மாமாவின் மரணமும் ஆயிரம் கவிதைகளும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 3, 2013
பார்வையிட்டோர்: 14,388 
 
 

நாகராஜ் வழக்கமாக மிஸ்டுகால்தான் தருவான். அதனால், இரண்டாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுப்பதானால் எடுக்கலாம். அன்றைக்கு இரண்டாவது ரிங் தாண்டி மூன்றாவதற்குப் போய்விட்டது. இருந்தாலும் நாலாவது ரிங் வரைக்கும் பார்த்துவிட்டுத்தான் எடுத்தான் ரகு. எதிர்பார்த்த மாதிரியே விஷயம் சீரியஸானதுதான். நாகராஜின் அப்பா சடகோபன் மாமா காலையில் பள்ளியெழவில்லை. ஏற்கெனவே ஒரு வருடத்துக்கும் மேலாகப் படுத்துக்கிடப்பவர்தான். ரத்தம் சுண்டி, பளபளப்பெல்லாம் மறைந்து, என்புதோல் போர்த்திய கோலம்தான். இன்றைக்குக் காலையில் எழுந்துகொள்ளவில்லை. டாக்டர் வந்து பார்த்துவிட்டு கன்ஃபார்ம் செய்துவிட்டார் என்ற நாக ராஜிடம் ‘வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்.

”கோமாவா?” என்று கேட்டார் கவுண்டர்.

”இல்ல… இந்தவாட்டி போயிட்டார்!”

”அது என்ன இந்தவாட்டி?” என்று வழக்கம்போலப் புன்னகைத் தார் கவுண்டர்.

‘அதுவா..?’ என்று சொல்ல ஆரம்பித்தான் ரகு.

மாமாவின் மரணமும் ஆயிரம் கவிதைகளும்இதே மாதிரிதான் போன மாதம் ஒருநாள் போன் மிஸ்ஸாகாமல் அடித்தது. இதே பல்லவிதான். காலையில் எழுந்துகொள்ளவில்லை. ஆஸ்பத்திரியில் போட்டிருக்கிறார்கள். ரகு போய்ப் பார்த்தபோது ஐ.சி.யூ. வராந்தாவில் நாகராஜும் ஜெயந்தியும் கல்பனாவும் எதிரும் புதிருமாகச் சுவரில் சாய்ந்துகொண்டு தரையில் உட்கார்ந்து இருந்தார்கள். சின்ன ஆஸ்பத்திரி என்பதால், உட்கார நாற்காலிகளோ அதில் உட்கார வேறு ஆட்களோ இல்லை. இவனும் போய் அருகில் உட்கார்ந்துகொண்டான். சமீபத்தில் மிகவும் பெருத்துப்போன உடலை கல்பனாவின் முன்னால் சிரமப்பட்டு மடக்கி உட்கார்ந்தபோது ஒருவிதமான சங்கோஜமாக உணர்ந்தான்.

அதற்கு முன்பாகவே கல்பனா, ‘வா ரகு…’ என்றும் ஜெயந்தி ‘அண்ணே…’ என்றும் அழைத்திருந்தார்கள். ஜெயந்தி நடந்தவற்றை பொதுவாக ஒரு கதைபோலச் சொல்லி முடித்த பின் நாகராஜ், ‘வா… ஒரு டீ சாப்புட்டு வர்லாம்’ என்று ரகுவைக் கீழே அழைத்து வந்தான். படியேறி வந்ததால் இழையும் மூச்சு தணியும் முன் கல்பனாவுக்கு முன்னால் சிரமப்பட்டு உட்கார்ந்ததையும் உடனேயே எழுந்துகொள்ள நேர்ந்த அவஸ்தையையும் நொந்தபடியே ரகு அவனோடு வந்துகொண்டு இருந்தான்.

பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டான்

நாகராஜ். சடகோபன் மாமா கொஞ்ச நாட்களாகவே கெஞ்சிக்கொண்டு இருக் கிறார். அவரால் அடுத்தவர் தயவு இல்லா மல் மூத்திரம் கழிக்க முடியாத நிலை வந்தபோதே, அவர் வாழ்வின் மீது இருந்த கடைசிப் பற்றையும் விட்டுவிட்டார். இரண்டு மகள்களுக்கும் ஒரே மகனுக்கும் தன் விருப்பப்படி வாழ்க்கை அமைத்துக்கொடுத்து, ஐந்து பேரன்களைப் பார்த்துவிட்டார். அட்லாண்டாவில் விப்ரோவில் இருப்பவன் முதல் லோக்கல் ஏரியா ஸ்கூலில் எட்டாம் கிளாஸ் படிப்பவன் வரை பேரன்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். வாழ்ந்த ஊரில் வீழ்ந்து கிடக்கிறார். அப்படி உண்மையிலேயே வீழ்ந்தபோது இடுப்பு எலும்பு முறிந்து, அவர் உடல் உள்ள நிலையில் அறுவை சிகிச்சைக்கு வாய்ப்பே இல்லை என்று டாக்டர்களால் கைவிடப்பட்டுவிட்டார்.

கல்பனா எவ்வளவு செலவானாலும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறாள். நாகராஜிடம் பணம் கிடையாது. ஆனால், புத்தி உண்டு. அவருடைய வேதனையை அவனாலும் சகித்துக்கொள்ள முடியவில்லை. அசைந்தால் உயிரேபோவதுபோல் முறிக்கிறது வலி. அப்போது எல்லாம் அவர் முகத்தைப் பார்க்கவே சகிக்க முடியாது. இருமல் வந்தால் டெஸ்டிகல்ஸ் மேலே ஏறிக்கொண்டு அதுவேறு தனியாக மரண வேதனையைத் தந்துகொண்டு இருக்கிறது. அவரும், ஒருத்தர் விடாமல் வீட்டில் இருப்பவர்களில் இருந்து அட்லாண்டாவில் இருந்து போன் செய்கிற பெரிய மகள் வரைக்கும், ‘தயவுசெய்து என்னைக் கொன்றுவிடுங்கள்… என்னால் முடியவில்லை’ என்று கெஞ்சிப் பார்த்துவிட்டார். அது ரகுவுக்கும்கூட ஏற்கெனவே தெரியும்தான்.

ஆனால், இந்த முறை அவர் காலையில் படுக்கையில் இருந்து எழவே இல்லை. மூச்சு இருக்கிறது. அசைவுகள் ஏதும் இல்லை. பல்ஸ் பலவீனமாக இருக்கிறது. அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற அசைத்தபோது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. கொஞ்சம் பிரக்ஞை இருந்தாலும் வலி முகத்தில் தெரிந்துவிடும். டாக்டர்கூட கோமாவில் இருக்கிறார் என்றுதான் சொல்கிறார். ஆனால், ”காலைல அவரோட பெட்கிட்ட இருந்த தூக்க மாத்திரை பட்டைல இருபதைக் காணோம். வீட்ல அம்மாவைத் தேடச் சொல்லியிருக்கேன்” என்று நிறுத்தினான் நாகராஜ்.

”முழுங்கிட்டாரா?” என்று வியந்தான் ரகு.

”……………….”

ரகுவுக்கு அவர் மீது இருந்த கோபம் எல்லாம் ஒரு நொடியில் வடிந்துவிட்டது.

”டாக்டர்கிட்ட சொல்லிட்டியா?”

”ம்ஹூம்…”

”சொல்லிடலாண்டா. அவரைக் காப்பாத்த வேணாம் விட்ரு!”

”நான் என்னடா பண்றது? கல்பனா கையில காசு இருக்கு. ‘விட்டுரக் கூடாது… ஃபைட் பண்ணலாம்’னு சொல்லுது!”

”அதுக்கு அறிவே கிடையாது. என்னா வலி அவருக்கு… ச்சே!”

ரகு எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டான். ஆனால், கல்பனா ஏற்றுக்கொள்ளவில்லை.

”இல்ல ரகு. எவ்வளவு காசு செலவானாலும் சரி… அப்பாவை இப்படியே விட்டுரக் கூடாது.”

கவுண்டர் சிரித்தார். அவர் ரகுவைவிடப் பதினைந்து வயது மூத்தவர் என்பதோடு, பதினைந்து வருட நட்பும் அவர்களுக்கு இடையே உலவியதால், அவனுடைய கதை முழுக்கவும் அவருக்குத் தெரியும்.

”இவ்வளவு பாசமான பொண்ணை நீங்கதான் மிஸ் பண்ணிட்டீங்க!” என்று ரகுவை வம்புக்கு இழுத்தார். கல்பனாவைப் பற்றி ரகு அவ்வப்போது எழுதி இருந்த கவிதைகளைக்கூட கவுண்டர் படித்து இருக்கிறார். ஒன்றிரண்டை மனப்பாடமாகக்கூடச் சொல்லிக் கிண்டல் செய்வது சமீப காலமாகத்தான் நின்றிருக்கிறது. ரகு அவரை முறைத்துவிட்டு சாவுக்குப் புறப்பட்டுப்போனான்.

கல்பனாவை அவனுக்குக் கல்யாணம் செய்துவைக்க மறுத்தது சடகோபன் மாமாதான். பேச்சுவார்த்தையாக அவர் எதையும் சொல்லவில்லை. அவருடைய கொள்கையை மற்றவர்கள் அறியும் விதமாக நடந்துகொண்டார், அவ்வளவுதான். எம்.ஃபில். முடித்து நாளைக்கு பி.ஹெச்டி-யும் முடிக்கக் கூடிய சாத்தியத்தில், கல்லூரி விரிவுரையாளராக உள்ள மகளுக்கு, மற்றொரு கல்லூரி விரிவுரையாளர்தான் சரி என்று தன் மாப்பிள்ளையை அவரே கண்டுபிடிக்கவும் செய்தார். கல்பனாவைக் கேட்டபோது, ‘அப்பா எனக்கு எப்போதும் நல்லதுதான் செய்வார்’ என்றாள். பழைய கதைதான்!

நாகராஜிடம் பணம் இல்லையே தவிர, செல்வாக்கு அவனுக்கு அதிகம். சமீபத்தில்தான் அவன் கட்சி மாறியிருந்தான் என்பதனால் ஆளும் கட்சி; எதிர்க் கட்சி என்கிற பாகுபாடு எல்லாம் இல்லாமல் எம்.எல்.ஏ. முதல் முன்னாள் அமைச்சர் பெருமக்கள் வரை பலர் வந்து, அவனுடைய அப்பாவின் மரணத்தை விசாரித்துக்கொண்டு இருந்தார்கள். ஐஸ் பெட்டிக்குள் இருந்த சடகோபன் மாமாவின் உடலை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததோடு சரி. உள்ளே போய்ப் பார்க்க ரகு முயற்சிக்கவில்லை. சாவு வீட்டில் சங்கோஜம் இல்லை என்கிற நுட்பத்தால் பெண்கள் யாரையும் எதிர்கொள்ளத் தயங்கினான் அவன். நீங்கள் யாரை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். ஏன், கல்பனாவை என்றும்கூட நினைத்துக்கொள்ளலாம். அது உங்கள் இஷ்டம்!

பெரிய மகள் அட்லாண்டாவில் இருந்து வந்து சேருவதற்காக இரண்டு நாட்கள் காத்திருந்த வேளையிலும் கல்பனாவைச் சந்திப்பதை அவன் முற்றிலும் தவிர்த்துவந்தான். மூன்றாவது நாள் ரகுவை கல்பனா பார்த்தபோது அழுது அழுது கண்கள் வற்றிப்போயிருந்தாள். அதனால் ‘இருக்கிறாயா’ என்பது போன்ற ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டு, அவளுடைய கல்லூரி நண்பர்களை எதிர்கொள்ளப் போய்விட்டாள்.

அதற்கு அப்புறம் அவளை அவன் பார்த்தது மின்னெரி மயானத்தில்தான். தன் சமுதாய மதிப்பையும் மறந்து அவள் தன் அப்பாவின் சடலத்தின் முன் நின்றுகொண்டு, கண்ணைத் திறந்து பார்க்கும்படி பிதற்றிக்கொண்டு இருந்தாள். ரகுவுக்கு அவளுடைய குரல் மட்டும்தான் கேட்டுக்கொண்டு இருந்தது என்பதனால், அங்கு இருந்து அகன்றுவிடத் துடித்தான். ஆனால், அவனால் கண்களைப் புறங்கையால் துடைக்கத்தான் முடிந்தது.

சடகோபன் மாமாவை அக்னி அடுப் பினுள் அனுப்பியபோது தன்னுடைய அப்பாவை ரகு நினைத்துக்கொண்டான். மின்னெரி மயானத்தில் அவன் கண்ட முதல் தகனம் அவனுடைய அப்பாவுடையது தான். அப்போது கல்பனா வந்திருந்தாளா என்று திடீர் என்று அவனுக்குள் ஒரு குழப்பம் எழுந்தது. சடகோபன் மாமாவும் அத்தையும் நாகராஜும்தான் வந்திருந்தார் கள். நாகராஜுக்கு அப்போது கல்யாணமாகி இருக்கவில்லை. ஆதலால், ஜெயந்தி வந்திருக்க நியாயம் இல்லை. ஆனால், கல்பனா வரவில்லை. அப்போது அவளுக் குக் கல்யாணம் ஆகியிருந்தது. வேறொரு ஊரில் அவள் இருந்தாள். நினைத்திருந்தால் வந்து இருக்கலாம். அவளைத்தான் தன் மருமகள் என்று மனசார நினைத்துக் கொண்டு இருந்த ஒரு மனிதரின் மரணத் துக்கு அவள் வந்து இருக்கலாம்தான்.

இதுதான் மரண வீட்டு துவேஷமா என்று தன்னைத்தானே வியந்தான் ரகு. இதை யாரிடமாவது சொல்லியே தீர வேண்டும் என்கிற வெறியால் அவன் அப்போது ஆட்கொள்ளப்பட்டான். தகனத்துக்கு வந்திருந்து அவனுக்கு அருகில் நின்றிருந்த கவுண்டரிடம் அப்போதே சொல்லிவிட வேண்டும் என்று முயன்று, கொஞ்சம் வெளியே வந்ததும் தன் ஆதங்கத்தை வெளியிட்டான் அவன்.

”கல்பனாவுக்கு மட்டும்தான் அப்பா இருந்தார் போலிருக்கு. மத்தவங்களுக்கு எல்லாம் இல்ல…”

கவுண்டர் புன்னகைத்தார்.

”ஒருவேளை உங்களுக்குக் கட்டிக் கொடுத்திருந்தா, அந்தப் பொண்ணுக்கு அவரைப் புடிக்காமப் போயிருக்குமோ… என்னமோ!”

அகாலமாக ரகுவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

இதற்கு அப்புறம் சரியாக ஒரு வாரம் கழிந்த ஓரிரவு மொட்டை மாடியில் ரகு மது அருந்திக்கொண்டு இருந்தான். கவுண்டர் அதை எல்லாம் நிறுத்திவிட்ட காரணத்தால், சும்மா கம்பெனி மட்டும் கொடுத்துக்கொண்டு இருந்தார்.

44 வருடங்களைக் கடந்துவிட்டபோதும் தனக்கு என்று யாரும் இல்லாத அவனுடைய நிலைப்பாட்டுக்கு யார் காரணம் என்கிற கேள்வி அந்த மாதிரியான கணங்களில் மனத்தின் மேல்மட்டத்தில் மிதக்க ஆரம்பிக்கும். அவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதற்கான ஊற்றுக்கண் அது. கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் முட்டாள்தனமாக இழந்துவிட்டு, யாரை நோக முடியும் என்று மனசுக்குள் இருந்து ஒரு எதிர்க் கேள்வி தெறிக்கும். அதனால், கவுண்டரின் வருகைக்கு நன்றி தெரிவித்துக்கொண்டு இருந்தான் ரகு.

தொலைபேசி அழைப்பு அவன் நன்றியுரையை முடக்க… எடுத்துப் பார்த்தான். புதிய எண். இரண்டு மூன்று ரவுண்டுகளுக்குப் பிறகு சாளேஸ்வரம் வந்ததுபோல மிதமாகப் பார்வை மங்குகிறது என்பதனால் மொபைலைச் சற்றுத் தள்ளிவைத்துப் பார்த்துவிட்டு, ஆள் யார் என்கிற நிதானம் இல்லாமல் ‘ஹல்லோ…’ என்றான்.

ஆச்சர்யமாக எதிர்முனையில் கல்பனா இருந்தாள். அவள் செல்போன் எண்ணை ஒருபோதும் அவன் பதிவுசெய்துகொள்ள முனைந்தது இல்லை என்பதோடு, அவள் அவனை ஒருபோதும் அழைத்ததும் இல்லை.

”சொல்லு கல்பனா” என்றான் சற்று போதை தெளிந்தவனாக.

கவுண்டரும்கூட இப்போது வியப்பாகப் பார்த்தார். அவரைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினான் ரகு.

”ரகு… நீ ஒரு ஹெல்ப் பண்ணுவியா?” என்று தளர்ந்த குரலில் கேட்டாள் கல்பனா. சாதாரணமாகவே அவளுடைய டெசிபல் தாழ்ந்துதான் இருக்கும். இந்தக் குரலை வைத்துக்கொண்டு எப்படி பள்ளியில் பாடம் எடுக்கிறாள் என்று ஆரம்பத்தில் அவன் ரொம்பவும் வியந்து இருக்கிறான்.

”சொல்லு கல்பனா…”

கவுண்டர் அவனுடைய கையசைப்பைத் தவிர்த்துவிட்டு, தன்னுடைய போனை எடுத்துக்கொண்டு வெளியே போனார்.

”அப்பா கொஞ்ச நாளுக்கு முன்னாடி என்னைப் பத்தி நாலு வரி கவிதை மாதிரி எழுதிவெச்சிருக்காங்க…”

”…………………”

”நீதான் கம்ப்யூட்டர்ல போட்டாஷாப் வேலை எல்லாம் பண்ணுவியே… அதைக் கொஞ்சம் ஸ்கேன் பண்ணி சுத்தி அழகா ஃப்ளவர்ஸ் எல்லாம் வெச்சு ஃப்ரேம் பண்ணித் தர முடியுமா?”

”தந்தா?”

”அதை வீட்டுல மாட்டிவெச்சுக்குவேன்.”

”அது சரி” என்று அலுத்துக்கொண்டான் ரகு. அவருடைய நினைவுகூரல் நிகழ்ச்சிக்கு, கையில் கிடைத்த அவருடைய புகைப்படம் ஒன்றை போட்டோஷாப்பில் ஒப்பேற்றி

பெரிதாக ஃப்ரேம் செய்து அவன்தான் எடுத் துக்கொண்டுபோய்க் கொடுத்தான். பைக்கில் அதை வைத்துக்கொண்டு எதிர்க் காற்றில் போவது மிகவும் சிரமமாக இருந்தது. ஏன் இன்னும் தாமதம் என்று போன் போட்ட நாகராஜிடம்கூட அதைத்தான் சொன்னான் அவன். கொஞ்சம் தாமதமாகத்தான் அதைக் கொண்டுசேர்த்தான் என்றாலும், நாகராஜ் சிரித்துக்கொண்டே ரகுவிடம் ஒரு விஷயத்தைச் சொன்னான்.

‘அக்கா, ஏன் இன்னும் ரகு வரலை’னு கேட்டப்போ, ‘படம் கீழே விழுந்துடாம பத்தி ரமா எடுத்துட்டு வர்றான்’னு சொன்னேன். அதைக் கேட்டுச் சிரிச்ச அக்கா, ‘டேய்! அவன் வேணும்னே கீழே போட்டாலும் போட்டுடுவாண்டா’னு கவலை மறந்தும் சிரிச்சது!’ என்று அவன் சொன்னபோது, ரகுவுக்கும் சிரிப்பு வந்தது. அந்த போட்டோ தான் இப்போது இன்னொரு ஃப்ரேம் வைபவ மாக விரிந்திருக்கிறது.

ரகு கல்பனாவிடம் சொன்னான், ”கல்பனா, நான் கொஞ்சம் குடிச்சிருக்கேன். அதனால நான் சொல்றது தப்பா ஒண்ணும் இருக்காது. நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு. எங்கப்பா இறந்தப்ப இதே மாதிரிதான் நான் ஒரு காரியம் பண்ணினேன். அவர் யூஸ் பண்ண பல் செட்டை ரொம்ப நாள் பத்திரமா வெச்சிருந்தேன்” என்றான்.

”அதை இப்பவும் பத்திரமா வெச்சிருக்கியா ரகு?” என்று அவசரமாகக் கேட்டாள் கல்பனா. சிறிய வயதிலேயே அவர் பல் செட் கட்டிஇருந்தார் என்பதனால், அவர்களின் சிறிய வயதில் அவர் தன்னுடைய பல் செட்டைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கு பிரஷ் செய்கிற அழகை வியப்பாகப் பார்த்தபடியே இருப்பாள் கல்பனா.

”இல்லை. தூக்கிப் போட்டுட்டேன்!”

”……………………”

”நாளாக நாளாக அது அவரைப் பற்றிய சோகமான ஞாபகமாக மாற ஆரம்பிச்சுடுச்சு. அப்புறம் அதை வேற ஒண்ணும் பண்ணவும் முடியாது. எங்கப்பா என்ன காந்தியா? மியூஸியத்துல கொண்டுபோய் அதை வெக்கிறதுக்கு? அதே மாதிரிதான் இந்தக் கவிதையை ஃப்ரேம் பண்ற வேலை யும். வேணாம். அது நாளாக நாளாக நமக்குப் பாரமாத்தான் மாறும்.”

அவன் சொல்லி முடிக்கும் முன் கல்பனா மறுமுனையில் அழ ஆரம்பித்து இருந்தாள். பெண்களோடு சரியாகப் பழகத் தெரியாத, கல்யாணமும் செய்துகொள்ளாத ரகு, என்ன செய்வது என்று தெரியாமல் பரபரவென்று விழித்தான்.

அழுகையினூடே, ”இல்ல ரகு, உனக்குத் தெரியாது…” என்று அவள் சொன்னதற்கும் என்ன பதில் சொல்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

சற்று அழுதுவிட்டு, ”நான் வெறும் ஆவரேஜ் ஸ்டூடன்ட்தான் ரகு. எஸ்.எஸ்.எல்.சி-யிலகூட 375 மார்க்தான் வாங்கிஇருந்தேன். ஆனா, அப்பாதான் என்னை என்கரேஜ் பண்ணார். ‘நீ பெரியாளா வருவே பாப்பா’னு சொல்லிச் சொல்லியே என்னை இந்த பொசிஷனுக்குக் கொண்டுவந்தார். எனக்காக அவர் எடுத்த எல்லா முடிவுமே சரிதான். நீகூட ஒழுங்காப் படிச்சிருந்தீன்னா…” என்று சற்று நிறுத்தி ரகுவின் இதயத் துடிப்பைப் படபடவென்று உயர்த்திவிட்டாள் கல்பனா.

அவனுக்கும் கண்கள் நிறைந்துவிட்டன. சற்று நேர மௌனத்துக்கும் விசும்பலுக்கும் பிறகு அவன் அவளிடம் கேட்டான், ”அதுல என்னதான் அப்படி அவர் எழுதியிருக்காரு?”

கல்பனா அழுதுகொண்டே

சொன்னாள், ” ‘காலனின் பாசக் கயிறு என்னை அழைக்கிறது. என் மகளின் பாசக் கரம் என்னைத் தடுக்கிறது’னு எழுதியிருக்கு ரகு.”

ரகுவுக்குக் கோபம், சோகம் என்று எல்லாம் ஒரே பொழுதில் பொங்கி எழுந்தன. ஒரு கணக்கு டீச்சருக்கு, கவிதைக்கும் குற்றச்சாட்டுக்கும் என்ன வித்தியாசம் தெரிந்துவிடப்போகிறது? அந்த உரையா டலை உடனே நிறுத்திவிட விரும்பினான் ரகு.

”சரி, பண்ணித் தர்றேன் கல்பனா.”

”நீ குடியைக் குறைச்சுக்கோயேன்!”

”அதைச் சொல்றதுக்கு உனக்கு எந்த ரைட்ஸும் இல்ல!” என்று போனை வைத்துவிட்டு, அடுத்த ரவுண்டை ஊற்றி அதில் பாதியை ஒரே மடக்காகக் குடித்தான் ரகு.

உள்ளே வந்த கவுண்டர் அவனைப் பார்த்து, ”என்ன… சூரியன் தெக்கால உதிக்குது?” என்று புன்னகைத்தார்.

”பின்ன என்ன சார், அன்னைக்கே சொன்னேன் பாருங்க. அவரு வேதனை தாங்காம எப்படா சாவு வரும்னு கதறிக்கிட்டு இருக்காரு. இந்தப் பொண்ணு கையில காசு இருக்குனு ஆஸ்பத்திரிக்குச் செலவு செஞ்சு காப்பாத்திக்கிட்டு இருந்துது. அவர் வேதனையைவிட அவர் உயிர் முக்கியம்னு இதுக்குத் தோணியிருக்கு.”

”ஒரு பொண்ணுக்குத் தகப்பனா இருந்தாத்தானே உங்களுக்கு அந்த அருமை தெரியும்” என்று புன்னகைத்தார் கவுண்டர்.

ரகு அவரைப் பார்த்து முறைத்தபடி கேட்டான், ”சார், நீங்க யார் சைடு?”

”யார் சைடும் இல்லை. சொல்லுங்க…”

”அவங்கப்பா கல்பனாவைப் பத்தி நாலு வரி எழுதி வெச்சிருக்காராம். அதுக்கு அதைப் பாத்தா கவிதை மாதிரி தெரியுது. அதை நான் ஃப்ரேம் போட்டுத் தரணுமாம்.”

”போட்டுத் தாங்க…”

”ம்ஹூம்…?” என்று அவரை முறைத்தான் ரகு.

”நான் ஒண்ணு கேக்குறேன்… அவங்க அப்பா கல்பனாவைப் பத்தி எழுதின ஒரே ஒரு கவிதைய நான் ஃப்ரேம் போட்டுத் தரணும்னா, அதே கல்பனாவைப் பத்தி நான் எழுதின ஆயிரம் கவிதைகளை என்ன பண்றது?”

வாயில் நுழைந்த கூல் ட்ரிங்க்ஸ் மூக்கில் புரையேற வெடித்துச் சிரிக்கத் தொடங்கினார் கவுண்டர்!

– ஜூலை 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *