மாறிய நெஞ்சங்கள்..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 6,379 
 
 

மனதில் ரணம் – காயம். அந்த விடிவிளக்கின் வெளிச்சத்திலும் விட்டம் வெறித்தார் வேணுகோபால். வெளியே கும்மிருட்டு.

‘கேட்கலாமா…?’மனசுக்குள் கேள்வி எழுந்தது.

‘கேட்டால் என்ன சொல்வான்..? !’அதில் அப்படியே மறு கேள்வியும் எழுந்தது.

அவர் மருமகன் வாசன் மனக்கண்ணில் தோன்றினான்.

“மாமா ! அன்னைக்கு.. உங்க வீட்டுக்கு அனாதையாய் வந்தவன், உங்க வீட்டு வேலை செய்து வயிற்றைக் கழுவியவன், அதிகம் படிப்பறிவில்லாதவன் என்றுதானே என்னைக் காதலித்த உங்க மகளை நான் கட்டிக்கக் கூடாதுன்னு முரண்டு பிடிச்சீங்க..? இன்னைக்கு அவள் அறுத்துட்டு வந்து நிக்கிறாள் என்கிறதுக்காக என்னை அவள் கழுத்துல தாலி கட்டச் சொல்றது எந்த விதத்துல நியாயம்…? இப்போ என் தகுதி உசந்து, அவள் தகுதி தாழ்ந்துடுச்சா..?! மன்னிக்கனும் மாமா. அன்னைக்கு நான் அவமானப்பட்டதுக்காக பழி வாங்கலை. ஆனாலும் நீங்க சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது. !”அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.

வேணுகோபால் கண்களை இறுக மூடிக்கொண்டார்.!!

அன்றைய சூழ்நிலை அப்படி.!

“அம்மா மாலினி ! உனக்கு ஊர்ல நல்ல வரன் பார்த்திருக்கேன்ம்மா.. !”என்று சொன்னபோதே அவள் யார் என்னவென்று கேட்காமல்…

“நான் வாசனைக் கட்டிக்கிறேன்ப்பா..!” குண்டைப் போட்டாள்.

“மாலினி..!!”அவர் ஆடிப் போய் மகளைப் பார்த்தார்.

“ஆமாம்ப்பா. வாசன் மாமாவையே நான் கட்டிக்கிறேன் !”மறுபடியும் சொன்னாள்.

அதிர்ச்சியில் ஒரு கணம் சிலையாய் நின்றவர்… அடுத்து….

“உன் தகுதி என்ன, தராதரம் என்ன..?”வெடித்தார்.

“தெரியும். நான் பட்டப்படிப்பு படித்தவள். பணக்கார வீட்டில் பிறந்த பொண்ணு. அதானே..? !”

“அதுமட்டுமில்லாம.. அவன் ஒரு அநாதை. நம்ம வீட்டில…”

“தங்கி சாப்பிட்டு வேலை செய்து பொழைக்கிற கூலி .! சரிதானேப்பா..!”

”……………………”

“எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. அவரைத்தான் கட்டிப்பேன் .!”

தெளிவாய் சொன்னாள்.

“அது இல்லே மாலினி…. அவன் உனக்கு ஏத்தவனில்லே…..”பெற்ற மகள் புரியாமல் பேசுகிறாள் என்று தழைந்தார்.

“எனக்கு ஏற்றவர் !”

“அப்போ உன் முடிவு..?”

“மாறாது !”

கொட்டிக் கொட்டி பேசினாலும்.. பேசியதேதான் திரும்பத் திரும்ப வரும். ! – நினைத்த வேணுகோபால் மூண்ட கோபத்தை அடக்கிக் கொண்டு வெளியேறினார்.

மாட்டுத் தொழுவத்தில் வாசன் வசமாய் சிக்கினான்.

“டேய் !. அனாதையா வந்து ஒதுங்கினீயேன்னு ஆதரவு கொடுத்தா.. என் பொண்ணைமயக்கி, மடக்கிப் போட்டுட்டியா…? உனக்குஆதரவு அளிச்சி , சோறு போட்டு வளர்த்ததுக்கு இதுவா பரிகாரம்…? ! உண்ட சோத்துக்கு ரெண்டகம். இவளைக் கட்டிக்கிட்டு சொத்துப்பத்தோடு சுகமா வாழலாம்ன்னு நெனப்பா..? நீ என் மகளை எவ்வளவு மயக்கி, மனசுல இடம் பிடிச்சிருந்தீன்னா… அவ உன்னையே கட்டிப்பேன்னு பிடிவாதம் பிடிப்பாள்..? !”சரமாரியாக வெடித்தார்.

மறுவார்த்தைப் பேசாமல் எல்லாவற்றையும் பொறுமையாய்க் கேட்ட அவன்…

“எனக்கொன்னும் தெரியாது மாமா. என் தகுதி தராதரம் தெரிஞ்சிதான் மாலினிக்கிட்ட பழகிறேன். அதை அவள் தப்பா எடுத்திக்கிட்டாள் போலிருக்கு. இல்லே.. என் மேல பரிதாபப்பட்டு இந்த முடிவு எடுத்திருக்கிறாள் போல் இருக்கு. சத்தியமா சொல்றேன். இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. நான் பாவி இல்லே. நிரபராதி !”பதட்டமில்லாமல் சொன்னான்.

வேணுகோபாலுக்குப் பிடி கிடைத்து விட்ட தைரியம்.அது மட்டுமில்லாமல் தன்னைப் பார்த்ததும் பயந்து நடிக்கிறான் ! என்கிற எண்ணம். அவ்வளவுதான் !

“இதை என்ன பொண்ணுக்கிட்ட சொல்லுடா..!”உடனே அவன் கையைப் பிடித்து இழுத்து மாலினி முன் அழைத்துப் போனார்.

வாசன் இவரிடம் சொன்னதையே மாறாமல் மாலினியிடமும் சொன்னான்.

அவள் இதை எதிர்பார்க்கவில்லை. !

முகம் மாறியது. வேறு எந்த பேச்சும் பேசாமல் அறைக்குள் சென்றாள்.

அடுத்தாக அப்பாவிடமும் அவள் வேறு எந்த பேச்சும் பேசவில்லை.

அடுத்த இரண்டு மூன்று நாட்களில் ….

“நான் பார்த்த வரனுக்கு நீ கழுத்தை நீட்டலாமா..?”கேட்டார்.

“சரி”என்று மெல்ல சொல்லி தலையை மட்டும் அசைத்தாள்.

வேணுகோபால்.. விறுவிறுவென்று காரியத்தில் இறங்கி தான் பார்த்த மாப்பிள்ளைக்குச் சிறப்பாக மாலினியைக் கட்டி வைத்தார்.

இதுவரை இவருக்கு எல்லாமே சந்தோசம். நடந்து முடிந்தவைகளெல்லாம் சுபம்.

ஆனால் விதி..!

திருமணம் முடித்த ஆறே மாதத்தில் விபத்தில் மாப்பிள்ளை அகால மரணம்.

பூவோடும் பொட்டோடும் சென்ற மாலினி…அவை எல்லாவற்றையும் இழந்து சுவற்றிலடித்த பந்தாக திரும்பி வந்தாள்.

துடித்துப் போனார் வேணுகோபால்.

இனி மகளின் வாழ்க்கை..? – யோசிக்கும்போதுதான் வாசன் தெரிந்தான். !!

விதைத்ததை அறுவடை செய்யத்தான் வேண்டும். மறுமணத்திற்கு ஒத்துக் கொண்ட மகளின் மனம் மாறுவதற்குள் முடித்து விட வேண்டும் !

மெல்ல எழுந்து வாசலுக்கு வந்தார்.

திண்ணையில் வாசன் வெற்றுத் தரையில் மல்லாந்து படுத்திருந்தான். மார்பு பரந்து விரிந்திருந்தது.

இதைப் பார்த்துதான் மாலினி ஆசைப் பட்டிருப்பாளோ.. !? – மனதில் தோன்றியது.

“வா…..வாசன்…”மெல்ல அழைத்து தொட்டு அசைத்தார்.

தொட்டதும் துடித்துப் பிடித்து எழுந்தான்.

“என்ன மாமா..?”கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டான்.

“மா..மாலினியை நீ ஏத்துக்கனும்…”

“மாமா..!!”

“அன்னைக்கு மக நெனப்பு, பாசம்…ஆணவத்துல என்னென்னவோ பேசி…அவள் காதலைக் கொன்னு இன்னொருத்தனுக்குக் கட்டி வச்சேன். செய்த தப்புக்குத் தண்டனையா பொண்ணு திரும்பி வந்துட்டாள். எனக்குத் தண்டனை கொடுக்கனும்ன்னு நினைச்ச ஆண்டவன் அவளுக்கும் சேர்த்து கொடுத்ததுதான் ரொம்ப கொடுமை.”நிறுத்தினார்.

வாசன் அமைதியாக இருந்தான்.

“அவ திரும்பி வந்தது கூட நல்லதாதான் படுது. அவ ஆசைப்பட்ட உன்னை அடைவதற்கான செயலா இது தோணுது. அதனால…”

“அதனால…?”

“நான் பேசின பேச்சையெல்லாம் மனசுல வைச்சுக்காம மாலினியை நீ ஏத்து வாழ வைக்கனும்”சொன்னார்.

”…………………………”

”வாசன் ! இன்னும் என்ன யோசனை..? நான் வேணும்ன்னா உன் கால்ல..”சட்டென்று அவன் காலைத் தொட்டார்.

“மாமா…”வாசன் பதறி துடித்தான்.

“அப்பா !”குரல் கேட்டு இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

மாலினி !

“என்னம்மா..?”

“மன்னிக்கனும். இந்த திருமணத்தில் எனக்கு சம்மதம் இல்லே .!”கறாராக சொன்னாள்.

“மாலினி..!”

“அப்பா ! உங்க பின்னாடியே நானும் வந்தாச்சு. மாமாவுக்கு என் மேல காதல் இல்லே என்பது அன்னைக்கேத் தெரிஞ்சு போச்சு. அதனால்தான் உங்க அந்த திருமணத்துக்கு ஒத்துக்கிட்டேன். இப்பவும் அவருக்கு என் மேல அன்பில்லே. அன்பில்லாம வற்புருத்தி கலியாணம் கட்டக் கூடாதுப்பா. ரெண்டு பே ரும் ஒட்டுறவா வாழ முடியாது. வேற இடம் பாருங்க…”சொல்லி திரும்பி நடந்தாள்.

வாசன் தலை கவிழ்ந்தான்.

உண்மையில் அவனுக்கு அவள்மேல் அன்பு மட்டுமே காதலில்லை. இப்போதும் அது அதிகமாக… கண்களின் ஓரத்தில் கண்ணீர் கட்டியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *