முப்பது லட்சம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 12,834 
 
 

புழக்கடை வாசலில், தங்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தினர், அன்புச் செல்வனும், வினோதினியும். அந்த பெரிய வீட்டை நிமிர்ந்து பார்த்தாள், வினோதினி.

அந்த கிராமத்தில் பெரிய செல்வந்தர் வீட்டுப் பையன், அன்புச் செல்வன். ‘இது நடக்குமா, இந்த வீட்டின் மருமகளாய் வர இயலுமா…’ என்று எண்ணியவள், “அன்பு… உங்கப்பா என்னை ஏத்துப்பாரா…” என்று சிறு பயத்துடன் கேட்டாள்.

“இதையே எத்தனை முறை கேட்ப…” என்றவன், “நீ இங்கேயே இரு… நான் அப்பாகிட்ட பேசிட்டு வந்து உன்னை அழைச்சுட்டு போறேன்,” என்றான்.

அவன் கூறுவது சரியென்று படவே, “சரி சரி… அங்கிளோட சம்மதத்தோடயே என்னை அழைச்சுட்டுப் போ,” என்றாள், சிரித்தபடி!

அவள் சிரிப்பிலும், கன்னத்தில் விழும் குழியிலும் வழக்கம்போல் சொக்கி, ‘ஷ்யூர்’ என்று சொல்லி, உள்ளே போனான்.

பொறியியல் கல்லுாரியில் இறுதி ஆண்டு மாணவர்கள், அன்புச் செல்வனும், அவன் காதலி வினோதினியும்!

அழகில் மட்டுமல்ல, பட்டிமன்றம், கவியரங்கம் என, எல்லாவற்றிலும் முன்னிலை வகிப்பவள் வினோதினி. அவளது கடைக்கண் பார்வைக்காக, மாணவர்கள் மட்டுமல்ல, சில பேராசிரியர்களும் தவம் கிடந்தனர். ஆனாலும், கவியரங்கில் இவளை ஓரங்கட்ட முயன்று, பரிதாபமாக தோற்றுப்போன அன்புச்செல்வனை ஏனோ அவளுக்கு பிடித்துப் போயிற்று.

‘வினோ… உண்மைய சொல்லு… எத்தனையோ பேர், உன் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கையில், நீ என்னை, ‘லவ்’ பண்ணுறேன்னு சொல்றது எந்தளவு உண்மை?’ என்று அவன் கேட்ட போது, ‘மத்தவங்க மாதிரி நீ என் பின்னால நாய்குட்டியா அலையல… என்னை உதாசீனப்படுத்தின… அதுதான் உன்னை காதலிக்க துாண்டியது…’ என்றாள்.

ஆனால், அன்புச் செல்வன் மனதிலோ, வினோதினியை காதலிக்கும் வரை, அவள் அத்தை பெண் தேன்மொழி இருந்தாள். அவள் பிறந்தது முதல், மற்றவர்களால் சொல்லிச் சொல்லி ஏற்பட்ட பந்தம் அது!

தேன்மொழி ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தபோது, இவன் ஐந்தாம் வகுப்பு. இருவர் வீடும் முன்னும் பின்னுமாய் இருக்கும். இரண்டு வீட்டையும் பிரிக்கும் காம்பவுண்ட் சுவரில் பிளவு ஏற்பட்டு, பாதிக்கு மேல் விழுந்திருக்கும். இருவரும் சுவர் ஏறிக் குதித்து, இரண்டு வீட்டுக்குமாய் ஓடி விளையாடுவர். இணைந்து தான், பள்ளி செல்வர். அதுவரை, பள்ளிக்கூடம் போக முரண்டு பிடிக்கும் தேன்மொழி, அவனை பார்த்ததும், சந்தோஷமாய் பள்ளிப் பையை தோளில் மாட்டியபடி கிளம்பி விடுவாள்.

‘தேனு… தேனு…’ என்று, தன் சொந்த சகோதர, சகோதரியிடம் கூட அப்படிப்பட்ட பாசத்தை அவன் காட்டியதில்லை. அவளும், ‘மாமா… மாமா…’ என்று அவனையே சுற்றிச் சுற்றி வருவாள்.

தின்பண்டங்கள் எது கிடைத்தாலும், அவனுக்கு குடுக்காமல் சாப்பிட மாட்டாள். பாவாடையில் வைத்து, ‘காக்கா கடி’ கடித்து கொடுக்கும் கமர்கட்டும், கடலை மிட்டாயும் அவனுக்கு அவ்வளவு தித்திக்கும்.

இத்தனைக்கும் தேன்மொழி ஒன்றும் அத்தனை அழகியல்ல. கொஞ்சம் கறுப்பு; நடுத்தர உயரம், சுருட்டை முடி. ஆனாலும், ஏனோ தேனுக்கும், அன்புக்கும் அப்படி ஒரு ஒட்டுறவு.

இந்த தருணத்தில் தான் பொறியியல் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படிக்கும் போது, அவனை மயக்கி, ஈர்த்து விட்டாள், வினோதினி.

அன்பும் – வினோவும் எப்படியோ ஒருமித்துப் போயினர். முக்கொம்பில் மடியில் படுத்து மயக்கம் காண்பர்; சுவாமி தரிசனம் என சொல்லி, மருதமலை சென்று, ஆள் அரவமற்ற இடத்தில் அமர்ந்து சினிமா, இலக்கியம் என்று சகல விஷயங்களையும் அலசி, கையோடு கை கோர்த்து, தோளில் முகம் புதைத்து கிடப்பர்.

இந்நிலையில், கல்லுாரியில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில், வினோதினிக்கும், அன்புச் செல்வனுக்கும் வேலை கிடைக்கவே, சந்தோஷத்தில் மிதந்தனர்.

‘அன்பு… நீ இல்லாம என்னால இருக்க முடியாது; அவ்வளவு துாரம் என்னை மயக்கிட்டே…’ என்றாள், வினோதினி.

‘தப்பா சொல்றே… என்னை மயக்கியது நீ தான்… நேத்து பாரு… சாப்பிட உட்கார்ந்தவன், சாப்பிட்டு முடித்த ஞாபகத்தில் அப்படியே கை கழுவிட்டேன். அந்த அளவுக்கு என்னையே நான் மறந்துட்டிருக்கேன்…’ என்றான், அன்புச் செல்வன்.

அவள் சோழிகளாய் குலுங்கி சிரித்து, அவன் கிராப்பைக் கலைத்து, ‘உங்க வீட்ல ஜாதியை காரணம் காட்டி கல்யாணத்தை மறுத்திட்டாங்கன்னா, நாம பிரியறது தான் ஒரே வழியா…’ அவள் பெரிய விழிகளிலிருந்து சோகம் பூக்க, அவள் வாயை, தன் விரல்களால் மூடி, அவளை தன்னோடு அணைத்தவாறு, ‘அப்படி ஒரு நிலை வந்தா, நாம என்ன செய்யப் போறோம் தெரியுமா…’ என்று, பீடிகை போட்டான்.

‘ஓடிப் போய் கல்யாணம் செய்துக்கப் போறோமா…’ என்றாள்.

‘இல்ல; ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திலிருந்து ரெண்டு பேரும் கைகோர்த்து கடலில் குதிச்சிட வேண்டியது தான்…’ என்ற போது, அவள் இதயம், கேம்பஸ் இண்டர்வியூவில் தனக்கு கிடைத்த வேலையைப் பற்றி நினைத்தது.

‘வருஷத்துக்கு, 30 லட்சம் ரூபாய் சம்பளம்; எட்டு வருஷ அக்ரிமென்ட். யாருக்கு கிடைக்கும் இவ்வளவு பெரிய அதிர்ஷ்டம்… கல்லுாரி படிப்பை முடித்ததும், பணியில் சேர வேண்டும்; அதற்கான உத்தரவு இன்னும் இரண்டு நாட்களில் கைக்கு வந்து விடும். இந்த உயர்ந்த அந்தஸ்து ஒன்றே அவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள வைக்கும்…’ என்று எண்ணினாள். அதையே, அன்புச் செல்வனிடம் கூற, அவனும், தன் காதலைப் பற்றிக் கூறி, வினோதியை தன் பெற்றோருக்கு அறிமுகப்படுத்துவதற்காக, அவளை, தன் ஊருக்கு அழைத்து வந்திருந்தான்.

“அப்பா…” என்றவாறு தன் முன் வந்து நின்ற மகனை, ஏறெடுத்துப் பார்த்து, “என்னப்பா நல்லாயிருக்கியா…” என்றவர், “ஆமா… உன் காலேஜ் கேம்பஸ் இண்டர்வியூ என்னாச்சு…” என்று கேட்டார்.

“செலக் ட் ஆயிட்டேன்ப்பா… வருஷத்துக்கு, 30 லட்சம் ரூபா சம்பளம்; ஐஞ்சு வருஷ அக்ரிமென்ட்.”

“ரொம்ப சந்தோஷம்ப்பா… அப்ப, அடுத்த வருஷமே, உனக்கும், தேன்மொழிக்கும் கல்யாணத்து முடிச்சிர வேண்டியது தான்,” என்றார்.

“இல்லப்பா வந்து… நான் ஒரு பெண்ணை, ‘லவ்’ பண்றேன்… அவளைத்தான் கல்யாணம் செய்யறதுன்னு இருக்கேன்…” என்றான், சிறு தடுமாற்றத்துடன்!

உடனே, அவர் கோபப்பட்டு கத்தவில்லை; அமைதியாக, “சரி… சின்னப்புள்ளையில இருந்து உன்னை கட்டிக்கிடறதா இருக்காளே உன் அத்தைப் பொண்ணு தேன்மொழி… அவளப் பத்தி நெனச்சியா…” என்றார்.

“அவள மறந்துதான் ஆகணும்…”

“தேன்மொழிக்கு நிறைய சொத்து இருக்கு… அத்தனைக்கும் அவ தான் ஒத்த வாரிசு,” என்றார்.

“அப்பா… என் காதலி வினோதினியும் கேம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகியிருக்கா. வருஷத்துக்கு, 30 லட்ச ரூபாய் சம்பளம்…”

புழக்கடையில் இருந்த பந்தலுக்கடியில் நின்றிருந்த வினோதினி, ஆர்வ மிகுதியால் வீட்டு வாசல்படியருகே வந்து நின்றாள்.

சிறிது நேரம் எதையோ யோசித்தவாறு, முன்னும் பின்னும் நடந்த அன்பு செல்வனின் தந்தை, பின், மகனை பார்த்து,”நான் என்ன சொன்னாலும் கேப்பியா…” என்று கேட்டார்.

“கேக்கறேன்பா…” என்றான்,

தந்தை, தன் காதலை ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில்!

“பேசாம, உன் அத்தை பெண் தேன்மொழிய கட்டிக்க… பழநியில் கல்யாணத்த வச்சிடலாம்; கல்யாணத்த முடிச்சுட்டு, நீ சென்னைக்கு போயிரு; தேன்மொழி இங்க கெடக்கட்டும். நீ சொல்றியே அந்தப் புள்ளையோடு சென்னையில குடும்பம் நடத்து…” என்றார்.

“வினோதினி இதுக்கு ஒத்துக்கணுமேப்பா…”

“அதான் ஒம்மேல அம்புட்டு காதல்ங்றியே… ‘கீப்’பா வச்சுக்க…”

“கல்யாணம் செய்ய சொல்வாளே…”

“ரெண்டு புள்ளைங்க பொறந்தபுறம் எங்க அப்பா, அம்மா சம்மதத்தோடு கல்யாணம் செய்துக்குவோம்; புள்ளைங்க பிறந்துட்டதால எங்கப்பா, அம்மா மறுக்க மாட்டாங்கன்னு சொல்லு. இந்தப் பக்கம் தேன்மொழியோட சொத்துமாச்சு… அந்தப் பக்கம் அந்தப் புள்ளையோட, 30 லட்ச ரூபாயுமாச்சு. கசக்குதா என்ன…” என்றார்.

அத்தை பெண் தேன்மொழியை நினைக்கும்போது, நாக்கில் தேன் பட்டது போல் ஒரு தித்திப்பு. வினோதினியிடம் கல்யாணம் செய்துக்கலாம் என்று சொல்லியே காலம் கடத்த வேண்டியது தான், வேறு வழியில்லை.

தந்தை தந்த தைரியத்தில் ஏதாவது பொய் சொல்லி வினோவை சமாளித்துக் கொள்ளலாமென, உற்சாகத்துடன் வெளியே வந்தான், அன்புசெல்வன்.

ஸ்கூட்டி நிறுத்தின இடம் வெறுமையாக இருந்தது.

அவன் மோட்டார் சைக்கிள் சீட்டில், ‘மார்க்கர்’ பேனாவால், ‘டர்ட்டி பிக்’ என, எழுதப்பட்டிருந்தது.

அவன் கன்னத்தில் அறைந்தது அவளா, அந்த, 30 லட்சம் ரூபாயா!

– நவ 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *