(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
……யார் வீட்டுக் கல்யாணப் பத்திரிகையைப் பார்த்தாலும் சரி, “ராஜா!” என்று தம் மகனை உடனே அழைத்து விடுவார் ரங்கநாதம்-அன்றும் அப்படித்தான் நடந்தது.
“ராஜா!”
“ஏன் அப்பா!”
“எதிர்வீட்டு ராதையைப் பார்த்தாயா?”
“இதென்ன அப்பா! உங்களுக்கு வேறு வேலை ஒன்று மில்லையா? எப்போது பார்த்தாலும் இவளைப் பார்த்தாயா, அவளைப் பார்த்தாயா என்று என்னைக் கேட்டுக் கொண்டே இருப்பதுதானா வேலை?”
“அதற்கில்லை ராஜா……!”
“எதற்கில்லை?”
“அந்தப் பெண் பொழுது விடிந்து எத்தனை தரம் நம் வீட்டுக்கு வந்து வந்து போகிறாள், பார்த்தாயா?”
“வந்தால் என்ன, அப்பா? அவள் ஏதோ காரியமாகத் தானே வந்து விட்டுப் போகிறாள்?”
“என்ன காரியம்?”
“உங்களுக்குத் தெரியாதா? அவள்தான் சொன்னாளே, அப்பா ஹிந்து பத்திரிகை வாங்கி வரச் சொன்னார்!” என்று.
“உனக்கு உண்மை தெரியாது ராஜா, தெரிந்தால் இப்படிப் பேசமாட்டாய்!”
“என்ன உண்மை? அதைத்தான் சொல்லுங்களேன்?”
“சொல்கிறேன் ராஜா, சொல்கிறேன்! இன்று காலை நீ இங்கே இருக்கும் வரைதான் அந்தப் பெண் வந்து கொண்டிருந்தாள். நீ வெளியே போனாயோ இல்லையோ, அவளைக் காணவேயில்லை. கடைசியில் ‘என்னடா,’பெரிய மனிதராச்சே’ என்று நானே பத்திரிகையை எடுத்துக் கொண்டு போனேன். அவளுடைய அப்பா வராந்தாவில் உலாவிக் கொண்டிருந்தார். அவரிடம் பத்திரிகையை நீட்டி, ‘நீங்கள் கேட்டீர்களாமே’ என்றேன். ‘இல்லையே’ என்றார். எனக்குத்துக்கி வாரிப் போட்டது. ‘ஓஹோ’ என்று சொல்லி மழுப்பி விட்டு வந்தேன்-எப்படியிருக்கிறது, கதை?- நானும் பார்க்கின்றேன், எப்போது பார்த்தாலும் அந்தப் பெண்ணுக்கு உன் மேலேயே கண்! இப்படித்தான் தினசரி ஏதாவது ஒரு ஜோலி வைத்துக்கொண்டு, அவள் நீ இருக்கிற சமயமாகப் பார்த்துவிட்டு, இங்கே அடிக்கடி வந்து விட்டுப் போகிறாள்!”
“இருக்காது, அப்பா!”
“இல்லை ராஜா என்னுடைய கல்யாணத்திற்கு முன் உன்னுடை அம்மா கூட…..”
இந்த சமயத்தில் அதுவரை அங்கே உட்கார்ந்திருந்த அவருடைய சம்சாரம், “ஆமாம், போங்கள்” என்று சொல்லிக்கொண்டே ‘வாக்-அவுட்’ செய்து விட்டாள். அவரும் அதற்கு மேல் தம்முடைய ‘காதல் நாடகத்தைப் பற்றி விவரிக்காமல், ‘இதெல்லாம் எதற்காக சொல்கிறேன் தெரியுமா? நான் கண்ணை மூடுவதற்குள் உனக்கு எப்படியாவது கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்ற ஒரே ஆசையினால்தான்! நீயோ ‘காதல் கல்யாணந்தான் பண்ணிக்கொள்வேன் என்று ஒரே பிடிவாதமாயிருக்கிறாய். ‘அப்படித்தான் செய்வோமே!’ என்று ‘யாரையாவது காதலிக்கிறாயா?” என்றால், ‘இல்லை’ என்கிறாய். இப்படியேயிருந்தால் என்னுடைய ஆசை எப்போது நிறைவேறுவது, ராஜா!”
“அப்பா, நீங்கள் இப்படியெல்லாம் சொன்னால் கடைசியில் எனக்குப் பைத்தியந்தான் பிடித்துவிடும். நாலு நாவல்களைப் படித்துவிட்டு, நின்றால் காதல், நினைத்தால் காதல், கண்டால் காதல், காணாவிட்டால் காதல் என்று பிதற்றுபவன் நானல்ல. நான் சொல்லும் காதலுக்கும், நீங்கள் சொல்லும் காதலுக்கும் ரொம்ப ரொம்பதுரம். என் காதலி…..”
“சொல்லு ராஜா, ஏன் வெட்கம்? நானேதான் வெட்கத்தைவிட்டு உன்னிடம் பேசத் தகாததையெல்லாம் பேசிக் கொண்டிருக் கிறேனே!”
“என் காதலி, தாசி வீட்டுக்குப் போக ஆசைகொண்ட நாயகனை தலைமேல் சுமந்து சென்ற நளாயினியைப் போன்றவளாயிருக்க வேண்டும்.”
“அடேயப்பா அதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்குமா ராஜா? எவளிடமாவது இப்போது அப்படிச் சொன்னால்கூட அவள் சிரிப்பாளே!-‘சரி!அப்படிப்பட்ட ஆசை உங்களுக்கு வந்தால் அதை நான் நிறைவேற்றி வைக்கிறேன்; அதே மாதிரி ஆசை எனக்கு வந்தால் நீங்களும் நிறைவேற்றி வைப்பீர்களா?” என்று கேட்டாலும் கேட்பாளே!
“அதென்னமோ அப்பா நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லுங்கள்; எனக்கு ராதாவைப் பிடிக்கவில்லை!”
முன்னாள் அமைச்சர் ரங்கநாதம் அவர்களின் ஏகபுத்திரன் ராஜகோபாலன் பிறந்ததிலிருந்தே பிடிவாதத்தை துணையாகக் கொண்டு வளந்தவன். பணமும் பாசமும் அதற்கு பக்கபலமாயிருந்து வந்தன. வழிவழியாக தாமும் தம்முடைய வம்ச பரம்பரையும் வாழ்ந்து வருவதுபோல் ராஜகோபாலனும் வாழவேண்டு மென்பதில் அடங்காத ஆசை கொண்டிருந்தார் அவர். வம்ச வழியை யொட்டி வராமல் அவன் எங்கே வழிதவறிவிடப் போகிறானோ என்று பயந்து, அல்லும் பகலும் அவர் அவனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இதுவரை அவர் எண்ணியபடியே அவன் பிறந்து வளர்ந்தாகிவிட்டது. இப்பொழுது ‘கல்யாணம் செய்துகொள்’ என்றால், பையன் என்னவெல்லாமோ பிதற்றுகிறானே?
இந்த விஷயத்தில் கடைசியாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அதன்படி, பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தம்முடைய பிள்ளைக்குச் சென்னை சர்க்கார் காரியாலயத்திலேயே ஒரு பெரிய உத்தியோகத்தை வாங்கிக் கொடுத்தார். அதன் காரணமாகத் தன்னுடைய அத்தையின் வீட்டில் அவன் தங்க நேர்ந்தது. இதனால் அவனுடைய மகள் உஷாவுக்கும் தம்முடைய மகன் ராஜாவுக்கும் காதல் உதயமாகும், கல்யாணத்தால் அது அஸ்தமனமாகும் என்று ரங்கநாதம் எதிர்பார்த்தார். அம்மாதிரி எதுவும் நடக்கவில்லை; நடக்குமென்று தோன்றவும் இல்லை.
இத்தனைக்கும் தினசரி எத்தனையோ விதமாகத் தன்னை அலங்கரித்துக்கொண்டு உஷா அவனுக்கு காணாத காட்சியெல்லாம் தந்தாள்; பேசாத பேச்செல்லாம் பேசினாள்: ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினாள்; பாடாத பாட்டெல்லாம் பாடினாள். ஆனாலும் என்ன, அவளுடைய உடலழகைப் பொருட்படுத்தாமல் உள்ளத்தின் அழகைக் கண்டு பிடிப்பதிலே அவனுடைய கவனம் சென்று கொண்டிருந்தது.
ஒரு நாள் மாலை ராஜகோபாலன் வழக்கம்போல் வீட்டுக்குத் திரும்பினான். வீடு வெறிச்சென்றிருந்தது. சுற்று முற்றும் பார்த்தான். உஷா மட்டும் கூடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
“எங்கே, யாரையும் காணவில்லை!” என்று கேட்டான் ராஜகோபாலன்.
“என்ன என்னைக்கூடவா காணவில்லை!” என்று தன்னைத் தானே தொட்டுப் பார்த்துக் கொண்டு சிரித்தாள் உஷா.
அவளுடைய சிரிப்பு ராஜகோபாலனுக்கு நெருப்பாயிருந்தது. “உன்னைக் காணாமலென்ன? உன் அப்பாவையும் அம்மாவையும் காணோமே என்று கேட்டேன்” என்றான் அவன்.
“ஒ, அவர்களைக் கேட்கிறீர்களா?-அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள்!”
“எந்த ஊருக்கு?”
“திருநெல்வேலிக்கு?”
அவ்வளவுதான். அதற்குமேல் ராஜகோபாலன்தன்னை ஒன்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி அவள் வைத்துக் கொள்ளவில்லை. தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போனாள்.
“அவர்கள் ஏன் திருநெல்வேலிக்குப் போயிருக்கிறார்கள் தெரியுமா?’- என் அப்பாவின் சிநேகிதர் வீட்டுக் கல்யாணத்திற்கு!”
“எப்போது வருவார்கள். தெரியுமா? – இரண்டு நாட்கள் கழித்து வருவார்கள்?”
“அவர்கள் என்ன சொல்லிவிட்டுப் போனார்கள் தெரியுமா?-வேலைக்காரியிடம் என்னைப் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டுப் போனார்கள்; என்னிடம் உங்களைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுப் போனார்கள்?”
அதுவரை நின்றது நின்றபடி அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த ராஜகோபாலன் பொறுமையை இழந்தவனாய், “போதும், போதும்!” என்று சொல்லிவிட்டு, கோட்டைக் கழற்றி மாட்டிவிட்டுத் தன் அறைக்குள் சென்று உட்கார்ந்தான்.
காபியைக் கொண்டுவந்து அவனிடம் நீட்டினாள் உஷா. அதை வாங்கிக் குடித்துவிட்டு அவன் பேசாமல் ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான். காலி டம்ளரை எடுத்துக்கொண்டு போன உஷா சிறிது நேரத்திற்கெல்லாம் துள்ளிக் குதித்துக்கொண்டே திரும்பி வந்து, ராஜகோபாலன் முன்னால் ஒரு தினுசாக உட்கார்ந்தாள்.
அந்த நிலையில் அவளைக் கண்ட அவன் கையிலிருந்த புத்தகத்தை வீசி எறிந்துவிட்டு எழுந்து சென்றான்.
வி.க. -24 “தேவலையே; என்னைக் கண்டதும் எழுந்துகூட நிற்கிறீர்களே? என்னிடம் நீங்கள் இவ்வளவு மரியாதையாக நடந்து கொள்வீர்கள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்க வில்லை” என்றாள் உஷா.
அவள் சொன்னதை அவன் அனுபவிக்கவில்லை; எழுந்த இடத்திலேயே இருந்த மேஜையின்மேல் சிறிது நேரம் உட்கார்ந்து ஏதோ யோசித்தான். பிறகு கோட்டை எடுத்து மீண்டும் மாட்டிக் கொண்டு வெளியே போய்விட்டான்.
வழியில் ஏனோ உஷாவின் காதலை நினைத்து கரைந்தது ராஜகோபாலனின் உள்ளம்.
அவன் வெளியே போன பிறகு உஷாவின் உள்ளமும் வேதனையடைந்தது. “அவனுக்குத் தன்னைப் பிடிக்காத போது அவனிடம்தான் ஏன் விளையாட வேண்டும்?” என்று கூட அவள் நினைக்க ஆரம்பித்து விட்டாள்
இரவு மணி எட்டு இருக்கும். வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, உஷா கண்ணிர் சிந்திக் கொண்டிருப்பதை ராஜகோபாலன் கண்டான். அவன் மனம் பேதலித்து விட்டது. “ஏன் அழுகிறாய், உஷா?” என்று உடனே கேட்டுவிட வேண்டும் போல் அவனுக்குத் தோன்றியது. ஆயினும் அவ்வளவு சீக்கிரத்தில் அவளிடம் தன்னை இழந்து விட விரும்பவில்லை; மெளனமாக உட்கார்ந்தான். உஷாவும் மெளனமாக எழுந்து வந்து, அவனுக்கு சாதம் பரிமாறினாள். அந்தச் சாதத்தோடு, சாதமாக, “ஏன் அழுகிறாய், உஷா?” என்று அவளைக் கேட்க வேண்டுமென்றிருந்த கேள்வியையும் சேர்த்து அவன் விழுங்கப் பார்த்தான். முடியவில்லை. கேட்டு விட்டான்.
“ஏன் அழுகிறாய், உஷா?”
அதை அவ்வளவாகப் பொருட்படுத்தவில்லை. அவள். “ஒன்றுமில்லை!” என்று சொல்லிக் கொண்டே அப்பால் போய்விட்டாள்.
இந்த நிலையில் ரங்கநாதம் எதிர்பார்த்தபடி இருவரும் ஒருவரையொருவர் விரும்பத்தான் விரும்பினர். ஆயினும் அவர் களுடைய காதலுக்கு இடையே ஏதோ ஒன்று இடையூறாக இருந்து வந்தது; அதுதான் என்னவென்றே அவருக்குத் தெரியவில்லை.
கடைசியாக அவர் என்ன நினைத்தாரோ என்னமோ, தமது மகனையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு கொடைக்கானல் பங்களாவிற்கு சென்றார். அங்கிருந்து வந்த கல்யாணப் பத்திரிகை யொன்று உஷாவைத் தூக்கி வாரிப் போட்டது. ‘சிரஞ்சீவி ராஜகோபாலனுக்கும், செளபாக்கியவதி ராதைக்கும்’ என்ற வரியைப் படித்ததும் அவள் நிலை குலைந்தாள்.
“என்ன, அம்மா! ஏன் அப்படி நிற்கிறாய்? என்றார் அவளுடைய தந்தை.
அவள் பதில் சொல்லவில்லை; கல்யாணப் பத்திரிகையை அவரிடம் கொடுத்துவிட்டு நின்றது நின்றபடி நின்றாள்.
அதைப்படித்ததும், “அவன் கிடக்கிறான்!” என்றார் அவர் அலட்சியமாக.
அதேமாதிரி அவளால் சொல்ல முடியவில்லை; விம்மினாள். அதற்குள் கல்யாணப் பத்திரிகையுடன் வந்திருந்த கடிதம் ஒன்று அவருடைய கண்ணில் பட்டது. அதையும் எடுத்துப் பிரித்துப் படித்தார்.
ஒரு வாரத்திற்கு முன்னதாகவே எல்லோரும் வந்துவிட வேண்டுமென்று அந்தக் கடிதத்தில் கண்டிருந்தது.
“ஆமாம், இவன் கல்யாணத்திற்கு ஒருவாரம், என்ன? ஒரு மாதத்திற்கு முன்னாலேயே போயிருக்க வேண்டியது தான்” என்றார் அவர் வெறுப்புடன்.
அவர் எதிர்பார்த்தபடி, உஷா அந்தக் கல்யாணத்தை வெறுக்கவில்லை. “அதனாலென்ன அப்பா, அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளபடி நாம் அனைவரும் அந்தக் கல்யாணத்திற்கு போகத்தான் வேண்டும்!” என்றாள் அவள் கண்களை துடைத்து விட்டுக் கொண்டே.
“இதென்ன, அம்மா உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது?”
“எனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கவேண்டும்? அவருக்குப்பிடித்த பெண்ணை அவர் கல்யாணம் செய்து கொள்கிறார்; அவ்வளவுதானே விஷயம்!”
“நம்பிக்கை துரோகம் செய்த அந்த நயவஞ்சகனுக்கா இப்படிப் பரிந்து பேசுகிறாய்?-உங்களுடைய இஷ்டம் அதுவானால் அதை நான் ஆக்ஷேபிக்கவில்லை!” என்றார் அவர்.
அவ்வளவுதான்: ஒருவாரத்துக்கு இரண்டு வாரங்கள் முன்னதாகவே எல்லோரும் கோடைக்கானலுக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
“நீங்கள் எங்கே வராமல் இருந்துவிடப் போகிறீர்களோ என்று நான் பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை வந்துவிட்டீர்கள்!” என்று கூறி, அவர்களை வரவேற்று உபசரித்தார் ரங்கநாதம்.
கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளெல்லாம் பிரமாதமாக நடந்து கொண்டிருந்தன. ராஜகோபாலன் ‘ராஜா’ மாதிரியே இருந்தான். அங்குமிங்குமாக அவன் நடமாடுவதைப் பார்க்கும் போதெல்லாம் உஷாவை ஏதோ ஒன்று என்னவோ செய்வது போல் இருந்தது!
மறுநாள் காலை கல்யாணம். அதற்கு முதல் நாள் மாலை உஷாவிடம் வந்து, “நளாயினியின் புனர்ஜன்மம் நீதான்!” என்றான் ராஜகோபாலன்.
அவள் பதில் சொல்லவில்லை.
“வேறொரு பெண்ணை நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று தெரிந்தும், நீ என்னுடைய கல்யாணத்திற்கு வந்திருக்கிறாயே, அதுவே போதும், உன்னை நான்கல்யாணம் செய்து கொள்ள” என்றான் அவன்.
அவள் தலை கவிழ்ந்தது; அதைத் தொடர்ந்து ஒரு சொட்டுக் கண்ணிர் கீழே விழுந்து தெறித்தது.
“அழாதே, அசடே! நாளைக்கு நான் மாலையிடப் போகும் மாதரசி நீதான்” என்றான் அவன்.
அவ்வளவுதான்; அவள் எழுந்து அவசர அவசரமாகக் கண்களை துடைத்துவிட்டுக் கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தாள். அப்போது படபடவென்று அடித்துக் கொண்ட அவளது இமைகள் “இது நிஜந்தானா, இது நிஜந்தானா? என்று கணத்துக்கு கணம் அவனைக் கேட்பது போல் இருந்தது!
“ஆமாம், உஷா, அவ்வளவும் சோதனை ராதை கல்யாணப் பத்திரிகையோடு சரி, நீதான் இத்தனை நாளும் நான் தேடிக் கொண்டு இருந்த மிஸ் நளாயினி 1950!” என்றான் அவன்.
அவள் முகம் மலர்ந்தது!
– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.