மிஸஸ் லவ்வாடி ஹியர்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 26, 2023
பார்வையிட்டோர்: 4,284 
 
 

சித்திரை தொடங்கியதும், ஊர்க்கதைப்புகளோடு, வீட்டு விசேஷங்களைப் பற்றி பேசுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் கழனிக்குடி பஞ்சாயத்தில், விசேஷங்கள் எதுவும் இல்லாததால், வறண்டு போன மாதிரி, வாய்கள் மூடியே இருந்தன. ஆமாம் சுத்தி அடித்துத் திறக்கும் அளவுக்கு இருந்தது. அவ்வப்போது மினிஸ்டர் பி.ஏ என அள்ளித் தட்டிவிடும், ஒத்தநாடி கூட, புழுங்கல் அரிசியைக் கொட்டி, வாயை அரவை எந்திரமாக்கி கொண்டிருந்தான். பந்தல், தோரணம், பந்தி என்று, அசைபோட்டுக் கொண்டிருந்த, பிச்சைபிள்ளை வீட்டில் இருந்த பல வயிறுகள், கொதித்துத்தான் போயின. இருக்காதோ பின்னே, ருசி கண்ட பூனைகளாச்சே..

அப்போது அருவமாய், ஊர்வாய் பேச வந்த, பொட்டம்மாள், ‘அடுத்தடுத்து விசேசங்க வர்றதாலே, வீடே ஜெகஜோதியா இருக்கு’ என, தன்னால் முடிந்த அளவுக்கு வாயைத் திறந்தாள். ஏற்கனவே, மரிக்கொழுந்து வச்ச மச்சான், மறித்துக் கட்டிவிட்ட கோபத்தில. இருந்த காந்தி. ‘என்னடி வாய்க்கொளுப்பா’ என்றாள். ‘ சும்மா வெள்ளாட்டுக்கு சொன்னேங்க’ என்று தப்ப முயற்சித்தபோது, நூலிழையில், குறுக்கே புகுந்தாள் அன்னாராணி, ‘..நாங்க என்ன சோத்துக்கு அலைற கூட்டமாடி, நாக்குலெ நரம்பு இல்லாம கிண்டல் பண்றே’ என்றாள்.

தொடர்ந்து ‘எங்க வீட்டு குழிப்பணியாரத்தை, ஊரே சாப்டுது, நீ ஏதோ கிண்டலா பேசுறே’ என்றாள்.

மன்னிச்சுக்கோங்கம்மா, தெரியிறமாதிரி சாப்புடக் கொடுத்திருந்தா, இப்புடிச் சொல்லிருக்கமாட்டேமா, நீங்க தூக்கிக் கொடுத்தது, ஏங்கண்ணுக்கு எட்டாததாலை, அப்டி சொல்லிட்டேன், என வந்த வழியே முனகியபடி திரும்பினாள்.

அதேநேரம், ஊரின் வடகிழக்கில் உள்ள கண்ணாரேந்தல் கிராமம், விழா ஏற்பாடுகளால் அமளிதுமலியாகிக் கொண்டிருந்தது. தீமிதி திருவிழாவிற்காக அரங்கேறிய பகட்டு, படாடோபம்.. அடேங்கப்பா, சொல்ல முடியாத அளவுக்கு எல்லை மீறிய குதூகலம் தெரிந்தது. சிலர் அரை டவுசர்களில்கூட, திரிந்தார்கள்..

இதுநாள்வரை, ஓலைப்பாம்பைப்போல, சுருண்டு படுத்துக் கிடந்த, சோமுவும், அவனது அப்பனும், பூக்கூடைகளைத் தூக்கிக் கொண்டு ஊர்ஊராக அலைந்தார்கள். அப்பனும், மகனும் சம்பாத்தியத்தில் குறியாக இருந்தாலும், பூவிற்பனையில் அவர்களை அறியாமல் சில நல்ல நிகழ்வுகள் நடந்திருந்தன.. சுத்தமான நாசித்துவாரங்கள், சத்தியமாக அதை உணர்ந்தன. இதுவரை அருவருப்பாய் வீசி, மூக்கை மூட வைத்த, வேப்பெண்ணெய்க் கிராக்கிகளின் சாயல், புதுப்பொலிவை ஏற்றிருந்தன. முக கலையை, வாடகைக்கு எடுத்தார்களா, வாங்கினார்களா என்கிற அளவுக்குப் புதுமை.. பளிச்சென பல்லுக்குச் சவால்விடும் அளவுக்கு பொலிவு பெற்றிருந்தன முகங்கள்.சோமு விற்றுத் தீர்த்த பூக்களால், இப்படியொரு விநோத நிகழ்வு.

முக கவர்ச்சியோடு, கூந்தலும் பூக்களை ஏந்தி இருந்ததில், ஒரு மிளிர்வுதான்.. கூம்புக் கொண்டையில், காகிதப்பூவை, பட்டும் படாமல் வைத்துக் கொண்டிருந்த பாப்பாவின் தலைகூட, சுற்றியிருந்த பூக்ககளால், கோபுரத்தை தூக்கி நடந்து வருவதுபோல இருந்தது. இரட்டைச் சடையில், இடுப்புவரை நீண்டு தொங்கிய கனகாம்பரம், சோலை ராணியின் தலைமயிரை மறைத்தது. கூடவே, பிறக்கும்போது சூட்டிய பெயருக்கான தாத்பர்யத்தை, அப்போதுதான், சொல்லாமல் சொன்னது, கடையாகத் தரிக்கப்பட்டிருந்த பூச்சடை.

சாதாரண நாட்களில் சில்லறையாக எண்ணிக் கொண்டிருந்த சோமுவும், அவனது அப்பனும், ஒண்ணு, ரெண்டு, மூணு என , தாள்களை எண்ணி எண்ணி, ‘எங்கிட்ட உங்க பாட்சா பலிக்காது’ என்ற சுய சவடாலில், எச்சில் இறக்கி கொண்டிருந்தார்கள். ‘வெளிநாட்டுக்கு, ஃப்ளைட் ஏற வேண்டும்’ என்ற கற்பனையில் மிதக்கும் சோமுவுக்கு, சொல்லவா வேண்டும். மனைவி சாந்தாவின், நீண்டநாள் கோரிக்கையான, டேப் ரெக்கார்டர், ஸ்பீக்கரை வாங்கி, அன்பு பரிசாக அவளுக்கு அளித்தான். எல்லாம் அந்த நாறவாயில் கிடைக்கும் ஒரு முத்தத்திற்காக, இந்தப் பகட்டும், பந்தாவும் செய்ய வேண்டியிருந்தது.

பூக்கூடையை இறக்கி வைத்துவிட்டு, உள்ளே நுழைந்த சோமுவை, மூக்கு விடைக்க ‘அத்தான்’ என்று கட்டி அணைத்த சாந்தா, உடனடியாக அதைப் பாட வைக்க வேண்டும் என, கூடவே அடம்பிடித்தாள்.. ‘கொஞ்சம் பொறுடி, அடங்காப்பிடேரி, ஒரு பாட்டுக்கா இப்புடி பாடாய்படுத்துறே’ என்று சிரித்துக் கொண்டே கோபபட்டான். எதிர் வீட்டுத் திண்ணையிலிருந்து, இதைப்பார்த்த சுப்பிரமணி, ‘சவுண்டுலெ உள்ள வேகம், மொகத்திலெ தெரியலையே’என்று சொல்லி முடிக்கும் முன், ‘சரி வாடி’ என்று வீட்டுக்குள் சென்று விட்டான் சோமு..

நக்கிப்புத்தியோ என்னவோ, கொல்லைப்புறமாகச் சென்ற சுப்பிர மணியத்தை, கையை காட்டி சைகை செய்தாள் சாந்தா. அருகில் வந்த அவள், ‘ஒங்களை எவ்ளோ ப்ரியமா நெனச்சுக்கிட்டு இருக்கேன், நீங்க அவருக்கிட்டெ போட்டுக் குடுக்குறீங்களே’ என சிணுங்கி நின்றாள்.

‘எங்க குடும்பத்திலெ , எங்கள்ல யாருக்கும், போட்டுக் குடுக்கிற பழக்கமில்லேமா, போட்டுவேணா விடுவோம், அதைத்தான் நாங்க செஞ்சுண்டு இருக்கோம்’, என்னோட அண்ணனைப் பாத்தாலே அது புரியும், அந்தப்பயதான் உனக்கிட்ட, நல்லா போட்டுக் கொடுத்திருக்கான்போல, என்னைப்பத்தி’

‘சும்மா இருங்க அவருக்கு, அதெல்லாம் சுட்டுப்போட்டாலும் வராது , கோத்து வேண்ணா பூவைக் கட்டுவாரே ஒழிய, ஒங்களெ மாதிரிச் செய்ற ஆளு இல்லைங்க அவரு..’

திடீரென அவனைப் பார்த்ததில் என்ன லயிப்போ தெரியவில்லை, அடேங்கப்பா அடேங்கப்பா என மூக்கோடு மூக்கு உரசுவதுபோல், முகத்தை அருகில் கொண்டு சென்றாள் சாந்தா.

‘அதுசரி்..என்ன டேப் ரெக்கார்டரெல்லாம் வந்திருச்சு போல, இப்பக் கொஞ்சம் ஏத்தந்தான்போலே, இனி உன்னோட காட்லெ மழைதான்’

‘அடச்சும்மாருங்க, எங்க. அம்மா காட்லெ மழைன்னு சொன்னாக்கூட ஏத்துக்குவேன்’ ஏங்காட்டுலெலாம் மழை இல்லைங்க, இதுதா ஏங்கொடுப்பினை போல..’

‘வேணுண்ணா நா உதவட்டுமா?’

‘உம்மையாவா சொல்றீங்க, நானே கேக்கலாம்னு இருந்தேங்க. சரி பாக்கலாம்.. நா வர்றேங்க’ என்று வீட்டுக்குள் நுழைந்தாள் சாந்தா. சோறு போடுவாள் என்று, தட்டையே பார்த்துக் கொண்டிருந்தபோது, சோமுவின் செவிப்பறையை, ஸ்பீக்கர் சத்தம் கிழிப்பதாக இருந்தது.

வெடக்கோழி எனக்காக தெனம் தவமாக் கெடக்கு..
கணக்காகத் தொட வேணும் எடம் புதுசா இருக்கு
அடி ராத்திரி நேரத்தில் மல்லியப்பூ இம்புட்டுத் தேவையில்லை
அடி ஆத்தாடி ஆம்பளைக்குப் புத்தியிலெ வெவரம் எட்டவில்லை

தட்டில் கஞ்சிகூட விழாததால், பாட்டில் லயித்துப்போன சோமு, ‘எப்படி எப்புடிலாம் நம்மலெ, என்னை ஐஸ் வெக்கிறா பாரு’ என்ற புன்முறுவலோடு, கழுவிய கையைத் துடைத்துக் கொண்டு, முற்றத்திற்கு வந்தான். ‘ என்ன சாப்டாச்சா’ என்ற சுப்பிரமணி, சிவப்பு சிக்னல் கொடுக்க, சாந்தா வீட்டுக்குள் பாய்ந்தாள். பாட்டுக்களால் காதலில் இரண்டு பேரும் கசிந்துருக, காலங்கள் ஓடியது. கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வரும், இங்கு காதல் முற்றியதால் பறந்து போய்விட்டன. இரண்டு கிழக்காதல் ஜோடிகளும் ஓடி மறைந்தது. பேட்ஜிலர் லைப்பிலிருந்து தாம்பத்ய வாழ்க்கைக்கு மாறிய சோமு, மீண்டும் பேட்ஜிலர் லைஃபுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டான்.

காதலுக்கு மரியாதை வழங்குவதாக நினைத்தோ, என்னவோ, ஓடிப்போனவர்களை மீட்க ஒருவரும் முன்வரவில்லை, அந்தக் கிராமத்தில்.. சில ஆண்டுகள் இரண்டாந்தார தாம்பத்யத்திற்கும் முடிவு கட்டிய சாந்தா, சுப்பிரமணியைத் தொங்கலில் விட்டுவிட்டு, தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். அவளுக்கு திருமணம் மற்றும் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் போனது. தனிஸ்லாஸ், சந்தியாகு உள்ளிட்டோருடன், உலக விவகாரங்களை அரட்டையாக்கிக் கொண்டிருந்தாள் தாய்வீட்டில். மரணம் அவர்களையும் பிரித்து விட, பில்லி சூன்யம் உள்ளிட்ட மந்திர வேலைகளை, கையாண்டு கொண்டிருக்கிறாள். அதைச் சிலர் கேட்டுப் பயின்று கொண்டிருக்கிறார்கள்.

உடன் வந்து உதவி செய்ய ஊரில் யாரும் முன் வராததால், சாந்தா மீது சோமு வழக்குத் தொடர்ந்தான். கீழமை நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், இருதரப்பும் கலந்து கொண்டனர்.

இறுதி விசாரணையில் கூண்டில் ஏற்றப்பட்டார் சாந்தா. வாதியின் வழக்ககறிஞர் வினாவைத் தொடுத்தார்

‘ உங்க பேரு என்ன..?’

‘முசாந்தாங்க அய்யா..’

‘முசாந்தாவா, கொஞ்சம் தெளிவாச் சொல்லுங்க..’

‘ஆமாங்கய்யா, அப்பா பேரு முத்தையாபிள்ளை. அதான், மு சாந்தான்னு சொன்னேங்கய்யா..

‘ஓ.கே.. ஒங்களோடு ஊரு..?’

‘கழனிக்குடி..’

‘என்னது, கழுவிக்குடியா.. இப்படி ஒரு ஊரா…?’

‘இல்லைங்கய்யா, கலனிக்குடி…’

‘திருமணமாகி விட்டதா, உங்க கணவர் பேரு என்ன..?’

‘திருமணம் ஆய்டுச்சு, இப்போதைக்கு இல்லைங்க..’

‘முதல் கணவர் பேரைத்தான் கேட்டேன், பேரு என்ன..?’

‘சோமு’

‘சோமுவை விட்டுப் பிரிஞ்சுட்டீங்க, அப்டித்தானே.. என்ன காரணம், உங்களைக் கொடுமைப்படுத்துனாரா, ஏன் சேந்து வாழலை..?’

‘அதெல்லாம் இல்லீங்க, எனக்கு அழுத்துப் போச்சுங்க, நா அவ்வு பண்ண பக்கத்து வீட்டுக்காரரு, என்னைக் கூட்டிப் போய்ட்டா்ருங்க’

‘நீங்க அவரை அனாதையாக்கிட்டதா, கேஸ் போட்ருக்காரு, இழப்பீடு கேட்ருக்காரு, கொடுப்பீங்களா.. கொடுத்துத்தான் ஆகணும் முடியுமா ?’

‘அதெல்லாம் மமுடியாதுங்கய்யா, மூணு வருசம், அவரோட இருந்து கஷ்டப்பட்டிருக்கேன், அதைக் கழிச்சிக்கச் சொல்லுங்கய்யா?

‘நீங்களே அவரை வெறுத்துப் போயிருக்கீங்க, நீங்கதான் கொடுக்கணும் என்று வழக்கறிஞர், அப்போது வார்த்தைகளை ஒத்தி வைத்துவிட்டு, இருக்கையில் அமர்ந்தார்.

விசாரணை முடிவுக்கு வந்த நிலையில்,

‘In 8 years, this case is an important one. பிரதிவாதி தமிழ் ஓக்கப்ளரியை பயன்படுத்துற விதம, கொஞ்சம் புதுசாவும், காமெடியாவும் இருக்கு’ என்ற நீதிபதி, விசாரணையை, தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

நீதிமன்றம் கலைந்ததும், தொடர்பே இல்லாமல் நடந்து சென்று கொண்டிருந்தார்கள், சாந்தாவும், சோமுவும். அப்போது மைக் சைட் ஆன் செய்யப்பட்டது.

‘அது இருந்தா இது இல்லை, இது இருந்தா அது இல்லை. அதுவும், இதுவும் சேர்ந்திருந்தா அவனுக்கிங்கே இடமில்லை’ என்ற பட்டுக்கோட்டையின் வரிகள் பாடலாக ஒலித்தது.

அந்த வீட்டுக்கு முன் வைக்கப்பட்டிருந்த விளம்பரத்தட்டியைப் பார்த்தான் சோமு. வாழ்த்துக்கள், நாளை காது குத்து விழா, என்று எழுதப்பட்டிருந்தது. அரைக்கிழமாகியும் குத்தாத காதை, ஒரு முறை பார்க்க வேண்டும் என்ற பிரக்ஞை எழுந்தது சோமுவுக்கு. கட்டைவிரலையும், ஆட்காட்டி விரலையும், செவிமடலில் வைத்து தடவிப்பார்த்தான். எதுவும் இல்லை. பின்னர், சாந்தாவின் பின்புரமாகவே நடந்து சென்றான்.

Print Friendly, PDF & Email

1 thought on “மிஸஸ் லவ்வாடி ஹியர்

  1. இவளைப் போன்ற ஒருத்தி, என் லாட்ஜில் ஜோடியுடன் வந்து, தங்கிச் சென்றாள் அவர் பெய் போஸ் என்று கையெழுத்திட்டார். அந்தப் பெண்ணை அவர் வற்புறுத்தியபோது, சரியா கையெழுத்துப் போட முடியாது என்றாள் கடைசில் விலாசமுன்றி கையெழுத்திட்டார் இந்தக் கதைக்கு நன்றி.

    ஓம்பிரகாஷ்
    லாட் ஜ் மேற்பார்வையாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *