முழுதாக 2 நிமிடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 12, 2012
பார்வையிட்டோர்: 6,689 
 

ஒரு அழகான இரவு வேளையில் என் அன்பு மனைவி என்னிடம் இவ்வாறு கூறினாள்.

மனைவி : உங்களுக்கு என்மேல் பாசம் உண்டா

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று சொல்லக்கூடிய தைரியசாலி, புத்திசாலி மற்றும் நெஞ்சுரமிக்க ஆண்மகன் இந்த உலகில் இதுவரை பிறக்கவில்லை, இனிமேலும் பிறக்கப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக தெரிந்து வைத்திருக்கும் என் மனைவியிடம் நான் தைரியமாகவும், மென்மையாகவும் சிரித்துக் கொண்டும் கூறினேன்

நான் : ம்

அவளுக்கு இந்த தைரியம் மிக்க பதில் போதவில்லை என்பதை அவள் நெற்றியில் விழுந்த சுருக்கத்தை பார்த்த பொழுதே புரிந்தது.

மனைவி : என்னை எவ்வளவு பிடிக்கும் உங்களுக்கு

சிரிக்காமல்கேட்டாள். சற்று பயந்து போன நான் . கிழக்கு பக்கமாக ஒரு கையையும், மேற்குப்பக்கமாக ஒருகையையும் நீட்டிய படி விரித்துக் காட்டினேன் .

நான் : இவ்வளவு பிடிக்கும்.

என்னதான் நான் சிரித்துக் கொண்டே கூறினாலும், அதில் ஒளிந்திருந்த கள்ளத்தனமான பயத்தை அவள் கண்டுபிடித்து விட்டாள் என்றே கூறவேண்டும். இதுதான் சரியான தருணம் என்று நினைத்தாலோ என்னவோ? அர்ஜுனன் நாகாஸ்திரத்தை கர்ணன் மேல் உபயோகித்ததைப் போல் என் மேல் பிரயோகப்படுத்தினாள்.

மனைவி : அது உண்மைனா நீங்க ஏன் எனக்கு 5 பவுன்ல ஒரு நெக்லஸ் வாங்கித் தரக்கூடாது……

அவள் என் மேல் இருந்த பார்வையை அகற்றவே இல்லை. முழுதாக 2 நிமிடங்களுக்கு…..

சில சமயங்களில் மட்டுமே இவ்வாறு நிகழ்ந்து விடுவது உண்டு. அதாவது என்னவிதமாக ரியாக்ட் செய்வது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக் ​கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட அந்த 2 நிமிட கொடுமையான நகர்தலின் போது நான் இவ்வாறு யோசித்தது எனக்கு மிக நன்றாக நியாபகம் இருக்கிறது. சென்ற வாரம் பிய்ந்து போன எனது செருப்பை தூக்கிப் போட்ட குப்பைக் கூளங்களிலிருந்து தேடிப்பிடித்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். அவ்வப் போது உபயோகித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

அவள் தலை வலிக்கிறது என்று சொல்லிவிட்டு போய் படுத்திருக்கலாம். அல்லது தொலைகாட்சியில் திருமதி செல்வம் பார்க்க ஆரம்பித்திருக்கலாம் அல்லது எனது மொபைல் போனை எடுத்து யார் யாரிடம் எல்லாம் பேசியிருக்கிறேன் , எவ்வளவு நேரம் பேசியிருக்கிறேன் என உளவு வேலையில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது எனது சட்டையில் வேறு ஏதேனும் பெர்பியூம் வாசனை அடிக்கிறதா என முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்திருக்கலாம் அல்லது என்னை தோசை சுட வைத்து ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கலாம்.

ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு சவால் விடும் விதத்தில் எனது அரியர்ஸ் பணம் வந்தடைந்த செய்தி எந்த உளவாளியின் மூலம் என் மனைவியின் காதுகளுக்கு எட்டியது என்ற ரகசியச் செய்தி தான் இன்னும் எனக்கு புரிபடவில்லை. அவள் 5 பவுன் என்று குறிப்பிட்டு கூறுகிறாள் என்றால் அதில் ஏதேனும் விஷயம் இருக்குமே என்று கணக்கிட்டுப் பார்த்ததில் சரியாக 75 ஆயிரம் ரூபாய் வந்தது. பின்னர் தான் புரிந்தது 75 ஆயிரம் ரூபாய் அரியர்ஸ் பணம் அவள் காதுகளுக்கு எட்டிவிட்டது என்று. மந்திரம் ஓதிக்கொண்டிருக்கும்போது பார்ப்பனர் ஒருவர் அடிக்கடி கூறும் அந்த வார்த்தை (ஸ்வாகா) என் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.

அநேகமாக ஒன்றரை வருடத்துக்கு முன் வாங்கப்பட்ட எனது கருமை நிற ஷூவின் குதிக்கால் அடிப்பகுதி, 3 மாதங்களுக்கு முன் ஓரிடத்தில் கழன்று விழுந்துவிட்டது. அன்றைய தினம் முதல் எனது கனவுகளில் புதிய ஷூ ஒன்று அடிக்கடி வந்து போய் கொண்டிருக்கிறது. ஒருகால் நெட்டையாகவும், ஒருகால் குட்டையாகவும் 16 வயதினிலே கமல் போல் கேந்தி கேந்தி நடக்க பிடிக்காமல் அதை உபயோகிப்பதையே விட்டுவிட்டேன். அந்த ஷுவை புதிதாக வாங்குவதற்கு கூட என் மனைவி எனக்கு அனுமதி அளிக்காமல் முழுதாக, மொத்தமாக 75 ஆயிரத்தையும் கணக்கிட்டு நகை வாங்க கணக்கு போட்டது சட்ட விரோதமானது. கண்டிக்கத்தக்கது என்று ஆவேசமாக யாருக்கும் தெரியாமல் குறிப்பாக எனது மனைவியின் காதுகளுக்கு கேட்காமல் மனதிற்குள்ளாக காட்டுத்தனமாக கத்தினேன்.

மேலும், எனது இருசக்கர வாகனத்தில் ஹாரன் அடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஹெட்லைட் எரியாவிட்டாலும் பரவாயில்லை. கியர் சரியாக விழவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த பிரேக் என்ற பகுதிதான் என்னை நிலைகுலைய வைக்கிறது. அந்த பிரேக் செயல் இழந்து போனதால் நான் வேகமுள் 20ஐத் தாண்டுவதில்லை. இதைபார்த்து என்னை நிதானமான ஆள் என்று அக்கம்பக்கத்தினர் முடிவு செய்து விட்டனர்.

அதோ பார் எவ்வளவு பொறுப்பாக மெதுவாக செல்கிறார் என்று என் காதுபடவே பேசுகிறார்கள். எனக்குத் தான் தெரியும் வேகமாக போனால் என்ன ஆகும் என்று. அன்று ஒருநாள் எனது 6 வயது பெண் குழந்தையுடன் வீடியோ கேம் (பைக் ரேஸ்) விளையாடிக் கொண்டிருந்த போது, அந்த வண்டியில் கூட நான் பிரேக் பிடிக்காமல் தான் சென்று கொண்டிருந்தேன். ஏன் என்றால் என் சப்கான்சியசில் இரு சக்கர வாகனம் என்றாலே அது பிரேக் பிடிக்காது என்றுதான் அர்த்தமாகியிருந்தது. வீடியோ கேம் விளையாடும் போது கூட நான் பிரேக் பிடிப்பது பற்றி மறந்து போனேன். போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம் தான் என் மனைவியின் மாங்கல்யத்தை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

எங்கள் தெருமுனையில் உள்ள இருசக்கர வாகனங்களை பழுது பார்ப்பவர் (தமிழில் – மெக்கானிக்) என்னை தினசரி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த முறை அவருக்கு நான் வாய்ப்பளிக்கலாம் என்றிருந்தேன். அதற்கும் வழி இல்லாமல் செய்து விட்டாள் எனது அன்பு மனைவி.

அன்று என் பெண் குழந்தை என்னைப்பார்த்து இவ்வாறு கேட்கிறாள்.

“அப்பா எப்படிப்பா ஒரு முள்ள வச்சு நேரம் பாக்குறிங்க, கஷ்டம்மா இல்ல”

ஆம் கடந்த 257 நாட்களாக என் கைக்கடிகாரத்தில் ஒரு முள் தான் இருக்கிறது. அந்த இரண்டாவது பெரிய முள் எப்படி, எப்பொழுது விழுந்தது என்றெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பழங்காலத்தில் மனிதர்கள் கடைபிடித்த அந்த முறையைத் தான் கடை பிடிக்கிறேன். மணி 12 என்றால் சூரியன் தலைக்கு மேல் இருக்கும். மணி 6 என்றால் மேற்கு பக்கம் இருக்கும். அதோடு சின்னமுள் வேறு கடிகாரத்தில் நேரத்தை கணிக்க எனக்கு உதவியாக இருக்கும். ‍தோ நான் கணித மேதையாக இருக்கப் போய் என்னால் இதையெல்லாம் சமாளிக்க முடிகிறது. இல்லை என்றால் என்னாவது. புதிதாக கைக்கடிகாரம் வாங்கிவிடலாம் என்று நான் மனப்பால் குடித்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுது தான் புரிகிறது. யாரோ மண்டையில் நறுக்கென்று கொட்டியது போல் இருக்கிறது.

அன்று ஒருநாள் செய்தித் தாளில் வெளியாகியிருந்த அந்த செய்தியை என் மனைவியின் காதுபட சத்தமாக படித்தேன். அவள் எனக்காக ஒரு மோசமான காஃபி தயாரித்துக் கொண்டிருந்தாள்.

“பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 60 ரூபாயை தொட்டு விட்டது தெரியுமா?” என்று கூறினேன். அதற்கு……

எதிர்த்த வீட்டு ராணியின் கணவன் மோகன் சமர்த்தாக பஸ்ஸிலும், நடந்தும் தினசரி அலுவலகம் செய்வதைப் பற்றி அரைமணி நேரம் சிலாகித்து கூறினாள் என் அன்பு மனைவி. மேலும், சுகர், பிளட்பிரஷர் போன்ற வியாதிகள் எல்லாம் அவ்வளவு சீக்கிரம் உடலுக்கு வராதாம். தினசரி உடலுக்கு நடைபயிற்சியும் கிடைக்குமாம். என் உடல்நிலையில் தான் என் மனைவிக்கு எத்தனை அக்கறை.

நான் கூறினேன், “பேசாம அந்த பைக்கை விற்றுவிட்டு உனக்கு ஒரு புது தங்க வளையல் வாங்குனா நல்லாருக்கும்னு எனக்குத் தோணுது”

என் அன்பு மனைவி சிரித்துக் கொண்டே கூறினாள். “ஐயோ வேணாங்க, அந்த ஓட்டை உடைசல யார் வாங்கப் போறாங்க”

எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. அந்த பைக் ஒரு ஓட்டை உடைசல் என்று அவளுக்குத் தெரிந்திருக்கிறதே.

மேலும், எனது 12 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய டச்ஸ்கிரீன் செல்போனை பற்றி கூற வேண்டும். அது ஏதோ ஒரு வார இதழ் நடத்திய போட்டியில் பரிசாக கிடைத்தது. 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து நான் செல்போன் வாங்கியிருந்திருந்தால் அன்று நான் உலகை வெறுத்து இல்லறம் துறந்த நாளாக இருந்திருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அப்படிப்பட்ட அந்த செல்போனில் ஒரு செயல் இதுவரை நடக்கவே இல்லை. அந்த செல்லுக்கு இதுவரை பல அழைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் அதிலிருந்து ஒரு அழைப்பு கூட சென்றதில்லை. அந்த செல்போனில் இருந்து நான் இதுவரை யாரையும் அழைத்ததில்லை. காரணம் இதுவரை அந்த செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய நான் அனுமதிக்கப்படவில்லை என்கிற உண்மையை நான் யாரிடமும் சொன்னதில்லை.

நேற்று அந்த அற்புதம் நிகழ்ந்துவிட்டது. அந்த 75ஆயிரம் ரூபாயிலிருந்து மிகத் ‌தைரியமாக 75 ரூபாயை எடுத்து ரீசார்ஜ்செய்து விட்டேன். முதன் முதலாக என் நண்பனை அழைத்துப் பேசினேன். அந்த அற்புதத்தை நம்ப முடியாத அவன் வாயடைத்துப் போய் அமைதியாக இருந்துவிட்டான். நான் மட்டும் 2 நிமிடங்கள் பேசிவிட்டு வைத்துவிட்டேன். இனி எவனும் என் பெயருக்கும் முன் மிஸ்டுகால் என்கிற அடைமொழியை போட்டு அழைக்க முடியாது. அந்த பட்டப்பெயருக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்.

நான் சம்பாதிக்க ஆரம்பித்த அந்தக் காலத்திலிருந்தே, நான் அந்த வேலையை மட்டும் தான் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் எனது சம்பாத்தியத்தைப் பற்றி மற்றவர்கள் கணக்கு போட ஆரம்பித்துவிடுகிறார்கள். எனக்கு அந்த உரிமை ஆரம்பத்திலிருந்தே அனுமதிக்கப்படவில்லை. நான் சம்பாதிக்க மட்டுமே செய்ய வேண்டும். செலவு செய்வதைப் பற்றி மற்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அந்த சிரமமான பணியை என்னிடம் இருந்து பறித்துக் கொண்டார்கள். என் அம்மா, அப்பா, மனைவி, என ஆரம்பத்திலிருந்தே செலவு செய்தல் என்ற கடினமான பணியை அனைவரும் பிரித்து எடுத்துக் கொண்டார்கள். அவர்கள் மேலும் எனக்கு தொந்தரவு சேர அனுமதிக்கவில்லை. என் குழந்தைக்கு இருக்கும் தைரியத்தைக் கூட நான் இழந்து விட்டேன். அவளுக்கு ஒரு பென்சில் வேண்டுமென்றால் யோசிக்காமல் சென்று அவளது அம்மாவிடம் கேட்பாள், எனக்கு ஒரு பென்சில் வேண்டும் என்று மிகத் தைரியமாக.

அன்று ஒருநாள், எனது அன்பு மனைவி தனது 65 ஆவது சேலையை எந்த டிசைனில் வாங்குவது என்ற யோசனையில் செய்தி வாசிப்பாளினி சந்தியாவை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவளது கவனத்தை கலைத்த நான், எனது மானம் மறைக்கப்பட வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்தி பிய்ந்து போன ஜிப்புக்கு மாற்று வழி என்ன என்று கேட்ட போது. அவள் முறைத்துப் பார்த்தாள்………… முழுதாக இரண்டு நிமிடங்கள்……….

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *