மிகினுங் குறையினும்…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2014
பார்வையிட்டோர்: 14,171 
 

சாதத்தில் உப்பு கூடுதலாக இருப்பதாக பாக்கியம் சொன்னது.

”வாய்ல வெக்க முடியல. நாங்கூட சாம்பார்லதேன் உப்பு ஏறிப்போச்சாக்கும்னு‍ ரசத்துக்குப் போனா அங்கயும் எரிக்கிது!” – சேது, வெறும் சாதத்தை வாயில் போட்டுப் பார்த்தார். உப்பு நாக்கைச் சுட்டது.

யார் போட்டது? எப்போதும்‍ உப்பு போடுகிற வேலையை மட்டும் யாரிடமும் விட மாட்டார். படிக்குக்‍ கைப்பிடி. 15‍ படிக்கு‍ 15‍ கைதான் எண்ணிப் போட்டார்.

”நீ எத்தன எண்ணுன பாக்கியம்?”

”எது?”

”சாதத்துக்கு‍ உப்பு. எத்தனை கை போட்டே?”

”பாஞ்சு!”

மிகினுங் குறையினும்...”அப்புறம் யாரு‍ போட்டது?” – வேலை யாட்களை ஒரு‍ பார்வையில் அளந்தார். அடுப்படிக்கு‍ நாலு பேர். அவர், பாக்கியம், லட்சுமணன், சாரதி. வேறு யாரும் உள்ளே நுழைய மாட்டார்கள். அவ்வப்போது‍ அடுப்பிலிருந்து‍ இறக்க யாரையாவது‍ உதவிக்குக்‍ கூப்பிட்டால் உண்டு. அதுகூட இந்த வேலைக்கு‍ அப்படி‍ வலுவான அயிட்டங்களும் கிடையாது. உத்திக்கு‍ உத்தி போதும். ஆகவே, மற்ற வேலையாட்கள் அவரவர் வேலையைப் பார்த்தனர். காய் வெட்டும்‍ ஆள், உட்கார்ந்த இடம்விட்டு எழுந்துகொள்ளவே இல்லை. தேங்காய்த் துருவிவிட்டு‍ வாழை இலை நறுக்க வந்தவர், வேலை முடிந்து‍ மூலையில் உறங்‌கிக் கிடக்கிறார். சப்ளைக்கு‍ வந்த கேட்டரிங் கல்லூரிப் பசங்க, அவர்களுக்கு‍ அவர்களே போட்டு‍ச் சாப்பிட மாட்டார்கள். வேறு யார் செஞ்சிருப்பா?

”காய், சாம்பார், ரசம்னாலும் புளி மொளகாய விட்டு‍ சரிகட்டிரலாம். சோத்துல எப்டி?” லட்சுமணன் யோசனையாகக் கேட்டான்.

”அரிசியைக் கழுவுனாப்ல கழுவி எடுக்க வேண்டியதே!”

சாரதியின் பேச்சில் பாக்கியம் சிரித்துவிட்டது. ஆனால், சேது‍ கோபப்படுவார் என சுதாரித்து,‍ ”கூறுகெட்ட ரோசனதே வருமா! வெளியில தெரிஞ்சா, எல்லாருக்கும் வெளக்கமாத்து‍ அடி‍ கெடைக்கப்போகுது. வெரசா ஆகவேண்டியதைப் பாருங்க” என்றது.

”இது‍ மொதல்லயே தெரிஞ்சா, சாம்பார் ரசத்துல உப்பில்லாமயே செஞ்சிருக்கலாம்!” – லட்சுமணன் தலையைச் சொறிந்தபடி‍ சொன்னான்.

இந்தப் படத்தை 3Dயில் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்

பாக்கியம் புலியாகப் பாய்ந்தது. ‘வாய்ல என்னமாத்தே வருது. நீயெல்லாம் ஒரு‍ மாஸ்டரு. சோத்த மொதல்ல போட்டு‍ எறக்கிட்டு‍ அப்புறமாத்தே காயி, சாம்பாரெல்லா வெப்பியாக்கும்? நல்லா இருக்கு!” – – இடுப்பில் கை வைத்துக்கொண்டு‍ மல்லுக்கு‍ நிற்பதுபோல கேட்டது பாக்கியம்.

”சரி… சரி… கீழ போயி நெலம என்னானு‍ பாரு. பந்திக்கு‍ எப்ப வர்றாங்க?னு‍ விசாரி.”

எப்போதுமே முகூர்த்த நேரத்துக்கு‍ ஒரு‍ மணி நேரம் முன்னதாகவே எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு,‍ வேலையாட்கள் ஒரு‍ குட்டி‍த் தூக்கம் போடுவார்கள். சாதத்தை மட்டும் அந்த நேரத்துக்கு‍ ஆவி பறக்கத் தர வேண்டும் என்பது‍ சேதுவின் அபிப்ராயம். நல்லவேளையாக அடுத்த உலைக்கான தண்ணீரை அடுப்பில் ஏற்றிவைத்திருந்தனர்.

சாதம் இறக்கி முடித்ததும் அது‍ பாதி அளவு காலியாகும்போதே, அடுத்த உலையை அடுப்பில் ஏற்றி தீயைப் பற்றவைத்துவிடுவார்கள். சாப்பாடு‍ காலி ஆவதற்குள் அந்த உலையில் அரிசியைப் போட்டு‍ இறக்கிவிடுவார்கள். பந்தி, தேக்கம் இல்லாமல் சீராக ஓடும்.

மிகினுங் குறையினும்...2உலையைப் பற்றவைக்க பாக்கியத்தை அழைக்க வாய் திறந்தபோது, வீட்டுக்காரர் பட்டுவேட்டி‍ சரசரக்க அடுக்களையில் நுழைந்தார். ”மாஸ்டர்…‍ எல்லாம் ரெடிதான? திருப்பூட்டப் போறாங்க. பத்து‍ நிமிசத்துல ஆள் மேல ஏறிரும். எலையைப் போட்டு‍ தண்ணியைக்கூட வெச்சிருங்க” – சொல்லிக்கொண்டே ஒவ்வொரு‍ வட்டகையாகத் திறந்து பார்த்தார். பாயசத்தைத் திறந்து பார்த்தவர், கடைசியாக சாதத்தையும் பார்த்தார். பக்கத்தில் அப்பளம் பொரித்துக்கொண்டிருந்த சாரதியிடமிருந்து‍ ஓர்‍ அப்பளத்தை எடுத்துக் கொண்டார்.

”படி‍ ஏறி – எறங்கி மேலைக்கும் கீழைக்குமா அலைஞ்சி வவுறு‍ எறையுது.‍ லைட்டா எதாச்சும் கவனிக்கிறீகளா?” எனக் கண் சிமிட்டினார். அங்கிருந்த நால்வருக்கும் அந்தர் பல்டி‍ அடித்ததுபோல தலை கிறுகிறுத்தது.

”சாதம் இப்பத்தே எறக்கிருக்கு.‍ கொஞ்சம் சூட்டோட இருக்கணும்” – சாரதி சட்டென பேசினான்.

”ம்ஹூம்… சாப்பாடு‍ வேணாம். பாயசம் மட்டும் ஒரு‍ டம்ளர் குடுங்க. இந்த நேரத்துல சாப்புட ஒக்காந்தா நல்லா இருக்குமா?”

அடுப்பிலிருந்த எண்ணெய்ச் சட்டியை இறக்கிவைத்த சேது, உடனடியாக அத்தனை அடுப்புகளையும் பற்றவைக்கச் சொன்னார். எல்லா அடுப்பிலும் வட்டகைகளை ஏற்றினார். ஐந்து‍ ஐந்து படி‍ அரிசிக்கு‍ ஒவ்வொரு‍ வட்டகைகளிலும் தண்ணீர் அளந்து‍ ஊற்றச் சொன்னார்.

”மொத்தமா ஒரு‍ சிப்பம் அரிசியைத் தட்டி‍ வேகவெக்கணும்னா ரொம்ப லேட்டாகும்!”

”இந்த சாதத்தை என்னா பண்றது?”

”ஒண்ணும் பண்ண வேணா… ஓரமாத் தூக்கி வெச்சு‍ தட்டப்போட்டு‍ மூடி‍ வைங்க. கடைசியா யோசிப்போம்!” – சட்டென அந்த வட்டகை பாத்‌திரம் கழுவும் இடத்துக்குச் சென்றது.

”இந்த விசயம் நம்ம நாலு பேரைத் தவிர யாருக்கும் கசிய வேணாம்” என்று‍ சேது‍ சொல்லிமுடிக்க, சப்ளை ஹாலில் இருந்து‍ யூனிஃபார்ம் அணிந்த பையன் ஒருவன் வந்தான். ”டேபிள்ல பேப்பர் ரோல் விரிக்கச் சொல்லவாண்ணே?” – அவன், அந்த அணியின் ஒருங்கிணைப்பாளர்.

”பொறு‍ தம்பி… மாஸ்டர் வந்து‍ சொல்வாரு. அதுக்கப்பறம் பேப்பர் போடு” என்றது பாக்கியம்.

”கல்யாணம் முடியப்போது‍க்கா. நாலஞ்சு பேரு‍ வந்து‍ ஒக்காந்துட்டாங்க!”

”அஞ்சு பேருக்கு‍ தனியா சப்ளை பண்ணப் போறியா?”

”இல்லக்கா… பேப்பர விரிச்சு‍ எலையைப் போட்டுட்டோம்னா…” என்று இழுத்தான்.

”நீ போயி பயகளை ரெடி பண்ணு. அக்கா வந்து‍ சொல்றேன். பெறகு‍ பேப்பர் ரோல எடுக்கலாம். சரியா… கௌம்பு!”

மாடியிலிருந்து‍ இறங்கி கீழ்தளத்தைப் பார்வையிட்டது‍ பாக்கியம். ஹோமம் வளர்த்‌து‍ திருமணம் நடந்‌துகொண்டிருந்தது. மண்டபம் நிரம்பிய கூட்டம். தவிலும் நாகஸ்வரமும் மணமேடையில் கையசைப்புக்கு இணங்க இசைத்துக்கொண்டிருந்தார்கள். வீடியோக்காரரும் போட்டோக்காரரும் ஒருவரை மறைத்து‍ ஒருவர் வேலை பார்ப்பதில் மும்முரமாக இருந்தனர்.

எந்த நேரத்திலும் சாப்பாட்டுக்காக ஆட்கள் மேலே வரலாம் என்பதை உணர்ந்ததும், பாக்கியத்துக்கு‍ ஒரே பதைபதைப்பாகிவிட்டது. கால் மணி நேரம் ஐயர் மந்திரத்தை இழுத்தால், உலை கொதித்துவிடும். அரிசியைப் போட்டதும் ஒரு‍ கொதியில் எறக்கிவிட்டால்கூட சமாளித்து விடலாம். மறுபடியும் மாடிப் படி‍ ஏறிவந்தது. எதிர்ப் பக்கம் இருந்த வாசல் வழியாக மண்டபத்தின் மேனேஜர் வந்தார்.

”என்னாம்மா வேடிக்கை பார்த்துட்டிருக்க? வேலை முடிஞ்சிருச்சா?” – கண்களை மூடிக்கொண்டிருந்த சதுரக் கண்ணாடி‍ வழியே ஊடுருவிக் கேட்டார்.

”ஆமா சார்… முடிஞ்சுச்சு. அப்பளம் பொரிச்சுட்டு இருக்காங்க” – அவர் முன்னால் நடக்க பாக்கியம் பின்னால் வர, இருவரும் ஒருசேர அடுக்களைக்கு‍ வந்தனர். இடையில் சப்ளை ஹாலில் பையன்கள் யூனிஃபார்ம் உடுப்பு மாட்டி‍ மிடுக்காக நின்றனர்.

”யக்கா… எல்லாரும் ரெடி. வாளில அயிட்டங்கள எடுத்துவெச்சிரலாம்ல?” – சப்ளை மாஸ்டர் பரபரத்தான்.

”ஆமா எடுத்து‍வெக்கணும்… ஒரு‍ நிமிசம் இரு” என்ற பாக்கியம், அவனை மட்டும் கைகாட்டி‍ அழைத்து‍ காதில் கிசுகிசுப்பாக, ”மேனேஜரைக் கடத்திவிட்டு‍ வந்துர்றேன்” என்றது.

ஏன் இப்படி‍ நேரம் இழுக்கிறார்கள்? என்று சப்ளை மாஸ்டருக்கு‍ விளங்கவில்லை. இந்நேரம் வாளிகள் முழுக்க காய்கறி வகைகளை நிரப்பி சப்ளை ஹாலுக்கு‍ வந்திருக்க வேண்டும். அதேநேரம் டேபிள்கள் அத்தனைக்கும் பேப்பர் ரோல் விரித்து,‍ இலையும் தண்ணீரும் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சாப்பாட்டுக்கு‍ ஆள் வந்ததும் பரிமாற சரியாக இருக்கும்.

‘எல்லாம் தயாராத்தான் இருக்கு. எதுக்கு‍ இந்தத் தாமதம்? ஒருவேளை மாஸ்டரைப் பழிவாங்கப் போறாங்களா? இல்லை, மாஸ்டர்,‍ வீட்டுக்காரரை நோகடிக்கப்போறாரா? எப்படி‍ இருந்தாலும் மாஸ்டரைத்தானே எல்லாரும் குறை சொல்வாங்க. ‘கடைசியில் சப்ளை சரியில்லை’ என்று‍ நம்ம தலையில் கை வைக்காம இருந்தாப் போதும்’ என்ற கவலை சப்ளை மாஸ்டருக்கு.

”என்னா மாஸ்டர்… எல்லாம் முடிஞ்சிருச்சின் னாங்க. அடுப்புல தண்ணி காயுது?” -பலத்த சத்தத்தோடு‍ அடுக்களைக்குள் நுழைந்தார் மேனேஜர். அவரின் வாய் பேசிக்கொண்டிருக்க, கண்கள் மீதம் இருந்த பலசரக்குப்‍ பொருட்கள் மீது‍ தாவின. பாக்கியம், ஸ்டோர் ரூமின் பக்கமாக போய் நின்றுகொண்டது.

”மறு‍ உலை போடுறோம் சார்” – லட்சுமணன் பதில் சொன்னான்.

”அப்பிடியா! அது‍ சரித்தே. பந்தி ஓடிக்கிருக்கப்ப ரசத்துக்கு‍ சோறில்ல, மோருக்கு‍ சாதம் வெந்துட்டு இருக்குனு‍ பேச்சு‍ வரக் கூடாதில்ல… சரி சரி” என்றபடி‍ ஒவ்வொரு‍ வட்டகையாகத் திறந்து‍ பார்த்தார்.

”ஸ்வீட் என்னா… கேசரியா?”

”அல்வா சார்!”

”அல்வாவா… சூப்பர்!” முகம் பூவாக விரிந்தது.

”சாரதி, ஒரு‍ எலையில சாருக்கு‍ அல்வா எடுத்துக் குடு. டேஸ்ட் பாக்கட்டும்” – சேது‍ உத்தரவுப் போட்டுவிட்டு,‍ அடுப்பில் இருந்த உலை மூடியைத் திறந்து‍ பார்‌த்தார். மூன்று‍ உலைகளில் இருந்தும் இன்னும் கொதி வரவில்லை. வட்டகையின் அடிப்புறத்தில் இருந்து‍ நீர்க்குமிழிகள் ஒவ்வொன்றாக நிதானமாக ‍ மேலே வந்து‍ உடைந்துகொண்டிருந்தன. தீயை மேலும் கூடுதலாக ஏற்றிவிட்டார். லட்சுமணன், அரிசியைக் கழுவி உலையில் போடத் தயாராக இருந்தான். முன்னதாக அரிசியை வாயில் போட்டு‍ பார்த்துக்கொண்டார். ‘ஒருவேளை அரிசியில் உப்பு படிந்திருக்குமோ!’ என்ற கடைசி சந்தேகமும் தீர்ந்தது.

சாரதி, மேனேஜருக்காக ஓர்‍ இலையைக் கிழிக்கும்போது,‍ ‘வேணா… வேணா’ என்று‍ தடுத்தார் அவர். அந்த நேரம் கீழே கெட்டிமேளம் முழங்கும் சத்தம் கேட்டது. ”வீட்டுக்காரங்க வந்தா சங்கடம். இருக்கட்டும். சேதுவோட கேசரி பிரமாதமா இருக்கும். கேசரினா கொஞ்சம் பார்சல் பண்ணலாம்னு‍ வந்தேன்.”

”அல்வா நல்லா இருக்கும் சார். கோதுமை அல்வா. நீங்க போங்க… ஆபீஸுக்கு‍க் குடுத்துவிடுறேன்” – சேதுவின் பேச்சில் பரபரப்பு ஏறி நின்றது.

இந்தப் படத்தை 3Dயில் பார்க்க, இங்கே க்ளிக் செய்யவும்

”ரைட்டு… தாலி கட்டீட்டாங்க போல. வேலையைப் பாருங்க” என்று‍ கிளம்பிய அவர், பாத்திரம் கழுவும் இடத்தில் இருந்த சாப்பாட்டு‍ வட்டகையையும் திறந்தார். ”என்னப்பா சாதத்தை இங்கன கொண்டாந்து வெச்சுருக்கீங்க? தவறுச்சுனா பூரா சாக்கடைக்குப்‍ போயிருமே!” என்றார்.

”இல்ல சார்… ரொம்ப சூடா இருக்கு. ஆறட்டும்னு‍ அங்க வெச்சுருக்கோம்”

– பாக்கியம் பதில் சொன்னதும் புறவழியாக மேனேஜர் வெளியேறினார்.

சப்ளை மாஸ்டர் ஓடிவந்து, ”ஆளுக வந்துட்டாங்கக்கா” என்று‍ பதறினான். பாக்கியம் வெளிறிய முகத்தோடு‍ சேதுவைப் பார்த்தது.

”பேப்பரப் போடச் சொல்லு!”

”மொதல்ல டேபிள்ல தண்ணி தெளிச்சு‍ பேப்பர விரிங்க. நா எலைய எடுத்து‍ட்டு வாரேன்” – சொல்லிக்கொண்டே அவனோடு‍ வெளியில் வந்தது‍ பாக்கியம்.

”எலையை எடுத்துப் போயாச்சுக்கா!”

”அப்பிடியா… நீ பேப்பர் ரோல போடச் சொல்லு. எலையை தலவு மாறாம போடணும். நா போடுறேன்!”

பாக்கியம் அடுக்களையை விட்டு‍ப் போனதும் உலை சத்தம் வரத் தொடங்கியது. முதல் உலையில் வாளியைவிட்டு‍ ஒரு‍ படிக்கான நீரை மொண்டு‍ எடுத்தார் சேது. நீரின் அளவு குறைந்ததும் உலை உரத்துக்‍ கொதித்தது. எடுத்த நீரை மூன்றாம் உலையில் ஊற்றிவிட்டு‍ ”நாலு படி‍ அரிசிய மட்டும் போடு”‍ என்று லட்சுமணனுக்குச் சொன்னார். அரிசியைப் போட்டு‍ கரண்டியால் கிண்டிவிட்டு,‍ மூடி‍ போட்டு‍ மூடினான் லட்சுமணன். அடுத்த உலை சத்தம் எழுப்பத் தொடங்கியது.

”இத மொதல்ல பாப்போம்… அது‍ நல்லா கொதிக்கட்டும். மூடி‍ வெய்யி”

– சொல்லிவிட்டு‍ முதல் உலையையே மூவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். கொதித்த உலை, அரிசியை உள்வாங்கியதும் சற்று‍ அடங்கியது. அடுத்த இரண்டு‍ நிமிடங்களில் உள்ளே விழுந்த அரிசியையும் எழுப்பிக்கொண்டு‍ மேலே கொதித்தது. மூடி‍வைத்த மூடியை முட்டித் திறக்க ஆரம்பித்தது. மூடி‍ டபடபவென அதிர, முட்டி‍ எழுந்த மூடியின் இடைவெளியில் நுரை எட்டிப் பார்த்தது.

சப்ளை ஹாலில் பாக்கியம், ஒவ்வொருவருக்கும் தானே நிதானமாக இலையைப் போட்டு‍ விரித்தும்விட்டது. தனக்குப் பின்னால் டம்ளர் வைப்பவனும் அவனுக்கும் பின்னால் தண்ணீர் மட்டுமே வர வேண்டும் என்று‍ சொல்லியிருந்தது.

”அய்யே… எலையை மட்டும் போடும்மா. விட்டா, நீயே சோத்த பெசஞ்சு‍ ஊட்டி‍விட்ருவ போல” – யாரோ ஒருத்தர் கேலி பேச பாக்கியம் சிரித்துக்கொண்டே கடந்துபோனது. இலை போட்டு‍ முடித்ததும் தக்காளி சூப், அல்வாவை மட்டும் உள்ளே அனுப்பியது. மற்ற அயிட்டங்கள் முட்டி‍ மோதிக்கொண்டு‍ நின்றன. ஒரு‍ வரிசை முடிந்த பிறகு‍ ஒவ்வோர்‍ அயிட்டமாக வரச் சொன்னது‍ பாக்கியம். ”சப்ளை பண்ணும்போது‍ யாரும் முட்டி மோதி, சிந்திச் சிதறி இலையில் விழக் கூடாது. ஒவ்வொண்ணா போனா ஒவ்வொரு‍ பண்டத்தையும் ருசிச்சு‍ப் பாப்பாங்கல?” இது‍ ஏதோ புதுவிதமான சப்ளையாக அந்தப் பையன்களுக்குத்‍ தெரிந்தது. தங்களது‍ கல்லூரியில்கூட இப்படிச் சொல்லித்தரவில்லை.

உள்ளே அடுக்களையில் சாதத்துக்கு‍ உப்பிடும்போது‍ உலை நீரையும் அள்ளி சுவைத்துப் பார்த்தார் சேது. கொதிநீரில் அயிரை மீன்களைப்போல குதியாட்டம் போட்டுக்கொண்டிருந்த அரிசியிலும் உப்பு இல்லை என்று‍ திடமாக அறிந்த பின் ‘நாலு படிதான…’ என எச்சரிக்கையுடன் கேட்டு‍, மூணரை கைப்பிடி‍ உப்பு போட்டார். ‘எப்பையுமே ஒரு‍ கைப்பிடி‍ கம்மியாத்தே போடுவேன்’ என்று‍ சொல்லிக்கொண்டார்.

சப்ளை ஹாலில் பாக்கியத்தின் நிதானத்தைக் கவனித்த ஒருவர், ”சாப்பாடு‍ ஏதும் ஆகலையாம்மா?” என்று நறுவிசாகக் கேட்டார்.

”விசேஷ வீட்டுக்காரர், இவங்களுக்கு‍ சாப்பாட்டு‍ பேட்டா காசு‍ தந்திருக்க மாட்டார் போல!” என்று மற்றொருவர் சொல்ல, பாக்கியம் சின்னதாகச் சிரித்துக்கொண்ட வேளையில், ”பாக்கியத்தக்கா உள்ள வாங்க… சாதத்தை ஒடச்சு‍ எடுத்துட்டுப் போங்க” – சாரதியின் குரல் சப்ளை ஹாலில் கேட்டது.

சிகரத்தைத் தொட்ட பனியைப்போல பாக்கியத்தின் உள்ளம் குளிர்ந்தது. விறு‍‍விறு‍வென அடுக்களைக்குள் நுழைந்தது. அங்கே சாதத்தை கீழே இறக்கி வைத்துவிட்டு‍ இரும்புக் கரண்டியால் அடித்துக் கிளறி பேஷனில் எடுத்துப் போட்டார் சேது. பேஷனிலிருந்த சாதத்தை நால்வரும் ஒரு‍ பருக்கை எடுத்து‍ சுவைத்துப் பார்த்தனர்.

பெரும் திருப்திக்கான சின்ன ரேகையைக்கூட முகத்தில் காட்டிக்கொள்ளாமல், ”சரி எல்லாரும் போய் சப்ளையைப் பாருங்க” என்று சேது‍ அத்தனை பேரையும் அனுப்பிவிட்டு‍ அடுத்தடுத்த உலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார். இரண்டாம் பந்திக்கெல்லாம் மூன்றாம் அடுப்பிலும் அரிசி வெந்து‍ சாதமாகியிருந்தது.

”பக்கத்து‍ மண்டபத்துல யார் வேல?” – பாக்கியம், சாரதியிடம் கேட்டது. ”ஒருவேளை நம்ம வேலையைக் கெடுக்க அடுத்த சமையலாள் வந்து‍ உப்பு போட்டுவிட்டதோ?”

”அப்டி‍ என்னத்துக்கு‍ யோசிக்கிற பாக்கியம், நாமே தவறுதலாப் போட்ருக்கலாம். விட்ரு… எங்குட்டோ சரியாயிருச்சுல்ல!”

”நாங்கூட சாம்பார் ரசத்துல சுடுதண்ணி வெளாவிரலாம்னு‍ பாத்தேன்” என்றான் லட்சுமணன்.

”நல்லவேள உள்ளதும் கெட்டுருக்கும்!”

”வடி‍கஞ்சி ஊத்துனா?”

”நீ என்ன லூஸாடா?”

”சோத்துல இருக்குற உப்பு வடிகஞ்சில இருக்காதா? மொத்தத்துக்கு‍ அடி‍ வாங்கியிருப்போம்!”

நால்வரும் சிரித்தனர்.

வேலை முடிந்து‍ அரிசி, பருப்பு, தேங்காய் பழங்களோடு‍ தாம்பாளத் தட்டில் வைத்துச்‍ சம்பளத்தைக் கொடுத்தனர். கும்பிட்டு‍ வாங்கிக்கொண்ட சேது‍, 1,500 ரூபாயை வீட்டுக்காரரிடம் திருப்பிக் கொடுத்தார்.

”எதுக்கு?”

”ஒரு‍ தப்பு நடந்து‍போச்சுங்க… ஒரு‍ சிப்பம் அரிசி வீணாப்போச்சு. அது‍ என்ன வெலைனு‍ தெரியல!” என நடந்ததைச் சொன்னார்.

”பரவாயில்ல… டயத்துக்கு‍ மிஸ் பண்ணாம சமாளிச்சுட்டீங்கள்ல. பணத்தை வெச்சுக்கங்க. ஒரு‍ சிப்பம் சேத்து‍ செலவாச்சுனு‍ நெனச்சுக்கிறேன்!” என்று‍ நீட்டிய பணத்தை அவரது‍ சட்டைப்பையில் வைத்தார்.

”சரி… அந்தச் சாப்பாட்டை என்ன பண்ணீங்க?” – ரகசியமாகக் கேட்டார்.

”உப்பில்லாப் பண்டம்…” தயக்கத்துடன் இழுத்தார் சேது.

”குப்பைக்குப்‍ போயிருச்சா? ஆனா, இது‍ உப்பு கூடுன பண்டம்!”

”அண்ணே… எதுவுமே கூடுனாலும் தொந்தரவு, கொறஞ்சாலும் சிக்கலு!” – நச்சென்று பாக்கியம் பேச்சை முடித்துவைத்தது.

– நவம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *