மித்ர தோஷம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 6, 2013
பார்வையிட்டோர்: 10,919 
 
 

”குமார்… நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து வர்றாங்க. எனக்கு ஒண்ணும் ஓடாது. நீ பக்கத்துல இருந்தா தைரியமா இருக்கும். வர்றியாடா?”

– பரமேஸ்வரன் போனில் கேட்டார். குமார் சிரித்துக் கொண்டார்.

”உன் மகளைத்தானே பொண்ணு பார்க்க வர்றாங்க. உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்ற மாதிரி படபடப்பா இருக்கியே! சரி… சரி… காலையில ஒன்பது மணிக்கெல்லாம் வந்துடறேன்…. ஸாரி, வந்துடறோம். சுலோசனாகிட்டே டிபனுக்கு புதினா சட்னி அரைச்சு வைக்கச் சொல்லு!”

– போனை வைத்துவிட்டு அமர்ந்தார் குமார்.

வாழைப்பூ அரிந்து கொண்டிருந்த அவர் மனைவி பிரேமா, அரிவாள்மனை உள்ளிட்ட தன் தளவாடங்களை அவருக்கு அருகே நகர்த்தி அமர்ந்தவள், ”கடைசியில உங்க ஃப்ரெண்டு சூப்பர் சம்பந்தமா பிடிச்சிட்டாரோ!” என்றாள் துவக்கமாக.

”ஆமா, ஒரே பொண்ணில்லையா! பையன் கோயம்புத்தூர்ல சாப்ஃட்வேர் இன்ஜினீயராம்!”

”உங்களுக்கு மட்டும் பத்துப் பொண்ணா இருக்கு? ஒண்ணே ஒண்ணுதான் பெத்து வெச்சிருக்கேன். ஞாபகமிருக்கட்டும். வர்ற மே மாசம் பானுவுக்கும் இருபத்தி நாலு முடியப் போகுது.”

”எல்லாம் நேரம் வரும்போது கூடி வரும். நீ வேலையைப் பாரு… நாளைக்கு பரமேஸ்வரன் வீட்டுக்குப் போகணும். காலையிலேயே ரெடியாகு!” எழுந்து தோட்டத்துப் பக்கம் வந்தார் குமார். தொட்டிகளிலிருந்த ரோஜா செடிகள் மொட்டு விட்டிருந்தன. பச்சை இலைகளுக்கிடையே மஞ்சளும் சிவப்புமாக மொட்டுகள் விழித்துப் பார்ப்பது அழகாக இருந்தது. இதெல்லாம் பானுவின் வேலை. நண்பர் பரமேஸ்வரனுக்கும் இப்படி தோட்டக்கலையில் அதிக ஈடுபாடு உண்டு. அதற்கும்கூட குமாரைத்தான் அழைப்பார்…

”டேய் குமார்… விஜயா நர்சரியில புதுப்புது செடிகள் வந்திருக்காம். நீயும் வந்தீனா… செலக்ட் பண்ண வசதியா இருக்கும்.”

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும், பரமேஸ்வரனுக்குப் பக்கத்தில் குமார் இருக்க வேண்டும். இது கல்லூரி காலத்திலிருந்தே தொடரும் மித்ர பந்தம். சுலோசனாவை பெண் பார்த்து மணம் முடித்துக் கொண்டதாகட்டும்… மகள் உமாவை கான்வென்ட்டில் சேர்த்ததாகட்டும்… குமார் இல்லாமல் எதுவுமே செய்ததில்லை பரமேஸ்வரன்.

”உமாவை பெங்களூர் டூருக்கு அனுப்ப மாட்டேன்னியாமே… குழந்தை நாலு இடத்தைப் பார்த்துப் பழகட்டுமேடா…”

”இப்பவெல்லாம் ஏரோ-நாட்டிகல்தான் பெஸ்ட்… அதுலேயே இடம் வாங்கு!”

– இப்படி குமாரின் அபிப்பிராயங்களுக்கெல்லாம் பரமேஸ்வரனின் பதில்… ”குமார் சொன்னா சரியாத்தான் இருக்கும்…” என்பதுதான்.
அடுத்த நாள் காலை குமாரும் பிரேமாவும் கிளம்பினார்கள். பஸ்ஸில் அதிகக் கூட்டமில்லை. குமார் அருகே நெருங்கி உட்கார்ந்தாள் பிரேமா.

”நேத்து சாயந்திரம் தரகர் கிருஷ்ணனைப் பார்த்தேன். நம்ம பானுவைப் பத்திப் பேசத்தான் போனேன். உங்க ஃப்ரெண்டு பொண்ணுக்கு பார்த்திருக்குற வரனைப் பத்தி அவரே சொன்னார். கோவையில அவங்க ரொம்பப் பெரிய குடும்பமாம். பார்க்க அழகா இருப்பானாம். ஒரே பையனாம்… அஞ்சு கார் நிக்குதாம் வீட்டுல. அப்பாவுக்கு சொந்தமா ஒரு ஃபேக்டரி இருக்காம்.”

குமாருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

”நாம் நினைத்ததைவிட பெரிய இடமா… பரவாயில்லையே!” என்றவர், பரமேஸ்வரன் படபடப்பது நியாயம்தான் என்று நினைத்துக் கொண்டார்.

”தரகர்தான் சொன்னாரு… இன்னிக்கே அவங்க இன்னும் ரெண்டு இடத்துல பொண்ணு பார்க்கப் போறாங்களாம். அதுல எது பிடிக்குதோ அதைப் பேசி முடிக்கலாம்னு ஐடியாவாம்!”

”பணக்காரங்க அப்படித்தான்!”

பிரேமா குரலைத் தாழ்த்திக் கொண்டாள்.

”இன்னொரு விஷயம் என்னன்னா… பையனுக்கு செவ்வாய் தோஷமாம். செவ்வாய் தோஷமுள்ள பொண்ணு கிடைச்சா இன்னும் பெட்டரா இருக்கும்னு நினைக்கிறாங்களாம்…”

குமார் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்தார். தங்கள் மகள் பானுவுக்கு செவ்வாய் தோஷம் என்பதும் அவளுக்காக பல இடங்களில் சொல்லி வைத்திருப்பதும் நினைவில் ஓடியது.

”இப்ப என்ன பண்ணலாம்ங்கிறே” – இறுகிய குரலில் கேட்டார்.

”நான் ஒண்ணும் தப்பா சொல்லல. கோவைக்காரங்க நம்ம பொண்ணையும் பார்க்கட்டுமே. பிடிச்சிருந்தாதானே மத்ததெல்லாம். பொண்ணுனா ஆயிரம் பேர் பார்ப்பாங்க. தரகு கிருஷ்ணன் போன் நம்பர் இருக்கு. போட்டுப் பேசுங்களேன்!”

சற்றே தயக்கத்துடன் செல்லில் நம்பரை அழுத்தினார்.

”ஆமா சார்… நேத்து அம்மாகூட சொன்னாங்க…. உங்க பொண்ணையும் பார்த்தா நல்லா இருக்கும்னு. இப்பவும் பரவாயில்ல. கோவைக்காரங்க, குமார் சார் வீட்டுக்கு சாயந்திரம் மூணு மணிக்குத்தான் போறதா பிளான். வேணும்னா காலையில பதினோரு மணிக்கே உங்க வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றேன் சார்…” என்றார் தரகர்.

சம்மதம் சொல்லிவிட்டுப் போனை வைத்தாலும் தடுமாறத்தான் செய்தார் குமார்.

”இதுல ஒரு தப்பும் இல்ல. கோவை மாப்பிள்ளையை உங்க ஃப்ரெண்டு நிச்சயமா பண்ணிட்டார்? எதுவும் இல்லை. ஆன் த வே நம்ம பெண்ணை பாத்துட்டு போகப் போறார். நீங்க ஏன் தடுமாறிகிட்டு. இறங்குங்க… பஸ் புடிச்சு நம்ம வீடு போகலாம்…” என்றாள் பிரேமா உற்சாகமாக.

குமாருக்கு ஏதோ மனசில் இடறிக்கொண்டே இருந்தது.

பதினோரு மணி… வந்தவர்களுக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்தார்கள். பையன் உண்மையிலேயே அரசகுமாரன் போலத்தான் இருந்தான். பானுவைப் பார்த்ததுமே அவனுக்குப் பிடித்து விட்டது. அவன் பெற்றோருக்கோ ஜாதகம் பொருந்தியிருந்ததில் ஏக திருப்தி.

”நாங்க எதிர்ப்பார்க்கவேயில்ல… ஜாதகமும் பொருந்தியிருக்கு. பைய னுக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்காம். இனிமே வேற எங்கும் போகப் போறதில்ல. நாள் குறிச்சுடலாம்” என்றார்கள்.

குமாருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிரேமாவோ தரையில் இருப்பதையே மறந்தாள். பானுவுக்கும் பேரானந்தம். சந்திப்பு முடிந்து அவர்கள் சிரிப்பொலி சலசலக்க, கிளம்பிப் போனதும் மகளுக்கு திருஷ்டி சுற்றிப் போட்டாள் பிரேமா.

”எல்லாம் கனவு போல இருக்குங்க… பானு ரொம்ப அதிர்ஷ்டசாலி!” என்றாள் பிரேமா.

குமாருக்கும் கனவு போலத்தான் இருந்தது. ஆனால், பரமேஸ்வரனை நினைக்கையில் நெஞ்சை எதுவோ பிசைந்தது.

மறுநாள் காலை போனில் கூப்பிட்டார் பரமேஸ்வரன்- ”டேய் குமார்… நேத்து நீ வராதது நல்லதா போச்சு. அவங்க இங்க வரல. வேற எங்கயோ பெண் பார்க்க போயிட்டாங்களாம்.”

சட்டென்று வார்த்தைகளைக் கோக்க முடியாமல் தடுமாறிப்போன குமார், ”அது… அது… பரவாயில்லடா… உமா ஜாதகத்துக்கு பொருந்தாதுனு எனக்கு அப்பவே தெரியும்” என்று சமாளித்தார்.

”நீ சொன்னா எப்பவுமே சரியாத்தாண்டா இருக்கும். சரிடா… வெச்சுடவா?”

– பரமேஸ்வரன் சந்தோஷமாகத்தான் போனை வைத்தார்.

‘செவ்வாய்தோஷம் அவன் பொண்ணுக்கும் உண்டே…’

கலக்கத்தோடு ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டார் குமார்.

– ஜூன் 2009

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *