மூக்குத்தி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 1, 2022
பார்வையிட்டோர்: 3,314 
 

(1966 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கலையை வாழ்விப்பதற்கான யோக்கிய தாம்சங்கள் சகலமும் அவளிடம் சம்பூரணமாக இருக்கின்றன.

பரம்பரை வழியில் பசையற்ற கணவனைக் கட்டிக் கொண்டவள். பிதுர் சம்பத்தென்னும் காந்தசக்தியின்மை யால் பசையுள்ள கணவன் என்ற இரும்பைக் கவர அவ ளால் முடியாது போய்விட்டது.

கணவனோ, தட்டிச்சுருட்ட வக்கற்ற கோழைத்தனத் தாலும் ஏய்த்துப் பிழைக்க லாயக்கற்ற மந்தமதியாலும், குறுக்குவழிகளைக் கைக்கொள்ளும் சாதுர்ய சூனியத்தாலும் வார்க்கப்பட்ட தூய்மைவாதி. கிராமத்தவர் பாஷையில், ‘ஈமானிஸ்ஸாம்’ படித்தவன்; ஏவல் விலக்கல் தெரிந்தவன்; நடந்த இடத்துப் புல்லுஞ் சாகாத ‘சாலிஹான பிள்ளை.

இவற்றோடு குணசாலியான அந்தக் கணவன், சொர்க் கத்தின் சப்ரமஞ்சத்தையோ, நரகத்தின் சீலம்பாயையோ நிரப்பச் சென்றுவிட்டதற்கான அடையாள விளம்பரமாக வெள்ளிமணி கட்டாத வெறுங்கழுத்துக்காரி; அடுப்பங் கரியும் தலையில், தடவும் தைலக்காவியும் படிந்து பேதமுற்றுங்கூட வெள்ளைச்சேலையென்னும் நாமமிழக்காத புடவை கட்டியவள் – என்ற காரணமுஞ் சேர்ந்துவிட்டிருக்கின்ற படியினால், மரியம்பீவி பாயிழைக்குங் கலையை வாழ்விக்கப் பிறந்தவள் தான்.

மரியம் பீவி பாயிழைக்கின்றாள். அந்தக்கலையில் அவள் பழகிப் பழசுபட்ட இயந்திரம்!

‘முதலைக்குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்கவேண்டிய தில்லை!’ என்ற பழமொழிக்குச் சித்தி நபீஸா நிரூபணமா யமைந்தவள்.

செம்மலர்கள் திரண்டு, அவயவங்கள் வளர்ந்து உயிர்த்த சிற்பமாக, தண்ணெழில் சிந்திய பச்சிளங் குழவி யாக தனது மடியை அலங்கரித்த. அந்தக் காலத்தில் – தலைப்பிள்ளை பெற்றும் மணக்கோலம் மாறாத அவ்வின்பப் பொழுதில் தன் மகளையிட்டு, மரியம்பீவி எவ்வளவு கனவு களைக் கண்டிருக்கிறாள்! அவளது வானவிற் கற்பனைகளில் மிகச்சிறு துளியாகவாவது, தனது மகள், பொங்குமிளமைக் குமரிப் பராயத்தில் தனக்கு அருகாயிருந்து பாய் முடை. வாள் என்பது இடம்பெற்றிருக்கவில்லை.

கற்பனைகளில் கனவுகளிற் கண்டவை சூனியமாயும், கற்பனையையும் கடந்து நின்றவை நிதர்சனமாயும் சம்பவிப் பது தான் எதிர்காலத்தின் நிச்சயம்.

இதை உற்றுணர அன்று அவளுக்கு அனுபவம் பற்றா திருந்தது. அவளோ, கொழுகொம்பைச் சுற்றிப் பூத்துக் குலுங்கி, இன்ப மதர்ப்பில் மயங்கி, வாழ்க்கையின் கரடு முரடுகளை அறியமுடியாதிருந்த இளங்கொடி.

தாய்க்குப் பக்கத்திலிருந்து மகள் நபீஸாவுந்தான் பாயிழைக்கின்றாள். அவள் சரியாகத் தொழில்பட ஆரம் பித்துள்ள புது இயந்திரம். அவளது செம்பயற்றம் விரல்கள் பாய் முடைவதில் எவ்வளவு இலாவகம்! எவ்வளவு நளினம்! எவ்வளவு விரைவு!

பன்னோடு பன்னிணைந்து தானே பாய் ! நபீஸாவும் பன்னோடு பன்னிணைக்கிறாள். அந்த இணைப்பு – மகளை மண வறையிற் காணும் ஜீவன் முக்திக்காக சதத்தோடு சதஞ் சேர்க்கும் தாய்க்காரியின் கையை ஆற்றும் பேருதவி.

குப்பை மடுவில் நட்ட கரும்புத்தாள் தென்றலில் அலைப்புறும் லாவகத்தில் அசைந்தசைந்து ஆண்வாடை இல்லையென்ற யதேச்சையுடன், சித்தி நபீஸா போன்ற பருவம் கண்விழித்த கட்டழகிகள் பாயிழைக்கும் பேரழகை, தட்டு வேலியில் ஒன்றி நின்று பருகக்கிடைத்த சந்தர்ப்பத் தைப் பரீத் லேசிலே இழக்க விரும்புவானா ? வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் குமரிகளின் அங்கலட்சணங்களை அளந்து சுவைத்துப் பரவசமடைவதுதான் வாலிப இலட் சணம் என்ற மனப்போக்கு கொண்டவனல்லவா அவன் ! வீடுவீடாகச் சென்று பாய் வாங்குந் தொழில் அப்படியான சந்தர்ப்பங்களை மாரிபோல் வழங்கவுஞ் செய்தது.

பராயப்பட்டதற்குப் பிறகு, நபீஸாவை நேருக்கு நேர் காணத்துடித்த அவனது அவா நிறைவேற இன்று தான் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது. அதுவும் அலங்கார பூஷிதமற்று இயற்கையாகவே துலங்கும் பேரெழிலைச் சுயேச் சையான கோலத்தில் தரிசிக்கக் கிடைத்திருக்கிறது. கிடைக் காமற் கிடைத்த இந்தப் பாக்கியத்தை எண்ண எண்ண அவனுள்ளே மகிழ்ச்சி கரைபுரள்கிறது. வழக்கத்துக்கு மாறாக – பாய் வாங்கவரும் வேளையை மாற்றிய தனது யுக்தி, திட்டமிட்டபடி பலிதமானதை நினைக்க அந்த மகிழ்ச்சி அணை உடைத்த வெள்ளமாகவே பொங்குகிறது’.

நபீஸா முன்னாலிருந்த தண்ணீர்க் கோப்பையில் கை நனைத்துப் பன்னிலே தெளிக்கிறாள். பரீதோ, வரங் கேட்கும் யாசக உணர்வு வதனத்தில் விரிய நெஞ்சைத் தடவிவிடுகின்றான்.

நீர் தெளித்த கையோடு, அடுத்த வழியை எடுக்க மாறியிருந்து பாயை இழுத்துவிட்டுப் பாரமேற்றிய கல்லை மறுபக்கம் மாற்றி வைத்துவிட்டு நிமிர்கிறாள். நிமிர்ந்தவள் வேலியிலே முளைத்திருந்த பரீதின் முகத்தைக் கண்டாளோ இல்லையோ ? மின்சாரம் பாய்ந்த பாவனையில், அதிர்வு உடலெங்கும் பரவ, பாயில் கிடந்த முன்றானையை வாரி யெடுத்துச் சட்டென்று உள்ளே பாய்ந்துவிடுகிறாள். வாயிலே போட்டு நுணைத்த ‘சொக்லட்’ கரைந்துவிட்டதே என்று கை சேதப்படும் குழந்தையின் ஏக்கம் பரீதுக்கு. அவனைப் பொறுத்தவரை முன்றானையை மாத்திரம் அவள் வாரி யெடுக்கவில்லை; அந்த எடுப்போடு கண்கொண்ட விருந் தையுமல்லவா வாரிச் சென்றுவிட்டாள்!

பாய் பின்னுவதிலே வசமாகியிருந்த மரியம்பீவி, மகளின் பாய்ச்சலால் உலுப்பப்பட்டு முக்காட்டைச் சரி செய்தவண்ணம் தலை நிமிர்கிறாள். நல்லகாலம்; அவன் நீறாகிவிடவில்லை!

“அவசரமாகப் பாய் தேவை ; முடிஞ்சிற்றா எண்டு பார்க்கவந்தன்.”

பரீதின் வாயிலிருந்து வார்த்தைகள் இடறி உதிர் கின்றன. குரலிலே சுருதி பேதலித்த ஓசையின் அலறல்!

சொன்ன வேகத்தோடு திரும்பியவன்,

“பாய் முடியல்லப்போல இருக்கு. சாயந்தரமா வாறன்” என்று கூறி முடித்தானோ இல்லையோ, இடத் தைக் காலி செய்கிறான்.

பெண்களைத் தனகும் துணிச்சலும், எதற்கும் அஞ் சாத ஆண்மையும் எங்கே? இந்த வினா அவன் நெஞ்ச விசும்பில் கறங்காட்டமாடுகிறது. நபீஸாவின் வசீகரத்தின் முன்னும், நெஞ்சைக் குடைந்து வினவிய மரியம்பீவியின் பார்வையின் முன்னும் தனது ஆண்மையும் துணிவும் ‘மில்டன்’ பட்ட மசியாகக் கரைந்ததை நினைக்க என்னவோ போலிருக்கிறது பரீதுக்கு. அவன் காணாத கட்டழகிகளா! கதைத்துச் சல்லாபிக்காத கன்னிகளா! நபீஸாவின் அழ கிலே மயக்குக்குப் பதிலாக மென்மையும், உள்ளத்தின் பிரதிபலிப்பான தூய்மையும் இருப்பதை அவன் தோலவி உணர்த்திவிட்டதா?

பெண்மையின் தூய அழகு, துடுக்கான வாலிபத்தின் ஆபாச உணர்வுகளையும் நெறிப்படுத்தவல்லதா?

இந்த வினா அவன் நெஞ்சப் பறையில் மெல்ல ஒலிக் கவே ஒலிக்கிறது!

தனது வருகைக்கு கற்பித்த பொருத்தமான கார ணத்தையெண்ணி அலைபாயும் நெஞ்சைத் தேற்றுகிறான். வாழ்ந்துகெட்டு, வாழ்க்கை அனுபவங்களை நுகர்ந்து சலித்த மரியத்தின் நெஞ்சம், மஞ்சள் வெயில் காந்தும் மாலையிற் தான் பாய் தலைக்கட்டப்படும் என்பது தெரிந்திருந்தும் மதியத்தில் வந்துபோகும் பரீதின் அந்தரங்கத்தைக் காரண காரியங்களோடு தொடர்புறித்தி ஆராய்கிறது என்பதைப் பாவம், அவன் அறியவில்லை!

பரீதின் மனம் எதையோ ஆழமாகத் தேடுகிறது. தேட்டத்தின் முடிவாய், வலம்புரிச் சங்கோடு நீர்மட்டத்தை வந்தடைந்த சுழியோடியின் மகிழ்ச்சிப் பிரகாசம் அவன் வதனத்தில் குறி தீட்டுகிறது.

மரியத்தின் குடிசையான தொழிற்சாலையின் தினசரி உற்பத்தியான இரு பாய்களுக்கும் தனது வீட்டு மூன்று ரூபாய்களை ஐந்தாகவும், அச்சந்தர்ப்பத்தில் ஆறாகவும் விருத்திபண்ணும் ஆற்றலிருக்கிறது என்ற வகையிலேயே கொண்டாடப்பட்டுவரும் உறவைப் புதுப்பித்து அர்த்த முள்ளதாக்க முடியாதா? என்று நினைக்கையில் நடக்குந் தெருவும், சுற்றுச் சூழலும் அவனுக்கு ஆனந்தமயமாகக் காட்சியளிக்கின்றன.

வீட்டுக்கு வந்த மகனின் குஷியைக்கண்ட தாய்க்கு எதுவுமே பிடிபடவில்லை. அவள் கன்னத்தை ஒரு தட்டுத் தட்டி, நாடியைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கிவிடுகிறான். கையுணாவு தலாகக் கொண்டுவந்த பூவரசந்தண்டின் சிறு துண்டைக் கிள்ளி, தாயின் மூக்கிலே, மூக்குத்தி அணிந்த தடத்திலே பொருத்திவிட்டுக் கண்ணாடிக்கு முன்னாலே போய் நின்றான். நெஞ்சை முன்னிறுத்திய கம்பீரத்தோடு, தனது பிரதிபிம்பத்தை ஏற இறங்கப் பார்த்து அதில் பெருமைபட்டுக்கொண்டான்.

பரீதோ தாய்க்கொரு பிள்ளை. உள்ள இடத்துப் பிள்ளையென்றால் செல்லத்துக்குக் கேட்கவாவேண்டும் ? தாய் செய்னம்பு கூத்துப் பொம்மையென்றால் அவன் அதை ஆட்டுவிப்பவன் ! அவன் சேட்டைகளும், குறும்பு களும் மற்றவர்களுக்குச் சகிக்கமுடியாதவை.

கைம்பெண்சாதிதான். பாயிழைத்தோ, நூலி ழைத்தோதான் சீவிகக்வேண்டுமென்ற அளவுக்கு அவள் கணவன் விட்டுவைக்கவில்லை. குச்சவெளிக்காரியான அவ னது மாமியார், தனது நிலபுலன்களையெல்லாம் காசாக்கிக் கொண்டுவந்து மகனையும் மருமகளையும் சீருஞ் சிறப்போடும் வாழவைத்துவிட்டுச் செல்வேண்டிய இடத்துக்குச் சென்று விட்டாள்.

என்ன தான் சொத்துச்சுகமிருந்தாலும், ஆண்பிள் ளைக்கு ஒரு தொழில் முயற்சி வேண்டுந்தானே. தார்வீதியில் வீட்டோடு சேர்த்துக் கடையுமிருந்தபடியால் வியாபாரம் மிகச் சாத்தியம். செய்னம்பு, கணவன் செய்த பாய் வியாபாரத்தை மகனுக்குப் பழக்கினாள். வீடுவீடாகச் சென்று பாய் வாங்கவேண்டியிருந்ததால், அத்தொழில் பரீதின் பெருவிருப்பத்துக்குரியதாயமைந்ததில் வியப்பெதுவுமில்லை.

வாசல் அடுப்பில் ஏற்றப்பட்டிருக்கும் பெரும்பானை யில் நீர் குமிழிவிட்டுக் கொதிக்கிறது. மூடிதிறந்த சோடா புட்டியில் சோடா நீர் பொங்குவதுபோல, பானையில் நீர் மலமல்த்துக் கொதிக்கிறது. மரியம் கோளிச்சாயத் தூளைக் கொதிநீரிலே கொட்டுகிறாள். ஒரு கணப்பொழுதுக் குள் எவ்வளவு பேதலிப்பு. வெண்ணுரை செந்நுரையாகி விட்டிருக்கிறது.

அதிஷ்டத்தின் அல்லது துரதிஷ்டத்தின் பாதிப்பால் நொடிக்கும் நேரத்துக்குள் மனித வாழ்க்கையும் இப்படித் தான் பேதலிக்கின்றதோ?

நபீஸா, கீலங்கீலமாகக் கிழித்த பன்னைப் பிடியளவு பிடித்துக் கட்டுக்கட்டாகக் கட்டுகிறாள். மரியம் பன்கட்டு களை ஒவ்வொன்றாகப் பானையில் விட்டுக் கணையால் புரட்டி வெளியே எடுக்கிறாள். சற்றைக்குமுன் வெளிறுண்ட மஞ்சளா யிருந்த பன் சுரீரென்று சிவப்பேறிவிட்டது.

“என்னகா மச்சி எந்தநேரமும் பாயும் பன்னுந்தானா?”

பரீதின் தாய் செய்னம்புவின் குரல். அவளின் குரல் கேட்டு நபீஸாவும், மரியமும் ஏககாலத்திற் தலை நிமிர்த்து கின்றனர். நபீஸா எழுந்து குடிசைப்பக்கமாக நகர்கின்றாள்.

படைச்சவன், பன்னைப் படைச்சதுமில்லாம எங்களை யுஞ் சேர்த்துப் படைச்சுப்போட்டானே!” என்று கூறிவிட்டு,

“வாங்க மச்சி, மனே மாமிக்குப் பாய்போடு” என்று சொல்வதற்குள் நபீஸா குடிசைத் திண்ணையில் பாய் விரித்து விடுகிறாள்.

‘இருக்க வாருங்க மாமி!”

“பாய வாசலுக்கு கொண்மாமனே, காத்து றாகத்தா இரிக்கும்!”

இருந்து தேனீர் பருகி தாம்பூலந் தரித்த முடிலில் செய்னம்பு நபீஸாவை அழைத்துத் தன்னருகில் இருக்கச் செய்கிறாள்.

போனவாரத்துக்கு முந்தினவாரம் நபீஸாவின் மூக் கைக் குத்திக் கம்பி மாட்டிவிட்டுப் போயிருந்தாள் செய் னம்பு. சென்ற கிழமைவந்து கம்பியைக் கழற்றிச் சுள்ளி பாய்ச்சிவிட்டுப் போனவள் மறுபடி இப்பொழுதுதான் வந் திருக்கின்றாள்.

காய்ந்துவிட்டிருக்கும் அந்தத் தடயத்தையே கூர்ந்து. நோக்கிய போது செய்னம்புவின் வதனத்தில் மகிழ்ச்சி கலை பரப்புகிறது. நபீஸாவுக்கோ நாணம் தலைகுனிய வைக்கிறது

செய்னம்பு மடியை அவிழ்த்து அதிலிருந்து சிறு வல்லுக மொன்றை எடுத்துப் பிரித்து….. அதனுள்ளிருந்து அவள் வெளியே எடுத்தது மாற்றுக் குறையாத தகதக தங்கத்தாற் செய்த மூக்குத்தி! மூக்குத்தியின் மேற்பூவின் மத்தியிலும், தொங்கும் கீழ்ப்பூவிலும் பதித்திருப்பவையோ, இளஞ் சிகப்பு வர்ண இரத்தினக் கற்கள்.

செய்னம்பு, நபீஸாவின் மூக்குத் தொளையிலே மாட்டி யிருந்த குச்சியைக் கழற்றி எறிந்துவிட்டு அந்த இடத்தில் பொருத்துகையில்….. அப்பப்பா! பெண்மைக்குத்தான் எவ் வளவு நாணம்! நாணமென்ற அணிகலன், பெண்மையின் மாற்றை மட்டுமல்ல சௌந்தர்யத்தையுந்தான் எவ்வளவுக்கு உயர்த்துகிறது !

நபீஸாவின் தலை பழப்பாக்குக் குலையாகத் தொங்கு கிறது. செய்னம்புவின் விழிக்கோடுகளில் இரு பளிங்கிப் புழுக்கள் ஊர்கின்றன. மரியம்பீவியின் நெஞ்சம் அல் ஹம்து லில்லாஹ்” – அல்லாஹ்வுக்கே புகழ் என்ற சொற் றொடரை ஆனந்தப் பரவசத்துடன் மெல்லுகிறது.

“மனே ! என்ன அவருக்குக் கலியாணம் பேசின நேரத்தில என்ர மாமியா இந்த மூக்குத்தியை எனக்குப் போடக்குள்ள இப்படித்தான் நானும் வெக்கப்பட்டு ஒஞ்சி னன். அவக்கு அவட மாமியா போட்ட மூக்குத்தியாம் இது. நம்மட ஊரிலே மூக்குத்தி போடுற வழக்கம் இல்ல. இந்த ஊராளுகள் என்னென்ன வசையெல்லாம் சொல்லுவாளுகளோ? எண்டு நான் பயப்புடாத பயமா? என்ன வந்தா லும் சரியெண்டு என் மாமியாட விருப்பத்த நான் ஏத்துக் கிட்டன். ஒண்டுக்கும் யோசிக்காத மகள். போகப்போக எல்லாம் சரியாப்போகும்”

நெஞ்சுருக்கத்தோடு சொல்லிமுடித்த செய்னம்பு, பீஸாவின் நாடியைத் தாங்கி நிமிர்த்துகிறாள். குவளைக ளிரண்டிலும் பனிப்பது தேனா? ஆமாம், இன்பக் கனவின் கம்மலில் பூரித்த கன்னிமையின் ஆனந்தப் பிழிவு!

வேலியில் நிற்கும் முள்முருங்கை, வாசலில் சுகநிழல் பரப்பிய வேம்பு, மூலையில் நிற்கும் ஒலியை, எல்லாம் இலை உதிர்த்து தசையற்ற எலுப்புக்கூடுபோல வெறிச்சோடிப் போய் நிற்கின்றன. கச்சான் விளைத்த கொடுமைக்குக் கண் கண்ட சாட்சியங்களாக அவை நிற்கின்றன. அவை வசந் தத்தின் வருகைக்குக் கட்டியமுங் கூறுகின்றனவா? இலை உதிர்த்த அம்மரங்களில் என்ன கவர்ச்சியைக் கண்டுவிட் டாளோ? வாசலில் கால் நீட்டியிருந்து பன் வாட்டும் நபீஸா வின் கண்கள் அந்த மரங்களைத்தான் வெறிக்கின்றன.

பெண்மையைப் பூமிக்கு உருவகித்த மதிவல்லாரை மரியாதைப் படுத்தத்தான் வேண்டும். கருநீலக்கடல், தண் புனல் ஆறு, பூம்பொழிற்சோலை வான் அளக்கும் மலை இன்ன பிறவற்றை மற்றவர் பார்வைக்குக் காட்டிக் கவின்பெறக் காட்சிதருகின்ற பூமி, கனன்று கொண்டிருக்கும் அக்கினிக் குழம்பையும் தன்னுள்ளே மூடி மறைத்து வைத் திருக்கிறதே!

தீக்குழம்புக்கு நிகரான வேக்காட்டை, நபீஸாவும் தன் நெஞ்சினுள்ளே பூட்டிவைக்கத்தான் வைத்திருக்கிறாள். பூமி – எவ்வளவுதான் பூசி மினுக்கினாலும், அதனகத்தே குமுறும் தீக்குழம்பின் வெம்மை பாலைவனமாகக் கோடி காட்டவில்லையா? நபீஸாவின் மனவேக்காடும், அவளையுமறி யாமல் அவள் வதனத்தில் விலாசமிட்டுத்தான் இருக்கிறது.

ஆபரணத்தின் மத்தியில் வைத்து இழைக்கப்படும் வைரக்கல்போல, அந்தக்கல் தங்கத்தின் மாற்றை உயர்த் திக் காட்டுவதுபோல, நபீஸாவின் நாசியிலே தொங்கி அவள் கொள்ளையழகை மேலும் மிகைப்படுத்திய மூக்குத்தி இப் போது இல்லை. அது தொங்கிய தடம், வெள்ளைத் திரையில் விழுந்த கரும்புள்ளிபோல பளிச்சென்று துலங்குகின்றது.

பட்டுப்போன பாவனையிற் தோன்றும் முள்முருங் கையை வெறித்தவளாய், பன் வாட்டிக்கொண்டிருக்கின்ற நபீஸா, பரீதின் சிறிய தாய்க்காரி ஆசுறா வந்ததையோ ? அவள் நின்ற இடத்தில் நின்றவாறே வீடுவளவெல்லாம் துருவிப் பார்த்ததையோ அவதானிக்கவில்லை. அவள் சோலி அவளுக்கு!

“எங்கமனே உம்மாவைக் காணல்லபோலிருக்கி”

ஆசுருவின் குரல்கேட்டுத் தான் மனம் எங்கெல்லாமோ அலைந்த ஈர்ப்பில் சுற்றுச்சூழலை மறந்துவிட்ட தன் நிலை நபீஸ்ாவுக்குப் புரியவந்தது.

“ஆ….! ஆரது?” என்றவாறே தலை நிமிர்கிறாள்.

“ஆரது…? சின்ன மாமியா? பன் வாட்டின பராக் கிலே நீங்க வந்தத காணல்ல. உம்மா. வெளியே போயிருக்காங்க”

எழுந்து திண்ணையிலே பாய் போடுகிறாள்.

“இருக்க வாங்கமாமி”

பாயிலமர்ந்த ஆசுறாவுக்கு வட்டாவும், படிக்கமும் வைத்துவிட்டு அடுப்படியிலே அமர்கிறாள் நபீஸா, தாய் மரியமும் வந்துவிடுகிறாள்.

“கால்மில்லாக் காலம் காக்கா பொண்டி வந்திருக்கா …”

“பாவக்கொடியும் பறட்டைபத்திப் போச்சுதுகா ..”

திண்ணையிலே ஆசுறாவைக் கண்ட மரியம்பீவிக்கு ஏற் பட்ட உணர்ச்சிவேகத்தில் அவள் வாய், ஒரு கவிதையே பாடித் தள்ளிவிட்டது.

“நல்ல வடிவா பாத்தி புடிச்சி எருப் போட்டுத் தண்ணி ஊத்தினா பறட்டக்கொடியும் தளைக்குந்தானகா…”

“என்னத்தச் செய்தாலும் தளைக்கக்கூடியது தானே தளைக்கும்?”

நபீஸா தேனீர் ஊற்றி இருவருக்கும் கொடுக்கிறாள். தேனீரைப் பருகிக்கொண்டே ஆசுறா தொடர்கிறாள்.

‘சும்மா இருந்த புள்ளர மூக்கக் குத்தி, மூக்குத்தி யும் போட்டவளுக்கு அதைக் களத்தவும் மனம் வந்திற்றே. எங்க தாத்தா இருக்காவே மச்சி, அவட் மண்டக்க ஒண் டுமே கிடையாது. மகன் ஆட்டுறாப்போலயெல்லாம் ஆடுவா. மனிசன மனிசன் அறியவேணும் – ஆத்துமீனப் புளியங்காய் தான் அறியவேணுமெண்டு சும்மாவா சொன்னாங்க. உம்மா வும் மகனும் இப்ப நல்ல பாடம் படிச்சிற்றாங்க.”

ஆசுறாவின் பேச்சு என்னமோ மரியத்துக்கு சுவராஸ் யப்படவில்லை. வீடுதேடி வந்தவளோட முகங்கோண நடத்தவும் முடியவில்லை; அவள் பேச்சை வாங்கியும் வாங்காமலும் தன் பாட்டுக்கிருக்கிறாள்; நபீஸாவோ பன் வாட்டுகிறாள். ஆசுறாவின் பேச்சுத் தொடர்கிறது.

“எல்லாத் தொளுப்புறியளும் என்ட புள்ளயப்போல குணசாலியா இருப்பாளுகளா? அல்லா பார்த்து என் புள்ளர தலையிலதான் நல்ல எழுத்து எழுதியிருக்கானாக்கும்! புள்ளே..! இங்கவா மனே! ஓங்க மாமி இந்த மூக்குத்திய ஒனக்குப் போட்டுட்டு வரச்சொன்னா, அவக்கு வர வெக்கமாயிருக்காம்”

மரியத்தின் நாவும் எதையோ சொல்ல உன்னிப் பின் வாங்குகிறது. ஆசுறா மேலும் தொடர்கிறாள்.

“தங்க முடியத் தலையில் போட்டாத்தானே முடிக் கும் அழகு” என்று சொல்லிக்கொண்டே மூக்குத்தியைச் சுற்றியிருந்த தாளோடு கீழே வைக்கிறாள் ஆசுறா. மரியமும் தனது மடியை அவிழ்த்து, தட்டானிடம் வாங்கிவந்த கல் பதியாத கலப்புத் தங்க மூக்குத்தியை, சிவப்புக்கல் பதித்த சுத்தத் தங்க மூக்குத்திக்குப் பக்கத்திலே வைக்கிறாள்.

ஊரிலே இல்லாத வழக்கந்தான் விரும்பியோ, விரும் பாமலோ போட்டாயிற்று. சூட்டியவளே கழற்றியபோது ஏற்பட்ட வெறுமை, கழற்றியவளுக்கு அழகாக இருந்ததோ என்னவோ? பெற்றவளுக்குப் பெருங் குறையாகவும் அவ மானமர்கவும் இருந்தது. ஏழை என்பதற்கர்கத் தன்மானம் அற்றுப்போய்விடுமா? – தனது நெஞ்சை அரித்த குறையை நிவர்த்திக்க மரியத்தின் பெற்றமனம் கொண்ட சங்கற்பம் பலித்ததில் அவளுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! –

மண்ணெடுத்த குழியை மண்ணைக்கொண்டும் நிரப்ப லாம்! குப்பையைக் கொட்டியும் நிரப்பலாம்!

மரியம் வாழ்ந்து கெட்டவள். ஆத்திரத்தில் உணர்ச்சி வசப்பட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்பதைத் தெரிந்து வைத்திருப்பவள்! பிழை செய்வதும் மனித இயல்பு; செய்த பிழையை எண்ணித் திருந்த முயல்வதைத் தடுக்கக்கூடாது;

என்பதையும் அறிந்து வைத்திருப்பவள். தலையாலே வந்த சீதேவியை காலாலே தட்டிவிட்ட பாவி நீதானே! என்று நாளையொரு சந்தர்ப்பத்தில் தன் மகளே; தன்மேல் பழி சுமத்தவுங்கூடும்! என்ற எச்சரிக்கையையும் தன்னுள் நிறுவிக் கொண்டாள். அவள் சொல்லுகிறாள்,

“மகள்! நீ முந்திப் போட்டிருந்த அழகான, பெறு மானமான மூக்குத்திய இளையமாமி கொண்டாந்திருக்கா, நானும் என்ர தகுதிக்கித் தக்கணதாக ஒண்ட வாங்கி வந்திரிக்கன். இதில் விரும்பியதப் போட்டுக்க மகள். ஆருக் காகவும் ஒண்ட மனசுக்கு ரெண்டகம் செய்யாதே”

நபீஸாவுக்கோ தர்மசங்கடமான நிலை. அவள் தலை மேல் சுமத்தப்பட்டிருக்கும் சுமையின் பளு சாமான்யமன்று! அவளது எதிர்கால வாழ்க்கையைத் தெரிவு செய்யும் பொறுப்பு; மற்றவர்களுக்குப் பங்கில்லாத வகையில் – மற்ற வர்களைக் குறைசொல்ல இடமில்லாத வகையில், அவள் கையிலேயே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

நபீஸ்ா சிந்திக்கத் தெரிந்தவள்! சீர்தூக்கத் தெரிந்த வள்! சிந்தனையின் ஆழமான சுவடுகள், பங்கய வதனத்தில் முத்திரை பதிக்கின்றன! சிந்தனையில் தெளிந்த பாவனை பிரகாசிக்கின்றது!

தலையிலே முக்காட்டைப் போட்டுக்கொண்டு, அடக்க ஒடுக்கமாக வந்து மனதுக்குள்ளே “பிஸ்மில்லா ஹிர்ரஹ் மானிர் றஹீம் – அருளும் அன்பும்மிக்க ஆண்டவனின் பெயர் சொல்லி ஆரம்பிக்கிறேன்” என்று கூறி தன் மனம் விழைந்ததை வலக்கையினால் எடுக்கிறாள். பப்

சிவப்புக்கல் பதித்த சுத்தத் தங்க மூக்குத்தி பாயிலே பரிதாபமாகக் கிடக்கிறது.

– பாடும் மீன் 1966

– மருதூர்க்கொத்தன் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1985, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது, கல்முனை (இலங்கை)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *