முன் தலைமுறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 1,958 
 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கலியாணபுரம் அசல் கிராமம். காவேரிக்கரை. இரண்டு சிறகு அக்கிரஹாரம். மேற்கே பெருமாள் கோவில்: கிழக்கே குடியானத் தெரு, கடைத்தெரு, காவேரிக்குப் போகும் வழி.

காமாக்ஷி அய்யர் வெகு காலமாக கிராம முன்சீப். அவர் தம்பி நடேசன் ஜவுளிக்கடை முதலாளி. கூட்டுக் குடும்பமாக இருந்தார்கள். பெரியவருக்குக் குழந்தைகள் கிடையாது.

நடேசன் மனைவி இருபது வயதுப் பெண். நல்ல நாட்டுப்புறம். பூப்புடவை, ஜம்பர், கலர் குங்குமம் அறியாதவள். மன்னிக்கு மரியாதை செய்து நடந்துகொள்ள வேண்டும் என்ற பரம்பரையை விட்டு விலகாதவள்.

நிர்மலான ஆகாயத்தில் திடீரென்று கருமேகம் எங்கிருந்து தோன்றுகிறது?

பரிஷ்காரமாக நடந்துவந்த கூட்டுக் குடும்பத்தில் ஒரு நாள் திடீரென்று புயல்… வார்த்தைகள்! ஒன்றுமில்லை, நடேசன் எதற்காகவோ மனைவியை அடித்துவிட்டான்.

‘வீட்டிலே நான் இருக்கிறேன், உனக்கென்னடா அதிகாரம் வந்தது அயோக்கியப் பயலே! குழந்தையை எப்படி அடித்தாய்? என்றார் தமையன்.

‘என் அகமுடையாளை நான் அடித்தால், நீங்கள் யார் கேட்க?’ வார்த்தைகள் வளர்ந்துவிட்டன.

“நான் யாரா?… நான் யாரா? அவ்வளவுக்கு வந்து விட்டாயா? அடியே, கிளம்புடி! இந்த வீட்டில் நமக்கு வேலையில்லை!!

‘எங்கே போகிறது?’ என்று பயந்தாள் ஆரம்பத்தில் சிவகாமு அம்மாள்.

‘சுடுகாட்டுக்கு!’ என்று சீறினார் காமாக்ஷி அய்யர்.

‘என்னடி முட்டாள் தனமாக உளறுகிறாய்? நமக்கு சிரமதசை இன்று தானா வந்தது? ஆறு மாதமாக காலட்சேபம் வெகு சிரமமாக இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியாமலா இருக்கும் ? ஊருக்கே தெரியுமே! எங்கே இந்தப் பக்கமாகப் போனால் பிடித்துக் கொள்ளுமோ என்று மேற்காலேயே போகிறான்’.

‘என்னமோ எல்லாருக்கும் அன்று வாயில் சனி இருந்தது. நீங்கள் இரண்டு சொல்ல அவன் இரண்டு சொல்ல, வார்த்தை முற்றிவிட்டது. இல்லாத போனால் நடேசு என்னைப் பார்க்காமல் ஒருநாள் இருப் பானா?’ என்று சொன்னபொழுது சிவகாமு அம்மாளின் கண்களில் ஜலம் வந்து விட்டது.

‘ஆமாண்டீ உனக்கிருக்கிறது வளர்த்த பாசம். அவனுக்கு இல்லையே! இருந்தா…’

காமாக்ஷி அய்யராலும் அதற்குமேல் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது.

‘சரி, அதெல்லாம் எதற்கு இப்பொழுது கீழாத்து சாமாவைப் போயி அஞ்சு ரூபாய் கேட்டுவிட்டு வருகிறேன்’.

‘வெறுமனே தரமாட்டா ஒத்தரும். ஏதுக்கு அனாவசியமாக அவமானம். பெரிய அடுக்கு ஓட்டை. அதைக் கொண்டுபோய் கடை யிலே போட்டா ஏழெட்டு ரூபாய்க்குப் போகும் – இப்பொழுது பித்தளை விற்கிற விலைக்கு.’

‘எங்க தாத்தா காலத்துப் பாத்திரம்னு அது ஒன்று இருக்கிறது.சரி. கொடு!”

‘இன்னிக்கு வேண்டாம் நாளும் கிழமையுமாக. நாளைக்குப் பாத்துக்குவோம்!’

***

‘நீங்கள்தான் போயி, ஒரு வார்த்தை போனது போகட்டும் என்று சொல்லி பேசிப்பிட்டு வரப்படாதோ! முந்தாநான் ராத்திரி இருமி இருக்கார் இருமி இருக்கார் அப்படி இருமி இருக்கார். காலம்பர வாசல்லே கோலம் போட்டுண்டிருந்தேன். குச்சி ஊனிக்கிண்டு கிழக்கே போனார் அனாதையாட்டமா!’

‘என்னமோ விஷவேளை. வாயில் என்னமோ வந்து விட்டது. இப்பொழுது என்ன பண்ணுகிறது? வயஸாச்சு. முன்சீப் வேலை யில் எதோ பிசகு பண்ணிவிட்டார். அந்த அயோக்கியன் ரெவினியு இன்ஸ்பெக்டர் ஒரு வருஷம் சஸ்பெண்டு செய்துவிட்டான்.’

‘மூணு மாஸமா ரொம்ப கஷ்டமாம். மானி, அவ. வாய் திறக்காமே எப்படியோ நடத்தறா!’

‘சேர்ந்திருக்கிற போதுதான் இரண்டு பேரும் அடிச்சுக்குவேளே; இப்ப வந்துடுத்தோ இரக்கம் ?’

‘இதென்ன பேச்சு! வீடுள்ளா எவ்வளவோதான் இருக்கும். நாங்க அடிச்சிக்கிண்டதிலே என்ன வந்தது? நீங்க இரண்டு வார்த்தை பேசிக் கிண்டேள், வந்துடுத்தே குடும்பத்துக்கு!’

‘மன்னிக்கூட இப்படி ஆத்தெ விட்டு வெளியிலே போவான்னு…’

‘மன்னிக்கு மனசே இல்லை. ‘இந்தாங்கோ, மன்னி, ஆயிரம் இருந்தாலும் நமக்குள்ளே, வெளிலே போரதுங்கிறது நன்னால்லே’ என்றேன், நின்னுட்டாளே! அவர்னா வாடி வெளிலேன்னா அதட்டிக் கூட்டிண்டு போய்ட்டார்’.

‘மன்னி போகாதேன்னு தான் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் மேலே காலடி எடுக்கமாட்டாள்! நான் சொல்லல்லே-போய்விட்டாள்!’

***

‘ஓய் ஆட்டத்தைக் கவனித்து ஆடுவீரா, தெருவிலே போறவாளை எல்லாம் பார்த்துண்டு…’

‘காமாக்ஷி அய்யரா போரது! மனுஷன் இப்படிப் போய்விட்டாரே!’

‘எப்பேர்ப்பட்ட குடும்பம்-ஊர் சிரிச்சுப் போச்சே! இவா அப்பா இதே ஜில்லாவிலே பல்லக்கு போட்டுண்டு தாசில் பண்ணாராம். ரெண்டு கையாலே சம்பாதிச்சாராம். எல்லாத்தையும் தஞ்சாவூர் மோகனாம்பாள் கால்லே கொண்டு போய் கொட்டினாராம்’.

‘சாகிறபோது, பிணத்தெ எடுக்க வழியில்லே. அந்தம்மா அப்பளம் வச்சு, வடாம் இட்டு, வித்து புள்ளெகளெ முன்னுக்கு கொண்டு வந்தா!” ‘காமாக்ஷி அய்யர் முன்சீப் வேலைக்கு போறப்போ 16 வயதாம். தாயார் போயிட்டா, தான் வேலை பார்த்துண்டே தம்பியை படிக்கவச்சு கலியாணம் பண்ணி…’

‘உள்ளுக்குள்ளேயே ஜவுளிக் கடை வச்சுக்கொடுத்தார். கிஸ்தி வசூல் பணத்தைப் போட்டுப் பெரட்டி எப்படியோ…’

‘அண்ணன் தம்பின்னா அப்படியிருந்தா லோகத்துலே பாருங்கோ…’

‘பணம்னாங்காணும்! அதாலே தானே…’

‘பாவம் வயசானவர்; ரொம்ப சிரமப்பட்டார். தம்பி திரும்பிப் பார்க்கிறானா பாரும்’

‘அவன் என்ன பண்ணுவான்காணும்? எல்லாம் சூத்திரக் கயறு அவகிட்டேன்னா…’

‘ஓய், வாய்புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோன்னு ஏதாவது சொல்லாதே யும். லக்ஷ்மின்னா அவதான்…’

‘ஏண்டி லக்ஷ்மி, சிவகாமுவுக்கு நாலு நாளா காச்சலாமே. கிழவர் தனியா திண்டாடறாராமே!” தெரியாதே அம்மாமி! அதான் வாசல்லே காணம் போலே இருக்கு!’

‘ஐயையோ, பார்வதி போயிருந்தாளாம். ‘ஏண்டி சிவகாமு, இப்படிக் கிடக் கிறப்பக் கூட என்ன வைராக்கியம் – லக்ஷ்மியை வரச்சொல்லப் படாதோ’ன்னாளாம். பதிலே சொல்லல்லியாம்!”

‘எனக்கு சொல்லியனுப்பறதென்ன? தானே போறேன். என்னவோ புருஷா வார்த்தை சொல்லிண்டா…’

‘ஊரெல்லாம் உன் மண்டையைத்தான் உருட்டறா. நீதான் வத்தி வச்சுப்பிட்டாயம்’.

‘சிவசிவா! தெய்வம் என்னை நன்னாவைக்குமா, அவா ரெண்டு பேரும் எங்களுக்கு சேசத்துக்கு ? அவர் தம்பியெ புள்ளெ போலன்னா…’

‘எனக்குத் தெரியாதா? – நீங்க ரெண்டுபேரும் அக்கா தங்கெ மாதிரின்னா இருந்தேள். வீட்டுக்கு பெரியவானா செஞ்செதெல்லாம் சரின்னு நீயும் அனுசரணையா இருந்தே…!’

‘மன்னி ஆத்துலே இருந்தப்போ எனக்கு ஒரு கவலை கிடையாது. அவரும் கடையுண்டு தானுண்டுன்னு இருந்தார்.’

‘சரி, ஆச்சுன்னு குளிச்சுப்புட்டு போ”

‘ஆத்தங்கரைக்கு வந்தது நல்லதாப் போச்சு!”

பிரக்ஞையற்றுக் கிடந்த சிவகாமு அம்மாளின் பக்கத்தில் காமாக்ஷி அய்யர் உட்கார்ந்து கொண்டு கும்மட்டி அடுப்பை விசிறிக் கொண்டிருந்தார்.

கடையிலிருந்த புருஷனுக்குச் சொல்லி அனுப்பிவிட்டு, லக்ஷ்மி ஓட்டமாக ஓடிவந்தாள். வந்தவளைப் பார்த்து வெட்கப்பட்டவராய் காமாக்ஷி அய்யர் எழுந்து ரேழிக்குப் போனார். லக்ஷ்மி உடனே மன்னியருகில் உட்கார்ந்து.

‘மன்னி, மன்னி’ என்று மெதுவாகக் கூப்பிட்டாள்.

சிவகாமு அம்மாள் கண்திறந்து, ‘லக்ஷ்மி, வந்தாயா?’ என்றாள்.

‘இப்படி எதுக்கு மனுஷ்யா இல்லாதுபோலே கிடக்கணும்”

‘வேளைடி!’

‘உடம்பு எப்படி இருக்கு?’

‘இன்னக்கி தேவலை. நடேசு…’

‘இதோ வருவார். தெரியவே தெரியாது. சேசு அம்மாமி இப்பதான் சொன்னாள்…!’

‘லக்ஷ்மி, ஸ்னானம் பண்ணிண்டிருக்காயோ?’ என்று சிவகாமு அன்புடன் கேட்டாள். லக்ஷ்மி தலைகுனிந்து கொண்டு ‘இல்லை’ என்றாள்.

‘அம்மா, தெய்வம் கண் திறந்து பார்க்கட்டும்’.

‘நீங்கதான் மன்னி தெய்வம்!”

சிவகாமு அம்மாள் கண்ணீர் பெருக லக்ஷ்மியை இழுத்துத் தன்மேல் சாய்த்துக்கொண்டாள்.

‘மன்னி!’ என்று அலறிக் கொண்டு ஓடிவந்தான் நடேசன்.

‘அப்பா, நடேசு, ஒண்ணுமில்லேடா…!’

‘நாலு நாளா காச்சல்ன… ஐயோ… எனக்குத் தெரியவே தெரியாதே!’

‘டாக்டரைக் கூட்டிக்கொண்டு வரல்லியா?’ என்று கேட்டாள் லக்ஷ்மி.

‘டாக்டருக்குச் சொல்லி அனுப்பிவிட்டேன்!’

ரேழியில் காமாக்ஷி அய்யர் தம்பியுடன் எப்படிப் பேசுவது என்று தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

சிவகாமு அம்மாள், ‘நடேசு வந்திருக்கானே! தெரிஞ்சா அவன் வராமெ இருக்கமாட்டான்னு நான் சொல்லலியா’ என்று ரேழியைப் பார்த்துச் சொன்னாள்.

நடேசன் திரும்பி அண்ணாவைப் பார்த்தான். அவனாலும் பேச முடியவில்லை. என்ன சொல்வதென்றும் அவனுக்குத் தெரியவில்லை. கிழவர் வாசல் பக்கம் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.

‘மன்னி, இந்த வீட்டுக்கு வத்த வேளை. வண்டி கொண்டு வருகிறேன். ஆத்துக்குப் போவோம்!’

‘உங்கண்ணா வரமாட்டார். இங்கேயே இருக்கேன் நடேசு’ நடேசன் எழுந்து தமையன் பக்கத்தில் போய்நின்றான். தமையன் விறைத்துக் கொண்டு தெருப்பக்கம் பார்த்தார்.

‘அண்ணா, போனது போகிறது…’

‘நான் யார்? நான் யார்?’ என்று தமையன் தெருவைப்பார்த்துக் கொண்டே கத்தினார்.

‘சரிதான், ஏதோ வாய் தவறி…’ என்றாள் சிவகாமு.

‘வாய் தவறுமா, உள்ளே தவறாமல்?’ என்று காமாக்ஷி அய்யர் கர்ஜித்தார்.

‘தவறவில்லை, அண்ணா!’ என்று நடேசன் அழுது விட்டான்.

‘இத்தனை மாசம்…’

‘போகிறது…’ என்று சிவகாமு சமாதானம் செய்தாள். படுத்திருந்தபடியே.

‘எப்படிப் போகும்? ஊர் சிரிச்சுப் போச்சே!’

லக்ஷ்மி எழுத்து, மைத்துனர் முன்பு போய் நமஸ்காரம் செய்தாள். ‘வீடு வீடாக இல்லையே, வரமாட்டேளா?’ என்று கதறினாள். அதற்குமுன் அவர் முன்பு நின்று ஒருவார்த்தை அவரிடம் அவள் பேசினதில்லை.

காமாக்ஷி அய்யர் திடுக்கிட்டுத் திண்ணையைவிட்டு எழுந்து,

‘அம்மா, அம்மா, குழந்தே, அழாதே அம்மா! வரேன், வரேன்!’ என்றார். ‘லக்ஷ்மி அலட்டிக்காதே, வயறும் புள்ளையுமா… ?’ என்று சிவகாமி முடிக்குமுன் கிழவர் குதித்தோடிக்கொண்டு உள்ளே வந்து.. ‘எழுந்திரு, குழந்தை வேலை செய்யப்படாது!’ என்றார்.

– கிராம ஊழியன் 18.12.1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *