மார்கழி மலர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 3,514 
 
 

சூரியன் இன்னும் முழுதும் உதிக்கவில்லை. மார்கழிப் பனியின் மூட்டம் இன்னும் அடர்ந்து பரவிக் கிடந்தது. தெரு முழுவதும் பனிபெய்து தரை. ஈரம் அடைந்து ஜலம் தெளித்தது போல் இருந்தது. கிராமாந்தரக் குழந்தைகளுக்கு உள்ள இயல்பில் சச்சி வெகு சீக்கிரம் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டாள். தூக்கக் கண்களைத் துடைத்துக் கொண்டு பனிக்குப் பாதுகாப்பாகப் பாவாடை முனையைத் தோள் மீது போர்த்திக்கொண்டு வாசற் பக்கத்துக்கு வழக்கம் போல் வந்தாள். இரட்டை வரிசையாக அமைந்த சிறு தெருவின் இரண்டு கோடிகளையும் அவள் ஒரு தடவை பார்த்ததும் அவளுக்கு வியப்பு ஏற்பட்டது.

ஒவ்வொரு வீட்டு வாசலிலும் விதவிதமான கோலங்கள் போட்டுப் பூசினி , பரங்கி மலர்களை வெகு நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் பரப்பி இருந்தார்கள். அந்தக் காட்சி குழந்தை உள்ளத்தைப் பறித்தது. அப்படியே பார்வையைத் தன் வாசலுக்குத் திருப் பினாள். புஷ்ப அலங்காரம் ஒன்றும் இல்லாமல் வெறும் கோலத்துடன் இருந்த வாசல் தான் அவள் கண்களில் உறுத்தி மனத்தில் எழுச்சியை உண்டாக்கியது.

ஸரஸ்வதி என்று அவளுக்கு அம்மா அழகான பெயர் இட்டிருந்தாள். ஆனால் எளிமை அவளுக்குச் சச்சி என்ற ஊர்ப்பெயரைக் கொடுத்திருந்தது. வீட்டு வாசலில் நின்றுகொண் டிருந்தபடியே முற்றத்தில் பாத் திரம் துலக்கிக்கொண் டிருந்த தன் தாய்க்கு வாசலில் தான் கண்ட அதிசயத்தைப் பலத்த குரலில் வர்ணித் தாள்.

“அம்மா ! பூ அம்மா! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிறைய நிறைய வச்சிருக்கா அம்மா! பெரிசு பெரிசாப் பூ, அம்மா” என்று கையளவு காட்டிக் கத்தினாள்.

குழந்தையின் வார்த்தைகள் முற்றத்தில் இருந்த தாயின் காதுகளில் தெளிவாக விழுந்தன. அங்கிருந்தே சச்சிக்குப் பதில் கூறினாள்: “இப்போது மார்கழி மாசம் இல்லையா? ஊரெல்லாம் வருஷா வருஷம் பூமாதேவிக்கு இப்படித்தான் அலங்காரம் பண்ணுவா. கோலம் போட்டு, பூவச்சு……..”

அத்தனை வீட்டு வாசல்களும் புஷ்பங்களோடு கொஞ்சிக்கொண்டு இருந்தபோது தன் வாசல் வெறிக் சென்று இருந்தது சச்சிக்கு என்னவோபோல் இருந்தது. உள்ளே போய் அம்மாவைப் பூ வைக்கச் சொல்லவேண்டும் என்ற ஆசை வேகமாகத் தூண்டியது. என் அம்மா, நம்ம வாசலில் ஒன்றும் வைக்கல்லே நீ?” என்று ஏமாற்றமும், ஆசையும் கலந்த குரலில் கேட்டுக் கொண்டே கால்கள் தரையில் பாவாமல் அம்மாவை நோக்கி ஓடி வந்தாள்.

அம்மா பதில் கூறினாள்: “அவா வீடுகளில் பூக் கொண்டுவரப் பண்ணையாள் உண்டு. தோட்டங்கள் நிறைய இருக்கு; பறித்துக்கொண்டு வந்து வைக்கிறா. நமக்கு யார் இருக்கா? என்ன இருக்கு, ஸரஸ்வதி?” என்று தன் ஏழைமையை விளக்கிக் கூறியபோது, ஸரஸாவீன் பொம்மை தாயின் குரல் வரவரக் கம்மியது. அம்மா ஏதோ வருத்தம் படுவது போன்ற எண்ணம் குழந்தையின் மனத்தில் பட்டது. நெருங்கிச் சென்று அம்மாவின் தோள்களில் கையைக் கொடுத்துக் கழுத்தைக் கட்டிக்கொண்டு இரக்க மாக முகத்தைப் பார்த்துக்கொண்டு, “அம்மா, வாசல்லெ பூ வருமோ இல்லையோ? வந்தால் கூப்பிடட்டுமா? வாங்கி வைக்கிறயா?’ என்று கொஞ்சிக் குழறிக் கேட்டாள். பூ ஜோடிப்பும் அதன் வர்ணங்களும் அவ்வளவு அவள் உள்ளத்தைக் கவர்ந்திருந்தன. குழந்தை கொஞ்சிய கொஞ்சல் தாயின் ஹிருதயத்தைத் தொட்டு விட்டது.

“குழந்தையின் இந்தச் சிறிய ஆசையைக்கூடப் பூர்த்தி செய்ய முடியாதா?” என்று ஒரு விநாடி யோசித்தாள். “சரி, ஸரஸ்வதி. வாசல்லே போய் பாரு. யாராவது பூசினிப்பூ வித்துண்டு போனால் கூப்பிடு , வாங்கி நம்ம ஆத்திலும் வைக்கலாம்” என்று போக்குச் சொல்லி அனுப்பினாள். கிராமத்தில் அப்படி எங்கே பூ விற்றுக்கொண்டு போகப் போகிறார்கள் என்பது மரகதத் தம்மாளின் எண்ணம்.

குழந்தை சச்சி வாசலுக்குக்குதி போட்டுக்கொண்டு ஓடிப்போய்விட்டாள், பூக்காரன் வருகையை எதிர் பார்த்து.

அவள் போகவும் மரகதத்தம்மாள் மனத்தில் தன் வறுமை நிலையைப் பற்றிய சிந்தனை எழுந்தது. தன்னை யும், குழந்தையையும் அனாதரவாக விட்டு விட்டு அகால மரணமடைந்த கணவனது ஞாபகம் வந்தது. கிராமத்தில் சில பெரிய வீடுகளுக்கு ஆற்று ஜலம் கொண்டு வந்து கொடுத்து, இதரச் சில்லறை ஏவல் வேலைகள் செய்து கொடுத்துத் தன் வயிற்றுப் பிழைப்பு நடத்தும் வாழ்க்கையை நினைத்து அங்கலாய்த்துக் கொண்டாள். குழந்தைக்குப் போக்குக் காட்டி விட்டாள். ஆனால் வாசலில் பூ வந்துவிட்டால் வாங்குவதற்கு ஒரு சல்லி கூட அன்று இல்லையே, என்ன செய்வது என்று மனத்தில் எண்ணித் தவித்துக்கொண்டிருந்தாள்.

அந்தத் தவிப்பில் இருக்கும்போதே, “அம்மா! அம்மா ! பூக்காரன் வரான். சீக்கிரம் வா அம்மா. அடே பூக்காரா!” என்று கைதட்டி உற்சாகத்துடன் குதிக்கும் குழந்தையின் குரல் காதுகளில் விழுந்தது.

ஒரு பெருமூச்சுவிட்டுத் தன் கைகளை அலம்பி முன்றானையில் துடைத்துக்கொண்டே மரகதத்தம்மாள் வாசலுக்கு வந்தாள். அதற்குள் பூக்காரனும், “பூசினிப் பூ!” என்று கூவிக்கொண்டே திண்ணையில் கூடையை இறக்கி மூடி இருந்த ஈரத்துணியை விலக்கினான். காலைச் சூரியனில் செந்நிறப் பூசினி மலர்கள் விரிவான இதழ் களுடன் சச்சியின் கண்களில் ஒளி வீசிப் பிரதிபலித்தன. அவளே கூடையிலிருந்து புஷ்பங்களை ஆத்திரத்துடன் எடுக்கப் போனாள். இதழ்களைச் சிதறச் செய்யாமல் அவளை அடக்கித் தடுத்துப் பெரிதாகவும் நல்லதாகவும் உள்ள மூன்று புஷ்பங்களைக் கூடையிலிருந்து மரகதத் தம்மாள் எடுத்தாள். பூரணமாக மலர்ந்திருந்த அந்த மலர்களைப் போலவே சச்சியின் முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்து விளங்கியது.

“அடேயப்பா பூக்காரா ! நாளைக்குக் கூட மூன்று பூ வேணும். மொத்தம் ஆறு பூவுக்கும் என்ன விலை? சேர்த்து வாங்கிக்கொள்ளேன்” என்று சாதுரியமாகக் கேட்டாள் மரகதத்தம்மாள்.

“அம்மா, இந்த மூன்று பூவுக்கும் இப்போதே துட்டுக் கொடுத்துடுங்க. காலணாத்தான்! இதுக்குக் கூடவா கடனுங்க? நாளைக்கு இந்தப் பக்கம் வருவேனோ வரமாட்டேனோ சொல்லமுடியாதுங்க” என்று பூக்காரன் கறாராகப் பேசினான்.

“இல்லையப்பா, குழந்தை கேட்குது. நாளைக்குக் கட்டாயம் வாங்கிக்கொள்ளேன்” என்று மரகதத் தம்மாள் எவ்வளவோ நயமாகவும் கெஞ்சிக் கேட்டும், “காலையில் போணி ஆகாமல் கடன் கிடையாது!” என்று கண்டிப்பாகக் கூறிக்கொண்டே கூடையைத் தூக்கப்போனான்.

மரகதத்தம்மாளின் முகம் அப்போது இறங்கி விட்டது. ஸரஸ்வதியின் கண்களும் ஏமாற்றமடைந்து அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தன. என்ன செய்யப் போகிறாளோ என்று திடீரென்று அம்மா முன்றானையைப் பிடித்துக் கொண்டே, “பூக்காரன் போப்போறான், அம்மா. வாங்கு அம்மா” என்று இழுத்துக் கெஞ்சினாள். அம்மா மனநிலை அந்தச் சிறு உள்ளத்துக்கு எப்படிப் புரியும்?

மரகதத்தம்மாள் ஒரு வினாடி ஆலோசனை செய்தாள். பூக்காரன் கூடையைத் தூக்குவதற்குள் சரேலென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. பூக்காரனைக் கொஞ்சம் பொறுக்கச் சொல்லிவிட்டுப் படி இறங்கி அடுத்த வீட்டுப் படியேறி உள்ளே சென்றாள். தனது லஜ்ஜையைக் கட்டி வைத்துவிட்டு அந்த வீட்டுத் தங்கம்மாளைக் கூப்பிட்டு, “பூ வந்திருக்கு வாசல்லே. சச்சி என்னை நச்சரிக்கிறாள். காலணா இருந்தால் கொடுங்கோ. நாளைக்குத் தந்து விடுகிறேன். காலையில் அவன் கடன் தரமாட்டேன் என்கிறான்” என்று வாய் விட்டுக் கேட்டாள்.

“ஐயோ ! மரகதம்; என்ன செய்கிறது! சில்லறையே இல்லையே. ஒரு ரூபாயாகத்தான் இருக்கும்மா” என்று சொல்லிவிட்டு உள்ளே சமையலறைக்குப் போய் விட்டாள் தங்கம்மாள். “ஆமாம்; வேலை என்ன இவளுக்கு! பொழுது விடிந்தால் கடன் தான், உப்பும் புளியும்; என்றைக்குத்தான் தரித்திரம் விடப்போகிறது இவளை!” என்று சமையலறையில் முணு முணுத்துக் கொண்டது மரகதத்தம்மாள் காதில் விழுந்திருக்க முடியாது.

மரகதத்தம்மாள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினாள். முதல் தடைக்குப் பிறகு வேறு ஒருவரிடமும் சென்று கடன் கேட்க மனம் வரவில்லை. எங்கும் இதே பதிலைத்தான் அவள் மனசு எதிர்பார்த்தது. அவளுக்கு வந்த வெறுப்பில் கசப்படைந்தாள். பூசினிப்பூக்களைத் திரும்பக் கூடையில் கொண்டு போட்டு விட்டாள். சச்சியின் பார்வையிலிருந்து மறைக்க விரும்பியவன் போலவும், அவள் ஏமாற்றத்தைத் தூண்டுபவன் போலவும் பூக்காரன் புஷ்பங்களை ஈரத் துணியால் மூடிக் கூடையைத் தூக்கிக்கொண்டு கிளம்பினான். பூக்கள் வெயிலில் வாடாமல் இருக்க அந்த ஈரத் துணி பாது காப்பாய் இருந்தது. ஆனால் சச்சியின் முகம் வாடாமல் குளுமையாக இருக்கவைக்க மரகதத்தம்மாளால் முடிய வில்லை .

“போனால் போகிறது, ஸரஸ்வதி! நாளைக்கு வாங்கி வைப்போம். அதோ அவர்கள் வீட்டில் எல்லாம் வைக்கிறா பாரு. அதைப் பார்த்துக்கொண்டிரேன். நம் ஆத்தில் வைத்தது மாதிரிதானேடி, அம்மா” என்று ஆதரவாக அணைத்துக் கூறிய தேறுதல் மொழிகள் கூட அவள் காதுகளில் படவில்லை. அவள் பார்வை அந்தப் பூக்கூடையோடேயே பிரயாணம் செய்யத் தொடங் கியது. தன் மனத்தை அந்தக் கூடையில் புஷ்பங் களுக்கு இடையில் வைத்து அனுப்பி விட்டாள் போல் இருந்தது. அல்லது கூடை இடுக்குகள் வழியாகப் புஷ்பங்கள் அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தனவோ என்னவோ!

பூக்காரன் கூவிய குரல் தெருக்கோடி வரையில் கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே சென்று கூடையோடு சேர்ந்த அவன் உருவமும் சச்சியின் பார்வையிலிருந்து பூரணமாக மறைந்து விட்டது. பூரண ஏமாற்றத்தை வெளிக்காட்டிய சச்சியின் கண்கள் அப் புறந்தான் திசை திரும்பின. வீட்டு வேலையைக் கவனிக்க அம்மா உள்ளே போய் விட்டாள். குழந்தை சச்சி மட்டும் திண்ணையில் குந்தி உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

சச்சியைப் போலச் சீக்கிரமே எழுந்துவிட்ட இதரக் குழந்தைகளும் தத்தம் வீட்டு வாசலில் பாட்டி, அம்மா, அத்தை போடும் கோலங்களில் சாணி உருண்டைகளை வைத்துப் பூசினி பரங்கிப் பூக்களைப்பதித்துக்கொண் டிருந்தன, தட்டான் கற்களைக் கூட்டில் பதிப்பது போல் ஒரு குழந்தை பூவின் காம்பை முழுதும் கிள்ளிவிடும் பூ உருண்டையில் பதியாமல் சாய்ந்து கொண்டே இருக்கும். தேவைக்கு அதிக நீளமான காம்பினால் சில சாய்ந்து போகும். பாதிக்கும் வேகத்தில் சில பூக்களின் இதழ் கிழியும். உருண்டைகள் நெகிழ்ந்து போகும் மார்கழி மலர் அடிக்கடி. இந்த விதமான சிறு சிறு இடைஞ்சல்களுக்கு இடையே பதித்து வைக்கப்பட்ட பூக்களைக் கண்டு குழந்தைகள் பெருமிதங்கொண் டிருந்தன. தத்தம் வீட்டில் தான் அதிகப் பூக்கள் என்று ஒன்றுக்கொன்று பீத்திக்கொள்வதைக் கேட்க வேடிக்கையாக இருக்கும்.

வாசல் வாசலாக வைக்கப்பட் டிருந்த பூக்களின் கவர்ச்சி சச்சியைத் திண்ணையில் உட்கார விடவில்லை. “நம் வீட்டில் தான் அது வைக்கவில்லை; மற்ற வீடுகளில் வைத்திருப்பதையாவது போய்ப் பார்த்து விட்டு வாயேன்’ என்று மனசு அவளைத் தூண்டியது. மெதுவாக எழுந்து அம்மாவுக்குத் தெரியாமல் ஒதுங்கி ஒதுங்கி நடந்து கொண்டே பக்கத்து வீட்டு வாசல் பக்கம் சென்றாள்.

பக்கத்து வீட்டு வாசலில் நின்று கொண் டிருந்த சிறுமிகள் சச்சியின் வருகையைக் கவனித்து விட்டன.

“அடி அடி! சச்சி வராள். அவள் வீட்டு வாசலிலே பூ வைக்கல்லேடி!” என்று ஒரு சிறுமி தன் சகாக்களிடம் கூறினாள். இந்தச் சொற்கள் சச்சியின் காதைத் தைத்தன.

“அவ இங்கேயிருந்து ஏதாவது பூவைத்தாண்டி திருட வந்திருப்பாள். திருட்டுப் பிணம்டி அது!” என்றாள் மற்றொரு சிறுமி வாய்த் துடுக்காக.

“ஆமடி, ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும் என்று மற்றொரு சிறுமி உஷார்ப் படுத்தினாள். இந்தச் சம்பாஷணைகளையெல்லாம் கேட்டுக்கொண்டே சச்சி அந்த இடத்தில் கோலத்தின் விளிம்பில் போய் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.

கீழே பாரிஜாதக்கொடி மாதிரி கோலம் போட்டு அதன் மீது பூசினி , பரங்கி, ஊமத்தம்பூ இவ்வாறு பதினைந்து புஷ்பங்கள் வெகு அழகாக மூலைக்கு மூலையும், நேருக்கு நேராயும் வைக்கப்பட்டிருந்தன. வெண்ணிறக் கோட்டுக் கோலப்பொடிகளைத் தின்ன எறும்புகள் சாரி சாரியாகப் போய்க்கொண் டிருந்தன. பூக்களின் வர்ணத்தில் ஈடுபட்ட ஈக்கள் தேனை எதிர் பார்த்து ஒவ்வொரு பூவிலும் நிலையாக உட்காராமல் பூவுக்குப் பூ மாறிமாறிப் பறந்து கொண்டிருந்தன. வானில் கிளம்பிய சூரியனது பொன்னிறத்துடன் போட்டி போட்டுக்கொண்டிருந்தது பூக்களின் பொன்னிறம்.

சச்சி அவைகளையே உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். சரேலென்று கண்களைத் திருப்பி அங்கிருந்தபடியே தன் வீட்டுவாசலையும் பார்த்தாள். மறுபடியும் வீட்டுக்கு வீடு வைக்கப்பட்டிருந்த பூக்களை ஒரு முறை விறைத்துப் பார்த்தாள். ‘எடு என்னை’ என்று அவள் காலருகில் அகன்ற இதழ்களை விரித்து நின்ற ஒரு புஷ்பம் அவள் காதோடு பேசி ஜாடை காட்டுவதுபோல் இருந்தது. அவள் மனம் அவற்றின் மீது லயித்துப்போயிருந்த நிலைமையில் இதரச் சிறுமிகள் ஏதேதோ சன்னக் குரலில் பேசிக்கொண்டு தன்னை அடிக்கடி கண்காணித்துக்கொண்டிருப்பதை அவள் கவனிக்கவில்லை.

‘அடேயப்பா! இத்தனை பூக்கள் வைத்திருக்கிறதே, இந்த ஒன்றை மட்டும் நான் எடுத்துக்கொண்டால் என்ன?’ என்ற திருட்டு நினைவு, சாயைபோல் அவளறியாமல் அவள் மனத்தில் புகுந்து கொண்டது. அந்த எண்ணம் வந்த பிறகு யாரையும் குற்றம் சொல்வதற்கு இல்லை. குழந்தை உள்ளத்தில் ஆவலும் ஆசையும் கட்டுக்கு அடங்காமல் போகிறபோது செய்கையின் நியதியையும் வரம்பையும் மறக்கும் தன்மை ஏற்பட்டு விடுகிறது. பூவின் மீதுள்ள ஆசை சிறிதுமுன் ஏற்பட்ட ஏமாற்றத்தின் உணர்ச்சி வேகம், ‘அவள் திருடி’ என்று சிறுமிகள் உணர்த்திய சூசனைக்குறியின் உறுத்தல் எல்லாம் சேர்ந்து அவள் அறிவையும் அமைதியையும் மறைத்து விட்டன. அதே உணர்ச்சி வேகத்தில் சச்சி திடீரென்று கீழே குனிந்தாள். பிறகு குழந்தைகள் அவளை நெருங்கிக் கையைத் தடுக்குமுன் சட்டென்று ஒரு பூவைப் பற்றி எடுத்தாள்; விர்ரென்று வீடு நோக்கித் திரும்பிப்பாராமல் ஒரே ஒட்டமாக ஓடினாள்.

அதிக தூரம் அவள் ஓடவில்லை. அதற்குள் “திருடி! திருடி!” என்று ஒரு பெண் கத்தினாள். சச்சியின் காதருகில் மற்றொரு பாவாடையின் பட படப்புச் சப்தம் லேசாகக் கேட்டது. அவள் பின்னலை, ஒரு பெண் பலமாகப் பிடித்திழுத்து விட்டாள். முதுகில் அதே சமயம் பளீரென ஓர் அறை பலமாக விழுந்து அவளை முன்னால் தள்ளியது. அந்த வேகத்தில் கீழே கிடந்த ஒரு கல்லில் கால் தடுக்கிச் சச்சி கீழே அலங்கோலமாக விழுந்து விட்டாள். ஆசை, ஏமாற்றம், அவமானம் இத்தனை உணர்ச்சிகளும் அடுக்கடுக்காக அலைமோதிய மனத்தோடு இருந்த சச்சி மூர்ச்சித்துப் போய்விட்டாள். கல்லில் மோதி அவள் தலையில் ஏற்பட்ட சிறு காயத்தினின்று ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

சிறிதுநேரம் கழித்துச் சச்சி மூர்ச்சை தெளிந்து கண் விழித்தாள். தான் ஒரு கயிற்றுக் கட்டிலில் கிடப்பதையும் அருகே யாரோ நிற்பதையும் சச்சி சரியாகக் கவனிக்கவில்லை. அம்மாவைப் பார்த்துப் பேச வாயெடுத்தாள். யாரோ அவள் ‘திருடி’க்கொண்டு வந்த அந்தப் பூவையும் இன்னும் இரண்டு பூக்களையும் அவள் கையில், “இந்தாடி அம்மா, இந்தப் பூவுக்காக இப்படிச் செய்யலாமாடி?” என்று சொல்லிக்கொண்டே அவள் கையில் வைத்தார்கள். சச்சி கைப் பூக்களை முறைத்துப் பார்த்தாள். அவள் முகம் க்ஷணத்தில் பல விதமாக மாறியது. அவள் வெறித்த முகத்தில் ஒருவிதக் கசப்பு ஏறியது. அவைகளைக் கூர்ந்து கவனித்துவிட்டு வீசி விட்டெறிந்தாள்.

சற்று முன் கோலங்களை அழகுபடுத்திக்கொண்டு இருந்த அந்தப் புஷ்பங்கள் வேடன் அம்படிபட்டுச் சிறகொடிந்து அலங்கோலமாக விழுந்த பக்ஷியைப் போன்று சிவந்த இதழ்கள் தாறுமாறாகக் கிழிந்து தரையில் சிதறிக்கிடந்தன.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *