கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 1, 2021
பார்வையிட்டோர்: 3,129 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குவிந்த விரல்கள் வழியாக இழைகள் வழிந்தன. பாற் குடம் உடைந்தாற்போன்று சன்னதி முழுதும் பரவிய கோலத்தின் மையத்தில், தூய வெள்ளையில் அச்சிற்றுரு. ஒரு பிரும்மாண்டமான மலர் தளையவிழ்கையில் அதன் நடுமொட்டுப்போல் தோன்றிற்று. அங்கிருந்து நீண்டும் குறுகியும் இழைகள் பெருகி, பிசகாத வளைவுகளிலும் வட்டங்களிலும், நீள் கோடுகளிலும் வீசி, விசிறிப் படர்ந்து முடைந்து மேலும் மேலும் அடர்ந்தன. அத்தனை நெருக் கத்திலும் துளிக்கூடச் சிக்கலற்ற, தெளிவான அவற்றின் தனித்தனிக்கதிகளை வியந்து நின்றான். என் கோணங்களையும் சட்டங்களையும் கொண்டு கூட, இந்தக் கமான் களையும், சுழிகளையும், பாய்ச்சல்களையும், நுட்பமான சந்திப்புகளையும், பிரிவுகளையும் என்னால் அமைக்க முடியுமோ? இத்தனைக்கும் ப்ளான்கள் தான் என் படிப்பு, என் பிழைப்பு.

அவள் நெஞ்சில் அக்கோடுகள் கீறுகையில் அவளையு மறியாது, கை நெஞ்சுக்குழியைத் தொட்டுக் கொண்டது. பீதி. இது கோலமல்ல; காடு. நள்ளிரவில் நிலவு நிழலில், இலைகளின் நெய்வில், விலங்குகளின் விழிகள். இலைமறை வில், இரையைச் சிந்திக்கும் குரூர விழிகள். என்ன சிந்திக்கின்றன? ஏன் சிந்திக்கின்றன? இந்த ராக்ஷஸக் காடு இப்படித் தன்னை கடை பரப்பி, தன்னைப் பார்ப்போரின் அந்தரங்கங்கள் தன் மேல் கவிழ, தான் மட்டும் தன் குடலில் தன் ரகஸ்யத்தைப் பத்திரமாய் அடக்கிக் கொண்டு என்ன சிரிக்கிறது? நடுக்கடலில் விரித்த வலைபோல் இம்முடைய லுள், சிந்தனையின் உருக் கூட நழுவும் என்ன என்ன எண்ணங்கள், ஏக்கங்கள், சீறல்கள், சிக்கித் தவிக்கின்றன? சன்னதியில் விரித்த இவ்வலை, ஏதோ ஒரு வகையில் உள்ளிருக்கும் மூர்த்தத்தையும் தன்னுள் வலித்ததோ?

இருந்தாற்போலிருந்து பார்வையின் எதேச்சையில், இழைகளின் சேர்க்கையில் ஒரு முகம் புனைந்து, கோலத்தின் அடைப்பினுள் பிரிந்து தனித்தது. சுவரில் கறைச் சாந்தில், வானத்தில் முகிற் குழைவில், உருப்பிதுங்கல் போல் கண்ணுக் குப் பட்டதென்னவோ, கன்னங்களின் கோடும், மோவாயின் உருட்டும் தான். மற்றதை உணர்வின் அடிவாரத்தில் புழுங்கும் இஷ்டம் இட்டு நிரப்பி, முகம் அடையாளம் கொண்டதும், அடிவயிற்றில் கண்ட பொறி திரியாகி ‘சுர்ர்ர்’ ரென்று நெஞ்சைத் துரத்தியடைந்து அங்கிருந்து பெரும் வீறலாய்க் கிளம்பிற்று.

“பா பூ!”

அலறிய பின் தான் உணர்ந்தாள், தான் அலறியதை. நல்லவேளை; சன்னதியில் வேறு யாருமில்லை. முன்றானையை வாயில் திணித்துக் கொண்டாள். வெடிக்கவோ எரியவோ வழியடைத்துப் போன ஜ்வாலை, விழிவழி உடைந்து சரிந்தது.

‘நீ இட்ட கோலத்தை அளிச்சு
அதை உன் நெஞ்சுலே எளுதவே வாரான்
இன்னோடு மாதம் அஞ்சுக்கு ரெண்டு
மகிழ்வாயம்மா கையில் ஏந்தி’

அண்டை வீட்டு, எதிர்வீட்டுச் சினேகிதிகள் காட்டின தால், அவர்கள் கட்டாயத்தில் தானும் நீட்டிய கைமேல் மந்திரக்கோலை வைத்து, மைதீட்டிய விழிகள் அவள் முகத்தைக் கவ்வ, மருள் கண்ட சோசியக்காரி’ சொன்ன சொல் பலித்த சுருக்கென்ன, பலித்த கனவு பொய்த்த சுருக்கென்ன? ‘பாபூ. நீ எப்படிடா சொல்லி வெச்சாப்போல கோலத்தை அழிச்சே? நீ உண்டாவதற்கு முன்னேயே அவள் சொன்னதைக் கேட்டிண்டிருந்தியோ? கோலத்தைக் கண் டாலே உனக்கு என்னடா பண்ணித்து? அது உன்னை என்ன சொல்லி அழைச்சுதுடா?’

கோலத்தைக் கண்டால் போதும், தவழ்ந்தோடி வந்து அதன்மேல் உருள்வான். தொப்பையில் கோலத்தின் பதி வைத் தொட்டுத் தொட்டுச் சிரிப்பான். ‘பாபூ, பாபூ! நீ கோலத்தில் விளையாடி எங்களைக் கோலம் காட்டி, என் கண்ணே, கோலத்திலேயே மறைஞ்சுட்டியேடா!’

‘ஷ்ஷ் -‘

திடீரெனப் புரியாததோர் சீற்றம் அவளைப் பற்றிற்று. வெறியானாள். திடுதிடுவென ஓடிவந்து. காலால் கோலத்தைப் பரபரவெனத் தேய்த்தாள்.

‘கோமதி! கோமதி!!’

ஆனால் அவளுக்கு எங்கிருந்தோ மிருகபலம் வந்து விட்டது. அவன் கட்டிலிருந்து திமிறினாள். வெட்கமும் கோபமும் அவனைப் பிடுங்கின. மூன்றாம் பேர் எதிரில் தன்னோடு மல்யுத்தம்.

‘பளீர்!’ சன்னதி அதிர்ந்தது. துரிஞ்சல்கள் மிரண்டு பறந்தன. அவள் ஆவேசம் சட்டென அடங்கிற்று. விழிகள், திகைப்பில் மங்கின. கன்னத்தைத் தடவிக் கொண்டு அவள் அனாதையாய் நிற்பது கண்டு வயிறு ஒட்டிக் கொண்டது. அவன் கண்கள் துளும்பின.

‘என்னை மன்னிச்சுடு!’

அங்கிருந்து பதில் ஏதுமில்லை.

ஏதேதோ சமாதானம் பேச எடுத்த வாயில் திடீரென வார்த்தைகள் மறந்து போயின; அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது.

அங்கு அவர்கள் மூவர் தவிர யாருமில்லை.

அமைதி தன் வெண் சிறகுகளை விரித்துக் கொண்டு இறங்கி மெத்தென்று அணைப்பதை உணர்ந்தான். வலியின் நெரிவுகள் கலைந்து இதவு கண்டு கோமதியின் முகம் குழந்தை முகம்போல் ஆவது கண்டான். இங்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது?

கண்ணை கசக்கிக் கொண்டான்.

அங்கு அவர்கள் இருவர் தவிர யாருமில்லை. கண்டதென்ன, கானல் நீரா?

காலடியில் பிரும்மாண்டமான கோலத்தின் மையத்தில் ஒரு மொட்டு, தன் புது மலர்ச்சியில் புன்னகை புரிந்தது.

***

அவர்கள் தங்கிய வீடு, சன்னதித் தெருவிலேயே. வாசற் குறட்டில் வீட்டுக்காரர் தேங்காய், வெற்றிலை. பழம், பூஜை சாமான்களைக் கடை போட்டு உட்கார்ந்திருந்தார். அவன் குஞ்சுத் திண்ணையில் சாய்ந்திருந்தான்.

அங்கிருந்து சொர்க்கவாசல் வழி :

திருக்குளம் :

அதைச் சுற்றியோடிய மண்டபம் :

அடுத்து த்வஜஸ்தம்பம்:

நந்திதாண்டி உள்பிரகாரத்தின் வாசலளவுக்கு வாசலை அலங்கரித்த ப்ரபை பூரா மிதக்கும் அகற்சுடர்கள் –

அதற்கப்பால் பார்வை எட்டவில்லை. உள்ளூரிலிருந்தும் தங்களைப்போல் வெளியூரிலிருந்தும் வந்து வழிபடு வோரின் பரம்பரை பரம்பரையான முறையிடுகளின் மூட்டத்தில், கர்ப்பக்கிருஹத்தில் காலத்துக்கும் தேங்கிப்போன இருளோடு இருளாய். இருளுக்குச் சாட்சியாய், கூழையாய். அங்கு ஏதோ குழம்பிற்று.

ரேழி விசுப்பலகையில், அரை மயக்கத்தில் கோமதி ஏதோ முனகுகிறாள். அவளறியாது மூச்சு தேம்புகிறது.

துக்கம் மறக்க வந்தோம். இடம் மாறினதால், துக்கம் மறக்க முடிந்ததோ? துக்கத்தினின்று தப்ப முடிந்ததோ? ஏன் முடியவில்லையென்று இப்போ தெரிகிறது. பெற்ற வயிறைத் துக்கம்பட்ட இடத்திலேயே விட்டுவர முடிந்ததோ?

இருந்தாற் போலிருந்து, கண்ட கனவின் மீட்சி போல் மேலிமையுள், கோலத்தினின்று ஓர் உரு நிமிர்ந்தது. சின்னப் பொம்மையின் சிறுகூடு . உடுத்திய தூயவெள்ளையோடிழைந்த வெள்ளைத் தாழம்பு நிறம். கால், கை, நகங்கள். உதடு , செவிமடிகளின் ரோஜா இதழ்த் திட்டுகள் கவனத்தைப் பறித்தன. கன்னத்தின் பீங்கான் வழுவழுப்பின் கீழ். மாதுளை விதையுள் உறைந்த ரஸ ஓட்டம் போல் கமழும் ரத்த காந்தி. கழுத்தின் பால்வெளுப்பில் பின்னியோடும் பச்சை நரம்பு .

முகத்தில் புன்னகைகூட இல்லை; ஒரு அமானுஷ்யத் தெளிவு. என் பிம்பமே காணுவேன் போல் நெற்றியில் தனித் துலக்கம், என் ஏக்கத்தில், அப்பார்வை என் மேல் என்று நான் என்னை ஏமாற்றிக் கொள்ளலாமேயன்றி, உண்மை யில் அது எதிலுமே ஊன்றவில்லை. ஆகாசத்திற்கு விழுங்கல் உண்டு, பார்வையேது? பார்க்கப்போனால் நானே அவ்விழி களுள் புகுந்துவிட்டேனா?

உடல் புல்லரித்தது. இனம் தெரியாத வேட்கையில் இதயம் உரிந்தது.

மறுபடியும் காண்பேனா? நாளையும் இன்றுபோல் இருக்குமோ? அமைதியின் வெண் சிறகுகள் திரும்பவும் என் மேல் இறங்குமோ?

“இன்று நாங்கள் கோவிலில் ஒரு கோலத்தைப் பார்த்தோம்” என்றான்.

“வேப்பிலைப் பாட்டியின் கோலங்கள் இந்த ஊரில் பார்க்க வேண்டிய காட்சிகளில் ஒன்றுன்னா! கோவில்; கோவிலில் கோலம்!”

மூச்சுத் திணறிற்று. “பாட்டியா? நீங்கள் யாரையோ சொல்கிறீர்கள்!” முட்ட முட்ட மதித்தாலும் முப்பத்தி அஞ்சுக்கு மேல் ஏறாது. பாட்டியாம்! சிறு கோபம் மூண்டது.

“ஸ்படிகமா இருக்காளே, அந்த அம்மாதானே?”

இந்த அடையாளத்தை அவனால் தப்ப முடியாது. தொண்டையில் அடைத்த எச்சிலை விழுங்கிக்கொண்டு, தலையை ஆட்டினான்.

“வேப்பிலைப் பாட்டியே தான். என் தகப்பனாரின் கணக்குப்படி ஆனிக்கு அறுபத்திமூணு பூர்த்தி?”

அந்த அதிர்ச்சியிலிருந்து தேற அவனுக்கு அவகாசம் கொடுக்கவோ, அல்லது தானே சிந்தனையில் ஆழ்ந்ததனாலோ, சற்று நேரம் தாழ்த்தி வீட்டுக்காரர். “வேப்பிலைப் பாட்டியும் இந்த ஸ்தல மகிமையில் சேர்ந்தவள் தான்” என்றார்.

உள்ளே விசுப்பலகை நொடிக்கிறது. கோமதி எழுந்து உட்காருகிறாள்.

“ஏன், அந்தக் குடும்பமே இந்த ஊரின் பெருமை தான்.”

என் தகப்பனார் சொல்வார். ரங்கசாமி வாத்தியாரைத் தெரிந்தவர்கள், அவர்கள் வீட்டு வாசற்படித் தரை மண்ணைக் கிள்ளிக் கிள்ளி நெற்றியில் இட்டுக்கொண்டே தரை பள்ளமாய்ப் போயிற்று என்று. என் தகப்பனார் ஒரு கவி.

‘இன்னிக்கு ஸ்பெஷல் க்ளாஸ் வெச்சேளா? இன் னிக்கு நீங்க முழுசா வீடு போய்ச் சேருவதைப் பார்த்துடறேன். இன்னி ராத்திரி மாமி மடிக்சுக் கொடுக்கிற வெற்றிலையைக் கடிச்சு முழுங்க உமக்குப் பல்லிருக்கா, பார்த்துக்குவம் வோய்!’

என்று நேருக்கு நேர் ஹெட்மாஸ்டரிடமே துளிர் மீசையை முள்ளாய்த் திருகும் பின் பெஞ்சு மைனர்கள் எல்லாம் . ரங்க சாமி வாத்தியாரின் வகுப்பில் மகுடிப் பாம்பாய், வாயைப் பிளந்தபடிப் பாடம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

இத்தனைக்கும் அவர் எந்தப் பையனையும் தொட்டது கூட இல்லை. யார் உடலும் தன்மேல் பட்டால் கூட அவருக்குப் பிடிக்காது. கூட்டங்களை அறவே விலக்குவார். சுள்ளென்று ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்ததில்லை.

சுவாமி தரிசனம் பண்ணிவிட்டு — அர்த்தஜாம அடுக்கு தீபாராதனை பார்த்த பிறகுதான் ராச்சாப்பாடு – இந்த வழியாத்தான் வருவார்கள். முன்னாலே மாமா, அவர் நிழலை மிதிக்காமல், நிழலை ஒட்டினாற்போல், பின்னால் மாமி. இருசாரியிலும் திண்ணையில், குறட்டில், தெருவில் கயிற்றுக் கட்டிலில் பேசியபடி – காற்று வாங்குவோர் – சின்னவா பெரியவா அத்தனை பேரும் வாயடைச்சுப்போய் எழுந்து நிற்பார்கள். அதையும் அவர் கண்டுக்க மாட்டார். அவர் பார்வை நேர்ப் பார்வை; பாட்டை ராஜபாட்டை.

இப்பவும் கோவிலுக்குப் போறாளே, கை கோர்த்துண்டு போனால் தான் உலகத்தின் கவனம் ஒன்பதினாயிரம் ‘காண்டில்பவர்’ இவாள் மேல் விழும் என்றும் நான் என்னவோ தேங்காய் பழம்தான் விற்கிறேன். ஆனால் இந்தத் தெருவரங்கில் நான் எத்தனையோ நாடகம் பார்த் தாச்சு. அக்ரமங்களைப் பார்த்துப் பார்த்தே மதில் மாதிரி சதையடைச்சுப்போன இந்தக் கண்ணோரத்தில் அத்தனை வருஷங்களுக்கடியில் எங்கோ ஒதுங்கி, மாமாவும், மாமியும் அர்த்த ஜாமத்திலிருந்து திரும்பிவரும் காட்சி, இப்போ நினைச்சுப் பார்த்தால் கூட குளுகுளுக்கிறது.

அப்படி ஒரு சக்தி அந்த மனுஷனிடம் இருந்ததென்று கேட்டால் இப்போக்கூட எனக்குச் சொல்ல வரல்லை. அது உடலோடு பிறந்த மகிமை . முக்திக்கு முன் இத்தனை என்று விதித்திருக்கும் பிறவிக் கணக்கைக் கழிச்சு எடுத்த ஒரு ஜனிப்பு.

இது கூட என் தந்தையின் பாஷைதான்.

‘ரங்கசாமி வாத்தியார் ஒரு மகாபுருஷன்’ என்று சொல்லிவிட்டு உடனேயே என் தகப்பனார், ‘புருஷன்’ என் கிற பதத்திற்கு முப்பது – பிரிவினை, ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாகப் பதினெட்டு பொருள்கள், சில சந்தர்ப்பங் கள், சான்றுகள் காட்டி மகிழ்வார். என் தகப்பனார் தமிழ் வாத்தியார் மட்டுமல்ல; சமஸ்கிருத பண்டிதர்கூட.

‘ஸாரும் மாமியும் எப்போது இந்த ஊருக்கு வந்தார் கள். போயும் போயும் இங்கு தானா வரணும்? அவருடைய மேதைக்கு இன்னும் எவ்வளவோ பதவியில் அவர் இருக்கலாமே?

எங்களுக்குள்ளேயே இந்தக் குமைக்சல்களுக்குப் பதில் கிட்டியதேயில்லை. ‘ஸாரை கேட்க யாருக்குத் தைரியம்?

ஒரு தடவைகூட தபால்காரன் அவர் வாசற்படியை மிதித்ததில்லை மாமியோ மாமாவோ சேர்ந்தோ தனி யாவோ விடு முறையென்றோ விசேஷ மென்றோ ஊரை விட்டுப் போனதில்லை. மாமிக்கும் மாமாவுக்கும் உற்றார், உறவினர், மாற்று முகம், எல்லாம் – தங்களுக்குத் தாங்களே; ஒருவருக்கொருவர் சிறைப்படவுமில்லை.

எனக்கும் உனக்கும்
நமது நமது என
எதை எனக்கு எனக்கெனக் கொண்டோமே
ஆனாலும்
உன்னிலும் என்னிலும்
உன்னையும் என்னையும்
இன்றி
கண்டது பின்னையும் என்?
கண்டதும் வேண்டாம்
கொண்டதும் வேண்டாம்
உன்னையும் என்னையும்
நம்மிலிருந்து
நான் நான் எனது என
விண்டதும் வேண்டாம்

எங்கு படித்தேன்? ஆ, நினைவு வருகிறது! என் தகப்பனார் இறந்தபின் அவர் சொந்தங்களைக் கிளறுகையில் கிடைத்த ஒரு குறிப்பு.

“தன் குழந்தைகளை இங்கு தான் மாமி பெற்றாள். இந்த வீட்டில், இந்த ஒடுங்கையறையில்” என் தாய்தான் துணை .

முதலில் பெண். ஐந்து வருடங்களுக்கப்புறம் ஒரு பிள்ளை. கச்சிதம்.

‘வாத்தியார் பிள்ளை மக்கு’ என்று பெரியவாள் வாக்கு பொய்க்க, ரங்கசாமி வாத்தியார் மகன்; வீணாகாமல் இருக்க, ‘என் மகன்’ என்பார் என் தகப்பனார்.

தகப்பன் மகனை மெச்சமாட்டான்.
நானும் மெச்சும்படியாயில்லை.
குற்றம் யாருடையதோ?

வருடா வருடம் வகுப்பின் பரிசுகள் ரங்கசாமி வாத்தி யார் பையனுக்கே சாஸனமாகி விட்டாற்போல், அவனையே போய்ச் சேரும். பையன் படிப்பில் தான் முதல் என்றால் விளையாட்டிலுமா அப்படி? நியாயத்திலும் அக்ரமம் என்றால் அதுதான்!

பதினாலு வயதில் பையன் மெட்ரிகுலேஷனில் பள்ளிக் கூடத்திற்கு பெருமையோடு தேறினான். பயல் மிட்டா யாட்டம் இருப்பான், சின்னதாய். ஆகிருதியில்லை. சிரமப்பட்டுத்தான், வயதுக்கு விலக்கு வாங்கி, காலேஜில் சேர்க்க முடிந்தது. அப்போ நான் எட்டாவது வகுப்பில் தோப்புக் கரணம் போட்டுக் கொண்டிருந்தேன்.

ஆசைக்கு ஒரு பெண்; ஆஸ்திக்கொரு பிள்ளை.

ஒரு சமயம் பாடம் கேட்க நாங்கள் நாலைந்து பையன்கள் ‘ஸார்’ வீட்டுக்குப் போயிருந்தோம். ஆஸ்தியைப்பற்றி ஏதோ பேச்சு வந்தது. அவருடைய கள்ளப் புன்னகையில் ஒளி வீசிற்று. யாவும் கடந்த சிரிப்பும் கள்ளச் சிரிப்புத்தான்.

“என் ஆஸ்தியெல்லாம் என் குருவின் அருளில் என் சக்திக்கெட்டிய அளவுக்கு எனக்குக் கிட்டி நான் சொல்லிக் கொடுக்கும் இந்தப் படிப்புத்தான். இது என் பிள்ளைக்கு மாத்திரமல்ல; எல்லோருக்கும் பொதுச்சொத்து. பற்றிக் கொள்வது அவனவன் சமர்த்து. நேரமில்லை; ஆகையால் சுருக்க! சுருக்க!”

என்ன ‘சுருக்க?’ ஏன் ‘சுருக்க?’

யார் கேட்பது?

ஸாரிடம் ஒரு விசேஷம். அவர் வகுப்பில் பையன்களின் கேள்விகள் இராது. அவர் பாடம் சொல்லிக்கொண்டே வருகையில், கயிற்று நுனியைத் தெரிந்தவன் பிடித்து இழுத் தால் அவிழும் முடிச்சுகள் போல் சந்தேகங்கள் தாமே தெளிந்துவிடும் அப்படியும் மீறி ஏதாவது கேட்டால் “உனக்கு இப்போதைக்கு அது தெரியவேண்டிய அவசியமில்லை?” என்று சொல்லி விடுவார். அப்படியும் மடக்கினால் ஊமையாகி விடுவார்; முகம் ஒரு தினுசாய், கல்லாய் இறுகிவிடும். அவரைக் கேள்வி கேட்க மனம் அஞ்சும்.

என்னது ‘சுருக்க?’

யார் கேட்பது?

இப்போ தெரிகிறது. கேள்விக்குப் பதில் அவர் புன்னகை யில் எங்கள் கண்ணெதிரேயே ஒளிந்து கொண்டிருந்தது.

ஒருநாள் வகுப்பில் பாடம் நடந்து கொண்டிருக்கிறது. என் தகப்பனார் அன்று லீவு. அவர் க்ளாஸை ரங்கசாமி வாத்தியார் எடுத்துக் கொண்டிருந்தார்.

அயோத்யா காண்டம். ராமன் வனம் புகும் கட்டம் மகன் காட்டுக்குப் போயே விட்டான் என்ற சேதி கேட்ட தும் தசரதன் – ஸார், கைகளை விரித்தபடி நாற்காலியி லிருந்து எழுந்துவிட்டார்-‘ராமா! ராமா! ராமா!”

அவ்வளவுதான்.

பஸ்மம் குமுங்கினாற்போல் எங்கள் கண்ணெதிரே குன்றிப்போய், குறுகி மேஜை மீது குப்புறக் கவிழ்ந்து விட்டார். அவரிடமிருந்து எங்களையும் ஊடுருவிய பரவசத் தில் உணர்ச்சி வேகம் என்று நினைத்தோம். சற்று நேரம் பொறுத்து நான் தான் எழுந்து கிட்டப் போய், ‘ஸார், ஸார்’ என்று மெதுவாய்க் கூப்பிட்டேன் . பதில் இல்லை. தொட்டுப் புரட்டினேன். முகம் துவண்டு சாய்ந்தது. கடை வாயில் எச்சில் வழிந்தது. கண், கண்ணாடியாகிவிட்டது.

மாமி தைரியமாயிருந்தாள் என்றுதான் சொல்ல வேணும்.

தான் கலங்கினால், குழந்தைகள் இடிந்துவிடுமோ எனும் பயம்.

கல்யாணத்துக்குப் பெண் காத்திருக்கிறாள்.

காலேஜில் பையன் படிக்கிறான்.

வளரும் பயிர்கள்.

தன் துயரத்தை மூட்டை கட்டி – இல்லை, அப்படியே விழுங்கிவிட்டு இனி வேண்டியதைக் கவனிக்க ஆரம்பித்தாள். அசல் வீட்டு, எதிர்வீட்டுப் பெண்டிர், ஏன். என்னோடு கூட பேசாத மாமி என்னைக் கூப்பிட்டு, என் தகப்பனாரை அழைத்து வரச் சொன்னாள். இருப்பதற்குள் என் தகப்ப னார் தான் அவள் கணவருக்கு நெருங்கியவர். மாமி அப்பா வுக்குப் பெண்ணாயிருக்க முடியும். சன்னதியிலிட்ட திரை பின்னிருந்து வரும் அசரீரிபோல், கதவின் பின்னிருந்து கேட்கும் மாமியின் அமைதியான குரலும், அனுமார் போல் கைகட்டி அங்கங்கள் அனைத்தும் செவியாய் மாறி அப்பா நிற்பதும் – பார்த்தால் தான் உணரமுடியும்.

என் கேளாத கேள்விக்குப் பதில் போல், அக்ஷதையை என்மேல் தெளித்து தனக்கும் போட்டுக் கொள்வதுபோல் “வாத்தியார் பத்னிடா” என்று சொன் னதையே சொல்லிக்கொண்டிருப்பார்.

மாமா போனபின் மாமி கோவிலுக்குப் போவதில்லை. அவளை வீடு விழுங்கிவிட்டதோ என ஐயுறும்படி, வாசலில் கூடத் தென்படுவதில்லை. அவள் முகம்கூடச் சிலருக்கு மறந்து போயிருக்கும் என்றால் மிகையில்லை. காரணமாய் காரியமாய், கேட்க வேண்டியவர்களுக்கு மட்டும் குரல் கேட்கும். அவர்களுக்கு மாமி இன்னும் இருக்கிறாள் என்று தெரியும்.

வாசலில் சாணி தெளித்ததெப்போ?

கோலமிட்டதெப்போ?

யாரும் அறியமாட்டார். ஆனால் கோலத்தைப் பார்த்தவர்கள் யாரும் அங்கு ஒரு நிமிஷம் நின்று பார்த்து விட்டுத் தான் நடப்பார்கள். ஒருநாள் போல் மறுநாள் இருக்காது.

சில விஷயங்களில் வருஷங்கள் கழிவது தெரிவதில்லை . அடி நாக்கில் ஊறுகாய் வண்டலை வைத்து இழுத்தாற் போல், ஏதோ ஒரு அடையாளம், அற்ப சம்பவத்தில் , திடீரென்று ஒருநாள், “சுறீல்” என்று உறைக்கிறது.

அதுமாதிரி, மாமி வாசலில் கோலம் திடீரென ஒருநாள் பெரிதாகி, தெருவையடைத்து, அதில் செம்மண் பளிச் சென்றது.

“அங்கச்சிப் பாப்பாடா! கடிக்காதே!” என்று சொல்லி வேப்பிலை மாமி என் வாயுள் திணித்த கற்கண்டை அடக்கியபடியே, நேற்றிரவு படுத்து, மறந்து, உறங்கிப் போய், இன்று காலை நாக்கில் தித்திப்புடனேயே எழுந்த மாதிரி இருக்கிறது.

அதுக்குள்ளேயா? அபிதாவுக்கா?

பையன் இந்த ஊர்ப் பையன் தான். எங்களுக்குத் தெரிந்த பையன் தான். எட்டிய உறவுகூட . கொஞ்சம் பசை யுள்ள இடம் தான். என் தகப்பனாரின் சிரத்தையில் கைகூடிய சம்பந்தம். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதனால் வாக்குவாதம் கூட.

“நான் நாலுபேர் மாதிரி காசுக்கும் சீருக்கும் ஆசைப்படறேனா?”

“ஏன், ஆசைப்பட்டுத்தான் பாரேன்!”

“இந்த வீட்டில் பிறந்த அந்தப் பெண், இந்த வீட்டை மிதிச்சால் ஆகாதா? ”ஓஹோ’ன்னு வாயைப் பிளக்க இல்லாவிட்டாலும் ‘ஊஹூம்’னு உதட்டைப் பிளக்க இல்லாமல், வேப்பிலை உள்ளத்துக்கு வஞ்சனை பண்ண மாட்டாள். நமக்கு ஒண்ணு இருக்கே, உங்களுக்குக் கண் அவிஞ்சு போச்சா? அவனைக் கண்டாலே உங்களுக்கு இப்படி வேரோடு வேகணுமா? வேகணுமான்னு கேக்கறேன்?”

“குந்தளம், சும்மா அடுக்கிண்டே போகாதேடீ! தாய்ப் பாசம் உனக்குத் தான் கண்ணை மறைக்கிறது. எத்தோடு எது பொருந்தும் என்கிற பகுத்தறிவு நம்மைவிட்டு ஓடிப் போய்விடக் கூடாதடீ! நாளை நான் உலகத்துக்கு ஜவாப் சொல்லியாகணும். நம் பிள்ளையைப் பற்றிய நம் சண்டை இன்றையச் சண்டையா, நேற்றையச் சண்டையா? கலியாண சமயம். நாம் விரதம் பண்ணி தாரை வார்த்துக் கொடுக்கும் வரை ஒற்றுமையாயிருப்போம். கையைப் பிடித்துக் கொடுத்து. கோத்திரத்தை மாற்றும் வரை தான் வரம் கேட்கிறேன். பிறகு நான் தேவையில்லை. அப்புறம் அப்பளாத்துடன் சேர்த்து என்னையும் நீ பொரிக்கலாம்!”

என் தகப்பனார் இருக்காரே – இல்லை இருந்தாரே , அவர் மஹா மஹா – என்ன சொல்வது? தெரிய வில்லை. நாக்கு தோற்றுப் போச்சு, அப்படியே விட்டுவிடுகிறேன்.

அம்மா சொன்னது போல், குடும்பத்தை வாயையும் வயிற்றையும் இழுத்துக்கட்டி நடத்தியது போக, மாமாவின் இன்ஷூரன்ஸ், சம்பளப் பிடிப்பில் மிச்சத்துடன் தன் காது, மூக்கு, கழுத்தில் இருந்ததையும் கழற்றி அதுவரை பெட்டி யில் வைத்திருந்ததைப் பெண்ணுக்குப் பூட்டி, கையில் இருந்த பண்டம் பாத்திரங்களைப் புதிசு பண்ணி இட்டு நிரப்பினாள், மாமி. போதும் போதாதற்கும், சரீர உபகாரத்திற்கும் ‘நான், நீ’ என்று ரங்கசாமி வாத்தியாரின் பழைய மாணவர்கள் முந்திக் கொண்டனர்.

எல்லாம் இருப்பவர்களுக்குக் குறைவில்லாமல், கலியாணம் செவ்வையாகத்தான் நடந்தது.

பொலபொலவெனப் புலரும் தருணம்
கொட்டு மேளம் கொட்டி முழங்குகையில் ப
ந்தலுள் வாசலையடைந்த பெண்கள் கூட்டத்தில்
புதுப் புடைவைகளின்
புசுபுசுவிலிருந்து
ஒரு ஒளி பிரிந்து
படி யெதிரில் நின்ற பரதேசி கைபிடித்து
ஓரங்கள் முள் கூராய்
இழுத்து மை தீட்டிய
இரு விழிகள்
ஒரு தரம், ஒரே தரம்
கைப்பிடித்தவனை மலர விழித்து
உடனே தாழ்ந்து
அபிதாவாய்
அமைந்ததும் எனக்கு அடிவயிறு ‘திக்’ கென்றது.
அது அபிதா தானே? தரிசனமா?
எனக்கே தெரிந்தது. இது எனக்கு எட்டாத கனவு.
இப்போ புரிந்தது. என் தகப்பனார் மஹா விவேகி.
இப்பவும் மாமி கண்ணில் படவில்லை.

மாமியின் வேலையே, முழுக் கவலையே சோடையே இல்லாமல் தன்னைத் துடைத்துக் கொள்வது தானா?

வேப்பிலை எங்கேடி? பெண்ணும் பிள்ளையும் சேர்ந்து மணையில் பார்க்க வேண்டாமா? இந்தச் சமயத்துக்கு எத்தனை நாளாய்க் காத்திருப்பாள்?”

அம்மாவுக்குக் குரல் கம்மிற்று. “வேப்பிலை மாமி கோவிலுக்குப் போயிருக்கா!”- ஒரு வாண்டு கீச்சுக் குரலில் கத்திற்று.

மாமா போன பிறகு இன்றுதான் மாமி கோவிலுக்குள் காலை வைத்திருக்கிறாள் – அம்பாளுக்கு நன்றி செலுத்த.

கோவிலுக்குப் போகாவிட்டாலும் மாமி மனசு எங்கே என்று தெரிகிறதா?

பெண்ணும் மாப்பிள்ளையும் கூடத் தவறாமல் கோவிலுக்குப் போவார்கள். நான் கடையில் உட்கார்ந்திருப்பேன்.

அவர்களிடையே தங்களை மறந்த ரகஸ்யம் அப்படி என்ன ஓயாமல் இருக்கும்? அவள் பக்கமாய் அவன் தலை சற்றுச் சாய்ந்திருக்கும். அவனை அண்ணாந்து பார்த்து மலர்ந்த அவள் முகத்தில், மணிக்கூண்டில் ஒளிக்கதிர் போன்று திடீர் திடீர் என உவகை பொங்கி மங்கும். பீறிடும் சிரிப்பை அடக்க இரு கைகளாலும் வாயைப் பொத்திக் கொள்வாள். கை மறைவினின்று கண்கள் பளபளவென எட்டிப்பார்க்கும். நெற்றிக் குங்குமம் கண்போல் உயிர்வீசும் அவர்களையறியாமலே தோளோடு தோள் இடிக்கும்.

இது விளம்பரமல்ல.

இடமும் வேளையும் பொருந்தி, பருவம் கண்ட நிறைவு , நியாயமாய், தைரியமாய், தாராளமான அளவில் பாத்திரம் மீறி வழியும் இளமையின் இயல்பு.

அப்போ நான் மாத்திரம் கிழவனா? இல்லை. வாசற் குறட்டில் தேங்காய் பழம் விற்றுக் கொண்டிருக்கிறேன்;

உலகத்தின் நடைப்பாதையில் உட்கார்ந்து – நின்று – உலகத் தின் நடப்பைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நான் கிழவனா? குமரனா?

கிழவன் தேவலை.

எனக்கு அப்பவே தோன்றும். தங்களிடம் இல்லாத எதைத்தேடி இவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள்? குறை பட்டவர்களுக்குத்தானே கோவில்?

பிறகு சேர்ந்தாற்போல் ஒரு வாரம் அவர்களை காணோம்.

வேளையே வெறிச்சிட்டது.

பிறகு ஒரு நாள் வீட்டுக்குள்ளிருந்து வெளி வருகையில் கடையண்டை நின்று அவள் மாத்திரம் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்தாள். முகத்தில் கவலை தோய்ந்திருந்தது. அப்பா ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஒண்ணும் நேராது, கவலைப்படாதே, அம்மா. மனிதன் என்று பிறந்தால் ஜுரம், தலைவலி, நோய் நொடி கண்டு தெளிந்து எழுந்திருப்பது எல்லாம் சகஜம்தானே? நம்மை இரும்பாலா அடித்துப் போட்டிருக்கிறது? கவலைப் படாதே, ஒண்ணும் நேர்ந்துவிடாது”

இதைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒவ்வொருவரின் சிறப்பு அல்லது அழகு ஒரு குறித்த சூழ்நிலையில் தான் பரிணமிக்கிறது. ஒரு ஒரு முகம் கோபத் தில் குறுகுறுக்கிறது. சில முகங்கள் பயத்தில் களை கட்டு கின்றன. அபிதா அப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்சையில் அவள் முகம். தோற்றம் முழுதிலுமே அமானுஷ்ய அழகு பொலிந்தது. ஆகையால் எந்த நிலை யில் ஒரு அழகு பரிமளிக்கிறதோ அதே சூழ்நிலையில் அந்த அழனக் கண்டு கொண்டிருக்க விரும்பும் எண்ணம் நல்லதா. கெட்டதா? ரஸிகத் தன்மையின் விபரீதமா? அல்ல. உண்மையே அப்படித்தானா? நீங்கள் தான் சொல்ல வேணும்.

திடீரென அபிதா என் அப்பா காலில் விழுந்து எழுந்தாள்.

“இப்போ நான் வாழ்வது நீங்கள் கொடுத்த வாழ்க்கை. அதை நான் காப்பாற்றிக் கொள்ள வேணும். ஆகையால் தேங்காயின் மூணு கண்ணும் முழுசாப் பார்த்துக் கொடுங்கள்”

தட்டை ஏந்தி, அம்பாளிடம் தன் பங்கு நியாயத்தைக் கேட்டு வாங்கிக் கொள்ளும் தீர்மானத்துடன், விர்ர்ரென்று அவள் நடந்து செல்கையில் – வருண ஜபத்திற்கு இலையில் அரிசியைப் பரப்பி, அதன் மேல் வைத்த தண்ணீர்க் குடத்தினின்று விசிறி உழும் மாவிலைக் கொத்துப் போல், பச்சைப் பசேலெனத் துல்லியமான ஒரு விறு விறுப்பு அவளிடம் மிளிர்ந்தது. முகத்தில் தனிக்களையும், மேனி மினுமினுப்பும்-

மறுபடியும் அதே, அர்த்தமற்ற பிதற்றலாய்ச் சந்தேகம் என்னுள் எழுந்தது; அபிதா என்கிறவளே நிஜம்தானா? அல்லது ஒரு தோற்றமா?

அப்புறம் ஒரு நாள் மாமி என் வீட்டுக்கு வந்திருந்தாள். நான் தேங்காய் பிடிக்கப் பக்கத்தூர்ச் சந்தைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன்.

அம்மாவின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு, “நீங்கள் தான் வரணும். எல்லாம் உங்கள் கைராசி. ஆசீர் வாதமாய்த்தான் இருக்கணும். அபிதாவை எடுத்துக் கொடுத்த உங்கள் கையே தான் அபிதாவுக்கும் பிள்ளைப் பேறு பண்ணிக் கொடுக்கணும்” என்றாள் மாமி.

ஓ!

சந்தை பூராச் சுற்றியும், தேங்காய் விலை தகையவில்லை. நேரமானது தான் மிச்சம். வெறுங்கையோடு திரும்பினேன்.

தெருவின் திருப்பத்திலேயே. ஒரு பயங்கரமான கூச்சலில் தெருவே கிடுகிடுத்தது. வேப்பிலை மாமியை எட்டுப் பேர் கட்டிப் பிடிக்கிறார்கள். சமாளிக்க முடியவில்லை. எனக்கு அடிவயிற்றை திருகிற்று. கைகால்கள் வெல வெலத்தன. அங்கே ஒரு வீட்டுச் சுவர் மேல் சாய்ந்து கொண்டேன். இல்லாவிடில் விழுந்திருப்பேன்.

என்னை கண்டதும் அம்மா லொங்கு லொங்கென்று ஓடி வந்தாள்.

“அபிதா வாயில் மண்ணைப் போட்டுட்டாடா!”

நான் அந்த வீட்டுப் பக்கமே போகவில்லை. நான் பயந்தாங்கொள்ளிதான்; ஒப்புக் கொள்கிறேன். ஆனால் காட்டுத் தீயைக் குடத்து நீரால் அணைக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். அதை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்.

மாமி அபிதாவை அணைத்துக் கொண்டு அவளைத் தூக்கவே விடவில்லையாம். அதனால் மாமியை அபிதாவிடமிருந்து பிரித்து, அறையுள் தள்ளிப் பூட்டிவிட்டார்கள்.

நான் ராப்பூராத் தூங்கவில்லை. மாமி கதவை ஆட்டி உடைக்கும் சப்தம் என் மார்பில் சுத்தி போல் இடிக்கிறது. வாத்தியார் வீடு எங்கள் வீட்டுப் பின் புறத்துத் தெருவில் தான். ஒரு மாதமாகியும் நான் அங்கே போகவில்லை.

ஒரு நாள் மாலை, நான் எங்கோ போய்க்கொண்டிருக்க கையில் மாமி எதிர்ப்பட்டாள். மாமிதானா அது? முதலில் பெண் சொரூபந்தானா அது?

எலும்புக் கூடாய்த் தேய்ந்துபோய்; நெற்றிப் பொட்டும் கண்ணும் கன்னமும் குழி விழுந்து – இல்லை, குகை விழுந்து – மூக்கு கழுகாய் நீண்டு, தலை சடைபிடித்து, உடலில் துணி போன இடம் தெரியாமல்…

என்னைக் கண்டதும் அது, மடியுள் எதையோ இழுத்து மறைத்துக் கொண்டது. குண்டக்கனல் போல் கண் குழிகள் காங்கை வீசின.

“ஏண்டாப்பா?” – தொண்டையில் எட்டுக் குரல்கள் நொறுங்கின.

“ஏண்டாப்பா. தமிழ்ப்பண்டிதர் வீடு இங்கேதான் எங்கோவாமே? எங்கேடாப்பா இருக்கு?”

எனக்குக் குடலைக் குழப்பிற்று. “என்ன மாமி, என்னைத் தெரியல்லியா?”

“இல்லையேடாப்பா! தமிழ் பண்டிதராத்துக்கு வழி செல்லேன்!”

“என்னோடு வாங்கோ! நானே அழைச்சுண்டு போறேன்!”

அது கொஞ்சம் எட்ட நகர்ந்து கொண்டது. முகத்தில் தனிக் கபடு வீசிற்று.

“முன்னாலே நீ நட, நான் பின்னாலே வரேன்!”

அப்பா வாசலில் நின்றிருந்தார். எங்களைக் கண்டதும் அவர் முகம் மாறிற்று.

“என்னப்பா, மாமி இப்படி ஆயிட்டா?” எனக்கு அழுகை வந்துவிட்டது.

அது அப்பாவை நெருங்கி- சந்தையில் மாட்டை நோட்டம் பார்ப்பது போல் – சுற்றி வந்தது. அப்பாவுக்கும் கண் துளும்பிற்று.

“ஆமா, நீயேதான்! ஏண்டா, நீதானேடா என் குழந்தையைக் கைப்பிடிச்சு தாரை வார்த்துக் கொடுத்தது?”

“நான் மஹா-ஆ-ஆ-பா-வி” – அப்பா விக்கி விக்கி அழுதார்.

“நம்பினவரை மோசம் பண்ணினவன் நீதானே?” குரல் கிறீச்சிட்டு, உச்சத்தில் உடைந்து, கண்ணாடிச் சுக்கலாய் உதிர்ந்தது. “என் குழந்தையை எமனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்த கை இதுதானே?”

வீசிய வேகத்தில் அரிவாள்மணை உள்ளே, ரேழியில் போய் விழுந்தது.

“அம்மா! அம்மா! எங்கே போயிட்டே அம்மா?” மாமியின் பையன் தேடிக்கொண்டு வந்துவிட்டான்.

“தூ”

“அம்மா! அம்மா!” – பையனின் விழிகள் திகிலில் சுழன்றன.

அப்பா ஒரு கையால் தோளைப் பிடித்துக்கொண்டு நின்றார்.

உதிரம் நூல் பிரிந்து தரையில் சொட்டிற்று.

***

“மாது. அத்திம்பேராத்தில், இந்த ஏனத்தைக் கொடுத்துட்டு வாயேன்!”

“என்னம்மா அது?”

“பருப்பு உருண்டை ரஸம்டா! அபிதாவுக்கு உசிராச்சே! பிள்ளைத்தாச்சி வாய்க்கு வேணுங்கறதை இப்போத்தான் சாப்பிடலாம். பாவம், மசக்கை வேறே குழந்தையைப் பாடாப் படுத்தறது”

“அம்மா!”

“என் கண்ணோன்னோ பெரிய மனசு பண்ணி சித்தே போயிட்டு வாடா! பாடம், படிப்புன்னு சாக்குப் போக்குச் சொல்லாதே. சூடாறிப்போறது!”

மாது பக்கென்று இளைத்து விட்டான். மாமி நிலை பெரியவாளாலேயே சமாளிக்க முடியாது. குழந்தை அவன், என்ன பண்ணுவான்? ஒருநாள் போல் நாய்மாதிரி அம்மாவைக் கட்டிப் போடுவதா?

பாடம் படிப்பானா?

சமைத்துப் போடுவானா?

அக்கா போனதுக்கு அழுவானா?

அம்மா இப்படி ஆனதுக்கு அழுவானா?

பரீட்சை பாட்டுக்கு இரக்கமற்று நெருங்கிக் கொண்டிருக்கிறது?

காலேஜிலிருந்து – அங்கு மட்டும் வீட்டை நினைத்துக் கொண்டே பாடம் ஏறுமா?

சாப்பிட்டாளோ இல்லையோ?

குழந்தை போல் அவளுக்கு அவன் வாயில் சோற்றை ஊட்டியதை பார்த்து – பார்க்க முடியாமல் – ஒரு சமயம் நான் – நான் வந்தது தெரியாமல், திரும்பி வந்திருக்கிறேன். தாய்க்கும் பிள்ளைக்கும் தனியான அப்புனித சமயங்களில் நாய்போல் புக நான் யார்?

காலேஜிலிருந்து வீடு திரும்பி வந்தால் அம்மா வீட்டி லிருப்பாள் என்பது என்ன நிச்சயம்? எங்கேயாவது அலைந்து கொண்டிருப்பாள். வீட்டில் போட்டது போட்டபடி.

கதவு திறந்தது திறந்தபடி.

அவனும் அப்படியே தேடக் கிளம்பிவிடுவான்;

அப்படியே தேடிக் கண்டுபிடித்தாலும் லேசில் திரும்பி வருவாளா?

*அம்மா!-“

“இருடா! -” பிள்ளை கையை உதறுவாள் – “அவளும் வரட்டும்”

“அம்மா!”

“அபிதாவும் வரட்டும், சேர்ந்து போகலாம்.”

“அபிதா வரமாட்டாம்மா!”

*ஏன் வரமாட்டா? இந்த வழியாத்தானே தூக்கிண்டு போனா?” – மாரே வெடித்து விடும் போல் பையன் அழுவான்.

“அடசீ, அசடே! ஏண்டா அழறே? அவளும் வருவாடா. சேர்ந்து போவோம்!”

ஓரோரு சமயம் இந்த வாசலெதிரே, சன்னிதியைப் பார்த்தபடி, மறந்தது எதையோ நினைவு கூட்டிக்கொள்வது போல், நெற்றியைச் சொரிந்து கொண்டு மாமி நிற்கையில் எனக்குத் தோன்றும்.

எந்தக் கொடுமை பொது? இவள் இப்படியே மூளை கலங்கி இருப்பதா? நினைவு மீள்வதா?

இவள் இப்படியே போய்விட்டால் எவ்வளவு நல்லது?

இவளுடைய கடவுள், இவள் பிடித்திருந்த காலாலேயே இவளை எட்டி உதைத்தாயிற்று. இவள் ஏன் இன்னும் இருக்கணும்?

அவனே இருக்கிறானோ? இருந்தால், இப்படி எட்டி உதைப்பதால் தான் இருக்கிறானோ?

வேறே இங்கு என்ன இருக்கிறது? கோவில் இருக்கிறது.

கோவிலுக்கு வருவோரும் போவோரும் இருக்கின்றனர். அப்புறம் தேங்காய், பழம், வெற்றிலை, கற்பூரம் இருக்கின்றன. [இலக்கணம் நாசமாய்ப் போக!]

நம்பினவாளுக்கு நடராஜா.

வேப்பிலை மாமி, ரங்கசாமி வாத்தியார், அபிதா, எல்லோரும் நம்பினவர்கள் தான். ஆனால் அவர்கள் கண்டது எமராஜா.

எமராஜா தான் நிஜ ராஜா.

“அம்மம்மா கண்டெடுத்தேன்,
அப்பப்பா காணோமே!
எல்லாம் காக்கா ஊஷ்!”

அப்படியானால் நீ நாஸ்திகனா? என்று கேட்காதேயும்.

ஐயையோ இந்தக் கோவில் இல்லாட்டி என் கதி என் னாச்சு? என் குடும்பம் பிழைப்பதெப்படி?

இந்த ஊர்லே என்ன இப்படி நாயும் நரியும் ஓடற தேன்னு பார்க்காதேயும். இது பாடல் பெற்ற ஸ்தலம் ஓய்! நாலு பேரும் பாடியிருக்கா ஓய்! ஒரு தை வெள்ளி, ஒரு ஆடி வெள்ளி, ஒரு கிருத்திகை, ஒரு அமாவாசை, இந்த வாசற் குறடு உள்ளே முற்றம் வரை இருநூறு சைக்கிளுக்குக் குறையாமல் நிற்கும். அத்தனையும் அடியார்கள். சைக்கிளுக்கு நிறுத்துக் கூலி ஒரு அணா மேனிக்கு ஒரு கிழமைக்கு என்ன ஆச்சு? இது தவிர பூஜை சாமான் விற்பனை , ஒரு ஒரு விசேஷ தினத்துக்கும் ஐந்நூறு தேங்காய் செலவழியும். அது வேறே என்னாச்சு?

மலிவு டயம் பார்த்து வாங்கி மட்டையை உரிக்காமல் போட்டு வெச்சா, சமயத்தில் ஒரு வாரு வாரித்துன்னா, மாதச் சம்பளக்காராள் எங்கிட்ட என்ன பண்ணிக்க முடியும்?

பார்க்கப்போனால் கேவலம்

ஒரு தேங்காய்.
2 பூவம்பழம்.
குங்குமம்.
சூடப் பொட்டலம்.
1 முழம் பூ.
பத்ரம் புஷபம்.
பூஜை சாமான், ஒரு செட்.

என்னவோ உளர்ற மாதிரி இருக்கோ? என்னிடந்தான் இளநீர் மலிஞ்சிருக்கேன்னு வெய்யிலில் புளிக்க வெச்சு நானே குடிச்சுட்ட மாதிரி இருக்கோ? அதெல்லாம் இல்லை, பயப்படாதேயும். எதுக்குச் சொல்ல வந்தேன்னா, கோவில் எனக்கு அவசியம் வேணும்; ஆனால் கோவிலுக்குள்ளே நான் போய் வருடக் கணக்காச்சு.

எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ முடிக்கிற மாதிரி இருக்கோ? இல்லவே இல்லை. நான் சரியாத்தானிருக்கேன். நான் என்ன வேப்பிலை மாமியா?

எங்கு விட்டேன்? ஆ! – நினைவு வந்து விட்டது!

மாது ஒருநாள் மத்யானம் தலைவலிக்கிறதென்று நடு வகுப்பில் கேட்டுக் கொண்டு வீட்டுக்குத் திரும்பிவந்தவன் —

– அன்றைக்கென்று பாருங்கள், மாமி வீட்டிலிருந்தாள். ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம் அடுத்தடுத்து வாந்தியெடுத்து – வாசலில் ‘கொல்’லாயிட்டுது – எங்கள் அத்தனை பேருக்கும் எதிரிலே மாமி மடியிலேயே –

வீட்டுக்காரர் கையை வீசிய வேகத்தில் ஒரு தேங்காய் அதன் வரிசையிலிருந்து பிசகி உருண்டு கீழே விழுந்து ‘பொட்’டென்று உடைந்து சிதறிய இளநீரில் வாயைப் பிளந்தது. முதுகுத் தண்டு ‘சில்’ லிட்டது. அவருக்கு லேசாய் மூச்சுத் திணறிற்று.

எங்கள் அதிர்ச்சி இருக்கட்டும் –

மாமி?

நாங்கள் எல்லோரும் ஒருமுகமாய் –

மாமி?

மாமி தன் மடியில் கிடந்த முகத்தை இரண்டு முறை தொட்டு அசைத்துப் பார்த்தாள். தலை பூட்டு கழன்று துவண்டது.

இருந்தாற்போலிருந்து ஒரு சிரிப்பு கிளம்பிற்று பாருங்கள், அது மாதிரிச் சிரிப்பை நாங்கள் ஒருத்தருமே எங்கள் வாழ்நாளில் கேட்டதில்லை; இனிமேல் கேட்கப் போவதுமில்லை.

அதென்னவோ ஜன்மேதி ஜன்மத்திற்கும் புரியாத ஒரு புதிர், திடீரென்று அவிழ்ந்த வேடிக்கையின் தெறி மணிகள் நாலா பக்கமும் உருண்டோடின மாதிரி, அப்படி ஒரு சிரிப்பு.

அது மாமி குரல் கூட இல்லை .

எத்தனையோ நாள் காத்திருந்து இந்தச் சமயம் பார்த்து அவளுள் எது புகுந்து கொண்டதோ அதன் குரல், அதன் சிரிப்பு.

அந்தச் சிரிப்புத்தான் மாமியிடம் கடைசியாய்க் கேட்ட ஒலி. அப்போதிலிருந்து மாமிக்கு வாய் அடைத்துவிட்டது.

அத்தோடு இல்லை. கட்டிடத்துடன் பூமியை வாங்கிக் கொண்டவன் பழைய கட்டிடத்தை அடியோடு இடித்து, தன் இஷ்டத்துக்குப் புதிதாய்க் கட்டிக் கொண்டாற்போல், மாமி அடியோடு உருமாறிவிட்டாள்.

உடலில் சதை பிடித்து முகம், உடல் எல்லாம் நிரவிக் கொண்டு. இளமைகண்டு. முன்னைவிட நன்றாய் நிறத்துக் கொண்டு, பளபளவென்று இப்போது காண்பது போல் – மூணு நாள் ஆகாரமில்லாவிட்டாலும் மேனி தளர்வதில்லை.

ஆண்டவன் தேற்றும் விதமே தனி, அவன் அமைதியை அருளும் வழியே தனி!

அவர் குரல் சட்டென்று தாழ்ந்தது.

வெள்ளையாய் ஒரு உருவம் கோவிலிலிருந்து வெளிப்பட்டது.

அவனையுமறியாமல் அவன் எழுந்து நின்றான்.

கோமதி உள்ளேயிருந்து வெளியே வந்தாள்.

அது அவர்களைத் தாண்டிச் செல்கையில் லேசாய்க் காற்று அவர்களைச் சுற்றி எழும்பி, உடனே ஓய்ந்தது.

இறக்கை வீச்சினின்று முள்மேல் உதிர்ந்த சிறகு போன்று, வெண்மையாய், மிருதுவாய், புரிந்தும், புரியாது. மாய் அவனுள் ஏதோ இதவாய் மிளிர்ந்தது.

– அலைகள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: செப்டம்பர் 1993, வானதி பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *