கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 6,957 
 
 

வாசலில் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்த ராஜசேகரன் அதிக நேர யோசனைக்குப் பின் மெல்ல எழுந்து வீட்டிற்குள் நுழைந்தார்.

வீடு நிசப்தமாக இருந்தது.

மெல்ல நடந்து அறையை எட்டிப்பார்த்தார்.

இவருடைய தம்பியின் மனைவி பாலாமணி குழந்தையை மடியில் கிடைத்தி சுவரை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ப…. பாலாமணி…! ”அதிக தயக்கத்துடன் அழைத்தார்.

துணுக்குற்றுத் திரும்பியவள்…

“என்ன மாமா..?”என்றாள்.

“ஒ…. ஒரு விஷயம்மா ….”

“சொல்லுங்க…?….”

“உன் முடிவை மாத்திக்கனும்….”

“மன்னிச்சுக்கோங்க.. மாமா..”

“நீ முரண்டு பிடிக்கிறது சரி இல்லே பாலா. எனக்கும் உனக்கும் தகாத உறவுன்னு பின்னால நம்பளைப் பத்தி தவறாப் பேசுவாங்க…”

“பேசினால் பேசிட்டுப் போகட்டும்..!.”

“அண்ணனுக்கும் தம்பிக்கும் வீண் மனஸ்தாபம் வரும் பாலாமணி. உன்னை அபகரிச்சுட்டேன்ன்னு…. அவன் உன் மேலும், என் மேலும் ஆத்திரப்படுவான்..! ”

“படட்டும்..! ”

“அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசாதே பாலாமணி. அது பாவம். மேலும் நான் கொஞ்சம் வயசானவன். ”

“உங்க தம்பியை விட நீங்க அஞ்சு வயசுதான் அதிகம். அது ஒன்னும் பெரிய வயசு வித்தியாசமில்லே. அதை பத்தி எனக்குக் கவலையும் இல்லே. ! ”

“உன் முடிவை மாத்திக்கிட்டு நீ என் தம்பியோட சேர்ந்து வாழனும் பாலாமணி. வழக்கம் போல நாம மூணு பேரும் இந்த வீட்டில் ஒன்னா இருக்கனும் ..”

“உங்க தம்பியோட சேர்ந்து வாழறது இந்த ஜென்மத்துல இனி நடக்காது. வேறு பேச்சு பேசுங்க மாமா..”

‘ இதற்கு மேல் இவளிடம் என்ன பேசுவது..? எப்படி முடிவை மாற்றுவது..? ‘ – நொந்து திரும்பினார் ராஜசேகரன்.

எல்லாம் இவர் தம்பி தனசேகரால் வந்த வினை.!

சொந்த அக்காள் பெண்ணைக் கட்டி…. ஒரு வருடம்கூட இடைவெளி விடாமல் அதே வருடம் அவளைத் தலைப்பிரசவத்திருக்கு தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவன் ஒழுங்காய் இருந்திருந்தால் இந்த சிக்கல் வந்திருக்காது.

ஊரில் வேறொருத்தியைத் தொட்டுவிட்டான் !!

விசயம் இவர் காதுக்கு எட்டியதும்…பதறி அழைத்து காதும் காது வைத்தாற்போல் ……..

“தம்பி ! இது நம்ம தகுதிக்கும், தராதரத்துக்கும் ஒத்து வராத சமாச்சாரம். அசிங்கம் விட்டுடு. ஏதோ வயசுக்கோளாறு, உணர்ச்சி வேகம்… தவறு செய்திட்டே. ஊருக்குத் தெரிஞ்சி நாலு பேர் நாலுவிதமா பேசி சிரிக்கிறதுக்குள்ளே விலகிடு. மேலும்… உன் மனைவி பாலாமணிக்குத் தெரிஞ்சா உங்களுக்குள்ளே சண்டை சச்சரவு வரும். குடும்பம் குட்டிச் சுவராய்ப் போகும். !”என்று சொன்னார், கண்டித்தார்.

முரடன் கேட்கவில்லை.

தலைக்கு மேல் உயர்ந்துவிட்ட தம்பியை அதற்கு மேல் தட்டிக்கேட்க முடியுமா..? கேட்காமல் தொடர்பவனிடம் சண்டை பிடித்துக் கொண்டு நிற்க முடியுமா..? சந்தி சிரிக்கும். தலை நிமிர்ந்து நிற்க முடியாது. விதி..! வருத்தப்பட்டு மௌனமானார்.

பாலாமணி பிரசவம் முடித்து வீட்டிற்கு திரும்பியதும்… தெருவில் யாரோ வத்தி வைத்து விட்டார்கள்.

“ஆமானா…??… அப்படித்தானா.?”- அன்றிரவே அவள் கணவனை அறையில் கேட்டாள்.

மனைவிக்குத் தெரிந்து விட்டது, கேட்கிறாள்தேர், கண்டிக்கிறாள் என்கிற மரியாதைக்காகவாவது பயந்து அவன், ‘ இல்லை ! ‘ சொல்லி மறுத்திருக்கலாம்.

ஆண் அகம்பாவம் ! திமிர் !

“ஆமாம் !”சொல்லிவிட்டான்.

அறைந்து அரண்டு போன பாலாமணி ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு…

“வேணாம். விட்டுடுங்க…”அன்பாய்ச் சொன்னாள்.

இந்தப் பேச்சுக்காகவாது…அவன் ஒப்புக்கு ‘ சரி ‘ என்று தலையாட்டி, அவளை சமாதானப் படுத்தி… தொட்டவளைத் திடீரென்று விடமுடியாமல் மறைமுகப் பழக்கம் வைத்து காலத்தை ஒட்டி மெல் விலகி இருக்கலாம். அதைவிடுத்து… அவள் மேல் உள்ள அன்போ, பாசமோ…

“தொட்டவளை விடுறது பாவம் பாலாமணி…!”என்றான்.

இவள் அதிர…

“இப்படியே… நீ இந்த வீட்டிலும், அவள் அந்த வீட்டிலுமாய் இருந்து நாம ஒத்துமையா குடும்பம் நடத்தலாம் !”சொன்னான்.

வந்தது வினை..!!

எவருக்குப் பொறுக்கும்..? ! யார்தான்… வாழ்க்கையை இப்படி பங்கு போட்டு வாழ ஒப்புக்கொள்வார்கள்..?

கொதித்தெழுந்துவிட்டாள் பாலாமணி.

“அதானே உன் முடிவு..?!!….. நீ உன் விருப்பப்படி அவளோடேயே வாழ்ந்துக்கோ, இருந்துக்கோ, இந்தப் பக்கம் திரும்பாதே, வராதே.! நான் என் பெரிய மாமன்… உன் அண்ணனோட இங்கே இருந்து குடும்பம் நடத்திக்கிறேன்.”சொன்னாள்.

கேட்ட தனசேகரனுக்கு… ஆத்திரம், அவமானம்,. கோபம் கொப்பளித்தது.

கூடத்திலிருந்து இவர்கள் உரையாடலைக் கேட்ட ராஜசேகரனுக்கு அதிர்ச்சி.

இடையில் புகுந்து சமாதானம் செய்தால்… அவர்களுக்குள், இல்லை… இவர்களுக்குள் கைகலப்பு , சண்டை ஏதாவது வந்து விடுமோ…? பயந்து…கையைப் பிசைந்தார். தவித்தார், தத்தளித்தார்.

அன்றிரவு அறையில் விளக்கு எரிந்தது.

கணவனும் மனைவியும் ஆளுக்கொரு பக்கம் கோபத்தில் உம்மென்று படுத்திருந்தார்கள்.

விடியற்காலையில் ராஜசேகரன் கண்களைத் துடைத்து எழுந்தபோது…

“உன் முடிவு என்ன..?”- தனசேகரன் மனைவியிடம் இறுக்கமாகக் கேட்டான்.

“உங்க முடிவிலே மாற்றம்மில்லேன்னா… என் முடிவிலும் மாற்றமில்லே ..!”என்று பொட்டில் அடித்ததுபோல கராறாகச் சொன்னாள்.

“அப்படியா…?! இரு வர்றேன் !”என்று தனசேகரன் உறுமிவிட்டு விருக்கென்று வெளியில் சென்றான்.

சிறுவயதிலிருந்தே பாலாமணியின் பிடிவாதம் தெரிந்த ராஜசேகரன் தம்பி அகன்ற பிறகு…

“கொஞ்சம் பொறுமையா இரும்மா. ஆளைக் கொஞ்சம் கொஞ்சமா சரி படுத்திடலாம்.!”சமாதானப் படுத்தினார்.

“சரியா வரலேன்னா…??….”அவள் அடுத்ததாகக் கேட்டு இவரைப் பார்த்தாள்.

“அம்மா…அம்மா…”இவர் தடுமாற…

“மாமா ! இந்த விஷயத்தையெல்லாம் கேள்விப் பட்டதும் கண்டிக்கனும். ஆரம்பத்திலேயே நறுக்கணும். விட்டால் தலைக்கு மேல் வெள்ளம் போய் நாம மூழ்கனும் !” சொன்னாள்.

பேச்சுக்குப் பேச்சு ! முடியவில்லை. தோற்றுப்போனார்.

அடுத்ததாக…

‘ தனசேகர் எங்கே சென்றிருப்பான்…? ! ‘ என்று அவர் யோசனையுடன் வந்து திண்ணையில் அமர்ந்தார்.

மணிக்கணக்கில் காலம் கடக்க…

‘ ஆள் முரடன், முட்டாள், முன் கோபி. மனைவியை அடக்க… இல்லை வழிக்குக் கொண்டு வர… தொட்டவளை இழுத்துக் கொண்டு எங்கேயாவது போய் தாலி கட்டி திரும்புகின்றானா..? எப்படி இந்த சிக்கலை அவிழ்ப்பது. பிரச்சனையை முடிப்பது..? ‘ – முகத்தைத் துண்டால் துடைத்தார்.

தூரத்தில் தனசேகரன் நான்கு பேர்களுடன் வந்து கொண்டிருந்தான்.

‘ கணவன் மனைவி விவகாரம் …. நாட்டாண்மை, பஞ்சாயத்து வரை செல்ல என்ன காரணமிருக்கிறது..? ‘ – துணுக்குற்றார்.

‘இவர்களை வைத்து மனைவியை சமாதானப் படுத்தலாம் ! என்கிற எண்ணத்தில் அழைத்து வருகின்றனா..? ! ‘ என்றும் யோசித்தார் .

அவர்கள் படியேறினார்கள்.

“என்ன ராஜசேகரன் ! என்னமோ விசயம் கேள்விப் பட்டோம் ..”என்று சொல்லி பஞ்சாயத்து பரமசிவம் திண்ணையில் அமர்ந்தார்.

அவருக்கருகில் அவருடன் வந்த துணை பஞ்சாயத்தார்கள்.

தனசேகரன் அவர்களுக்கருகில் நின்றான்.

“பாலாமணி… இவனோட வாழமாட்டேன். உன்னோடு வாழ்வேன்னு சொல்றாளாமே..? ! …”அவர் அடுத்ததாகக் கேட்டார்.

தம்பி எல்லாம் சொல்லி இவர்களை அழைத்து வந்திருக்கிறான்.- இவருக்குப் புரிந்தது.

“அது அவளுங்களுக்கிடையே உள்ள சமாச்சாரம். நீங்களே கேட்டுத் தெரிஞ்சுக்கோங்கோ..”சொன்னார்.

அடுத்து…

“தனசேகர் ! உன் பொண்சாதியைக் கூப்பிடுப்பா !”என்று நாட்டாமை தனக்கே உரிய பாணியில் அதட்டலாக உத்தரவிட்டார்.

“நான் கூப்பிடமாட்டேன். அவளை நீங்களே அழைச்சி விசாரிங்க..”

“பாலாமணி…!”நாட்டாண்மை உள்ளே பார்த்துக் குரல் கொடுத்தார்.

அழைப்பை எதிர்பார்த்தவள் போல் இருந்த அவள் வந்தாள். நிலைப்படிதாண்டி அவர்கள் முன் நின்றாள்.

“உங்களுக்குள்ள என்னம்மா தகராறு..? ”

விசயத்தை ஒன்று விடாமல் சொன்னாள்.

“அதுக்காக… நான் உன்னோடு வாழமாட்டேன். உன் அண்ணனோடு வாழறேன்னு சொல்றது சரியாம்மா…? ”

“அவர் சொல்றது மட்டும் சரியா ஐயா..? ”

“பொண்டாட்டி இல்லாத நேரம். ஆம்பள அப்படி இப்படித்தான் இருப்பான்..சகஜம் ! ”

“பொண்டாட்டியும் அப்படி இருக்கலாமாய்யா..? ”

“பாலாமணி..! ”

“நியாயத்தைச் சொல்லுங்க. இருக்கலாமா…. கூடாதா ..? ”

என்ன பதில் சொல்லமுடியும்…? !

“வாதம் வேணாம் பாலாமணி. உன் முடிவு சரி இல்லே…”தழைந்தார்.

“முடிவு சரிங்கய்யா. மனைவி அந்தண்டை நகர்ந்ததும்… அடுத்தவளைத் தொடுற ஆளை விட … மனைவி செத்து அஞ்சு வருசமாகியும்… மறுமணம் நினைக்காம..அடுத்தவளைத் தொடாம இருக்கிற என் பெரிய மாமன் ரொம்ப உசத்தி ஐயா. ”

“பாலாமணி…! ”

“இது என் மாமனுக்குச் செய்யிற மரியாதை. சபலப்புத்தி தனசேகருக்கான செருப்படி. இதுக்கு மாமன் ஒப்புக்கலேன்னாலும் நான் பொறந்த வீட்டுக்குப் போகாம… அந்த மாமனுக்கு ஆக்கிப் போட்டு இங்கேதான் வாழ்வேன். இந்தாங்க தாலி. கட்டினவர்கிட்டேயே கொடுத்து வைச்சிருக்கிறவள் கழுத்துல கட்டி வாழச்சொல்லுங்க…” கழட்டி நீட்டினாள்.

அனைவரும் அதிர்ந்து விழிக்க….

கழட்டிய தாலியை அவர்கள் முன் வைத்து விட்டு….

“தனசேகர் இதை ஏத்துக்கலேன்னாலும் தாலியை திரும்ப எடுத்துப் போட்டுக்க மாட்டேன். சட்டப்படி விவாகரத்து நடக்கும் !”கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *