மாமா வருகிறர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 9,585 
 

“மனே சேகரன், சைக்கிள்ல ஒடிப்போய், அப்பாப்பாவ நானொருக்கா வரட்டாமெண்டு சொல்லி ஏத்திக் கொண்டு வாறியா?” மறுபேச்சுப் பேசாமல் “சரியப்பு!” என்றபடி சேகரன் உசாராகச் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வெளியே போனான்.

அவன் அப்பப்பாவை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வரும் வரைக்கும் எனக்கு எந்த வேலையிலும் ஈடுபட மனம் இடம் கொடுக்வில்லை.

பழைய நினைவுளில் நனைந்தபடி நான் சாய்மானக் கதிரையில் விழுந்து படுத்துக் கொண்டேன்.

தங்கச்சி ரம்மியா ஆசுபத்திரியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு நான் மாசாமாசம் அப்பாவின் கையில் கொடுக்கும் அந்தச் சிறியதொகைப் பணத்தைக் கொடுக்காமல் நிறுத்தியிருந்தேன்.

இது அப்பாவுக்கு மிகுந்த மனவேதனையைக் கொடுத்திருக்க வேண்டும். அதனாலோ என்னவோ அவர் முன்போல என்னோடு முகம் கொடுத்துப் பேசுவதில்லை. மாதம் தவறாமல் என் வீட்டுக்கு வந்து போவதையும் அவராகவே நிறுத்திக் கொண்டார்.

ஏனோ தெரியவில்லை. எனக்கு அம்மாவை விடவும் அப்பாவைத்தான் நன்றாகப் பிடிக்கும், அவரைப் பார்த்துப் பேசாமல் என்றால் இருக்க முடியாது.

அப்பா, மகன் என்ற உறவை மறந்து நாங்கள் இருவரும் நண்பர்களைப் போல பேசிச் சிரித்துப் பழகுவோம். அறுபது வயதைத் தாண்டியும் கூட அவரது நடையுடை பாவனைகளெல்லாம் இருபது வயது இளைஞனை நினைவூட்டிக் காட்டும். மது அருந்தும் பழக்கம் நானறிய அவரிடம் இருந்ததில்லை. எந்தநேரம் பார்த்தாலும் ஏதாவதொரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.

அவர் காலத்தில் ஐந்தாம் தரம் படித்துச் சித்தி பெற்றவர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றிய போதும் அப்பாக்கு அந்தப்பாக்கியம் கிட்டவில்லை. நான்காவது தரத்தோடு பாடசாலையை விட்டு விலகியதால் கூலித் தொழில் செய்தே எங்கள் குடும்பத்தை வழிநடத்தி வந்தார். என்னையும், தங்கச்சியையும் ஒ. எல். வரை படிப்பிக்க அவர்பட்ட பாடு சொல்லும் தரமற்றது.

வருசம், பொருநாலென்று வந்தால் எவருக்குத் தான் வாங்காவிட்டாலும் முதலில் எனக்கு உடுப்பு வாங்கித் தந்த பின்தான் மறு வேலை பார்ப்பார்.

நான் பாடசாலை யொன்றில் பீயோன் வேலைக்குப் போய்ச் சேர்ந்தபோது அப்பா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பிறின் சிப்பல் உத்தியோகம் கிடைத்து போல அவர் துள்ளிக் குதித்தார். அவர் தகுதிக்கு எனக்குக் கிடைத்த பீயோன் வேலை அவருக்குப் பெரிய சந்தோசத்தைக் கொடுத்தது ஆச்சரியப்படக் கூடிய தல்ல.

அவர் கண்ணோடேயே எனக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டுமென்ற ஆசை அவர் மனதில் அடுத்ததாக எழுந்தது.

“எனக்கு இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் தங்கச்சிக்கு ஒரு வழியைப் பார்த்த பிறகு என்னைப் பற்றி யோசிக்கலாம்” என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கவே இல்லை.

எப்படியோ என் தலைவிதியோ என்னவோ அப்பாவின் ஆசைபோல எனது திருமணம் நடந்து முடிந்தது. நான் பெண் வீட்டில் போய் வாழத் தொடங்கினேன். கால ஓட்டத்தில் அப்பாக்கு நானும், தங்கச்சியும் பிள்ளைகளாக இருந்ததைப் போல எனக்கும் ஒரு மகனும், மகளும் பிறந்தார்கள்.

என்னுடைய சின்னச் சம்பளத்தில் குடும்ப பாரத்தைப் சுமப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பாவின் காலத்தில் இருந்த வாழ்க்கைச் செலவு நூறு மடங்காக இப்போது அதிகரித்த காரணத்தால்தான் அவருக்குப் பணம் கொடுக்காத சூழ்நிலை உருவானது என்பதை அப்பா அறியாதவரா? எதற்காக அப்பா என்னோடு கோபித்துக் கொண்டாரோ தெரியவில்லை. இது பற்றி அவர் என்னிடம் கேட்கவும் இல்லை. ஏன் என்னோடு நீங்கள் பேசுவதில்லை என்று அவரைக் கேட்கவும் எனக்கு மனம் வரவில்லை.

நான் திருமணம் செய்து மெல்ல விலகிக் கொள்ள அப்பாவும் கூலி வேலை செய்வதிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டார்.

கடவுள் ஒரு வழியை அடைத்தால் இன்னொரு வழியைத் திறந்து விடுவான் என்பதைப் போல தங்கச்சிக்கு வேலை கிடைத்ததில் எனக்குக் கொஞ்சம் ஆறுதல் உண்டானது. ஆனால் அப்பாவின் மனம்தான் ஆறுதல் பெறவில்லை. அப்பா அம்மா தங்கச்சியைச் சும்மா பார்த்து வரலாம் என்று அங்கே போனால் கூட அப்பா என்னோடு எதுவும் பேச மாட்டார். எனக்குத் திருமணம் வேண்டாமென்று எவ்வளவோ மறுத்தும் என்னைத் திருமண பந்தத்தில் இணைத்துவிட்ட அந்தத் தவறை எண்ணி இப்போது கவலைப்படுகிறாரோ தெரியவில்லை. எவ்வாறாயினும் அப்பாவை என்னால் மறக்க முடியாது.

கவலையோ கஷ்டமோ என்னதான் என்றாலும் வருசக் கொண்டாட்டங்களை எங்கள் எல்லோருடனும் சேர்ந்து கொண்டாடுவதில் தான் அவருக்கு விருப்பம். அதுவும் விசேடமாகத் தீபாவளிக் கொண்டாட்டமென்றால் பின் நிற்கவே மாட்டார்.

சென்றவருடம் வந்த தீபாவளித் திருநாளன்று நானும் மனைவியும் பிள்ளைகளோடு அங்கே சென்று அப்பா, அம்மாவின் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் வாங்கி, அன்று மதியம் கலகலப்பாக விருந்துண்டு சந்தோசமாகத் திரும்பியது நேற்றுப் போல் தெரிகிறது. அப்போது அப்பா சொன்னார்.

“இந்தத் தீபாவளித் திருநாள் சும்மா குடித்து வெறி வைத்துக் கும்மாளமடிக்க வந்த நாளில்லை. நமது இதயத்தில் படிந்து போயிருக்கும் இச்சை காமம், பொறாமை, விரோதம் போன்ற கொடிய இருளை அகற்றி, புதிய அறிவொளியை மனதிலே ஏற்றி நல்ல மனிதர்களாக நாம் வாழ வேண்டும் என்ற உயரிய லட்சியத்தைப் போதிக்க வந்த திருநாள். இந்த நாளை நான் இல்லாமல் விட்டாலும் கூட நீங்கள் எதிர்காலத்தில் கொண்டாடி நல்ல மனிதர்களாக வாழ வேண்டும். ஆடம்பரம் தேவையில்லை. அமைதியாக, சுத்தமான மனதுடன் நிலமைக்குத்தக்க படி எதிர்காலம் சிறக்க கிருஷ்ணபரமாத்மாவை நினைத்து வழிபட்டாலே போதும்”

இப்படியெல்லாம் சொன்ன அப்பா, இந்த வருடம் வரப் போகின்ற தீபநாளுக்கு முன்பாகச் சும்மாவாவது வந்து எட்டிப் பார்ப்பதற்குக் கூட மனமில்லாமல் இருக்கிறார்?

வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து தவறாமல் எனக்குக் கூட வாங்காவிட்டாலும் அப்பாக்கும், அம்மாக்கும், தங்கச்சிக்கும் எதையாவது வாங்கிக் கொடுக்காமல் இருந்திருப்போனா? இந்தத் தடவையும் தீபாவளி அட்வான்ஸ் எடுத்து வழமைபோல கோடி உடுப்புகள் வாங்கித்தானே வைத்திருக்கிறேன். அவற்றைத் தீபாவளியன்று கொண்டுபோய்க் கொடுக்கவேண்டும். தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் இருக்கின்றன. அதற்கு முன் அப்பாவை வீட்டுக்கு அழைத்து அவர்மனதைக் குளிர்விக்க வேண்டும். அவருடைய கோபத்தை என்னவென்று கேட்டுத் தெளிவடைய வேண்டும்.

இல்லாவிட்டால் தீபாவளியன்றும் என்னை முகம் திருப்பிப் பார்க்காமல் தான் இருப்பார். பிறகு தீபாவளி கொண்டாடின மாதிரித்தானர். அப்பாக்கு இருந்தாற்போல் இப்படியான திமிர் குணம் வரும். யாரோ செய்த பிழைக்காக எங்களோடு கோபிப்பார். பல நாட்கள் பேசாமலேயே இருந்து விடுவார். சுய நிலைக்கு வர கொஞ்சக் காலம் பிடிக்கும்.

வயது போன காலத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா? மகன் போய் அவரை வரும்படி அழைத்தால் கட்டாயம் வருவார் என்ற நம்பிக்கையில் தான் நான் சேகரனை அனுப்பினேன். பேரப்பிள்ளைகளென்றால் அவருக்கு உயிர் என்ன செய்வாரோ தெரியவில்லை. அவர் மனம் மாறி வந்தால்தான் எனக்குத் தீபாவளி.

சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடந்தபடி இப்படியெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த எனக்கு தெருவாசல் கதவு திறபடும் சத்தம் கேட்டது.

தலையை நிமிர்த்தி யன்னலின் ஊடாக அங்கே பார்க்கிறேன்.

அப்பா, அவருடைய அகன்ற நெற்றியில் திரு நீற்றைப் பூசி பெரிதாகச் சந்தனப் பொட்டு வைத்திருந்தது பளிச்சென்று தெரிந்தது.

ஒற்றைப்பட்டு வேட்டி உடுத்தி, அவருடைய வழமையான அரைக்கைச் சேட்போட்டு சால்வையைத் தோளில் அள்ளி எறிந்திருந்தார்.

“மாமா வாறார்!” என்று சொல்லிக் கொண்டே குசினிக்குள்ளிருந்த என்மனைவில ஆனந்தம் பொங்க முற்றத்திற்கு ஓடிவந்தாள்.

மகன் சேகரன் சைக்கிளிளை உருட்டிய படி முன்னால் வர அப்பா அவன் பின்னால் கம்பீரமாக நடந்து வந்தார்.

அவருடைய முகத்தில் எந்தவிதமான கவலைக்கோடுகளையும் காணமுடியவில்லை. பொலிவோடு அவர்முகம் பூரித்திருந்தது.

இன்றே தீபாவளி பிறந்துவிட்ட மகிழ்ச்சியில் நான் என்னையே மறந்து போனேன்.

– 2009/10/18

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *