாட்டான். ஆகையால் அவள் மூன்றாவது பெற்றுக்கொள்ள சம்மதித்து அவன் ஆசையை விசாலம் கடவுள் புண்ணியத்தில் நிறைவேற்றினாள். எப்படி சீரும் சிறப்புமாக வாழ்ந்தாளோ அவ்வளவு சீக்கிரமாய் ஒரு கார் விபத்தில் பலியாகி காணாமல் போனாள்.

கேசவன் இரண்டாம் திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. மாமனார், மாமியாரும்@ மற்றும் சுற்றம், அக்கம் பக்கத்தாரும் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு இவன் படும்பாடைப் பார்த்து விசாலம் தங்கை ஜானகியை வற்புருத்தி கட்டி வைத்தார்கள். அவள்தான் அக்காளுக்கு நேர் எதிரியாக இப்போது குடித்தனம் செய்கிறாள். கணவனைப் போட்டுத் தாக்குகிறாள்.

இவ்வளவிற்கும் ஜானகிக்கு எந்த குறையுமில்லை. கேசவன் முதல் மனைவியைப் போலவே இவளை வைத்திருக்கிறான். ஆனால் இவளுக்குத்தான் கணவன் படுத்தால் குறை, எழுந்தால் குற்றம் கொண்டு குதறுகிறாள்.

ஏன்…?

எவன் எவ்வளவு தங்கமானவனாக இருந்தாலும் எந்தப் பெண்ணுக்கும் இரண்டாம் மணத்தில் விருப்பம் இருக்காது. தன்னைப் போலவே தனக்கு வாய்ப்பவனும் புதிதாய், இளமையாய் இருக்க வேண்டுமென்பது எல்லா கன்னிப் பெண்ணுக்குள்ளும் இருக்கும் எதிர்பார்ப்பு. இது மனித இயல்பு. இது பொய்க்க…ஜானகி இப்படி நடக்கிறாள். போகப் போக சரியாகப் போய்விடும் என்று புரிந்தே கேசவன் அவள் ஏட்டி போட்டி எதிர்ப்பிற்கு என்றும் பணிந்தே போகிறான்.

அவள்தான் இவன் மனம் தெரியாமல்……

“பொண்டாட்டி செத்தா புருசனுங்க புதுமாப்பிள்ளை ஆசையிலதானே கட்டிக்கிட்டீங்க.”

“நாலு வயித்துக்கு ஆக்கிப் போட ஆள் தேவை. அதான் என் கழுத்துல கத்தி.”

“பெத்ததுகளுக்கு ஆயா வேணுமிங்குற கட்டாயம்.” என்று தினம் தேளாக கொட்டுகிறாள்.

கேசவன் ஆரம்பத்தில், “நான் மறுமணம் கேட்கவில்லை…ஆசைபடவில்லை” என்று தன் தரப்பு வாதத்தை எடுத்து வைத்தான். எடுபடாமல் போக…. பத்துக்கு ஒரு வார்த்தையாக பேசி இப்போது நூற்றுக்கு ஒரு வார்த்தையாக சுருங்கி விட்டான்.

இருந்தாலும் அவன் ஜானகிக்கு எந்த குறையும் வைக்கவில்லை. அவள் கேட்காமலேயே பட்டுப் புடவை, பிறந்த நாளுக்கென்று புது துணிவகைகள், அலுவலக சேமிப்பில் நகைவாங்கும் அளவிற்கு தேறினால் உடன் நகை@ நாகரீகம், நறுவிசாக வெளியிடங்களுக்கு அழைத்துப் போதல்@ குழந்தைகளோடு சுற்றுலா என்று ஒரு குறையும் வைக்காமல் கொண்டாடுகிறான். ஆனால் அவளோ அதற்கும் குற்றம் குறை கண்டுபிடித்து, “உங்க உறுத்தல் என்னை இப்படியெல்லாம் கொண்டாடி குளிப்பாட்டறீங்க” சொல்கிறாள்.

கனிந்த மரம் கல்லடிபடும் கதையாய் கேசவன் மௌனமாகிப் போவதைத் தவிர வேறு வழி தெரியாமல் நடக்கிறான்.

மாமியார் மாமனார்…மருமகன் படும்பாட்டைப் பார்த்து, “கொத்தாதே !” என்று மகளைக் கண்டிக்கத்தான் செய்கிறார்கள். அவள் கேட்டால்தானே !

கேசவன் ரொம்ப நல்லவன் வல்லவன் என்பதால் பொறுத்துப் போகிறான். அவனே ஒரு சாதாரண மனிதனாய் இருந்தால்…… அடிதடி என்று குடும்பமே குதர்க்கம், குட்டிச்சுவர்.

“ஐயோ மருமவனே !” என்று பாய்ந்து பரிதாப்பட்டு, “நானிருக்கிறேன் கவலைப்படாதே! ஒரு கால் போனால் மறுகால் தருகிறேன்.” என்று திருமணம் செய்து வைத்த அந்த நல்ல உள்ளங்களுக்கு இப்போது மருமகன் படும்பாட்டைப் பார்த்து, ‘நாங்க தப்பு செய்துட்டோம் தனலட்சுமி!’ என்று அவர்கள் இவளிடமே புகார், புலம்பல், கண்ணீர்.

‘இதற்காகவா விசாலம் ஆசைபட்டாள்.. அவள் உயிரோடிருந்தால் பெற்றவர்கள், கணவன் துடிப்பதை சகிப்பாளா ? அவள் ஆத்மா சாந்தியடையுமா ?!’ – யோசிக்க யோசிக்க… தனலட்சுமிக்குப் பொறுக்கவில்லை.

கேசவன் அலுவலகம் செல்லவும் பிள்ளைகள் பள்ளிகள் போகவும் பொறுத்திருந்தாள். அவர்கள் நகர்ந்த சிறிது நேரத்தில்….

“ஜானகி !” அழைத்து உள்ளே நுழைந்தாள்.

“வாங்க பாட்டி !” அழைத்து அவள் அடுப்படியிருந்து வெளியே வந்தாள்.

“வேலையா ?”

“இல்லே. எல்லாரும் போனபிறகு எல்லாம் எடுத்து வைக்கிறேன். வழக்கமான வேலைதான். உட்காருங்க.” சோபாவைக் கைகாட்டினாள்.

தனலட்சுமி அமர்ந்தாள். அவளும் அமர்ந்தாள்.

எதிரே டீபாயில் அட்டைப் பெட்டியிலிருந்து புது பட்டுப் புடவை இன்னும் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது.

“என்னம்மா விசேசம்.” தனலட்சுமி ஜானகியைப் பார்த்தாள்.

“எனக்கு இன்னைக்குப் பொறந்தநாள் ராத்திரி எடுத்து வந்தார் பாட்டி.”

“சந்தோசம் !”- அதை எடுத்து தடவிப் பார்த்த தனலட்சுமி, “கலர் நல்லா இருக்கு. நல்ல நாளும் அதுவுமாவா இன்னைக்குக் காலையில சண்டை.?” – தான் வந்த வேலையைத் தொடங்கினாள்.

“அது என் தலையெழுத்து பாட்டி ” ஜானகிக்குத் தொண்டை கமறியது.

“தினம் அப்படி என்னதான்டி உங்களுக்குள் பிரச்சனை, சண்டை ?”

“ஏதோ…. ஒன்னு விடுங்களேன்.” தவிர்த்தாள்.

“சொல்ல விருப்பமில்லேன்னா வேணாம். ஆனா பொண்ணாய்ப் பொறந்த நான் சொல்றேன். உனக்கு அணில் கடிச்ச பழத்திலே விருப்பமில்லே சரியா.?”
ஜானகி மனசுக்குள் மாயையாய் மறைந்து கிடப்பதைத் தொட்டுவிட்ட உணர்ச்சி.

“பாட்டீ!…” திடுக்கிட்டாள்.

“எல்லாம் மனசுதான் காரணம். மனசு வைச்சா மலையை சாய்க்கலாம், எதையும் சாதிக்கலாம் என்கிறது சாதாரண வார்த்தை இல்லே. எல்லாம் அடங்கிய வார்த்தை. எதையும் அசிங்கமாய் நினைத்தால் அசிங்கம். அழகாய்; நினைத்தால் அழகு. எந்த செயலையும் தவறாய் நெனைச்சா கெட்டது. நல்லதா நெனைச்சா நல்லது. ”

“…………………”

“நீ பொறந்தது கோயில் குடியிருப்பு. உன் அப்பா, அம்மா, தங்கை இப்போ இருக்கிறதும் எந்த வசதியும் இல்லாத அதே குடியிருப்பு. இந்த வீட்டுல இருக்கிற எந்த வாய்ப்பு வசதி பொருளும் அங்கே இல்லே தெரியுமா?” தலையைச் சாய்த்து அருகில் அமர்ந்திருப்பவளை ஓரக்கண்ணால் பார்த்து தொடர்ந்தாள்.

“ம்ம்….”

“உன் மூத்த அக்காள் ரெண்டு பேருக்குமே சுமார் வாழ்க்கை. சாதாரண கணவர். சரியா ?!” அதே குரலில் கொஞ்சம் அழுத்தம் கூடியது.

“சரி.”

“உன் அம்மா அப்பா வசதிக்கு…உனக்கு வரன் பார்த்து முடிச்சாலும் அப்படித்தான் முடிச்சிருப்பாங்க, முடிக்க முடியும் சரியா?”

“ஆமாம்.”

“அதை முடிக்கவே அவுங்க படாத பாடு படனும். கடைசியாய் இருக்கும் அடுத்தவளை முடிக்க திணறனும் முழி பிதுங்கனும். அதுக்குள்ள அவள் முத்திப் போய் நிக்க வாய்ப்புண்டு. அப்படித்தானே ?”

“ம்……ம்…”

“என்கிட்ட உன் அக்கா விசாலம் இப்படியெல்லாம் சொல்லி வருத்தப்படுவாள். எப்போதும் அவளுக்குப் பெத்தவங்க, கூடப்பொறந்தவங்க கவலை. நான் இங்கே மூணுவேளையும் நிம்மதியாய் சாப்பிடுறேன் மாமி. அங்கே கஷ்டம்ன்னு ரொம்ப வருத்தம், புலம்பல்.”

.”……………………..”

“அதுக்கு நாம என்னடி பண்ண முடியும். எல்லாம் விதி. உன் அதிர்ஷ்டம் நல்ல நெலமைக்கு வந்துட்டே. அவுங்களுக்கும் நல்ல காலம் வரும்ன்னு நான்தான் அவளுக்கு நல்லது சொல்லி தேத்துவேன். அதுக்கு அவள் சம்மதிக்க மாட்டாள். விதியை மதியால் வெல்லலாம் ! சொல்வாள்.”

“அப்படியா ?!”- ஜானகி கண்களை அகட்டினாள்.

“எப்படி ? கேட்டேன். பாருங்க. சொல்ல மாட்டேன். செய்ஞ்சு காட்டுறேன் சொன்னாள். அதேமாதிரி செய்ஞ்சும் காட்டிட்டாள்.”

“எப்படி பாட்டி ?”

“அவள் சாவு விபத்து இல்லே. கார்ல விழுந்து திட்டமிட்ட தற்கொலை. அதனால் நஷ்ட ஈடு குடும்பத்துக்கு வருமானமும் சேர்த்த புத்திசாலி.”

“பாட்டீஈஈஈஈ….” ஜானகி அதிர்ந்து அலறினாள்.

“தான் காலியானால் இந்த இடத்துக்கு நீ வருவே, அதனால் பெத்தவங்க கஷ்டம் குறைஞ்சு கடைக்குட்டியையும் காலாகாலத்துல சீக்கிரம் சிரமமில்லாமல் கரையேறுவாள் என்கிற கணிப்பு. அவள் கணிப்பு, கணக்கு வழக்கெல்லாம் சரி. ஆனால்…. அவள் எப்போ, எப்படி விதியை மிதியால் வெல்லப் போறாள் என்பது தெரியாததனால் நான் அவள் சாவை தடுக்க முடியாத பாவிகிட்டேன்.” சொல்லி தன் விழியோரம் துளிர்த்த கண்ணீரைத் துடைத்தாள் தனலட்சுமி.

ஜானகி அப்படியே உறைந்தாள். அடிவயிற்றில் அமிலம் சுரக்க….”அக்காஆ !”அலறினாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *