மீனாக்ஷியின் வீணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 3,105 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீணை தந்திகளை மீட்டிக்கொண்டிருந்தாள் மீனாக்ஷி. நான் உள்ளே நுழைந்த சமயம் சரியானது தான் என்று நினைத்துக் கொண்டே மீனாக்ஷியின் எதிரில் போய் அமர்ந்தேன்.

“வா, உட்கார்!” என்று என்னை வரவேற்றுவிட்டு மீண்டும் தந்திகளை மீட்டி வீணையின்மேல் படிந்திருந்த தூசியைத் துணியால் தட்ட ஆரம்பித்தாள் மீனாக்ஷி. மீனாக்ஷி அம்மாமிக்கு வயது ஐம்பது இருக்கும். ஆனால், அந்த ஊரில் இரண்டு வயதுக் குழந்தை முதல் கிழம்வரையில் அம்மாமியை, ‘மீனாக்ஷி’ என்றுதான் கூப்பிடுவது வழக்கம். தவறி யாராவது ‘அம்மாமி!’ என்று அழைத்து விட்டால் மீனாக்ஷிக்குக் கோபம் வந்துவிடும். அவள் சுய மரியாதைக்கோ, மதிப்புக்கோ ஆசைப்படும் மனுஷி அல்ல.

“எங்கே வந்தாய்? விசேஷமில்லாமல் வரமாட்டாயே?” என்று மீண்டும் என்னை விசாரித்தாள் மீனாக்ஷி.

“விசேஷத்தோடுதான் வந்திருக்கிறேன் மீனாக்ஷி! நாளை விஜயதசமி யன்று கிரிஜாவுக்கு வீணை சொல்லித் தர ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.நல்ல வீணையாக வாங்கித் தரமுடியுமா என்று உங்களிடம் கேட்டுவிட்டுப் போகலா மென்று வந்தேன்”.

மீனாக்ஷியின் கணவர் வீணை வாங்குவதில் பெயர் போனவர் என்பது அந்த ஊராரின் அபிப்பிராயம்.

“வீணை சொல்லித் தரும்படி உன் பெண்ணுக்கு அப்படி என்ன வயசாகிறது?” என்று மீனாக்ஷி என்னைக் கேட்டாள்.

“விஜயதசமி அன்றுதான் அவளுக்கு எட்டு வயது நிறையப்போகிறது. வீணைதான் சொல்லிக் கொள்ள வேணும் என்று ஆசைப்படுகிறாள். அவள் ஆசையைக் கெடுப்பானேன்?”

மீனாக்ஷி ஒரு மாதிரியாகச் சிரித்தாள். பிறகு, “ஆசையைக் கெடுக்கக் கூடாது; வாஸ்தவந்தான். பிற்காலத்தில் அந்த ஆசை பரிபூரணமாக நிறைவேற வேண்டுமே. அதுதான் கவலையாக இருக்கிறது. பெண் ஜன்மங்களுக்கு ஏதோ சுதந்தரம் கொடுத்துவிட்டதாகச் சிலர் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். கிரிஜாவின் அபிலாஷை பூர்த்தியாவது அவள் கணவனிடந்தானே இருக்கிறது? குழந்தைக்கு ஆசையுடன் அற்புதமான வித்தையைப் போதிக்கிறாய். பிற்காலத்தில் வீணை – என் வீணை மாதிரி – புழுதி படிந்து மூலையில் கிடந்தால் அதை அப்பிய சித்தவருக்கு மனவருத்தந்தானே?” என்றாள் மீனாக்ஷி.

களைபொருந்திய அவள் முகத்தில் வருத்தத்தின் குறிகளும் சிந்தனைகளும் தோன்றின.” கேள் அம்மா! இந்த வீணை என்னுடையது. என் உயிரினும் இனிய பொருளாக இதை மதித்து நடந்துவந்தேன். ஏழு வயதில் இது என்னை அடைந்தது. இன்றைக்கும் என்னிடந்தான் இருக்கிறது. அதனுள் இருக்கும் ஸப்தஸ்வரங்களைத் தட்டி நாதத்தை வெளியிடும் யோக்கியதையும் எனக்கு ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டம் என் விஷயத்தில் மோசம் செய்துவிடவே இந்த வாத்தியத்தை வருஷக் கணக்காகப் பெட்டியிலேயே வைக்கும்படி நேர்ந்துவிட்டது. நான் வீணையைத் தொடுவதில்லை என்று தெரிந்து என் தகப்பனார் சாகும்வரையில் மனம் புழுங்கினார். அதெல்லாம் பழைய கதை. தூசு படிந்து வீணாகி விடுமே; பார்க்கலாம் என்று வெளியில் எடுத்தேன்.

“அப்படி உங்களுக்குத் தடை விதித்தது யார் மீனாக்ஷி? மாமாவா?” என்று கேட்டேன்.

“சே சே, அவருக்குச் சங்கீதம் என்றால் உயிர். அது ஒரு கதை அம்மா. அவகாசமிருந்தால் சொல்லுகிறேன் கேள். தடை விதித்தவர் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டார். ஆனால், மனிதன் செய்யும் தீமையும், நன்மையும் உலகத்தில் அவனுக்கு அழியாத பெயரை ஏற்படுத்தி விடுகின்றன. என் மாமனார் இறந்து பதினைந்து வருஷங்கள் ஆகிவிட்டன. இந்த வீணையைப் பார்க்கும் போதெல்லாம் அவருடைய கண்டிப்பான உத்தரவு மனசை வருத்துகிறது” என்று சொல்லிவிட்டு மீனாக்ஷி ஆரம்பித்தாள்.

***

எனக்குக் கல்யாணம் ஆனபோது வயது பதினொன்று. என் தகப்பனார் சங்கீதத்துக்குப் பேர்போன தஞ்சாவூர் ஜில்லாவில் பிறந்தவர். சிறுவயதாக இருந்தபோதே வீணைச் சதாசிவையரை அவருக்குப் பரிசயமாம். அந்தக் காலத்திலேயே வீணையின் நாதத்துக்குத் தன் மனசை பறிகொடுத்தார். குடும்ப பாரத்தினால் சங்கீதத்தை விட்டு விட்டு உ த்தியோகு வழியில் புகுந்தார். அவருக்குச் சீமந்த புத்திரியாக நான் பிறந்தவுடன் தம்முடைய வெகு நாளைய ஆவல் நிறைவேறும் என்று ஆனந்தப்பட்டாராம். வயது முடியும்போதே தகுந்த வீணை வித்துவான் ஒருவரிடம் எனக்கு வீணை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். ஸ்ரஸ்வதி கடாஷத்தாலும் என் தகப்பனாரின் ஊக்கத்தினாலும் வீணையில் கீர்த்தனங்கள் நன்றாக வாசிக்க நான்கு வருஷங்களுக்குள் திறமை ஏற்பட்டது. என் புக்ககத்துக்காரர் நான் வீணை வாசிக்கும் அழகைப் பார்த்து ஆசைப்பட்டே என்னை அவர்கள் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள். கல்யாணத்தில் நலங்கு, ஊஞ்சலின் போது என் கணவர் தம் தங்கையிடம் ஜாடையாகப் பல கீர்த்தனங்களின் பெயரைச் சொல்லி என்னை வாசிக்கச் செய்தார். என் நாத்தனார் ராஜமும் வீணை வாசிப்பாள். என்னைவிட ஒரு வயது சிறியவளாக இருப்பாள். வாசிக்க ஆரம்பித்தது முதல் அவள் என்ன காரணத்தினாலோ கல்யாணத்தில் வாசிக்கவில்லை. இரண்டொருவர் சொல்லியும் சிரித்து மழுப்பிவிட்டாள். எனக்கு மட்டும் அவள் வாசிப்பைக் கேட்க வேண்டுமென்று ரொம்ப ஆசையாக இருந்தது. ‘ராஜம்! ஒரு பாட்டு வாசியேன்’ என்று நான் அவளைச் சந்தித்தபோதெல்லாம் கேட்டேன்.

“வாசித்தால் போகிறது மன்னி. நீதான் அடுத்த மாசம் ஊருக்கு வரப்போகிறாயே” என்று கூறினாள் ராஜம்.

“அதற்குப் பிறகு நான் புக்ககம் போகும் வரையில் பல தடவை ராஜத்தைக் கேட்டும் அவள் வாசிக்கவில்லை.

“வீணை வாசிப்பைக் கேட்பதற்கென்று என் கணவர் தம் தகப்பனாருக்குத் தெரியாமல் எங்கள் வீட்டுக்கு வந்து போவார். வந்தால் மணிக்கணக்கில் வாசித்தால்கூட அவருக்கு அலுப்பு ஏற்படாது. இரவுச் சாப்பாட்டுக்கு அப்புறம் மேல்மாடியில் உட்காருவோம். என் தகப்பனாரும் கூட இருப்பார். ‘நான் ஆசைப்பட்டது நிறைவேறிவிட்டது அப்பா. இனிமேல் இந்த வித்தை சீர் குலையாமல் நீதான் பார்த்துக் கொள்ளவேணும்’ என்று அவர் மாப்பிள்ளையிடம் கூறுவார்.

“அப்பொழுது என் கணவர், ‘இதற்காக ஏன் கவலைப் படுகிறீர்கள்? ராஜத்தோடு மீனாக்ஷியும் கற்றுக் கொள்ளட்டுமே. வித்தைக்கு எல்லை உண்டா என்ன?’ என்று சொல்லிக்கொண்டே என்னை அன்புடன் பார்ப்பார். நிலவு பொழியும் பல இரவுகளில் பன்னிரண்டு வயதுச் சிறுமியாகிய என்னைத் தன் தூய மனத்துடன், ‘மீனாக்ஷி! வீணைத் தந்திகளை மீட்டி இன்ப நாதத்தை எழுப்பும் உன் விரல்களுக்கு என்ன பரிசு கொடுப்பது?’ என்று ஆசையுடன் கூறிய கணவரின் வார்த்தைகளால் நான் உள்ளக் கிளர்ச்சி அடைய அதற்கு வேண்டிய வயதும் வரவில்லை. ராஜம் என்னைவிட உயர்வாக வாசிப்பதால்தான் என் எதிரில் வாசிக்கவில்லை; புக்ககத்தில் அவள் எதிரில் எப்படி வாசிப்பது?’ என்கிற பிரச்னைதான் என் மனசை வாட்டிக்கொண்டிருந்தது.

“என் சங்கீதத்தில் மனசைப் பறிகொடுத்த கணவர், நான் எப்பொழுது புக்ககம் வருவேன் என்று காத்திருந்ததாக முதல் நாள் இரவே என்னிடம் கூறினார். அப்பொழுது எனக்கு வயது பதினைந்து, நான் வந்த அன்றையிலிருந்து ராஜம் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டிருந்தாள். ஊரில் இருப்பவர்கள் ஏற்கனவே என்னுடைய சங்கீதத் திறமையைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார்கள். புது நாட்டுப் பெண்ணைப் பார்க்கும் சாக்கை வைத்துக் கொண்டு அந்த ஊரார் என் பாட்டைக் கேட்க வந்தார்கள்.

“புக்ககம் வந்து பதினைந்து நாட்கள் வரையில் நான் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் வீணை வாசிக்கும்படி நேரிட்டது. அப்பொழுதெல்லாம் ராஜத்தின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும். கல்யாணத்தில் என்னுடன் கலகலப்பாகப் பேசியவள் அவள் வீட்டுக்கு நான் வந்ததும், அதிகமாகப் பேசுவதை நிறுத்திக்கொண்டாள். மாமியார் இல்லாத வீட்டில் பேசத் துணையின்றி நான் சங்கடப்பட்டேன்.

இதற்கிடையில் ஊருக்குப் போயிருந்த ராஜத்தின் வீணை வாத்யார் வந்து சேர்ந்தார். கல்யாணம் விசாரிக்க வந்திருந்த போது என் மாமனார், ‘என் நாட்டுப் பெண் நன்றாக வீணை வாசிப்பாள். இன்னும் அவளுக்கு
தெரியாமல் இருந்தால் சொல்லிக் கொடுங்கள்’ என்று அவரிடம் கூறினார். அன்றையிலிருந்து ராஜமும் நானும் பாடம் சொல்லிக்கொள்ள ஆரம்பித்தோம்,

“மன்னியின் எதிரில் வாசிக்க எனக்கு வெட்கமாக இருக்கிறது ஸார்” என்று ராஜம் பிடிவாதம் பிடித்தாள்.

“வெட்கம் என்ன அம்மா? பழகப் பழக நீயும் அந்த மாதிரி வாசிக்கப் போகிறாய்” என்றார் வாத்தியார்.

“இருந்தபோதிலும் சில நாட்களில் ராஜம் தனக்கு உடம்பு சரியில்லை என்று பாட்டுச் சொல்லிக்கொள்ள வரமாட்டாள். இதைப் பார்த்தபோது, ‘வேண்டுமானால் பாட்டை நிறுத்திவிடலாமா?’ என்று எனக்குத் தோன்றும்.

அன்று விஜயதசமி, முதல் நாள் பூஜையில் அலங்காரத்துடன் வைக்கப்பட்டிருந்த இரண்டு வீணைகளையும் எடுத்து வைத்துக்கொண்டு இருவரும் வாசிக்க ஆரம்பித்தோம். வாத்தியாரும் மாமனாரும் உட்கார்ந்திருந்தார்கள். என் கணவரும் ஒரு பக்கமாக உட்கார்ந்திருந்தார்.

“புதுக் கீர்த்தனை ஒன்று ஆரம்பிக்கிறேன்” என்று வாத்தியார் கல்யாணி ராகக் கீர்த்தனம் ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இரண்டொரு தரம் ராஜம் அபஸ்வரமாக வாசித்ததைப் பொறுமையுடன் கண்டித்தார். மேலும் அவள் அவ்வாறு வாசிக்கவே, ‘என்ன அம்மா இது? நாலு வருஷமாகக் கல்யாணி ராகத்தில் எவ்வளவோ கீர்த்தனங்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். கவனித்து வாசிக்கக் கூடாதா?” என்று கடிந்து கொண்டார்.

“ராஜத்தின் கண்களில் சரசரவென்று நீர் பெருகிற்று. ‘அதற்குத்தான் ஸார் சொன்னேன்; மன்னியைப்போல் எனக்கு வாசிக்கத் தெரியாது என்று. நான் இனிமேல் உங்களிடம் சொல்லிக்கொள்ளவில்லை. நீங்களும் என்னை அலக்ஷ்யம் செய்ய வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு விசித்து விசித்து அழ ஆரம்பித்தாள்.

“அடேயப்பா! என்ன கோபம் வருகிறது? மன்னி மாதிரி நீயும் வாசிப்பதுதானே?” என்றார் வாத்தியார். ராஜம் தொப்பென்று வீணையைப் போட்டுவிட்டு உள்ளே போனாள்.

“என் மாமனாரின் முகம் சிவந்துவிட்டது.

“இந்தா மீனாக்ஷி! உன் வீணையைக் கொண்டுபோய்ப் பெட்டியில் வை, இந்த வீட்டிலே நீ வீணை வாசிக்கக் கூடாது தெரியுமா?” என்றார் அவர்.

என் கணவர் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார்.

“நான் அப்படி ஒன்றும் தவறாகச் சொல்லிவிட வில்லையே. குழந்தைக்கு நல்லதைத்தானே சொன்னேன்?” என்று விநயமாக கேட்டார் வாத்தியார்.

“போரும் ஐயா? போய்விட்டு வாருங்கள்” என்றார் மாமனார். என் கணவர் மாடிக்கு விடுவிடு என்று போய் விட்டார்.

“வீணையைப் பெட்டியில் வைத்துவிட்டு ராஜத்தைப் போய்ப் பார்த்தேன்.அவள் முகத்தில் என்றும் இல்லாத அமைதி நிலவியது.”

மீனாக்ஷி கதையை முடித்தாள். வீணைக்கு மாமாவிடம் சொல்வதாகவும் கூறினாள். விஜயதசமி அன்று வீணை வந்து சேர்ந்தது. மீனாக்ஷியே சரளி வரிசை கிரிஜாவுக்கு ஆரமபித்து வைத்தாள். அதில் எனக்கு ஒரு திருப்தி ஏற்பட்டது.

– நவராத்திரிப் பரிசு, முதற் பதிப்பு: 1947 , கலைமகள் காரியாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *