முடியுமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 27, 2019
பார்வையிட்டோர்: 8,886 
 
 

அந்த எண்ணம் முதன்முதலில் எப்போது எப்படி ஏற்பட்டது என சொல்வது சற்று கடினம். ஆனால் அந்த எண்ணம் ஏற்பட்டபின், இரவுபகலாக அது என்னை முழுதும் ஆக்கிரமித்து விட்டது.

மகள் சாந்தினியுடன் பேசுவதில்லை என்று வள்ளியம்மை தனது 57 வயதில் எடுத்த தீர்க்கமான முடிவுதான் அது. காரணம் சில நாட்களுக்கு முன்பு நடந்த “தொலைபேசி உரையாடல்.”

விமானம் தாழ்வாகப் பறந்து தரையை டயர்கள் தொட்டபோது அதிர்ந்து, ஜெர்க் ஆகி குலுங்கி டாக்சியாக ஓடியது, இரண்டாவது வரிசையில் இருந்தவர் பைலட் புதுசா? என நக்கல். மணிலா விமான நிலையத்தில் சாந்தினி……..புதிய கிளையின் அலுவலக கணினி கட்டமைப்பாளருக்கு பயிற்சி அளிக்க இரண்டு மாதங்கள் பிலிப்பைன்ஸ் வந்துள்ளார்.

சாந்தினி கம்யூட்டர் பயன்படுத்தத் துவங்கியதிலிருந்தே அதைப்பற்றிப் படிக்க வேண்டும் என அடிக்கடி அம்மாவிடம் கூறுவாள். அதன் மீது ஒருவகை மோகம். ஒரு சிறிய பெட்டி மாதிரி இருக்கு, கையடக்க புதிய மாடல்கள் பழைய சிலேட்டின் வடிவம், எவ்வளவு பயன்பாடு? இன்று இது இல்லாமல் எந்த வேலையும் செய்வது மிகக் கடினம் என்ற நிலைமை.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலையில் கணினித்துறையில் இளம் பொறியியல் படிப்பு, அதன்பின் ஒரு ஆண்டு லண்டனில் மேற்படிப்பை முடித்து தற்போது சாந்தினி சிங்கப்பூரில் கணினி கட்டமைப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்

சாந்தினியின் குடும்பம் அளவானது, அம்மா, அப்பா, சகோதரி மல்லிகா. வள்ளியம்மை திருமணம் முடிந்து ஆறு வருடங்களுக்குப்பின் சாந்தினி பிறந்தாள். இரண்டு வருட இடைவெளியில் மல்லிகாவின் வருகை. அம்மா இல்லத்தரசி, மிகவும் அன்பானவர். நன்கு ருசியாக சமைக்கத் தெரிந்தவர்.

அப்பா லெட்சுமனன் ஓய்வுபெற்ற தபால் அலுவலக அதிகாரி, அவர் இருக்கும் இடம்கூட தெரியாது,. அதிர்ந்து பேசியதில்லை, அமைதியிலும் அமைதியானவர். தினந்தோறும் செய்தித்தாளில் அனைத்துப் பக்கங்களையும் படிப்பது அவரின் முக்கியமான காலைப்பணி. வீட்டில் யார் என்ன வேலை சொன்னாலும் எதிர்க்கேள்வி இன்றி செய்து முடிக்கும் நல்லவர்.

அவரது நண்பர் கதிரேசனுடன் தொலைபேசியில் குறைந்தது இரண்டுமணி நேரமாவது பேசுவது அன்றாடப்பணியில் அடுத்து வரும். மற்றபடி ஓய்வெடுப்பது என நாட்கள் நகர்கிறது.

சாந்தினிக்கு அம்மா வள்ளியம்மை மீது அளவு கடந்த பாசம். அந்த பாசத்தினாலோ என்னவோ உரிமையுடன் கோபித்தும் கொள்வாள். வித்தியாசமான குணாதிசயம்.அம்மாவிடம் எப்போது எதற்குக் கோபம் வரும் என்றே தெரியாது.

அதுபோன்ற தருணங்களில் அம்மாவிடம் கடுமையான வார்த்தைகளை அள்ளி இறைத்து விடுவார். வேண்டும் என்று அவ்வாறு செய்வதில்லை. ஏதோ ஒருவகை வெளிப்பாடு. வார்த்தைகள் கூட பரவாயில்லை முகம் பார்க்கச் சகிக்காது, கோபக்கனல் வீசும். இது அவளது தனிப்பட்ட சுபாவம், வள்ளியம்மைக்கு சில நேரங்களில் உறுத்தலாக இருக்கும்.

ஆனால் சற்று நேரத்தில் எதுவுமே நடக்காது மாதிரி சாந்தினி குழந்தையாகி விடுவாள். அம்மாவிடம் குழைவதும், வள்ளியம்மையும் “குறும்புக்காரிடி நீ“ என வாஞ்சையாய் ஏற்றுக் கொள்வதும் தொலைக்காட்சி தொடர் ரகம்.

அம்மாவுக்கும் மகள் மீது அளவு கடந்த பாசம். அவளுக்கென்றே எதையும் பார்த்துப் பார்த்து செய்வாள். ஒரு ஆடை வாங்குவதற்குக் கூட பல கடைகள் ஏறி இறங்குவார். சாந்தினியின் பிறந்தநாளுக்கு அம்மா எடுக்கும் ஆடையை அணிவது வழக்கம், வள்ளியம்மையின் தேர்வு சாந்தினிக்கு மிகச் சரியாக பொருந்தும். இளைய மகள் மல்லிகாவைவிட அம்மாவிற்கு சாந்தினி மீது சற்று பாசம் அதிகம். ஒரு குழந்தை மட்டுமிருந்தால் நமது பாசம் அனைத்தும் அதன் மீதுதான் இருக்கும். இரண்டு குழந்தை எனில் அந்தப் பாசம் இரண்டில் ஒன்றாக குறைந்து விடுவதில்லை. மாறாக இரு மடங்காகும். அதுதான் பாசத்தின் சிறப்பு.

இளைய மகள் மல்லிகா வரும் மூன்றுநாள் விடுமுறையில் காரில் மலேசியாவின் மலாக்கா செல்ல வேண்டும், நான் எனது கல்லூரித் தோழிகளிடத்தில் கூறிவிட்டேன், அது ஒருவகை த்ரில், சுகம் உனக்கு புரியாதும்மா! வியாழன் இரவு மலாக்கா கிளம்புகின்றோம், என முடிவாக கூறினாள்.

அம்மாவின் அனுமதியைக் கோராமலே முடிவு செய்து விட்டாயா? என மகளிடம் கடிந்து கொண்டாள் வள்ளியம்மை.

சாந்தினியிடம் தங்கையின் பிடிவாத குணத்தைப்பற்றி வள்ளியம்மை பேசியதன் தொலைபேசி உரையாடல்……

சாந்தினி, நல்லாயிருக்கியாம்மா?

நான் நல்ல இருக்கேம்மா, நீங்கள் எல்லாம் நல்லா இருக்கீங்களா?

“இங்கே ஒன்னும் குறைச்சல் இல்லை, நீ இல்லாததுதான்.”

வேறு எதுவும் சேதியா?

“ஆமாம் சாந்தினி, உனது தங்கை மல்லிகா கூட்டாளிங்க கூட மலாக்கா போறதா ஒரே பிடிவாதம்”

அவ பொயிட்டு வரட்டுமே?

“கூட ஒருத்தரும் துணைக்கு இல்லே” அதான்

இப்போதுதானே கூட்டாளிங்க கூட போறதா சொன்னீங்க?

“ஆமாம், கூட்டாளிங்க மட்டும்தான்.”

அதனால் என்ன பொயிட்டு வரட்டுமே?

ஏதாவது பிரச்சனை என்றால் எப்படி?

“ஓன்னு ஆகாது”

காலம் கிடக்கிற கிடையிலே.. எனக்கு என்னவோ சரியாப்படலே..

“எதுவும் ஆனால் அனுபவமா எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்”

லூசு மாதிரி பேசாதே? அவளிடம் சொல்லி பிறகு நாம குடும்பத்தோட போகலாம் எனச் சொல்லு….

அவளுக்கிட்டேயா? நீ மட்டும் தனியா மணிலா போகலாம், நாண் மலாக்கா போகக்கூடாதா? என எதிர்க்கேள்வி கேட்பா.

இந்த உரையாடல் தொடர்ந்து வாக்குவாதமாக மாறியது. முடிவில் சாந்தினி ஆமா உனக்கு அவளைப்பற்றி குறை சொல்லுவது பின் கொஞ்சுறது அப்புறம் எங்கிட்டே புலம்புவது…..எனக்கூறி வயசு ஆகுதுல்ல. ஒதுங்க வேண்டியதுதானே? நீதான் லூசு, எனக்கோபமாகக் கத்தித் தகாத வார்த்தை ஒன்றையும் கூறிவிடுகிறாள்.

வள்ளியம்மைக்கு கோபம் உச்சந்தலைக்கேற ஆமான்டி உங்கிட்ட சொன்னேன் பாரு? நான் ஒரு கூறு கெட்டவ….இனிமேல் “உங்கூட பேசமாட்டேன்” எனக்கூறி தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தார்.

********

அடுத்த நாள்..

அதிகாலை காற்று குளிர்ந்து வீசியது. சூரிய ஒளியினால் மரங்களின் நிழல்கள் உருவங்களாகவும் காற்றின் அசைவில் அவைகள் ஒன்றை ஒன்று கொஞ்சுவது போன்ற தோற்றம். அன்று காலை வள்ளியம்மைக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த ஒலி சிறிதாக ஆரம்பித்து சற்று அதிகமாகி, இன்னும் சற்று அதிகமாகி, அதி வேகமாக ஒலித்தது. அந்த ஒலி இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. மகள் சாந்தினி என நினைத்துத் தொலைபேசியை எடுத்தபோது அந்த அழைப்பு வள்ளியம்மையின் தம்பியிடமிருந்து வந்துள்ளது. தொலைபேசியில் உற்சாகமின்றி பேசினார்.

தம்பி, என்னக்கா ஏன் ஒருமாதிரி பேச்சில் பிடிப்பு இல்லாமல் பேசுகிறாய்?

உடம்புக்கு ஒன்னும் இல்லையே?

இல்லப்பா நல்லாத்தானே இருக்கேன் சமையல் கட்டில் வேலையாய் இருந்தேன் அதான் என்றாள்.

வேலையாயிருந்தா அதைப்பாரு ஒன்றும் முக்கியமான செய்தியில்லை நான் பிறகு பேசுகிறேன் என தொலைபேசியை வைத்துவிட்டார்.

தம்பி எதையும் உன்னிப்பா கவனிப்பான். என் பேச்சில் மாறுதல் இருந்ததை கண்டு பிடித்தது மட்டுமில்லாமல் பிறகு பேசுகிறேன் என வைத்துவிட்டான். தனக்குதானே வள்ளியம்மை புலம்பினாள்.

இந்த காலத்து குழந்தைகள் பெற்றோர் மேல் பாசமாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவதில் கவனம் தேவைப்படுகிறது. சில நேரங்களில் பெற்றோரைவிட அவர்கள் புத்திசாலி என்றே நினைப்பது எளிதாகிவிடுகிறது.

புத்திசாலியாகவே இருக்கட்டும் அனுபவம் போதாது! அதை உணர மாட்டார்கள். பெற்றோர்களை சில நேரங்களில் அவர்களின் கருத்தைக்கூட முழுதும் சொல்ல விடுவதில்லை. “சொன்னதையே சொல்லாதீங்க” என முடுக்கி முடித்து விடுவார்கள்.

மல்லிகா மலக்காவிற்கு தோழிகளுடன் தனியே செல்ல வேண்டாம், துணைக்கு யாரேனும் இருப்பது எதிர்பாராதவற்றை சமாளிக்கவும், ஒரு பாதுகாப்பனது என்றுதான் அம்மா சொன்னார்.

மல்லிகா அவர்களுடன் செல்வது அவளுக்கு முழு சுதந்திர உணர்வை ஏற்ப்படுத்தும். அது புதுமாதிரியான அனுபவம் என்றும். ‘அது உனக்கு புரியாதும்மா, “இன்றைய சூழலே வேற” என்று சாந்தினி கூறியிருந்தாள்.

இரண்டு முறை கைத்தொலைபேசியை எடுத்து மகளிடம் பேசலாம் என வள்ளியம்மை நினைத்தபோது நேற்று கூறியது நினவுக்கு வர மகளை அழைக்கவில்லை. நாமாகப் பேசக்கூடாது அவளுக்கு இடம் குடுத்ததுபோல் ஆகிவிடும். அதுபோல் நிறையமுறை ஆகிவிட்டது பரவாயில்லை. பார்க்கலாம் என தொலைபேசியை வைத்து விட்டார்.

**********

மூன்றாம் நாள்..

மணிலா…….

மாநகரங்களுக்குறிய பரபரப்புடன் காணப்பட்டது. வாகனங்களின் ஒலி, அதிலிருந்து வரும் புகையின் நெடி எங்கும் வியாபித்திருந்தது. அசதியில் அன்றிரவு நன்கு தூங்கி அப்போதுதான் சாந்தினி எழுந்திருந்தார். காலை எட்டு மணியைப்போல் தொலைபேசி அழைப்பு. சிங்கப்பூரிலும் இதே நேரம்தான் அம்மா என நினைத்து சிரித்துக்கொண்டே எடுத்து தொலைபேசியைப் பார்த்தபோது அப்பா அழைத்திருந்தார்.

அம்மா என்மீது இன்னும் கோபத்தில்தான் இருக்கிறார் என நினைத்துக்கொண்டு அப்பாவிடம் நல்லா இருக்கிறீர்களா? என்று கேட்டார். என்னம்மா இரண்டு முறை நல்லா இருக்கிறாயா? எனக்கேட்டேன், அதற்கு பதில் சொல்லாமல் என்னை நல்லா இருக்கின்றீர்களா? என்கின்றாய்…. இல்லப்பா சிக்னல் சரியாயில்லை ரூமுக்கு வெளியே வந்து பேசுகிறேன் இப்ப நல்லா கேட்கிறது என்றாள்.

அம்மா கோவிலுக்கு போயிருக்காங்க, சில நாட்களாக ஏதோ சிடுசிடு என இருக்குறாங்க. கூண்டில் அடைபட்ட விலங்குமாதிரி…. நேற்று நம்ம டாக்டரிடம் போய்விட்டு வந்தோம் அவர் இரத்த அழுத்தம் எப்பவும் 140 தான் இருக்கும் இன்னைக்கு என்ன 150 ஆயிறுச்சு (120 நார்மல்), சின்னவ எதுவும் டென்சன் ஆக்குறாளா? எனக் கேட்டார். ஆமா பொண்ணுங்க இரண்டுபேருமே நல்ல புத்திசாலிங்க துணிச்சலானவங்க. சின்னவதான் இந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்து விடுவாளே? அவளைப்பற்றி ஏன் கவலைப்படுகின்றீர்கள்?. நீங்க ப்ரீயா இருங்க. இல்லையென்றால் அப்புறம் உங்களுக்குத்தான் சிரமம் எனக் குடும்ப மருத்துவர் .ஆறுதல் கூறி புதிதாக மாத்திரைகளை கொடுத்து வேளை தவறாம சாப்பிடுங்க என்றார்.

அப்பா இதை மகளிடம் விளக்கமாக, “புரோட்டா மாஸ்டர் சிறிய மாவு உருண்டையை பெரிசா விசுறுவதுபோல்” நீட்டிக் கூறினார். அம்மாவிடம் நீ தினமும் பேசுகின்றாய் அல்லவா? எனக்கேட்டதும் எனக்கு மற்றொரு அழைப்பு வருதுப்பா நாளை விடுமுறையில் பேசலாம் எனக்கூறினாள்.

அம்மாவிடம் சாந்தினி பேசலாம் என நினைத்தாலும் அன்று பேசியதின் வருத்தம் இன்னும் தீரவில்லை. மல்லிகா அவளது தோழிகளுடன் செல்வது அவளுக்கு புதியவற்றை தெரிந்து கொள்ள உதவும், பயந்து கொண்டே இருந்தால் எப்படி?

தன்னம்பிக்கை வேண்டாமா? என்பதை அம்மா புரிந்து கொள்ள இயலாது என்ற சிந்தனையுடன் எப்படியும் நாளை பேசிவிடுவார் என்றமுடிவில் சாந்தினி வெளியே கிளம்பினாள்.

**********

ஆறாம் நாள்..

இன்று சாந்தினி நிச்சயம் தொலைபேசியில் அழைப்பாள் என வள்ளியம்மை நம்பினாள். நம்பிக்கை வீணானது. சாந்தினியின் குணாதிசயம் கொஞ்சம் வித்தியாசமானது. அம்மாவிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்வதும், விளையாட்டுத் தனமாக பேசுவதும், கொஞ்சுவதும் வாடிக்கை.

சில நேரங்களில் திடீர் என்று ஸ்பிளிட் பர்சனாலிட்டி மாதிரி “அந்நியன் ரெமோ” ஆகிவிடுவாள். ஒன்றுமில்லாத செயல்களுக்கு கூட சட்டென கோபப்படுவாள். தடித்த வார்த்தைகள், கோபப் பார்வைகள் எல்லாம் சாதாரனமாக வந்துவிடும்.

லண்டன் சென்று வந்தபின் இது அதிகமாகிவிட்டது. நான் அவளை அடித்து பயம் காண்பித்து வளர்க்கவில்லை என அதையும் அவள் வளர்ந்தபின் உணர்ந்து சில நேரங்களில் கூறியிருக்கிறாள்..

வங்கியில் கடன் வாங்கிச் சென்று படித்த அளவிற்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. வேலையில் அவள் திருப்தியாக இல்லை என்பது எனக்குத் தெரிகிறது. படிப்பைவிட அனுபவத்திற்கே முன்னுரிமை? என்பதால் இதற்கு முன் பார்த்த வேலையும் அதன் சம்பளமும் அவ்வளவாக திருப்தி அளிக்கவில்லை.

கடந்த ஆறு மாதமாகத்தான் தற்போதைய வேலையில் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள். உனக்கு ஒன்றும் வயதாகவில்லை, நான்கு ஆண்டுகள் அனுபவமானல் நல்ல வேலைகிடைக்கும் என வள்ளியம்மை ஆறுதல் கூறியுள்ளார்.

திருமணத்திற்கும் இப்போது அவசரமில்லை. வேலையில் கால் ஊன்றிக்கொள்கிறேன் என அந்தப் பேச்சையும் எடுக்க விடுவதில்லை.

எது எப்படியிருந்தாலும் நான் அவளுடன் பேசுவதில்லை என்பதில் உறுதி என மனதில் நினைத்தாள்.

வாழ்நாள் முழுதும் பேசுவதில்லையா? அல்லது சிறிது நாட்கள் பேசுவதில்லையா? என்ற முடிவு சாந்தினியின் கையில்தான் உள்ளது.

அவளே அழைத்து பேசினாலும் முன்புபோல் பேசவிருப்பமில்லை. கொஞ்சம் விலகி இருப்பதுதான் இருவருக்கும் நல்லது என மனதைத் திடமாக்கி கொண்டாள்.

பிள்ளைகளை மிகுந்த அன்புடன் வளர்ப்பது கூட ஆபத்தானதா?

அவர்களுடன் நண்பர்கள் போல் பழகுவதும் தவறா?

சுதந்திரமாய் அவர்கள் விருப்பத்திற்கு விடுவதும் தப்பா? என்று என்னும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. சரி… பார்க்கலாம் நடக்கிறபடியே நடக்கட்டும் என முடிவுடன் வள்ளியம்மை படுக்கச் சென்றாள்.

*********

பத்தாம் நாள்..

அம்மா தன்மீது கோபமாகவும், வருத்தமுடனும் இருப்பதால்தான் இன்னும் தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார் என்பதை சாந்தினி உணர்ந்து கொண்டாள். நானும் இங்கு வேலைப் பழுவின் அழுத்தத்தினால் அம்மாவுடன் பேசாமல் இருந்ததும் வீண் பிடிவாதம் என நம்பினாள்.

நாம் பேசுகின்றபோது வெளிப்படும் வார்த்தை கேட்பவரின் மனதில் காயங்களாகி, அதுவே ரணமாகி பின் வடுக்களாகின்றன. அம்மாவிடம் அன்று அப்படி பேசியிருக்கக்கூடாது. அவர்களுக்கு ஆதரவாக பேசித் தங்கைக்கு அறிவுரை கூறுகின்றேன் என்றாவது சொல்லியிருக்க வேண்டும் என வருந்தினாள். தனக்காகவும் தங்கைக்காகவும் அம்மா செய்த தியாங்களையும் பணிகளையும் எண்ணிப்பார்த்தால் மலையாகவும், மலைப்பாகவும் உள்ளது.

அம்மா அதிகம் படிக்கவில்லை அதிகமாக படித்த நான்தான் பக்குவமாகப் பேசியிருக்க வேண்டும், அதுதானே படிப்பின் சிறப்பு?

பத்து நாட்கள் நான் பேசாததே அம்மாவிற்கு மிகுந்த வலியுடன் கூடிய மனவேதனை ஏற்படுத்தி இருக்கும்.

இன்றுடன் இங்கு பணி முடிவடைகிறது, இரண்டு மாதங்கள் ஓடியதே தெரியவில்லை.

வேலையிடத்தில் சாந்தினியின் செயல்பாடும் கணினி கட்டமைப்பின் அனுபவமும் திறமையான பயிற்சி முறையும் அனைவருக்கும் பிடித்திருந்தது.

எதிர்பார்த்ததைவிட நல்லமுறையில் பயிற்சி முடிந்ததில் அவர்களுக்கு மகிழ்ச்சி. அனைவருடனும் பிரியா விடை பெற்று தங்கியிருந்த அறைக்கு திரும்பினாள் சாந்தினி.

சிங்கப்பூர் செல்ல பெட்டி மற்றும் பொருட்களுடன் தயார் ஆகி மணிலா விமான நிலையம் வந்தடைந்தாள். விமானப் பயணம் தொடர்பானவற்றை முடித்து சாந்தினி விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.

விமானம் மெதுவாக ஓடுபாதையில் ஓட ஆரம்பித்து வேகம்கூடி பின் .வேகம் அதிகமாகி அதிவேகத்தில் சென்றபோது பயணிகளுக்கு வயிறு மேலே ஏறுவது போன்ற உணர்வு. விமானம் குறுங்கோணத்தில் ஏறுமுகமாக பறந்தது.

வள்ளியம்மைக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது அம்மா நான் இந்த முறை உங்களிடம் தோற்றுவிட்டேன்…. மன்னித்து விடுங்கள்…. மணிலா விமான நிலையத்திலிருந்து கிளம்பிவிட்டேன்…. சிங்கை விமான நிலையத்தில் காத்திருங்கள்… கட்டிதழுவ வருகின்றேன். அன்பு மகள் சாந்தினி என குறுஞ்செய்தி.

வள்ளியம்மை தொலைபேசியை பார்த்தபோது மகள் சாந்தினியின் சிங்கப்பூர் வரும் தகவலை அறிந்து பரவசமானாள்.

சாந்தினியை அழைக்க விமான நிலைய செல்லலாம் கிளம்பு என கணவரின் குரல்.

நான் வரவில்லை நீங்கள் சென்று உங்கள் மகளை அழைத்து வாருங்கள் என வள்ளியம்மை உறுதியாக மறுத்தாள்.

என்னைப்போல உங்களால் இருக்க முடியுமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *