பொய்யர்களிடம் பொய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 17, 2019
பார்வையிட்டோர்: 5,680 
 

தற்போதைய உலகில் நாம் நேர்மையாக இருப்பதைவிட, சமர்த்து சாமர்த்தியமாக இருக்க வேண்டியிருக்கிறது. நம்மைச் சுற்றி பொய்யர்கள் அதிகமாகி விட்டார்கள். நாமும் அவர்களிடம் பொய் சொன்னால் தப்பில்லை. பொய்யர்களிடம் பொய் சொன்னால் அது நல்ல விஷயம்தான்.

அந்தகக் கவி வீரராகவ முதலியார் பிரபலமான பெரும் கவிஞர். ஏராளமான பாடல்களைச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு புனைந்து பாடி இருக்கிறார். அவர் பொய் சொல்வதைப் பற்றி மிகவும் ஆராய்ந்து ஒரு விளக்கம் தருகிறார்… அவர் இயற்றிய பாடல் இதுதான்:

பொய்யருக்குப் பொய்யுரைத்தால் வெற்றியா மவருக்குப்

பொய்யாகாத

மெய்யருக்குப் பொய்யுரைத்தால் தேய்பிறை போற்றவங்

குறைய மிடியுண்டாகும்.

துய்யதாய் தந்தையர்க்குப் பொய்யுரைத்தால்

வறுமை பிணி தொலையாவென்றும்

உய்யவரு டேசிகர்க்குப் பொய்யுரைத்தா நரகமது

வுண்மை தானே…

இப்பாடலின் பொருள் என்னவெனில் –

பொய்யருக்குப் பொய்யுரைத்தால்: பொய் பேசுவோரிடம் பொய்யைச் சொன்னால்; அவருக்கு: அப்படி பொய் சொன்னவர்களுக்கு; வெற்றியாம் – வெற்றியே உண்டாகும்; பொய் ஆகாத மெய்யருக்குப் பொய் உரைத்தால் – பொய்யே சொல்லாது உண்மையே பேசுவோரிடம் பொய் கூறினால்; தேய் பிறை போல் – தேய் பிறை போல; தவம் குறையும் – தவம் குறைந்து போகும்; மிடி உண்டாகும் – அத்தோடு தரித்திரமும் உண்டாகும்; துய்ய தாய் தந்தையருக்குப் பொய்யுரைத்தால் – தூய்மையான தாய் தந்தையரிடம் பொய் சொன்னால்; வறுமை பிணி என்றும் தொலையா- வறுமையும் நோயும் என்றும் நீங்கவே நீங்காது; உய்ய – கடைத்தேறும்படி; அருள் – அருளுகின்ற; தேசிகர்க்கு – குரு மூர்த்தியிடம்; பொய் உரைத்தால் – பொய்யைச் சொன்னால் நரகமது உண்மைதானே – நரகத்தை அடைவது சத்தியமே.

எனவே அந்தக் காலத்திலேயே ஒரு பிரபல புலவர் நமக்குத் தெளிவாக உரைத்திருக்கிறார். பொய்யர்களைத் தவிர, நம்மிடையே வெள்ளந்தியான அப்பாவிகளும், ஏமாளிகளும் அதிகம் இருக்கிறார்கள். இம்மாதிரி அப்பாவிகளுக்கு மூக்கை அமுக்கிப் பிடித்துவிட்டால் வாயினால் சுவாசிக்கத் தெரியாமல் இறந்து விடுவார்கள்.

ஒரு ஊரில் ஒரு அப்பாவி விவசாயி இருந்தான். அவனிடம் ஒரு அழகான குதிரை இருந்தது. பஞ்ச கல்யாணி போல சர்வ லட்சணமும் பொருந்திய குதிரை. பளபளவென தேன் நிறத்தில் கம்பீரமாக அது நின்றிருக்கும் அழகை காணக் கண்கோடி வேண்டும். அப்பேர்ப்பட்ட அழகிய குதிரையை வைத்திருப்பதில் அந்த விவசாயிக்கு கர்வமும் இருந்தது.

ஒருமுறை வேறொரு ஊருக்கு செல்கையில் அவன் கம்பீரமாக அந்தக் குதிரையின் மீது பயணித்தான். அப்போது வழியிலுள்ள மதுபான விடுதிக்குச் சென்றான். விடுதிக்கு வெளியேயுள்ள கம்பத்தில் குதிரையைக் கட்டிவிட்டு உள்ளே சென்றான்.

அந்த நேரத்தில் அந்த ஊருக்கு இரண்டு பக்காத் திருடர்கள் வந்தனர். அழகிய குதிரையைப் பார்த்தவுடன் இதை எப்படியும் நூதன வழியில் திருடிவிட வேண்டும் என்று யோசித்தனர். திட்டம் போட்டனர்.

அவர்கள் திட்டப்படி ஒரு திருடன் குதிரையை அவிழ்த்துவிட்டு அதன்மீது ஏறிக்கொண்டு சிட்டாகப் பறந்துவிட்டான். மற்றொரு திருடன் சோகமாக முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு விடுதிக்கு வெளியே காத்திருந்தான். குதிரையின் சொந்தக்கார விவசாயி வெளியே வந்து பார்த்தான். குதிரையைக் காணவில்லை. பதட்டமடைந்தான். திகைத்துப்போய் அலறுவதற்கு வாயைத் திறந்தான்.

அப்போது சோக வடிவமாக காத்திருந்த திருடன், அந்த விவசாயிடம் ஓடிச்சென்று, “ஐயா நீங்கள் குதிரையைத் தேடுவது எனக்குத் தெரியும்… நீங்கள் தேடும் அந்தக் குதிரை நான்தான். என் வாழ்க்கையில் நான் முன்னர் செய்த பாவங்களால் குதிரையாக மாறி இருந்தேன். உங்களுக்கு நன்றாக சேவை செய்து என் பாவங்களை கழுவிக்கொண்டேன். என் அனைத்துப் பாவங்களும் இன்றுடன் முடிந்து விட்டதால் மீண்டும் இப்போது மனிதனாகி விட்டேன்… உங்களுக்கு என் மீது பாசமும், அன்பும், பரிவும் இருக்குமானால் என்னை இன்றுடன் விடுதலை செய்யுங்கள்…”

இதைக்கேட்டு விவசாயி மிகவும் பரிதாபப்பட்டான். அந்தக் குதிரை மனிதனுக்கு விடுதலை கொடுத்து, “எங்கிருந்தாலும் நீ வாழ்க” என்று பெரிய மனதுடன் வாழ்த்தி அனுப்பினான். அவனும் அந்த இடத்தைவிட்டு ஆனந்தமாக விரைந்து அகன்றான்.

மாதங்கள் உருண்டோடின….

ஒருநாள் அந்த விவசாயி பக்கத்து ஊர் பிராணிகளை விற்கும் சந்தைக்குப் போனான். அங்கு குதிரைகள் விற்கும் இடத்தில் அவனது குதிரை விலைக்கு வந்திருப்பதை கண்டு ஆச்சர்யமடைந்தான். அவன் கண்களை அவனால் நம்ப முடியவில்ல்லை. குதிரையை உற்று உற்றுப் பார்த்தான். சத்தியமாக அது அவனது குதிரைதான் என்று உறுதி செய்து கொண்டவுடன், குதிரையின் காது அருகே சென்று, “அடக் கடவுளே நீ மீண்டும் பாபம் செய்துவிட்டாய் போல இருக்கிறதே..”: என்று அப்பாவியாக கிசுகிசுத்தான்.

நீதி: ஏமாறத் தயாராக இருப்பவர்களை ஏமாற்ற பலர் தயார் நிலையில் உள்ளனர். இந்திய நாட்டின் விவசாயிகளையும், அரசாங்கத்தையும் இப்போது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல…

ஒரு ஏழை இந்தியன், தன்னுடைய கிராமத்துக்கு விஜயம் செய்த நிவாரண அதிகாரிகளிடம் உதவிப்பணம் கேட்டு கோரிக்கை வைத்தான். அதிகாரிகள் அவனிடம், “உன் கஷ்டத்தை எங்களிடம் விவரித்துச் சொல்” என்றனர்.

“ஐயா பண உதவி செய்யுங்கள். நான் பட்டினியால் செத்துப் போய்விடுவேன் போல இருக்கிறது. இதோ பாருங்கள் இது என்னுடைய பூனை. இதுமட்டும் என்னுடன் இல்லாவிடில் செத்தே போயிருப்பேன்.”

கையில் வைத்திருந்த பூனையைக் காண்பித்தான்.

இதைக் கேட்ட அதிகாரிகளுக்கு வியப்பு மேலிட்டது…

“என்ன சொன்னாய்? பூனையா? நீ இந்தப் பூனையால் உயிர் பிழைத்தாயா? என்ன உளறுகிறாய்?” என்று அதிகாரிகள் மிரட்டினர்.

“ஐயோ சாமி…நான் உண்மையைத்தான் சொல்கிறேன். நான் என்ன பொய்யா சொல்லப் போறேன்? ஒவ்வொரு தடவையும் இந்தப் பூனையை இருபது ரூபாய்க்கு விற்கிறேன்… இதுவரை அப்படி பத்து தடவைகள் விற்றுவிட்டேன். நான் வீட்டுக்கு திரும்பி வர்றதுக்கு முன்னாடியே இந்தப் பூனை என் வீட்டுக்கே திரும்பி வந்திடும் சார்….”

இந்தியாவில் ஒரு காலத்தில் மன்னர்கள் ஆட்சி நன்றாக இருந்தது. அப்போது தங்கக் காசுகள் புழக்கத்தில் இருந்தன. பிறகு நாம் சுதந்திரம்(?) அடைந்த பிறகு அவைகள் புழக்கத்தில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. புழக்கத்தில் இருந்த காலத்தில், ஒரு தந்தை தன் அருமைக் குட்டி மகனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். விளையாடுவதற்காக அவனிடம் ஒரு பத்துரூபாய் மதிப்புள்ள தங்கக் காசைக் கொடுத்து வைத்திருந்தார்.

எல்லா சிறுவர் சிறுமியரும் செய்வதைப் போலவே அந்தச் சிறுவனும் தந்தை தன்னைக் கவனிக்காத நேரத்தில் அந்தத் தங்கக் காசை வாயில் போட்டு முழுங்கிவிட்டான். தந்தைக்கு சிறிதுநேரம் கழித்து உண்மை தெரிந்தபோது குழந்தைக்கு என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற பயத்தில் அலறினார்.

அப்போது கடைக்காரன் நிதானமாக, “ஐயா கவலைப் படாதீர்கள்… நான் குழந்தையை கடைக்கு கொல்லைப்புறம் கொண்டுபோய் தலை கீழாக தொங்கவிட்டு ஒரு ஆட்டு ஆட்டுகிறேன். தங்கக் காசு அவன் வாய் வழியாகக் கீழே வந்துவிடும்.” என்றான்.

தந்தையும் இதற்குச் சம்மதிக்கவே, கடைக்காரன் குழந்தையைப் பின்பக்கம் அழைத்துச் சென்று, சற்று நேரத்தில் திரும்பி வந்தான். “ஐயா நீங்கள் மிகவும் அதிர்ஷடசாலி இதோ பாருங்கள் பத்து ரூபாய் தங்க நாணயத்தில், நான்கு ரூபாய் தங்க நாணயங்கள் வெளியே வந்து விழுந்துவிட்டது… நாம் கொஞ்சம் தாமதமாகச் செயலில் இறங்கி விட்டோம். அதனால் மீதி ஆறு ரூபாய்க்கான தங்கக் காசுகளை இழந்துவிட்டோம்…உங்கள் பையன் அதை ஜீரணம் செய்துவிட்டான்…”

இது எப்படி இருக்கு?

நாம் அனைவரும் இப்போது சத்தியமாக அறம் சார்ந்த வாழ்க்கை வாழ்வதில்லை. எங்கும், எதற்கும் பணம் மட்டுமே பிரதானம். கல்வி நிலையங்களில்; மருத்துவ மனைகளில்; கோயில்களில்; ஆசிரமங்களில் என்று எல்லா இடங்களிலும் நம்மை மொட்டையடிக்க காத்திருக்கிறார்கள்.

நேர்கோட்டில் வாழ முயலும் நம்மைப்போன்ற பலருக்கு இது ஒரு மிகப்பெரிய சவால்தான். என்ன செய்ய…?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *