வீதியில் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நிபு, தன் வீட்டுக்குச்சென்ற வெள்ளை நிற பென்ஸ் காரை கண்டவுடன் மட்டையை வீசிவிட்டு காரின் பின்னே ஓடினான்.
நேற்று தான் காரில் வந்த அந்த நபரை அம்மா அறிமுகப்படுத்தினாள்.
“இத பாரு நிபு, இனிமே இவருதான் உன் அப்பா. உனக்கு என்ன வேணுமோ அத வாங்கித்தந்திடுவார். பெரிய பங்களா வீடு இருக்கு. ஊட்டில எஸ்டேட்ல காட்டேஜ் இருக்கு. அடிக்கடி ப்ளைட்ல பறக்கலாம். உன்ன அந்த பெரிய நீச்சல் குளம் உள்ள ஸ்கூல்ல சேர்த்திடலாம்னு சொன்னாரு” என்றாள் அம்மா நீரா.
“அப்ப முதல் அப்பா வரமாட்டாரா?” என்றான் அப்பாவியாக.
அதைக்கேட்டு டென்சனான தாய் நீரா “அவன பத்தி பேசாதே. சம்பாதிக்க வக்கில்லாத சோம்பேரி. உன்னோட ஷூ உனக்கு பிடிக்கலேன்னா நீ வேற ஷூ வாங்கிடற மாதிரி தான் நானும் அவனைத்தூக்கி போட்டுட்டேன்” என்றாள்.
“அப்ப இவரை பிடிக்கலேன்னாலும் இன்னொரு அப்பா வருவாரா?” என்றான்.
ஒரு நிமிடம் ஆடிப்போனவள், “ம்..இப்படியெல்லாம் பேச உனக்கு யார் சொல்லிக்கொடுத்தது?” கோபமாக அதட்டியபடி தன் பத்து வயது மகனைப்பார்த்துக்கேட்டாள்.
“நான் காரைப் பார்த்து ஓடி வந்தது எனக்கு இவரு ஏதாவது வாங்கி வந்திருப்பாருங்கிற ஆசையில் இல்லை. நீ கணவரை மாத்திக்கிற மாதிரி நானும் என் அம்மாவை மாத்திக்கப்போறத உன் கிட்ட சொல்லிட்டு, என்னோட சொந்த அப்பாவை கட்டிக்கப்போற புது அம்மாவோட நிரந்தரமா தங்கிக்கப்போறேன்னு சொல்லிட்டுப்போகத்தான் வந்தேன்” என்றவன் தான் போட்டிருந்த புது ஷூவை கழட்டி விட்டு விட்டு, வெறும் காலுடன் தாய் வீட்டை விட்டு தந்தை வீட்டை நோக்கி உறுதியுடன் நடந்தான் சிறுவன் நிபு.