அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், கருணாகரன்.
“”அப்பா…”
தயங்கி, தயங்கி அருகில் வந்தான் பாபு. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, “”ம்…” என உருமினான், கருணாகரன்.
சமீப நாட்களாக, வீட்டில் குழந்தைகள் உட்பட யாரிடமும் சரிவர பேசுவது கிடையாது.
“”நான் ஒண்ணு கேட்கலாமா?”
“”என்ன கேட்கப் போற…”
குரலின் கடுமை, பாபுவை பின்னடைய வைத்தது; ஆனாலும் கேட்டான்…
“”நீ விஸ்கி சாப்பிட்டியாப்பா?”
சுரீரென்று முள் குத்தியது. திரும்பி குனிந்து, பாபுவின் தோள்களை அழுத்திப் பிடித்து, “”உங்க அம்மா கேட்கச் சொன்னாளா?” என்றான்; கண்களில் தீ.
“”என் பிரெண்ட் தீபக் சொன்னான், அவன் அப்பா மேனேஜரா இருக்கிற ஓட்டல்ல, போன வாரம் நீயும், இன்னும் சிலரும் போய் குடிச்சிங்களாம்…”
பளீரென்று மகன் கன்னத்தில் அறைந்தான் கருணாகரன்.
இரண்டு அடி தள்ளிப் போய் விழுந்து அலறினான், பாபு.
“”அய்யோ…” என்று அலறியபடி வந்தாள், சீதா.
“”குழந்தையை ஏன் அடிச்சீங்க?”
“”அது, உனக்கு விழ வேண்டியது… குழந்தைகளை எனக்கு எதிரா திருப்ப பார்க்கிறீயா? பின்னிடுவேன்.”
சுட்டு விரல் காட்டி எச்சரித்தான்; சம்பந்தம் ஓடி வந்தார்.
“”கருணா… உனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா… நல்லாதானேடா இருந்தே… என்னாச்சு உனக்கு. யாரு, எது கேட்டாலும், ஒண்ணு எரிஞ்சு விழற, இல்ல கை ஓங்கற… என்ன நினைச்சுகிட்டிருக்கிற மனசுல…”
“”நான் நல்லாத்தான் இருக்கேன். நீங்க தேடி வச்ச ஸ்ரீதேவி, தேவையில்லாம என்னை டார்ச்சர் பண்றா. எதுக்கும் ஒரு எல்லை இருக்கு. அஞ்சு வயசு பையன் கேக்கறான், விஸ்கி சாப்பிட்டியான்னு. விஸ்கி பத்தி என்ன தெரியும் அவனுக்கு!”
“”அவனுக்கு தெரியுது, தெரியல… அதுவா விஷயம். அவன் சொன்னதுல உண்மையில்லைன்னா, “இல்லை’ன்னு பதில் சொல்றத விட்டுட்டு, ஏண்டா அடிக்கற. உம் மேல தப்பு இல்லைன்னா, எப்பவும் போல நயமா எடுத்துச் சொல்ல வேண்டியது தானே!”
“”எல்லாத்துக்கும், எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அனாவசியமா என் விஷயத்துல தலையிடாதீங்க. உங்களை எந்தக் குறையுமில்லாம வச்சு காப்பாத்திக்கிட்டிருக்கேன். அதுவரைக்கும் சந்தோஷப்பட்டுக்கிட்டு இருங்க. மரியாதை இல்லாமல், ஆளாளுக்கு என்னை கேள்வி கேட்கறது, எனக்கு பிடிக்காது,” என்று சாட்டை விளாசலாய் சொல்லிவிட்டு, விருட்டென்று வெளியேறினான், கருணாகரன்.
“”மதிப்பும், மரியாதையும் வெளியில; வீட்ல, அன்பும், பாசமும் தாண்டா இருக்கணும்,” என்று அவர் சொன்னது, அவன் காதுக்கு எட்டவில்லை.
அடி விழுந்த அதிர்ச்சியுடனும், அழுகையுடனும் அம்மாவைப் பார்த்தான் பாபு…
“”அப்பா, ஏம்மா அடிச்சாரு… நான் தீபக் சொன்னதை நம்பலைம்மா… அவன்கிட்ட, எங்க அப்பா ரொம்ப நல்லவர். அவர் அதெல்லாம் செய்ய மாட்டார்ன்னு சொன்னேன். வேற யாரையாவது பார்த்துட்டு, எங்க அப்பான்னு நினைச்சுட்டாரு உங்க அப்பான்னு சொன்னேன். நான் சொன்னது சரி தானேம்மா… அதுக்கு ஏன் அப்பா அடிக்கணும்.”
“”முழுசா கேட்டிருந்தால், அடிச்சிருக்க மாட்டார் செல்லம். நாம் பேசற எதையும், முழுசா கேட்டுக்கற நிலையில் அவர் இல்லை.”
“”ஏம்மா…” என்றாள், மூணு வயது நிம்மி.
“”அது வந்து… அவருக்கு ஆபீசுல ரொம்ப வேலை, டென்ஷன். அதான்… நீங்க ரெடியாகுங்க… ஸ்கூலுக்கு டயமாகுதுல்ல?” என்றபடியே குழந்தைகளை அழைத்து போனாள்.
குழந்தைகளை ஸ்கூலில் விட்டு விட்டு, வீடு திரும்பிய சம்பந்தம், மருமகளை அழைத்தார்.
“”கொஞ்சம் நாளா உனக்கும், கருணாகரனுக்கும் இடையில ஏதோ சுணக்கம் இருக்கறது எனக்குத் தெரியும். ஏதோ கணவன், மனைவிக்கு இடையிலான விஷயம்… போக, போக சரியாயிடும்ன்னு கண்டுக்காம இருந்தேன்; இன்னைக்கு விபரீதமா வெடிக்குது. என்னதான்னு கொஞ்சம் சொல்லேம்மா,” என்றார் சம்பந்தம்.
“”பாஸ் புக் அப்டேட் பண்றதுக்காக, பேங்க்குக்கு போயிருந்தேன் மாமா. என்ட்ரியை சரி பார்த்த போது, கடந்த வாரம் அவர், 4,000 ரூபாய் எடுத்திருப்பது தெரிஞ்சது. ஒரு ரூபாய் செலவழித்தாலும், காரணம் சொல்லிடுவார். இது முழுசாய், 4,000 ரூபாய். அவரே சொல்வார்ன்னு எதிர்பார்த்தேன்; சொல்லலை. மறந்திருப்பார்ன்னு நினைச்சு ஞாபகப்படுத்தினேன். அவ்வளவுதான்…”
“”சாதாரண விஷயம். அதுக்கு ஏன் இவ்வளவு ஆர்பாட்டம்.”
“”அதான் புரியல மாமா… ஏதோ ஆபீஸ் டென்ஷன்னுதான், நானும் சும்மா இருந்தேன். இன்னொரு நாள், யதேச்சையா தான் அந்த பேச்சை எடுத்தேன். “யாருக்காவது கொடுத்தீங்களா அல்லது டெபிட் கார்டு எண்ணை தெரிஞ்சு எவனாவது எடுத்துட்டானா?’ன்னு கேட்டேன்; முறைத்தார். பேச்சை தவிர்த்தார். மறுநாள் பேசினார்; ஆனால், அவர் பேச்சே ஒரு வகையா இருந்தது.
“”அனாவசியமா என்னை கேள்வி கேட்டு, என் சுதந்திரத்தில் தலையிடாதேன்னு முகத்தில் அடிச்சாப்ல சொன்னார்; அதிர்ச்சியா இருந்தது.”
“”திடீர்ன்னு ஏன் இப்படி ரியாக்ட் பண்றான். வெளியில் மனம் விட்டுச் சொல்ல முடியாதபடி என்ன சிக்கல். பாபு சொன்னதுக்கும், 4,000 ரூபாய் குறையறதுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறாப்ல தெரியுது. 4,000 ரூபாயைக் கொண்டு போய், ஓட்டல்ல செலவழிச்சிருக்கான். யாருக்கு, எதுக்காக செலவழிச்சான்னு தெரியல. கேட்டால், கோபப்படறான்னா… அதை நல்ல விதமா செலவழிக்கலன்னு தெரியுது. இதை இப்படியே விடக் கூடாது.”
“”அவரா சொல்ற வரைக்கும், நீங்கள் ஏதும் கேட்டுக்காதீங்க மாமா… இன்னும் கோபப்படப் போறார்.”
“”அதற்கு பயந்தால், பிரச்னை தீராதும்மா… ஆரம்பத்திலேயே கிள்ளிக் களையணும். 4,000 ரூபாய் போனது பற்றியில்லை என் கவலை. கோபம்ன்னா என்னன்னே தெரியாம, அன்பா, சந்தோஷமா, எல்லாரிடமும் சிரிச்சு பேசி கலகலப்பாயிருந்தவன், தானும் சங்கடப்பட்டுக்கிட்டு, நம்மையும் சங்கடப்படுத்திக்கிட்டு, ஒட்டுமொத்த குடும்பத்தோட நிம்மதியையே கெடுக்கறான். குழந்தையை ஒரு வார்த்தை கடுமையாய் பேசவே தயங்கறவன்… இன்னைக்கு கை நீட்டி அடிக்கிறான்; என்னையும், உன்னையும் மிரட்டுறான். எப்படியம்மா விட முடியும்.”
– சிந்தனையுடன் நகர்ந்தார்.
மதியம் உணவு இடைவேளையில், கேன்ட்டீனில் சாப்பிடப் போனான் கருணாகரன். காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை; மனம் சரியில்லை. குழந்தையை அடித்தது குறித்து, மெல்லிய வேதனை ஓடிக் கொண்டிருந்தது உள்ளே.
பசி வயிற்றைக் கிள்ளியது. செல்ப் சர்வீஸ். டோக்கன் வாங்கி, க்யூவில் நின்று தட்டை நிரப்பி, இருக்கை தேடி அமர்ந்தான். தட்டில் இருந்தவைகளைப் பார்க்கும் போதே, சீதாவும், கைப் பக்குவமும் கண்ணில் தெரியாமல் இல்லை. மனதைக் கட்டுப்படுத்தி, சாப்பிடத் துவங்கும் போது, பின் சீட்டில் சிலர் பேசுவது கேட்டது. பேச்சு அவனுக்கும் சம்பந்தப்பட்டது போல் தெரியவே, கவனித்து கேட்டான்.
அவர்கள் நாலு பேராக உட்கார்ந்திருந்தனர்; எந்த செக்ஷன் என்று தெரியவில்லை. கேன்ட்டீனில் நிலவிய பல்வகை சப்தங்களுக்கிடையிலும், அவர்களின் பேச்சு தெளிவாக அவனுக்கு எட்டியது.
“”ராமு… நீ வீட்டுக்கு தெரியாம, ஆபீசுக்கு மட்டம் போட்டு, நண்பர்களோடு சினிமா போனது தப்பே இல்லை. அதை, வீட்ல சொல்லாம மறைச்ச பாரு… அதான் தப்பு. வீட்டுக்கு போனவுடனே, மனைவி கிட்டயாவது சொல்லியிருக்கணும். சொன்னால் தவறா நினைப்பாங்கன்னோ அல்லது ஏன் சொல்லணும்ன்னு தெனாவெட்டாவோ இருந்துட்டே. அது, அப்படி சுத்தி, இப்படி சுத்தி, யார் மூலமாவோ தெரிய வந்ததால, பிரச்னை ஆச்சு.
“”சட்டைய பிடிச்சு கேட்கத்தான் செய்வாள். எவ கூடய்யா படம் பார்த்தேன்னு. அப்பவாவது நீ நிதானமா நடத்திருக்கணும். குட்டு உடைஞ்சு போச்சேங்கற அவமானம், கோபமா வெடிச்சிருக்கு. அவங்கள ஒரு அடி அடிச்சதோட, நான் அப்படித்தான் போவேன். என்னை கேட்க நீ யார்ன்னு அடாவடியா பேசி, பிரச்னையை பெரிசு பண்ணிட்ட… விடு… ரெண்டு நாள் போக விட்டு, நிதானமா பேசி, மன்னிப்பு கேட்டு, சரண்டராயிடு… எல்லாம் சரியாயிடும். அந்த வாட்டர் கேனை இப்படித் தள்ளு…” என்றது ஒரு முதிர் குரல்.
தொடர்ந்து ஒருவனின் துடுக்கான பேச்சு…
“”என்னாது மன்னிப்பு கேட்கறதா… ஏன்யா, இவர் என்ன கொலை குத்தமா பண்ணிட்டாரு? எதுக்கு மன்னிப்பு கேட்கணும். ஆப்ட்ரால் ஒரு படம் பார்க்க உரிமையில்லையா இவருக்கு. இவர் சம்பாதனையிலிருந்து, பத்து ரூபாய் செலவு பண்ண உரிமையில்லையா… பெருசா உபதேசம் பண்ண வந்துட்ட…”
“”டென்ஷன் ஆகாதீங்கப்பா… ராமு ஆரம்பத்துலயிருந்து அப்படி, இப்படி இருந்திருந்தால், இதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. வீட்லயும் இதை பெருசு பண்ணியிருக்க மாட்டாங்க. அவன் வீட்டுக்கு தெரியாம ஒரு துரும்பையும் நகர்த்தாத ஆசாமி. பேமிலியோடு ரொம்ப அட்டாச்மென்ட்டா இருக்கறவர். குடும்பத்திலயும் அவர் பேர்ல ரொம்ப அன்பும், நம்பிக்கையும் வச்சிருக்காங்க. ராமுவை, “அரிச்சந்திரனின் மறுபிறவி…’ன்னு பெருமையா பேசிகிட்டிருக்காங்க. அதனாலதான், சின்ன விஷயத்தைக் கூட அவங்களால தாங்கிக்க முடியல.
“”இதை சுமூகமா கையாண்டு, தெரியாம பண்ணிட்டேன்… இனிமே இப்படி செய்ய மாட்டேன்னு, தவறை நேர்மையா ஒப்புக்கிட்டால், உன்னை யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க. உன் மேல அவங்களுக்கு இருக்கும் மரியாதை அதிகமாகும். வீடும், முன் போல் அன்பா, பாசமா இருக்கும். அதைவிட்டு, பக்கத்திலிருந்து உசுப்புறாரே… இவரை போன்றவர்களின் பேச்சை கேட்டு, ஈகோவை வளர்த்துகிட்டால், மேலும் தப்பு செய்துகிட்டே போகத் தோணும். அதனால, வேண்டாத விளைவுகள் தான் வரும். நீயும், குடும்பமும் நாசமா போக வேண்டியிருக்கும்; பரவாயில்லையா…”
“பளீ’ரென்று கன்னத்தில் யாரோ அடித்தது போல் இருந்தது கருணாகரனுக்கு. சாப்பாட்டுத் தட்டை நகர்த்தி வைத்து, வேகமாக வெளியேறினான்.
அன்று மாலை வீட்டுக்கு வந்ததும், மனைவி, அப்பா, குழந்தைகள் மத்தியில் மண்டியிட்டு அமர்ந்து, “”நான் தப்பு பண்ணிட்டேன். பிறந்தநாளின் போது என்னை வாழ்த்த பழைய நண்பர்கள் ஆபீசுக்கு நேரில் வந்துட்டாங்க. அவங்க வற்புறுத்தி கேட்டதால, ஓட்டல்ல வச்சு பார்ட்டி கொடுக்க வேண்டியதாயிடுச்சு. முதல், முதலா நானும் கொஞ்சம் குடிச்சுட்டேன்.
“”மனசுல உறுத்தல் தான். சீதாகிட்டயாவது சொல்லியிருக்கணும்; சொல்லாம மறைச்சிட்டேன். எனக்கு சொல்லணும்ன்னு தான். ஆனால், நண்பர்கள், “சரியான குழந்தையா இருக்கியே… இதெல்லாம் சிம்பிள் மேட்டர்; கமுக்கமா இருந்துடு. வெளியில் தெரிஞ்சால் வருத்தப்படுவாங்க. உன் இமேஜ் கெட்டுடும். யாரும் மதிக்க மாட்டாங்க. இதெல்லாம் சம்பாதிக்கிற ஆணுக்கு உரிய தனி உரிமை. யாருக்கும் சொல்லிக்கிட்டிருக்கணும்ன்னு இல்லை…’ அப்படி, இப்படின்னு கிண்டல் பண்ணாங்க; அதனால், யாருக்கும் சொல்லாம மறைச்சேன். ஆனால், அது இப்படி விபரீதமாய் வெடிக்கும்ன்னு நினைக்கலை. என்னை மன்னிச்சுடுங்க,” என்று வேண்டினான்.
பாபுவை அணைத்து, அவன் கன்னத்தை தடவினான்.
“”ரொம்ப வலிச்சுதா…”
“”இல்லப்பா…” – மகள் வந்து கட்டிக் கொண்டாள்.
சீதா கண்ணில், ஆனந்தக் கண்ணீர்.
சம்பந்தம் அவசரமாக வெளியில் சென்றார். தெருமுனைக் கடையில் இருந்த பொது தொலைபேசியில், சில எண்களை அழுத்தினார். லைன் கிடைத்ததும், “”நான் கருணாகரனின் அப்பா பேசறேன் சார்… கடவுள் கிட்ட முறையிட்டிருந்தால் கூட இவ்வளவு சீக்கிரம் பலன் கிடைச்சிருக்குமான்னு தெரியல. காலையில தான் உங்ககிட்ட சொன்னேன். சாயங்காலம், என் மகன் மனம் திருந்தி வந்துட்டான். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை சார்.”
மறுமுனையில் லேசான சிரிப்புடன், மேனேஜர் சிவராம்…
“”மிஸ்டர் சம்பந்தம்… கருணாகரன் உங்களுக்கு பிள்ளைன்னா, எங்களுக்கு திறமையான ஊழியர். ஒவ்வொரு ஊழியர் நலனிலும் எங்களுக்கு, அக்கறையும், கவனமும் உண்டு. பிரச்னைகளில் சிக்காத ஊழியர்களிடமிருந்து தான் முழுமையான, ஈடுபாட்டுடனான பங்களிப்பை நாங்கள் பெற முடியும். அதனால், ஒவ்வொருவரையும் நாங்கள் கண்காணிச்சுட்டுத்தான் இருப்போம்.
“”உங்கள் மகனின் ஒரு வார கால பர்பாமென்சில் குறை தெரிவதை கவனித்து, அவரை விசாரிக்கலாம் என்று நினைத்த நேரத்தில் தான், நீங்கள் போன் செய்து, வீட்டில் நடந்ததை தெரிவிச்சீங்க. எங்க வேலை சுலபமாச்சு. கருணாகரனை நீங்கள் மிக நல்ல பிள்ளையாய் வளர்த்திருந்ததால், அவர் செய்த சின்ன தவறை கரெக்ட் பண்ண, சுலபமா இருந்தது. அவர் மனசாட்சியை தொடராப்ல, சின்ன டிராமா பண்ணோம். அது, “ஒர்க்-அவுட்’ ஆனதுல எங்களுக்கும் சந்தோஷம் தான். பிரச்னையை தள்ளிப் போடாம, உடனடியாய் பார்வைக்கு கொண்டு வந்ததுக்கு, நாங்க தான் நன்றி சொல்லணும். சந்தோஷமாய் இருங்க…” என்றார்.
மகிழ்ச்சியோடு ரிசீவரை வைத்துவிட்டு, சில்லரை தரவும் மறந்தவராய், வீடு நோக்கி நடந்தார், சம்பந்தம்.
– ஆகஸ்ட் 2011