தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 12, 2017
பார்வையிட்டோர்: 9,828 
 
 

யாருக்கும் தொந்தரவில்லாமல்தான் அந்த சைக்கிள் மாடிப்படிக் கீழே பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையில் கிடந்தது. வடிவத்தில் மட்டுமே அது சைக்கிளாக இருந்தது. நடப்பட்ட நாற்று முளைத்துக் கிடக்கும் வயலைப்போல துரு சைக்கிளைப் பற்றிக் கிடந்தது.

“”யார் கிட்டயாச்சும் கொடுத்திருக்கலாம்… இல்ல எடைக்காவது போட்டிருக்கலாம்.. இடத்த அடச்சிக்கிட்டுக் கெடக்கு.. எதுக்கும் பிரயோசனமில்லாம..”

“”அது அங்க கெடக்கறதுல்லே உனக்கு என்ன சிரமம்?”

“”அந்த இடத்தை சுத்தம் பண்ணி வச்சி… ஒரு கதவு போட்டா போதும்.. யாராச்சும் குடிவருவாங்க.. நமக்கும் வாடகை கிடைக்கும்”

“”தாராளமா பண்ணிக்கோ.. ஆனா அந்த சைக்கிள எதுவும் பண்ணமாட்டேன். அது என்னோட உயிரு”

“”நீங்களும் ஓட்டப் போறதில்லே.. சென்டிமெண்டா இருக்கவேண்டியதுதான். அதுக்காக இப்படி முட்டாள்தனமாக எதையும் செய்யக்கூடாது”

கொஞ்சம் அதிகப்படியான வார்த்தைதான்..

“”எங்கப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிள் அது. அதுக்கும் எனக்கும் உள்ள உறவு உனக்குத் தெரியாது. உன்னோட பார்வையிலே நான் முட்டாளாவே இருந்துட்டுப் போறேன்” பேசாமல் உள்ளே போய்விட்டாள்.

மாற்றுவழி

அது ஹீரோ சைக்கிள் வந்த புதிது. அப்போதுதான் முதன் முதலாகப் பள்ளியை விட்டுக் கல்லூரியில் அடியெடுத்து வைத்த தருணமும் அதுதான். 1000 ரூபாய் சைக்கிள். அப்பா 500 ரூபாய் கட்டிவிட்டு மிச்சமிருப்பதை மாதத் தவணையாகப் போட்டு வாங்கிக் கொண்டார். முதல்நாள் அந்தச் சைக்கிளில் டபுள்ஸ் அடித்துக் கொண்டு வந்து கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு சைக்கிளைக் கொடுத்துவிட்டுச் சொன்னார்..

“”முதமுதலா காலேஜிக்குப் போறே. வீட்டைவிட்டு 7 கிலோமீட்டர் இங்க வர்றதுக்கு. நீ நினைச்சா எது வேணாலும் செய்யலாம்.. யாரும் பார்க்க முடியாது. நம்ப குடும்பத்தை நினைச்சுக்க.. நல்லா படி.. சைக்கிளைப் பத்திரமா பாத்துக்கோ.. நான் வரேன்” என்று டவுன் பஸ் ஏறிப் போய்விட்டார். அவர் வாழ்நாளில் முதலும் கடைசியுமாக கல்லூரிக்கு வந்தது ஒருமுறைதான். அதற்குப் பின் எந்த அறிவுரையும் சொல்லவில்லை.. கல்லூரிக்கும் வரவில்லை. படிப்பை முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சியுற்று, மதிப்பெண் பட்டியலைக் காண்பித்தபோது..

“”ரொம்ப சந்தோஷமா இருக்கு.. உன்னையும் குடும்பத்தையும் புரிஞ்சுக்கிட்டே.. இனி உன்னப் பத்தி கவலையில்லே.. நாளைக்கே செத்தாக்கூட நிம்மதியா சாவேன்” என்றார்.

அப்பாவிடம் கற்றுக் கொள்ள நிறைய இருந்தன. அதற்குப் பின் எல்லா இடங்களுக்கும் அந்தச் சைக்கிள்தான் எல்லாமும். நண்பர்கள் ஆளுக்கொரு சைக்கிளாக எடுத்துக் கொண்டு நாள் முழுக்க அலைவோம். வீட்டிலிருந்து கல்லூரி, அப்புறம் சினிமா தியேட்டர்.. எங்காவது ஒரு கிராமத்திற்கு.. இப்படி தினந்தோறும், வாரந்தோறும் அந்த சைக்கிள் ஓடிக்கொண்டேயிருந்தது. இரண்டு தடவைகள் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து அடிபட்டிருக்கிறது. நாலைந்து முறை பஞ்சர் ஆகியிருக்கிறது. இரண்டு தடவை ஓவராயிலிங் செய்யப்பட்டிருக்கிறது. மற்றபடி அது பறக்கும் குதிரைதான். நினைத்த இடமெல்லாம் சைக்கிளில்தான்.

தியேட்டரில் படம் ஆரம்பிக்க பத்து நிமிடங்கள்தான் இருக்கும். வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தியேட்டர். யார் மேலயாவது மோதாதக் குறையாய் சைக்கிள் மிதித்து… ஸ்டாண்டில போட்டு… வேக வேகமாய் ஓடி கவுண்டரில் டிக்கெட் எடுத்து… உள்ளே போய் சீட்டில் உட்காரச் சரியாக விளம்பரம் முடிந்து படம் தொடங்கும்… உடம்பெங்கும் தண்ணீர் போல வியர்வை வழியும். ஆனாலும் அது சாதனைபோல.

வாரா வாரம் அந்தச் சைக்கிளில்தான், ஏழு கிலோமீட்டர் திருவையாற்றுக்குப் பக்கத்தில் உள்ள கிராமம். சின்ன அக்காவைத் திருமணம் செய்து கொடுத்தது.. அவளைப் பார்க்க சைக்கிளில்தான். கூடவே எதிர்வீட்டு நண்பனும். அவனும் ஒரு சைக்கிளில் வருவான். இருவருக்கும் போட்டி வரும். 20 நிமிடத்தில் அக்கா வீட்டில் இருப்போம். எங்களைப் பார்த்ததும் ஓடிப்போய் கிராமத்து டீக்கடையில் அக்கா காராச்சேவும் போண்டாவும் வாங்கி வருவாள். சைக்கிள் மிதித்த களைப்பில் போண்டாவும் காரச்சேவும் ஜெட் விமானம் போல உள்ளே இறங்கும்..

சமயங்களில் யாரேனும் நண்பர்கள் ஏறிக் கொண்டேயிருப்பர்கள் டபுள்ஸ்.

“”யேய்.. என்கிட்ட கொடுடா.. நான் மிதிக்கறேன்”

“”வேண்டாம்.. நானே மிதிக்கிறேன்”

“”ஏன்டா?”

“”என்னோட சைக்கிளை யாருக்கும் தரமாட்டேன்”

அம்மா அடிக்கடி கடைகளுக்கு அனுப்புவாள். காய்கறி மார்க்கெட் போய் காய்கறி வாங்கிவர… மரத்தூள் அடுப்பிற்கு மரத்தூள் வாங்க மரக்கடைக்குப் போய் சாக்கில் கட்டி சைக்கிளில் எடுத்து வர… அம்மா நெல்மூட்டை வாங்கி அவித்து, காய வைத்து அரைக்க அனுப்புவாள். சைக்கிள் கேரியர்ல வச்சி அரவை மில்லுக்கு எடுத்துப்போய் அரிசி தனியா… நொய் தனியா.. தவிடு தனியா.. சைக்கிள்லதான் வரும். அம்மா மில்லில் இருந்து தனித்தனியா கட்டிக் கட்டி சைக்கிள் கேரியர்ல வச்சி அனுப்புவா.. அப்புறம் மாவு மில்லுக்கு கோதுமை, மிளகாய் அரைக்க அந்த சைக்கிள்தான்.

கடைசியா அப்பா இறந்து போனப்பா யாரோ அந்த சைக்கிள எடுத்துட்டுப் போயிதான் பூச்சந்தையில் பூ வாங்கிட்டு.. காட்டுக்கு வேண்டிய சாமான்களை அந்த சைக்கிள்லதான் வச்சு எடுத்திட்டு வந்தது நினைவில் ஊறிக் கிடந்தது. ஆனால் அப்பா இறப்பதற்கு முன்னதாக தவணைக் கடனை அடைத்துவிட்டார். “”இனிமே இது உன் சொந்த சைக்கிள்” என்று சொன்னார்.

வேலை கிடைத்து டிவிஎஸ் 50 வாங்கியதும் சைக்கிளின் போக்குவரத்து நின்றுபோனது. என்றாலும் அந்த சைக்கிளை விட மனமில்லை. அப்பாவின் சொற்ப வருமானத்தில் தவணையில் வாங்கியது. வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று உணர்த்திய சைக்கிள்.

அம்மா அடிக்கடி சொல்வாள்: “”நாம பயன்படுத்திய எந்த ஒரு பொருளையும் திரும்பப் பார்க்கிறபோது நாம கடந்து வந்த பாதை தெரியும். அதனால நாம போற பாதையிலே நிதானமா போவோம்” என்று.

டிவிஎஸ் 50 யிலே சாலையிலே போகும்போது யாராவது ஒரு பையன் வயசானவங்களா டபுள்ஸ் அடிச்சிட்டுப்போனா.. சைக்கிள் ஞாபகமும் அப்பாவோட நினைவும் வந்துடும்..

“”பாருங்க சார்… சைக்கிள்ல போறவங்க நம்பள மாதிரி வண்டிக்கு வழி விடலாமில்லே… அமத்தலா போறாங்க பாருங்க. திமிரு, இவங்க ஒழிச்சிட்டாபோதும் சார்.. டிராபிக் பிரச்சினை இல்லே”

“”நாமளும் நிதானமா போகணும் சார்.. இல்லே… அவங்க பெடல் பண்ணிப் போறாங்க.. வேகமா மிதிக்கமுடியாது. நாம கொஞ்சம் பொறுத்து கடந்துபோயிடலாம்”

என்றாலும் அந்த சைக்கிள் குறித்து அடிக்கடி சண்டை வருகிறது.

சைக்கிளைப் பார்க்கவேண்டும் போலிருக்கவே அது இருக்கும் மாடிப்படிக் கீழ் அறைக்குப் போனபோது ஸ்டாண்ட் போட்டு நிறுத்திய நிலையில் அப்படியே இருந்தது. ஆனால் அது தன்னுடைய நிறத்தை இழந்திருந்தது. நன்றாக துருவேறிக் கிடந்தது. கணையாழியில் உத்ரா என்பவர் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது. பயன்படுத்தப்படாமல் கிடக்கும் சைக்கிள் தன்னுடைய நிர்வாணத்தைத் துருவால் போர்த்திக் கொள்கிறது என்று. ஸ்டாண்டைத் தட்டிவிட்டதும் மலர்ந்த மலர்கள் மரத்திலிருந்து உதிர்வதுபோல துரு கொட்டியது. தரையெங்கும் துரு சிதறிக்கிடந்தது. ஏறி உட்கார்ந்து ஹாண்டில் பாரை இரு கைகளாலும் பற்றியதும் சைக்கிள் உடனே பழைய நினைவுப்பாதையில் ஓடத்தொடங்கியது. கால்கள் உடனே பெடல் செய்ய ஆரம்பிக்க முயன்றன. சட்டென்று பிரேக்கைப் பிடிக்க கைகளை அழுத்தியது சுருக்கென்றது. சற்று நேரத்தில் ரத்தம் கொட்டத் தொடங்கிவிட்டது. வலது உள்ளங்கையில் சின்ன துரு பிளேடுபோல பிளந்து உள்செருகிக் கிடந்தது. உடன் இறங்கி சைக்கிளை அப்படியே சுவற்றில் சாத்திவிட்டு உள்ளே வர.. பதறி ஓடிவந்தாள்.

“”என்னங்க ஆச்சு? இவ்வளவு ரத்தம் கொட்டுது. அய்ய்ய்யோ”

“”போய் ஒரு வெள்ளைத் துணியை தண்ணியில நனச்சி எடுத்துட்டுவா. அப்புறம் பேசலாம்”

ஓடினாள்.

ஈரமான வெள்ளைத் துணியை சுற்றியும் ரத்தம் அதையும் மீறி வெள்ளைத்துணிமேல் ஏறி நின்றது.

உள்ளங்கை வலித்தது.

“”டாக்டர் வீட்டுக்குப் போயிடலாம்”

டாக்டர் வீட்டுக்குப்போனதும் டாக்டர்.. துருவை எடுத்துவிட்டு நன்றாகத் துடைத்து பேண்டேஜ் போட்டுவிட்டார். உடன் செப்டிக் ஆகாம இருக்க ஏடிஎஸ் ஊசியும் போட்டுவிட்டு, “”பயப்படத் தேவையில்லை” என்றார்.

திரும்பி வரும்போது முருகேசன் பார்த்து விட்டு, “”என்னண்ணே ஆச்சு?” என்றான் பதறிப்போய்.

விவரம் சொன்னதும், “”பேசாம அந்த சைக்கிளைத் தூக்கிப்போட்டுடுங்க. என்னண்ணே நீங்கல்லாம் படிச்சவங்க.. அத என்கிட்ட கொடுத்துடுங்க. நான் பாத்துக்கறேன்”

“”அதை ஓட்டமுடியாது முருகேசா.. வீணாப் போயிடிச்சி”

“”பரவாயில்லண்ணே… என்கிட்ட கொடுங்க.. எடைக்குப் போட்டுடலாம்”

“”எடைக்கா?”

“”வேற என்ன பண்ண முடியும்ணே.. பாங்க் லாக்கர்லயா வக்கப் போறீங்க.. எடைக்குப் போட்டா பணம் கிடைக்கும்”

முருகேசனை முறைத்துப் பார்த்தேன். அவன் சொன்னான்:

“”அந்தப் பணத்துலே என்ன மாடி வீடா கட்டப்போறேன்? ஒரு வாரத்துக்கு ஆஸ்த்துமா மாத்திரை வாங்கிக்குவேன். உங்க புண்ணியத்துலே”

“”சரி.. எடுத்திட்டுப்போ.. துரு அதிகமா இருக்கு.. பாத்து எடுத்திட்டுப்போ”

“”நான் பாத்துக்கறேன்ணே” என்றபடி போனான்.

அப்பா இருந்தாலும் இதையேதான் செய்திருப்பார். ஏனோ கைவிரல் வலித்தது.

– ஹரணி (ஜூன் 2015)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *